Followers

Tuesday, February 10, 2009

ஐ.நா

பி.பி.சி யில் ஞாயிறன்று Inteligence எனும் நிகழ்ச்சியில் ஐ.நா சபை உருப்படுமா அல்லது உருப்படாதா எனும் பொருளில் அதாவது whether U.N is paralized or it can look forward எனும் பொருளில் நம்மூர் பட்டி மன்றம் மாதிரி மூணு மூணு பேரா பிரிச்சி பேச வைத்தார்கள்.பேசியவர்களில் குறிப்பிடத் தக்கவர்களாய் போலந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர், ஐ.நா செயலர் பதவிக்கு போட்டி போட்ட இந்தியர் சசி தரூர் (ஆங்கில உச்சரிப்பு செம அழகு. இப்போதைய ஐ.நா செயலர் நாற்காலியில் உட்கார்ந்திருக்க வேண்டிய மனுசன்) மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஆலொசகர்,பிரிட்டன் சார்பாக சர்.ஜெரிமி கிரின்ஸ்டாக் உட்பட.நேற்றைய விவாதத்தின் ஒரு நகைச்சுவையாக தேசங்கள் ஏன் வெள்ளாடுகளாகவும்,செம்மறியாடுகளாகவும் பிரிக்கப்படுகிறார்கள் என்பது.

நம்மூர் பட்டி மன்றத்துக்கும் இந்த விவாதத்திற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் சாலமன் பாப்பையா போன்ற நடுவர்கள் சொல்லும் தீர்ப்புக்கு பதிலாக அரங்கத்தில் வந்தவர்களிடம் ஓட்டுக்கு விட்டு விடுகிறார்கள்.கூடவே அரங்கில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தப்பாகவோ சரியாகவோ மேடையில் உட்கார்ந்திருப்பவர்கள் பதில் சொல்வது.(தண்ணி காட்டுற கேள்வியா யாராவது கேட்டு விட்டால் பதில் சொல்லி விட்டு தண்ணி ஒரு மொடக் குடித்து விடுவது.)இப்படியாக நகர்கிறது விவாதம்.

ஐ.நா போன்ற ஒரு நல்ல அமைப்பு எப்படி இவ்வளவு மோசமாக இயங்கும் என்ற கோபமும் எரிச்சலும் பல நாட்கள் மனசுக்குள் உண்டு.பதிவுப் பக்கம் வந்தப்பறம் அதனை இங்கேயாவது கொட்டி ஆசுவாசப் படுத்திக்கிறேன்.நிரந்தர செக்யூரிட்டி கவுன்சில் மெம்பர்களான அமெரிக்கா,ரஷ்யா,பிரிட்டன்,பிரான்ஸ் நாடுகள் உலக நலன்களை தங்களது நலன்களுக்கு உகந்ததும் தமது ஆளுமைக்குட்பட்ட கோட்பாடுகளுக்கு சரிப்பட்டு வருமாறு பார்த்துக் கொள்கிறார்கள்.

வீட்டோ எனும் அந்தஸ்தைக் கொண்டு 4 பேர் சரியென்றாலும் ஒருவர் வீட்டோ அதிகாரத்தால் தீர்வின் திசையை மாற்றியமைத்து விட முடியும்.உதாரணமாக இஸ்ரேல்,பாலஸ்தீனியப் பிரச்சினையில் அமெரிக்கா தவிர 4 நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தால் அமெரிக்கா வீட்டோ செய்து விடும்.

ஆப்பிரிக்க மக்கள் பசியால் வாடியும் உள்நாட்டுப் பிரச்சினைகளில் அடித்துக் கொண்டு செத்தாலும் பெயருக்கு ஒரு படையை அனுப்பி வைத்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அல்லது அமெரிக்கா மற்றொரு நாட்டுடன் போரிடுவதற்கான அனுமதியை ஐ.நா மூலமாக உருவாக்கும்.யூகோஸ்லாவியா பிரிந்து போனதும் செர்பிய அல்பேனிய போர்களை நேட்டோ படைகள் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தது பாராட்டத் தக்கதாகும்.ருவாண்டாப் படுகொலைகளில் தலையிட்டு தற்காலிக அமைதிக்கு வழிவகுத்தது.

இப்படி சில காரியங்களில் ஈடுபட்டாலும் ஐ.நா என்ற அமைப்பின் அஸ்திவாரம் தகர்ந்து போகும்படியாக premptive strike என்ற முதலடி நான் தான் கொடுப்பேன் என்ற புதிய கோட்பாட்டை முந்தைய (அதுக்குள்ளவா?)2009 ஜனவரி மாதம் வரையிலான ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஐ.நாவின் அமைப்பையே ஆட்டம் காணச் செய்து விட்டார் ஆப்கானிஸ்தான்,ஈராக் போர்களின் மூலமாக.ஈராக்,ஆப்கானிஸ்தான் போர்கள் இரு வேறுபட்ட, மாறுபட்ட நிலைகளிலிருந்து அலசவேண்டியது அவசியமாகிறது.

