சின்னப்பையனாக இருக்கும்போது ஒருத்தன் சினிமா பார்த்துவிட்டோ அல்லது அம்புலிமாமா கதை படித்து விட்டோ சொல்லும் கதைக்கு ரவுண்டு கட்டி உட்கார்ந்துகிட்டு ஐந்தாறு பேர் வாய்பிளந்து கதைகேட்குற நினைவுல பதிவிலும் சினிமாக்கதை சொல்லி பார்க்கலாமேயென்று பார்த்தால் அண்ணாத்த விடமாட்டாங்க போல இருக்குதே!இரண்டு படத்துக்குத்தான் கதை சொன்னேன்.அதுக்குள்ள இன்டர்வெல் விடப்பான்னா என்ன நியாயம்?
நாம் கட்டிப்பிடி வைத்தியம் செய்வோம் என்று நினைத்தால் சிலர் முட்டிப் பார்த்திடுவோம் வாருங்கள் என்றே பதிவிடுகிறார்கள்.இதைக்கண்ட சிலருக்கு திட்டவும் கூடாது, கொட்டவும் செய்யனும் என்கிற சூத்திரம் தெரிவதுமில்லை. இதனால் எதிர் வாதம் கூட பலவீனப்பட்டுப் போகிறது.
குடித்து விட்டு வரும் ஆணை "அப்படி அதுல என்னதான் இருக்குதோ" என்று பெண்கள் திட்டுவது போல் மதம் என்ற சொல்லில் அப்படி என்னதான் இருக்குதோன்னு தெரியவில்லை.பொது விமர்சனம் செய்வதில் தவறில்லை.ஆனால் மதம் என்ற முகமூடி போட்டுக்கொண்டு மட்டுமே விமர்சிப்பேன் என்பது சரியாகப் படவில்லை.ஒரு சமூகத்தின் அவலத்தையோ அல்லது கோபத்தையோ வெளிப்படுத்தும் போது சில ஒப்பீடுகளையும் செய்து பார்க்க மறந்துவிடுகிறீர்கள்.வடிவேலு ஜோக்கு மாதிரி உனக்கு வந்தா ரத்தம்!எனக்கு வந்தா தக்காளி ரசம்ங்கிற மாதிரி இருக்கிறது உங்கள் பொது உலக மத வாதங்கள்.
விடுதலைப் புலிகளின் தவறுகளை விமர்சிக்கும் அதே வேளையில் அவர்களின் போராட்டம் எதற்காக என்ற ஆழ்ந்த சிந்தனையில்லாமல் கஜனிக்கு வந்த குறைந்த நேர மறதி சிண்ட்ரோம் எதற்காக?புலி படுத்தால் எலியும் ஏறி விளையாடும் என்பது ஏட்டு எலிகளின் எழுத்துக்களிலேயே பிரதிபலிக்கிறது. இன்று புலிகளின் எதிர்ப்பு சக்தியில்லை.இலங்கை அரசு மக்களுக்கு தீர்வுகளைக் கொண்டு வந்து விட்டதா?அதற்கான குரல் கொடுக்கும் மானிடம் உங்களிடமில்லையென்பது அறிந்ததே.ஆனால் குறைந்தபட்சம் மௌனம் கொள்ளலாமே!மாறாக காய்ந்த புண்ணைக் கீறிப்பார்க்கும் சுகம் கொண்டு உனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேன்டுமென்ற குரூர மனப்பான்மை எழுத்துக்களில் தலைவிரித்தாடுகின்றன.
விடுதலைப்புலிகள் இலங்கையில் வாழும் சிலரை அந்நியப்படுத்தியதில் மொத்த மதக்கோபம் கொள்ளும் பதிவுலக பத்தி!ஜீவிகள் காஷ்மீரிகளையும் மதம் என்ற பெயரால் இடமாற்றம் செய்ததை விமர்சிப்பதில்லை. விடுதலைப்புலிகளின் சுதந்திரப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினால் நீங்கள் பாலஸ்தீனியர்களின் விடுதலைப் போராட்டத்தை மதமென்ற பெயரில் ஆதரிக்கும் தகுதிகள் இழந்து விடுகிறீர்கள். இஸ்ரேலியர்கள் மேல் உள்ள கோபத்தில் ஈரான் ஜனாதிபதி ஹொலகாஸ்ட் என்ற ஒன்று நிகழவேயில்லையென்ற வாதத்திற்கு ஆதரவு தருபவர்கள் இலங்கையில் இனப்படுகொலை நிகழவேயில்லையென்ற ராஜபக்சே சகோதரர்களின் வாதத்திற்கு துணை போகிறீர்கள் என்று அர்த்தம்.
