Followers

Tuesday, January 5, 2010

புவி வெப்பம்

2012 எண்களில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம்.ஆனால் தண்ணீர்!தண்ணீர் பஞ்சம் கே.பாலச்சந்தர் சினிமாப் படம் எடுத்தும்,பின் தமிழக,கர்நாடகா காவிரிப் பிரச்சினையாக விசுவரூபம் எடுத்து காவிரி போலவே வளைந்து நெளிந்து,கூனி குறுகி,குமுறி,அகன்று பின் சோர்ந்தும் போனது.(தூசு தட்ட ஆள் இல்லாத காரணத்தால்)யானை கட்டி நெல் உதிர்த்த காலம் தொட்டு நெல்வயல் உழவு டிராக்டர் வரை உண்பது தவிர மாற்றங்கள் நிறையவே வந்து விட்டது.

நீர் கொதிக்க மின்சாரம்,எரிபொருள் எதுவும் தேவையில்லை.வளைகுடா நாடுகளின் வெப்பத்தில் குளிர்நீர் சுடுநீராகவே மாறிவிடுகிறது.மாதங்களில் மார்கழி தனது சுய அழகு இழக்கிறது.இதுவரை மழைக்காலம்,குளிர்காலம்,கார்காலம்,கோடைக்காலம் என்ற காலங்கள் மருவி சூடான ஒரே காலம் என்ற தனித்துவ பெருமை வந்தடையும் காலம் மிக சமீபத்தில்.

மைக்கேல் ஜாக்சன் தனது கீச்சுக்குரலில் "த்ரில்லர்" பாடிய ஆல்பத்தின் புகழ் மழைக்காடுகளின் அழிப்புப் பற்றிச் சொன்ன "பூமி பாடல்"(earth song)க்கு இல்லாமல் போனது.இதுல மைக்கேல் ஜாக்சனுக்கு நேர்ந்த கொடுமை என்னன்னா பூமி பாடல் U.K யில் வெற்றி பெற்றும் U.S.A யில் அந்த நேரத்தில் வெளியிடாமல் போனது.உயிரோடு Forest Destruction பற்றி சொல்லும் போது ஸ்டியரிங்,பிரேக்கால் தாளம் போட்ட அமெரிக்க கரங்கள்,கால்கள் மைக்கேல் ஜாக்சன் இறந்தபின் அவரது சமாதி Forest lawnக்கு கண்ணீர் வடித்தது.

விமானம் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்குப் போட்டியாக 1912ம் வருடம் உருவாக்கப் பட்ட ஆஸ்திரேலியா அண்டார்டிகா ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப் பட்ட விக்கர்ஸ் விமானம் அண்டார்டிக்கா பனியில் விபத்துக்குள்ளாகி இப்போதைய வெப்பத்தின் துணையால் மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டது.அமெரிக்காவில் வருடா வருடம் ஏதாவது புதுப்பெயர் சூட்டிக்கொள்ளும் புயல் காத்ரீனா விபத்துக்குப் பின் இன்னுமொரு புதுப்பெயருக்காக ஏங்கிக் காத்திருக்கிறது.தாமதத்தின் காரணம் புவி வெப்ப மாறுதலா?

டிசம்பர் 26ன் சுனாமியின் கோரங்கள் வடுக்களாகி தசாவதாரம் பிரமிப்போடு மூழ்கிப் போனது.இரண்டு எவரெடி குண்டு பேட்டரியில் இயங்கிய வானொலி சத்தம் மட்டுமே கேட்ட விஞ்ஞான அதிசயத்தின் காலத்திலும் வாழ்வின் நிகழ்வுகள் நகரத்தான் செய்தது.பணம் பற்றாக்குறை,உணவு,உடைப் பஞ்சம் மீறிய வாழ்க்கையில் ஸ்விட்சை போட்டால் பல்ப் எரியும் அத்தியாவசியமும் கிடைத்ததை நொறுக்கும் புத்தகத்தீனியும் தவிர்த்து வில்லனாக மெல்ல நுழைந்தது தொலைக்காட்சி.கம்பிப் பின்னல்களில் வித்தை காட்டிய தொலைக்காட்சிக்கு பக்க வாத்தியமாக வந்து நுழைந்தது வி.சி.ஆர்.அப்பொழுதும் "ஸ்டேண்ட் பை" யின் வெப்பக் காற்று உறுத்தவில்லை.பின் திருட்டு டி.வி.டி,வி.சி.டி இன்னும் பல...இன்னும் பல....

ஸ்டேடிக் மின்சாரம் என்ற முதல் வார்த்தை கணினிப் பொட்டி கண்டுபிடிப்பில் பிரபலமானது.ரெமிங்க்டன் பழைய வார்த்தையும் டொக்,டொக் கேட்ட சத்தமும் மறந்து ஓய்ந்து போனது.மெல்லிய இசையாய் கணினியின் பரிசமும் எலி வாலும் வித்தியாசமான அனுபவமாயிற்று.ஸ்டேடிக் மாத்திரைகள் உடலில் ஏற்படுத்தும் ரசாயன விளைவுகளா இல்லை பருத்தி உடை மாற்றங்களில் வந்த பின் விளைவுகளா தெரியவில்லை உடைக்குள்ளும் மின் ஒளிகள் தென்பட்டன.பக்கத்தில் இருப்பவனைத் தொட்டால் ஷாக் ஆனான்.வாக்மேன் தொலைந்து MP3 ஆட்டம் போட்டது.டிஜிட்டலின் சூறாவளிக் காற்று.சொல்லிக் கொண்டே போகும் நீளமாய் டிஜிட்டலின் ஆக்கிரமிப்பு.

விஞ்ஞான கண்டுபிடிப்புக்களின் மேம்பாடும் கணினி தொடாமல் அதன் ரகசியம் புரியாமல் யதார்த்தமாய் தானும் நகைத்து நகைப்பின் அலையை அருகில் உள்ளோருக்கும் அள்ளித் தெளித்த எகிப்தியன் தட்டுத் தடுமாறி கணினி விளையாட்டைத் தொட்டு இப்போது முகத்தில் சிரிப்பில்லாமல் போனான்.தனி மனித மாறுதலுக்கும் அப்பால் அனலும்,புகையும் கக்கும் தேசங்களின் பொருளாதாரக் குழாய்கள் வான் நோக்கி புகைந்து கொண்டிருக்கிறது.சில இடங்களில் ரத்த மழை பெய்கிறது.வளைகுடா யுத்தத்தில் மேகங்கள் கருப்பாகி மழையின் நிறம் கருப்பானது.மனிதர்களின் பூமி பலாத்காரம் அளவில்லாமல் போனது.ஹாலிவுட் படத்து கற்பனையாக மட்டுமில்லாமல் நோவா ஆர்க் ஒன்றை யதார்த்தமாய் இப்பொழுதே கட்ட ஆரம்பிக்கலாம்.

