Followers

Thursday, October 31, 2013

வந்துட்டானய்யா!வந்துட்டான்!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.ஒரு கேசு தொலைந்ததேன்னு யாரும் சந்தோசப்படுற மாதிரி தெரியல.ஆனாலும் புதுகை அப்துல்லா,வவ்வால்,இக்பால் செல்வன்,ஜோதிஜி என ஆளைக்காணோமே என குசலம் விசாரிப்பது மகிழ்ச்சிக்குரியதே.எனது நன்றியை சொல்லிட்டு இங்கே வந்தால் அப்படியே குந்த வச்சு உட்கார்ந்துக்குவோமோ என்ற பயத்தோடு கூடவே சென்னையின் பத்தில் ஒரு சதவிகிதம் ஏரியா கூட இல்லாத குவைத்தில் வியாபாரம் பண்ணலாம் வாரியான்னு மொபைல் பேசுற நிறுவனத்திலிருந்து கப்பல் விடுறவன் கிட்ட போய்,தாய்லாந்து,இந்தியா,அவ்வளவு ஏன் நம்ம சிவகாசிக்கு கூட பிள்ளையார் மாதிரி உட்கார்ந்த இடத்திலிருந்து கிட்டே கூப்பிட்டால் ஒருவரும் மசிய மாட்டேன்கிறார்கள்.

அப்படியும் வருகிற சிவகாசி காலண்டர் தயாரிப்பாளர் பிள்ளையார் காலண்டர் விற்பனைக்கு தயாராக இருக்கிறது என சேம்பிள் அனுப்புகிறார்.ஒருத்தர்கிட்ட விற்கிற பொருள் இருக்குது.இன்னொருவருக்கு வாங்க வேண்டும்.இடையில் இருக்கும் கடலை கடப்பதுதான் பிரச்சினையே.சரி இதுதான் வேண்டாம் லோக்கலா டீல் பண்ணலாமென்றால் பொட்டிக்கடை வைத்திருக்கும் பெங்காலிக்கும்,ஈரானிக்கும் தொழில் நுட்பம் தெரியமாட்டேங்குது.இப்ப என்னமோ மொபைல் ஆப்புன்னு என்னமோ விற்குதாமே அதுகூட தெரியாத அரபிக்காரன் கூகிள் அண்ணாத்தே தயவால் முகப் புத்தகம்,டிவிட்டுகிட்டு உன் கடைக்கு டிராபிக் என்னங்கிறான்:)

இப்படியான நிலைமையில் போடாத குரங்கு வித்தை குட்டிக்கரணம் போட்டும் கடையில் போணியாகாத சோகத்தில் இருக்கும் என்னிடம் வந்து எங்கய்யா ஆளைக்காணோம்ன்னு கேட்டால் சிவாஜி ஸ்டைலில் நான் சிரித்துக் கொண்டே அழுகிறேன்.நம்ம நிலைதான் இப்படின்னு பார்த்தால் டெண்டர்க்கு வாங்கிய இரண்டு Excavator விலை சுமார் 11 கோடி விலைக்கு வாங்குவதற்கு ஆள் இல்லாமல் ஒரு நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது.சுமார் ஒரு வருடத்திலிருந்து இரண்டு வருடத்திற்குள் மெகா ஸ்கைஸ்கிரேப்பர் மாடிக்கட்டிடங்களை நிறுவதற்கு இந்த எக்ஸ்காவேட்டர்களும் ஒரு காரணம்.இந்தியாவில் வெள்ளைப்பணத்தோடு யாராவது சட்ட வரைமுறைகளோடு வங்கி மூலமாக் வாங்குவதற்கு ஆட்கள் இருந்தால் அனுப்பி விடலாம்.Caterpillar,Volvo போன்ற பெயர் பெற்ற நிறுவன தயாரிப்புக்களை விட விலை குறைவு.காரணம் தயாரிப்பு நிறுவனம் சீனா.

அமெரிக்காவில் போணி பண்ண முடியாமலோ என்னவோ ஹாரி என்ற அமெரிக்கர் Dream lites,Slushy magic என்ற குழந்தைகளின் பொருட்களை கொஞ்சம் மார்க்கெட் செய்து தரச்சொல்லி முயன்று கொண்டிருக்கிறேன். கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக உணவகங்களில் முன்பதிவு செய்து கொள்வதற்கு ஒரு மென்பொருளை தேடி குஜராத் ஓடினால் எங்கள் நிறுவன ஒப்பந்த நிறுவனத்தை குவைத்தில் அணுகவும் என திருப்பி கடிதம் போட்டு விட்டார்கள். இங்கே போய பார்த்தால் அவர்கள் 12 வருடம் குப்பை கொட்டி பெருக்கி அழகாக நிறுவனம் அமைத்துள்ளார்கள்.

