Followers

Monday, March 22, 2010

fish n chips ம் டக்கீலா வேதாளமும்.

அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் வித்தியாசம் என்னன்னா சந்தைபடுத்தும் நுட்பம்.நண்பர் விஜயராகவன் முன்பு வெளிநாடு போகும் போது அடிக்கடி லண்டனில் டேரா போடுவது வழக்கம்.அப்படி டேராவில ஒரு முறை ஒரு டை வாங்கி வந்து கொடுத்தார்(நம்மூர்ல ஒரு நல்ல ரேபான் கிளாஸ் இருந்தா வாங்கி வாயேன்னு சொல்ற மாதிரி).இந்த டைல என்ன விசேடமின்னா கழுத்த சுருக்கு போட்டு தொங்க விடவேண்டிய அவசியமில்ல.டை தொண்டைக்குழி கிட்ட ஒரு கிளிப் இருக்குது.கிளிப்பை வாயத் திறக்க சொல்லி ஒரு அமுக்கு அமுக்கினா டை கட்டுற வேலை முடிஞ்சது.ஆனா மூணு முடிச்சு டை சந்தைப்படுத்தலில் முந்திகிச்சு.
அமெரிக்கா KFCயை நல்லா சந்தைப் படுத்திடுச்சு.ம்!KFC சாப்பிட்டு பெப்சி குடிச்சேன்.ரொம்ப குண்டாயிட்டேன்,கொலாஸ்ட்ரல் அதிகமாயிடுச்சுன்னு கோர்ட் கேஸ் இருக்குது.ஆனா இந்த மாதிரி சண்டையெல்லாம் பிரிட்டிஷ்காரங்க fish n chipsன்னு ஒரு மெனு வச்சிருக்காங்க,அதுக்கு வரல.இது KFCக்கு ஒரு மாற்று எனலாம்.ஆனால் சந்தைப்படுத்தலில் பின் தங்கிடுச்சு.KFC ரெசிபி தங்கமலை ரகசியமாமே?உண்மையாவா?ஆனால் fish n chips (இனி இதை சுருக்கமா FNC ன்னு KFCக்கு போட்டியா வச்சுக்குவோம்.)அப்படியெல்லாம் ரகசியமானதல்ல.ஏன்னா அது எப்படி செய்றதுன்னு சொல்லப் போறேன்.



மீன் பொறிக்கறது எல்லாருக்கும் தெரியும்.ஆனால் மீனுக்கு மேக்கப் போடும் பேட்டர் என்னன்னு யாருக்காவது தெரியுமா?அது மைதா மாவு,முட்டை,குருமிளகு பவுடர்,பூண்டு கொழ,கொழன்னு அரைச்சது,உப்பு,
மேக் இட் ஸ்பைசிங்கிறவங்களுக்கு மிளகாய் தூள்,மஞ்சள் தூள்.இதையெல்லாம் பஜ்ஜி சுடறதுக்கு மாவு செய்யற பதத்துல மீனை முக்கி எடுத்து சூடான வாணலி எண்ணையில் வறுத்து எடுக்க வேண்டும்.இதற்கு முன் அதே எண்ணெயில் உருளைக்கிழங்கு வறுத்து எடுத்து விடுவது நல்லது.

இன்னொன்னு finger chips.நிறைய பேர் நினைக்கிற மாதிரி சுண்டு விரல் அளவுக்கு உருளக்கிழங்கு வெட்டி வறுத்தெடுப்பதல்ல.மீனையே சுண்டு விரல் அளவுக்கு வெட்டி வறுத்த ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து வறுப்பது.

இதுக்கு இரண்டு அல்லக்கைகள்.ஒண்ணு தக்காளி கேட்ச் அப்!மற்றது மயோனைஸ்.இது என்னன்னா முட்டையோட வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து ஒரு கைல விஸ்க்க இன்னொரு கைல மெல்ல மெல்ல எண்ணையிட்டு தயிர் மாதிரி கட்டிப்படுத்துவது.தயிர்ப்பதம் ஐஸ்ல வெச்ச பட்டர் மாதிரி ஆயிடுச்சுன்னா கொஞ்சம் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் விட்டு மிருதுவாக்குவது.சென்னையில்,மீன் கிடைக்கிற வேலாங்கண்ணி,சுற்றுலா விவேகானந்தர் பாறை,பாண்டிச்சேரி மற்றும் உல்லாசப்பயண இடங்களில் FNC மீன்கடை ஸ்பெஷல் கடை திறக்கலாம்.

