Followers

Sunday, May 31, 2009

கமலா தாஸ்

கமலா தாஸ் என்ற கவிதாயினியும் எழுத்தாளரும் கமலா சுரய்யா ஆனது எப்படி என்பதற்கான கேள்வியும் வாழ்வியல் அழகின் உச்சத்தை தொட்ட பல பிரபலங்களும் இஸ்லாமிய மதத்தை தழுவுவதற்கான காரணம் என்ன என்பதும் ஆராய வேண்டியவை.ஆனால் பதிவு அதைப் பற்றியது அல்ல.தொலைகாட்சி பெட்டி ரிமோட்டை கிள்ளிய போது கமலாதாஸின் நேர்காணல் மலையாள மக்கள் தொலைக்காட்சியில் (People) நிகழ்ந்து கொண்டிருந்தது.ஓர் பெண் குழந்தையாக,பதின்ம வயதுப் பெண்ணாக ,திருமண வயதுடையவளாக ,வாழ்வியலைப் புரிந்தவளாக,முதுமையின் அழகில் அமர்ந்தவளாக ஒரு முழுப் பெண்ணின் வாழ்க்கையை இல்லறத்தோடும்,இலக்கியத்தோடும் வாழ்ந்து முடித்திருக்கிறார் கமலாதாஸ்.

நான் மலை,ஆறு,குளம்,மரம்,செடி,மலர்கள் என்று கவிதை பாடி சுற்றித்திரிந்த காலம் வசந்தகாலம் என்று நேர்காணலில் குறிப்பிட்டார்.இவரை இந்தியப் பத்திரிகை ஊடகங்களுக்கு புயல் மாதிரி அறிமுகப் படுத்தியது 70பதுகளில் எண்ட கதா என்ற சுய சரிதை.Men are pretend to be shocked when reading என்ற கமலாதாஸ் எனது சுய சரிதையில் எனது ஆத்மாவை தேடாமல் எனது உடலின் மொழிகளை மட்டுமே வாசிப்பாளர்கள் தேடினார்கள் என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.அனைத்துப் பெண்களும் கதைகள்,கட்டுரைகள் மட்டுமே எழுதிய காலத்தில் கவிதையை காதலித்த ஒரே பெண் கமலாதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப கட்டுக்கும் அப்பாற்பட்டு தான் காதற் வயப்பட்ட ஆண்களை பெயர்கள் கூறாமல் விவரித்தார்.உதாரணத்திற்கு, தனக்கு சமஸ்கிருதம் தெரியாமல் சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தவர் மீது ஈர்ப்பு வந்தது என்றார்.(Kate winslet நடித்த 2008 ன் ஆஸ்கார் சிறந்த நடிகைக்கான பரிசாக The Reader என்ற திரைப்படம் மனதில் வந்து போனது).

தனக்கு எப்பொழுதும் உயரமான ஆண்களையே பிடிக்குமென்றும் ஒரு முறை கலந்து கொண்ட விருந்தில் குள்ளமாக ஒருவர் வந்து தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டு பேச்சின் இடையில் சொன்ன சரமாரியான கவிதைகளால் அவர் மீது அன்பு கொண்டதும் குறிப்பிட்டார்.அவரது கணவர் தாஸ் "Meet my wife Poet Kamala Das" என்று நண்பர்களுக்கு கௌரவ அறிமுகம் செய்து வைத்ததை பெருமிதத்தோடும் குறிப்பிட்டார்.

விருந்துகள் பற்றியும் மது அருந்துதல் பற்றியும் குறிப்பிடும் போது தான் ஏன் மது அருந்துகிறேன் என்றும் விருந்துகளில் மது அருந்துவது எப்படி என்பதற்காகவுமே அருந்துவதாகவும் ஜெயகாந்தன் எங்கோ குறிப்பிட்டது நினைவுக்கு வந்து போனது.மது அருந்துவதை மேற்கத்தியவர்களிடம் கற்றுக் கொண்டதாகவும் 1 பெக் அல்லது 2 பெக் மட்டுமே அளவு என்றும் இந்தியர்கள் பாட்டிலின் இறுதி சொட்டு வரை குடிப்பதை நிறுத்துவதுமில்லையென்றும் சொன்னார்.

