Followers

Wednesday, March 17, 2010

பெத்சியா?தண்ணீரா?தண்ணியா

மதார் என்ற சுவர் என்ஞினியர் (அப்படித்தான் எண்டாஸ்கோபிங்கிற அவங்க பதிவுல சொல்றாங்க:))

ஒரு சாதாரண வயிற்று வலி எண்டாஸ்கோப் வரை கொண்டு போய் விட்டு விட்டதென்று சொன்னதுனால இடுகைக்கு ஒரு விசயம் கிடைச்சது.ஒவ்வொரு கடையா போய் சிரிப்பான் மட்டும் போடாம மாங்கு மாங்குன்னு இடுகைக்கு இணையா குண்டு குண்டா பின்னூட்டம் போடறதால நம்ம கடை வியாபாரம் போணியாகறதில்ல.அதனால பின்னூட்டத்துல சொல்ல வேண்டிய இத்துணுண்டு செய்திய இங்கே பார்க்கலாம்:)

சாதாரண இரண்டு நாள் மூக்குச் சளி,இருமல்,காய்ச்சல்ன்னா ஏதோ கஷாயம் குடிச்சோம்,சித்த வைத்தியம் பார்த்தோம்,இங்கிலிஷ் மருந்து சாப்பிட்டோம்ன்னு மூணாவது நாள் உடல் தனது சொந்த வேலையை திரும்ப செய்ய ஆரம்பிச்சுடுது.எப்படின்னா மூளை தனியா சிங்கம் மாதிரி சிலுத்துகிட்டாலும்,உழைப்பாளிகள் மாதிரி ஒண்ணா வேலை செய்யற உடல் ரொம்ப புத்திசாலிங்க.

சரி விசயத்துக்கு வருவோம்!நீண்ட நாள் உடல்,மனம் பிரச்சினைன்னா மருத்துவர்கள் உதவி மட்டுமேஇங்கே சிபாரிசு செய்யப்படுகிறது இங்கே.ஆனால் இதுவரைக்கும் பெரிசா ஒண்ணும் பிரச்சினைகள் இல்லீங்க அதுனால இனிமேலும் உடல் சுகாதார பிரச்சினைகள் எதுவும் வரக்கூடாதுன்னு நினைக்கிறவங்க மட்டும் இங்கே வரிசையா நில்லுங்க.கோயம்புத்தூரு வைத்தியரு வனாந்தரம் போயும் இலவச வைத்தியம் பார்க்கிறாரு:)மூணு சீட்டு,ரெயில்ல சோப்பு டப்பா டுபாக்கூர் சூர்யா மாதிரியெல்லாம் இல்லாட்டியும் மருத்துவ ரிசல்ட் கேரண்டிங்ண்ணா!

காலை எழுந்தவுடன் படிப்புங்கிறதெல்லாம் இலக்கணப்பிழை.காலை எழுந்தவுடன் வயிற்றக் கழுவும் ஜல,மல வேலை.பல் துலக்கல்.எளிய யோகாசனப்பயிற்சி,குளியல்.அப்புறம் வயிறு போதும்ன்னு சொல்லும் வரை தண்ணீர்.அப்புறம்தான் படிக்கிறது,அடுப்பாங்கரை,காபி,சமையல்,கொட்டிக்கிறது எல்லாம்.இப்பவெல்லாம் இந்தியாவில் சர்க்கரையும்,இதய நோயும் அதிக மாமே!இங்கேயும் ஒண்ணும் குறைச்சலில்லை.அரபுகள் வீட்டுல சமைக்கிறாங்களோ இல்லையோ KFC,மெக்டொனால்ட் குடியிருப்பும் பெப்சி உறுஞ்சலுக்கும் குறைச்சலே இல்லை.அப்புறம் காரும் வீடும் ஏ.சி.

நாம் மட்டும் குறைஞ்சா போயிட்டோம்?கோழிக்கறி வச்சாலும் சரி,பருப்பு கடைஞ்சாலும் சரி சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடிக்கிறதுக்கு பதில் பெப்சி குடிக்கும் மச்சினிகளும்,நாத்தனார்களும் கூட அதிகமாயிட்டாங்க.ரைம் சொல்லும் குழந்தைகளும் கூட பெத்சி!பெத்சி ன்னு
அடம் பிடிக்குதுகள்.வடம் பிடிக்கும் புலம் பெயர் தமிழர் குழந்தைகளும் ஊர் குளிருதுன்னு தண்ணீர் குடிக்க முடியாமல் இதனை தொடர்வார்கள் என்றே நினைக்கிறேன்.எப்படியோ பெத்சி சர்க்கரைநோய் காவலன் என்பது தெரியாமலேயே உலகபானம் பெயரைப் பெற்று விட்டது.ஹி...ஹி...இஃகி!இஃகி கீ!சரக்கடிச்சாலும் சரக்குக்குள்ளும் பெப்சி ஊத்து மாமே:)

(ஷ்!அப்பாடா! எத்தனை தடவைதான் மருத்துவம் நாட்டாமை பார்க்கிறதுன்னு தெரியல.போன வருடமே மருத்துவம் பார்க்கலையோ மருத்துவம் ன்னு சொல்லி கூவியாச்சு.அப்படியிருந்தும் நாட்டாமை வேலை பார்க்கறதலேயும்,சொம்பு தூக்குறதுலயும் ஒரு கிக் இருக்கத்தான் செய்யுது தலீவீர்களா!டாபிக்கு எங்கேயோ கிராஸ் ஆகுதே!!)