சிவகாசி கதையை கேளுங்களேன்.2014 வருகிறதே!யாருக்காவது 2014 காலண்டரை மொத்த விலைக்கு விற்கலாம் என கூகிள் தேடலில் சிவகாசிக்குப் போனால் SFA என்ற நிறுவனம் ஏற்கனவே உற்பத்தி திறனில் சிறந்து இருப்பது மாதிரி தெரிகிறதென்று அணுகினால் நீங்கள் மும்பைக்குத்தான் அயல்நாட்டு விற்பனைக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று போனில் சொல்லி விட்டார்கள்.சரியென மும்பைக்கு கடிதம் எழுதினால் அவர்கள் என்னை சுயமதிப்பீடு செய்து கொண்டு நீங்கள் இனி துபாயோடு தொடர்பு கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள்.

துபாயிலிருந்து வந்த விலைப்பட்டியலைப்பார்த்தால் சிவகாசி உற்பத்தி விலை+மும்பை லாபம்+துபாய் லாபம் என நமக்கு ஏதும் மிஞ்சாத நிலைமை. ஒரு முறை தமிழ் புகைப்படக்கலை தலைகளுக்கு கடிதம் போட்டு விட்டு பதில் வராத காரணத்தால் அப்படியே கிடப்பில் போட்டு விட்டேன். இன்னும் எவ்வளவு நாளைக்கு ஹாபின்னு சொல்லிகிட்டே க்ளிக் செய்வீங்க?சிறந்த படங்கள் என தேர்வை விறபனை சந்தைக்கு கொண்டு சேர்த்து விடலாம்.செய்ய வேண்டியதெல்லாம் புகைப்படம் அனுப்புவதும் விலை நிர்ணயம் அமெரிக்கன் டாலரில் எவ்வளவு என்பது மட்டுமே.விற்பனைக்கு நான் கொண்டு செல்வதில் விற்பனைப் படுத்தப்பட்டால் தருமி ஸ்டைலில்....ஓஓ! நம்ம தருமி வேற இருக்கிறார் இல்ல! சரி நம்ம திருவிளையாடல் தருமி ஸ்டைலில் ஏதாவது பார்த்து போட்டுக்கொடுங்கன்னு சொல்லிப்பார்த்தேன்.யாரும் கண்டுக்கல.நாதாஸ் மட்டும் எனது விளம்பர உதவிக்காக வேண்டி ஒரு அழகான பெராரி கார் அனுப்பினார்.

இன்னுமொரு கதை கேளுங்களேன்!குவைத்தில் நீளமா,உயரமா கட்டிடம் கட்டி வச்சிருக்காங்க.யார் எங்கே இருக்காங்கன்னே தெரியாதேன்னு கூகிள் எர்த்தோடு அவர்கள் கட்டிடத்தை போகஸ் செய்து விடலாம் என கூகிள் ஸ்கெட்சப் சான்றிதழ் வாங்கின நிறுவனத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.நம்மாளுக ஹாலிவுட்டுக்கே சவால் விடுறவங்ளாச்சே.....(வவ்வால்!விஸ்வருபம்!விஸ்வரூபம்:)) என யாராவது Motion graphics design advertisement கோடம்பாக்க வல்லுனர்களையும் கூகிளில் தேடுகிறேன்.யாரும் அகப்பட மாட்டேன்கிறார்கள்.இங்கே கூட்டத்துக்குள் யாராவது ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் உள்ளேன் நண்பா என தலையை காட்டவும்.

talabat.com என ஒரு வளைகுடா முழுவதும் வளைத்துப்போட்டு விட்ட ஒரு நிறுவனம் என் தூக்கத்தை கலைத்துக்கொண்டிருக்கிறது.யாராவது தொழில் நுட்ப வல்லுனர்கள் இருந்தால் அந்த நிறுவனம் வாங்கும் ஒரு KFC ஆர்டருக்கு கமிசன் ரூபாய் 100 எனபதை நான் ரூ 80க்கு தருகிறேன் என போட்டி போடலாம். தேவையான வை மென்பொருளும் KWD payment gateway மட்டுமே. 

நீ ஆணியே புடுங்க வேண்டாம்.உன் மூலமா யாரையாவது பொருள் வாங்கச்சொல்லு என அமேசன் விற்பனை தளம் கடிதம் போடுது.

Idea that sells என்கிற இணைய கோட்பாட்டில் விற்பதற்கும்,வாங்குவதற்குமான வாய்ப்புக்கள் உள்ளன. இரண்டு பக்கங்களையும் இணைப்பதற்கான நெட்வொர்க்,நம்பகமான மனுசன் என வெளிச்சம் போட இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவை. 

அமேசன் என்றவுடன் இன்னுமொரு எண்ணம்.அது ஏன் அமெரிக்கா வரைக்கும் போக வேண்டும். வளைகுடாக்களில் தினாரையும்,திர்காமையும் வைத்துக்கொண்டு சொந்தங்களுக்கு சில நேரங்களில் டெலிபோன் வாழ்த்துக்கள் சொல்வதோடு பிறந்தநாள்,திருமண நாள்,தீபாவளி,புது வருட நினைவுகள் பலருக்கு முடிந்து விடுகிறது.பட்டுப்புடவைகள், கேக்,மல்லிகை,ரோஜா போன்றவற்றை உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கலாம்.மாவட்டம் தோறும் முக்கியமாக தஞ்சாவூர்,திருச்சி போன்ற பகுதிகளில் கூரியர் உதவியோடு கொண்டு சேர்க்கும் அதே விற்பனை நிறுவனங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்.