எனக்கு ஏன் இந்த வெட்டிப் புலம்பல் என்றால் டிசம்பர்,ஜனவரி குளிர் காலத்தில் கண் மட்டுமே குளிர்க் காற்றை பரிசித்த அனுபவம் கடந்த காலமாகிப் போயிற்று.சுகமோ இதமில்லையோ சொல்லத் தெரியவில்லை.ஆனால் வருடா வருடம் வந்து விட்டுப் போகும் குளிர்கால இயற்கை நிகழ்வு இந்த வருடம் காணாமல் போனது.இதோ தேதி ஜனவரி 5 2010.விதி விலக்காய் குளிர் காலத்திலும் இப்பொழுது ஏர்கண்டிஷன்.மேல்கோட்டு அணியாத கோடை காலத்து உடையணிந்து அலுவலகம் நோக்கிய பயணம்.பூமி வெப்பமாவதின் நிதர்சனத்தை இப்பொழுதே காண்கிறேன்.எதிர்கால சந்ததிக்கு நிறையவே சம்பாதித்து வைத்துள்ளோம்.

Thursday, December 31, 2009

புத்தாண்டு நலம் வாழ்த்துக்கள்

2010 வருடம் அவதாரின் ஐமேக்ஸ் அதிசயங்களுடன் துவங்குகிறது.அதற்கு முன் திரும்பிப் பார்க்கும் போது வருடத்தின் 2009ன் துவக்கம் ஈழம் குறித்த குரல்கள்,போராட்டங்களுடனும் கூடவே கருணாக்கள் வரலாற்றை மாற்றி எழுத துணை போனதின் சோகத்துடன் இலங்கை அரசின் ரத்த வெற்றிகள் உறுதி செய்யப்பட்டு விட்டது.

பின்னோக்கி நினைத்துப் பார்த்தால் தமிழகத்தைப் பொறுத்த வரை இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பிறகு தமிழ் மொழி என்ற கோட்டைத் தாண்டி தமிழ் இனம் என்ற வட்டத்துக்குள் தேசங்களின் பலத்தால்,ஐ.நா என்ற ஒப்புக்குச் சப்பாணியால் தமிழன் என்ற மனித இனம்,அதன் பூர்வீக மண் ரத்தபூமியாகி விட்டது.உரிமைக்காக எழும்பிய குரல்கள் இப்பொழுது ஈனஸ்வரத்தில் முகாரி மட்டுமே பாடுகிறது.

மிதமிஞ்சி பருகிய அரசியல் சோமபானம் குழு குழுவாய் பிதற்றல்காரர்களாக தெளிவில்லா மயக்க போதையில் தள்ளி விட்டது.பல பரிமாண போராட்டத்தில் அவரவர் மங்கிய கண்ணுக்கும் வாய்ப் பிதற்றலுக்கும் தோன்றியதை பரிமாறிக் கொண்டோம்.சோகங்கள் குறைந்தபாடில்லை.ஆனாலும் எழுதப்படா தீர்ப்புக்களின் பாதையில் இனி நடந்தே ஆகவேண்டிய நிர்பந்தத்தில்,எதிர்காலத்தில் ஏதாவது வாழ்வாதாரத்தைப் பற்றிக் கொண்டே பயணித்தே ஆகவேண்டிய வாழ்வியலில்,மாறுதல்களை மாற்ற இயலாத வலிமையின்மையில்,இருப்புக்களை வைத்தே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய சூழலில் ஆஹா!அவனில்லாத வாழ்வில் இதோ பார் கிழக்கே உதயம்!வடக்கே வசந்தம் என்ற குரல்களும் எழத்தான் போகிறது.

எதை இழந்தோம் என்ற சோகங்களை ஜீரணித்துக் கொள்ள இன்னும் காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை.இதோ!இப்பொழுதே நானும் குரல் கொடுத்தேன் என்று பதிவு செய்து விட்டு அவரவர் அன்றாடங்களை நோக்கி நகர்ந்து விட்டோம்.தேச வல்லூறுகளின் பிடியில் யாவரும் திணறிக் கொண்டிருக்கிறோம்.உலகளாவிய மனிதர்களாய் பரந்து இருந்தும்,கொடிகளை தூக்கி குரல் கொடுத்தும்,உயிர் கொடுத்தும் சாத்வீகப் போராட்டங்கள் தோற்றுப் போனதன் காரணம் என்ன?

இலண்டனில் நிகழ்ந்த மனித போராட்டங்கள் வெற்றியைத் தராது என்ற தீர்ப்பை முன்பே ஜார்ஜ் புஷ் பெரும்பான்மை குரல்களையும் மீறி ஈராக் மீது படையெடுத்ததன் மூலம் எழுதியது 2003ல்.இப்பொழுது யோசிக்கும் போது மனதுக்குப் படுவது அரசு என்ற அமைப்பில் மனிதப் போராட்டங்களை அடக்க நினைத்தால் அவை வன்முறைகளை விதைக்கின்றன.அடக்காதே!குரல் கொடுத்து சோரட்டும் என்று அரசமைப்பு நினைப்பது இன்னொரு நுட்பம்.குரல் கொடுப்பவனை இரு பகுதியாக்கி மோத விடு என்பது இப்போதைய புதுநுட்பம்.அதுவும் அரசியல் கற்றுத் தேர்ந்த சாணக்கியர்களுக்கு இதுபற்றியெல்லாம் சொல்லித் தரவேண்டுமா என்ன?

முந்தைய கால கட்டங்களுடன் ஒப்பிடும் போது ஓரளவுக்கு பட்டினியில்லா வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுவிட்டோம்.தொடர்ந்த தொட்ட தொண்ணூறு போராட்டங்களிலும் சோர்வடைந்த காரணத்தாலும் இப்பொழுது நுகர்வு கலாச்சாரம் இனிப்பதாலும் சராசரி வாழ்க்கையில் எந்தப் போராட்டமும் வெற்றி பெறுவதில்லை.ஒரு நாள் போராட்டம்,மூன்று நாள் உண்ணாவிரதம்(கூடவே மூன்று மணி நேர உண்ணாவிரதம்)பின் சமரசப் பேச்சு கொடுக்கல் வாங்கல் எனவும் போராட்டங்கள் ஓய்ந்து போய் விடுகின்றன.

