Followers

Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Thursday, May 26, 2011

ஈழ மக்களுக்கும் மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு-பகுதி 1

பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமிருந்தாலும் பதிவுலகம் தேர்தலுக்கு அப்பாலான தமிழக அரசியல் களத்தையே இன்னும் முன்னிலைப்படுத்துகின்றன.உலகளாவிய செய்திகள்,நிகழ்வுகள் என்று எந்த விமர்சிப்பும் குறைவாகவே காணப்படுகின்றன.இதனை விடுத்து சென்ற பதிவின் தொடர்ச்சிக்கு முன் சில சம கால நிகழ்வுகளாக இஸ்ரேல்,பாலஸ்தீனிய தனி நாடுகள் உருவாகுவதற்கான மாற்றங்களை அமெரிக்காவின் ஒபாமாவும், இஸ்ரேலின் நெத்தன்யாகுவும் முன்வைத்துள்ளதை தொடர்ந்து விட்டு ஈழமும் தனி நாடாக உருவாகும் சாத்தியங்களை ஆராயலாம்.
 துவக்க கால இல்ங்கை அரசு, போராளிகள் என்ற இரட்டை நிலை சதுரங்கம்

சமீபத்தில் இஸ்ரேலிய,பாலஸ்தீனர்களுக்கு நிகழ்ந்த இன்னும் நிகழும் மாற்றங்களையெல்லாம் நாம் உன்னிப்பாக மட்டுமல்ல மேலோட்டமாகக் கூட கவனிக்கத் தவறி விடுகிறோம்.விலைவாசி உயர்வுகளுக்கான காரணங்களாக மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறோம்.இந்திய அரசு நேர்மையின்மை,ஊழல்கள் காரணம் என்ற போதிலும் இதன் துவக்கப்புள்ளி ஆட்சி முறைக்கும் அப்பாற் பட்டது.அதே போல் உலகரங்கு அரசியல் மாறுதல்களும் நம்மோடு ஒப்பீட்டு அளவிலோ,நேரடி,மறைமுகமாகவோ தொடர்புடையவை.உதாரணத்திற்கு சொல்லப்போனால் முன்பு ஜார்ஜ் புஷ்,இப்பொழுது ஒபாமா இடும் ஒரு கையெழுத்து தமிழகத்தில் வாழும் சராசரி மனிதனையும் தாக்கும் வலைப்பின்னல் கொண்டது.

இந்தியா மூக்கை நுழைத்த பின் உலகரங்காகிப் போன மூன்று கள நிலை ஈழப்போராட்டம்.
உலக அரசியல் மாற்றங்களும் கூட தமது சுய தேவைகள் கருதி அவ்வப்போது தன்னை புதுப்பித்துக் கொள்ளும் திசுக்களைக் கொண்டது.நீண்ட வரலாறு,இனம்,மொழி,சாத்வீக போராட்டம், ஆயுதப் போராட்டம்,தீவிரவாதம், மக்கள் வாழ்க்கை பின்னடைவு,கை ஓங்கிய நிலையில் இன்னொரு மொழி,இன மக்களை அடக்கும்,ஒடுக்கும் நிலையென இஸ்ரேலும்,பாலஸ்தீனியமும் ஈழப்போராட்டத்தோடு சில சமயம் இஸ்ரேலின் நிலைப்பாட்டிலும் சில சமயங்களில் பாலஸ்தீனிய நிலைப்பாட்டிலும் கலந்து பயணிக்கின்றது.தீரா சண்டைக்காரர்களாய் யுகங்களாய் இருந்தவர்கள் இருவரும்.இஸ்ரேலின் கரம் ஓங்கியிருந்தும் இஸ்ரேலை அங்கீகரிக்க மாட்டோம் என்றும் உலக வரைபடத்திலேயே இஸ்ரேலை இல்லாமல் செய்வோம் என்ற ஈரானின் பக்கவாத்திய துணையாலும் கூட பாலஸ்தீனியர்கள் கெஞ்சிய நிலை போய் இதோ வலிமை மிக்க இஸ்ரேல் ஒரே மண்ணில் இரண்டு நாடுகள் திட்டத்திற்கு எனது இஸ்ரேல் நாட்டை அங்கீகரி பின் இரு நாடு திட்டங்களை செயல்படுத்துவோம்  என சொல்லுமளவுக்கு இறங்கி வந்திருக்கிறது.
மஞ்சள் நிறத்தில் பாலஸ்தீனம் பிரிந்தும் நீல நிறத்தில் இஸ்ரேலின் நிலமும்

இலங்கையின் வட,கிழக்கு மக்களாய் உணர்வு பூர்வமாகவோ அல்லது மொழி சார்ந்த உணர்வு பூர்வமாகவோ அல்லது யதார்த்தமாகவாவது ஈழப்போராட்டத்தையும்,இலங்கை அரசின் செயல்கள்,நிலைப்பாட்டை கவனிக்கவும்,கருத்து சொல்லவும் கற்றுக்கொள்ள வேண்டும்.அது விடுத்து விடுதலைப்புலிகள் வஞ்சினமோ,இலங்கை குட்டி நாடு அதனை எப்படி பிரிக்க முடியுமென்ற வாதமோ அகன்ற உலக பார்வையில்லாத காரணம் கொண்டே எனலாம்.விடுதலைப்புலிகளுக்கு தீவிர வாத முத்திரை குத்தப்பட்டால் பாலஸ்தீனியர்களும் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டவர்களே.
 
இஸ்ரேலியர்களுக்கு பைபிள் காலம் தொட்ட நீண்ட வரலாறு மாதிரி தமிழனும் நீண்ட வரலாறு கொண்டவனே.தன் மண்,மொழி,இனம்,பண்பாடு,கலாச்சாரம் என்ற சுய கௌரவமும்,புரிதலும் தமிழர்களுக்கு வேண்டும்.பாலஸ்தீனியத்தை தாங்கிப் பிடிப்பது அரேபிய மொழி பேசுபவர்களின் பின்புலம் மற்றும் ஈரானின் இஸ்ரேலின் எதிர்ப்பு நிலை.இதே களநிலையை மொத்த உலக தமிழர்களும் கொண்டுள்ளோம்.அமெரிக்காவின் இஸ்ரேல் சார்பு நிலை மாதிரி இந்தியாவும் இலங்கை சார்பு நிலை கொண்டது.இதோ அமெரிக்கா ஜார்ஜ் புஷ் காலத்திலேயே ஒருங்கிணைந்த இரு நாடுகள் திட்டத்திற்கு தனது குரலை மெள்ள வெளிப்படுத்தியது.இன்று ஒபாமா அதனை உறுதிப்படுத்துகிறார்.அதே போல் இந்தியாவும் ஈழமக்களுக்கு சார்பாக குரல் கொடுக்கும் சூழலை தமிழர்கள் உருவாக்க வேண்டும்.இத்தனைக்கும் ஜெருசலம் தங்கள் தலைநகர் என்று இரு தரப்பும் சண்டை போட்டுக்கொண்டன.குரங்கு அப்பம் பிய்த்த கதையாய் பாலஸ்தீனம் துண்டு துண்டாய் நிலப்பகுதிகள் பிரிந்து நிற்கின்றன
 இலங்கையை இரண்டாகப் பிரிப்பதில் இப்படி எந்த விதச் சிக்கலுமில்லை.தெற்குப் பகுதி சிங்களவர்களுக்கும் வட,கிழக்கு பூர்வீகமாக தமிழர்களுக்குமென இருந்தே வந்திருக்கின்றது.பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் , ஃபத்தா என்று பிரிந்து கிடப்பது போலவே தமிழர்களின் நிலையும் கூட.ஹிட்லர் காலத்து யூதர்களின் அவல நிலை மாதிரியே ராஜபக்சே காலத்து இனப் படுகொலைகளும்,முள்வேலிக் கம்பி சிறை வாழ்க்கையும்.யூதர்களின் ஹோலகாஸ்ட்டிற்கும் அதிக ஒப்பீடாக ஈழப்படுகொலைகளும் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைகளும்.எனவே தனி ஈழம் அமைப்பதற்கான அத்தனை தேவைகளும் காரணங்களும் அப்படியே உறங்கி கிடக்கின்றன.போர்க்குற்ற அறிக்கைக்கு இன்னும் பதில் அளிக்காமல் ராஜபக்சே இன்னும் காலம் கடத்துவதால் இனிமேற் கொண்டு என்ன செய்வது என ஐ.நா தீர்மானிக்குமென பான் கி மூன் தெரிவித்துள்ளார்.இவற்றையெல்லாம் உற்றுக்கவனிப்பதும் ஈழ மக்களுக்கு  சாதகமான நிலைகள் தென்படுகிறதா என்பதை கவனிப்பதையும் இல்லாவிடில் போராட்ட முகமாக தமிழர்கள் குரல் கொடுப்பதும்,மனித உரிமை குழுக்களின் உதவிகள் போன்றவை இன்னும் அவசியம்.

இன்னும் தொடர்ந்து அடுத்த பகுதியில்.

Tuesday, May 18, 2010

மண்ணை நேசித்தவர்களுக்கு

சுதந்திர சுவாசத்திற்காக போரின் அவலங்களை நேரில் சந்தித்த குழந்தை,தாய்,பெண் போராளிகள்,உயிர் நீத்த மாவீரர்கள்,முள் வேலி சாட்சிகள் அனைவருக்கும் இந்த இடுகை சமர்ப்பணம்.


Sunday, May 2, 2010

நாடு கடந்த தமிழீழ வேட்பாளர்கள்.

தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தொலைக்காட்சி ஊடகம் இருந்த போதும், தேர்தல் காலத்திலும் கூட வேட்பாளாராக அல்லாத இரண்டு அல்லது மூன்று பேரை அழைத்து சில கருத்துப் பகிர்வுகளுடனும், தேர்தல் கணிப்புக்களுடனும்,இறுதி வாக்கெடுப்பையும் கூட கட்சிகளுக்கு சாதகமாக அதிகரித்தோ அல்லது குறைத்தோ நேரலையில் சொல்லி விட்டு வழக்கம் போல் மெகா, திரைப்படம், செய்தி இன்னபிற விளம்பரத்துடன் தமது அரைத்த மாவை அரைக்க துவங்கி விடுவது வழக்கம்.

இதற்கெல்லாம் மாறாக நேற்றும்,முந்தைய தினமும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைப்பதற்கான வாக்கெடுப்பு நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஜி.டி.வியில் காண நேர்ந்தது.பல துறைகளிலிருந்தும் தமிழீழம் அமைப்பதற்காக நாடுகடந்த தமீழீழ அரசு வேட்பாளார்களாக பலரையும் ஜி.டி.வி அறிமுகம் செய்து வைத்தது.ஒரு புறம் நண்டுக்கதை மாதிரி காலைப் பிடித்து இழுக்கும் தமிழன்,இன்னொரு புறம் இலங்கை அரசின் குற்றவியல்களைக் கூட சரியான தீர்ப்பு என்று மனதுக்குள்ளும் எழுத்திலும் வெளிப்படுத்தும் இவர்கள் என்ன செய்கிறார்களென்று அறியாமல் இருக்கிறார்கள் என்ற இயேசுவின் வசனத்துக்கு சொந்தக்காரர்கள்,இன்னுமொரு புறம் உரிமைக்கும்,சுதந்திர உணர்விக்கும் குரல் கொடுப்பவர்கள் தீவிரவாத முத்திரைக்காரர்கள் என்று குரல் எழுப்பி விட்டு ஒரு விடியலுக்கான விடையையும் சொல்லத் தெரியாமல் குட்டையைக் குளப்பி குளிர்காயும் கூட்டம்.இவைகளுக்கும் மத்தியில் இப்பொழுது இருக்கும் தருணத்தை விட்டு விட்டால் இனியும் தமது உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சந்தர்ப்பமே இல்லாது போகும் என்று புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து ஒரு உயர்ந்த காரணத்துக்காக தங்கள் முகங்களை உலகுக்கு காட்டும் தமிழர்கள் என நூல் சிக்கல்களுனூடே ஒரு குழப்பமான சூழல்.

அப்படியிருந்தும் மேடை மயக்கப் பேச்சுகள்,நிலம் தழுவும் துண்டு,தேர்தல் வாகனத்து கைகூப்பல்,காசுக்கும், பிரியாணி பொட்டலத்துக்கும் விலை போகும் வாக்காளர்கள், எதிர்க்ட்சி வசவுகள் என்று தமிழகத் தேர்தலின் சிறு நாற்றம் கூட இல்லாமல் வேட்பாளர்களை அறிமுகப்ப்டுத்தும் நிகழ்ச்சியாளருக்கு இருபுறமும் பெண்,ஆண்கள் என நாடு கடந்த தமிழீழ அரசு வேட்பாளர்களையும்,அவர்களது மொழி ஆளுமையாக தமிழ்,ஆங்கிலமென தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள்.மேலை நாட்டு வாழ்க்கை ஒரு சிலருக்கு சிறிது மொழி தடுமாற்றத்தை தந்தாலும் உடைநாகரீகம், அவை நாகரீகம், அரசியல் அகன்ற பார்வை போன்ற சிறப்புக்களை கற்றுத்தந்துள்ளதை காண முடிந்தது.ஒரு சிறந்த அரசியல் கலந்துரையாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தது தொலைக்காட்சி நிகழ்ச்சி.

நிகழ்ச்சியாளர் வேட்பாளர்களிடம் கேட்ட வெளிப்படையான கேள்விகளில் சில:

ஈழத்தில் வாழும் மக்களுக்கு,குறிப்பாக அகதி முகாம்களில் வாழும் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதியாக நீங்கள் எந்த விதத்தில் உதவ முடியும்?