குறைந்த பட்சம் மாறுதலா ஒரு நாள் வீட்டில் செய்து பார்க்கலாம்.இப்படியெல்லாம் சமையல் பகுதியில் யாராவது சமையல் சொல்லிக் கொடுத்திருக்காங்களா?இருந்தால் நான் என்று முன்னாடி வந்து தைரியமாக நிற்கலாம்:)

நண்பர் சொன்ன இன்னொரு தகவல்.

டக்கீலாவெல்லாம் வேதாள பானமாயிடுச்சாம்.
(அமெரிக்காவுல கூட ஷகிலான்னு ஒரு பானம் இருக்கறதா ஜெண்டில்மேன் ஒருவர் சொல்கிறார்:)

பிரிட்டிஷ்காரர்கள் உடல் சுகாதார ஆர்வத்திலோ,கஞ்ச பிசினாரித்தனத்தாலோ பியர் மட்டுமே குடிக்கிறார்களாம்.
செர்ரி மற்றும் பிளடிமேரி பெண்களின் பானமாம்
பிராந்தில கார்ல்ஸ்பெக் தண்ணி கலந்து குடிக்கிற ஆளும்,பிளாக் லேபில பேரர் கண்ணுக்கு முன்னாடி காட்டிட்டு கிளாசுல ஊத்தினாலும் ட்ரவுசர் பாக்கெட்ல காசு வச்சிருக்கிற ஆளாம்.

அதுசரிண்ணே!லண்டனப் பற்றி கேள்விப்பட்டதுல எது மப்பு எது தப்பு,அது சரின்னு ஒரு பின்னூட்டம் போட்டிடீங்கன்னா வேதாளத்துக்கு புண்ணியமா போகும்.நன்றி.

பிளாக்குறது தப்பா!

சலுன் கடைல தினத்தந்தி படிச்சோமா,போண்டா தின்னுகிட்டே எதுத்தாப்புல இருக்குற பொட்டிகடைல மாலைமுரசு நாலுவரி செய்தி படிச்சோமா,பஸ்ல போறப்ப அந்தக் குமுதத்த கொஞ்சம் குடுக்கிறீங்களா?ஊர் லைப்ரரியில படிக்க முடியாத அளவு பக்கங்களுடன் இருக்கும் கதைப் புஸ்தகத்தையெல்லாம் படிச்சு திருஞ்சுகிட்டுருந்ததுக,ராணி,குங்குமம்,ஆனந்த விகடன்னு தொடர்கதைய வெட்டி,வெட்டி பைண்டிங் செஞ்ச கிறுக்குகள்,லெட்டர் டு தி எடிட்டர்,இன்ன பிற(?)படிப்பாளிக,பார்வையாளர்களுக்கெல்லாம் வந்த வாழ்வப் பாரேன்!

மொக்கையுங்குது,கவிஜப் பாடுது,தொழிலு நுட்பத்துல இது புதுசுங்கோ சொல்லுது,வேலையிருக்குது போறீயா விசாரிக்குது,சமையல் செய்து பாரேன் ரெசூபி சொல்லுது, இன்னுங் கொஞ்சம் மேல படியேறி காஞ்சிபுர மடத்தப் பத்தி பேசுது,ஹுசைன் ஓவியம் பார்க்காதவங்களையெல்லாம் இந்த கண்றாவியப் பாருங்களேன் சொல்றது,சன் டி.வியும்,அல்லக்கை நக்கீரனும் ஏதோ ஒரு நாள் ரேட்டு பேசி வியாபாரம் செஞ்சா அதையே புடிச்சிகிட்டு தெரியாத ராஜசேகரனுக்கு காவியுடை போட்டு இவந்தான் அவன் பிலிம் காட்டறது.