ஆனால் சகாப்தங்களை தொட்ட போராட்டமாக விளைவுகள் எப்படியாகிப் போயிருந்த போதிலும் இதோ நமது வாழ்நாளின் கண்முன்னே.அதன் வளைவு நெளிவுகள்,ஏற்ற இறக்கங்கள்,நன்மை தீமை,மகிழ்ச்சி அழுகை,பன்னாட்டுப் பார்வையின் கோப நட்புக் கரங்கள்,ஐ.நாவின் இயலாமை அயோக்கியத்தனம் எனவும்,தேசங்களின் நலன்கள் என்ற பேராசைகளும்,உயிர் மண்ணுக்கு என்ற மந்திரமும் கூடவே ரத்தவெறி விமர்சனமும்,இரு இனங்களின் தம் இருப்பை நிலைநாட்டிக் கொள்ளும் கட்டாயமாய்ப் போய் விட்ட போர்,தியாகங்கள்,மனித இழப்புக்கள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் என புதிய வால்மீகியோ,கம்பனோ,பாரதியோ,கண்ணதாசனோ எழுதி வைப்பதற்கு காவியம்,வரலாறு எழுதி வைப்பதற்கான அத்தனை கூறுகளும் கொண்ட நிதர்சனமாய் மண்ணும் அதன் மைந்தர்களும் இந்த காலகட்டத்தில்.கால ஓட்டத்தில் பெரும்பான்மை மறைந்து விடும்.ஆனால் ஈழம் தமது வரலாற்றை இலங்கையில் ஏதாவது ஒரு விதத்தில் சொல்லிக்கொண்டே இருக்கும்.குடுகுடுப்பை ஜக்கம்மா ஒரு முறை சொன்ன மாதிரி நிறைய பெத்துக்கங்க!இழப்புக்களை சரிசெய்ய இதுவே மருந்து.

எப்பொழுதோ போட்ட விதையாக இப்பொழுது விருட்சம் கொண்டு திரிகிறது பொருளாதாரச் சரிவு.அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டம் கண்டால் அத்தனை நாடுகளும் ஆட்டம் காண வைக்கும் சீட்டுக்கட்டு வித்தையை கொண்டிருக்கிறது உலகமயமாக்கல்.வளைகுடாக்களில் பல கட்ட(ட)மைப்புக்களில் அகல கால் வைத்த துபாய் மட்டுமே கடன் கேட்டு கையை நீட்டுகிறது.குவைத்தில் ஒரே ஒரு வங்கி இரண்டு நாள் கதவைச் சாத்திக் கொண்டது.அரசு பெயில் எடுத்து விடுவித்தது தவிர ஏனையவர்கள் அவரவர் நிலையை ஓரளவுக்கு தக்கவைத்துக் கொண்டே உள்ளனர்.சராசரி மனிதர்களின் சராசரி வாழ்க்கை வித்தியாசமின்றி விலைவாசிகள் அதிகரிப்பையும் தாங்கிக் கொண்டே நகர்கிறது.

அமெரிக்கப் பொருளாதாரம் அடிவாங்கினாலும் ஒபாமா அதிர்வுகளை ஓரளவுக்கு உலக நிகழ்வுகளை சமாளித்து செல்வது வரவேற்கத் தக்கதே.அப்படியிருந்தும் மனித இன வெறுப்பாளர்களாய் விமானம் கடத்துவது,ஜட்டிக்குள்ளும் குண்டுப் பொடி தூவி கொல்வதே எமது குறிக்கோள் என்ற மறை கழன்ற மனிதர்களும் சுற்றித் திரிகிறார்கள்.நேற்றைய பத்திரிகையில் ஒரு ஜட்டியும், ஜட்டிக்குள் தூவிய குண்டுவெடிப்பு பவுடரும் படமும்,செய்தியும் போட்டிருந்தார்கள்.படச்செய்தி பார்த்த அந்தக் கணத்தில் தோன்றியது அடப்பாவிகளா!இனி அங்கேயும் ஸ்கேன் தானா போ.இன்றைக்கு செய்தியில் டச்சுக்காரர்கள் இனி முழு உடலும் ஸ்கேன்தாண்டி ன்னு விளம்பரப் படுத்திட்டாங்க.(எனக்கெல்லாம் கோவா பீச்சுல குளியல்(குளியல்ன்னே போட்டுக்கறேன்,பின்ன அதுக்கு வேற யாராவது சீ!நிர்வாணமான்னு விவகாரம் கிளப்பிட்டா),ஹாஸ்டலில் ராகிங்க்ல ரயில் விட்ட பழக்கமெல்லாம் இருக்குது.கவலைப்பட வேண்டியவர்கள் ஜட்டியோட நிற்பது பத்தி கவலைப் படும் கோவி.கண்ணன் போன்ற அந்நிய நாட்டுக்காரர்களே:)கோவி!சும்மா!லூலாயி!இன்றைக்கு உங்க பதிவு பார்த்த ஞாபகத்துல).

இந்த சுதந்திரமிழப்பிற்கெல்லாம் அடிப்படை தேடினால் மதம் என்ற மதம் என்ற அகண்ட உலகளாவிய காரணம் மதம் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளும் காலகட்டத்திற்கு மனித இனம் வந்து விட்டது என்பது தெளிவாகிறது.தமிழ் இணைய நண்பர்களுக்கு நற்குடியும்,கவிதைகளும் விவாத களமாய் வருட இறுதியாகிவிட்டது.மாதக் காளான்களாய் எத்தனை விவாதங்கள் சூடாகிப் பின் தணிந்து போனது.இதுவும் குளிரும்.இந்தச் சுற்றில் மாட்டிக் கொண்டவர்கள் பெண்களாய் இருக்கும் காரணம் கொண்டும்,மௌனமாய் கவனித்த காலங்களில் மனதாலே துரத்தப்பட்டவர்களும் நிறைய பேர். வீடு,அதன் சூழல்,அலுவலாக உழைக்க வேண்டிய கட்டாயம் அனைத்தையும் கடந்து பெண்கள் சமூக அக்கறை கொள்வதென்பதே பெரிய விசயம்.அப்படியும் கருத்துப் பரிமாறல்களுக்கு சிலர் துணிந்து வரும்போது துரத்தியடிக்காமல் வரவேற்கட்டும் ஆணாதிக்கம்.ஒரு இடுகையின் பொருள் அதன் பின்னூட்ட பரிமாணங்கள் என்று எவ்வளவு ஆழப்படுகின்றன? விவாதத்துக்கு வித்தாகும் இடுகையில் சொல்ல வந்த கருத்தை விட தூண்டி விடும் பின்னூட்டங்களே ஒரு இடுகையின் பலமும் பலவீனமும்.இங்கே தீ வைத்து பலவீனம் கொள்ளச் செய்தது ஒரு பின்னூட்டமே எனபது அதுசரியின் இடுகை நோக்கும் போது புரிகிறது.