உங்களையும் பயங்கரவாதிகள் என்ற பட்டியலில் இலங்கை அரசு சேர்க்க முயற்சித்தால் எப்படி அரசியல் ரீதியாக அணுகுவீர்கள்?

(தமிழக முதல்வரின் ஸ்டைலில்) நாடுகடந்த தமிழீழம் அமைப்பதன் மூலம் ராஜபக்சே கோபித்துக்கொண்டு அகதிமுகாம்களில் இருக்கும் மக்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்த மாட்டாரா?

உங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கிறீர்களா?

தமிழகத்தில் சாராயக்கடைகளின் உரிமையாளர், கட்சிக்காகஅடிதடி, கொலைக்கேசு என்பது மாதிரியான தகுதி அடிப்படையில்லாமல், வேட்பாளர்களின் தகுதிகளாய் மருத்துவராய், ஆசிரியராய், பாராளுமன்ற பிரதிநிதிகளுடன் தொடர்பு, ஐ.நா, செஞ்சிலுவை சங்கம் போன்றவற்றுடன் இணைந்து செயல்படும் அரசு சாரா நிறுவனத்துடன் பணிபுரிபவர், இசையாளர், முந்தையப் போராளியும் டென்மார்க் பல்கலைக்கழகத்தில் மேநிலை ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்,தமிழ் நூல்களை அச்சிட்டவர் இன்னும் பலர் என புலம் பெயர்ந்த நாடுகளில் தங்கள் தகுதியை முத்திரை பதித்த சமூக, தமிழ் உணர்வாளர்களென அறிமுகமே சோர்ந்து போன நம்பிக்கைகளை மெல்ல எட்டிப்பார்க்க செய்கிறது. இது கூடி தேர் இழுக்கும் முயற்சி. நகராத தேர்களென்று இது வரை ஏதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அப்படியிருந்தும் குழு மனப்பான்மை கோபங்களால்,கருத்து மாறுபாடுகளால்,தமிழர்களின் முன்னெடுப்புக்களை ராஜதந்திர ரீதியாக தோற்கடித்து விடவேண்டும் என்ற கங்கணம் என்ற விசப்பரிட்சைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயங்கள் இருக்கிறது. இவைகளுக்கும் மேலாக நிலத்தில் வாழும் மக்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்தை நிர்ணயித்துக்கொள்ளும் பொருளாதார வளமை, மக்கள் மனதில் நம்பிக்கையேற்படுத்தும் வல்லமை,நிலத்தையும், புலத்தையும் இணைக்கும் வல்லமை, கூடவே வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கப் போனால் திமிங்கலத்தின் வாய்க்குள் நுழைந்து விடும் தூண்டில் என தமிழக,இந்திய அரசியல் தடுமாற்றங்கள் என போராட்டம் எளிதாக இருக்கப் போவதில்லை.ஆனாலும் ஜனநாயக ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்ற முத்திரையுடன் உலக அரங்கை சந்திக்க இதை விட வேறு வலிமையான ஆயுதமும் இல்லை.தேர்தல் முடிவுகள் நாளை எந்த விதமான எதிர்காலத்தை முன் வைக்கிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Thursday, May 14, 2009

போர் நிறுத்தம் செய் - ஒபாமா

பல மக்களின் பட்டினி,மனித உயிர்ப்பலியென இலங்கை அரசின் இனப்படுகொலைகளின் உச்சத்தில் ஈழ மக்களின் அவலங்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை எட்டியிருக்கிறது.மாறுதலுக்கான குரலாக வெள்ளை மாளிகைக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் குரல் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது.

தமிழகத்திலிருந்து தமிழனாக நாம் குரல் எழுப்பியும் (எதிர் குரல் எழுப்பியும்) இது வரை ஆக்க பூர்வமாக ஒன்றும் செய்ய இயலவில்லை.ஆனாலும் குரல் எழுப்பும் தமிழா!துவண்டு விடாதே!ஈழக் கனவு இப்பொழுதுதான் சரியான பாதையை நோக்கி நடைபோடுகிறது. இந்தியத் தேர்தலில் தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் எப்படியிருந்த போதிலும் ஈழ மக்களின் அவலங்களை நீக்கும் தகுதியையும் ஆளுமையையும் இந்தியா வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்து தகுதி இழந்து விட்டது இன்னும் சில நாட்கள் ஆட்சி செய்யும் அரசால். ஈழம் புலம் பெயர் மக்களின் குரலால் மேற்கத்திய நாடுகளின் மனிதாபிமானக் குரலுக்கு ஏங்கி நிற்கிறது. ஒபாமா போன்ற மாறுதல் கோட்பாட்டில் நம்பிக்கையுள்ள மனிதர்களிடமிருந்து நம்பிக்கைகளை எதிர்பார்க்கலாம்.

அமெரிக்காவே
யுத்தத்திற்காய் நேற்று ஓர் போய் செய்தாய்
மனிதாபிமானத்திற்கு இன்று ஒரு குரல் கொடு

நேற்று புஷ்க்கு போர் பிடித்தது
இன்று ஒபாமாவுக்கு
மனிதநேயம் பிடிக்கட்டும்.

மனித நேயம் காட்ட எலும்பும் தோலுமாய்
ஈழத்தமிழன் கையேந்துகிறான்.

போர் நிறுத்தம் செய்.

ஒபாவின் குரல் காணொளி தகவலுக்கு
http://enathu-pathivukal.blogspot.com/2009/05/blog-post_13.html#comment-form

இடுகைக்கான ஆக்கத்தை தந்த பதிவுகள் பதிவருக்கு எனது நன்றி.

Sunday, May 3, 2009

பாதுகாப்பது யாருடைய பொறுப்பு?

திரு.(யோ.திருவள்ளுவர்) சார்லஸ் ஆன்டனிக்கு என்ற இடுகையை ஆங்கிலத்தில் தந்து விட்டு இதனை யாராவது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தால் நல்லது என்று கூறியிருந்தார்.மொழி வல்லுனர்கள் யாராவது ஆங்கிலத்தின் சாரத்தை தமிழில் மொழிபெயர்ப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.இதுவரை யாரும் முன்வராத காரணத்தாலும்,ஆங்கில மூலம் அழகாக இருந்ததாலும் ஆங்கில எழுத்துக்களை எனது புரிதலோடு தமிழ்படுத்துகிறேன்.ஆங்கில மூலம் வேண்டுபவர்கள் செல்ல வேண்டியது
http://www.worldsikhnews.com/22%20April%202009/Whose%20Responsibility%20is%20it%20to%20protect.htm

இலங்கையில் ஈழம் தமிழர்களின் சாவும் அவர்களது வாழ்ந்த மண்ணின் அழிவும் கண்டு அதன் தூண்டு கோலாக சீக்கிய எழுத்தாளர் ஜெக்மோகன் சிங் பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் ஆன்டனிக்கு ஒரு பகிரங்க கடிதமொன்று எழுத அமைந்தது.நாகரீக சமூகத்தின் அனைத்து நாட்டவர்கள் தமிழ் போராளிகளுக்கும்,மக்களுக்கும் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டுகிறார் இந்த எழுத்தாளர். அவரது பகிரங்க கடிதம் கீழே:

அன்பின் சார்ல்ஸ் ஆன்டனி,

வாழ்வுக்கான போராட்டம்,தனித்துவம்,சுதந்திரப் போராட்டத்துக்கான எனது பங்களிப்பை தயவு செய்து பெற்றுக் கொள்ளவும்.

பஞ்சாப்புக்கான போராட்டத்தை அருகில் இருந்த பார்த்த சாட்சியின் காரணமாக நீங்களும் உங்கள் மக்களும் எதற்காக வாழ்வுக்கான ஒரு போரை நிகழ்த்துகிறீர்கள் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஊடகங்களில் உங்கள் அப்பா-வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு நாள் நண்பன்,அடுத்த நாள் எதிரி.ஒரு நாள் அவர் பாதுகாக்கப்பட்டார்.இன்று அவர் தேடப்படுகிறார்.சிலருக்கு அவர் தீவிரவாதி.பலருக்கு அவர் பாதுகாவலன்.யார் அவர் என்பதை சரித்திரம் தீர்மானிப்பதற்கு விட்டு விடுவோம்.

நான் ஒரு போராளி இனத்தைச் சார்ந்தவன்.சீக்கியர்கள் போராளிகளை நண்பர்களாக பாவிக்கிறார்கள்.பஞ்சாபில் பல அரசியல் தலைவர்கள் தங்கள் வாயைத் திறந்து துணிச்சலான அறிக்கைகள் விடாவிட்டாலும்,நம்புங்கள் என்னை,பலர் ஈழ தமிழ் போராளிகளின் போராட்ட உறுதியையும்,உத்வேகத்தையும் வியக்கிறார்கள்.செய்திகளில் காணும் தற்போதைய உங்கள் போராட்டத்துக்கான வீழ்ச்சி பலருக்கும் சோகத்தையே உருவாக்குகிறது இங்கே.

உங்கள் மக்கள் ரசாயன ஆயுதங்களாலும்,விஷ வாயுக்களாலும் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இருபக்க துப்பாக்கி சூட்டில் அகப்பட்டுக் கொண்டும்,சில மணி நேரங்களே தப்பிக்க இருக்கும் கணத்தில் இந்த கடிதம் எனது தார்மீக ஆதரவை உங்களுக்கு அளிக்கிறது,

தமிழ் ஈழம் மக்களின் அவலங்களால் நான் சோகம் கொள்கிறேன்.பெண்கள்,குழந்தைகளின் துயரப் புகைப்படங்கள் மலையையும் அசைய வைக்கும். சோகத்துடன், ஆனால் அப்படி ஆகவில்லை.அனைத்து உலகமும்,24 மணி நேர தொலைக்காட்சி ஊடகங்களும் வலி,வேதனைகளை தடுக்கும் ஆற்றல் இல்லாமல் போய் விட்டது.

தங்கள் வாழ்ந்த மண்ணை விட்டு ஓடுவதற்கு பலாத்காரமான அனைத்து ஆண்,பெண்,குழந்தைகளுக்கும் எனது இதயம் புலம்புகிறது முக்கியமாக தமிழீழம் போராளிகளுக்காக.இப்படி எழுதுவதால்,எனது எழுத்துக்கள் எனது உள்மனதின் உணர்வுகள் மட்டுமே என்ற குற்ற உணர்ச்சியும் ஏற்படுகிறது.ஒரு சீக்கியனாக நான் உங்களது போராட்டத்தில் கலந்திருக்கவேண்டும்.எனது வேண்டுதலும் நல்வாழ்த்துக்களும் உங்களுடன் இருக்கட்டும்.தமிழீழத்தைப் பொறுத்த வரையில் காலத்துக்கேற்ற மிகச் சிறந்த ஆதாரபூர்வமான ஆவணங்கள் இருந்தபோதிலும்,உலக நிறுவனங்களும்,உலக சமுதாயமும் ஆயிரக்கணக்கான மக்களின் துயரங்களையும்,அவலங்களையும் துடைப்பதற்கான செயலில் தவறிவிட்டார்கள்.சீக்கியர்கள்,காஷ்மீரியர்கள்,வடகிழக்கு மக்களை கீழ்மைப் படுத்தியது போல் இலங்கை அரசாங்கமும் பகல்வெளிச்சத்து கொலையிலும்,சூறையாடலிலுமிருந்து தப்பித்துக் கொள்கிறது.

புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் தெருக்களில் போராடி ஐரோப்பிய தலைநகரங்களை பேச்சுவார்த்தைக்கு வற்புறுத்துவது காண மகிழ்ச்சியாக இருக்கிறது.முக்கியமாக நார்வே தலைமையிடம் குரல் எழுப்பியதில் மனக்கிளர்ச்சியுறுகிறேன்.நார்வே புலம்பெயர் தமிழ் மக்கள் ஓஸ்லோவில் நார்வே பிரதம மந்திரியை முற்றுகையிட்டதை செய்திகளில் படித்தேன்.உலகநாடுகளின் வளர்ச்சிக்கான நார்வே மந்திரி எரிக் சொல்ஹைய்ம் " நார்வேயில் வாழும் தமிழர்களின் ஏமாற்றங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் என்னால் அற்புதங்களை ஏற்படுத்த முடியாது" என்று சொன்னதாக அறிந்தேன்.

எரிக்சொல்ஹைய்ம் நார்வே நாட்டு அரசாங்கத்திற்கான NRK தொலைக்காட்சி ஊடகத்திற்கான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது " என்னால் குரல் எழுப்பும் தமிழர்களிடம் பேச முடிகிறது.நான் மீண்டும் ஒரு முறை அமெரிக்கா,ஜப்பான்,ஐரோப்பிய ஒன்றியம் போன்றவைகளிடம் இலங்கையில் போரை நிறுத்த இயலுமா என பேசி பார்க்கிறேன்" என்றார்.இதற்கு தமிழ் எழுத்தாளர் K.P. அரவிந்தம் பதில் மிகப் பொருத்தமானதும்,கலைசார் மேம்பாடுடையதாகும்."ஒருவேளை சொல்ஹைய்ம் அதிசயம் நிகழ்த்த இயலாமல் போயிருக்கலாம்.ஆனால் குறைந்தபட்சம் தவறுகள் இழைப்பதிலிருந்து நின்றிருக்கலாம்.தூதுத்துவம் என்பது நிகழ்த்திக் காட்டக்கூடிய கலையாக இருக்கலாம்.ஆனால் உரிமைப் போர் என்பது இயலாததை நிகழ்த்திக் காட்டுவது".