என்னமோ போனா போகட்டும்ன்னு விட்டுட்டோம்.சொல் எடுத்து மூஞ்சிகளை முகமூடி போட்டுகிட்டு கிழிக்கிறது,போட்டும்,போடாமயும்,க(ற்)ருப்புக்கே களங்கம் விளைவிக்கிறதுன்னு அடிச்ச லூட்டிகளையெல்லாம் நாங்க வந்து ஏதாவது கேட்டமா?ஆனா கட்சி கோட்பாட்டை குலைக்கிறது,மக்கள் நல்லா இருக்கட்டுமேன்னு அஞ்சும்,பத்தும் கொடுத்தா அதப்பத்தி பொரணி பேசுறது,தலிவரு உங்களுக்கெல்லாம் எத்தன செஞ்சிருப்பாரு அதையெல்லாம் விட்டுட்டு ஒரு தொண்டரடிப் பொடியாள்வார் சொன்ன மாதிரி ஏதோ கட்டிக் காப்பத்துன கட்சி,குடும்பம் சிதைந்து போகக்கூடாதேன்னு நினச்சு எதிர்க்கட்சிக செய்யுற சூழ்ச்சிகளையெல்லாம் தாங்க முடியாம இலங்கைப் பிரச்சினையில குட்டைய கலக்குனா மீன் எப்படி பிடிக்கறன்னு பார்க்கிறேன்னு விட்ட ஒரு சின்ன விசயத்தையெல்லாம் பெருசு பண்ணி ஊதி விடறது,நெருப்பு இருக்குதான்னு பார்க்கறது இதெல்லாம் இல்லாம பின்னுட்டம் போடற பேர்வழிகள்ன்னு கூடி கூடி கும்மியடிக்கிறது.

மக்கள் ரேசன் அரிசி சமைச்சு சாப்பிட்டாங்களா,வேலைக்குப் போனங்களா களைச்சு வீட்டுக்கு வந்தா அவங்க பாட்டுக்கு சீரியல் பார்த்தாங்களா,சினிமா பார்த்தாங்களான்னு இருக்குற ஓட்டுப் போடற அப்பாவி ஜனங்களுக்கெல்லாம் இல்லாத அக்கறை உங்களுக்கெல்லாம் என்னய்யா வந்தது?பிளாக்கு!அதென்னய்யா பிளாக்கு?பிளாக்கிங்கிறதே கருப்புத்தான்யா!அதையெல்லாம்தான் பாரபட்ச மில்லாம எல்லாக் கட்சிக் கொடியிலயும் வச்சிருக்கிறோமே.இதுவும் பத்தாதுன்னு கவியரசர் வைரமுத்துவ கூப்பிட்டு கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலருன்னு பாட்டு வேற எழுதி பரிசெல்லாம் குடுத்திருக்கிறோமே?அப்புறமென்னய்யா நீங்க எல்லாம் வந்து புதுசா தாளிக்கிறீங்க?

ஓசுல இடத்தக் கொடுத்தா அதுக்கு வேற பட்டா போட்டு படமெல்லாம் போட்டு வெச்சுகிட்டு என் கடைக்கு வாங்க!இந்தக் கடைக்கு வாங்க,அந்தக் கடைக்கு போங்கன்னு எலிய கடிக்க விடறது!இதையெல்லாம் யார் கொடுத்தா?பேட்டை அண்ணாச்சி அமெரிக்காதானே கொடுத்தாரு?அவரு சொல்றதத்தானே நாங்க கேட்கிறோம்?நேத்து கூடப் பாரு இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தைய நிருபமா ராவ் கிட்ட சொல்லி ஹில்லாரி காதுல போட்டுட்டமில்ல?நீங்க எல்லாம் சொல்றதுனாலதானய்யா சிதம்பரம் மறுபடியும் மும்பாய்க்கு வந்தீங்கன்னா இனி திரும்ப அடிப்போம்ன்னு அறிக்கை விடறாரு.

எங்க பேச்சைக் கேட்பான்னுதான் ராஜபக்சேவுக்கு உதவினோம்,அந்தாளு என்னடான்னா இந்தியாவுக்கும் பெப்பே,தமிழ் நாட்டுக்காரனுக்கும் பெப்பேன்னு சீனாக்காரன்கூட போய் சேர்ந்துகிட்டான்.நாட்டு ரகசியமெல்லாமா போய் பிளாக்குல சொல்றது?அதுதானே நிருபமா ராவ அனுப்பி பேச்சு வார்த்தை நடத்துறோமே அப்புறம் என்ன?இப்பவெல்லாம் நாங்க சேர் எடுத்து அடிச்சிக்கிறதில்லை தெரியுமா?காமிரா இருக்குற பயத்துல மெச்சூர்டு ஆகிட்டோமில்ல!எங்களை எங்க வேலைய செய்ய விடுங்கய்யா! வேணுமுன்னா கொடியப் புடிச்சிகிட்டு போராட்டம் நடத்த அனுமதி தருகிறோம்.அப்பப்ப ஏதாவது கோசங்கள் எழுப்புங்க!பஞ்சம் பொழக்கப் போனவங்க லீவு,காசு வசதியப் பொறுத்து வந்து ஒழிக!ஒழிக சொல்லுங்க.வேண்டாமுன்னா சொல்றோம்?