அனுபவமாய் இந்த வருடம் எனக்கு வாய்த்தது மிக நெருக்கமாய்த் தெரிந்த மூன்று பேர் எந்த வட்டத்துக்குள் சிக்காமல் கூட கிறுஸ்தவனாய் மனம் திரிந்து போனது.சுயபுத்தியாலும்,பைபிளைப் படித்தேன்....இனித்தது அதனால் நான் மதம் மாறிவிட்டேன் என்று சொல்லியிருந்தால் கூட மகிழ்ந்திருப்பேன்.ஆனால் மதமாற்றம் ஒன்றே தொழிலாய் மனதர்களின் பலவீனங்களை அறிந்து கொண்டு அதற்காய் வலைவீசித் திரிகிறார்கள் சில இந்தியர்கள்.அதில் மாட்டிக்கொண்ட மின்மினிப் பூச்சிகளாய் இவர்கள் மாறிப்போனது கவலையை மட்டுமே தருகிறது.நேற்று வரை எந்த வித அடையாளங்களுமில்லாமல் மனிதர்களாய் அன்றாட வாழ்க்கையின் பிரச்சினைகளை மட்டுமே நோக்கி நடைபோட்ட இவர்களுக்கு திடிரென்று அங்க அடையாளங்கள் தோன்றி விட்டன.இவர்களுக்கான சட்ட சிக்கல்களைத் தீர்க்க இந்திய அரசாங்கமோ அதன் தூணான தூதரகமோ எந்த உதவியும் செய்யவில்லை.தூதரக உதவியில் பலனில்லாமல் மனம் சோர்ந்த நிலையில் கடவுளைத் தேடினவர்கள் இவர்கள்.குடும்பத்துடன் இங்கேயே வாழ்ந்து பழக்கப்பட்டுப் போன காரணம் கொண்டும் விசாவின் காலம் முடிந்து போனது தவிர இவர்கள் மீது குற்றமேதுமில்லை.பிரார்த்தனை என்ற கூட்டு மந்திரத்தில் இவர்கள் தம்மை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.எனது கவலையெல்லாம் இவர்களின் குழந்தைகள் மதம் என்ற மாயையில் நிலை தடுமாறிப் போகும் எதிர்காலம்தான்.இப்படி ஏதாவது ஒரு கோட்டில் ஒரு கால கட்டத்தில் இடம் மாறுதல், பழக்க வழக்கங்கள்,படையெடுப்புக்களின் ஆதிக்கம் என எல்லோரும் மதம் என்ற வலைக்குள் சிக்கியே விடுகிறோம்.ஜேம்ஸ் கேமரானின் அவதார் ஐமேக்ஸ் 3D ஜாலங்களுடன் ஃபெண்டசி,தொழில் நுட்ப பரிசோதனைகளை செய்து கொண்டாலும் கதையின் கருவாக போர் என்ற அழிவில் இனம் எப்படி மாற்றப்படும் ஒரு மெல்லிய இழை ஓடிக்கொண்டிருக்கிறது.

இணையம் வரமா?சாபமா என்ற குழப்பமாக வலை தவிர கற்றுக்கொடுக்கும் சிறந்த ஆசான் இல்லை என்ற மகிழ்வும்,எத்தனை எத்தனை மூளைகளின் பின்னல் எனும்போது பிரமிப்பு ஒரு பக்கமும்,பிரமிப்பை காலை வாரிவிடவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்வுகள் நிகழவே செய்கிறது.ஒன்றுமே அறியாமல் கண்ணை மூடிக்கொண்டால் பூனைச் சந்தோசமாய் உலகம் இருண்டு அறியாமையே சந்தோசம் என்ற ஆங்கில வார்த்தைகளின் அர்த்தமும் உண்மையாகிப் போய் விடுகிறது.ஆனால் தேடல் என்ற தாகம் மட்டும் இணையம் சுற்றியும் சுற்றாமலும் வருவதை தவிர்க்க இயலவில்லை.


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Monday, December 28, 2009

அவதார்க்குப் போட்டி

எல்லோரும் அவதார் பற்றி பேசிகிட்டு இருக்கையில் முக்கியமா ஹாலிவுட் பாலா அசத்தும் எழுத்து நடையில் படத்துல என்னமோ இருக்கும் போலதான் தோணுது.நான் இன்னும் படம் பார்க்கவில்லை.அதற்கு பதிலா ரோட்டோரமா வித்துகிட்டிருந்த To catch a Thief ன்னு Alfred Hitchcock டி.வி.டி மாட்டுச்சு.ஆல்ஃபிரட் ஹிட்சாக் பெயர்க் காரணம் ஒன்று போதுமே படம் பார்க்க.படம் பழைய அரத புராண 1955 வருடத்தையது.போலிஸ் திருடன் ஓடிப் பிடித்து விளையாடற கதையுடன் ஆங்கில டயலாக் விரும்பினால் மட்டுமே பார்க்கக் கூடிய படம்.எனவே சொல்ல வந்தது கதை பற்றியல்ல.

தொழில் நுட்ப ரீதியாக மாற்றங்கள் வருவது வரவேற்கப் படவேண்டிய ஒன்று என்றாலும் சில தொழில் நுட்பங்கள் முன்பே சிறப்பாகத்தானே இருந்துள்ளது.கால ஓட்டத்தில் அவையும் ஏன் அடித்துக் கொண்டு போய் விடுகிறது என்று தெரியவில்லை.டெக்னிக் கலரில் முன்பே படம் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தை Vistavision என்ற தொழில் நுட்பத்துடன் பார்க்கும் போது ஆல்ஃபிரட் ஹிட்சாக்கின் கதை சொல்லும் நேர்த்தி,ஐம்பதுகளில் இருந்த கார்களின் அழகு,இப்போதைக்கும் அசத்தும் உடையலங்காரம்,மெல்லிய இசை,கருப்புக்குள் வண்ணங்களைத் தேய்த்தால் ஒளிரும் அழகு,சில நிமிடங்களே தோன்றி மறையும் வானவேடிக்கையின் வித்தியாசமான வண்ண வேடிக்கை என படம் டெக்னிக் கலரில் விஸ்டாவிசனில் அழகு கொஞ்சுகிறது.

பழைய படங்களின் அழகு எப்படி அதிகரிக்கிறது என்ற வித்தையையும் இப்பத்தான் கண்டு பிடிச்சேன்.முன்பெல்லாம் மொட்டை மாடில வட்டமான சாட்டிலைட் சட்டியை வச்சிட்டு யாரையாவது கூப்பிட்டு ட்யூன் பண்ணச் சொல்லி வயரை வீட்டுக்குள்ள கொண்டு வந்து எஸ்.டி.பில சொருகிட்டு 21 இன்ஞ் தொலைக்காட்சிப் பொட்டிய பார்த்தா முடிஞ்சது பிரச்சினை.கிடைக்கிற அத்தனை தொலைக்காட்சியையும் ரிமோட்ல உருட்டிகிட்டே இருக்க வேண்டியது.இல்லைன்னா திருட்டு வி.சி.டில எதையாவது தமிழ்ப் படத்தைப் போட்டு காலம் போய்கிட்டிருந்தது.