இப்போதைக்கு என்னோட மருத்துவ புதுக்கண்டு பிடிப்பு என்னன்னா நம்ம தல தெகா கடையில யோகாசன பயிற்சி முறைன்னு நல்ல அழகான படம் போட்டிருக்கார்.அவருக்கு பின்னூட்டம் போட்டீங்கன்னா எளிய யோகா விளக்கவுரை PDF தருவார்.பயனுள்ள எளிய விளக்கவுரை.

படம்ன்னு சொன்னதால இவ்வளவு தூரம் வந்துட்டுதால கொஞ்சம் பிலிம் காட்டாலாமுன்னும் ஆசை வந்துருச்சு.முன்னாடி தலிவர் அதுசரி வச்சிருக்கிற டக்கீலா அடிச்சுகிட்டு விக்ரமாதித்தன்கிட்ட சொல்ற வேதாளம் கதைகளுக்குப் போட்டியா சுட்ட,சுடும் படப்பழக்கம் இன்னும் போகலை.உண்ணும் உணவுப்பொருட்களின் சர்க்கரை விகிதாச்சாரம் பத்தி சின்னதா பிலிம் காட்டிடலாம் இப்ப....






இந்தப் படம் மாதிரி FCI,ISI( நல்லா பேர் வச்சாங்கய்யா)போன்றவங்க இட்லி,தோசை.உப்புமா,வடை சாம்பார்,கோழி பிரியாணி,முட்டை பொராட்டா,மீன் வறுவல்,பருப்பு,காய்கறிப் பொறியல்.ரசம்,மோர்,தயிர்,டீ,காபி,சரக்கோட சைட் டிஸ்க்கெல்லாம் எவ்வளவு கொழுப்பு?கார்போ ஹைட்ரேட்,புரோட்டின் ஊட்டச் சத்து,உப்பு,மிளகாய்,கால்சியம்ன்னு பரிசோதனை செஞ்சுட்டா இருக்குற வரைக்கும் நமக்கு பயன்படுகிறதோ இல்லையோ குறைந்த பட்சம் தொலைக்காட்சி விளம்பரம் தயாரிக்க பயன்படும்.பின்னாடி தலைமுறைக்கும் பழக்கதோசத்துல சாப்பிடும் பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் அல்சர் வராமலோ,கொலாஸ்ட்ரல் வராமலோ இருக்கும்.ஆமா!சின்னதா ஒரு சந்தேகம்.அப்பவெல்லாம் விவசாயமெல்லாம் இருக்குமில்ல?இல்ல கிணறு வெட்டாம அணைய மறிச்சே எல்லாம் ஆவியாப் போகிடுமா?இப்பவே இமயமலை உருகுதாம்!

Tuesday, March 16, 2010

உதவி இயக்குநர்கள்.

ஒரு திரைப்படத்தின் வெற்றியில் பலருக்கும் பங்கு இருந்தும் உழைப்புக்கான பலனை அனுபவிக்காத ஜீவன்கள் என்றே உதவி இயக்குநர்களை சொல்லலாம்.துண்டு போட்டும் நின்று கொண்டே உழைக்கும் உழைப்பாளிகள் இவர்கள்.பெரும் எதிர்காலக் கனவுகளுடன் சினிமா துறையில் நுழைந்து முகமறியாமல் டைட்டில்களில் மட்டுமே பெயர்களை பதியவைத்து விட்டு காணாமல் போன துணை இயக்குநர்களின் பெயர்ப்பட்டியல் மட்டுமே தமிழக திரையுலக வரலாற்றில் அதிகம் இருக்கும் என துறை சாராதவர்களும் கூட உறுதியாக நம்பலாம்.

ரிஸ்க் இல்லை என்பதாலோ என்னவோ துணை இயக்குநரும் இயக்கிப் பார்க்கட்டுமென்று திரைப்பட பாடல் காட்சிகளை மட்டும் இயக்க சொல்லி சில இயக்குநர்கள் அனுமதிப்பதுண்டு என எங்கோ படித்த நினைவு.முண்டியடித்து டைட்டில்களினிடையே தெரிந்த உதவி இயக்குநர் பெயர் பட்டியலில் போராடி ஜெயித்த இயக்குநர்களும் உண்டு.கல்லூரிக்காலங்களில் அறிவுஜீவித்தனமாக கல்லூரி சாலைகளிலும் தரமணியின் மழை காலத்து நீரில் காமிரா,கையசைப்பு,நடன அசைவுகள் எனத் திரிந்த நடிப்புக்கல்லூரி காமிராமேன்,இயக்குநர்,நடிகை என ஒரு சில முகங்கள் தங்கள் அடையாளங்களைக் காண்பித்துக் கொண்டாலூம் அங்கேயும் காணாமல் போனவர்கள் பட்டியல் ஏராளம்.

பொருளாதார ரீதியாக தங்கள் வாழ்வை வளமாக்க முடியாமல் அடையாளமில்லாமல் போகும் துணை இயக்குநர்களுக்கும் கூடவே இயக்குநர்களுக்கும் தமிழக திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மூலமாக வழங்கும் புதிய திட்டத்தை கடந்த வாரம் தமிழக அரசு வெளியிட்டுள்ளது வரவேற்க தக்கது.வடுவாகிப் போன பெரும் காயத்திற்கெல்லாம் மருத்துவம் பார்த்திருந்தால் தமிழக முதல்வர் கலைஞரை சரித்திரம் சரிக்க முடியாமல் எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கும்.ம்!பெருமூச்சு மட்டுமே மிஞ்சுகிறது.வேதனைகளின் வலிக்குமிடையில் தற்காலிக நிவாரண மருந்து மாதிரி உதவி இயக்குநர்கள் திட்டம்,கடந்த சனியன்று நிகழ்ந்த சட்டமன்ற திறப்பு விழா போன்ற திட்டங்களுக்கு கலைஞருக்கு குட்டலின் ஊடே பாராட்டவும் செய்யலாம்..