இல்ல ஊர் ஊருக்கு தினத்தந்தி,குங்குமம்,குமுதம்,விகடன் படிக்கிறத விட்டுட்டு நாடு நாடா சுத்தறதுமில்லாம அப்பாவியா இருக்குற எங்க புள்ளைகளையும் கெடுக்கறது.அமெரிக்காவுல இப்படியாக்கும்,லண்டன்ல இப்படியாக்கும்,சிங்கப்பூர்ல அப்படியாக்கும்,துபாய்ல இப்படியும்,அப்படியுமாக்கும்ன்னு பிளாக்குதான் எழுதுவீங்கன்னு நினைச்சா இனிமேல் இன்னுமொரு இணைய புதிய சட்டம் வரைஞ்சிட வேண்டியதுதான்.அமைச்சர் பூங்கோதைகிட்ட சொல்லியிருக்குது.வருது உங்களுக்கெல்லாம் ஆப்பு.

இல்ல!அமெரிக்காவுல இணையம் பயன்படுத்தலும் தங்கள் கருத்தை சொல்றதும் மனித உரிமைகளில் ஒன்றுன்னு தீர்மானம் போட்டிருக்காங்க.எங்களுக்கும் மனுச உரிம வேணுமுன்னு கேட்டீங்கன்னா மவனே,தோ!நேரா சீனாக்காரன்கிட்ட புடிச்சுக் கொடுத்துடுவோம்.ஏன்னா அவன்கிட்டத்தான் கூகிளே கிடையாதே?அப்புறம் எப்படி பிளாக்குவீங்க அப்புறம் எப்புடி பின்னால பின்னால சுத்துவீங்க? ஏம்ப்பா தெரியாமத்தான் கேட்கிறோம்,மத்த மாநிலத்து பசங்க எல்லாம் உங்க மாதிரியா ஒண்ணா சேர்ந்து கும்மியடிக்கிறாங்க?அது யாருப்பா!தமிழ்மணம்?தங்கிலீஷ்?உங்கனாலதான்யா இந்த அப்பாவி பசங்க கெட்டுப்போறாங்க.

Sunday, March 21, 2010

தமிழக பட்ஜெட் 2010-11

முன்பெல்லாம் தமிழக பட்ஜெட் என்றால் அரிசி விலை ஏறிப்போச்சு,மைதா மாவுக்கு இவ்வளவு வரி என்ற சிகை அலங்கார கடைகளில் தினப்பத்திரிகை அலசலும்,சிகரெட் விலை ஏறிப்போச்சுப்பா பீடிதான் சுகம் என்றும்,இந்த மாசம் பையனுக்கு பீஸ் கட்டணும்,பொண்ணுக்கு ஒரு நல்ல வரன் அமைஞ்சிருக்கு பேசி முடிச்சாகனும் என்ற வளமான வாழ்க்கைக்கான செலவுகளும், லைசென்ஸ் ராஜ் காலங்களும்,ஆட்டோ ரிக்க்ஷாக்காரர்கள் மீட்டர் போட்டா கட்டுபடியாகாதுங்க மீட்டருக்கு மேல ரேட் சொல்வதும்,தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய் சமையல் கடலை எண்ணெய் நிரந்தர சமையலாய் தாளிக்கவும் அதே,ரசத்துக்கும் அதே என்றாகிப் போனது.வாழை இலை ஹோட்டல்களை நோக்கி பயணம் செய்ய எவர்சில்வர் பாத்திரங்களும் அதில் பெயர் போடச் சொல்லி அழகு பார்ப்பதும்,செய்திப் பத்திரிகைகளும்,வானொலியும்,வாய்மொழிச் செய்தியும் மட்டுமே தமிழக பட்ஜெட்.

அடுத்த கட்டமாக டூத் பேஸ்ட்,பவுடர் டப்பா போன்ற பொருட்களில் விலை+வரி என்று ஒட்ட வைத்து அதுவும் வரிகள் மாநிலம்,மாநிலத்துக்கு மாறுபடும்.லோடு ஏத்திட்டு போக முடியாதுங்க டீசல்,பெட்ரோல் விலை ஏறிப்போச்சு,நாளை லாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக்,நாடு தழுவிய வேலை நிறுத்தம் என்ற கம்யூனிச கொடிகளின் அணிவகுப்பு என இந்திய பட்ஜெட் எட்டிப்பார்க்கும்.

