ஒரு திரைப்படத்தின் கதையின் முடிச்சை முன்னாடியே சொல்லி விட்டு பின் தொடர்ந்து கொண்டு போவது ஒரு வகையான கதை சொல்லும் நுட்பம்.இன்னுமொன்று கதையை மெல்ல நகர்த்தி விட்டு க்ளைமாக்ஸில் சொல்வது இன்னுமொரு வகை.மற்றுமொரு வகை கதை தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் போது ஒரு விதமாகவும் பின் படம் எடுக்கும் கால அவகாசத்தில் கால்ஷீட்,பட்ஜெட் இன்னும் பல காரணங்களால் கதை மதுரை தெருக்கள் மாதிரி நீண்ட வரிசையில் இல்லாமல் சென்னையின் அவரவர் கற்பனைக்கு தகுந்த மாதிரியான குறுக்கு சந்தில் புகுந்து விட்டாப் போதுமடா சாமின்னு படத்தோட கதையை சொல்லி முடிப்பது.இந்த பதிவின் தலைப்பும் கூட மூன்றாவதாக சொன்ன மாதிரிதான்..
சங்மா பற்றி நேரா சொல்லாமல் வருணை ஏன் வம்புக்கு இழுக்குறேன் என்று சிலருக்கு தோன்றும்.ஆனால் நம்ம வருண் எனக்கு அ.தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை ஜெயலலிதாவிடம் கேட்காமலே சிபாரிசு செய்வதற்கென்றே நான் அரசியல் பதிவு போடாவிட்டாலும் கூட ஓடி வருவதாலும் நேர் கொண்ட பார்வையும்,,நிமிர்ந்த நன்னடையும் கொண்ட எமக்கு ஓ.பன்னீர்செல்வம் கோணல் முதுகெல்லாம் சரிப்பட்டு வராது என்பதாலும் தலைப்புக்கான விளக்கம் சொல்லி இப்ப பதிவுக்குள்ளே போகலாம்.
என்னை தொடர்பவர்களுக்கும் அல்லது தொடராமலே பின்னோக்கி சில பதிவுகளை மேய்பவர்களுக்கும் ஓரளவுக்கு அனுமானம் வந்து விடுமென்பதால் பொருளாதார அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் செய்தி நோட்டம் பார்க்கும் போதே எனக்கு திக் என்றது.அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சண்டையிருக்க முடியும் என்பது போலவே கலைஞர் கருணாநிதிக்கும் அப்துல்காதருக்கும் என்ன சண்டையிருக்க முடியும் என்பதும் கூட இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.விஞ்ஞானி,முன்னாள் ஜனாதிபதி,அனுபவஸ்தன் இவற்றை விட நம்மூர்க்காரனாச்சே என்ற உணர்வும் கூட இல்லாமல் பிரணாப்புக்குத்தான் தி.மு.க ஓட்டு என்றதும் பஜகவும் வாய் மூடிய நிலையில் ஜனாதிபதி மாளிகை வெளிகேட்டு வரை பிரணாப் நடந்து வந்து விட்டாரென்றே நினைத்தேன்.
ஜெயலலிதாவும்,ஒடிஸா முதல்வர் ஜூனியர் பிஜு பட்நாயக் இருவரும் இணைந்து சேர்ந்து அறிக்கை விடும்போதே முன்பு சபாநாயகராக இருந்த பின் இருந்த இடமே தெரியாமலிருந்த சங்மாவை முன்னிறுத்தும் அரசியல் தந்திரம் கூட புரியாமலே இருந்தேன்.அன்சாரியும்,அப்துல் கலாமும் இல்லாத சூழலில் பிரணாப் முகர்ஜி என்ற ஹெவி வெயிட் சேம்பியனை வீழ்த்துவதற்கு நோஞ்சான் பயில்வான் சங்மாவை நிறுத்தியதன் பின்ணணியில் இந்தியா சார்ந்த நலன்கள் உள்ளதால் சங்மாவை ஆதரிப்பது சரியான முடிவு என கருதுகிறேன்.