ஒரு நாள் தெரியாம ஹாலிவுட் பாலா ஊட்டுக்குள்ள கண் சுழட்டுனதுல வந்தது மாற்றங்கள் எல்லாம்.இதுக்குப் பேரு பிளாஸ்மா,இதுக்குப் பேரு எல்.சி.டி!இதெல்லாம் இன்னும் இரண்டு வருசத்துக்குத்தான்,அப்புறமா இன்னும் இரண்டு மூணூ டெக்னாலஜி புதுசா வரப்போகுதுன்னு சொல்ல கடைகளை ஏறி இறங்குனா பிளாஸ்மா டெக்னாலஜிக்கு வயசாயிடுச்சு.அதனால குறைஞ்ச விலை.எல்.சி.டி 32 இன்ஞ்சா அதுக்கு பழைய CRT பரவாயில்லை போல தெரியுது.40 ல துவங்கி 52 வரைக்கும்தான் ரெசல்யூசனோட அதிர்வுகள் கண்ணுக்கு தெரியுது.பாலா சொல்ற புதுசு கண்ணா புதுசு டெக்னாலஜியெல்லாம் இப்போதைக்கு விபரம் தெரிஞ்சுகிட்டு எதிர்காலத்துக்கு தயாராக மட்டுமே.

சரின்னு சொல்லி ஒரு சோனிப் பய பெட்டிய வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்துட்டுப் போக முடிஞ்சது தலைவலின்னு நினைச்சு ரிமோட்ட உருட்டுனா CRT பழைய ஜப்பான் பொட்டியோட சவுண்டும்,படத்தோட ரெசல்யூசன் மாதிரி இல்லையேன்னு மனசு ஓரத்துல சந்தேகம்.அதுலேயும் திருட்டு வி.சி.டில படத்தைப் பார்த்தா ஏதோ பாதி புரிஞ்சும் பாதி புரியாமலும் வசனங்கள்.(ஆனா நம்ம ஊர் ஏய்!ஏய்ங்கிற கதாநாயகன்,வில்லன் சத்தம் மட்டும் தெளிவா கேட்குது).ஹாலிவுட் பாலாவோ புதுசு புதுசா படமா ரிலிஸ் பண்ணிகிட்டுருக்கார்.பின்னூட்டமின்னா இரண்டு வரி எழுதிப் போடலாம்.எல்.சி.டி சரியில்லைங்கற விபரத்தை சொல்லவும் தயக்கம்.சரின்னு யார் சவுண்டு விடறப் பார்ட்டி,சவுண்ட சரி செய்யற பார்ட்டின்னு இணையத்துல தேடுனா வந்து சேர்ந்த தளம் hifivision.com.(பெரும்பாலோர் பெங்களூர்,சென்னைன்னு சரியான சவுண்டு பொட்டிப் பிரியர்கள் போல இருக்குது.ஊர் ஊருக்கு பதிவர் கூட்டம் போடற மாதிரி இவர்களும் இந்த மாதம் சென்னையில் சவுண்டுப் பொட்டி கூட்டம் போட்டிருக்காங்க போல தெரியுது.)

எங்காவது கடைல, வீட்டுக்குள்ள சினிமா (Home theatre)ன்னு பார்த்தா ஒரு அஞ்சு ஸ்பீக்கர் பெட்டி சின்னதாவும் அதுக்குப் பக்கத்துல ஒரு பெரிய பெட்டி (5.1)கண்ண முழிச்சுகிட்டு உட்கார்ந்திருக்கும்.அத வெச்சிகிட்டே விற்பனையாளர் காட்டும் அலம்பல் சொல்ல இயலாது.ஆனா இந்த ஹைபை விசன் ஆட்கள் சொல்றதெல்லாம் "யோவ்!யானை பிளிறதுக்கும் தூக்கணாங்குருவி கூவறதுக்கும் வித்தியாசமில்லையான்னு யானைக்கால் மாதிரி பொட்டிகளைப் பற்றி ஆணி பிடுங்கிட்டுருக்காங்க.இதையும் இன்னும் பல சவுண்டு பார்ட்டிகளை கேள்விப் பட்டு முதல்ல தெரிஞ்ச பேர்ன்னு யமாஹா கடைக்குப் போனா கபாயன் பிலிப்பைன்ஸ்காரன் சின்னதா அஞ்சு போஸ் ஸ்பீக்கர்ஸ்,கூடவே அக்கஸ்டிமஸ்ங்கிற ஒரு பெரிய பெட்டிய இதுதான் சஃப் வூபர்ங்கிறான்.இது மட்டும் பத்தாது இதுக கத்தறதுக்கு ஒரு வாத்தியார் சொல்லிக் கொடுக்கனுமின்னு ِA/V ங்கிற Audio/Video Receiver கூட தேவைங்கிறான்.இதென்ன அங்குசம் வாங்கப் போய யானையே வாங்க வேண்டியிருக்கும் போலன்னு நினச்சு சரி வாங்கலாமா வேண்டாமான்னு குழப்பத்துல நாளைக்கு வாரேன்ன்னு வந்து இணையம் மேஞ்சா,ஏன் நாங்கல்லாம் இருக்குறது உனக்கு கண்ணுக்குத் தெரியலையான்னு Denon,Onkyo,Kef,Infinity,Paradigm,Flaunce,Boston,Pioneer இன்னும் பல கண்ணை சிமிட்டுது.எனக்கோ தலை சுத்துது.

சுயதேடலில் சுற்றி வந்து நின்ற இடம் Sony LCD TV,Onkyo A/V, PolkAudio Speakers.இப்ப மேலே சொன்ன டெக்னிக் கலர்,விஸ்டா விசன் பழைய தொழில் நுட்பம் நல்லாவே படம் காட்டுது.

டிஸ்கி: சென்னை மட்டும் தமிழக நகர வாசிகளுக்கு சினிமா தியேட்டரே நல்லது.எப்பவாவது தியேட்டருக்குப் போனோமா பாப் கார்ன் கொரிச்சோமான்னு இருந்துக்கலாம்.இல்லைன்னா கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் தீட்டிரும்.(Unless you are a hardcore music lover then there are good models available both new and old systems to enjoy your favourite music)

வளைகுடா,அமெரிக்க,ஐரோப்பாங்காரங்களுக்கு ஆங்கிலப் படமாகட்டும்,அய்ங்கரனாகட்டும் HT சினிமாவே சிறந்த வழி.