கடன் தரும் வங்கி,மாமல்ல புர பொழுது போக்கு பார்க் மாதிரி மல்டி மில்லியன் நிறுவனங்களுக்கு தரமான நிறுவனங்களாச்சே என ஒப்பந்தம் செய்யாமல் விளம்பர யுக்திகள் செய்து விட்டு காசு வராமல் அல்லாடுகிறேன்.இப்போதைக்கு அனுபவங்கள் மட்டும் வரவு.

இன்னும் நிறைய அனுபவங்கள் வரும்.மொத்தமா சேர்த்து வச்சு அப்புறமா சொல்லுகிறேன்.



Thursday, June 20, 2013

வெற்றியின் முதல் படியில்

சென்ற பதிவில் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த அமுதவன் சார்,ரெவரி,பூபதி பெருமாள்,வருண்,நந்தவனத்தான்,வேகநரி,செங்கோவி மற்றும் எதிர்கால விவசாய மேதை கடி வவ்வால்:) அனைவருக்கும் எனது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொண்டு கச்சேரியை துவங்கலாம்.

வவ்வால்!சென்ற பதிவில் நந்தவனத்தான்"நீர் வெவசாயத்துல ஜெயிப்பீரா என்னவோ காலம்தான் பதில் சொல்லும். ஆனா உமக்கிருக்கற வாயையும் புத்தியையும் பார்த்தால் நீர் கன்சல்டன்ஸி வைத்தால் நல்லா காசு அள்ளலாம்.." என்று ஆலோசனையோடு யூடியுப் பிலிம் வேற காட்டியிருந்தார்.நமக்கு வேற அலை வரிசை ஒண்ணா வெலை செய்யுதா!யோசனை செய்யவும்:)

ஆடுன காலும்,பாடுன வாயும் வரிசையில் எழுதுற கையும் சேர்த்துக்கிடலாம். கடந்த ஒரு மாத காலத்தில் எப்படி தொழில் துறையில் நுழையலாம் என்ற திட்டமிடலின் முதல் சுற்றில் சட்டபூர்வமாக இணைவதற்கான வெற்றியின் முதல் படியில் நுழைந்து விட்டேன்.என்னோடு இணைந்து கொள் என்ற பெரும்பாலோனோரின் விருப்பம்,நம்மை ஆட்டைய போட்டுடுவானோ என்று நான் இணைய நினைப்பவர்களின் தயக்கம்,காசு கொடு என்ன வேணுமோ பண்ணிக்கோ என்ற பல அனுபவங்களோடு என் மீதான நம்பிக்கையையும்,மதிப்பையும் சரியான பல் நோக்கு நிறுவனத்தோடு கொண்டு சேர்த்தது நிவின் என்ற ஒரு தமிழ்க் கரம்.பெரும்பாலான வியாபார பேச்சுக்கள் அலுவலகத்தின் நாறகாலிகளில் பேசி முடியும் போது நேராக வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போய் அரபி காபியும்,இனிப்பும் கூடிய உபசரிப்புடன் வியாபார ஒப்பந்தங்களை பேசி வந்துள்ளேன்.என்னைப் பற்றி அனைத்தையும் நிவினிடம் சொல்லி மெய்யாலுமே பிளாக்கன் என்பதை குறிப்பிட மறந்து விட்டேன்:)காலம் வரும் போது சொல்லிக்கொள்ளலாம்.

வியாபார புதிய சிந்தனைகள்,சுதந்திர எண்ணங்கள்,விளம்பர யுக்திகள்,ருசி செய்து பாரு பிடிச்சா காசு கொடு இல்லாட்டி வேணாம் என்ற பலவற்றிலும் என்னை கவர்வது அமெரிக்காவே.நாமும் அவர்களை பார்த்து நிறைய பொருட்களை பொருள் மாற்றம் செய்து அழகு படுத்தி சந்தை படுத்தி விடுகிறோம். உதாரணமாக சொன்னா மசாலா,இட்லி தோசை மாவு மாற்றங்கள்.நம்ம அம்மா,சகோதரிகள்,கட்டை பிரம்மச்சாரிகள் அனைவரும் ரசம் வைக்கனும்ன்னா புளிக்கரைசலை ஊற வைத்து இறுத்து ஊற்றி ரசம் வைப்பதுதான் பாரம்பரிய ரசம் சமையல் முறை.நம்ம ஊர் புளி பம்பாய்க்கு ரயில் பயணம் செய்து அங்கே ஒரு நிறுவனம் கழிவுகள் நீக்கி multi purpose Tamarind என்றும் சமோசாவுக்கு தொட்டுக்க Tamarind sauce என்றும் பம்பாயில் வித்தது போக கொஞ்சம் பெட்ரோல் டாடரையும் பார்க்கலாம் என்று 1000 x 24 பாட்டில்களை இங்கே கொண்டு வந்து சேர்த்தால் இங்கே மார்க்கெட்டிங் செய்ய முடியவில்லை.இதுல என்ன ஒரு புது செய்தின்னா நம்ம ஊர்ல மோர் குடிக்கிற மாதிரி புளி ஜூஸ்தான் அரேபிய சீசா புகையிழுக்கும் கடைகளின் மெனு என்பது நான் புகைபிடிக்காத ஒரே காரணத்தால் எனக்கு இதுவரை தெரியாது.