ஊர விட்டு வேற வந்தாச்சு,தொலைக்காட்சியும் நேரடியாக தகவல் தருவதால் 10-11க்கான தமிழக பட்ஜெட் எப்படியிருக்கும்ன்னு பார்த்தால்

அனைத்து தரப்பினரையும் அரவணைக்கும் பட்ஜெட்-தி.மு.க.

ம்!அம்மாவுக்கு புதிய சட்டசபைக்கு முறையா அழைப்பு விடலையே,பட்ஜெட்

திருப்தியில்லை வெளிநடப்பு செய்கிறோம்.அ.தி.மு.க மற்றும் சகலபாடி ம.தி.மு.க

விவசாயிகளுக்கு உரம் சலுகைய குறைச்சிட்டாங்க,விவசாய கடன் உதவி போன்ற சலுகைகள் இருக்குது-பாட்டாளி மக்கள் கட்சி.

கலைஞருக்கு பாராட்டுக்கள்- திருமாவளவன்

இப்படியொரு பட்ஜெட்டை நான் பார்த்ததேயில்லை-கி.வீரமணி

அன்னையின் ஆட்சியல்லவா?பட்ஜெட்டில் எங்களுக்கும் பங்குண்டு-காங்கிரஸ்

வாயே திறக்க மாட்டேன் - பி.ஜே.பி

காலை அலுவலகம் வரும்போது பி.பி.சி யில் ஒபாமா

"If you agree that the system is not working for ordinary families, if you've heard the same stories that I've heard everywhere, all across the country, then help us fix the system," - ஒபாமா.

அமெரிக்கா உலக அரசியலில் எவ்வளவு பேட்டை ரவுடியா நடந்துகிட்டாலும் உள்ளூர் அரசியலில் ஜனநாயக கருத்துக்களுக்கும் ,மக்கள் நலனுக்கும்,லாபியிஸ்டுகளுக்குமே முதலிடம்.மைக்கேல் மூரின் sicko டாகுமெண்டரி படம் பார்த்தவர்களுக்கும்,அமெரிக்கர்களுக்கும் மருத்துவ காப்புறுதி(இன்ஸ்யூரன்ஸ்)எப்படி செயல்படுகிறதென தெரியும்.இப்பொழுது வளைகுடா நாடுகளிலும் அதன் நகலாக அயல்நாட்டவர்கள் தாங்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனை சென்றாலும் செல்லாவிட்டாலும் விசாவை புதுப்பிக்கும் முன் ஒவ்வொரு வருடமும் மருத்துவ காப்புரிமையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஒபாமாவின் அரசு இந்த மருத்துவ காப்புரிமை சட்டத்தில் மாறுதலைக் கொண்டு வருவதற்கு முயல்கிறது.அதற்கு ஆதரவு சேர்க்கும் முகமாகவே இப்பொழுதுள்ள காப்புறுதி செய்யாத சாதாரண மக்கள் மருத்துவ உதவிகளை நாட முடியாது என்றும் அதற்கான மாற்றங்களை கொண்டு வர உதவி செய்யுங்கள் என்றும் கேட்கிறார்.

இப்ப தமிழக பட்ஜெட்டுக்கு திரும்பினால் நிலைமை என்ன?பள்ளி இறுதி வகுப்பு பாஸா?பெயிலா?ரிலிஸானாத்தான் தெரியும்.அந்த மாதிரி நிதியமைச்சர் சொன்னதுக்கப்புறம்தான் இங்கே சிறப்பு அங்கே நொள்ளை தெரியும்.முதலீடுகளின் பங்கீடு,பொருளாதார வளர்ச்சி போன்ற காரணங்களால் முன்பு போல் பற்றாக்குறை பட்ஜெட் இல்லாமல் ஓரளவுக்கு அனைத்து துறைகளையும் திருப்திபடுத்தி விடும் பட்ஜெட்டை நிச்சயம் இப்பொழுது தந்து விடலாம்.அதனால் ஏனைய கட்சிகளின் கருத்துக்களின் பங்களிப்பையும் கேட்டு பட்ஜெட் வெளியிடலாமே?கணக்கு போட்டு செலவு செய்வதற்கு முன் மாற்றுக்கட்சியின் கருத்துக்களையும் கேட்டு பட்ஜெட் வெளியிட்டால் வெளி நடப்பு போன்ற சம்பவங்கள் நிகழாமல் தவிர்க்கலாமே.அதே நேரத்தில் எதிர்க்கட்சியும் மக்களால் தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு வருபவர்களே அவர்களின் ஆக்க பூர்வமான கருத்துக்களையும் கேட்டறியலாமே.(பிரிட்டன் காலத்து சட்டமுறைகள் இதற்கெல்லாம் இடம் தராது போன்ற காரணங்கள் ஏதாவது இருந்தால் அறிந்தவர்கள் சொன்னால் புரிதலுக்கு உதவும்.)சட்டசபையே புதியதாகும் போது சட்டமன்ற உறுப்பினர்களும் புதியதாக.....ஸ்டாலின் அவர்களே!உங்களிடமிருந்தாவது தொடங்கட்டும் புது மாற்றங்கள்.