ஸ்காண்டிநேவியா நாடுகள் மனித உரிமைகளைப் பேணுவதில் உறுதியும் ஆற்றலுமுடையவர்கள்.அதனால்தான் உங்கள் தலைமை நார்வேயை இருதரப்பின் பேச்சாளராக தேர்ந்தெடுத்தது.ஆனால் அரவிந்தம் தலையில் ஆணி அடித்தது மாதிரி சொன்னார் " நார்வே மையப் புள்ளியை தவறவிட்டு விட்டது.சமாதானத்துக்கான இரு தரப்பின் சார்பில்லாத அங்கமாக இருக்கும் நிலையில் எல்.டி.டி.இ யினை ஆயுதங்களை களையுமாறு சக நாற்காலியில் அமர்ந்து இருப்பவர்களுடன் கூடி அழுத்தம் தருவது முறையல்ல.இலங்கையின் இனப்படுகொலையின் கரங்களில் வன்னி மக்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலை இதை விட கவலைக்குரியது.படிப்படியான இவர்களின் தோல்வியால் நார்வேகாரர்கள் அனைத்து உலக மத்தியஸ்தம் பேசும் எண்ணத்திற்கே தோல்வியை கொண்டு வந்திருக்கிறார்கள்.தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள இன்னும் கூட நேரமிருக்கிறது,பூகோள அரசியல் குறிக்கோளர்களின் உடந்தையாக இல்லாமல் உலக மனித நாகரீகங்களுக்கு தங்களை உட்படுத்துவார்களேயானால் ".

நேரடியாகவும் மறைமுகமாகவுமான இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடன் சிங்கள அரசின் அளவிடா அதிகாரத்தின் கால்களின் கீழ் தமிழீழ மக்கள் நசுக்கப்படுகிறார்கள்.ஈழ தமிழர்களுடனான இயற்கையான தமிழ்நாட்டு சகோதர உறவும் அலட்சியப் படுத்தப் பட்டுள்ளது.13 தமிழ் சகோதரிகளும் மேலும் பலரும் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தார்கள் உங்களுக்கு ஆதரவாக,ஆனால் ஊடகங்களும்,அரசாங்கமும் இதுபற்றி கவனிக்கிறார்களா?முக்கியமாக நாடே தேர்தல் கள நிலையில் இருக்கும்போது.

தூரத்திலிருந்து நோக்கினால் அனைத்து தமிழர்களின் நிலைப்பாட்டில் தமிழக தலைமை ஏமாற்றுவதாகவும் உண்மையில்லாததுமாக இருக்கிறது.உங்கள் ஈடுபாடுகளை அவர்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறார்களா என எனக்குத் தெரியவில்லை.உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

எனக்கு,தமிழ் தலைமையைப் போலவே இந்திய தலைமையும் உங்களுடனும் உங்கள் குறிக்கோள்களுடனும் சாணக்கியர்களாக விளையாடுகிறார்கள் எனவே படுகிறது.வெற்றிகரமாக கூட.இந்தியா உங்கள் பகைவனா அல்லது நண்பனா என உலகால் புரிந்து கொள்ள முடியவில்லை.இந்தியா இந்த மாதிரி இரட்டைவேடம் போடவே செய்கிறது.இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது,இருந்தும் அமைதியான முகத்தை காட்டுகிறது.

நான் போர் விமர்சகனல்ல.ஆனால் நார்வே அமைதிப் பேச்சு நடந்த போது,உங்கள் மக்களின் போராட்டம் மிகவும் பாதிக்கப்பட்டது.நிச்சயமாக அப்பொழுது உங்கள் தலைமைக்கு நடைமுறைக் காரணங்கள் இருந்திருக்குமென நம்புகிறேன்.ஆனால் இந்த மாதிரியான சமாதானப் பேச்சு வார்த்தைகள் நம்பகத்தன்மையில்லாத விதிமுறைகளை மீறிய அரசுக்கு ஆயுதங்களை சேகரித்து மேலும் பல சாவுகளை உருவாக்கவும் அழிவுகளை உருவாக்கவே உதவியது.இந்தியாவும் சீக்கியர்கள்,காஷ்மீரிகள்,நாகா,மிஷோ வுக்கும் இதனையே செய்தது.9/11 க்கு பின்னால் மாற்றமடைந்த பூகோள அரசியல் நிலைகள் கூட நார்வேஜியன் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டதற்கு காரணமாக அமைந்தது.

கடந்த வருடம் இந்த நேரத்தில் கொசோவொ ஒரு புதிய நாடாகப் பிறந்தது.அதற்கும் முந்தைய ஆண்டு,தைமூர் லியஸ்ட் சுதந்திரம் அடைந்தது.2009 தமிழ் ஈழத்துக்கு சொந்தம் என நினைத்தேன்.எனக்கு இன்னும் அந்த நம்பிக்கை இருக்கிறது இந்த வருடத்தில் ஏற்படாதென்ற போதிலும்.உங்கள் போராட்டம் இறுதி வடிவில் இருக்கிறதென்ற எண்ணம் உலகம் பூராவும் இருக்கிறது.

உண்மைகள் பாதிக்கபடுவதாலும் உண்மைகள் சரியாக வெளிப்படாத நிலையிலும் எனது முழு நம்பிக்கை அப்படியிருக்கக் கூடாதென்பது.உங்கள் போராட்டம் தொடர வேண்டும்.புரட்சி சுதந்திரம் என்ற கொடியை நீங்கள் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

அமெரிக்க அட்டார்னி ஃப்ரூஸ் பெய்ன்,அமெரிக்க குடியுரிமை பெற்ற கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் பச்சை அட்டை வைத்திருக்கும் ஜெனரல்.பொன்சேகாவின் மனித உரிமைக் குற்றங்களுக்கு தண்டனை வாங்கித் தருவார் என்பது எனது முழு நம்பிக்கை.நியுயார்க்கை அடிப்படையாகக் கொண்ட இனப்படுகொலை தடுப்பு அமைப்பு இனப்படுகொலை நிகழும் எட்டு நாடுகளைக் குறிப்பிட்டிருக்கிறது,அதில் இலங்கையும் ஒன்று. உங்கள் மண்ணில் நிகழும் மனித உரிமை மீறல்களை முன்னிறுத்தி உலகுக்கு வெளிப்படுத்தும் என நம்புவோம்.

பாதுகாப்பு சபையில் கூட ஐ.நாவுக்கான மெக்ஸிகோ தூதர் க்ளாட் ஹெல்லன் தனது நாட்டின் ஜனத்தொகையை பாதுகாக்கும் பொறுப்புக்கான தீர்மானத்தை கொண்டுவருவதில் கூட சிறிய நம்பிக்கை ஏற்படுகிறது.

அன்பின் திரு.சார்ல்ஸ்,தெற்காசிய பூகோளத்தை மாற்ற நினைப்பவரின் மகனாக இந்தப் போராட்டத்தை நீங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வீர்கள் என நம்புகிறேன்.எனது தரப்பிலிருந்து இதனைச் சொல்ல விரும்புகிறேன் கொசவோ சுதந்திரம் வெற்றியடைந்த போது " சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங் சொன்னபடி, "சுதந்திரத்தை யாரும் தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பதில்லை.யாருக்கு தேவையோஅவர்கள் தங்களது உறுதியாலும்,பலத்தாலும் அதைப் பெற வேண்டும்". விரைவாகவோ,தாமதமாகவோ நீங்கள் அதைப் பெறுவீர்கள்.

நீங்களும்,உங்கள் மக்களும் உங்களது வாழ்நாளிலேயே சுதந்திரத்தை ருசிப்பீர்கள் என வாழ்த்துகிறேன்.எல்லாம் வல்ல இறைவன் தமிழ் மக்களின் மீது தனது ஆசிகளை தூவவும் அவர்களது துயரங்கள் முடிவுக்கு வரவும் உலகின் முன் சுதந்திர மனிதர்களாக உயர்ந்து நிற்கவும் துணைபுரிவாராக.

உண்மையுடன்
ஜெக்மோகன் சிங்

குறிப்பு: இந்த எழுத்தாளர் லூதியானா,பஞ்சாப்பில் வசிப்பவர்.அவரை அணுகவேண்டிய முகவரி jsbigideas@gmail.com

Tuesday, March 31, 2009

அருந்ததிராயின் பார்வையில் இலங்கை

அருந்ததிராய் பற்றி முன்னுரை கூறுவதற்கு அவசியமில்லாத காரணத்தால் நேராக அருந்ததிராயின் பதிவின் கருத்துக்குப் போய் விடலாம்.அதற்கு முன் இந்தப் பதிவை ஒட்டிய அருந்ததிராயின் கருத்துக்கு வெட்டி ஒட்டலாக ஆங்கில மூலத்தை அன்புடன் பாலா பதிவிட்டுள்ளார்.அதே ஆங்கில மூலத்தை சுகுணா திவாகரும் அவரது பாணியில் தமிழ்படுத்தியுள்ளார்.பதிவும் பின்னூட்டங்களும் அவரவர் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லும்.

இலங்கையின் மனித அவலங்களும் அரசாங்கத்தின் போர் நடவடிக்கைகளும் மனித உரிமையும், இனவெறிக்குமிடையே எதுவெல்லும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.தமிழக அரசியல் ஈழம் குறித்த பார்வையை பொம்மலாட்டமாகி விட்டது.அந்த சோகத்தில் நானும் ஏனைய மனித நேயம் கொண்ட பதிவர்களும் நிலை தடுமாறியது ஈழம் குறித்த பதிவுகள் குறைவதிலிருந்து நன்கு தெரிகிறது.தமிழக அரசியல் மட்டும் ஈழம் குறித்த தீர்வாகி விட முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்ட நிலையில் தமிழக ஓட்டு அரசியலையும் ஈழத்தையும் தனித்து தனித்துப் பார்ப்பது அவசியமாகிறது.

வரும் தேர்தலை கட்சி,ஈழம் என்ற பார்வையில் பார்க்காது தங்கள் தொகுதியில் திறமையுள்ளவர் என்ற தனிமனிதப் பார்வையில் மட்டுமே இந்த தேர்தலை தமிழர்கள் அணுக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.இலங்கை ஒரு பெரும் வலைப்பின்னலாய் சூழ்ச்சிகள்,சுயநலங்கள்,அரசியல்,தீவிரவாதப் போர்வை என பல பரிமாணங்களில் நிகழும் நிகழ்வுகள் பிரதிபலிக்கிறது.இலங்கை அரசு நினைப்பது போல் மனித அவலங்களை எளிதாக உலகின் கண்களில் இருந்து மறைத்து விட முடியாது.நிகழ்ந்தவைகள் தோல்விகள் என்ற விரக்திகளை களைந்து நடப்பவைகளின் நியாயங்களை எழுத்துக்களாக பதிவு செய்வது பதிவுலக எழுத்தாளர்களின் கடமையாகிறது.

புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் தாங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களுக்குட்பட்டு தங்கள் குரல்களை ஒலித்துக்கொண்டே இருப்பதும் அவசியமாகிறது.கட்சி அரசியலால் குழம்பியிருந்தாலும் தமிழகப் பொதுமக்களின் உணர்வுகள் ஈழத்து மக்களுக்கு எப்பொழுதும் ஆறுதல் தருவதாகவே இருக்கும்.

இனி அருந்ததிராய் சொன்னது நான் புரிந்துகொண்டபடி.

வடமுனையில் தோன்றும் சப்தமின்மை ஒரு பயங்கரத்தை உருவாக்கும் சாத்தியங்களை தோற்றுவிக்கின்றன.இந்தியாவிலும் முக்கியமாக உலக அரங்கிலும் எந்தவிதமான ஊடகச் செய்திகள் இல்லாமையும் அல்லது அங்கு என்ன நிகழ்கிறது என்ற உண்மை அறிய முடியாத நிலையும் ஏன் என்பது மிகவும் கவலைக்குரிய விசயம்.

கசியும் சில செய்திகளில் காணப்படுவது என்னவென்றால் இலங்கை அரசாங்கம் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் கொஞ்சமாவது தென்பட்ட ஜனநாயகத்தையும் அத்திப் பழ இலைகளாய் தனித்தனியாகப் பிரித்தெடுத்து, பேசமுடியாத அளவுக்கு குற்றங்களை தமிழர்களுக்கு எதிராக செய்கிறது.

ஒருவனோ ஒருத்தியோ நிரூபிக்காத வரையில் தமிழன் ஒரு தீவிரவாதி என்ற கொள்கையில் பொதுமக்கள் வசிக்குமிடம்,மருத்துவமனைகள்,தஞ்சம் புகுந்த இடம் என்று குண்டுகளைப் பொழிந்து அனைத்தையும் போர்க்கள பூமியாக மாற்றிவிட்டது.200,000க்கும் மேற்பட்ட மக்கள் சுற்றி வளைக்கப் பட்டுள்ளனர் என்று நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன.போர் டாங்கிகள்,விமானங்கள் உதவியுடன் ராணுவம் முன்னேறிச் செல்கிறது.

கூடவே,தங்கள் நில புலன்களைத் துறந்த மக்களை மன்னார்,வவுனியா மாவட்டங்களில் குடிபுகுத்துவதாகக் கூறி "நலன் கிராமங்கள்" அமைப்பதாக அரசாங்க அறிக்கைகள் தெரிவிக்கின்றன.டெய்லி கிராஃப் செய்தியின்படி (Feb 14, 2009) இந்த கிராமங்கள் "சண்டைப்பகுதியிலிருந்து தப்பித்தோடும் பொதுமக்களை கட்டாயமாக அடைத்து வைக்கப்படும் இடங்கள்".

பட்டவர்த்தனமாக அல்லது அப்பட்டமாக சொல்வதென்றால் நாசிப் படையின் வதை முகாம்களா இவை? இலங்கையின் முந்தைய வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர டெய்லி டெலிகிராஃப் க்கு சொன்னது "சில மாதங்களுக்கு முன்னால் கொலம்போவில் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்ற கருத்தில் தமிழர்கள் அனைவரும் தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று அரசாங்கம் சொன்னது.ஆனால் இந்த தனிமனித விபரங்களை 1930ல் நாசிகள் உபயோகித்தது போல் அரசாங்கம் தங்கள் குறுகிய நலன்களுக்கு உபயோகிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது.அனைத்து தமிழ் மக்களையுமே தீவிரவாதிகள் என்று அரசாங்கம் முத்திரை குத்தப் போகிறார்கள்.

