எல்லோரையும் வியட்நாமுக்கு சண்டைக்குப் போங்கடான்னு அமெரிக்க அதிபர் கட்டளையிட்டால் சண்டைக்கும் போகாமல் வாயையும் மூடாமல் "எனக்கு வியட்நாமிடம் சண்டையொன்றுமில்லை.ஒரு வியட்நாமியும் என்னை நீக்ரோ என்று கூறியதேயில்லை"
- உலகம் முழுதுமிருக்கும் கருப்பு மக்களை அடிமைப்படுத்தும் வெள்ளைக்கார அநீதி புத்திக்கு இதோடு ஒரு முடிவு ஏற்படவேண்டும்.10,000 மைல்களைக் கடந்து மனிதர்களைக் கொல்லவும்,எரிக்கவும் நான் போகமாட்டேன்
- நீக்ரோக்கள் என்றழைக்கப்படுவர்களுக்கு மனித உரிமையில்லாமல் நாய்கள் மாதிரி நடத்தப்படும் அமெரிக்காவிலிருந்து 10000 மைல் கடந்து போய் மாநிற மக்கள் மீது குண்டுகளையும்,புல்லட்களையும் போடுவதற்காக நான் ஏன் யூனிபார்ம் அணிய வேண்டும்?
பிலிப்பைன்ஸ் நாட்டு மணிலாவில் ஜோ ஃப்ராசியர் என்பவருடன் சண்டையிடுவதற்கு முன்பு முகமது அலி சொன்னது ""It will be a killa... and a chilla... and a thrilla... when I get the gorilla in Manila." (செங்கோவி!இதை நான் பீட்டர் விடாம தமிழில் எனக்கு சொல்லத்தெரியலை:))
இப்படி ராப் பாட்டு பாடுவதுமில்லாமல் ஜார்ஜ் ஃபோர்மெனுடன் குத்துச்சண்டை ரிங் வளையத்துக்கு செல்வதற்கு முன்பு வழக்கமாக குத்துச்சண்டை வீரர்கள் இடது,வலது புறமாக நடனமாடுவது மாதிரியே சண்டை போடும் ஸ்டைலில் தன்னைக்காத்துக்கொள்ளப்போவதாக சொல்லி விட்டு முதல் சுற்றில் ஒன்பது குத்துக்களை போர்மனுக்கு விட்டும் நாக் அவுட் செய்ய முடியாமல் இந்த டெக்னிக் வேலைக்கு ஆகாது என்று எண்ணி இரண்டாம் சுற்றில் தன் வாயே தனக்குதவியென்று ஜார்ஜ் ஃபோர்மெனைக் கோபப்படுத்தும் விதமாக வாய்ச்சொல் வீரராக ஜார்ஜ் விடும் குத்துக்கள் தனது முகத்தில் மட்டும் படாமல் அடிமேல் அடி வாங்கிக்கொண்டு தனது உடல் பலத்தை வளையத்தின் கயிறோடு சாய்ந்து கொண்டு அடிவாங்கிக் கொண்டும் திட்டிக்கொண்டும் ஏழு சுற்று வரை நின்றதைப் பார்த்த எனக்கு அலி தேறாத கேஸ் என்றே தோன்றியது.
இரண்டு அல்லது மூன்று சுற்றில் நாக் அவுட் செய்யும் ஜார்ஜ் ஃபோர்மெனால் 7 சுற்றுக்குள் தொடர் குத்து விட்டும் முகமது அலியை வீழ்த்த முடியவில்லை.இப்பொழுது எட்டாவது சுற்று.ஜார்ஜ் ஃபோர்மென் களைத்துப் போன நிலை.எட்டாவது சுற்று துவங்கிய சில நிமிடங்களிலே முகமது அலி விட்ட குத்து ஜார்ஜ் ஃபோர்மெனை நிலைகுலையச் செய்து கீழே விழ வைக்கிறது.எதிரியைக் களைக்க வைத்து கயிற்றில் தனது பலத்தை தற்காத்துக்கொண்ட அலியின் குத்துச்சண்டை நுட்பம் "The Rope-A-Dope" என குத்துச்சண்டையில் அழைக்கப்படுகிறது.
விடுதலைப்புலிகள் கிளிநொச்சியை விட்டு இலங்கை ராணுவ வீரர்களை உள்வாங்கும் திட்டம் கூட இப்படியான ஒரு போர்த்தந்திரமாக இருந்திருக்கலாம்.2008ம் வருட இறுதி கால 2009ம் வருட துவக்க காலத்தின் மழைச்சூழலும் கூட இலங்கையின் ஸ்டாலின்கிராடை உருவாக்கியிருக்க வேண்டியவை.போர் தந்திரங்களையும் முந்தைய வெற்றிகளையும் கடந்து இப்பொழுது பெருமூச்சு மட்டுமே மிச்சம்.போரின் தார்மீக நெறிகளை ராஜபக்சே குழு சீர்குலைத்த மாதிரி குத்துச்சண்டையின் முகத்தை மைக் டைசன் எதிரியின் காதைக்கடித்து உருமாற்றிவிட்டார்.
குத்துச்சண்டையின் உச்சத்தில் "I am the greatest" என்று சொல்லிக்கொண்டிருந்த முகமது அலி பிற்காலத்தில் சமாதான தூதுவனாக சதாம் உசேனிடம் போய் அமெரிக்க போர் வீரர்களை மீட்டுக்கொண்டு வந்ததும் தன்னை சமூக சேவகனாக மாற்றிக்கொண்டதும் வியப்பானாவை.பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு முகமது அலியும் கூட இப்பொழுது பழைய நினைவுகளில் வசந்த காலங்களை எண்ணிக்கொண்டிருக்க கூடும்.