(நான் தினமும் தமிழ்மணத்துல சுத்திகிட்டுத்தான் இருக்கேன்.ஈழம் சென்ற விதம்,செல்லும் விதம் மனதை நிறையவே பாதித்தது.பாதிக்கிறது.நிகழ்வுகள் யாவும் எழுத்துக்கு கூட தடையே.எனவே பெரிதாக எழுதும் எண்ணமெல்லாம் இல்லை.எழுத்தில் கூடவே பயணித்த ஏனைய நண்பர்கள் பலரும் அக புற காரணங்களுக்காக அதிகம் கண்ணில் தென்படுவதில்லை.இப்போதைக்கு தொடர்ந்து வலம் வரும் இரு வீடுகள் வானம்பாடிகள் பாலா மற்றும் ஹாலிவுட் பாலா மட்டுமே.அவ்வப்போது வருவேன்.ஆனால் எப்பொழுது வருவேன் என்பது எனக்கே தெரியாது.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சில தினங்களுக்கு முன்னதாகவே.

Thursday, October 1, 2009

மருத்துவம் பார்க்கலையோ மருத்துவம்!

வளைகுடா சீதோஷ்ண நிலையில் உணவா , சுவாசிக்கும் உஷ்ண,குளிர்சாதனக் காற்றா எதுவோ மனுசங்களை குண்டு பண்ணியே தீருவேன்னு கங்கணம் கட்டிகிட்டு திரியறது.இங்கிருந்து மீனு மாதிரி கொஞ்சம் தள தளன்னு இந்தியாவுக்குப் போனா ஒரு மாசத்துல திரும்ப வரும்போது காஞ்ச கருவாடு மாதிரி எல்லோரும் திரும்ப வர்றாங்க.அது இந்தியாவில் சுற்றும் அலைச்சலா,உணவா,நீரா,காற்றா எனத் தெரியவில்லை.எப்படியோ பெரும்பாலான இந்தியர்கள் உடல் ஆரோக்கியத்துக்கான உடற்பயிற்சிகளை அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக வைத்துக் கொள்வதில்லை பணம் என்ற பொருளாதார தேவை ஓரளவுக்குப் பூர்த்தியானாலும் கூட.

இந்தியாவில் இதய நோய்கள் அதிகரிக்கின்றன என்ற சமீபத்து செய்தி ஒன்று பார்க்க நேர்ந்தது.அதெப்படி அத்தனை வெயிலில் வேர்த்து விறு விறுத்து பஸ் ஏனைய பயணங்கள் செய்து உழைத்து அலுத்தும் நோய்கள் அதிகரிக்கின்றன.காரணம் இதயம் போன்ற உடல் உறுப்புகளுக்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக கிடைக்காமல் போவதாலா?பல் துலக்குவது,குளிப்பது மாதிரியான அன்றாட அலுவல்களில் ஒன்றாக கட்டாயம் காலையில் செய்ய வேண்டிய பணி உடற்பயிற்சி.முந்தைய நாளின் சோர்வான மனநிலையையும் உற்சாக கட்டுக்குள் கொண்டு வரும் உடற்பயிற்சி.அதிக நாள் உடற்பயிற்சி செய்யாமல் துவக்கமாக முதல் நாள் ஆரம்பித்தால் அடுத்த நாள் உடல் வலிக்கும்.உடல் வலியையும் பாராது இரண்டாம் நாள் தொடர்ந்தால் மூணாவது நாள் வலி தெரியாது.மூணாவது நாளிலிருந்து இரண்டு வாரம் தொடர்ந்து விட்டால் பயிற்சி பழக்கம் விடாது தொடரும்.

எனக்கு சரக்கு கிடைக்காத ஊர் காரணத்தாலும் அதன் காரணம் கொண்டே மது மீது ஈடுபாடு இல்லாத காரணத்தாலும் மது அருந்துவதில்லை.இருந்தாலும் துறவறம் பூண்டு இல்லறம் பற்றியெல்லாம் சிலப்பதிகாரம் எழுதின இளங்கோ மாதிரி நானும் சில சரக்கு குறிப்புகளை சொல்கிறேன்.பின்னூட்டத்தில் இதுபற்றியெல்லாம் நோண்டக்கூடாது என்ற அன்பு எச்சரிக்கையுடன் சில குறிப்புகள்.

அடப்போய்யா!நானெல்லாம் மட்டை போடற பார்ட்டி.இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுன்னு யாராவது நினைக்கிறவங்களுக்கு அதிகமான உடலுக்கு தேவையில்லாத ஆல்ஹகாலை உடற்பயிற்சி உள் இழுக்கும் காற்று வெளியேற்றும்.சரக்கடிச்சாலும் தவறில்லை உடற்பயிற்சி செய்யுங்கள்.

எனது மதிப்பீட்டில் சரக்கடிப்பது ஒரு கலை.ஆனால் அதனைக் கற்றுத் தேர்ந்தவர்களாய் பெரும்பாலோர் இல்லை.தண்ணி போடற மச்சிக சாராயம்,கள்ள சாராயம்ன்னுதான் கேட்டிருப்பீங்க.இது ரெண்டையும் விட சொந்த சாராயம்ன்னு ஒண்ணு இருக்கறது யாருக்காவது தெரியுமா?தெரியாட்டி தெரியாமலே இருப்பது நல்லது:)

எது சரியான தண்ணி போடற முறைன்னு தெரியல.பிலிப்பைன்ஸ்காரங்க நல்லா சாப்பிட்டு விட்டு சின்ன சின்னதா கல்ப் அடிக்கிறாங்க. நாம் தண்ணி போட்டு முடிஞ்சு அப்புறமா சாப்பிடறோம்.எப்படியோ சரக்கடிச்ச பிறகு வீட்டுக்கு ஒரு கொய்யா மரம் வளர்ப்போம்ன்னு சொல்றதுக்குப் பதிலா ரிலாக்ஸா ஒரு கருப்பு காபி குடிப்பது தலைவலி வராம தடுக்கும்.(உனக்கெப்படி தெரியும்?F&Bல படிச்சது)ஒரு டுனீசியாக்காரன் பழம் சாப்பிட்டு விட்டு உணவருந்துவது விஞ்ஞான பூர்வமா உடலுக்கு நல்லதென்றான்.நாம் சாப்பிட்டு விட்டு பழங்கள் அருந்துகிறோம்.எது சரியான முறை?தெரிந்தவர்கள் கருத்துக்கள் அறிய விரும்புகிறேன்.

கல்லூரிப் பெண்கள் KFC, பிஸாக்களை தவிர்ப்பது நல்லது.அம்மாக்கள் தரும் இட்லி,தோசை,உப்புமா நல்லது.கூட மாட அம்மாக்களுடன் அடுப்பறையில் உதவுவது உடல்,மனரீதியாக உதவும்.