Monday, March 15, 2010

நேற்றைய நாத்திகமும் இன்றைய மதமும்

நாத்திகவாதிகள் குரல் ஓங்கி எழும்புகிறதோ இல்லையோ மகிழ்ச்சியின் அடையாளமாக பெரியார்தாசன் அப்துல்லாவாகிப் போனதில் பெரியார்தாசனுக்கு காசு செலவில்லாமல் ஏகப்பட்ட விளம்பரங்கள் இஸ்லாமிய மதநம்பிக்கையாளர்களிடமிருந்து.

பேராசிரியனாக,கற்றாய்ந்தவனாக,பாரதி ராஜா துணையால் நடிப்புக்கலையில் ஈடுபாடு கொண்டவனாக பெண்சிசுக் கொலைக்கெதிரான கருத்துகளுக்கு கிடைக்காத,நாத்திக சார்பு எண்ணங்கள் கொண்டு வாழ்ந்த காலங்களில் கிடைக்காத பெருமையாக நித்தியானந்த சாதனையாக ஒரே நாளில் அப்துல்லாவாகிப் போனதில் பெருமை.இதில் வருத்தப்படவோ,பெருமைப்படவோ எதுவுமில்லை.பன்முகப் பார்வை கொண்ட ஒரு தனிமனிதனின் இன்னுமொரு பரிணாம வளர்ச்சியென்றே இதனை கருதவேண்டும்.ஒரு மனிதனின் வாழ்நாளின் பெரும் நாட்களில் கிடைக்காத ஞானோதயம் ஒரே நாளில் ஒரு பெயர் மாற்றத்தால் வந்து விடப்போவதில்லை.

சுயசிந்தனை என்பது எண்ணங்களின் வேர்களின் ஆழத்தை தூசி தட்டிப்பார்த்தாலும் இரத்தநாளங்களில் எங்கேயாவது வாழ்ந்த வாழ்க்கையின் நாட்களின் சுக,துக்கங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்.பெரியார்தாசனுக்கு.நாத்திக எண்ணங்களிலிருந்து தாவியது போல் இஸ்லாத்தின் பிடிப்பும் ஒரு நாள் இல்லாமல் வேறு ஒரு இஸம் சிறந்ததென்று மாறினாலும் அப்போதும் வருத்தப்படுவதற்கும் பெருமைப் படவும் எதுவுமில்லை.தலாய் லாமா சொல்வது போல் மதம்,உணவு போன்றவை தனி மனிதனோடு கூட நடைபோட்டு வருபவை.நீ எதுவாக இருக்கிறாயோ அதுவாக இருப்பது எளிது.சிந்தனை மாற்றங்களுக்கு கருத்து சுதந்திரம் இருப்பதால் சுயமாக ஒருவன் சிந்தித்து எடூக்கும் முடிவுகளுக்கு அவனே பொறுப்பு.மாறாக ஆட்டுமந்தைக் கூட்டமாக மதமாற்றம் என்பதில் மட்டுமே கருத்து மாற்றங்கள்.

மதவாதிகளுக்கு மதத்தில் சுகமில்லை.நாத்திகனுக்கும் தேடலில் வினா தெரியாத கேள்விகளாய் மதம் என்ற பாஸ்போர்ட்..எனவே எங்கோ எதுவோ ஒரு வெற்றிடம் மனிதனை மையம் கொள்கிறது.நாத்திக மதவாதிகளின் பெயர்ப் பட்டியல் மிகநீளம்.ஆனால் ஒன்று கூட நினைவுக்கு வரவில்லை.பெரியார் என்ற பெயர்ச்சொல்லால் தாசன் இப்போதைக்கு நினைவுக்கு.....

நீயா?நானா அழகான பெண்கள்

அழகான பெண்களைப் பற்றி சொல்வதற்கு முன் ஒரே சமயத்தில் மக்களிடம் பிரபலமான இரு தொலைக்காட்சி நிகழ்வுகள் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப் பட்டால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?உதாரணத்திற்கு நேரலையாக கிரிக்கெட் அல்லது பெண்களின் மனதை உருக்கும் மெகா சீரியல் என்கின்ற போது இயல்பாகவே ஆண்களுக்கு கிரிக்கெட்டும் பெண்களுக்கு மெகா சீரியலும் என்று எளிதாக சொல்லி விடலாம்.

ஆனால் கலைஞர் மானாட மயிலாடவும் விஜய் நீயா?நானாவில் அழகான பெண்கள் தென்னிந்தியப் பெண்களா அல்லது வடஇந்தியப்பெண்களா என்று பெண்களே களத்தில் விவாதிக்கும் போது உங்கள் விருப்பம் இரண்டில் எந்த நிகழ்ச்சிக்கு தாவும் என்பதும் கூட தனிப்பட்ட ரசனையைப் பொறுத்தது.பெரிய பட்ஜெட் படம் என பிரமாண்டமான தோட்டா தரணி செய்து படம் சரியாக ரசிகர் மத்தியில் போணியாகமல் போவதுமுண்டு.கதையின் வீச்சினால் கிராமப்புற யதார்த்தம் மனதை கொள்ளை கொள்வதுமுண்டு.அந்த மாதிரி பல லட்சக்கணக்கில் செலவு செய்து அலங்கார செட்டில் பெண்கள் கொஞ்சம் குண்டு,கொஞ்சம் அழகு,மேக்கப்போடு ஜிகினா உடைகள்,கொஞ்சம் ஜிம்னாசிய ஆண்கள்,திரைப்படங்களுடன் போட்டி போடும் நடன அசைவுகள்,நகைச்சுவை,கும்மாங்குத்து என கலவை செய்தாலும் மனது மானாட மயிலாடவில் லயிக்கவில்லை.