தனக்கு அறிமுகமான பரந்த நட்பு வட்டாரத்தையும் எழுத்தாளர்கள்,நாடகவியளர்,மார்க்சீய சிந்தனைவாதிகள்,கவிஞர்கள் என்று அனைவரையும் நினைவு கூர்ந்தார்.வீட்டில் நாடகக்குழுக்களாய் 100 பேருக்கு மேல் கலந்து உரையாடித் திரிந்ததை நினைவு கூர்ந்தார்.தனது கணவரின் வங்கி பதவிக்கான காலம் முடிந்து வருமானத்திற்காக வேண்டி columnist ஆக எழுதி குழந்தைகளையும் குடும்பத்தையும் நடத்த வேண்டியது பற்றி சொன்னார்.

ஒரு பெண்ணாக எழுத்தாளராக ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாகவும் தனது இறுதி நாட்களை தன்னை எப்படி அடக்கம் செய்யவேண்டும் என எழுதி வைத்திருப்பதாகவும் கிருஷ்ணனைப் பற்றிக் கவிதை எழுதிக் கொண்டே இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட கமலா தாஸ் என்ற கமலா சுரய்யா எழுத்தாளர் போலி சமூக கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து பெண்ணியம் பற்றிய ஆண் வர்க்கத்துப் பார்வையை புரட்டிப் போட்டு வாழ்வியலை நிறைவு செய்துள்ளார்.

நேர்காணலை நிறைவு செய்யும் போது நேர்காணல் என்பதை மறந்த அவரது நினைவுகளின் நாட்களில் மூழ்கியிருந்தது நீண்ட பேச்சின் தொனியில் தெரிந்தது.

இந்தப் பதிவு அவரது எழுத்துக்கும் சமூகத்தில் தனக்குப் பிடித்த கவிதை,எழுத்து,வாழ்க்கை என்று சமரசம் செய்து கொள்ளாத போலியற்ற வாழ்க்கைக்கும் சமர்ப்பணம்.

ஸ்டாலின் vs அழகிரி

நீண்ட காலமாய் தொடர்ந்து அரசியலில் தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ள ஸ்டாலின் தி.மு.க வின் வாரிசு அரசியலுக்கும் சட்ட அமைப்பில் இடம் இருந்தால் கருணாநிதியின் காலத்திலேயே முதல்வராவதற்கும் தி.மு.க சார்பில் முழு தகுதியுடையவரே.அதற்கான வெள்ளோட்டமாக முன்பே இளைஞரணி ஊர்வல மகுடம் சூட்டப்பட்டும் உள்ளது.எனவே கலைஞர் கருணாநிதி தனது வயதின் இயலாமையால் ஓய்வெடுக்க விரும்பினால் ஸ்டாலின் அரியணையேறுவதும் சரியே.

இதுவரை தமிழக வரலாற்றில் துணை முதல்வர் பதவி உருவாகியிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.அப்படி உருவாகியிருந்தால் அந்த மரபு வழியில் துணைமுதல்வர் பதவியில் தவறில்லை.அப்படியில்லாமல் இது புதுக்கலாச்சாரமாக தமிழகத்தில் முதல்வரின் மகன் என்ற முறையில் உருவாகுகின்றது என்றால் இந்தப் பதவி விமர்சனத்துக்குரியது.அதே வேளையில் கவர்னர் இதனை அங்கீகரித்திருப்பதும் இதில் சட்டத்திற்கு இடமிருக்கிறதென்றும் கருதவேண்டியிருக்கிறது.எனவே ஸ்டாலினின் நீண்ட அரசியல் வாழ்வில் பதவி உயர்வு என்பதை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம் என்பதை உங்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் பயனுடையதாகும்.

கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கும் மதுரை கலாச்சாரத்துக்கு முத்திரையாகவும் பணத்தால் ஓட்டுக்களை வாங்கி ஜெயித்து விட முடியும் என்று நிரூபண அரசியலுக்கும் உருவாய் வந்துள்ளார் மத்திய அமைச்சர் அழகிரி.தனிமனிதனாக இவர் நல்லவனாகவும் அதன் காரணமாகக் கூட மதுரை இவர் வசம் வந்திருக்கலாம்.அது ஊடகங்களில் முன்னிறுத்தப் படாமல் போயிருக்கலாம்.ஆனால் அழகிரி என்றவுடன் ஆட்டோ என்ற முத்திரை எப்படி வந்தது எனத் தெரியவில்லை.இது அவரது தனிக் குணநலன்களா அல்லது மதுரை என்றவுடன் நினைவுக்கு வருவது இன்றைய தமிழக சினிமாவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பெரும்பங்கும் கலையின் மேல் உணர்ச்சி வசமான காதலும் அரிவாள் கலாச்சாரத்தின் ஊற்றாக மதுரை விளங்குவதும் அழகிரியின் தனிக்குணமாக மாற்றப்பட்டிருக்கலாம்.

நேற்று அபிஅப்பாவின் விமானத்தை தவறவிட்ட தமிழக மாணவர்களுக்கு அழகிரி உதவியதாக சூடான இடுகை காண நேர்ந்தது.மக்கள் மனோபாவங்கள் ஒருவரின் பொய்த்தோற்றங்கள் எப்படி கட்டமைக்கப் படுகின்றன என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் அந்த இடுகை.டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் காலம் காலமாக எத்தனையோ தனிமனிதர்களாலும் தமிழக மத்திய அமைச்சர்களாலும் ஊடகத்தின் வெளிச்சத்துக்கு வராத எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கலாம்.ஆனால் பெயர் தெரிந்த ஒரு தனிமனிதனுடைய முகத்துக்குப் பின் இருக்கும் பலவீனங்கள் நிறை குறைகளை எடை போடாமல் துதிபாடும் துவக்க விழா நடத்துவது பலவிதமான பரிமாண எழுத்துக்களை பார்வையிடும் பதிவர்களுக்கு நல்லதா?

இடுகைகளிலும் இணைய திரட்டிகளிலும் பகுத்தறியும் சந்தர்ப்பங்கள் அமைபவர்களே ஓரப்பார்வை பார்க்கும் போது அன்றாட பிரச்சினைகளில் அல்லல் பட்டு வீட்டுக்கு வந்தால் திரைப்படமும் சீரியலும்தான் உலக நிகழ்வுகள் என காட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நுகர்வோர்களை குறை சொல்வதிலும் அவர்கள் மீது தேர்தல் தோல்விகளின் கோபங்களை காண்பிப்பதிலும் என்ன நியாயம் இருக்க முடியும்?

அமைச்சர் அழகிரியின் செயல்திறனை விமர்சிப்பதற்கும் ஏனைய தமிழக அமைச்சர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதற்கும் முதல் 100 நாட்கள் என்ற அமரிக்க அரசியலை இந்தியாவும் கடன் வாங்கிய நாட்களுக்குள் கணிக்கலாம்.

டிஸ்கி: எந்த தனிமனித விருப்பு வெறுப்புக்களுக்கும் கட்சிகளுக்கும் அப்பாற்பட்ட இடுகை.

Friday, May 29, 2009

Modern Holocaust - மே 2009ன் மீள் பதிவு

தெற்காசியாவின் மூலையில் மிதந்து கிடந்த இலங்கை தீவை பிரபாகரன் உலகின் வரைபடத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். போரின் இறுதி நாட்களின் அவலங்களையும்,மர்ம முடிச்சுகளின் உண்மைகளையும் தமது காரண காரியங்களுக்காக மறைத்தோ பொய்களினால் நிரப்பி விடும் அபாயம் தொடர்கிறது.இன்னும் உலக ஊடகங்கள் அனுமதிக்காத நிலையிலும் அங்கொன்றும் இங்கொன்றும் உண்மை தன்னை முகம் காட்டிக் கொண்டுள்ளது.இதில் சோகம் என்னவென்றால் சில மைல் தூரங்களில் நின்று கொண்டு தமிழகம் உதவ இயலாமல் மௌனம் காப்பது.