முன்பெல்லாம் பெண்கள் வீட்டு வேலைகளை மட்டும் பார்த்துகிட்டு இருந்தாங்க.இப்ப அந்தப் பளுவோடு அலுவல் வேலைக்குமான பளுவும் வந்து சேர்ந்து பெண்களை யந்திரங்களாகவே மாற்றிய பெருமை ஆண்குலத்துக்கு சேரும்.30 வயதுக்கு மேல் சதை போடுதல்,அப்புறம் சர்க்கரை,அழுத்தம் போன்ற நோய்களை பெண்களும் தவிர்க்க உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.குழந்தைப் பேறு காலம் கூட நடை,சின்ன சின்ன வேலைகள் செய்வது அவசியம்.

புள்ளத்தாச்சிங்கிற கரிசனத்துலயும் மருத்துவர்கள் உதவியாலும் சுகப்பிரசவம் வரை எல்லோரும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்.ஆனால் அதற்குப் பிறகான பெண்களுக்கான தாய்மை வாழ்க்கை மாறுபாடும் உடற்பயிற்சிக்கு நிரந்தர ஓய்வைக் கொடுத்துவிடும்.பிரசவத்திற்கு பின்னான அடிவயிற்று சதை தொப்பையை உருவாக்கும் பிரச்சினைகளை பெண்கள் தவறவிட்டு விடுகிறார்கள்.ஒரு மாதம் வயிற்றுப் பகுதிகளுக்கான மஜாஜ்,மற்றும் சுடு நீர் குளியல் அவசியம்.இங்கே ஒரு கேரளத்துப் பெண் புள்ளத்தாச்சிக்கு தண்ணி ஊத்துறேன்ன்னு சொல்லியே ஒரு மாத அட்வான்ஸ் புக்கிங்க் செய்யுது.இந்த தண்ணி ஊத்துற விசயத்தில் பெண்கள் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.

அதென்னமோ தெரியல அத்தை,சித்தின்னு அம்மா ஒரு கிலோ,ரெண்டு கிலோ கருப்பட்டியும் அதுல கால்பாதி குருமிளகும் சேர்த்து அரிசு குத்துற கல்லுல உலக்கையால உஸ்,உஸ்ன்னு சத்தம் போட்டுகிட்டே கருப்பட்டியையும்,குருமிளகையும் மாவு பண்ணி உருண்டை செஞ்சு அத்தை,சித்தி,அக்காமார்களுக்கு பிரசவ சமயம் கொடுப்பாங்க.உர்ருன்னு பக்கத்துல நின்னு பார்த்துகிட்டு இருக்கும் எனக்கும் ஒரு விழுது கருப்பட்டி சொரக்குன்னு ருசியா கிடைக்கும்.பிரசவம் சமயத்தில இதைத் தின்னுட்டு அத்தை,சித்திகள்,அக்கம் பக்கத்து அக்கா மார்கள் பத்து நாளோ இல்லை பதினைந்து நாளோ காலத்துக்குள் தண்ணிக் குடத்த எடுத்து இடுப்புல வச்சிக்கிட்டு தண்ணி சுமக்கிற தைரியம் வந்துரும்.இப்ப அரசல்,புரசலா அம்மணி மூலமா சில தாய்மார்கள் குறைகள் கேட்க நேர்ந்தது.தற்காலப் பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும் கூட திராணியில்லாமல் போய்விடுகிறார்கள்(This is irrelevent of nationality).இந்தப் பெண்கள் எல்லாம் இந்தியா,இலங்கை,பிலிப்பைன்ஸ் ஆசிய நாட்டு வட்டத்துக்குள் வருபவர்கள்.

பரட்டை தலை ஸ்டைல் எல்லாம் முடி உதிர்தலில் கொண்டு வந்து விட்டு விடும்.நல்ல பிள்ளையா தேங்காய் எண்ணெய் தேய்த்து பக்க,நடு வகிடு எடுத்து பள்ளிக்கு,பின்னாடி டை கட்டுற வயசு வரைக்கும் செய்தால் தலை முடி கொட்டுதல்,நரை போன்றவைகளை தள்ளிப் போட முடியும்.கேரளத்துப் பெண்களின் நீண்ட முடிக்கு தேங்காய் எண்ணெய் காரணமென நினைக்கிறேன்.ஷாம்பு குளியல் மாதம் ஒரு முறை வைத்துக் கொள்ளலாம்.நல்லெண்ணெய் குளியல் வாரம் ஒரு முறையும் அதுவே உச்சந்தலைக்கு தினமும் தேய்த்துக் குளிப்பது சூடு குறைக்கும்.கண்ணுக்கு இரண்டு சொட்டு விளக்கெண்ணை தினமும் விட்டுக் கொண்டு பள்ளி,அலுவல் செல்லலாம்.

நிறையப் பேர் மினரல் வாட்டர் அருந்துவது உடலுக்கு நல்லதென்று நினைக்கிறார்கள்.ஆனால் தொடர்ந்து குடிக்கும் மினரல் வாட்டர் கிட்னியில் கல்லைச் சேர்க்கும்.பதிலாக நீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லது.

இதெல்லாம் செய்தும் சில சமயம் இருமல்,சளி போன்ற வைரஸ் வைராக்கியர்கள் வந்து விடுவார்கள்.ஒரு முறை இப்படி தொடர் இருமலில் 3 நாட்கள் அவதிப்பட்டு அலோபதி அண்ணன்கள் எதையெல்லாமோ எழுதிக் கொடுத்தும் பலனில்லாமல் நம்ம கிட்னி உபயோகிச்சதுல நல்ல பலன் கிடைத்தது.

தேவையான பொருட்கள்:

பசும்பால் - 250 மில்லி
தேன் - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - 25 மில்லி
குங்குமப் பூ- சிட்டிகை தூவற மாதிரி
இஞ்சி - பெரும் விரல் அளவு
குருமிளகு-இடிச்சா பெரும்விரல்,ஆள் காட்டி விரலில் சிக்குமளவு
மஞ்சள்- கொஞ்சமோ கொஞ்சம்

முதலில் தண்ணீரில் வெட்டிய இஞ்சி,மஞ்சளை இட்டு கொதி வந்ததும் பாலை ஊத்தி குருமிளகை தூவவும்.சில நிமிடங்களில் பால் கொதித்து வரும்போது இறக்கி வைத்து ஒரு கப்பில் ஒரு தேக்கரண்டி தேன்,குங்குமம் சிறிது தூவி சூடான பாலை ஊற்றி கலக்கவும்.இருமல்,சளி மருந்து தயார்.