மேலும் இப்படி ஒரு பொருள் சந்தையில் இருப்பதே பலருக்கும் தெரியாது.இதனை எப்படி சந்தை படுத்துவதென்பது என்பதில் துவங்கி முன்பு ஒரு முறை தமிழில் புகைப்படக்கலை பதிவுகளின் நிபுணர்களில் ஒருவரான நாதாஸ் ஒரு பிரிட்ஜுக்குள் ஒரு கை மட்டும் போய் ஒற்றை கொக்கோகோலாவை எடுப்பது மாதிரி ஒரு படம் போட்டிருந்தார்.கொஞ்சம் வித்தியாசமான பார்வை இன்னும் நினைவில் நிற்கின்றது.தமிழில் புகைப்படக்கலை பக்கம் போய் மிக அதிக காலங்கள் ஆகிவிட்டன.இனி வந்து பார்க்கிறேன்.

இது போல் விளம்பர யுக்திகள்,பொருட்களின் மார்க்கெட்டிங் துவங்கி இங்கே என் புருசனும் கச்சேரிக்கு போறான்ங்கிற மாதிரி நிறைய இணைய தளங்கள் நொண்டிகிட்டி இருக்கின்றன.இவற்றை கண்டு பிடித்து ஒடைஞ்ச கை,கால்களை ஒட்ட வைக்கவோ அல்லது புதுசா முக பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது என பல் நோக்கு வியாபார திட்டங்களோடு அதிகம் போட்டிகள் இல்லாத பொருட்களை தமிழகம்,அமெரிக்காவிலிருந்தே ஆன்லைனில் விற்பது என்ற புது முயற்சிகள்.யாராவது ஏற்றுமதி பொருட்கள்,புது யுக்திகள் சந்தைபடுத்தல் ஆர்வம்,பொழுது போக்குக்கு புகைப்படம் எடுப்பவர்கள், இணைய தளம் உருவாக்குபவர்கள்,கிராபிக் டிசைனர்கள் கொஞ்சம் காசும் பார்க்கலாமே என்று நினைப்பவர்கள் பின்னூட்டத்திலோ அல்லது rajanatcbe@gmail.com முகவரிக்கு தனி மடல் அனுப்பவும்.

அமெரிக்க டாலர்ல வித்தா 55-60 ரூபாய்தான் கிடைக்கும். அதையே குவைத் தினாரில் விற்றால் 180-200 ரூபாய் கிடைக்கும்.அமெரிக்காவின் பெயர் அறிமுகத்தால் செந்தில் மாதிரி 60ரூபாய் அமெரிக்கா டாலர்தான் பெருசுன்னா நீங்கள் போக வேண்டிய முகவரி கூகிள் தேடல்.

மறுபடியும் ஒட்டவைக்கும் போதுதான் கவனிச்சேன்.மெல்ல நகர்ந்து,ஊர்ந்து இதுவரையிலான பார்வையாளர் வரிசை 299. இனி யார் 300 என்பதை ஒட்ட வச்சிட்டு பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.இதுவே இதுவரையிலான ஏனைய பதிவர்களுக்கான எனது பின்னூட்டங்கள் என்றால் எண்ணிக்கை வரிசை எகிறும் என நினைக்கிறேன்.காரணம் பதிவுகள் சொல்வதை விட அப்போதைக்கான உடனடி நிவாரண எண்ண வடிகால் பின்னூட்டம் என்பதால் மேயுறதுதான் இதுவரை எனது முதல் விருப்பமாக இருந்தது.இனி கூகிள்காரனிடம் சொல்லி பின்னூட்டத்துக்கும் அலாஸ்கா வரிசை ஏத்த சொல்லனும்:)

இப்போதைக்கு அனைவருக்கும் மீண்டும் நன்றி வணக்கம் சொல்லிட்டு உட்கார்ந்துக்கிறேன்.


Monday, June 10, 2013

வெச்சுட்டான்யா ஆப்பு!

வாழ்க்கையின் இனிமையான தருணங்கள் என்றால் குழந்தை பருவம்.பள்ளி பருவம்,கல்லூரி,காதல்,கல்யாணம்,குடும்பம் என்பதோடு நிச்சயம் தமிழ்மண நேரங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.அதனை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்ற நிலையில் யார் என்ன சொல்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை.நக்கீர பரம்பரை வவ்வால்!தொலைக்காட்சி பார்த்தே நடராஜன் பரிட்சை எழுதுகிறான் என்ற கவலையெல்லாம் இனி வேண்டாம்.நேற்று நரேந்திர மோடிதான் அதிகார பூர்வ பிஜேபி தேர்தல் இயக்குநர் என்பது தவிர இந்தியாவில் என்ன நிகழ்கிறது என்பது கூட தெரியாது.இனி காங்கிரஸ் சார்பாக ராகுல் மல்லுக்கட்ட தயாரா என்பதை மட்டும் தொலைக்காட்சியில் எதிர்பார்க்கிறேன்:)

இரண்டு  விவாத சேம்பியன்கள் விட்டேனா பார் என்ற போட்டியில் கலந்து கொள்ள முடியாதபடி தற்போது மேய்க்கும் ஒட்டக நிறுவனம் லே ஆஃப் என பலரை வேலை நீக்கம் செய்து விட்டதில் நானும் ஒரு பிரதிநிதி என்பதால் வவ்வால்,வியாசன் விவாத களத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.மன்னிக்கவும்.

