வார இறுதியில் கடற்கரை போகலாம் என புறப்பட்ட வேலையில் நண்பர் ஜேம்ஸ் நல்ல வெள்ளிக்கிழமைக்காக தேவாலயம் போக வேண்டும் கூட்டிச் சென்று திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டியதால் ஒரு மணி நேரம் நடை போட்டு விட்டு நண்பர் வந்து விடுவார் என்று காத்துக் கொண்டிருந்தேன்.அவர் திரும்ப வராத 15 நிமிடங்களுக்குப் பின் தேவாலயத்திற்குள் ஒரு பார்வையிடலாமே என்று உள்ளே போனேன்.உள்ளே போனால் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.
சுவரின் ஒரே வளாகத்துக்குள் பல விசாலமான அறைகள்,பூங்காடுகள் கொண்ட மைதானம் போன்ற இடங்களில் தனித்தனியாக ஒவ்வொரு மொழிக்கும் தகுந்த வாறு சிலர் பிரார்த்தனை செய்து கொண்டும்,சிலர் சங்கம் கலையும் முன் வடை,டீ சாப்பிடுவது மாதிரி கேக்,சாண்ட்விச்,பெப்சி பானங்களுடன் காணப்பட்டார்கள்.இந்த கூட்டுப் பிரார்த்தனைகளுக்கு வந்தவர்கள் தனித்தனி குழுக்களாக மலையாளம்,தெலுங்கு,தமிழ்,அரேபிய,ஆப்பிரிக்க,ஆங்கில மொழிகளை சார்ந்தவர்கள் என்பது பேச்சு சத்தங்களாலும்,முக உருவங்களிலும் தெரிந்தது.
உருவ வழிபாடுகளில் நம்பிக்கை கொண்ட கத்தோலிக்க திருச்சபையும்,உருவ வழிபாடுகளில் நம்பிக்கையற்ற புரொட்டஸ்டண்ட்,இசைவடிவங்களால் இறைவனை தேடும் பெந்தகொஸ்தே போன்ற பிரிவுகள் இருந்தாலும்,பல நாட்டு கலாச்சார, மொழிகள் கொண்ட இவர்கள் அனைவரும் கிறுஸ்துவர்கள் என்ற ஒரே குடையின் கீழ் இணைகிறார்கள்.
19ம் நூற்றாண்டின் காலனி ஆதிக்கத்தில் பிரிட்டிஷ்காரர்கள்,ஏனைய மேற்கத்தியர்கள் தங்கள் தொழுகைக்கான இடமாக தேர்ந்தெடுத்த இடங்கள்,கட்டிட மாறுபாடுகளுக்கிடையிலும் இன்றும் நிலைத்திருக்கின்றன.இரு ஆலய இடத்தையும் சுற்றி நகரை மேம்படுத்தும் நோக்கில் அகண்ட, நீண்ட ரோடுகளுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.இந்த இரு ஆலயங்களும் மாற்று இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று அரசாங்க தீர்மானங்கள் ஏனோ ஒத்தி வைக்கப்பட்டு நீண்ட ரோடுகளுக்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது.காலனி ஆதிக்கக்காரர்கள் நாட்டை விட்டு செல்லும் முன் கத்தோலிக்க ஆலயத்தை ரோம் போப்பின் டயாசிஸில் இணைத்த காரணம் கொண்டோ பின் ஏனைய நாட்டவர்களின் கிறுஸ்தவ நம்பிக்கைகளுக்கு குவைத் அரசாங்கம் மதிப்பு கொடுத்தோ இந்த இரு வழிபாட்டு இடங்களும் இன்றும் நின்று கொண்டிருக்கின்றன.இந்த இடத்தை வழிபாட்டு நிலமாக உருவாக்கியவர்கள் மேற்கத்திய நாட்டவர்களாக இருந்தாலும் இதன் வழிபாட்டு பலனை அனுபவிப்பவர்கள் பெரும்பான்மையாக ஆசிய நாட்டைச் சார்ந்தவர்களே. தலைப்பில் சொல்ல வந்தது விதை விதைத்தவர்கள் சில பேர்.அதனை அறுவடை செய்து பலன் அடைபவர்கள் ஏனையோர்.