கலைஞர்,சன் தொலைக்காட்சி ஊடகங்கள் மீது தனிப்பட்ட வெறுப்போ,காழ்ப்புணர்ச்சியோ இல்லாது போனாலும் மக்களால் தங்களை உயர்த்திக் கொண்ட இவர்கள் தமிழுக்கும்,தமிழகத்திற்கும் தொலைக்காட்சி ஊடகத்தைப் பொறுத்தவரை பயனுள்ள வகையில் நிறைய செய்திருக்கலாம் என்ற மனக்குறை நிறையவே.தங்கள் சொந்த அர்ப்பணிப்பு,பங்களிப்பு,தமிழ் நாட்டின் சிறப்பான நிகழ்ச்சிகளையும் இணைத்துக் கொள்வது என அனைத்து விதக் கலவையாகவும் அதனூடே மொழியின் வீச்சாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரலை அமைப்பது எப்படி என்பதை புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காக பல தருணங்களில் பல்வேறு புலம்பெயர் தொலைக்காட்சிகள் நின்று போயிருந்தாலும் செயல்பட்ட வரை நிகழ்ச்சிகள்,தொழில் நுட்பம்,மொழி வளர்ச்சி என தங்கள் பங்கை நிறைவாக செய்ததை பாராட்ட வேண்டும்.தங்கள் உழைப்பின் சில விழுக்காட்டை சந்தாவாக செலுத்தி வளர்த்த காட்சி ஊடகங்கள் போல் அல்லாது தமிழக தொலைக்காட்சிகள் பொருள் வளம்,மனித வளம்,தொழில் நுட்பம் அனைத்தும் இருந்தும் பின்தங்கிப்போவதன் பொருட்டே மனம் அங்கலாய்க்கிறது.பல இளைஞர்,இளைஞிகளின் உழைப்பும்,நடன இயக்குநர் கலாவின் அபரீதமான நிகழ்ச்சிக்கான கற்பனைகளும் நிறைந்திருந்தாலும் ஒரு வித குறு குறுப்பையும்,குடும்பத்தோடு உட்கார்ந்து பார்ப்பதென்றால் உடலை நெளியவும்,குறு குறுக்க வைக்கும் அங்க,நடன அசைவின் வெளிப்பாடுகள் நிறையவே கொட்டிக் கிடக்கின்றன மானாட மயிலாட.இதில் வேறு நேற்று டூயட் ரவுண்ட் எனும் போது சொல்லவா வேண்டும்?

அதே நேரத்தில் விஜய் தொலைக்காட்சியின் நீயா நானாவில் அழகான பெண்கள் தென்னிந்தியப் பெண்களா,வட இந்தியப் பெண்களா என்று மாநிறத்தில் யதார்த்தமான மூக்கும் முழியுமாக தென்னகப் பெண்களையும் வடநாட்டை காலை வாரிவிட வேண்டுமென்ற நோக்கத்திலோ அல்லது தமிழ் பேசும் சவுகார்பேட்டைப் பெண்களையோ வடநாட்டுக்கு சிபாரிசு செய்து உட்கார வைத்திருந்தார்கள்.இருந்தாலும் தங்கள் பாரம்பரியத்தை தென்னகத்தை விட வடநாட்டுப்பெண்கள் காக்கிறார்கள் என்று ஒரு பெண் இசைக்கேற்ப குடத்தை இடுப்பில் வைத்து ஆடியதும்,தாண்டியா நடனமும் வடக்குக்கு கரவொலி எழுப்பியது.தென்னகப் பெண்கள் கும்மியடி பெண்ணே கும்மியடி குடி கொலவயும் போடு கும்மியடி என ஹாரிஸ் ஜெயராஜின் பாடலுக்கு கும்மியடித்தார்கள்.

வடநாட்டு,தென்னக முக்கியமாக தமிழ்நாட்டு ஆண்கள் பற்றிய பெண்களின் பார்வையில்...

தெற்கு:ஆம்பிளைன்னா மீசை முறுக்கோட மிடுக்கா இருக்கணும்.ஜல்லிக்கட்டு காளையக் கூடப் புடிக்கிற தெம்பு இருக்கணும்.கருப்பா இருந்தாலும் களையா இருக்காங்க நம்ம பசங்க.வடநாட்டுப் பசங்களப் பாரு மீசையில்லாம அமுல் பேபி மூஞ்சிகள வச்சிகிட்டு பொம்பள மாதிரி மெதுவா பேசிகிட்டு.

வடக்கு:ஆமா!எப்ப பார்த்தாலும் கத்தி பேசிகிட்டே இருந்தா யாருக்கு புடிக்கும்?ஒரு லுங்கிய கட்டிகிட்டு ஊர் முழுதும் திரியறது:)வடக்கிலயும்தான் வீரமான ராஜ்புத் ஆண்கள் இருக்கிறார்கள்.

தெற்கு:ஆம்பிளைன்னா கத்தி பேச வேண்டிய நேரத்துல கத்தி பேசனும்.மெதுவா பேச வேண்டிய இடத்துல மெதுவா பேசனும்.இந்த இரண்டும் தமிழ்நாட்டு ஆண்கள்ட்ட இருக்குது.