ராஜபக்சேக்களை விமர்சிக்கும் அதே வேளையில் தலிபான்கள் பாமியன் புத்தர் சிலைகளை இடித்ததை சுட்டிக்காட்டும் கலாச்சார விமர்சன புத்தியே சமூகம் சார்ந்த பார்வையாக இருக்க முடியும்.மாறாக அத்வானி குழுக்கள் பாபர் மசூதியை இடித்ததில் மட்டுமே உங்கள் கோபக் கண்கள் நிலைகுத்தி நிற்கும். இதையெல்லாம் விட சமூக கலந்துரையாடலில் மதம் பிடித்து தொங்கிக்கொண்டு பதிவுலகில் வெறுப்புக்களை கொண்டு வந்து உங்களை நீங்களே அந்நியப்படுத்திக் கொள்கிறீர்கள் பதிவுலகில் ஒருவர் முகம் ஒருவர் அறியாதவர்கள் அதிகம்.நாளை பொழுதொரு தினம் ஒருவேளை சந்திக்கும் சூழலில் உங்களுக்கு புன்முறுவல் காட்டும் நட்பை உங்கள எழுத்துக்கள் பதிவு செய்யவேண்டும்.அப்படி நிகழாவிடில் உங்கள் பதிவுகள் இணையத்தின் பொதுவுடமை சொத்தல்ல.
அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தகர்ந்ததில் மகிழ்ந்த தலிபானிசத்தனத்தை கைவிடுங்கள். இரட்டைக்கோபுரம் இடிந்தது கூட இஸ்ரேலின் சதியென்ற கான்ஸ்பைரசி தியரிக்கு ஆமாம் போடுவதெல்லாம் மதம் என்ற ஒற்றை நோக்கால் மட்டுமே.பழனிபாபாவைக் கூட ஒசாமாவுக்கு பக்க துணைக்கு அழைக்கிறீர்கள்.ஆனால் இருவருக்குமுள்ள வாழ்க்கையின் இரு பக்கங்களை பதிவு செய்ய தவறி விடுகிறீர்கள்.தேவையெல்லாம் மதம் என்ற தட்டைப்பார்வை மட்டுமே.திருமறை,திருக்குறள் நெட்டுரு செய்யும் தனி மனிதன் மீதோ கணீர் குரலில் பாடும் நாகூர் ஹனிபா,திருவாசகம் இசைக்கும் இளையராஜா, தேவாலயப் பாடல் மீதோ யாராவது விமர்சனம் செய்கிறார்களா? இல்லை...ஏனென்றால் அவை ஆன்மீகம் நோக்கிய அசரிரீக் குரல்கள்.
உங்கள் மீதுமட்டும் கோபத்தின் வெறுப்பு மேகம் மெல்லப்படர்வதை உணர்ந்தும் உணராமல் இருக்கிறீர்கள்.காரணம் மதம் என்ற பெத்தடினுக்கு நீங்கள் அடிமை.பெத்தடின் என்ன செய்யுமென்பதை கண்ணதாசன் இருந்திருந்தால் கடிதம் போட்டாவது உங்களுக்கு ஒரு கவிதை பாடச்சொல்லி அழைத்திருக்கலாம்.மதமென்ற தாகம் உங்களுக்கு அதிகமாக இருக்கலாம். அதற்காக பதிவுகளை வேடிக்கை பார்த்துகிட்டிருப்பவர்களையும் அழைப்பிதழை பொதுவில் ஏன் வைக்கிறீர்கள்?மேற்கத்திய நாட்டவனைப் பிடிக்காது, இஸ்ரேலியனைப் பிடிக்காது,இலங்கைத் தமிழனையும் பிடிக்காது.நீங்கள் பிடிக்க நினைக்கும் மீன்கள் எல்லாம் மதம் என்ற வலைக்குள் மட்டும்தான்.வலையில் மாட்டுவதோ கிணற்றுத் தவளைகள் மட்டுமே.
உங்கள் கோபங்களை மொத்தமாக இன்னொருவருக்கும் பாரமாக சுமத்துகிறீர்கள்.இனியும் உங்கள் எதிரிகள் இலங்கைத் தமிழர்கள் அல்ல! நிழல் யுத்தம் செய்யாதீர்கள்.வருங்காலம் வரலாற்றை எப்படி எழுதுமென்று இப்பொழுதே தீர்மானிக்க முடியாது.அதற்குள் ஏன் அவசரப்படுகிறீர்கள்?
இவ்வுலகு ரசனை பகிருங்கள்.அவ்வுலக தித்திப்பு உங்களுக்கே உரித்தாகுக.
டிஸ்கி!நான் தனிமனித தாக்குதலுக்கு சொந்தக்காரன் அல்ல.இந்தப் பதிவு முன்பு கோப பின்னூட்ட விவாதங்கள் செய்து களைத்துப்போன இரு தரப்பு நண்பர்கள் சார்ந்தோ எதிரானதோ அல்ல.பதிவின் பின்ணணி போரின் அவலத்தில் இருக்கும் மனிதர்களைக் கொச்சைப்படுத்துவதை இனியும் தவிர்க்கவே.பொது மானுடம் கற்போம்.