அரசின் குறிக்கோளான தமிழ்விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் மக்களையும் விடுதலைப் புலிகளையும் ஒன்றாக அழிக்க நினைப்பது ஒரு இனப்படுகொலையை நடத்துவதற்கான அறிகுறியைக் காட்டுகிறது.ஐ.நாவின் அறிக்கையின் படி பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.மேலும் பலர் சொல்ல முடியாத அளவுக்கு பலத்த காயங்களுடன் உள்ளனர்.கண்ணில் கண்ட சாட்சிகள் சிலரின் சொற்களின் படி போர்ப்பகுதிகளின் நிலை நரகம் போல் காட்சியளிக்கிறது.

இவைகளின் மூலம் நாம் அறிந்து கொள்வது அல்லது இலங்கையில் நிகழ்வது என்னவென்று தெரியாதவண்ணம் மிகத் தந்திரமாக மக்களின் பார்வைக்குட்படாதவாறு மறைக்கப்படுவெதென்பது ஒரு திறந்தவெளி இனவெறிப் போரே. இலங்கையின் தண்டிக்கப்பட இயலாத சுதந்திரத்துடன் செய்யும் இந்தக் குற்றங்கள் இனவெறுப்பின் முகத்திரையைக் கிழிக்கிறது.இந்த செய்கைகள் முதலாவதாக தமிழர்களை தனிமைப்படுத்தவும் அவர்களது உரிமைகளைக் குறைக்கவுமே பயன்படுத்தப் படுகிறது.இந்த இனவெறுப்பு நீண்ட வரலாறு,சமூகத்தில் தனிமைப்படுத்தல்,பொருளாதர தடை,திட்டமிட்ட படுகொலைகள்,வன்கொடுமைகள் நிறைந்தது. பல ஆண்டுகளாய் நிகழும் இந்த உள்நாட்டுப் போர் துவக்கத்தில் அமைதியாக,சத்யாக்கிரகப் போராட்டமாகவே வேர்கொண்டது.

ஏன் இந்த மவுனம்? இன்னொரு நேர்காணலில் மங்கள சமரவீர சொல்வது " ஒரு சுதந்திரமான ஊடகம் சுத்தமாக இப்பொழுது இலங்கையில் கிடையாது" சமரவீர மேலும் சொல்வது,"வெள்ளை வாகனம்,சாவுக் குழு என சமுதாயமே பயத்தால் உறைந்து கிடக்கிறது." எதிர்க் குரல் எழுப்புவர்களும் முக்கியமாக பத்திரிகையாளர்கள்,ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள்.

உலக ஊடகவியலாளர் அமைப்பு கூறுவது," இலங்கை அரசாங்கம் ஒரு கூட்டுக் கலவையாக தீவிரவாத எதிர்ப்பு சட்டங்கள்,ஆள்கடத்தல்,கொலை என ஊடகவியலாளர்களின் எதிர்ப்புக் குரல்களை அடக்குகிறது.

இதில் வருத்தப்பட வேண்டியதும் இன்னும் உறுதி செய்யப்படாத செய்திகளும் இந்திய அரசாங்கம் ராணுவ தளவாட உதவிகளை மனிதர்களுக்கு எதிரான குற்றங்களாய் இலங்கை அரசுக்கு செய்கிறதென்பது.இது உண்மையானால் இது கோபத்திற்கும் கண்டனத்துக்கும் உரியது.மற்ற நாட்டின் அரசுகள் எப்படி?பாகிஸ்தான்?சைனா? இவர்கள் எந்த உதவியை அல்லது நிலைமைகளை சீர்கெடுக்கிறார்கள்?

தமிழ்நாட்டில் இலங்கையின் யுத்தத்தின் தாக்கத்தால் 10க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்குத் தானே தீக்குளித்துக் கொண்டார்கள்.
பொதுமக்களின் கோபம்,ஆத்திரம் பெரும்பாலானவைகள் நியாயமானதும் சில அரசியல் சூழ்ச்சிகள் கொண்டதும் ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இதில் ஆச்சரியப்படத்தக்கது இந்த ஆதங்கங்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளை பயணிக்காதது.ஏன் இந்த அமைதி?இந்தியாவில் வெள்ளை வாகனம் போன்ற பயங்கள் இல்லையே,குறைந்தபட்சம் இந்தப் பிரச்சினையில்.இலங்கையில் நிகழும் செயல்களின் அளவும் இந்த அமைதியும் மன்னிக்க முடியாதவைகளாகும்.மிக முக்கியமாக இந்தப்பிரச்சினையில் பொறுப்பற்ற முறையில் கால் நுழைத்த இந்திய அரசாங்கத்தின் நீண்ட கால வரலாறான முதலில் ஒரு பக்கத்தில் சார்ந்தும் பின் அடுத்த பக்கத்துக்கு சார்பாக இருப்பதும்.

பலரும்,முக்கியமாக நானும் இந்தப் பிரச்சினை குறித்து மிக முன்பே பேசியிருக்க வேண்டும்.ஆனால் பேச இயலாமைக்கு காரணம் போர் பற்றிய போதிய அளவு உண்மைகளும் செய்திகளும் கிட்டாமையே.எனவே பலர் கொல்லப்படும் நிலையிலும் மேலும் பலர் வதை முகாம்களுக்கு செல்லும் நிலையிலும், 200,000 மக்கள் பட்டினிச் சாவின் விளிம்பில் நிற்கும் நிலையிலும் ஒரு இனப் படுகொலை நிகழப் போகும் தருணத்திலும் ஒரு மயான அமைதி நிலவுகிறது இந்த மாபெரும் தேசத்தில்.

இது ஒரு மனித அவலம்.உலகம் இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டும் தாமதிக்காமல் இன்னும் காலதாமதமாகும் முன்.

Tuesday, March 10, 2009

Bruce Fein

Bruce Fein 1972ல் ஹார்வேர்டு சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்து பின் முந்தைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் காலத்தில் உதவி அட்டார்னி ஜெனரலாக பணி புரிந்த காலம் தொட்டு அமெரிக்க அரசியல் சட்டம் மற்றும் உலக சட்டங்களில் சுமார் 40 வருடமாக பழம் தின்று பழுத்த வழக்கறிஞர்.கிளிண்டன்,ஜார்ஜ் புஷ் Jr மற்றும் முந்தைய உதவி ஜனாதிபதி டிக்செய்னி உள்பட அனைவரையும் தங்கள் பதவியை தவறாக உபயோகித்ததாக இம்பீச்மெண்ட்(Impeachment)க்கு உட்படுத்த வேண்டும் என்றவர்.

தமிழ்நெட் வலைத்தளத்தில் ஈழத்தமிழர்களின் சட்ட ஆலோசகராக அவரது பெயர் அவ்வப்போது காணப்பட்டாலும் ஈழத்தமிழர் இனப்படுகொலையைக் கண்டித்து ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே அமெரிக்க பிரஜையென்றும் சரத்பொன்சேகா பச்சை அட்டை வைத்திருப்பவர் என்ற அடிப்படையிலும் 1000 பக்கங்கள் கொண்ட வழக்கினை அமெரிக்க நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்துள்ளது தமிழர்கள் மத்தியில் ஃபுருஸ் பெயினின் பெயரை உச்சரிக்க வைத்துள்ளது.

போனவாரம் தீபம் தொலைக்காட்சியில் புருஸ் ஃபெயினுடனான நேரடி உரையாடலின் மறுஒலிபரப்பு காண நேர்ந்தது.பல தரமான ஈழம் சார்ந்த தொலைக்காட்சி ஊடகங்கள் ஐரொப்பிய நாடுகளில் தோன்றி பலவிதமான காரணங்களால் இழுத்து மூடப்பட்டு விட்ட நிலையிலும் தீபம் தொடர்ந்து தனது சேவையை அளித்து வருவது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சி அடைக்கும் விசயம் என நினைக்கிறேன்.தேர்வு செய்யப்பட்ட தரமான நிகழ்ச்சிகள்,திரைப்படங்கள் என கலக்கி கொண்டிருந்த தீபம் மெல்ல தமிழ் மெகா சீரியல் பக்கம் தாவியதும் தனது இயல்புகளிலிருந்து மாறியது போல் தோன்
றியது.

மனித அவலங்கள்,போர் முனை,உலக தமிழர்கள் போராட்டம்,வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஈழம் குறித்த ஓட்டு அரசியல் என பல பரிமாணங்களை எடுத்திருக்கும் ஈழம் புதியதாக தனது நியாயங்களை,கருத்துக்களை கலந்தாய்வாக தமிழ் மக்களுக்கு குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு தரும் ஒரு வாய்ப்பாக ஃபுருஸ் பெயின் கருத்துக்களும் கேள்வி பதில்களும் அமைந்திருந்தது.ஃபுருஸ் பெயினுடனான நேர்காணல் தற்போதைக்கும் கூடவே எதிர்காலத்துக்குமான ஒரு முக்கியமான பதிவும் கூடவே உலக மக்களுக்கும் அதிலும் குறிப்பாக லாபியிஸ்ட்களுக்கு ஈழம் குறித்த பார்வையினை தரும் ஒரு நல்ல வாய்ப்பு.

ஆனால் நேர்காணல் கண்ட மனித உரிமை வழக்கறிஞர் சகோதரரும்(பெயர் நினைவில்லை)தொலைக்காட்சி ஊடாக கேள்வி கேட்ட தமிழர்களும்,தீபம் தொலைக்காட்சியும் சேர்ந்து நிகழ்ச்சியின் தரத்தைக் குறைத்து விட்டார்கள்.நேர்காணல் சகோதரர் சரளமான ஆங்கிலம் பேசினாலும் உச்சரிப்புக்களை வாய்திறந்து சொல்லியிருக்கலாம்.கேள்வி கேட்டவர்கள் தமிழ் பேசி கேள்வி கேட்டு பின் மொழி பெயர்ப்பு தவிர்த்து ஆங்கிலத்தில் நேரடியாக ஃபுருஸ் பெயினிடம் கேள்விகளை வைத்திருக்கலாம்.தீபம் தொலைக்காட்சி குரல்களின் ஒலியினை சீர்படுத்தியிருக்கலாம்.யார் என்ன (அதிலும் தமிழில்)கேட்கிறார்கள் என்பதே காண்பவர்களுக்குப் புரியவில்லை.இதற்கு மத்தியிலும் நேர்காணல் சகோதரர் கேள்வியின் மொழி பெயர்ப்பு மற்றும் ஃபுருஸ் பெயினின் பதில்களில் ஊகித்தறிந்தவை சில.

கேள்வி: தற்போது 1000 பக்கங்களாக அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்க்கிப்பட்ட வழக்கின் மொழி பெயர்ப்பை தமிழில் தர இயலுமா?

பதில்: இந்த முயற்சி நடைபெறுகிறது.சட்டம்,மொழி பெயர்ப்பு காரணங்களால் கால அவகாசம் தேவைப் படுகிறது.

கேள்வி: ராஜபக்சே மீதும்,அவரைச் சார்ந்தவர்கள் மீதும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில் அமெரிக்க நீதி மன்றத்திலோ அல்லது உலக நீதிமன்றத்திலோ தனி மனிதர்கள் வழக்கு பதிவு செய்ய இயலுமா?

பதில்: இயலும்.அதற்கான தக்க ஆதாரங்கள்,நீதிமன்ற முறைகளை கடைப்பிடித்தால்.

கேள்வி: ஒரே காலத்தில் நிகழ்ந்த பாலஸ்தீனியர் குண்டுவீச்சு,தமிழர்கள் மீது குண்டு வீச்சு இரண்டில் பாலஸ்தீனம் உலக ஊடகங்களால் முன்னிறுத்தப் பட்டதேன்?

பதில்: இலங்கையில் எண்ணெய் வளம் போன்ற உலக ஆதாயங்கள் இல்லாததும் மத்திய கிழக்கு நாடுகளின் அழுத்தம் போன்ற உலக பார்வை இல்லாததே.

கேள்வி: குண்டு வீச்சில் இன்னல்படும் மக்களுக்கு உதவுவதில் தாமதங்கள் ஏற்படுவதேன்?

பதில்: இதில் உலகின் போக்கு மெத்தனமாக இருக்கிறதென்றும்,நிகழ்பவைகளை அவசரமாக உடனடியாக மாற்றி விடமுடியாதென்பதும் தோல்வியின் விரக்தியில் அமைதியாக இருந்து விட்டால் பின் வரும் காலங்கள் மிகுந்த சோகத்தை உருவாக்கி விடும்.

ஃபுருஸ் பெயின் கூறியவற்றில் முக்கியமான ஒன்று இந்த தருணத்தில் நமது அனைவரின் குரல்களையும் விடாமல் ஒலிக்கச் செய்வதே முக்கியம்.