வடநாட்டுப் பெண்கள் மாடர்னாகவும் ஆங்கிலத்தில் பேசுபவர்களாக இருந்தாலும் தங்கள் மொழியிலும் திறம்பட பேசும் ஆற்றலுடையவர்களாக இருக்கிறார்கள்.பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் தவறில்லை.மாறாக மாநிறம்தான் அழகு என்பதை உணராமல் தென்னிந்தியப் பெண்கள் தங்களை சிவப்பாக்க முயற்சி செய்து கொள்கிறார்கள் என்று நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத் முடித்து வைத்தார்.கோபிநாத்தின் சரளமான தமிழுக்கும் மொக்கை தலைப்புக்குள்ளும் நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்களை இணைத்து வெற்றிகரமாய் கொண்டு செல்வதற்கு பாராட்டுக்கள்.

இந்தியா என்ற ஒரே எல்லைக்குள் நோக்கும் போது வடக்கு,தெற்கு கலாச்சார மாறுபாடுகளின் வெளிப்பாடுகள் இருக்கக் கூடும்.சென்னை,மும்பாய்,டெல்லி,கல்கத்தா என எல்லைகள் கடந்தபின் இந்திய,மேற்கத்திய,அரேபிய,லெபனான்,சிரியா,பிலிப்பைன்ஸ்,இலங்கை,எகிப்து பெண்கள் என்ற பார்வையில் 33 விகிதாச்சார உரிமைகளைக் கோரும் பெண் உரிமைகளில்
இந்தியப்பெண்கள் முன்னேறி நிற்கிறார்கள் ஏனைய பெண்களை விட.

Wednesday, March 10, 2010

எம்.எஃப்.ஹுசைன் தேச துறவறம்.

இந்திய நாட்டின் பலம் மேலைநாடுகள்,வளைகுடா,மற்ற ஆசிய நாடுகளுக்கில்லாத வகையில் அனைத்து விதமான கலை,ஓவியம்,மதம்,தத்துவங்கள் என உள்வாங்கிக் கொள்வதே.ஆனால் சந்தர்ப்பங்களின் கலாச்சார முரண்பாடுகளின் வெளிப்பாடாகவோ,எண்ணங்களின் எதிர் வினையாகவோ சில விசயங்கள் ஒரு சிறு கோட்டிலிருந்து துவங்கி,அதன் பார்வைகள் அகன்று ஊதி பூதாகரமாகவும் ஆவதுண்டு.

சிலநேரங்களில் சர்ச்சைக்குரிய பார்வை யாருடைய கண்ணிலும் படாமல் அமுங்கிப்போவதுமுண்டு.உதாரணத்திற்கு சி.என்.என் 9/11 நேரலை காட்சியின் போது மனிதாபிமானமுள்ள எவரும் படபடத்துக்கொண்டிருக்க பிரெஞ்சு நாட்டு ஓவியர் ஒருவர் இரு கட்டிடங்கள் எரிந்து கொண்டிருப்பதை 21ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியமென்றார்.அதேபோல் விவாதத்திற்குரியதாக அல்லாத ஒன்றை எப்படி ஊதி பெரிது படுத்துவதென்பதற்கு சல்மான் ருஷ்டி விவகாரம் ஒரு எடுத்துக்காட்டு.

சல்மான் ருஷ்டியின் சாட்டானிக் வெர்சஸ் இதுவரை எத்தனை பேர் படித்து அதன் பொருளை உள்வாங்கிக் கொண்டிருப்பார்கள் எனத் தெரியவில்லை.ஆனால் சாதாரண வாசகனின் மனதுக்குப் புலப்படாத எழுத்துக்களால் நாவல் என்ற நிலையில் எழுதப் பட்ட புத்தகம் அது.ஈரானின் பத்வாவினால் சல்மான் ருஷ்டியும்,சாத்தான் வேதம் ஓதுகிறதுவும் உலகம் முழுவதும் அறியப்பட்டது.சல்மான் ருஷ்டி லண்டனில் போய் தஞ்சமடைந்தார்.அதே போல் எம்.எஃப்.ஹுசைன் ஓவியம் இந்துக்களின் மனதை புண்படுத்துகின்றதென்று அவர் மேல் பல வழக்குகள் வரை நீதிமன்றத்தில்.வழக்குகளுடன்,உயிருக்கான பயமுறுத்தல்கள் வேறு.ஓவியனாகவோ,முதுமையான வயதின் பொருட்டோ தொடர் வழக்குகள்,பயமுறுத்தல்கள்,அரசியல்,மதவாதம் போன்ற காரணங்களாலும் தனது ஓவியத்தை சந்தைப் படுத்த சிறந்த இடம் என்று அவர் துபாய் சென்றிருக்கலாம்.

திரும்பவும் இந்தியா செல்ல விரும்பாத நிலையில் அருகிலுள்ள கத்தார் அரசு ஹுசைனை தனது குடிமகனாக ஏற்றுக்கொண்டது.சில தினங்களுக்கு முன் மெக்ஃபூல் ஃபிடா ஹுசைன் என்ற எம்.எஃப்.ஹுசைன் தனது இந்திய கடவுச் சீட்டை கத்தார் இந்திய தூதரகத்தில் சமர்ப்பித்து விட்டார்.இனி மேல் அவர் கத்தார் குடிமகன்.