( இதில் இஞ்சி,குருமிளகு,மஞ்சளைத் தவிர்த்தால் இது வயாகராவின் அல்லக்கை)

இறுதியாக ஜன்னல் பக்கத்தில் நின்னுகிட்டு சைட் அடிக்கப் பிடிக்குமா இல்லை ஒரே கடி கடித்த ஆப்பிள் பிடிக்குமான்னு என்னைக் கேட்டால் ஜன்னல் என்றே சொல்வேன்.ஆமா!நம்ம பில்கேட்ஸ் என்ன செஞ்சுகிட்டு இருக்காரு?யாராவது பார்த்தீங்கன்னா ஒரு ஹலோ எனது சார்பா சொல்லுங்க!

Tuesday, September 29, 2009

உன்னைப் போல் ஒருவன்,தி வென்ஸ்டே- ஒரு ஒப்பீடு

பொதுவாக ஒரு மொழி திரைப்படத்தை மற்ற மொழிக்கு மாற்றும் போது முந்தைய மொழியின் நிறைகளை தக்க வைத்துக் கொண்டு விட்டுப்போன குறைகளை மாற்றம் செய்வது வியாபார நலன் கருதி செய்யும் தொழில் தந்திரங்கள்.அந்த வகையில் தமிழ் கஜனி இந்தி கஜனி ஆகும்போது இந்தி கஜனி நன்றாக மொட்டை போட்டு,சிக்ஸ் பிக்கெல்லாம் வைத்து நன்றாகவே சண்டை போட்டான்.அதே மாதிரி இந்தி வென்ஸ்ட்டே மூலம், தமிழுக்கு உன்னைப் போல் ஒருவனாகும் போது கதை மாற்றம் இல்லாமல் இருந்தாலும் நடிகர் தேர்வு,இசை,வசனம்,ஒளிப்பதிவு,இயக்கம் என தமிழ் நன்றாகவே இருந்தது.

படம் சார்ந்த இணைய இடுகைகளில் தெரிந்த நுண்ணரசியல்கள் தமிழை விட இந்தியில் அதிகமாகவே பட்டது.ஆனால் அதையெல்லாம் சுட்டிக்காட்ட யாரும் முன்வரவில்லை.உதாரணத்திற்கு காவல்நிலையத்தில் உட்கார்ந்து இருக்கும் நசுருதீன் ஷா வைத்திருக்கும் பையின் J&K எழுத்தைப் பார்த்து விட்டு காவல்துறை FIR எழுதுபவர் விளிக்கும் ஹலோ ஜம்மு & காஷ்மீர்!இந்தியில் வேகாத இந்துத்வா பருப்பெல்லாம் தமிழகத்தின் சூட்டில் நன்றாகவே வேகிறது.இந்தியில் படம் வந்ததும் தெரியவில்லை.போனதும் தெரியவில்லை.இந்தியில் படம் பார்ப்பது என்பது சமூகம் சாராத ஒரு பொழுது போக்கு.ஆனால் இங்கே விமர்சனம் என்ற பெயரில் எழும் விவாதங்கள் நம்மை பல்வேறு திசைகளுக்கு கொண்டு செல்கின்றன.காரணம் நமது திரைப்படம்,அரசியலின் அன்றாட வாழ்க்கையின் ஆளுமைகள். உன்னைப் போல் ஒருவன் தான் திரைப்படம் என்ற பார்வையில் தி வென்ஸ்டேவை விட சிறந்த படம்.ஆனால் நசுருதீன் ஷா,கமல் இருவரின் நடிப்பில் மட்டும், யார் எனக் கேட்கும் அனுபம் கேரின் கேள்விக்கு பதில் அளிக்கும் நசுருதீன் ஷாவின் சமூகக் கோபங்களுக்கான வார்த்தைகளில் வென்ஸ்டேவின் இறுதி நீண்ட வசனங்கள்,நசுருதீன் ஷாவின் நடிப்பை வெற்றியடையச் செய்து விடுகிறது.வசனத்தின் புரிதலின் சமூக கோபங்களில் சில இங்கே:-

அனுபம் கேர்: யார் நீ?

நசுருதீன் ஷா: நான் பஸ்,ரயிலின் படிக்கட்டில் ஏறுவதற்கு பயப்படுகிறவன்.நான் வேலைக்குப் போகிறவன்,சரியாகப் போய் சேர்ந்து விட்டேனா என்று அரைமணி,ஒரு மணி நேரத்துக்கு மனைவியால் விசாரிக்கப் படுபவன்.டீ குடித்தாயா?சாப்பிட்டாயா?நான் உயிரோடிருக்கிறேனா என விசாரிக்கப் படுபவன்.

நான் சில சமயம் மழையில் சிக்கிக் கொள்பவன்,சில சமயம் வெடிகுண்டுக்குள் மாட்டிக்கொள்பவன்.நான் தாடி வைப்பவனை,தொப்பி வைப்பவனைப் பார்த்து பயப்படுகிறவன்.(ஏன் இந்தி பாராட்டும் விமர்சனங்கள் இந்த நுண்ணரசியல் இடைச் செறுகலை நசுருதீன் ஷா மேலோ இந்தி இயக்குநர் மேலோ சுமத்தவில்லை?)வியாபாரத்துக்கு கடை பார்த்தால் என்ன பெயர் வைப்பது என்று யோசிப்பவன்.சண்டை யாருக்கோ இருக்கட்டும்.சாகிறவன் நான்.I am just a stupid common man.தினமும் ரொட்டிக்கான கவனத்தில் இந்த வேலை தாமதமாகி விட்டது.உங்களுக்குத் தெரியுமா?துணி துவைக்கும் சோப்பு கூட குண்டு தயாரிக்கப் பயன்படுகிறதென்று!சாதாரண மனிதனுக்கு இதை விட உபயோகமான பொருள் இதுவரை தயாரிக்கப் படவில்லை.

தவறு நம்முடையது.மிக சீக்கிரம் நிகழ்வுகளைப் பழக்கப் படுத்திக் கொள்கிறோம்.குண்டு வெடிப்பு மாதிரி ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்தால் சேனல் மாற்றி சேனல் பார்த்து விட்டு,SMS அனுப்பினோமா,போன் செய்தோமா,பின் எனக்கு ஒன்றும் ஆகவில்லையென்று அந்த சூழ்நிலைக்குப் பழக்கப்படுத்திக் கொள்கிறோம்.அரசாங்கம்,காவல்துறை,உளவுத்துறை என பூச்சிக் கொல்லிகள்(Pest controllers) நிறைய இருக்கிறீர்கள்.Why are you not nibbing them in the bud?

All this system is flawed.நாங்கள் இப்படித்தான் உங்களைக் கொல்வோம்.உங்களால் என்ன செய்ய முடியும்? Yes!they asked this question on a Friday and repeated it on a Tuesday and now I am replying back on Wednesday.