என்னது தேர்தல் வரப்போகுதா?

(ஒரு சட்டமன்றக் குரல்: ஆமாய்யா!அங்கன உட்கார்ந்துகிட்டு வக்கணையா எழுதிப்புடுவே.இங்க வந்து வெந்து பார்த்தாதானே தெரியும் துண்டை தக்க வைக்கிற தில்லாலங்கடி சிரமம்)

Friday, March 19, 2010

ருத்ரன் என்ற பழுத்த பழம்

தலைப்பு சொல்ல வினாடிகள் கூட எடுத்துக் கொள்ள வில்லை.தலைப்பை தொட்டதும் தொடர்கிறேன்.இரண்டு,மூன்று வருடங்கள் பதிவுலகை வலம் வந்தும்,அவ்வப்போது சில பின்னூட்டங்களும் கூட அங்கே இங்கேயென்று இவர் பற்றி தெரியாமலே(இன்னும் தெரியாமலே)கருத்துக்களின் அடிப்படையில்.

விவாதங்களால் தர்க்கம் செய்ய இயலாத போது ஒன்று முகமிலிகளாகவோ அல்லது தமது நம்பிக்கைகள் சிதைக்கப்படும் கோபத்தின் வெளிப்பாடாகவோ சிலருக்கு எழுத்துக்கள் எண்ணங்களின் பொது உலக வெளிப்பாடாக பதிவு செய்யப்படுகிறது.

விளையாட்டு பிள்ளைகள் என்ற எண்ணத்திலோ பதிவுலகின் சில நேரத்து எழுத்து சண்டைகளின் காரணமாகவோ சிலர் பதிவுலகம் உற்றுக் கவனிக்கப்படுகிறது என்று சொந்த முதுகை தட்டிக் கொண்டாலும் இன்னும் பதிவுலகம் தமிழ் நேசிக்கும் வாசகர்களை பரந்து செல்லவில்லை என்றே தூர தேசத்திலிருந்து என்னால் கணிக்க முடிகிறது.

இந்த நிலையிலும் மருத்துவர் ருத்ரன் போன்ற எழுத்துக்களின் சொந்தக்காரர்கள் பதிவுலகில் வலம் வருவது மகிழ்ச்சியைத் த்ருகிறது.நாகரீகமான எழுத்துக்களை முன் வைத்தும் இவர் மீது அவ்வப்போது எறியப்படும் சொற்கற்களின் மூலங்கள் என்ன?

எம்.எஃப்.ஹுசைன் கத்தார் இந்திய தூதரகத்தில் இந்திய கடவுச்சீட்டை திருப்பி தந்த நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் இப்பொழுது தங்கள் கருத்துக்களை விட கோபங்களை அதிகம் வெளிப்படுத்துகிறார்கள்.அவர் ஓவியம் வரைந்ததை விட கத்தார் குடிமகனாகி விட்டது மனரீதியாக பலரையும் விமர்சன மேடைக்கு அழைத்து வருகிறது.

இதன் துவக்கமாக எனது பார்வையில் பட்ட எம்.எஃப்.ஹுசைன் இடுகைகளில் ருத்ரனின் ஓவியப் பார்வையே காணக்கிடைத்தது.அதனைத் தொடர்ந்து அவருடைய தளத்திலோ அல்லது அவரவர் தளங்களிலோ காணக்கிடைக்கும் முதிர்ச்சி இல்லா ருத்ரனின் எதிர்வினைக்காரர்களின் கோபம் தர்க்கம் என்பதை கடந்து முகமிலிகளாக வலம் வருகிறார்கள்.