ஹுசைன் துபாய் செல்வதற்கு முன்பான இதன் பின்புலத்தை சற்று பின் நோக்கிப் பார்த்தால் இந்தியப் பாரம்பரியமான ஓவியத்துக்கும் அப்பால் அரசியலும்,மதபித்தும் ஒன்றோடொன்று பிணைந்திருப்பதைக் காணலாம்.அவரது சரஸ்வதி,துர்கா,சீதா ஓவியங்கள் விமர்சனங்களுக்கான துவக்கம்,புள்ளி என்று பார்த்தால் எம்.எஃப்.ஹுசைனின் சீதா,துர்கா ஓவியங்கள் ஹுசைனால் 1970ம் வருடம் வரையப்பட்டதும் அவரது தனிப்பட்ட சேகரிப்பின் பத்தாயிரத்துக்கும் மேலான ஓவியங்களில் சில.1996ம் வருடம் விசார் மிமான்சா என்ற ஹிந்தி பத்திரிகையில் "MF Hussain,the Painter or a Butcher" என்ற தலைப்பில் தனிக் கட்டுரையாக வந்தது.அந்த சமயத்தில் எழுந்த எதிர் விமர்சனங்களின் விளைவாக ஆபாசமான பெயிண்டிங்,மற்றும் பெண்களை தரக்குறைவாக நியமனப்படுத்தல் என்ற கூற்றில் இ.பி,கோ 153எ,295எ என்ற பிரிவில் வழக்குகள் தொடரப்பட்டன.1996,அக்டோபரில் இந்துத்வா பஜ்ரங்க்தள் அகமதாபாத் கெர்விட்ஜ் கேலரியில் ஹுசைனின் ஓவியங்களை சேதப்படுத்தியது.

1998ம் வருடம் பம்பாயில் ஹுசைனின் வீட்டை பஜ்ரங்க்தள் சார்ந்தவர்கள் சேதப்படுத்தினார்கள்.இதனை சிவசேனாவின் பால்தாக்கரே எப்படி நியாயப்படுத்துகிறாரென்றால்"If Husain can step into Hindustan, what is wrong if we enter his house?" பால்தாக்கரே குழுவை எந்த விதத்தில் விமர்சிப்பதென்று தெரியவில்லை.ஒரு புறம் பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட மும்பாய் வரக்கூடாதென்றும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ, இந்தியா மீதான நிழல் தாக்குதலை தொடரும் போது இந்த மாதிரியான விளையாட்டுக்கள் பயன் தராது என்ற வாதத்தில் நியாயம் இருந்தாலும் இந்திய நாட்டுக்குள் மனித நல்லுணர்வை குலைப்பதில் மட்டுமே சிவசேனா இதுவரையிலும் முன்னிலை வகிக்கிறது.

ஹுசைன் தனக்குத்தானே அக்னிப் பரிட்சை செய்து கொள்வதாகவும், ஒரு ஓவிய விமர்சகர்,ஒரு வழக்கறிஞர், ஒரு விஷ்வ ஹிந்து பரிசத் உறுப்பினர் கொண்ட குழு அமைத்து வரும் தீர்ப்பில் தனது ஓவியம் மனம் புண்படும்படியாக இருந்தால் தானே முதல் ஆளாக எனது அனைத்து ஓவியங்களையும் கொழித்தி விடுகிறேன் என்றார். "நான் ஒரு ஓவியன்!இந்திய தேசத்தில் நம்பிக்கை கொண்டவன்!எனக்குத் தெரிந்ததெல்லாம் ஏழு வர்ணங்களும் அதன் கலவைகள் மாத்திரமே" என்று அவர் வீட்டை சேதப்படுத்திய நேரத்தில் சொன்னார்.


2004ல் இந்த வழக்குகளை விசாரித்த டெல்லி உயர்நீதி மன்றம் " On Seeing the sketch or drawing of the lady with bull one finds that it has been drawn in such a manner that it appears to be a piece of art and creative imagination and in no way falls within mischief of obscenity nor does it come within mischief of word or gesture or on act indending to hurt the modesty of a woman." என்று வழக்குகளை தள்ளிபடி செய்தது.

இதற்கிடையில் 2006 வருடம் டேனிஷ் கார்ட்டூனிஸ்ட்டால் வரையப்பட்ட முகமதுவின் கார்ட்டூன் உலகளாவிய அளவில் முஸ்லீம்களின் கோபத்துக்குள்ளானது.உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் மந்திரி டேனிஷ் கார்ட்டூனிஸின் கரங்களை வெட்டுபவருக்கு 51 கோடி வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.கையை வெட்டுவது மாதிரியான அறிவிப்புக்களையெல்லாம் எதிர்த்து யாரும் இந்தியாவில் குரல் கொடுக்க காணோம்.இதையெல்லாம் இங்கே சுட்டிக் காண்பிப்பதன் காரணம் தேர்தல் காலத்து அரசியலும் மதவாதங்களும் எப்படியெல்லாம் ரூபமெடுக்கின்றன என்பதற்காகவே.

அதே கால கட்டத்தில் 2006,பிப்ரவரியில் தனது எதிர் விமர்சன ஓவியங்களுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாயும் ஓவியங்களை ஏலம் விடுவதை நிறுத்திக் கொள்வதாயும் அறிவித்தார்.பின்பு தனது ஓவியங்களை சந்தைப் படுத்தவும்,எதிர்வினைகளை தவிர்க்கவும் துபாய் சென்று விட்டார்.

