நேற்று இரவு இலண்டனின் சேனல் 4 தொலைக்காட்சியால் Srilanka's killing field என்று தலைப்பிடப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட ஆவணப்படத்தைக் காண நேர்ந்தது.இரவு 3 மணியாகியும் தூக்கம் வராமல் மனம் அவதிப்பட்ட நேரம். இதனை முன்பே போர்க் குற்றங்களுக்கும் புதிய ஆதாரமாக ராஜதந்திரிகள், ஐரோப்பிய,அமெரிக்க,இந்திய தூதுவர்கள்,பத்திரிகையாளர்கள்,மனித உரிமைக் குழுவினர் பார்த்து வேதனைப்பட்டதும் கூட காணக் கிடைத்தது.இதில் இலங்கை சார்பாக அங்கம் வகித்த சனத் சூர்யா தனது பேச்சின் ஊடே நடு விரலைக் காட்டுவது மாதிரி பேசியது,தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய பொருளாதாரதடை, கச்சத்தீவு தீர்மானங்களை அலட்சியப்படுத்தல், மேற்கத்திய நாடுகளின் மறைமுக கண்டனங்கள் அனைத்தையும் உதாசீனப்படுத்துவதின் பின்ணணி என்ன? மனித உரிமைகள் மீறலாக இலங்கை எல்லை மீறி செயல்படுவதும் இந்தியாவும்,தமிழகமும் தேமேன்னு பார்த்துக் கொண்டு நிற்பதும் பார்க்க சகிக்கவில்லை.
சேனல் 4 ஆவணத்தின் காட்சிகள் பெரும்பான்மையானவை புகைப்பட வடிவிலோ,காணொளியாகவோ கடந்த இரண்டு வருடங்களில் தொடர்ந்தும் தமிழ்மணத்தின் ஈழம் பகுதியில் அவரவர் பதிவுகளின் சார்பாக வைக்கப்பட்ட போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையின் ஆதாரங்களாகும்.இவற்றின் பெரும்பான்மையானவை போர் நிகழ்ந்த மே 15ம்தேதிக்கும் முன் நிகழ்ந்தவையும் பல இலங்கை ராணுவ வீரர்களின் கைபேசி காமிராக்களில் பிடிக்கப்பட்டதும்,சில இலங்கை அரசு, ராணுவ பூர்வமாக பதிவு செய்யப்பட்டவைகளாகும்.உலக பத்திரிகையாளர்கள் யாரையும் நுழைய விடாமல் ராஜபக்சே அரசின் போங்கு பிடிக்காமல் கசிய விடப்பட்டவையும்,சரத் பொன்சேகா சார்பாளர்கள் மற்றும் சிங்கள மனித உரிமைகளை மதிக்கும் ஒரு சில பத்திரிகையாளர்களால் பொதுவெளிக்கு வந்தவை என ஆவணப்படத்தை தயாரித்த இயக்குநர்/தயாரிப்பாளர் கேலம் மெக்ரா (Callum Macrae) மற்றும் சேனல் 4 தொலைக்காட்சி கூறுகிறது.இவை புனையப்பட்ட காட்சிகள் என்று இலங்கை அரசு இதுவரை மறுத்து வருகிறது.ஆதார காட்சிகள் அனைத்தும் உண்மையே இதில் எந்த கணினி திணிப்பும் கிடையாது என்று புகைப்பட வல்லுநர்களும்,ஐ.நாவும் உறுதிப்படுத்தியுள்ளது.
சேனல் 4ன் ஆவண காணொளிக்கு சற்றும் குறையாத வண்ணம் புகைப்படமாக,ஆவணமாக பிரபாகரன் என்ற தோழரால் என்ன செய்யலாம் இதற்காக புத்தகமாக கிடைக்கிறது.http://www.panuval.com/ என்ற தளத்திலிருந்து ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம்.