(பதிவுகள் பக்கமும், தமிழக வழக்கறிஞர்,காவல்துறை அடிதடிகளுக்குப் பின் தமிழ்நாட்டை நாடி பிடித்துப் பார்த்தால் சோகம்,விரக்தி காணப்படுவதாக தோன்றுகிறது)

இந்த நேர்காணலின் தினங்கள் கழிந்து தற்போது கிழக்கில் கருணா ராஜபக்சேவிடம் மந்திரி பதவி பெற்றுவிட்டார்.பிள்ளையான் தான் சார்ந்தவர்களின் ஆயுதங்களை இலங்கை அரசிடம் ஒப்படைத்து விட்டார்.புதிய பரிமாணங்கள் எந்த திசை நோக்கி பயணிக்கும் என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Thursday, February 5, 2009

விடுதலைப் புலிகளுக்கு ஓர் வேண்டுகோள்

ஒரு பயலும் உதவிக்கு வராமல் இருப்பவனும் காட்டிக்கொடுக்கும் தமிழனுக்கே உள்ள சாபக்கேட்டில் இருக்கும் வீரம் உதவிக்கு வராது.பழங்கதை அபிமன்யு மாதிரி எல்லாப் பயலும் வியூகம் அமைத்து வலை விரிக்கிறார்கள்.வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வராவிட்டால் என்ற வாசகம் நினைவுக்கு வருகிறது.(யாரைய்யா சொன்னது?தெரிந்தவர்கள் ஞாபகப் படுத்துங்களேன்)

உங்களது வீரத்தை இன்னும் எவனுக்கும் பறைசாற்ற வேண்டிய அவசியம் உங்களுக்கில்லை.தமிழன் இருக்கும் வரை உங்களது வீரம் நீங்கள் வீழ்ந்தாலும் தமிழ்மண் சொல்லும் .களத்து நிலைமைகள் உங்களையன்றி யாரும் அறியார்.உங்களால் இலங்கை ராணுவத்தை வெல்லும் சாத்தியம் இருந்தால் களத்தில் நில்லுங்கள்.இல்லையென்றால் தமிழகமும்,உலகத்தமிழர்களும் தரும் தார்மீக ஆதரவோடு பேச்சு வார்த்தைக்கு வாருங்கள்.

மழைக்காக காத்திருக்கிறோம்,திரும்பி போகமாட்டான் போன்ற அறிக்கைகள் எல்லாம் பொய்ப்பித்துப் போகும்படியாக இலங்கை ராணுவம் பலத்துடன் இருப்பது தென்படுகிறது.கிளிநொச்சியை விட்டதால் நோகாமல் நொங்கு தின்கிறான் இலங்கை ராணுவம்.அதிசயம் என்று ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்தால் ஒழிய வெற்றித் திமிரில் மிதக்கும் இலங்கை அரசை தற்போதைக்கு ஒன்றும் செய்ய இயலாத காலச்சூழல்கள்.அமெரிக்கா காரங்கிட்ட முன்னமேயே திரிகோணமலை பூச்சாண்டி காட்டியிருந்தால் கூட தப்பில்லைன்னு மனசு தப்புத் தாளம் போட வச்சுட்டானுக படுபாவிக.நிகழாததை இப்படியாகியிருந்தால் நல்லாயிருக்குமே என நினைப்பதில் அர்த்தம் இல்லை.நடைமுறை யதார்த்தங்கள் மட்டுமே தற்போது ஆராயவேண்டிய ஒன்று.இத்தனை அவலங்கள்,இழப்புக்களுக்கும் அப்பாலும் அரசியல் ரீதியாக தீர்வு காண்பதற்கான வழிகளை ஆராயுங்கள்

முடியலை ஐயா! கண்ணீர் வருகிறது.குழந்தைகள் குழிகளுக்குள் அலறுவதும்,கட்டிட இடிபாடுகளுக்குள் மனிதன் அலறுவதும்,வயதான பாட்டியின் கூக்குரலும்,ஆஸ்பத்திரி குண்டு வீச்சுக்களும்.

Thursday, January 29, 2009

தமிழகம்,ஈழம், இலங்கை-ஓர் பார்வை

அனைவரும் இயலாமையினாலும் செய்வதறியாது பதிவுகளாகவோ பின்னூட்டமாகவோ புலம்பிக்கொண்டிருக்கிறோம்.தலைமைகள் இருந்தும் தவறாக மாறிக்கொண்டிருக்கும் மத்திய அரசின் முடிவுகளால் தமிழகத்தில் கோபங்கள் அதிகரிக்கின்றன.சிலர் மவுன சிரிப்பிலும் ஈழம் பிரிந்து தொலைந்து விட்டதில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.இவற்றையெல்லாம் கடந்து ஒரு மக்கள் புரட்சி ஈழம் சார்ந்து எழத்தொடங்கியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து வாழ்க்கை மட்டத்தில் உள்ளவர்களும் தங்கள் கோபத்தை,ஆதங்கத்தை ஊர்வலமாக,முக்கியமாக மாணவர்கள் உண்ணாவிரதமாக வெளிப்படுத்துகிறார்கள்.இந்தக்கூட்டு முயற்சிகள் தோல்வியடைந்த விரக்தியில் மனஉணர்வுகள் எதிர்திசையில் திரும்பும் சாத்தியங்களை நிகழ்வுகள் உருவாக்குகிறது.(இதை எழுதி 3 நாட்களாகியும் இன்னும் பதிவுக்கு திரும்பாத நிலையில் இன்று முத்துக்குமாரன் தீக்குளிப்பு).

முதல் முறையாக தமிழகம் முழுவதும் குரல்கள் எழுப்பியும் அந்த ஜனநாயக குரல்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்காதது வேதனையையும் அந்நியப்படும் மனப்பான்மையையும் உருவாக்குகிறது.தமிழன் தனக்கென்று ஒரு பண்பாடு, இலக்கியம், வரலாறுகள்,சமூகம் சார்ந்த பார்வை கொண்டவன் என்ற உணர்வுகளாலுமே மாறுபட்டு நிற்கிறான்.

ஈழ உணர்வு இலங்கை ராணுவ வெற்றியோடு முடிந்து விடும் விசயமல்ல.அதனையும் தாண்டி நிகழும் மனித அவலங்கள் இலங்கை தமிழனுக்கு கவுரவமான எதிர்காலத்துக்கு வழிவகுப்பதோடு தொடர்புடையது.அதன் காரணம் கொண்டே ஈழம் தமிழனை பாதிக்கிறது.

முந்தைய ஈழம் குறித்த பதிவுகளில் சொன்னதையே மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது.விடுதலைப் புலிகளுக்கு மாற்றாக ஈழத்து மக்களுக்கு வேறு மாற்று சக்தி உருவாகாத காரணம் கொண்டும்,விடுதலைப் புலிகள் தோல்வியின் விளிம்பில் கூட இலங்கை தமிழர்களின் அபிலாசைகளுக்கு அங்கீகாரம் உரியவர்கள் என்ற காரணம் கொண்டே ஈழ சுதந்திர விடுதலை உணர்வை மதிக்கவேண்டியிருக்கிறது.

கருணா,அனந்தசங்கரி,பிள்ளையான் போன்றவர்கள் இடம் மாறியும் கூட உங்களை புதுப்பித்துக் காட்டும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளை நீங்கள் உருவாக்காததே தமிழக தமிழர்களின் நம்பிக்கையின்மைக்கான காரணமும், இருப்பதை உறுதியாகப் பற்றிக் கொண்டாவது சுய கவுரவத்துடன் வாழலாம் என்ற நம்பிக்கைதான் ஈழத்தமிழனுக்கு இத்தனை அவலங்களுக்கும் மத்தியிலும் இன்னும் மக்களை விடுதலைப்புலிகளின் பக்கம் இழுக்கிறதெனலாம்.

இலங்கை அரசு புலம் பெயர்ந்த தமிழனை மீண்டும் சம உரிமையோடு அணைத்துக்கொள்வதும், அல்லது இரண்டாம்தரக் குடிமகனாக வரவேற்பதும்,அல்லது அகதியாக உலகம் முழுவதும் ஊர்சுற்றவிடுவதும் போன்ற முக்கியமான நிகழ்வுகள் எதிர்காலத்தில் காத்துக் கிடக்கின்றன.மண்வாசனை காரணமாகவோ இயலாமையினாலேயோ தன் மண்ணை விட்டு நகராத உயிரோடிக்கும் உண்மை தமிழர்களின் எதிர்காலம் நிலைக்கவேண்டும்.

மூன்று சகாப்தத்தை தொடும் கொரில்லா இயக்க நிலையிலிருந்து போர்ப் படைகள் நிலை ,அரசாங்க நிர்மாணங்கள் என்று வளர்ந்த ஒரு இயக்கம் எப்படி இப்படி நிலைதடுமாறியது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.கிளிநொச்சி பத்திரிகையாளர்கள் கூட்டத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் தருணத்தில் பிரபாகரனின் முக அசைவுகளையும் பெரும்பாலான கேள்விகளுக்கான பதிலாக ஆன்டன் பாலசிங்கம் பதில் கூறுவதை நினைவுபடுத்தும் போது பிரபாகரனின் ராணுவ வெற்றிகளின் அளவுக்கு அரசியல் முன்நகர்வுகளை நகர்த்த இயலாமை தென்பட்டது. ராணுவ பலம் மற்றும் அரசியல் கட்டமைப்புக்கள் கொண்டு வளர்ந்த ஒரு இயக்கம் அரசியல் ரீதியாக தமிழ்செல்வன் இழப்புடன் கீழே விழத்தொடங்கியதெனலாம்.

அவலங்களும்,மனித அழிவுகளும் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் மனம் பதைக்கும் மனித நேயமாகவே ருவாண்டா கொலைகளும்,எத்தியோப்பியா வறுமையும்,ரஷ்ய மண்ணின் செச்சின்யா போர்களும்,வளைகுடா யுத்தங்களும்,பாலஸ்தீனப் பரிதாபமும்,ஈராக்கின் துயரங்களும் கண்ணில் படுகின்றன.மனித நேயம் என்பது எனது மொழிக்கான,தமிழ் இனத்துக்கான குரலாக மட்டும் ஈழம் நோக்கிய பார்வையில் திரும்பவில்லை என்பது ஏனைய உலக நிகழ்வுகளையும் உற்று நோக்கியதிலும் அந்த துயரங்களில் பங்கு கொண்டதிலும் தென்படுகிறது.

கருணாநிதி,ஜெயலலிதா இருவருக்கும் ராஜபக்சே அழைப்பு விடுத்திருக்கிறார் தங்கள் கண்ணாலேயே ஈழத்து நிலையினை வந்து பார்க்குபடி.மறைந்த இலங்கை பத்திரிகை ஆசிரியர் லசந்தே விக்கிரமசிங்கே சொன்னதுபோல் மனிதநேயங்கள் இழந்தும்,வருங்காலம் இலங்கைக்கு எந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்ற பார்வையில்லாதும் உலகப் பத்திரிகை ஊடகங்களுக்கு கூட அனுமதி வழங்காத இலங்கை ஜனாதிபதி இந்த அழைப்பின் மூலம் எதனை நிலை நாட்ட முயல்கிறார்? எதுவாக இருந்தாலும் அவரது அரசியல் தமிழக அரசியலை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார் எனபதைக் காட்டுகிறது.ஒருவர் வேனை விட்டு நகரமாட்டார்,இன்னொருவர் வயதின் முதுமை காரணமாக கடல் கடக்கமாட்டார் என்ற நிலையில் இந்த அழைப்பு எந்த அளவுக்கு சாத்தியமென்று தெரியவில்லை.தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரு சக்திகளும் நிகழ்கால அரசியலை சமன்படுத்த விரும்பா எதிர் சக்திகள்.

கூடவே தமிழகம் அனைத்தும் எழும் சிந்தனையும் உணர்வும் நியாயமானது என்று மக்கள் குரல்கள் எதிரொலிக்கின்றன.மக்களின் குரல்கள் வெறும் கூச்சலாகவும்,தமிழக தலைவர்கள் கோமாளிகளாகவும் தென்படும் இலங்கை அரசுக்கு தமிழகமும்,இந்தியாவும் வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற ஜனநாயகம் என்ற வேர்களுக்குள் நிலைத்து விட்டதால் மாத்திரமே அனைத்தும் கோமாளித்தனமாக தெரிகின்றது.

ஒரு முக்கியமான மண்,மொழி,இனம் சார்ந்த பிரச்சினையில் எங்கள் தலைமைகள் குட்டையை குழப்பினாலும் ஒரு பொறுப்பான நிலையில் உட்கார்ந்து கொண்டு உதிர்த்த பொன்முத்துக்கள் கண்டனத்துக்குரியது Mr.பொன்சேகா!

ஈழம் குறித்த எதிர்க்குரல்கள் தமிழகத்திலும் ஈழத்திலும் எழுந்தாலும் அவை குறைவான எண்ணிக்கையின் விழுக்காடு என்பதால் புறம் தள்ளி விடலாம்.தீவிரவாதம் என்ற கோட்டுக்குள் பார்க்கப்படுகின்ற ஒரு இனத்தின் உரிமைக்குரல் காரண காரியங்கள் தமக்கு சார்ந்த அனுகூலங்கள் என்ற காரணத்தால் ராணுவ ரீதியாக இலங்கை அரசுக்கு வெற்றியைத் தந்துள்ளது.மனரீதியான வெற்றியைப் பெறும் தகுதி தற்போதைய இலங்கை அரசுக்கு உள்ளதா என்பது கேள்விக்குரியது.இருந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு என்ற முத்திரையின் காரணமாக காயங்கள்,இழப்புக்கள்,வடுக்களுடன் இன்னும் ஏதாவது ஒரு வகையில் இலங்கை அரசை எதிர்கொள்ளவே வேண்டியிருக்கிறது.போரின் அவலங்கள் இத்தனை நிகழ்ந்தும் போருக்கெதிரான குரலாக சிங்கள மக்களின் ஒரு விழுக்காட்டில் கூட சமாதான குரல் எழும்பாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.இந்த நிலையில் எந்த விதமான எதிர்கால கூட்டு வாழ்க்கை இயலும் என்ற நம்பிக்கையும் கேள்விக்குரியதாக இருக்கிறது.