மாதுரி தீட்சித் திரைப்படங்களில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் ஹிந்தி திரைப்பட ரசிகர்கள் மாத்திரமல்லாது இன்பெச்சுவேசன் மாதிரி மாதுரி தீட்சித்தின் திரைப்படங்களை நண்பர்களுடன் திரை அரங்குகளில் தொடர்ந்து பார்த்ததும் மாதுரியை வைத்து திரைப்படம் தயாரிக்க நினைத்து வங்கி கணக்கை குறைத்துக் கொண்டார்.தமிழில் கூட என்ஜினியர் என்று மாதுரியை கதாநாயகியாக அறிமுகப்படுத்த நினைத்து விளம்பரத்துடன் படம் நின்று போனது மாதிரியான நினைவு.

தெகல்கா பத்திரிகைக்கு கொடுத்த நேர்காணலில் சில வரிகள் எம்.எஃப்.ஹுசைன் என்ற ஓவியனின் மனதை படம்பிடித்துக் காட்டுகிறது.

தெகல்கா:உங்களுக்கெதிரான அடிப்படைவாதிகளைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள்?

ஹுசைன்:நான் இது பற்றி பொருட்படுத்தவில்லை.இந்தியா ஜனநாயக நாடு.ஒவ்வொருவருக்கும் அவர்களது கருத்துக்களை சொல்ல உரிமையுண்டு.ஆனால் இந்தக் கருத்துக்களை வன்முறை உபயோகிக்காமல் விவாதங்கள் மூலமாக வெளிப்படுத்தினால் நல்லது.ஊடகங்கள் என்னிடம் கடுமையான வார்த்தைகளை எதிர்பார்க்கின்றன.எனக்கு இந்தியா மீது மிகவும் நம்பிக்கை இருக்கிறது.இந்திய ஓவியங்கள் 5000 வருடங்களாக தொடர்ந்து புது வடிவங்களை சுமந்து வந்துள்ளது.இனி வரும் இளைய தலைமுறை அடிப்படை வாதிகள்,பிற்போக்குவாதிகளின் கருத்துக்களை மறுத்து இந்தியாவில் மாற்றம் கொண்டு வருவார்கள் என நம்புகிறேன்.அதே சமயத்தில் அடிப்படைவாதிகள்,பிற்போக்குவாதிகளின் கருத்துக்களும் ஒரு பக்கம் வலம் வரட்டும்.இந்தியா ஒரு பெரிய குடும்பம் மாதிரி.குடும்பத்தில் ஒரு குழந்தை எதையாவது சேதப்படுத்தினால் நாம் கோபப்பட்டு வீட்டை விட்டு துரத்தி விடுவதில்லை.பதிலாக நாம் விளக்கி கற்றுக் கொடுக்க வைக்கிறோம்.எனது ஓவியங்களை குற்றம் சொல்பவர்கள் ஒன்று அதனை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.அல்லது எனது ஓவியத்தை பார்த்திருக்க மாட்டார்கள்.

தெகல்கா:உங்களுக்கு இந்திய ஓவியம் மற்றும் கலாச்சாரத்தில் ஈடுபாடு எப்படி வந்ததென்று சொல்ல இயலுமா?

ஹுசைன்: முன்பு பந்தர்பூர் என்ற இப்போதைய இந்தூரில் நான் சிறுவனாக இருக்கும் போது ராம் லீலா கதைகளில் வசீகரிக்கப்பட்டேன். மங்கேஸ்வர் என்ற எனது நண்பனும் நானும் அதேபோல் வேடம் போடுவோம்.ராமயாணம் ஒரு சிறந்த வலுவான கதை.ராஜகோபலாச்சாரி ராமயாணம் பற்றி சொல்லும் போது இதிகாசம் உண்மையாகி விட்ட மாதிரி இருக்கும்.எனது அம்மா இறந்த பின் எனக்கு 14,15 வயதில் நிறைய கெட்ட கனவுகள் வந்தன.எனக்கு 19 வயது இருக்கும் போது முகமது இஷாக் என்பவரிடம் குரானை இரண்டு வருடம் படித்தேன்.கூடவே மங்கேஸ்வருடன் புராணங்கள்,கீதை,உபநிசதங்களைப் படித்தேன்.அதன் பின் மங்கேஸ்வர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு இமயமலை சென்று விட்டான்.நான் தொடர்ந்து படித்ததன் காரணமாக மிகவும் அமைதியாகிவிட்டேன்.எனக்கு கெட்ட கனவுகள் வந்ததெல்லாம் நின்று போயிற்று.

பின் 1968ல் ஹைதராபாத்தில் டாக்டர் ராம் மனோகர் லோகியா என்னை ராமயாணத்தை வரையச் சொன்னார்.என்னிடம் பணமில்லை.ஆனாலும் எட்டு வருடங்களில் 150 வரை ஓவியங்களை வரைந்தேன். நான் வால்மீகி மற்றும் துளசிதாஸ் ராமயாணங்களை தொடர்ந்து படித்தேன்.பனாரஸிலிருந்து இந்து குருக்களை வரவழைத்து அவர்களிடம் ஓவியத்தின் குறைகளை கேட்டறிந்தேன்.சில இஸ்லாமியர்கள் என்னை அருகி இஸ்லாமிய கருத்துக்களுடனான ஓவியங்களை வரையச் சொன்னார்கள்.இஸ்லாமுக்கு இந்திய சகிப்புத்தன்மையிருக்கிறதா என்று பதிலளித்தேன்.ஒரு காலிகிராபி எழுத்து தவறாகப் போனாலும் ஓவிய ஸ்கிரீனை கிழித்து விடுவார்கள்.என் வாழ்நாளில் 100க்கும் மேலான கணேஷ் ஓவியத்தை வரைந்துள்ளேன்.அவை எனக்கு ஆத்ம திருப்தியுள்ளவை.எந்த ஒரு பெரிய ஓவியத்தை வரையும் முன்பும் கணேஷ் வரைந்து விட்டே ஓவியத்தை துவங்குவேன்.சிவன்,நடனமிடும் நடராஜ் ஓவியங்கள் மிகவும் சிரமமானவை.ஐன்ஸ்டீனின் விதிகள் மாதிரி மிகவும் நுட்பமானவையும் தத்துவார்த்தம் கணக்கியல் சார்ந்தது அவை.