போர்க்குற்றங்களுக்கும்,இனப்படுகொலைக்கும் துணையாக மௌனம் சாதிக்கும் இந்தியாவையும் வருடங்களின் நகர்வுகளிலேயே உயர் நாற்காலி பிடித்த மேனன்,நாராயணன்,நம்பியார்களும்,காங்கிரஸின் பார்வையிலேயே சதி செய்த பிரணாப் முகர்ஜியும்,தமிழக முதல்வராய் இருந்த கருணாநிதியும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் இந்திய இறையாண்மைக்கும், தமிழர்களின் உணர்வுக்கும் எதிரானவர்கள் என மனிதனாக,இந்தியனாக யாரும் குற்றம் சாட்டும் தகுதி படைத்தவர்கள்.மக்கள் நலன் என்பதை விட இவர்களின் மூடு மந்திர செயல்பாடுகளே ஜனநாயகத்திற்கு விரோதமானது.
சேனல் 4 தொலைக்காட்சி ஆவணம் நடுநிலையானது என்பதற்கு விடுதலைப்புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தினார்களென்றும், மருத்துவமனையிலே ஒரு தற்கொலைப்படை தாக்குதல் செய்தார்கள் என்றும் காட்சிபடுத்துகிறது.அந்த கணத்தில்,களத்தில் ஒருத்தனாக,ஒருத்தியாக நம்மை உட்புகுத்திக்கொண்டு தமிழ் தேசியம் பற்றியோ,ஒன்றிணைந்த இலங்கையில் வாழமுடியுமென்றோ தோன்றவில்லை.உயிர் வாழ்தல் ஒன்றே முக்கியமான ஒன்றாக இருந்திருக்கும்.அந்த காலகட்டங்களைக் கடந்து வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்கள் வாழ்வில் வடக்கு வசந்தம் வீசுகிறதா என்பது கேள்விக்குறியே.குண்டுகள் சத்தம் கேட்காத ஒரே காரணத்தால் மட்டும் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.
வேலிக்கு ஓணானே சாட்சி மாதிரி இலங்கை அரசுக்கு குமரன் பத்மநாதனே அரசியல்,எதிர்காலத்தை பிரகடனப்படுத்துவதை இந்து பத்திரிகை இணையதளம் ‘The war is over… We’ve one way, one chance. That’s the peaceful way, peaceful negotiation, continuous engagement’ என்ற தலைப்போடு குமரன் பத்மநாதன் நேர்காணலை...
”இது ஒரு புதிய ஆரம்பம்.போர் முடிந்து விட்டது.நாங்கள் சுதந்திரத்திற்காக போராடினோம்.அது முடிந்தது.இப்பொழுது ஒரு புதிய ஆரம்பம்.புதிய உலக ஒழுங்குமுறை எங்களுக்கு கற்பித்தது என்ன வென்றால் நாங்கள்...நாங்கள் ஒன்றாக வாழ வேண்டும்.எங்களது பழைய அனுபவத்தில் கற்றுக்கொண்டது இரு இனத்திற்கு மிடையில் நாங்கள் பாலம் அமைக்க வேண்டும்.இந்த நாடு,ஒரு சிறிய தீவு நிறைய அனுபவித்து விட்டது.போதும்.இந்த சிறிய நாடு,சிறிய மக்கள் தொகைக்கு நாங்கள் அதிக விலை கொடுத்து விட்டோம்.எனவே நாங்கள் ஒன்றாக வாழவேண்டும்” என்று துவங்கி கருத்து சொல்வதை இங்கே காணலாம்.இவ்வளவு தூரம் வந்து விட்டு இந்து பத்திரிகையையும் விமர்சனம் செய்யாமல் போனால் சரியாக இருக்காது:)
இந்து பத்திரிகைக்கு என்று ஒரு பத்திரிகை பாரம்பரியம் உண்டு.முந்தைய தகவல்களோ,ஆவணப்பதிவுகளோ தேவையென்றால் பலர் கொண்டு வரும் ஆதாரமாக இருந்தது என இந்து பத்திரிகையை சொல்லலாம்.பிரபாகரனின் ஆயுதப்போராட்டத்தின் துவக்க கால நேர்காணலைக்கூட இந்து பத்திரிகை பதிவு செய்தது.போபர்ஸ் ஊழலை வெளிக்கொண்டு வந்ததில் என்.ராமுக்கு மிகுந்த பங்குண்டு.இப்படியெல்லாம் இருந்த இந்து பத்திரிகை தமிழர் நலன்களுக்கு எதிரான போக்கையும்,இலங்கை பேரினவாத ஆதரவையும் கொண்டு தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பைக் கண்டு கொஞ்சம் அடக்கி வாசித்து இப்பொழுது குடும்ப உட்பூசல்களில் பயணம் செய்கிறது என்பதை தெகல்கா பத்திரிகை வெளிச்சம் போட்டுக் காண்பித்து விட்டது.ஆங்கில மொழி வளத்தோடு இருப்பது இந்து பத்திரிகைக்கு பெருமை சேர்க்ககூடியது எனினும் அசாங்கே எப்படி பக்கசார்புள்ள இந்துபத்திரிகையை விக்கிலிக்ஸ் செய்திகளை வெளியிட உடன்பட்டார் என்று தெரியவில்லை.