ஒரு லீவு எடுத்துட்டு இந்தியா போய்ட்டு திரும்பி வந்தால் அண்ணன் எப்ப போவான் நாற்காலி எப்ப காலியாகும் என காத்திருந்த நிறுவனம் வந்தவுடன் லே ஆஃப் கொடுத்து விட்டார்கள்.இருந்தாலும் இன்னும் இங்கே ஒட்டகம் மேய்க்கும் அனுமதி இருப்பதால் சரி என கையெழுத்து போட்டுக்கொடுத்து விட்டேன் நமது திறமை நம்மிடம்தானே இருக்கிறது என்ற நம்பிக்கையில். இனி மேல் எந்த நிறுவனத்திலும் பணி செய்வதில்லையென்ற தீர்மானத்தோடு தனக்குத் தானே சுய முயற்சியில் உள்ளேன்.பெரும்பாலும் விளம்பர நிறுவனம், மார்க்கெட்டிங, ஏற்றுமதி-இறக்குமதி போன்றவற்றில் கவனம் செலுத்தலாம் என உள்ளேன். கிராபிக் டிசைனர் மற்றும் இ-மார்க்கெட்டிங் துறையில் யாராவது இருந்தால் சுதந்திரமாக பணி செய்யும் கால அவகாசம் உள்ளவர்கள்  rajanatcbe@gmail.com இமெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.


ஒட்டகம் மேய்க்கிற வேலை ஒருபுறமிருக்க கடந்த சில மாதங்களாக சவுதியின் சட்ட மாற்றங்களைத் தொடர்ந்து இப்பொழுது குவைத் நாட்டிலும் சட்டங்களை இறுக்கும் முயற்சிகள் தொடர்கிறது.வாகனம் ஓட்டுவதில் சாலை விதிமுறைகள் மீறல்,வாகனம் ஓட்டும் உரிமை இல்லாதவர்கள், அங்கீகாரமின்றி விசா காலாவதியாகியவர்கள் என்று உள்துறை தனது கடமையை செய்கிறது என்று சொன்னாலும் கூட கல்யாணமாகியும் பிரம்மச்சாரிகளாக கூட்டாக தங்கும் ராஜஸ்தான் மாநிலத்தவர்கள் பலரையும் இரவு நேரத்தில் தங்குமிடங்களில் புகுந்து விசாரணை செய்து அப்படியே அனுப்பி வைத்து விட்டார்கள் என்ற தகவல்கள் கசிகின்றன.பொதுவாக இந்த நாட்டில் உள்ளவர்கள் சட்டங்களை மதிக்காமல் விசாக்களுக்கு காசு வாங்கி விட்டு எப்படியோ சம்பாதித்துக்கொள் என்று விட்டு விடுகிறார்கள்.விசா நிறுவனங்களும் அப்படியே.இந்திய தூதரக செயல்பாடுகள் பற்றி பதிவாகவும்,பலரின் பின்னூட்டங்களுக்கும் கருத்து சொல்லியாகிவிட்டது. ரஷ்யா காலத்து சிவப்பு நாடாக்கள் இன்னும் இறுகியே நிற்கின்றன. இந்திய தூதரகம் முதலில் தூங்கிக்கொண்டிருந்ததால் பலருடைய பாஸ்போர்ட் கூட இல்லாமல் பலரையும் டெல்லிக்கு அனுப்பி விட்டார்கள் என்றும் இதில் சேட்டன்கள் கிட்டத்தட்ட 50 பேர்கள் இந்தியா சென்று கேரள அரசு மத்திய அரசிடம் முறையிட பின் இந்திய தூதரக அதிகாரி டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவில் அனுமதிக்க முடியாது என அழுத்தங்கள் கொடுப்பதாகவும் செய்திகள் வருகின்றன.குவைத் உள்துறை இதற்கெல்லாம் அலட்டிக்காமல் இன்னும் சிறையில் தள்ளிக்கொண்டுதான் உள்ளது.ஜனத்தொகை ரீதியாக இந்தியர்கள் அதிகம் இருப்பதால் சட்டவரைமுறை மாற்றங்களில் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் இந்தியர்களாகவே உள்ளார்கள்.இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்களுக்கு வயலார் ரவி என்ற அமைச்சரை மத்திய அரசு வைத்திருந்தும் வயலார் ரவி " இப்படியொரு நிகழ்ச்சி குவைத்தில் நடப்பதே எனக்கு தெரியாது" என்று தொலைக்காட்சிக்கு பேட்டி தருகிறாராம்.

