வேலைப்பளு ஒரு புறம்,எதை சொல்வது என்ற உந்துதல் இல்லாத மறுபுறம் என்பதற்கிடையில் தற்போது கொஞ்சம் மனதை இலகுவாக்குவது ஏனைய கருத்துரையாடல்களே..யாருடனாவது சண்டை போடலாமே என்று தேடினாலும் எல்லோருமே நல்லபிள்ளையாகி விட்டார்கள் போல் தெரிகிறது.பதிவுலகம் அமைதியான கடலில் சாமரம் வீசிக்கொண்டு செல்கிறது.இப்படியே பயணம் செய்யட்டும். பதிவுலக தேடல்களுக்கு மாற்றாக இப்போது ஆங்கில திரைப்படங்களுடன் இந்தி திரைப்படங்களும் விட்டும் தொட்டும் என்னுள் முடிவடைகிறது.
முன்பு ஒரே கதைக்கருவை வைத்தே சென்று கொண்டிருந்த இந்தி திரை உலகம் கறுப்பு பணம்,பாதாள உலகம் என்ற சூழலிலும் இந்தி திரைப்படங்களே இந்திய சினிமாவை தீர்மானிக்கும் நிலையில் இப்போது பன்னாட்டு மூலதனங்களும் புரள்வதோடு இந்தி திரைப்படங்கள் பல கதைக்களங்களையும் தொடுவது வரவேற்க தக்க மாற்றம்..பல இயக்கங்கள் யார் இயக்குநர் என்று மீண்டும் பெயர் தேட வைக்கிறது.அந்த வரிசையில் மிகவும் தாமதமாக ஆக்கிரமித்துக்கொண்ட பெயர் அனுராக் கெஷ்யப்.திரைப்படம் கறுப்பு வெள்ளிக்கிழமை எனும் Block Friday.
இதே பெயரில் ஹுசேன் ஜெய்தி என்பவர் எழுதிய புத்தகமே திரைப்பட வடிவமாக.திரைப்படம் முடிந்து எழுத்து வரிசைகள் ஓடிக்கொண்டிக்க கண்கள் நிலைகுத்திய நிலை.எந்த பக்க சார்புமில்லாமல் ஒரு திரை ஊடகம் எப்படி பம்பாய் குண்டு வெடிப்பு சம்பவத்தையும்,அதன் பின்புல மனிதர்களையும், மதம்,அரசியல்,காவல்துறை செயல்படும் முறை என பட்டவர்த்தனமாக திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வில்லாமல் கொண்டு செல்கிறது.
ஒரு புறம் இந்திய காவல்துறை செயல்படும் விதம் குறித்த மனித உரிமை பார்வையும, அதற்கு எதிராக காவல்துறை தனது பக்க நியாயத்தை சொல்லும் போது எந்த தவறுகளும் செய்யாத பம்பாயின் அன்றாட வாழ்வை தேடும் மக்கள் மரணித்துப் போவதும்,பலத்த காயங்களுடன் ஏனைய வாழ்நாளை கழிப்பவர்களுக்கு மனித உரிமை இல்லையா என்ற கேள்வி மனித உரிமை,காவல்துறை செயல்படும் விதம் குறித்த இருவித மன அதிர்வை உருவாக்குகிறது.
சாதாரண இளைஞர்கள் மதம் என்ற பெயரில் எப்படி மூளை சலவை செய்யப்படுகிறார்கள் என்பதையும் பம்பாய் குண்டு வெடிப்பு நிகழ்ந்த 1993ம் வருடத்திற்கு பின் சுமார் 122 பேர் மீதான குற்றப்பத்திரிகை மீது 100 பேர்கள் குற்றவாளிகள் என 13 வருட ஆண்டுகளுக்குப் பின்பான நீதிமன்ற தீர்ப்பில் குற்றவாளிகள் தண்டனை அடைந்தாலும் முதல் குற்றவாளிகளான தாவுத் இப்ராஹிம்,டைகர் மேமன் போன்றவர்கள் இன்று வரை தப்பித்து வருவதும்,இந்திய அரசியல்,சட்ட வலிமைகளையும் கேள்விக்குறியாக்குகிறது.
குண்டு வெடிப்புக்கு முன்பே டைகர் மேமனின் மொத்த குடும்பமும் துபாய் சென்று விடுவதும்,தாவுத் இப்ராஹிம் இன்று வரை பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டிருப்பதும் இவர்களின் சுயநலங்களை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.மத வாதத்தை பஜ்ரங்க் தள்,ஆர்.எஸ்.எஸ் என்ற இந்து தீவிரவாத இயங்கங்கள் பி.ஜே.பி என்ற அரசியல் முகமூடி போட்டுக்கொண்டு பாபர் மசூதியை இடித்ததன் மூலம் மதவெறியை இந்திய,,பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ தமது அரசியல் சுயநலன்களுக்கு எப்படி பயன்படுத்திக்கொள்கின்றன என்பதையும் தொட்டு தாவுத் இப்ராஹிம்,டைகர் மேமன் என்ற தனி மனிதர்களிடமிருந்து பிரச்சினை விலகி எப்படி இந்திய,பாகிஸ்தானிய அரசியலை தீர்மானிக்கிறது என்பதையும் மெலிதாக தொட்டு செல்கிறது.
நீதி மன்ற தடைகளையும் மீறி படம் வெளி வந்தும் கூட இயக்குநர் மணிரத்னத்தின் பாம்பே,நசுருதீன் ஷாவின் நடிப்புக்கான தி வென்ஸ்டே படங்களுக்கான விளம்பரம் அனுராக் கெஷ்யாப்க்கு குறிப்பிட்ட ரசனையாளர்களின் மத்தியில் மட்டுமே கிடைத்துள்ளது எனலாம். பாம்பே,வென்ஸ்டே போன்ற படங்கள் தனிமனிதர்களின் கதைக்களத்தினூடே ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லி நிகழ்வுகளோடு சமரசப்பட்டவை.
ஆனால் கறுப்பு வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்வின் காரணகர்த்தாக்களையும்,அவர்களை சார்ந்த சாதாரண மனிதர்களையும் தொட்டு மதம் எப்படி மனிதர்களை விலக்கி வழிநடத்திச்செல்கிறது என்பதையும்,தாவுத் இப்ராஹிம்,டைகர் மேமன்,பால் தாக்கரே, அத்வானி, ஆர்.எஸ்.எஸ்,பஜ்ரங்தள்,ஐ.எஸ்.ஐ என்ற பெயர்களை எந்த சமரசமுமின்றி நிகழ்வுகளுனூடே சொல்லி செல்கிறது.
கதைக்களம்,ஒளிப்பதிவு,இசை இவற்றிற்கும் மேலாக பாலிவுட் நடிகர் என்ற தனி மனித பிம்பங்களற்ற நடிக்கிறோம் என்ற உணர்வுகளற்ற கதையின் பாத்திரத்தோடு ஒன்றிப் போனவர்களை இயக்கியிருப்பது நடிகர்களுக்கும், இயக்குநருக்கும் வெற்றியே.அனுராக் கெஷ்யப் இந்திய திரைப்படத்தின் தவிர்க்க முடியாத பெயர் பட்டியலுக்குள்.இந்திய திரைப்படங்கள் கறுப்பு வெள்ளிக்கிழமை போன்ற பட வரிசையில் பயணிப்பதே இந்திய சினிமாவை உலக திரைப்படங்களின் வரிசையில் நிற்க வைக்கும்.