Conspiracy theory பற்றி எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.இதனை உண்மைக்கு புறம்பான தீமையான திட்டமிடல் எனவும்,உள்நோக்கு கொண்ட பொய் பரப்புரை எனவும் பொருள் கொள்ளலாம்.பதிவுலகில் கோயபல்ஸ் பரப்புரை என்ற சொற்பதம் மிகவும் பிரபலம்.உண்மைக்கு புறம்பாக கோயபல்ஸ் பொய் பரப்புரைகளை சொன்னார் என்பது வரலாறு.இதற்கு உதாரணமாக அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத்தை யூதர் ஆதரவு அமெரிக்கர்களே தகர்த்தார்கள் என்ற ஈரானின் அகமது நிசாத்தின் பரப்புரை,அமெரிக்க படைகள் ஈராக்கின் பாக்தாத் தலைநகருக்குள் நுழையக் கூடிய தருணத்தில் ஈராக் தொலைக்காட்சி இன்னும் அமெரிக்கர்கள் ஈராக்கின் எல்லைப்பகுதியான பஸ்ராவைக் கூட என்பதுவும் இன்னும் கிட்ட நெருங்கி வந்தால் நக்கீரன் பத்திரிகையில் கிராபிக்ஸ் செய்து பிராபாகரன் செய்தி தாள் படித்துக்கொண்டிருப்பது போன்றவைகளைக் கூறலாம்.இதே அளவுகோலில் இந்து பத்திரிகையில் வெளியான குமரன் பத்மநாதனின் நேர்காணலையும் உள்நோக்கங்கள் கொண்ட பரப்புரை எனலாம்.கூடவே சில வரலாற்று உண்மைகளும் ஊடே வெளிப்படுகிற தெனலாம்.ஆனால் இவற்றையெல்லாம் மீறி உள்ளே ஒழிந்து கிடப்பது இலங்கை அரசின் பரப்புரையும்,தமிழர்களுக்கு எதிரான விரோதப் போக்கும்,இந்து பத்திரிகையின் அரசு தொடர்புகள் காரணமாக ராவின் பின்புலங்கள் கூட ஒளிந்து கிடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
காங்கிரஸ் கட்சி ஆட்சியின் தமிழர்களுக்கு எதிரான நிலை,ராஜபக்சே பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் விதமாக இந்திய சார்பு நிலையோடு, சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் ஓடுவதன் காரணம் ஐரோப்பிய நாடுகள் போர்க்குற்றங்களை உணர்ந்துகொண்டதால்.பெரியண்ணன் அமெரிக்கா எந்தப்பக்கம் தலை அசைகிறதென்பதைப் பொறுத்தோ அல்லது அமெரிக்காவின் அரசியலுக்கே உரித்தான இரட்டை நிலைப்பாடு பொறுத்தோ இலங்கை குறித்த உலக அரசியல் இன்னும் விரியும்.பின்னடைவுகளான இந்த கால கட்டத்தில் மக்களை நோக்கி நேரடி உதவிக்கரம் நீட்டுவதற்கோ,அனுதாபம் காட்டவோ இயலாத நிலை இருக்கிறது.இந்த நிலையில் இடைத்தரகனாக கே.பி என்னிடம் வாருங்கள்,ராணுவ பாஸ் வாங்கித் தருகிறேன் என்கிறார்.திருடனிமே சாவிக்கொத்தை கொடு என்கிற மாதிரி இருக்கிறது.தமிழகம் மூலம் ஏதாவது சாத்தியங்கள் இருக்கிறதா என்று பார்த்தால் தற்போதைய நிலையில் தமிழக அரசு சார்பாக ஜெயலலிதா அறிவித்துள்ள பொருளாதாரத் தடையின் நன்மை,தீமைகளையும் ஆராய வேண்டியிருக்கிறது.முதலாவதாக இதனை இந்திய அரசு செயல்படுத்துமா என்பதே சந்தேகம்தான்.அடுத்து பொருளாதார தடையால் மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள்.ராஜபக்சே போன்றவர்கள் கண் வீங்கி இன்னும் உண்டு கொழுக்கவே செய்வார்கள்.மறுபுறம் பார்த்தால் தமிழர்களின் மக்கள் உணர்வாக பொருளாதாரத் தடை இலங்கைக்கு சில அரசியல் அழுத்தங்களைத் தரலாம்.