உலகப் போரின் ஹிட்லரின் கொடுமைக்கு சாட்சியாய்


இலங்கைப் போரின் ராஜபக்சேவின் கொடுமைக்கு சாட்சியாய்


எல்லாம் முடிந்து விட்டது என்று பறை சாற்றிக் கொள்ளும் இலங்கை அரசு புதிய அரசியல் தீர்வுகளுக்கான நம்பிக்கையைத் தராமல் மக்களை முட் வேலிகளுக்குள் அமர்த்தி மனித உரிமை ஓட்டெடுப்பிலும் வெற்றி முகம் காட்டுகிறது.இதுவரை காலனிக்காரனாய் இருந்தவர்கள் ஓரளவுக்காவது மனிதநேயம் பற்றிய அனுதாபம் காட்டுவது தெரிகிறது.சுதந்திரம் பேசிய மார்க்சீய நாடுகள் தங்கள் சுய முகங்களை காட்டியிருக்கின்றன.

மேற்கத்திய நாடுகளாய் ஐரோப்பா மற்றும் அமெரிக்க பத்திரிகைகள் மெல்ல உண்மைகளைப் பேச ஆரம்பித்திருக்கிறது.இவை இலங்கை அரசின் சுயமுகத்தை உரித்துக் காட்டும் என நம்புவோம்.இதிலும் Bruce Fein கொண்டு வரும் நீதிமன்ற வழக்கிலும் கூட இலங்கை அரசு ஜெயித்து விடும் சாத்தியம் இருக்கலாம்.ஆனால் பூகோளமாய் தனக்குத் தானே தனது இறையாண்மையை பாகிஸ்தான்,சீனா,இந்தியா என்ற மூன்று துருப்புச் சீட்டுகளிலும் போரில் அடகு வைத்து விட்டது.இதிலும் கூட மூன்று சீட்டுக்காரனாய் கால நிலைக்குத் தக்கபடி கண்ணாமூச்சி ஆடலாம்.ஆனால் பக்கத்து கரையாய் தமிழகம் காத்திருக்கிறது இன்று அரசியல் காரணங்களுக்காக தோல்விகளால் துவண்டு போன போதிலும்.இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் காங்கிரஸ் தவிர தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஈழம் குறித்த மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை தேர்தல் அரசியல் நிலைப்பாடுகளால் பிரிந்து நிற்கும் சோகம் நினைவுக்கு வருவதைத் தவிர. மாநிலப் பிரச்சினைகளில் கருத்து வேறுபாடும் வெளியுறவு கொள்கையில் ஒருமித்த கருத்தும் என இரு வேறு நிலைபாடுகள் நமக்கு அவசியம்.நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலகச் சூழல்,தமிழக அரசியல் சூழல் மாறும் காலம் வந்து கொண்டிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

உண்மையான தூரப்பார்வை அரசியல் இருக்குமானால் இலங்கை அரசு தனக்குத் தானே சூழல்களை பாதகமாக மாற்றிக் கொள்வதை விட மக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தட்டும்.நிலத்தில் உழைத்தும்,மீன் பிடித்தும் தனது வீட்டை இருக்கும் மரம்,பனைகளை வைத்து மீள் கட்டிக் கொள்வார்கள்.அதற்குப் பின் அவர்களை சக மனிதர்களாக நடத்துவதும் இரண்டாம் தரக் குடிமகனாய் மீண்டும் மாற்றுவதும் பற்றி யோசிக்கட்டும்.இவைகள் எல்லாம் நிகழாத பட்சத்தில் மக்களின் எதிர்காலம் குறித்த பார்வையில் ஒருமித்த கருத்துக் கொண்ட புதிய அரசியல் அமைப்பு தோன்றுவது அவசியமாகிறது.அது தாய் மண்ணுக்குள்ளா அல்லது புலம் பெயர்ந்தா என தீர்மானிக்க வேண்டியவர்கள் மண்ணின் மைந்தர்களே.