எனது மகள் திருமணத்தின் போது எந்த விதமான விழாவும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.எனவே ஒரு கார்டில் பார்வதி சிவனின் மடியில் உட்கார்ந்திருப்பது மாதிரியும் சிவனின் கரங்கள் பார்வதியின் மார்பை தொடுவது மாதிரியும் வரைந்து உறவினர்களுக்கு அனுப்பி வைத்தேன்.இந்துக் கலாச்சாரத்தில் நிர்வாணம் என்பது புனிதமானது.எனக்கு மிகவும் நெருக்கமான அந்த உணர்வை நான் அவமதிப்பேனா?ஷியாவின் சுலய்மானி வகுப்பிலிருந்து வந்தவன் நான்.எங்களிடம் மறுபிறவி உட்பட பல இந்துமதம் சார்ந்த நம்பிக்கைகள் உண்டு.கலாச்சார ரீதியாகவும்,உணர்வு பூர்வமாகவும் ஜூடாயிஸமும்,கிறுஸ்தவமும் மிகவும் தொலைவிலானவை.ஆனால் இதையெல்லாம் என்னை எதிர்ப்பவர்களிடம் விவாதிக்க இயலாது.இவர்களிடம் கஜரஹோ சிலைகளைப் பற்றிக் கேட்டால் இந்திய ஜனத்தொகையைப் பெருக்குவதற்கு என்பார்கள்.ஆனால் உணர்வு பூர்வமான,புலன்களை மகிழ்விக்கும்,இன்னும் பரிணாம வளர்ச்சியடையும் இந்துக் கடவுள்களை கிராமப்புற மக்கள் மட்டுமே அறிவார்கள்.கிராமிய மக்கள் மலைகளில் ஆரஞ்சு வர்ணத்தை பூசுகிறார்கள்-இது ஹனுமானைக் குறிக்கிறது.

தெகல்கா: உங்களது ஓவியங்கள் எப்படி பேசப்படவேண்டும்,நினைவு கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?

ஹுசைன்:எனது ஒவியங்கள் ஒரு கதையை சொல்ல வேண்டும்.பார்க்கும் மக்களுடன் ஓவியம் பேசவேண்டும்.குப்தர் காலத்து பித்தளை உருவங்களை த்ரிபாங்கா என்ற எரோட்டிக் வர்ணமான பெகாரி ஓவிய வடிவத்தில் உபயோகப்படுத்தியிருக்கிறேன்.எனது ஓவியங்கள் பாரம்பரியத்தோடு இருப்பதோடு அதில் ஒரு கிராமியத்தன்மை இருப்பதை விரும்புகிறேன்.இந்தியாவில் கலை,ஓவியம் சார்ந்த தஞ்சாவூர்,சோழர்,குப்தர்கள் கால பொற்காலங்கள் உண்டு.நூற்றாண்டுகளின் பார்வை அவைகளில் உண்டு.பல பண்பாடும்,பாரம்பரியமும் இருந்தும் இந்தியா சுதந்திரமடைந்து 60 வருடங்களுக்கும் மேலாகியும் ஓவியம் கற்பவர்களுக்கு கிரேக்க கலை சார்ந்த உடலைப் பற்றி மட்டுமே சொல்லிக் கொடுக்கப்படுகிறது.ஷேக்ஸ்பியர்,கீட்ஸ் சொல்லிக் கொடுத்து விட்டு காளிதாசனைப் பற்றி சொல்லிக் கொடுக்க மறந்து விடுகிறோம்.இந்தியன் யாரென்று சரியாக அடையாளப்படுத்த தவறி விடுகிறோம்.பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சுப்புலட்சுமி,மதர் தெரசா,ஜே.ஆர்.டி டாட்டா,என்னை கவுரவிக்கும் போது தலையில் ஒரு சிவப்பு தொப்பியும்,ஒரு அங்கியையும் கொடுத்து சிறப்பித்தது:)

இந்தியாவின் இரைச்சலும்,ஜனநாயக சுதந்திரங்களும்,பல மாநிலத்து பண்பாட்டுக் கலாச்சாரங்களும்,கடந்து வந்த நூற்றாண்டுகளின் படையெடுப்புக்களும்,அதனைச் சார்ந்த மாறுதல்களும்,இவற்றின் ஊடே தம்மை உறுதிபடுத்திக் கொண்ட கலை,கட்டிடங்கள்,மொழிகள்,இனங்கள்,உடை,உணவுப்பழக்கங்கள் ஒரு கலைஞனுக்கு,ஓவியனுக்கு,கவிஞனுக்கு,இலக்கியவாதிக்கு,சிந்தனையாளனுக்கு,வாழ்வின் தத்துவம் தேடுபவனுக்கு ஒரு வரப்பிரசாதம்.இதையெல்லாம் துறந்து ஓவியனாக எம்.எப் ஹுசைன் இனி பாலைவனக் கலாச்சாரத்தின் வேர்களையும்,உயர்கட்டிடங்களுக்கு புதிய உயிரோட்டத்தைக் கொண்டு வருகிறாரோ இல்லையோ முதுமையில் அமைதியான நாட்களை கத்தார் வழங்கும் என உறுதியாக நம்பலாம்.