சென்ற வார சென்னை பதிவர்கள் சங்கம் அமைக்கும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்த பதிவர்களின் கருத்துக்களும்,எதிர் வினைகளும்,கும்மிகளும் எதிர்காலத்துக்கான விதை விதைக்கிறோம் என்ற தூரப் பார்வையில்லாமல் இப்பொழுதே விதைத்து சில மாதங்களில் அறுவடை செய்யும் பார்வையும்,கூடவே சிலருக்கு அதன் பலன்கள் போய் சேர்ந்து விடுமோ என்ற ஐயங்களும்,கட்சிகள் சார்ந்த அமைப்பாக ஆகி விடுமோ என்ற அச்சமும் கும்மிகள் அடித்து ஒரு விவாதக்களத்தை நீர்த்துப் போவ செய்வதும் பதிவுகளில் தெரிகிற்து.கூடவே பதிவர் குழுவுக்கான அக்கறையும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
சில நேரங்களில் இணைய தளங்களில் சலசலப்புகள் ஏற்பட்டாலும்,தொலைக்காட்சிகள் ஆற்ற இயலாத விவாதங்களை இடுகைகளின் கருத்துகளும்,பின்னூட்டங்களும் மாற்று ஊடகமாக இணைய எழுத்துகள் செயல்படுகின்றன.எனவே முதல் கூட்டம் பிசுபிசுத்து விட்டதென்று சோர்ந்து போகாமல் சென்னை பதிவர்கள் மொத்த தமிழ் பதிவர்களின் சார்பாக தமிழ் பதிவர்கள் சங்கம் என செயல்படாமல் சென்னையின் சுற்றுப் புறத்தில் உள்ளவர்களை துவக்கமாக கொண்டு செயல்படலாம்.இயலுமென்றால் தற்போது குழுவாக இயங்கும் மதுரை,திருச்சி,நெல்லை,கோவை,ஈரோடு மற்றும் ஏனைய குழுக்களுடன் இணையும் பாலமாக அமையலாம்.
துபாய்,சிங்கப்பூர்,அமெரிக்க பதிவர்கள் அவ்வப்போது ஒன்று கூடுகிறார்கள்.இலண்டன்,ஆஸ்திரேலியா,கனடா போன்ற இடங்களிலும்,இலங்கையிலும் பதிவர்கள் இணைகிறார்கள்.இவர்களையெல்லாம் மொத்த குழுவாக தமிழ்மணம் போன்ற இணைப்புக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளலாம்.தனித் தனியாக தீவுகளாய் இருப்பதை விட மொத்த கருத்துக்களின் தளமாக ஒருமுகப் படுத்துவது அவசியம்.பிரச்சினைகளாக தனி மனித விமர்சனங்கள்,கோபங்கள்,சட்டம்,பொருளாதாரம்,தற்போதுள்ள சூழலிலும்,எதிர்காலத்திலும் தமிழக அரசோ, மத்திய அரசோ,இலங்கை அரசோ குழுவாக செயல்படுவதற்கு முட்டுக்கட்டை போட முன் வரலாம்.இவைகள் தன்னம்பிக்கையை குலைக்கும் எதிர்விளைவுகள்.சரியான வழிகாட்டுதலும்,சட்டபூர்வமான ஆலோசனைக்குழுக்களும்,தலைமை அமைப்புகளும் அமையும் பட்சத்தில் எதிர்விளைவுகளை எதிர்கொள்வது கடினமானதாக இருக்காது.ஆனாலும் அடுத்த கால் நூற்றாண்டில்,அரை நூற்றாண்டில் இணையம் ஒரு வலிமை மிக்க ஏனைய இசங்களை பின் தள்ளக்கூடும் சாத்தியம் இருக்கிறது.அதற்கான விதையாக மட்டும் இப்போதைய பதிவர்கள் நன்மை,தீமைகளை அலசுவதும்,விவாதிக்க மட்டுமாவது செய்வது அவசியம்.
நண்பரை மறந்து விட்டேனே!கருத்துகளிலும்,கொள்கைகளிலும் இருவரும் மாறுபட்டு இருந்தாலும் நட்பு இருவரையும் இணைக்கிறது.கண்டு பிடித்து விட்டேன் அத்தனை கூட்டத்துக்குள்ளும்.