சென்ற மாத இஸ்ரேல்,பாலஸ்தீனியப் பிரச்சினை பல அழுத்தங்கள்,நிர்பந்தங்கள் காரணமாக குண்டு வீச்சு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.இப்படி பல பரிமாணங்களைக் கொண்ட ஐ.நாவின் இயங்கும் முறை முற்றிலும் திருப்திகரமாகவும்,அனைத்து நாடுகளின் நலன்களையும் சார்ந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

ஒரு நாட்டின் இறையாண்மை கெடக்கூடாது என்றும் தனி ஈழம் பிறப்பது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகும் என்று வாதாடுபவர்கள் இந்தோநேசியாவிலிருந்து கிழக்கு தைமூர் பிரிந்தது அந்த நாட்டின் இறையாண்மையைக் குறைத்ததா? இல்லை.காரணம் மக்களின் விருப்பமாக கிழக்கு தைமூர் மக்கள் எந்தவொரு நாட்டின் தலையீடும் நிர்பந்தமும் இல்லாமல் பிரிந்து போக விரும்பினார்கள்.அதற்கு ஐ.நா உதவியது.தைமூர் இனத்தின் பழைய வரலாற்றையும் படையெடுப்புக்களையும் இங்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இந்த நிலையில் சுதந்திரம் பெற்ற கிழக்கு தைமூரின் ஜனாதிபதி ஜோஸ் ரமோஸ் ஹொர்டா இலங்கை ஈழ எதிர்கால வாழ்வுக்கு உதவுவதாக கூறியுள்ளார்.சுழல் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் மெக்ஸிகோ ஐ.நா வில் இலங்கை பற்றி பேசுவதற்கு தயாராக உள்ளது.ஆனால் ரஷ்யா நிகழ்ச்சி நிரலில் இது குறிப்பிடப் படவில்லை என மறுப்பு தெரிவிக்கிறது.

இந்த மறுப்பை மேலே குறிப்பிட்ட விவாதத்தின் ஒரு பகுதியாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.அதாவது ஒரு முக்கியப் பிரச்சினையில் அனைத்து நாடுகளும் ஒரே கருத்தைக் கொண்டிருப்பதில்லை. ஒரு நாடு ஆம் என்றால் மற்றொரு நாடு இல்லை எனக் குரல் எழுப்புவதும் ஐ.நா வின் நன் முறையில் செயல்பட இயலாமைக்குக் காரணங்கள் என்ற விவாதம் எழுந்தது.

இந்த நிலையில் ஐ.நா சபை சரி வர இயங்காமலும் ஒப்புக்கு சப்பாணியாக தற்போதைய ஐ.நா செயலாளர் இருப்பதும்,நிரந்தர நாற்காலி நாயகர்கள் 5 பேரும்
எந்த அளவுக்கு இலங்கை ஈழப் பிரச்சினையை தீர்த்து வைப்பார்கள் என்பதும் கேள்விக்குரியது.இருந்தும் தற்போதைய சூழலில் உலக நாடுகள் ஐ.நா வினை ஓரளவுக்காவது நம்பியே தீர வேண்டிய நிலையில் உள்ளது.மாற்றங்கள் என்ற கோசத்துடன் வீற்றிருக்கும் அமெரிக்க ஜனாதிபதிஐ.நா பற்றியும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் மாற்று இனத்தின் ஜனாதிபதி என்ற பெயர் மட்டுமல்லாது உலக வரலாற்றிலும் அவர் பெயர் நிலைத்து நிற்கும்.செய்வாரா?

சொல்ல மறந்து விட்டேனே! ஐ.நா வின் செயல்பாட்டில் திருப்தி பட்டுக் கொண்டவர்கள் 327 ஓட்டும் மாற்றங்கள் வேண்டும் என்று வாக்களித்தவர்கள் 500 பேரும்.

2 comments:

பழமைபேசி said...

நல்ல, சுவையான தகவல்கள்! பொறுமையா உட்கார்ந்து, கன கச்சிதமா தொகுத்து வழங்கினதுக்கு மிக்க நன்றியும், வாழ்த்தும்!!


(பி.கு) இது சும்மா பின்னூட்டம் இல்லை. சிரத்தையான(serious comment) மறுமொழி!

ராஜ நடராஜன் said...

//நல்ல, சுவையான தகவல்கள்! பொறுமையா உட்கார்ந்து, கன கச்சிதமா தொகுத்து வழங்கினதுக்கு மிக்க நன்றியும், வாழ்த்தும்!!


(பி.கு) இது சும்மா பின்னூட்டம் இல்லை. சிரத்தையான(serious comment) மறுமொழி!//

வாங்க பழமை!அப்படியே இன்றைக்கு சாப்பிட்ட ஆரஞ்சுப் பழ மரபு வழி மாற்றங்கள் பதிவையும் பாருங்க.