பிரச்சினைகளுக்கு அரசு ரீதியில் தீர்வுகள் வந்தால் நல்லது.இல்லையென்றால் இந்திய வேலையில்லா திண்டாட்டத்தில் பலரும் இந்தியா திரும்பும் பட்சத்தில் இந்தியாவே பாரங்களை சுமக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

முன்பு மாதிரி வளவளத்தான் பின்னூட்டங்கள் போடும் கால அவகாசம் இல்லாததால் பின்னூட்ட கருத்துக்களுக்கு பதில் சொல்ல இயலாத சூழலுக்கு மன்னிக்கவும்.

இப்பொழுது பதிவை ஒட்டவைக்கும் போதுதான் பார்த்தேன்.பின்னூட்டங்கள் 94 தொடுகிறது.ஆட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் இரட்டை சதம் அடித்திருக்கலாம். வவ்வால்,வியாசன் மற்றும் அனைத்து பின்னுட்ட நண்பர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக.





Monday, May 20, 2013

வீண் போன சீமான்!

முள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொல்வதற்கு தலைக்குள் நிறைய சுற்றிக்கொண்டிருந்தாலும் கூட பதிவுகள் எதையும் கிடப்பில் போட்டு ஊறவச்சு சொல்லும் வழக்கமில்லாததால் அவ்வப்பொது ஏற்படும் உணர்வுகளை அப்படியே கொட்டுவதுதான் வழக்கம்.இதுவும் அப்படியே!

இன்றைக்கு சீமான் பொதுக்கூட்டம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டதும் கூடவே ஜார்ஜ் புஷ் ஈராக் பயணத்தை யாரிடமும் சொல்லாமல் சென்றது மாதிரி காஷ்மீர் தனிநாடு கோரிக்கையாளர் யாசின் மாலிக்கை யாருக்கும் தெரியாமல் தமிழகம் கூட்டி வந்து பேச வைத்த வரலாற்று தவறை அறிந்து திடுக்கிட்டேன்.சீமான் உச்சக்குரலில் தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் என்ற சீமானின் பிம்பத்தைக் கடந்து பிரச்சினைகளின் மையப்புள்ளிகளை அலசும் திறனற்ற மனிதராக இருக்கிறாரே என்றே மனம் பதைபதைக்கிறது. 

இந்த பதிவை எழுதும் முன் இதற்கும் முன் அருந்ததிராயின் இலங்கை காஷ்மீர் பிரச்சினை குறித்த கருத்தை தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.காஷ்மீர் பிரச்சினை இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் அமெரிக்காவின் பாகிஸ்தான் ஆதரவு நிலையில் இந்திரா காந்தியின் பாகிஸ்தான் இரண்டாக உடைந்த பங்களாதேஷ் உருவாக்கத்திற்கு பின் பாகிஸ்தான் வன்மத்தாலும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கப்பட்டு காஷ்மீர் பண்டிட்கள் துரத்தியடிக்கப்பட்டு தலிபான் உருவாக்கத்தில் அல்ஹைதாவின் உச்சம் தொட்டு ஆப்கானிஸ்தான் அரசியலோடு அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பின் உலக அரசியல் மாற்றத்திற்குப் பின் ஜார்ஜ் புஷ்சும்,ஒபாமாவும் அமெரிக்கா நாட்டாமை செய்யாது இந்தியாவும்,பாகிஸ்தானும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஒதுங்கிக் கொண்ட தற்போதைய நிலையின் முக்கிய நிகழ்வுகளில் இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள்,காஷ்மீரிகளின் உயிர் இழப்பு துயரங்கள் இணைந்த வரலாற்றில் இந்திய பகுதியின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்துடன் தனது முதலமைச்சரை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் வல்லமையோடு தனி மாநிலமாக திகழ்கிறது.

இலங்கை இனம்,மொழி அடிப்படையில் ஆராய வேண்டிய ஒன்று.காஷ்மீர் இந்தியா,பாகிஸ்தான் பிரிவினையின் அரசியல் அடிப்படையில் உருவான ஒன்று.இரண்டையும் ஒன்றாக ஒப்பிட முடியுமா?இலங்கையில் வாழ்வோர்,புலம் பெயர்ந்தவர்கள்,தமிழக தொப்புள்க் கொடி உறவைத் தாண்டியும்,மனித உரிமைக் குழு அமைப்புகள்,மேற்கத்திய நாடுகளின் ஆதரவு,ஐ.நா வரையிலும் போய் உட்கார்ந்து கொண்ட தமிழர்களின் உரிமைகளை யாசின் மாலிக் ஆதரவு பெற்று தந்து விடுமா? மாறாக யாசின் மாலிக்கின் ஆதரவு எப்படிப்பட்ட பின்னடைவை ஈழத்தமிழர்களுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறதென்ற புரிதலாவது இருக்கிறதா சீமான்?