சில எதிர்மறையான பதிவுகளும் முக்கியமாக பின்னூட்டங்களும் தென்படுகின்றன.போய் புள்ள குட்டிகளைப் பாருங்கய்யா!தமிழ் நாட்டையும் இலங்கை மாதிரி ஆக்கிடுங்க போன்ற எழுத்துக்களும்.ஆட்டு மந்தையாக ஒரே மாதிரி சிந்திப்பது சரியல்ல.ஆனால் வித்தியாசமாக சிந்திக்கிறேன் என தனது இயல்புகளையும் பண்புகளையும் இழந்துவிட்டு யோசிப்பதில் என்ன பலன்?எழுத்து,மொழி ஆர்வம் கொண்டே பதிவர்களும் பின்னூட்டக்காரர்களும் தமிழ் வலைப்பக்கம் எட்டிப்பார்க்கிறார்கள்.ஈழம் பற்றி பதிவு எழுதுகிறவர்களும் ஏன் எதிர்மறை பின்னூட்டமிடுபவர்கள் கூட ஏதோ ஒரு சமூக அக்கறையினாலும்,சமுதாய சிந்தனை அடிமனத்தில் தொக்கி நிற்பதாலுமே தமது கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்பது எனது கணிப்பு.

பதிவுகளை எட்டிப்பார்க்கும் கால அவகாசம்,வசதிகள் இருந்தும் தனது சுயநலம் மட்டுமே போதுமென்று நினைத்தால் நிச்சயம் மாற்றுவழிகள் ஏராளமாயிருக்கின்றன.ஆனாலும் அனைவரும் ஏன் ஒரு பொதுக்கருத்தை உணர்வதிலும் நிறுவுவதிலும் ஆர்வம் கொள்கிறேமென்றால் இது நமது மனம் சார்ந்த, மூளையின் அணுக்கள் சார்ந்த ஒரு மொழியின்,இனத்தின் மக்களின் உயிர்,வாழ்க்கை,எதிர்காலம்,உரிமைகள் போன்ற முக்கியமான வாழ்வாதாரங்களை உட்படுத்தியது .இது இயல்பாக அனைவருக்கும் உருவாகும் சிந்தனையின் வெளிப்பாடு.

ஈழம் சார்ந்த நல்லது ,கெட்டது அனைத்தும் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை சார்ந்ததுதான்.ஒன்று விடுதலைப் புலிகளையும் ஈழத்து மக்களையும் ஆதரிக்கிறோம் என சொல்லி விட்டுப் போங்கள்.அல்லது விடுதலைப் புலிகளையும் ஈழத்து மக்களையும் ஆதரிக்கவில்லை என்று சொல்லுங்கள்.அதனை விடுத்து நாங்கள் விடுதலைப் புலிகளை எதிர்க்கிறோம், ஈழத்து மக்களை ஆதரிக்கிறோம் என்பது ஓட்டு வங்கியில் கவனம் செலுத்தும் அரசியல் கணக்காகவே முடியும்.இந்த அரசியல் கோசங்களை காங்கிரசும்,பி.ஜே.பியும் அறிக்கையாக வெளியிடுகிறது.தனிப்பட்ட முறையில் விடுதலை இயக்கத்தையும்,ஈழ மக்களையும் எப்படி பிரித்துப் பார்ப்பதென்று தெரியவில்லை.அப்படி தனிமைப் படுத்த வேண்டுமென்றால் ஏனைய இயக்கங்கள் சுகாதார சிந்தனையுடனும்,மக்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையும் சாத்தியங்கள் உள்ளதா என சிந்திக்கவேண்டியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் சில மாதங்களில் வருகின்ற மத்திய அரசு வாக்குரிமை அஸ்திரமே ஈழத்து தமிழனுக்கு ஆதரவாக கடைசி ஆயுதமாக இருக்கப் போகின்றது.ஆனால் நிகழும் அரசியல் சறுக்குகள் ஒரு நிலையான வாக்குகளாக மாறாமல் போவதற்கான சாத்தியங்களாக அனைத்து அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளும் இருக்கின்றன.

ஜெயலலிதா ஈழ தமிழ் மக்களின் வாழ்விற்கு எதிரான அறிக்கைகளை விடுகிறார். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தமிழக அரசியல் வாழ்வில் நிலைத்த சாமர்த்தியம் ஆச்சரியத்திற்குரியது.இவ்வளவு நாட்கள் அரசியலில் இருந்தும் அரசியல் முதிர்வு பேசுவதில் தென்படுவதில்லை.கலைஞர் தானும் முன்னிற்காமல் மற்ற கட்சிகளையும் செயல்பட விடாமல் அறிக்கைகள் தினம் வேறுபடுகின்றன.தண்டவாளத்தில் தலை கொடுத்த மு.க வின் இளமை அரசியல் கால கட்டங்களிலிருந்து கடந்து வந்த அரசியல் ஏறுமுகம்,சறுக்கல்கள்,சோதனைகளை தாக்கு பிடிக்கும் தைரியம் அசாத்தியமானவை.அரசியலின் இறுதி கால கட்டங்களில் ஈழம் குறித்த கலைஞரின் பார்வை வரலாற்றில் விமர்சனத்துக்குரியதாகவே இருக்கப் போகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை பிரச்சினையை எப்படி அலசிப்பார்த்தாலும் இறுதியில் ராஜிவ் காந்தி என்ற கோட்டுக்குள் வந்து முடிந்துவிடுவதால் ஈழத்துமக்களின் நலன்களை விட இழந்த இந்திய தலைவனின் துயரேமே முக்கியமாக சிலரின் மனதில் நின்றுவிடுகிறது.திசை மாறிப்போய் விட்ட இத்தனை சிக்கல்களுக்கும் இதுவே காரணமென்ற போதிலும் இழந்தது பெரிய இழப்பாகிப் போனாலும் வாழ்க்கையையும்,வரலாற்றையும் முன்னோக்கி நகர்த்த வேண்டிய கால கட்டத்தின் பாதையில் ஓர் இனம் அலைக்கழிக்கப்படுவது எதிர்காலத்தில் யாருக்கும் நல்லதல்ல.

கருணாநிதி,ஜெயலலிதா இருவருக்கும் ராஜபக்சே அழைப்பு விடுத்திருக்கிறார் தங்கள் கண்ணாலேயே ஈழத்து நிலையினை வந்து பார்க்குபடி.மறைந்த இலங்கை பத்திரிகை ஆசிரியர் லசந்தே விக்கிரமசிங்கே சொன்னதுபோல் மனிதநேயங்கள் இழந்தும்,வருங்காலம் இலங்கைக்கு எந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்ற பார்வையில்லாதும் உலகப் பத்திரிகை ஊடகங்களுக்கு கூட அனுமதி வழங்காத இலங்கை ஜனாதிபதி இந்த அழைப்பின் மூலம் எதனை நிலை நாட்ட முயல்கிறார்? எதுவாக இருந்தாலும் அவரது அரசியல் தமிழக அரசியலை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார் எனபதைக் காட்டுகிறது.ஒருவர் வேனை விட்டு நகரமாட்டார்,இன்னொருவர் வயதின் முதுமை காரணமாக கடல் கடக்கமாட்டார் என்ற நிலையில் இந்த அழைப்பு எந்த அளவுக்கு சாத்தியமென்று தெரியவில்லை.தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரு சக்திகளும் நிகழ்கால அரசியலை சமன்படுத்த விரும்பா எதிர் சக்திகள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பான சூடான இடுகைகள் பக்கம் முழுவதும் கல்மடுவின் குளம் உடைக்கப்பட்டதும் அதனால் இலங்கை ராணுவ வீரர்களின் எண்ணிக்கை பற்றிய பதிவுகளும் பொய்யாகிப் போய் அதே தின மாலையில் முல்லைத் தீவை ராணுவம் கைப்பற்றியது செய்தியானது.பல நாடுகளிலிருந்தும் பதிவிடும் அன்பர்கள் கல்மடுகிணறு உடைந்த செய்தி உண்மையாகியிருந்தும் உயிர்ச்சேதம் குறித்த செய்திகள் எந்த மூலத்திலிருந்து பதிவர்களை மட்டுமல்லாது தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் உட்பட ஏமாற்றுவித்தது என்ற புலனாய்வு முக்கியம்.முக்கியமாக பதிவர் வட்டத்தில் இதன் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரவேண்டும்.

இதனையும் தாண்டி வாழ்க்கை நிகழ்வுகளை தமிழகமும் இலங்கையும் எதிர்கொள்ள வேண்டிய மொழி,பூகோளம் சார்ந்தவை தொடர்கதையாக மாற்று தலைமுறைக்கு எதிர்காலம் எடுத்துச் செல்லும்.தற்போதைக்கான தீர்வையே சிந்திக்காத இலங்கை ஜனாதிபதிக்கு இதனையெல்லாம் சிந்திக்கும் சுழல்கள், கால அவகாசங்கள்,மன நிலைகள் அமையாது போனது இலங்கை மக்களுக்கான சரியான தலைமை அமையாமல் போனது துயரத்திற்குரியது.அதே நேரத்தில் நிகழும் ராணுவ முன்நகர்வுகள் துவக்க கால போராட்டத்தின் வட்டத்திற்கு மீண்டும் தள்ளப்பட்டு விட்டது.

புதிய தீர்வுக்கான வழிமுறைகளை அனைவரும் சிந்திப்பதே எஞ்சி நிற்கும் மக்களின் உயிர் காப்பதற்கும் இலங்கைக்கும் துணை புரியும்.

Sunday, January 18, 2009

திருமாவளவன்

அரசியல்,சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அலசும்போது எதிர்மறையான கருத்துக்களும் வந்து மோதி பார்வையாளனை குழப்பி விடும் சாத்தியங்கள் நிறையவே உண்டு.தான் சார்ந்த பிரச்சினை என்பதாலும் தான் நம்பும் கருத்துக்களுக்கு மாறுபட்ட காரணம் கொண்டும் எதிர்கருத்துக்கள் அமைந்து விடும் சாத்தியங்கள் நிறையவே உண்டு. ஆனால் எழுதுபவனின் கருத்துக்கும் தான் நம்பும் கருத்துக்கும் இடையில் ஏதோ ஒரு நூல் இழையில் உண்மை உயரத்தில் நின்று கொண்டிருக்கும்.எனவே இருவிதமான கருத்துக்களின் இடையிலும் மெய்ப்பொருள் காண்பதறிவு.

ஈழம் சார்ந்த உணர்வுகளையும்,கோபங்களையும்,எதிர்ப்புக்களையும்,நயவஞ்சகங்களையும் பிரதிபலிக்கும் தொலைகாட்சி ஊடகங்கள் சில நிமிட நேரத்தில் தமது பங்கை செய்துவிட்டு அடுத்த செய்திக்கு தாவி விடுகின்றன.அதில் ஒரு மாற்றமாக தமிழன் தொலைக்காட்சியில் திருமாவளவன் உண்ணாவிரதம் துவங்குவதற்கு முன் பேசிய உரையின் முழு சாரத்தையும் நோக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

திருமாவளவனின் உரையை நேரில் கேட்பதிலும் எனது எழுத்துக்களிலும் பொருள் மாறுபடும் வாய்ப்புக்கள் அதிகம்.காரணம் திருமாவளவனின் ஏற்ற இறக்கமில்லாத சமநிலைக் குரலினூடே ஒரு பேச்சாளனக்குரிய முத்திரைகளுடன் எனது புரிதலும் கூடவே எழுதும் முறையும் சேர்ந்து திருமாவளவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தங்களில் மாற்றங்களைக் கொண்டுவரும் வாய்ப்புக்களும் இதில் அடக்கம்.

வாழ்க்கையில் ஜாதியக் கோட்டைக் கடந்தும் தேசங்களாலேயே அடையாளம் காணப்படும் எனக்கு திருமாவளவன் பற்றி எழுதுவதும் கூட பார்வைகளை திசை திருப்பிவிடும் சந்தர்ப்பத்தை உருவாக்கி விடக்கூடும். இதுவரை ஜாதியக் கோட்டுக்குள்ளேயே பார்க்கப்பட்ட திருமாவளவனின் ஈழ தமிழ் உரை கேட்கும் யாரையும் சிந்திக்கத் தூண்டும்.ஒருவிதத்தில் பார்த்தால் திருமாவளவனின் உண்ணாவிரதம் அவரை ஜாதியக் கண்ணோட்டத்தில் காண்பவர்களுக்கு அந்த நோக்கை தகர்த்தெரியும் ஒரு சந்தர்ப்பம் எனலாம்.

அனைத்துக் கட்சி கூட்டங்களின் ஒப்புதலும்,பின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும்,மனித சங்கிலி ஊர்வலமும்,மத்திய அரசிடம் நேராக அனைத்துக் கட்சிகளும் நேராகச் சென்று வேண்டியும் தமிழக முதல்வரும் மத்திய அரசுக்கு பல கடிதங்கள் எழுதியும்,பல அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு அழுத்தங்கள் கொடுத்தும் எந்த விதமான பலனுமில்லாத போன நிலையில் உண்ணாவிரதம் மூலம் மத்திய அரசின் கவனத்தை திருப்பவும் போரை நிறுத்தும் படியும் அகிம்சை வழியில் தொடர்வது திருமாவளவனின் உண்ணாவிரதம்.