படங்கள் கொண்டு வந்த இடங்கள்

1)http://history1900s.about.com/library/holocaust/blpictures.htm

2) சயந்தனின் துயரப் பதிவு : http://sajeek.com/?p=263

Wednesday, May 27, 2009

செஞ்சிலுவை சங்கம்

குஜராத் பூகம்பத்திற்கு அள்ளிக் கொடுத்த தமிழகம்,கார்கிலுக்கு குரல் கொடுத்த தமிழகம் கடல் எல்லைக்கு சில மைல் தூரத்திலிருக்கும் தமிழனுக்கு குரல் கொடுத்து மட்டும் நின்று விட்டோம்.போரில் அனைத்தும் இழந்த மக்களுக்கு உதவும் விதமாக நம்மால் ஏதாவது செய்யவேண்டும்.உதவிகளை ஏற்றுக் கொள்ள செஞ்சிலுவை சங்கம் தனது கரங்களை நீட்டி வரவேற்க தயாராக உள்ளது.

இப்போதைய தேவை நீர்,உணவு,உடை,இருக்க இடம்,மருந்து,மருத்துவம்.இதற்காக வேண்டி தமிழகம் எப்படியாவது உதவி செய்தாக வேண்டும்.சேர,சோழ,பாண்டியர்களின் பெருமை பேச நிறைய இருந்தாலும் ஒற்றுமையில்லா உறவுகள் மாதிரி இப்போதும் கொள்ளுப்பேரன்களாய் பல கட்சிகளாய் தோன்றி நவீனம் நம்மை சுற்றி இறுக்கும் கயிறுகளின் மென் அழுத்தங்களின் வலிகள் தெரியாமல் பிரிந்து கிடக்கிறோம்.

போரின் அவலங்களுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவும் விதமாக கலைஞர் தலைமையில் கலைஞரின் சுயநல விமர்சனங்களை
தள்ளி வைத்து அணி சேர்வோம்.காரணம் தற்போதைய சூழலில் போரால் அவதியுறும் மக்களுக்கு அரசாங்க பூர்வமாகவும்,அங்கீகாரத்துடனும் அதே சமயத்தில் வன்னி மக்களுக்குப் போய்ச் சேர்க்க வேண்டிய சக்தியும் கடமையும் அவரிடம் மட்டுமே உள்ளது. ஹைதர் அலி காலத்து (40 வருடம்) அலி என்னும் கப்பல் உதவிக்கு வர தயாராக இருக்கும் போது கப்பல் ஓட்டிய தமிழன் பேருக்கு தமிழகமும் மனிதாபிமானத்துடனாவது உதவட்டும்.(கடல் என்ற கருவி இதுவரை நமக்கு பாதுகாப்பு என்ற நிலை போய் இப்பொழுது எதிரியா நண்பனா என்ற விவாதத்தை எழுப்புகிறது.)

திரைப்படம் சார்ந்தவர்கள்,நட்பு நிலையில் நிற்கும் திருமா,கனிமொழி போன்றவர்கள் செஞ்சிலுவை முயற்சியாக கலைஞரை அணுகலாம்.

It's a hard nut to crack but can be achieved.Hope helping cannot be visualized as interfering into a country's sovereignty.

Tuesday, May 26, 2009

இனி மனிதம் மட்டுமே பேசுவோம்

போர்களினால் இடம்பெயர்ந்த எந்த மக்களும் பல திசை நோக்கியே பயணித்திருக்கிறார்கள்.ஒரு திசை நோக்கி நகர்ந்த மனித நகர்வுகள் என்று யோசித்தால் எனக்குத் தெரிந்து பைபிளின் மோசஸ் பின்னால் கடலுக்கு அருகே சென்ற இஸ்ரேல் வம்சத்தாரும் பிரபாகரன் பெயரால் நதிக்கரை நகர்ந்த ஈழத்து தமிழ் மக்கள் மட்டுமே.இரண்டுக்குமே கடல்கள் சாட்சி சொன்ன,சொல்லும் நிகழ்வுகள்.முந்தைய சரித்திரத்தை மெய்ப்பிக்கவென்றே இன்றும் பிரமிடுகள் அசையாமல் நின்று கொண்டிருக்கின்றன.இப்போதைய சரித்திரத்தையும் சாட்சிக்கு அழைக்கவென்றோ என்னவோ திருவள்ளுவன் சிலையாக நின்று கொண்டிருக்கிறான்.