தடாலடி அரசியலுக்கு வேண்டுமென்றால் யாசின் மாலிக் உதவக்கூடும்.நாளை பாகிஸ்தானில் ஒருவர் யாசின் மாலிக் கருத்தை ஆதரிக்கிறேன் பேர்வழியென உள்குத்து அரசியலோடு தமிழகத்திற்குள் மூக்கை நுழைக்க அனுமதிப்பீர்களா சீமான்? தமிழகத்தைப் பொறுத்த வரையில் மரணத்தின் இறுதி மூச்சை சுவாசித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் என்ற நம்பிக்கையை தகர்த்து ஆக்சிஜன் கொடுத்து முதல் உதவி செய்திருக்கிறீர்களே சீமான்!உங்களுக்கு வேண்டுமென்றால் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் மேடைப் பேச்சும்,அப்ப இனித்தது இப்ப கசக்குதா போன்ற வசனங்கள் இனிக்கலாம் கசக்கலாம்.ஜெயலலிதா ப.ம.கவுக்கு வைத்த ஆப்பை போல் உங்களுக்கும் ஆப்பு வைத்தாலும் தப்பேயில்லை.

திரைக்களம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.அதில் மட்டும் உங்கள் நிபுணத்துவம் காட்டுங்கள். துயர ஈழத் தமிழர்களை இனியும் துயரத்தில் ஆழ்த்தாதீர்கள்.

Sunday, March 24, 2013

மாணவ சகோதர சகோதரிகளே!உங்கள் நண்பர்கள் யார்?

தமிழகத்தின் மீண்டும் ஒரு முறை புரட்சி மாற்றத்துக்கு வித்திட்ட மாணவ தோழமைகளுக்கு நன்றியோடு மீண்டும் கல்வியில் கவனம் செலுத்தும் கால அறிக்கை வந்துள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்ட மனிதாபிமான உணர்வுகளும்,பன்னாட்டு அரசியல் பற்றிய தெளிவும் இருப்பதை ஊடக நேரலைகளின் மூலம் உணர முடிகிறது.அதே நேரத்தில் உண்ணாவிரத போராட்ட மாணவர்களின் தனிக்கருத்துகளில் பல மாற்றுக்கருத்துக்களும் எதிரும் புதிருமாகவும்,இடது வலதுசாரி சித்தாந்த வாசங்கள் காணப்பட்டதன் விளைவாக இந்தக் கருத்துக்கள் சில மாணவர்களுக்குப் போய்ச் சேரவேண்டுமென்ற நோக்கில் பதிவு செய்யப்படுகிறது.

.ஈழப்பிரச்சினையைப் பொறுத்த வரையில் இந்திய மத்திய அரசின் ஏமாற்று வித்தைகளை போராட்டக் கோரிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஐ.நா.மனித உரிமைக்குழுவில் தனது ஆதரவாளர்கள் யார்,ஆதரவின்மையாளர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்காகவே இலங்கை வாக்கெடுப்பை இந்தியாவின் ஆலோசனையையும் மீறி வற்புறுத்தியது.இந்தியா இலங்கை ஆதரவு, ஆதரவின்மையிலிருது தப்பிப்பதற்காகவே மொத்தமாக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு விரும்பியது.இலங்கை அரசு தான் தோல்வியடைவோம் என அறிந்தும் தீர்மான ஆதரவு நாடுகள்,தமது ஆதரவு நாடுகளை அறிந்து கொள்ள விரும்பியது.இலங்கை அரசுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர்களுக்காக போராடும் ஒவ்வொருவரும் தமிழர்களின் ஆதரவாளர்கள் யார், ஆதரவின்மையாளர்கள் யார் என்று அறிந்து கொள்வது முக்கியம்.

அமெரிக்க தீர்மான ஆதரவு நாடுகள்
 
 இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்த நாடுகள்

நடுநிலை நாடுகள்
 பட உதவி யின் இணைய தேடல்: rste.org

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை காலம் தொட்டு இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பல ஊடகங்களும்,தமிழ் உணர்வாளர்களும்,இணைய கருத்துப் பரிமாறல்களும் செய்து வந்தன.என்ற போதிலும் மொத்த தமிழர்களையும் உலகையும் உலுக்கவில்லை.

போருக்குப் பின் ஒப்புக்கு சப்பாணியாக பான் கி மூன் இலங்கை பயணம் செய்தார். 2009ல் ஐ.நா மனித உரிமைக்குழு தீர்மானத்தை அனைத்து நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.இதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.இதில் திருப்தியடையாத மனித உரிமைக்குழுக்களின் அழுத்தங்களின் காரணமாக 2011ல் Report of the Secretary-General's Panel of Experts on Accountability in Sri Lanka என முவர் குழுவை அமைத்தார்.