இந்து பாரம்பரியம் காக்கிற முகமூடி போட்டிருப்பவர்களின் முகத்திரை விலக்கிப் பார்த்தால் அய்யோ பாவம் எனத் தெரிகிறது.இஸ்லாமிய பத்வாக்காரர்களுக்கு நிகரான இந்து சொல் பத்வாக்காரர்களும் இருக்கிறார்கள் என்பதை

Feel free, Mr Husain. Go paint Qatari leaders

என்ற சோ ராமசாமியின் டெக்கான் ஹெரால்ட் தலைப்பு வாசகங்கள் சொல்கிறது.உங்கள் கோபம் ஓவியமா?ஹுசைனின் கத்தார் குடியுரிமையா? தமிழகத்தின் சிறந்த அரசியல் விமர்சகர் என்ற துக்ளக் வட்டத்துக்குள் நீங்கள் அழகாகவே தெரிகிறீர்கள்.ஆனால் ஹிந்துத்வா முகம் வேண்டாமே வளைகுடா வட்டத்துக்கு.அது நீண்ட எதிர்கால பின் விளைவுகளை உருவாக்கும்.

மீண்டும் ருத்ரனின் பார்வைக்கு வருவோம்.

(தஞ்சை பெரிய கோயிலில் சிலையின் கலையம்சத்தின் அழகில் மயங்கி வாங்கி வந்தது.சுருக்கப்படுவதற்கு முன் அதன் முழு தோற்றத்தின் 100% அடோபின் நோக்கில் கேமிராவின் பிரமிப்பு இன்னும் நீள்கிறது.)

ருத்ரனின் ஸரஸ்வதி மீண்டும் நமஸ்துப்யம் இடுகையை படித்ததால் கிளிக்கியது.

Wednesday, March 17, 2010

கோபி கிருஷ்ணன்

இந்த இடுகை ஒரு நாள் எழுதி கொஞ்சம் மேய்ந்து ஆராய்ந்து விரிவாக்கம் செய்யலாமேங்கிற நினைப்பில் கிடப்புல போட்டது.அதற்குள்ள சாரு நிவேதிதாவுக்கு வைரஸ் காய்ச்சல் வந்து அவரது எழுத்தெல்லாம் காணமப் போய் கூடவே ராஜசேகரன் மாதிரி ஆட்களும் காணமப் போகிற அளவுக்கு வந்து விட்டது.அதற்கும் முன்பு ஒரு நாள்.....

தமிழ் மணம் மேய்ந்து விட்டு அங்குமிங்கும் சுற்றிவிட்டு ஒன்றும் தேறாத காரணத்தாலும், வாசிக்கும் நேரம் இருந்த காரணத்தாலும்,கட்டுடைப்பு எழுத்தின் மீது பேராவல் இல்லாது போனாலும் சாருவின் கோணல் பக்கங்களில் போய் உட்கார்ந்து கொண்டேன்.மனுசன் எங்கே யதார்த்தப்படுகிறார்,எங்கே ரீல் விடுகிறார் அல்லது கனவு(பென்டசியை) கையாளுகிறார்,எங்கே தன்னை முன்னிறுத்தும் சுய எழுத்துக்கு தாவுகிறார்,எங்கே உண்மைக்கு திரும்ப வருகிறார் எது உண்மை எது பொய் என்ற குழப்பமான புரிதலிடனூடே கட்டுடைப்புக்களை முதலில் கையாண்டது தானும்,கோபி கிருஷ்ணனும்தான் என்று கோபி கிருஷ்ணன் பற்றி (கோபி கிருஷ்ணனும் நானும் வரம்பு மீறிய பிரதிகளும்) சொல்லிய வரிகளும்(யாரங்கே?இன்னுமா சாருவ நம்புறீங்கன்னு முணுமுணுக்கிறது:) அதனைத் தொடர்ந்த ஜ்யோவரம் சுந்தருக்கான இணைப்பும் வாசிப்பின் ஒரு புதிய அனுபவத்தை தந்தது.

