இந்தப் பதிவு புதுகைத் தென்றலின் மேசை நாகரீகம் பதிவைப் படித்ததன் விளைவு.பெரும்பாலான விசயங்கள் அங்கேயே காணக்கிடைக்கின்றன.விட்டுப்போனதையும் எனக்குத்தெரிந்ததையும் சொல்லிப்போகிறேன்.
உணவு விடுதிகளில் குடும்பம் நண்பர்கள் சகிதம் போகும்போது ஆண்கள் நாற்காலியை பின்புறம் இழுத்து குழந்தைகள், பெண்கள் உட்காருவதற்காக உதவி புரியலாம். மேசையில் உட்கார்ந்தவுடன் வெயிட்டர் எனும் உணவுப் பரிமாறுபவர் ஒரு புன்சிரிப்புடன் வணக்கம் சொல்கிறாரா என்று கவனியுங்கள்.அவர் வேலைப் பளுவில் சொல்ல மறந்து போனாலும் நீங்கள் அவருக்கு ஒரு புன்முறுவலுடன் ஹலோ சொல்லலாம்:)
பரிமாறுபவர் முதலில் தண்ணீர் கொண்டு வந்து கிளாஸ் எனும் குப்பியில் ஊற்றவேண்டும். அவர் ஊற்றும் நீரின் அளவு குப்பியின் முக்கால் பாகத்தை தொடவேண்டும்.அவரின் "தல" அவருக்கு சரியாகப் பயிற்சி தந்திருந்தால் நீரை உங்களுக்கு வலதுபுறமாகவே குப்பியில் ஊற்றவேண்டும். கிடைக்கிற சந்துலயெல்லாம் எட்டி எட்டி தண்ணீரை ஊற்றினார்ன்னு வச்சுக்குங்க!தம்பி பரிமாறல் கலையில் அரைகுறைன்னு அர்த்தம்.உணவு பரிமாறும் போதும் உங்களுக்கு இடது புறமாகவே பரிமாறவேண்டும்.
அப்புறம் மெனு படிக்கிறதும் பட்ஜெட்டும்தான் உங்களுக்குத் தெரியுமே! ஆனால் பரிமாறுபவருக்கு சொல்லும்போது ஐந்து வகையான உணவுகளைக் கொண்டு வரச்சொல்வது முறை.முதலில் அபிடைசர் எனும் சூப் அடுத்து ஆண்ட்ரே எனும் சின்ன நொறுக்குத்தீனி அதற்கடுத்து மெயின் டிஷ் எனும் முக்கிய உணவு,பின் டெசர்ட் எனப்படும் இனிப்பு பின் காபி அல்லது சாயா.(இந்த காபிக்கும் மதுவுக்கும் ஒரு தொடர்பு உண்டு.மதுவிலக்கின் காரணமாக அதுபற்றியெல்லாம் கூவ மாட்டேன்.வேண்டுமென்பவர்கள் பக்கத்துல இருக்கும் "பார்" க்கு ஒரு மெல்லிய நடைப்போய்விட்டு வந்து விடுவது நல்லது).
புதுகைத் தென்றலின் பதிவின் நான் மாறுபடும் இரண்டு டிப்ஸ்.
1 .கையில் எடுத்த நாப்கின்னை மடியில் விரித்துக்கொள்ளலாம் அல்லது கழுத்தின் முன்புறமும் மாட்டிக்கொள்ளலாம்.
2. ஃபோர்க் & ஸ்பூனை உங்களது பிளேட்டின் இடது புறமும் வலது புறமும் ஒன்றையொன்று கண்ணும் கண்ணும் நோக்கினால் நான் இன்னும் சாப்பாட்டை முடிக்கவில்லை.பரிமாறுபவரே தொடாதே தட்டையென்று அர்த்தம்.அதையே உங்களுக்கு நேராக ஒன்றையொன்று தொட்டிக்கொள்ளும்படி வைத்தால் நீங்கள் உணவை முடித்துவிட்டதாக அர்த்தம்.சொல்லிக் கொண்டே போகலாம் உணவு என்ற கடோத்கஜ கலையை.உண்ணும் உணவு மனிதனின் கலாச்சாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.அது இடத்துக்கு இடம் தேசத்துக்கு தேசம் மாறுகிறது.
எனக்கு இதுவரை புரியாத உணவகங்களின் மேசை நாகரீகம் என்னவென்றால் எல்லோருமே உணவைப் பரிமாறுபவர்க்கே டிப்ஸ் வழங்குவது.சமயலறையில் உஷ்ணத்தில் உணவு தயாரிக்கும் சமையல்காரர்களை யாருமே கண்டு கொள்வதில்லை.உணவு உண்பதின் மகிழ்ச்சியில் பெரும்பான்மையான பங்கு அவர்களுடையது.இந்த மேசை நாகரீகத்தை இனி கொஞ்சம் தலைகீழாக்கிக் காட்டவேண்டும்.
இந்த தொந்தரவே வேண்டாம் சாமி சொல்றவங்களுக்கு உடுப்பி மாதிரி உணவகம் இருக்குது.சில்வர் தட்டில் குட்டி குட்டியான பக்கவாத்திய காய்கறிகளுடன் சப்பாத்தி,பூரியுடன் சாதமும் கலந்தடித்து பருப்பு,ரசம்,தயிர்,இனிப்பு எனவும் ஏப்பம் விடலாம்.
குசும்பன் மாதிரி சில புது மாப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.அபி அப்பா மாதிரி ஆட்கள் வீட்டுக்கு விருந்துக்குப் போய்விட்டு புத்தகங்களையும் ஆட்டையப் போட்டு வந்து விடுவார்கள்.வீட்டுச்சாப்பாடு,ஓட்டலுக்கு சாப்பிடப்போறோமாக்கும்ன்னு அவங்க தோட்டத்துல எப்பவுமே முப்போகம்தான்.
வருத்தப்படாத வாலிபர் சங்கமுன்னு ஒரு கூட்டம் இருக்குது.அவங்களுக்கும் சின்ன டிப்ஸ்.கண் கண்ட இடத்தில் ருசிமட்டுமல்லாது சுகாதாரமும் தரும் சைவ அசைவ உணவகங்களில் பூந்து விளையாடுங்க.அமீரகமாக இருந்தால் சேட்டன்களின் மெம்பர் மட்டுமே துணை.மேற்குப் பக்கம் சுத்தறவுங்களுக்கு KFC யும் சிப்சும்,பிஸாவும் பெப்சியுமே வரம். கிழக்குப்பக்கம் சுத்துபவர்களுக்கு கிடைப்பதெல்லாம் சாப்பிடுங்க.ஆனால் தவளை மாதிரி உணவுகளுக்குத் தாண்டி விடாதீங்க.திருவல்லிக்கேணிப் பக்கமிருந்து வாழ்க்கையை அனுபவிக்கிறவர்களுக்கு மூலை மூலைக்கு மெஸ்களிருக்கும்.வாழை இலையில் சாதத்தை பாத்தி கட்டி அடிங்க ஒரு நாள் வாழ்வின் திசை மாறும் என்ற நம்பிக்கையுடன். மதுரைப்பக்கம் முக்கியமாக கோயம்புத்தூர் பக்கம் இருக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்களுக்கு சொல்லிக்கொள்வது உணவு விசயத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.பதிவு இன்னும் நீளும் போல் தெரிகிறது.அதனால் இப்போதைக்கு இதுவரைக்கும்.......