இன்றைய மனிதர்களும் அவர்களைச் சார்ந்த நிகழ்வுகளும் கால ஓட்டத்தில் மறைந்து விடும்.ஆனால் வரலாறு நிகழ்வுகளை தன்னிடத்தே தக்க வைத்துக்கொள்ளும்.மக்கள் வேறு,புலிகள் வேறு என்ற கூற்றுக்கள் எல்லாம் இறுதிப் போரின் அவலங்களில் பொய்யாகிப் போய் இருக்கின்றன.போரின் வெற்றிகள் இலங்கைக்கு பலத்தையும் அதன் தெற்கு திசையில் கொண்டாட்டங்களையும் தருகிறது.சிங்கள மக்களின் கொண்டாட்டங்களை விமர்சிப்பது தவறு.அது இனம் சார்ந்த, மண் சார்ந்த மனித இயல்பு.ஆனால் நாம் விமர்சிக்க வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன.

போருக்கும் அப்பால் தமிழர்களுக்கான தீர்வாக இலங்கை அரசு எந்த தீர்வை உலகின் முன் வைக்கிறது?அப்படி வைக்கும் தீர்வுகள் எல்லாருக்கும் உடன்பாடு உள்ளதாக இருக்குமா?இப்போது நிகழும் புலம்பெயர்ந்த மக்களின் போராட்டங்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன?இவர்களுக்கான எதிர்காலத்தை எப்படி முன்வைக்கப்போகிறது?புலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லியே பயங்கரவாதியாகிப் போன இலங்கை அரசு தமிழர் மனதால் பட்ட காயங்களை எப்படி ஆற்றப் போகின்றது?இல்லை இவை காயங்கள் அல்ல வெறும் கீறல்களே என்று கருணா சாட்சியம் சொல்ல வருவாரா?

இலங்கை அரசுக்கு தன்னை நிரூபித்துக் கொள்ளவும் அப்பாவி மக்களின் துயரங்களைப் போக்கவும் உடனே செய்ய வேண்டியது பொதுமக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்துவதே.அது தவிர்த்து ஸ்கிரீனிங்க் என்பது இருக்கும் மனிதர்களை இல்லாமல் செய்வதற்குரிய உள்நோக்கமாகவே இருக்கும்.அமெரிக்கா செய்ததையே நானும் செய்கிறேன் என்று சொல்லும் இலங்கை அரசுக்கு அமெரிக்கா மாட்டுக்கொட்டில்களாய் எங்கும் மனிதர்களை முட்கம்பிக்குள்ளும் கூடாரங்களிலும் அடைத்து வைக்கவில்லை.

மடியில் கனமில்லை பயமில்லையென்றால் அனைத்துலக ஊடகங்களையும் சுதந்திரமாக அனுமதிக்கட்டும்.முன்புதான் ஊடகவியளாலர்களின் உயிருக்கு உத்தரவாதம் தர இயலாது.இப்போதைய தடைக்கான அவசியம் என்ன?உண்மைகள் இலங்கை அரசு சார்பாக இருந்தாலும் உலகின் முன் தெரியட்டும்.

இதுவரை பாலஸ்தீனியன் மாதிரி இருந்த ஈழத்தமிழன் அவனையறியாமலேயே யூதனாகிப் போனான்.ஈழத்தமிழா!மனிதம் பேசு.அறிவும்,திறமையும்,வீரமும்,பொருளும் உனக்குள்ளே நிறைந்து கிடக்கிறது.(இது புகழ்ச்சிக்கான வார்த்தை இல்லை இரு மொழியின் வரலாறுகள் இப்போதே கண்முன்)

ஒன்று சேர்.கட்டமைப்பு நடத்து.கதைகளை,கனவுகளை,புலம்பல்களை அகற்று.உலக நண்பர்களைச் சேர்.நிதர்சனம் காண்.வரும் சந்ததிக்கு நல்வாழ்வினை மாற்று.

(கடலுக்கும் அப்பால் இருக்கும் சகோதரத் தமிழனுக்கு உனக்காக வேண்டி குரல் மட்டுமே எழுப்ப முடியும்.கோஷங்களே வாழ்க்கையாகிப் போன எங்களுக்கு இது மட்டுமே சாத்தியம்.ஆனாலும் இந்த நீண்ட கோஷங்கள் மட்டுமே உனக்கு இழந்த வாழ்க்கையை மீட்டுத்தரும்.)