தனது உண்ணாவிரதப் போராட்டத்திற்கான சூழ்நிலைகளை விளக்கி சொன்னால் கலைஞர் புரிந்து கொள்வார் என்றும் மற்ற படி அரசுக்கோ கலைஞருக்கோ எந்த நெருக்கடியும் கொடுக்கும் எண்ணத்தில் தான் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபடவில்லையென்றும் கூறினார்.ஈழத்து மக்கள் தங்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தமக்கு ஈகோ என்ன வேண்டிக் கிடக்கிறதென்று மருத்துவர் ராமதாஸ்,வீரமணி,பழ.நெடுமாறன்,தா.பாண்டியன் என ஈழ மக்களின் வாழ்வில் அக்கறை கொண்ட அனைவரையும் சந்தித்ததாகவும் ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்ததாகவும் வைகோவை தாயகம் சென்று சந்திக்க முயன்றதாகவும் ஆனால் சந்திக்க முடியவில்லையென்றும் திருமாவளவன் தாயகம் வந்தானே என்ன விசயம் என்று ஒரு வார்த்தை வைகோ கேட்டிருக்கலாமென்றார்.(அனைவருக்கும் ஈழம் உணர்வுபூர்வமான விசயமாக இருந்தாலும் அரசியல் சதுரங்கமும் விளையாடுவது தெரிகிறது)

துக்ளக் பத்திரிகையில் கலைஞரின் கண்டம் திருமாவளவன் என்றும் தானும் சோவும் இதுவரை நேரில் கூட சந்தித்ததில்லையென்றும் சோவுக்கும் தமக்கும் எந்தவிதமான பிரச்சினைகளோ கூட கிடையாதென்றார்.தான் சொல்லாத வார்த்தைகளும் கூட சிலரால் காது மூக்கு வைத்து திசை திருப்பிப் படவிடுகிறதென்றும், திருமாவளவன் 10000 பேரை படகில் ஈழத்துக்கு தயார் செய்கிறார் என்றும் கூட வதந்திகளைப் பரப்பி விடுகிறார்கள் என்றார்.இப்படிப் பட்ட வதந்திகளைக் கேட்ட பின்பே ஓ! இப்படியும் கூட முன்பு செய்திருக்கலாமோ என்று இப்பொழுது தனக்குத் தோன்றுவதாக கூறினார்.

உண்ணாவிரதம் துவங்க நினைத்த தினங்களுக்கு முன்பே தனது கட்சியைச் சார்ந்தவர் தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க விரும்புவதாகவும் அப்படி ஒரு தொண்டரை பலிகடாவாக்க விரும்பவில்லையென்றும் சொன்னார்.வீட்டில் காலையில் கஞ்சியும்,பின் இரவில் மட்டுமே அம்மா தரும் உணவும் வாழ்க்கையில் பழகிய விசயமே என்றார்.

மேலோட்டமாகப் பார்க்கும் யாருக்கும் திருமாவளவனின் உண்ணாவிரதம் ஒரு அரசியல் சித்துவிளையாட்டு மாதிரியே தோன்றும்.ஆனால் உரையைக் கேட்ட எவருக்கும் அவர் முழு ஆத்மார்த்தமாக ஈழப்பிரச்சினைக்கு ஒரு அழுத்தத்தை தேடும் பொருட்டே இதில் ஈடுபட்டுள்ளார் என்பது விளங்கும்.

உண்ணாவிரதம் இருக்கும் போது முதல் நாள் ஏற்படும் உடல் மாற்றங்கள்,பின் அடுத்த நாள் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதனை விளக்கினார்.உடலில் உயிர் தங்கி இருக்க உணவில்லா விட்டாலும் தண்ணீர் தேவையென்றும் தண்ணீர் குடித்தே ஒரு புத்த பிக்கு ஒரு வருடம் வரை உண்ணாவிரதமிருந்தாரென்றும் தண்ணீர் இல்லாவிட்டால் கிட்னி பாழடைந்து விடுமென்றும் அப்படி உடல் உபாதைகள் ஏதாவது ஏற்பட்டால் ஒரு கொள்கைக்காக அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.எத்தனையோ சிரமங்களை எதிர்நோக்கும் ஈழமக்களுக்கு வெறும் கண் துடைப்புக்காக மேடைகளில் பேசி விட்டு தான் போய் விட விரும்பவில்லையென்றார்.தனது தொண்டர்களை அமைதி காக்கும் படியும் இல்லையென்றால் உண்ணாவிரதத்திற்கான குறிக்கோளை திசை மாற்றி விடுவார்கள் என்றும் கூறினார்.

முதல் நாள் உண்ணாவிரதம் சாத்தியமே எவருக்கும்.
இரண்டாம் நாள் உண்ணாவிரதம் உடலில் மாறுதலை உருவாக்கும்
மூன்றாம் நாள் ரத்த அழுத்தங்களும் உடல் இயங்கும் முறையையும் மாற்றும்
நான்காம் நாள் இன்று.உண்ணாவிரதத்தின் உண்மையான சுவடுகள் தெரிகிறது.

திருமாவளவன்!தண்ணீர் போதும்!பழரசம் பருகுங்கள்.எழுந்து வாருங்கள்.மாற்று வழி காணுங்கள்.உங்கள் உணர்வுகள் புரிகிறது தமிழனுக்கு.

Wednesday, January 14, 2009

ஈழம் மீண்டும் ஓர் பார்வை

2008 டிசம்பர் 31 வரையான உலக நிகழ்வுகளை வெறும் பார்வையாளனாய் பார்த்து விட்டு அவ்வப்போது பதிவர்களின் பதிவுப்பக்கங்களையும் கண்ணோக்கி விட்டு தூங்கி எழுந்தால் ஜனவரி 2ம் நாள் கிளிநொச்சி மனதையும் உணர்வுகளையும் ஆக்கிரமித்துக்கொண்டது.

நீரு பூத்த நெருப்பாய் மனதுக்குள் உறங்கிக் கிடந்த உணர்வுகள் தமிழகத்தில் தலையெடுக்க ஆரம்பித்த கணங்களில் இவ்வளவு நாள் துயரங்களை அனுபவித்த ஈழத்து தமிழர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கையை தமிழக அனைத்துக் கட்சிகளும் சட்டசபையில் அங்கீகாரம் கொண்ட காரணத்தால் மேலும் வலுவான நிலை வரை நம்பிக்கைகள் நிலைகொண்டே இருந்தது.ஆனால் அரசியல் கட்சிகளின் குளருபடிகளில் துவங்கிய சலசலப்பு ஈழத்துப்பிரச்சினையை திசை மாறும்படியாக மாற்றியது.இருந்தும் அவ்வப்போது தொடர்ந்த தார்மீக ஆதரவுகள் ஈழத்துக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் என்ற எண்ணத்தில் விழுந்த அடி கிளிநொச்சி பின்நகர்வு.

ஒருபுறம் போர்த்தந்திரங்கள் என்ற சமாதானம் கொண்டாலும் முன்னோக்கித் தாக்கும் திறன் யுத்தத்தில் இருக்கும் உத்வேகம்,அனுகூலங்கள் பின்னகர்வில் குறைவே எனலாம்.ஈராக்கின் யுத்த களத்தில் கூட வேகமாக முன்னேறும் படையின் வேகமும் அதற்கேற்றாற் போல ஈராக்கின் ராணுவமும் எந்த எதிர்ப்பும் காண்பிக்காத நிலையில் தலைநகர் பாக்தாத் நோக்கிய அமெரிக்கப் படை நகர்வில் நிலைதடுமாறிய ஈராக் இன்னும் எழுந்துநிற்க முடியாமல் பல நிகழ்வுகள் நடந்து விட்டது.

போர்களை வெறுக்கும் சாதாரணமாய் உலக நிகழ்வுகளை காணும் எவருக்கும் அமெரிக்காவின் ஈராக் யுத்தம் தவறென்று பட்டது.ஈராக் யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கோடானு கோடி மனித நேயம் கொண்ட எதிர்ப்பையும் எதிர்த்து ஈராக் யுத்தம் நடந்து முடிந்து அதன் விளைவுகள் கண்ணெதிரில்.ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் தனது பதவியின் இறுதிப் பேருரையில் போர் தவறென்று பிரகடனம் செய்கிறார்.

விடுதலைப் புலிகள் தங்கள் நிலைப் பாட்டை உலகத்தமிழர்களுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.மொழி உணர்வாளர்களும்,மனித நேயம் கொண்டவர்களும் ஈழத்து மக்களுக்கு விடிவைத் தேடுகிறார்கள்.விடுதலைப் புலிகளின்பால் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களும்,பாதிக்கப் பட்டவர்களும் ஈழத்து சுதந்திரத்திற்கு எதிராக உள்ளனர்.தமிழகம் ஈழத்துப் பிரச்சினையை மொழி உணர்வோடும்,மனிதாபிமான சாயலிலும் கூடவே ராஜிவின் கோணத்திலும் பார்க்கிறது.

இலங்கையில் சிங்களவர்களும் தங்கள் நாடு மற்றும் மொழி உணர்விலும் பார்ப்பதில் தவறில்லை.ஆனால் சில ஈழத்து தமிழர்கள் புலிகளுக்கெதிரான நிலைபாடுகள் தாங்கள் எதனை எதிர்காலத்தில் இழக்கப்போகிறோம் என்ற உணர்வே மறந்து ஒரு உரிமைப் போராட்டத்தையும் கூடவே தன்சக மனிதர் இழப்புக்களையும் கண்டுகொள்ளாமல் இலங்கை அரசின் அபிலாசைகளுக்கு துணை போகின்றன.

இலங்கையின் இறையாண்மையில் நம்பிக்கை கொண்டு விடுதலைப் புலிகளை எதிர்த்தாலும் இலங்கை அரசு ஈழத்துக்கு எந்தவிதமான எதிர்காலத்தை தரப்போகிறது என்பதில் இலங்கை அரசாங்கமே கூட உறுதியற்றும், நம்பிக்கையற்றும் காணப்படுகிறது. காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முதலில் விடுதலைப் புலிகள் ஒழியட்டும் என்பதில் கண்ணாயிருக்கும் சில இலங்கைத் தமிழர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது.

25 ஆண்டு காலத்திற்கும் மேலான பிரபாகரனின் பெயரின் ஆதிக்கம் இலங்கையின் வரலாறுகளாக எழுதப்பட்டுவிட்ட பின் விடுதலைப் புலிகளின் ஆதரவும்,எதிர்ப்பும் விடுதலைப் புலிகளின் எழுச்சியும்,வீழ்ச்சியையும் ஒட்டியே ஈழத்தமிழனுக்கு வாழ்க்கையாக அமையும்.இந்தப் பார்வை ஈழத்தில் வாழும் தமிழ் எதிர் அணிக்கு தவறாகப் பட்டாலும் தமிழகத்தின் பெரும்பான்மையானோர் பார்வை இதுவே.

இயக்க உணர்வுகளையும் தாண்டி வெளிப்படும் கோபமும்,தொலை நோக்குப் பார்வை இல்லாமையும் பெரும் பின்விளைவுகளை ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்தும்.விடுதலைப் புலிகளுக்கு மாற்றாக தமிழர்களை முன்னோக்கி கொண்டு செல்லும் எந்த வலுவான அமைப்பும் கண்ணுக்கு தெரியவில்லை.விடுதலை இயக்கத்துக்கான எதிர்க் குரலாக தோன்றும் எந்த அமைப்பும் எதிர்கால நம்பிக்கையை தரவில்லை.இலங்கை அரசாங்கமும் இதுவரையிலும் அடைந்த போர் முன் நகர்வுகளுக்கும் அப்பால் ஒருங்கிணைந்த அடையாளமாக எந்தவிதமான தீர்வினையும் முன்வைக்கவில்லை.தீர்வை முன்வைக்காத அரசியல் நகர்வுகள் விடுதலைப்புலிகளின் வருங்கால நிலைப் பின்னடைவடைந்தால் இலங்கை அரசு வைக்கும் தீர்வுகளுக்கு செவி சாய்க்கவேண்டிய கட்டாயத்துக்கு ஈழம் நகரவேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

50 ஆண்டுகளாய் அதிலும் இயக்கங்கள் தலையெடுத்த கால கட்டத்திற்குப் பிறகு உருவான சமூக,மனித அர்ப்பணிப்புகளுக்கு அர்த்தங்கள் இல்லாத சூழலை தோற்றுவிக்கும் எதிர் முகாமிடும் தமிழனைப் பார்த்து மனது வேதனையடைகிறது!தமிழீழம் தூரக்கனவுக்கு இலங்கைப் படையுடன் தமிழனும் துணைபோய்விட்டான். இலங்கை அரசு வலைத்தளங்கள் கூட தங்களது போர் வெற்றிகளை மட்டுமே முன்னிலைப்படுத்தும் போது சில தமிழ் தளங்கள் புலிகள் இயக்கத்துக்கு எதிரான செயல்களாய் மட்டுமே செய்திகள் வெளியிடுகின்றன.விடுதலைப் புலிகளுடனான கருணாவின் உட்பூசல் எந்தவிதத்தில் நியாயப்படுத்தலாய் இருந்தாலும் ஈழ வரலாறு எட்டப்பன் சொந்தக்காரன் என்றே எழுதி வைக்கப் போகின்றது தமிழர் மத்தியில் முக்கியமாக தமிழகத்தில்.


இனி ஈழத்துக்காக வேண்டி குரல் எழுப்ப தமிழகத்தை விட்டால் நாதியில்லை என்ற நிலையில் சமகாலத்தில் நிகழும் இரு நிகழ்வுகள் என்ற கண்ணோட்டத்தில் நோக்கினால் இஸ்ரேல் ,பாலஸ்தீனியப் பிரச்சினை உலகம் முழுவதும் ஒலிக்கிறது.ஈழத்து மக்கள் படும் அவதிகள் தமிழ்நாட்டுக்குள்ளும் தமிழ்வாழ் உலகு மட்டும் ஒலிக்கிறது.மனிதநேயம் என்பது கூட தனக்கு சாதகமான தராசில் வைத்தே உலகம் எடைபோடுகிறது.