ஜ்யோவரம் சுந்தருக்கான தொடுப்புக்கள்:


1. http://jyovramsundar.blogspot.com/2009/04/1.html


2. http://jyovramsundar.blogspot.com/2009/04/2.html

3. http://jyovramsundar.blogspot.com/2009/04/3.html


4. http://jyovramsundar.blogspot.com/2009/04/blog-post_21.html


இவை வாசிப்பின் வேகத்தை கூட்டியது.யூமா வாசுகியின் மழை என்ற இதழுக்காக கோபி கிருஷ்ணனை நேர்காணல் கண்டதை வழக்கமான நேர்காணல் கேள்வி பதில் நடையில் இல்லாமல் ஒரு சுயசரிதை வாழ்வின் துவக்கம் முதல் ஒரு நடுத்தர வயதுக்காரனுக்கான வாழ்வின் அனுபவமாய் தன்கதை சொல்லி முடிந்திருந்தது.

வாழ்வின் இளமையும், கூச்ச சுபாவ வளர்ப்பும்,கல்லூரிக் காலங்களும்,பட்டப் படிப்பில் பொருளாதாரம்,ஆங்கில இலக்கியம்,உளவியல் மூன்றில் உளவியலைத் தேர்ந்தெடுத்தலும் அதனைத் தொடர்ந்த சமூக உளவியல் தேடுதலும்,காதல் வயப்படுதலும்,வேலையில் நிலையாமை,சோகங்கள்,வடுக்கள்,மன அழுத்தம்,குடும்ப வாழ்வின் சிக்கல்கள் என்று சராசரி போராட்டங்களுக்கும் அப்பால் கோபால கிருஷ்ணன் எழுத்தின் மீது கொண்ட தாகம் மனதை கட்டிப் போட்டு விடுகிறது.அதிலும் மனச்சிதைவு ஏற்பட்டவர்களுடன் பேசும் நேர்காணல் குறிப்புக்கள் மனவியல் சார்ந்து ஆய்பவர்களுக்கு உதவும்.

கோபி கிருஷ்ணன் வார்த்தை தேடலில் கைவிரலுக்குள் எண்ணி விடும்படியாக கண்ணுக்கு சிக்கியவர்கள் ஜ்யோவரம் சுந்தர் தவிர்த்து (கோபி கிருஷ்ணனின் இணையம் சார்ந்த நேர்காணல் வாசிப்பு அவருக்குரியது) அய்யனார்,சாரு,திண்ணை,ராமகிருஷ்ணன்,உயிர்மை,சொல்வனம்
என தேடலின் தூரம் அதிகமானது.

கோபி கிருஷ்ணன் போன்ற பல முகங்களை முந்தைய மெட்ராஸின் அண்ணாசாலையின் நீண்ட இருபக்க வேக நடைகளிலும் பலரும் சந்தித்திருக்க கூடும்.முகவரி இல்லா முகங்களுக்குள்ளும் ஒவ்வொரு கதை இருந்திருக்கும்.ஆனால் யாருடைய கதைகளையும்,முகம் நோக்கி கதை தேடும் நேரமில்லா மெட்ராஸ் நல்ல சென்னை.கோடம்பாக்கத்தில் வெற்றி பெறாத கதைகள் எல்லாம் திரைக்கு வராமல் ஒருவன் எழுதிய எழுத்து மேன்சன்களிலோ அல்லது மனதின் அடித்தளத்திலேயே அமுங்கிப் போயிருக்கும்.

ஆனால் ஒருவன் எழுத்தின் முகவரி சொல்லியும் ஒவ்வொருவரின் வாழ்வாதார தேடலில் முகமிழந்து போன மனிதனாக கோபி கிருஷ்ணன்.எழுத்தாளர் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் ஏதோ தங்களால் இயன்ற பணத்தை சேகரித்து ஒரு சிறிய தொகையை கோபி கிருஷ்ணனின் இறுதிச் சடங்கு காலத்தில் அவரது குடும்பத்தார்க்கு தந்தார்கள் என அறிய முடிகிறது.அதற்கு பின் அந்தக் குடும்பம் என்னவாயிற்று என்பது கோபி கிருஷ்ணனின் குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த கதை.

கலையுலகம் வாழ்த்துவதற்காகவும்,தானும் கலைத்துறையைச் சார்ந்தவன் என்பதற்காகவும் திரைப்படத்துறைக்கு செய்யும் உதவிகள் அளவுக்கு இல்லா விட்டாலும் தானும் ஒரு எழுத்தாளன் என்ற வகையில் கோபி கிருஷ்ணன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் கருணாநிதி உதவினால் மகிழ்ச்சியாக இருக்கும்.

கோபி கிருஷ்ணனை அறியத் தந்த ஜ்யோவரம் சுந்தருக்கு நன்றி.