வாழ்வோடு ஒட்டிய கலாச்சாரத்தில் தி.மு.கவும் ஒரு பகுதி என்பதாலேயே கருத்துக்களை,விமர்சனங்களை முன் வைக்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் கழிவுகளை நீக்கி நேர்பார்வை பார்த்தால் தி.மு.க வின் செயல் திட்டங்கள் தமிழகத்திற்கு நன்மைகளே.
பெரியார் கொள்கைகள் சில செயல் வடிவம் ஆன போதும் சங்கர மடம் போல் திராவிட கழகமும்,தி.மு.க குடும்ப மடம் ஆகி விட்டன. திராவிட கழகம் சமூகம் சார்ந்து செயல்படுவதால் தமிழகத்தின் இன்னுமொரு வழி என்று பின் தள்ளி விடலாம்.ஆனால் தமிழகத்தின் பொதுமக்கள் அனைவரின் வாழ்க்கை,வீழ்ச்சியை அரச பீடம் நிர்ணயிப்பதால் தி.மு.க பெயருக்கு அரசியலே வாழ்க்கை என்பதால் சில மாறுதல்களை கலைஞர் காலத்திலேயே கொண்டு வந்தால் தி.மு.க வின் பெயர் நீண்டதோர் வரலாற்றை இன்னும் நிறுவும். இந்த கருத்துரை தேர்தலுக்கும் அப்பாலான நீண்ட பார்வை.
குடும்ப ஆட்சி மட்டுமல்ல திரு.ஸ்டாலின் கூட அரச பதவியின் அடுத்த வாரிசு என்பது ஜனநாயகத்துக்கு விரோதமான ஒன்று. வாரிசு அரசியல் மற்ற மாநிலங்களில் நிகழவில்லையா என்ற எதிர்கேள்விக்கு மற்ற மாநிலங்களைப் போல் தமிழகம் அல்ல. அரசியலும் திரைப்படங்களும் தமிழகத்தின் வாழ்க்கை நீரோட்டம். இன்னும் சொல்லப் போனால் வாரிசு அரசியலை விட ஜெயலலிதாவின் ஒற்றை ஆட்சி தமிழகத்திற்கு நல்லது.
அரசு பணியில் இருக்கும் சகாயம் கூட தமிழகத்தின் மாற்று என்று மக்கள் கருதும் நிலையில் ஸ்டாலின் தி.மு.கவுக்கான தீர்வு அல்ல. தி.மு.க வில் இன்னும் கூட கட்சி கட்டுப்பாட்டை மதித்து பல பேர் இருக்க கூடும்.அவர்களையெல்லாம் ஏன் தி.மு.க முன் நிறுத்துவதில்லை?
சகாயம் மாற்று என பலர் நினைக்கும் போது வாரிசு அரசியலும் தி.மு.க வின் வீழ்ச்சிக்கான இன்னுமொரு முக்கிய காரணம் என்பதால் ஓரளவுக்கு மக்களுக்கு தெரிந்த திருச்சி சிவா போன்றவர்களை ஏன் தி.மு.க கலைஞருக்கு அடுத்த மாற்றாக கருதுவதில்லை? அரசியலில் ரிமோட் கண்ட்ரோல்களாக பால் தாக்கரே,சோனியா போன்றவர்கள் உதாரணம். அனுபவம் வாய்ந்த கழகத்திற்கு வழியில் போறவனெல்லாம் கருத்து சொல்கிறான் என்று கழக கண்மணிகள் நினைத்தால் கலைஞருக்கு பின் நிச்சயம் தி.மு.க இல்லை
இப்பொழுதே அரசியல் பேரம் பேசும் திறன் இன்றி விஜயகாந்தைக் கூட வரவேற்கும் கட்டெறும்பு நிலை என்பதை விட கலைஞரே சொன்ன கடுகு நிலையில் தி.மு.க இருக்கிறது. கடுகின் காரத்தை விட மிளகாய் காரம் இன்னும் அதிகம். தமிழகம் கடுகு தாளிப்பதோடு மிளகாய் காரத்தை அதிகமாக விரும்புகிறது. .
ஜனநாயக வழியில் கட்சி செயல்பாடுகளை முன்னெடுக்கும் தி.மு.கவிற்கு வாரிசு அரசியல் நல்லதல்ல. கட்சி ஜனநாயகம் தழைக்க திருச்சி சிவா போன்றவர்களை முன்னிறுத்துங்கள்.
கழக கண்மணிகள் கேட்டால் கேளுங்கள்.இல்லையென்றால் பல் போன காலத்தில் வளரும் நிகழ்வுகளை ஒட்டி பதிவை அசை போடுகிறேன்.