ஹேமா!நன்றி சொல்றதுக்குள்ளே வந்து நாற்காலியைப் பிடிச்சிட்டீங்க போல இருக்குதே!என்னோட பதவிக்காலம் 20ம் தேதி முடியத்தானே!நான் தமிழ்மணம் கவர்னர்களிடம் பிராது கொடுக்கப்போறேன்.
ஒரு வாரமாக நிறைய எழுதிவிட்டு ஒற்றை வரியில் தமிழ்மணத்துக்கு நன்றின்னு சொல்லி விட்டு டாட்டா காட்டிவிட்டால் நல்லாயிருக்காது:) எனவே வழக்கமாக வள வளக்கும் பாணியில் இன்னும் கொஞ்சம் சொல்லி விடுகிறேனே!
பொது ஊடகங்கள் செய்ய வேண்டிய பணியின் ஒரு பகுதியை தமிழ்மணம் செய்கிறது என்பதோடு பல பரிமாணங்களை தமிழ்மணம் திரட்டித் தருவது தமிழுக்கான அரும்பணி.இதனை எப்படி உபயோகித்துக்கொள்கிறோம் என்பதில் தமிழ் பதிவுலகின் எதிர்காலமிருக்கிறது.
பலரும் பதிவுலகில் தமது கருத்துக்களை வைக்கும் நிலை உருவாகும் போது பதிவுகள் எழுத்தாளன் என்ற தகுதியை தருவதை விட கருத்து பரிமாற்றம் என்ற நிலையையே எதிர்காலத்தில் தரும்.ஒரு வரம்புக்குள் இல்லாமல் எழுத்தின் பல பரிமாணங்களை பதிவுலகமே முன் வைக்கிறது என்பதோடு சமூகத்தின் தளங்களை சரியாக பிரதிபலிக்கும் ஊடகமாக பதிவுலகமே பல பரிமாணங்களிலே இது வரை பயணிக்கிறது.கூடவே கிள்ளி விடுவது,கீச்சிடுவது,பொது இடத்தில் இப்படியா குந்திக்குவ குரல் விடுவது என்று ஒரு சில விமர்சனங்கள் இருந்தாலும் கருத்து,உலக வலம்,நகைச்சுவை,சமையல்,அரசியல்,தொழில்நுட்பம்,உதவி,வேலைவாய்ப்புக்கள்,ஈழம் குறித்த அக்கறை,ஈழ விமர்சனம்,திரைப்படங்கள்,உடைக்கும் செய்திகள் என பல பரிமாணங்களை பதிவுலகின் திரட்டியாக தமிழ்மணம் செயல்படுகிறது.தமிழ் தொலைக்காட்சிகளும்,பத்திரிகைகளும் கண்ணாமூச்சி விளையாட உலக நிகழ்வுகளை கணநேரங்களில் முந்திக்கொண்டு வந்து தருவது இணையமும் இணையம் சார்ந்த பதிவுலகும் அதன் அடிநாதமாக விளங்கும் தமிழ்மணமே.
வாழ்க்கைச் சூழலில் தமிழே தொடாத நேரத்தையெல்லாம் நினைக்கும் போது தமிழ் மணமும், பதிவுலக நட்புக்களும் கடந்த சில வருடங்களின் வாழ்க்கையின் இனிமையான கணங்களின் ஒரு பகுதி என்ற மகிழ்ச்சியாகவே இருக்கிறது.கட்டுடைப்புக்களோடும்,சமூகஉணர்வோடும்,இலகுபடுத்திக் கொள்ளும் முகமாகவும் கற்றல் என்ற கடலை நீந்தும் இனிய அனுபவத்தை தரும் தமிழ்மணத்தின் நிர்வாக குழுவுக்கும், பதிவுலக நட்புக்களுக்கும் நன்றி.