பொருளாதார தடையை விட ஆப்பிரிக்காவின் apartheidக்கு அனைத்து நாடுகளும் கிரிக்கெட் விளையாட்டை தவிர்த்த மாதிரியான செயல்கள் இன்னும் வலுவையும் ஜனநாயக ரீதியாகவும் இருக்கும்.இது ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக உபயோகிக்கப்பட்ட வெற்றிகரமான ஆயுதம். கிரிக்கெட்டே கடவுள் என்று நினைக்கும் மொத்த இந்திய இளைய தலைமுறைக்கும் இலங்கையை கிரிக்கெட்டிலிருந்து புறக்கணிப்பது விழிப்புணர்வையும் தரும்.தமிழ் உணர்வாளர்கள் இது பற்றி சிந்திக்க வேண்டுகிறேன்.
பொருளாதார தடையை விட ஆப்பிரிக்காவின் apartheidக்கு அனைத்து நாடுகளும் கிரிக்கெட் விளையாட்டை தவிர்த்த மாதிரியான செயல்கள் இன்னும் வலுவையும் ஜனநாயக ரீதியாகவும் இருக்கும்.இது ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக உபயோகிக்கப்பட்ட வெற்றிகரமான ஆயுதம். கிரிக்கெட்டே கடவுள் என்று நினைக்கும் மொத்த இந்திய இளைய தலைமுறைக்கும் இலங்கையை கிரிக்கெட்டிலிருந்து புறக்கணிப்பது விழிப்புணர்வையும் தரும்.தமிழ் உணர்வாளர்கள் இது பற்றி சிந்திக்க வேண்டுகிறேன்.
இதுபற்றி ஏற்கனவே சிங்களத்தமிழன் டாக்டர் பிரியன் செனவிரத்னே என்ற பதிவில் இலங்கை கிரிக்கெட்டை தவிர்க்க Boycott Srrlanka Cricket என்ற கூகிள் படத்துடன் சொல்லியிருக்கிறேன்.
பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
பதிவுகள் போடுகிறோம்,பின்னூட்டங்கள் இடுகிறோம்.எத்தனை பேர் தமிழ்மணத்தின் ஈழம் பகுதிக்கு செல்கிறீர்கள் என்று தெரியவில்லை. தலைப்புக்களையாவது ஒரு பார்வை பார்த்து விடுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.தமிழ் மணத்தின் தனித்தனி பதிவுகளின் சாரம் சேனல் 4 தொலைக்காட்சியில் ம் ஆவணத் தொகுப்புக்கு பின் தமிழ்மணத்தின் அளவிட முடியாத சேவையின் தாக்கம் புரிகிறது.
போர்க்குற்ற ஆவண தாக்கத்திற்கு பிறகும் ஈழம் குறித்த தலைப்பான ஈழ மக்களுக்கும்,மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு என நிறைவு செய்ய இயலுமா எனத் தெரியவில்லை.இருந்தாலும் மனித வாழ்க்கை தொடர் கதை என்பதால் ஏற்பட்ட,உணர்ந்த வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்டும் மேற்கொண்டு பயணம் செய்தே தீர வேண்டும்.என்பதால் சில நாம் விரும்பியபடி நடக்கலாம்.இன்னும் சில மனித அறிவுக்கு அப்பாற்பட்டும் நிகழலாம்.எனவே நம்மால் என்ன செய்ய இயலும் என்பதை அடுத்த பதிவில் காணலாம்.