பைபிளின் கதைகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இஸ்ரேலியர் என்ற ஒரு இனம் இடம் பெயரலுக்கு பாலஸ்தீனியர்கள் காரணமாக இருக்கக்கூடும்.ஆனால் வாழ்க்கை மாற்றங்கள் கொண்டது என்ற காரணம் கொண்டு நோக்கினால் நவீன வாழ்வியலுக்கு இஸ்ரேலியர்கள் வருவதே பாலஸ்தீனம்,இஸ்ரேல் நாடுகளுக்கான நன்மையாக இருக்கும்.அதுவன்றி பழமைவாதங்களில் மனித வெறுப்புக்கள் உச்சமடையும் நிலையில் எதிர்காலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கேள்விக்குரியதாகவே இருக்கும்.

தனது படைபலத்தால் மக்கள் வாழும் பகுதிகள் உட்பட தாக்கும் இஸ்ரேலிய யுத்தம் கண்டிக்கத் தக்கது.இதே நோக்கில் ஈழத்து மக்கள் படும் அவதியும் கவலைக்குரியது.ஆனால் உலகம் பாலஸ்தீனியத்தை மட்டுமே பார்க்கிறது.இஸ்ரேல் அரசு மக்கள் மீது குண்டு போட்டால் பாலஸ்தீனியர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.இலங்கை அரசு மக்கள் மீது குண்டு போட்டால் தீவிரவாதிகள் ஒழிக்கப்படுகிறார்கள்.என்ன வாதமோ தெரியவில்லை போங்க.(பாலஸ்தீனியப் பிரச்சினையில் பொருளாதாரம் விளையாடுகிறது அல்லது பயன்படுகிறது என்பது மட்டும் உண்மை)

இனி உள்ளுக்குள் கட்சிப் பூசல்கள் இருந்தாலும் ஒற்றுமை, பொருளாதார உதவி,எதிர்ப்பு குணம் மட்டுமே ஈழப்போரை வென்றிருக்க முடியும்.ஒற்றுமையில்லாத காரணத்தால் ஓர் உரிமைப்போர் நீர்த்துப்போகும் நிலைக்கு ஈழம் தள்ளப்பட்டிருக்கிறது. போர்கள் என்றும் வெற்றியாவதில்லை.ஆனால் அதன் விளைவுகளை ஒட்டியே வாழ்க்கை நிலை அமையும்.மண்ணின் மைந்தன் உரிமையில் உரிமைக்கானப் போரட்டம் தொடரவும் போராட்டத்தின் முகம் மாறினாலும் தனது உரிமைக்குரல் நிலைக்கச் செய்வது நிகழ்கால,எதிர்காலத் தமிழனின் கடமை. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். ஈழம் துயரத்தின் பிடியில் இருந்தாலும் பொங்கல் வாழ்த்துக்களை ஈழத்தமிழர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.காரணம் பொங்கல் தமிழனின் அடையாளம்.

Saturday, October 25, 2008

ஈழத்துப் பிரச்சினையும் இந்திய மாற்றங்களும்

வணக்கம் அனைவருக்கும். ஈழத்தமிழர் பிரச்சினையில் எந்தப் பதிவுக்குச் சென்றாலும் ஒன்று புலிகளின் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலை என்ற கோட்டிலேயே பதிவுகளும்,பின்னூட்டங்களும் வருகின்றன.காரணம் என்ன?

இந்தப் பிரச்சினையில் புலிகளின் நிலை தவிர்த்து அடுத்தப் பக்கத்துக்கு இதன் அரசியல்,சமூகம்,பொருளாதாரம் சார்ந்த சூழல்களும் மாற்றங்களும் நிகழவில்லை என்பதும்
புலிகளின் வீரமோ அல்லது எதிர்நிலை கொள்பவர்கள் கூறும் தீவிரவாத முத்திரை முடிவுக்கு வந்து விட்டால் ஈழத்தமிழர் பிரச்சினையினை மேல் எடுத்துச் செல்வது இலங்கை அரசுக்கு எளிதாகி விடும் என்ற கோட்டிலே தற்போதைய ஈழத்துப் பிரச்சினை பயணிக்கிறது.

சரி புலிகளுக்குத்தான் இலங்கை அரசுடன் கூட்டு மனோபாவம் இல்லையென்று வைத்துக் கொண்டாலும் கூட்டு சேரும் மனோபாவத்தில் தற்போது இலங்கை அரசுடன் சமரச எண்ணங்களுக்கு துணைபோகத் தயாராக இருக்கும் ஏனைய தலைவர்களை ஈழத்து மக்கள் ஏற்றுக் கொண்டு ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சூழ்நிலை உள்ளதா? கருணா,பிள்ளையான் தரப்பு பகுதியின் தற்போதைய நிலை எங்காவது முன்னிறித்தப் படுகிறதா?இவர்கள் நாணயத்தின் இரு பக்கங்களைப் பார்த்தவர்கள்.ஆனாலும் மக்கள் மத்தியில் சோபிக்கவில்லை என்ற தோற்றமே தெரிகிறது.எப்படியோ புலிகளைப் பலமிலக்கச் செய்துவிட்டால் இலங்கை அரசாங்கம் தனது பகடையை உருட்ட எளிதாக இருக்கும் என்ற நோக்கிலேயே தற்போதைய போர் முன்னிறுத்தப் படுகிறது.

பதிவர்களிலும்,பின்னூட்டமிடுபவர்களிலும் யாருக்காவது போருக்கான நேர் அறிமுகம் இருக்கிறதா?ஒருவேளை இதனைப் படிக்கும் ஈழத்தமிழனுக்கு போரின் வடுக்கள் இருக்கலாம்.ஒரு போரில் பொதுமக்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதும் அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல கால அவகாசம் கொடுப்பதும்,அப்படி தனது உடமைகள் அனைத்தையும் விட்டுச் செல்பவர்களை பாதுகாப்பான இடத்தில் அமர்த்துவதும் போரியில் மரபு.விமானத் தாக்குதல் என்பது துள்ளியமாக போர் நிலைகளை அழிப்பதென்பது.அதற்கு முன்பு கூட அந்த இடம் தாக்குதலுக்கு உள்ளாகப் போகிறதென்று காகித நோட்டிஸ்களை விமானத்திலிருந்து போடுவதென்று விதிமுறைகள் உள்ளது.இதனையெல்லாம் இலங்கை அரசாங்கம் பின்பற்றியுள்ளதா எனத்தெரியவில்லை.காரணம் மனித வெறுப்பின் உச்சக்கட்டம் போரில் தெரிவது.அழிவு ஒன்றே குறிக்கோள்.இதில் இரு தரப்புமே பொறுப்புக்குள்ளாவார்கள்.

சாதாரண ஈழத்தமிழனும் இலங்கைக் குடிமகனும் சேர்ந்து வாழ்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்கப் போவதில்லை இத்தனை இழவும் இரத்தம் சிந்துதலுக்குப் பிறகும் கூட.சாதாரண சிங்களத்தவர்கள் பழகுவதற்கு இனிமையானவர்களே.சாப்பாட்டுக் காரத்தை விட்டுப் பார்த்தால் உணவு முதற் கொண்டு எல்லாமே செரிக்கும்,நட்பு இசை என்று எல்லாமே இனிக்கும்.எனவே இரு மொழியின் மரபுகளும் மீண்டும் இணைக்கப் படுவது அவசியம்.

இங்கே புலிகளைக் குறை கூறவும் விமர்சனம் செய்யவும் ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்.எதிர்தரப்பில் இலங்கையில் சமரசம் விரும்பாத கட்சிகளும் முக்கியமாக நம்மூர் இந்து தீவிரவாத அமைப்புக்களுக்கு நிகரான புத்த பிட்சுக்களும் சில சட்ட அமைப்புகளுமே புலிகளைத் தவிர்த்து இந்தப் போரை முன் கொண்டு செல்கிறது.புலிகள் சார்ந்த ஊடகங்களைக் கவனித்தால் புரியும் ஒன்று புலிகளுக்கு சமாதானத்தில் நம்பிக்கையில்லை என்பதல்ல.

புலிகளின் துவக்க கால முதல் கொண்டுள்ள ஒரே குறிக்கோள் தமிழீழம்.

இந்தக் கோட்டுக்கு இலங்கை அரசாங்கம் அன்றும் இன்றும் வரத்தயாரில்லை.இதற்கான காரணம் கொண்டே சுனாமி பொருளாதாரப் பங்கீட்டில் கூட ஈழத்துப் பகுதிகளுக்கு சம பங்கீடில்லை.ராஜ பக்சே சகோதரர்களின் முரட்டுத்தனம் சமாதானத்திற்கான திசையிலும் செல்வதாயில்லை.அவர்களது ஒரே குறிக்கோள் புலி ஒழிப்பு.அப்புறம் எல்லாம் தமது விருப்பத்திற்கு வளைந்து கொடுக்கும் என்பதும் அதுவே நிதர்சனமுமாகும்.

புலிகள் ஏனைய ஈழத்து அமைப்புகளை அணைத்துக் கொண்டு தங்களின் குறிக்கோளில் முன்னேறாமல் போனதும் அதே சமயத்தில் புலி எதிர்ப்பாளர்கள் ஈழத்து தமிழர்களுக்கென்று உறுதியான ஜனநாயக நிலைப்பாடு கொள்ளாததும் தமிழர்களின் பின்னடைவைத் தருகிறது.அனந்த சங்கரி,டக்ளஸ் தேவானந்தா போன்றோர் இலங்கை சார்ந்த நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் அவர்களும் வெறும் பகடைக் காய் நிலையில்தான் உள்ளது போல் தோன்றுகிறது. புலம் பெயர்ந்த மக்கள் தங்கள் மத அடையாளங்களை நிலை நிறுத்திக் கொள்ள காட்டிய ஆர்வத்தை தாங்கள் சார்ந்த நாடுகளிலும் உலக அரங்கிலும் ஈழத்துப் பிரச்சினையை இன்னும் முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும்.மாறாக உணர்ச்சிவசப்படுபவர்களாகவும்
தாங்கள் சார்ந்த வாழ்க்கையின் அழுத்தத்தில் மறைந்து போனவர்களாகவும் காணப் படுகிறார்கள்.

இலங்கை அரசின் வேர்கள் இந்துப் பத்திரிகை ராம் போன்றவர்களிடம் வேறூன்றியது போல் ஈழத்தமிழர்கள் ஊடக நிலையிலும் மொழி சார்ந்த நிலைக்கு அப்பால் போகவில்லை.தமிழ்நெட் போன்ற வலைத்தளங்கள் ஓரளவுக்கு திருப்திகரமாக இருந்தாலும் எழுத்தும் கருத்து பரிமாறல்களுமின்றி செய்திகளை வெளியிடுகின்றது.இலங்கை விசயத்தில் ஓரளவுக்கு ஆங்கில ஊடகமான அவுட்லுக் இந்தியா மூலம் கருத்துக்கள் தருவது B.ராமன் மட்டுமே.காரமூட்டும் தெகல்கா சேலத்துக்குப் போய் குளத்தூர் மணீயையும் குளத்தூரையும் பற்றிச் சொல்லி விட்டு தற்போதைய மாற்றங்களை அலசாமல் போய்விட்டது.

சில பதிவுகளும்,பின்னூட்டங்களும் சின்னப்பிள்ளைத்தனமாக இருந்தாலும் நேர்,எதிர்வினைகள் தமிழ்மணத்தில் பிரச்சினையை அலச ஆராய முற்படுவது வரவேற்க தக்கது.அரசியல் அந்தர் பல்டிகளை தொடாமல் விட்டுச் செல்கிறேன்.


இனி இந்தியாப் பக்கம் வந்தால் இந்தியாவின் நிலைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன.ஒன்று பாகிஸ்தான்,சீனாவின் இலங்கையில் நிலை கொள்ளலைத் தவிர்ப்பது.அடுத்து ராஜிவ் காந்தியின் மரணம்.தற்போதைய தமிழகத்து எழுச்சி இதனையெல்லாம் புரட்டிப் போட்டுள்ளது. அடக்கப் படும் உணர்வுகள் புரட்சி செய்யும் என்பதற்கு ஈழத்துப் பிரச்சினையும் மொழியின் வேர் ஆழமானது என்பதற்கு தமிழக மாற்றங்களும் உதாரணங்கள்.எனவே இனி இந்திய இலங்கை வெளியுறவுக் கொள்கையை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்து மாற்றங்கள் கொண்டு வரவேண்டிய நிலைக்கு இந்திய வெளியுறவுக் கொள்கை தள்ளப்பட்டிருக்கிறது.

ஈழத்துப்பிரச்சினையில் ஈழத்து தமிழனுக்கு குரல் கொடுப்பவன் கவிஞனாகவும் , ஒரு படைப்பாளியுமாய் இருக்கிறான்.படைப்பும் கவிதையுமே நிலைத்து நிற்கும் நிலை போக படைப்பாளியின் தனிப் பக்கங்களும் இனிப் பேசப்படும் நிலையில் தற்போதைய சிறைவாசங்கள்.இவையெல்லாம் ஈழத்துக்கு வலு சேர்க்கவே செய்யும்.இயக்குனர்கள் அமீரும்,சீமானும் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் புகுந்துவிட்டார்கள் இந்தக் கைதின் மூலமாக.

மனிதாபிமான அடிப்படையிலாவது துன்புறும் ஈழத்து மக்களுக்கு வேண்டிய முக்கியப் பொருட்கள் செல்வதற்கு இந்தியா நேரடியாகவோ அல்லது நார்வே,ஐக்கிய அமைப்புக்கள் போன்றவைகளுக்கு முன்னுரிமை தந்தோ செயல்பட வேண்டும்.ஈழத்து தமிழர்களின் உடமைகளும்,வாழ்விடங்களும் அவர்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும்.முக்கியமாக ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தை ஜனநாயக முறைப் படி எந்த ஒரு அழுத்தங்களுக்கும் உட்படுத்தாமல் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமையை வழங்குவது முக்கியம்.அதற்கான முயற்சிக்கு இந்தியா துணை போனால் இந்தியாவின் சொந்த நலன்களுக்கு நல்லது.