அது என்ன இந்தியா சார்ந்த நலன் என்றால் பல நொள்ளை நொட்டைகளை நாம் இந்தியனாக விமர்சித்தாலும் கூட அந்தப் பக்கம் ராணுவ ஆட்சி பூட்ட கேசு நிலை தோற்று ஜனநாயகத்துக்கு தத்தளிக்கும் பாகிஸ்தான்,இந்தப் பக்கம் உலகமே கண்டுக்காமல் இருந்து இப்ப நானும்தான் ரவுடியாக்கும் என ஒரு புறம் சிவுப்பா கழுத்துல சுருக்கு ஜனநாயக முகமூடி மறுபுறம் ராணுவத்தின் பலத்தால் மட்டுமே ஆட்சி செய்யும் இலங்கை,இன்னும் கொஞ்சம் தள்ளிப் போனால் ராணுவ ஆட்சியிலிருந்து விடுபட்ட மியான்மார்,கருத்துரிமைக்கும் பிளாக்கரையும் விட ஒரு பார்வையற்றவருக்கே தடை போடும் சீனாவின் சித்தாந்தம்,மதம் என்ற சுழற்சிக்குள் சிக்கிக்கொண்ட ஈரான் மற்றும் வளைகுடாக்கள்,மால தீவு என்ற குட்டி தீவையும் கூட நிர்வாகிக்க முடியாத கூ என்ற பெரும்வட்டத்துக்குள் இந்தியாவை நோக்கினால் இரைச்சலான ஜனநாயகம் என்ற ஆணிவேரை வேருன்று இருக்கிறது.ஊழல்கள்,மனித உரிமை மீறல்கள்,காவல்துறை நண்பன ஆனால் சீர்கேட்டு நண்பன் என்ற குறைபாடுகள் உள்ளதை மறுப்பதற்கில்லை.ஆனால் பல இன,மத,கலாச்சார பண்புகளுக்குள் சண்டையும் போட்டுக்கொண்டு தீவிரவாதத்தையும் தாங்கிக்கொண்டு இந்தியா என்ற பெரும் பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது இந்திய ஜனநாயகம்.
தொடர்ந்து அரசியல் பதிவுகள் போட்டு கலக்கிக் கொண்டிருக்கும் பதிவர் காவிரி மைந்தன் பதிவொன்றுக்கு நண்பர் ஒருவர் இந்த ஜனாதிபதி பதவியில் ஏதாவது பயன் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.இந்திரா காந்தி ஜனாதிபதி ஆட்சி,கமிசன் போன்ற பூச்சாண்டியைக் காட்டியே தன் சொல் நயத்தால் தமிழகத்தை வளைத்துப் போட்ட கலைஞர் கருணாநிதிக்கு மூக்கணாங்கயிறு போட்டார். மேலோட்டமாக பார்த்தால் ஏதோ இங்கிலாந்து மகாராணிக்கான கௌரவ பதவி மாதிரி தோன்றினாலும் கூட மரணதண்டனையின் விநாடிகளை அணு அணுவாய் சந்திக்கும் ஒரு மரணதண்டனைக் கைதியின் உயிரை திரும்ப வரமளிக்கும் வல்லமை கொண்டது ஜனாதிபதி பதவி.
ஏதோ கொசு கடிச்ச மாதிரி இருந்ததே என்று தட்டிவிட்டு நகர்கிறது 2G இன்று.இந்தியாவின் பண மதிப்பு குறைந்து விட்டது கவலைக்குரியது என்கிறார் பிரணாப் இன்று.அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று நாளை ஒரு 10 G ராகுல் காந்தி காலத்திலோ அல்லது ஏதோ ஒரு நிதியின் காலத்திலோ நிகழ்ந்து விட்டதென வைத்துக்கொள்வோம்.மத்திய அரசுக்கும்,மாநில அரசுக்கும் கொடுக்கல் வாங்கலில் இழுபறின்னு வச்சுக்கலாம்.மத்திய அரசு ஜனாதிபதியை கிள்ளினால் மாநில அரசில் ஜனாதிபதி ஆட்சி வந்து விடும் பவர்புல் மனிதன்/மனுஷி ஜனாதிபதி. அங்குசம் யார் கையில் இருக்கிறதென்பதைப் பொறுத்தே ஜனாதிபதி யானை மிரளுமா தூங்குமா என்பது. DD என்ற தொலைக்காட்சி விஞ்ஞான வளர்ச்சியையும் இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தை இரைச்சலுடன் பறை சாற்றிக்கொண்ட கால கட்டங்களில் எமபி குதிக்கும் எம்.பி மாணவர்களுக்கு கடிவாளம் போடுவது எப்படியென்ற கலையை நன்கு கற்று வைத்திருந்தார் சங்மா.
இந்தியா பலவிதமான ஜனாதிபதிகளை பரிட்சித்துப் பார்த்து விட்டது.சங்மாவின் தேர்வு இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களாகவும், மாவோயிஸ்ட்டுகளாகவும் விரும்பும் அடிப்படை வசதிகளற்ற மனிதர்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும்.
சுருக்கமாக சொன்னால் பிஜேபியின் அப்துல் கலாம் போல சங்மா ஜெயலலிதாவின் இந்திய ஜனநாயகத்தின் புதிய ஜனாதிபதிக்கான பரிட்சையாக இருக்க முடியும்.
இரண்டு வரிதான் சொன்னேன்!அதுக்குள்ள இவ்வளவு பெரிய ஜவ்வு மிட்டாயா?முடிச்சுடறேன்.