மூவர் குழுவின் உறுப்பினர்கள்

1. இந்தோனேசியாவின் முன்னாள் அட்டார்னி ஜெனரலும்,மனித உரிமைக்குழு தேசிய ஆணையத்தின் உறுப்பினர மர்சூகி தருஸ்மன்- Marzuki Darusman,

2. தென் ஆப்பிரிக்காவின் நீதிபதியும் டெஸ்மன்ட் டூடுவின் சமாதான நிறுவனத்தின் நிர்வாக தலைவர் யாஸ்மின் சூகா - Yasmin Sooka

3/ அமெரிக்காவின் மிக்ஸிகன் சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீவன் ஆர். ராட்னர் - Steven R. Ratner

இம் மூவரின் இலங்கை போர்க்குற்ற அறிக்கை பக்க சார்பில்லாமல் இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்களையும்,விடுதலைப்புலிகளின் தவறுகளையும், பொது மக்களை பாதுகாப்பு கேடயங்களாக பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்தது.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளையும்,விடுதலைப்புலிகள் மீதான சிறுவர்களையும் போரில் பயன்படுத்தியது போன்ற குற்றங்களையும் இதன் அடிப்படையில்தான் துவங்கியிருக்க வேண்டும்.மாறாக இலங்கை அரசு இம்மூவர் குழு ஐ.நா அறிக்கையை தருஸ்மன் அறிக்கையென்றும் தனது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் நிராகரித்தது.இதனிடையே தமிழகத்தில் கட்சிகளின் நலன் சார்ந்த ஆனால் தமிழ் உணர்வோடு ஈழமக்களுக்கான குரல்கள் ஒலித்தன.

தி.மு.க அ.தி.மு.க பங்காளிச் சண்டைகளுக்கும் அப்பாலும்,திருமாவளவன் தி.மு.க சார்பு குரலுக்கு அப்பாலும் ஈழப்பிரச்சினை பற்றிய கவலைகள் இருக்கவே செய்தன.பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத் தாயகம் என்ற பெயரில் ஐ.நா.மனித உரிமைக் குழுவுக்குள் சென்றதைப் பாராட்ட வேண்டும்.ராமதாஸ் குழுவினரின் சாதி பிற்போக்குத்தனம்,ஈழ ஆதரவு இரண்டையும் வெவ்வேறு தராசுகளில் எடை போடுவது நல்லது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

நிரந்தர ஈழத்தமிழர்களின் குரலாக வை.கோ,நெடுமாறன் போன்றவர்களின் குரல் ஒலித்தாலும் அதற்கான வலுவான மக்கள் பலமில்லாமல் இருந்தது.
புதிய குரலாக சீமான் உருவாகினாலும் கூட அவரது உணர்ச்சி வசப்படல்,தெளிவான சிந்தனையற்ற தன்மை அல்ட்ரா போராளியாக மட்டுமே பிரதிபலித்தது.மே 17 இயக்க இளைய தோழர்கள் திருமுருகன்,உமர் போன்றவர்களின் உலக அரசியல் தெளிவு நம்பிக்கை அளித்தாலும் கூட மெரினா மெழுகுவர்த்தி போராட்டங்கள் வரவேற்பை பெற்றாலும் கூட மக்களிடையே பரவலாக போய்ச் சேரவில்லை.பத்திரிகையாசிரியர் அய்யநாதன் போன்றவர்கள் ஈழத்தமிழர்களின் பிரச்சினையை ஊடகங்கள் மூலமாக பேசி வந்தனர்.சென்ற பாராளுமன்ற தேர்தலின் காலத்தில் கவிஞர் தாமரை இந்தியா மீது அறம் பாடினார்.புலம் பெயர் தமிழர்கள் அமைப்பு ரீதியாகவும்,மனித உரிமைக்குழுக்களின் துணையோடும், உண்ணாவிரதம், ராஜபக்சே லண்டன் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் என பல வகையிலும் போராடியும் கூடஇலங்கை அரசு இந்தியா,சீனா,ரஷ்யா கவசங்களோடு அனைத்து அழுத்தங்களையும் உலக அரங்கில் உதாசீனப்படுத்தி வந்தது.ஒருங்கிணைந்த தன்மையற்ற நிலையில் தமிழர்களிடம் ஓரளவுக்கு சோர்வும் கூட காணப்பட்டது

இலங்கைப் பிரச்சினையை உலகம் திரும்ப பார்க்க வைத்ததின் பின்புலமாக புலம் பெயர்கள் தமிழர்கள் இருந்திருக்க கூடுமென்றாலும் கூட இலங்கையின் போர்க்குற்ற மனித உரிமை மீறல்களை.உலக அரங்கில் கொண்டு வந்ததின் முக்கிய பங்கு சேனல் 4 தொலைக்காட்சிக்கும்,அமெரிக்கா ஐ.நா மனித உரிமைக்குழுவில் இலங்கை மீதான தீர்மானம் கொண்டு வந்ததுமே.

இதனைத் தொடர்ந்து திருடனையே நீதிபதியாக நியமித்த கதையாக கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும்- LLRC என்ற பெயரில் இலங்கையே தன்னைத் தானே பரிசோதித்துக்கொள்வதாக அறிவித்ததன் அடிப்படையிலேயே இப்பொழுது இரண்டாம் முறையாக அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேறியுள்ளது. அமெரிக்காவின் தீர்மானம் நான்கு வரைவு மாற்றங்கள் செய்யப்பட்டு நீர்த்துப் போய் இருந்தாலும் கூட அமெரிக்க தீர்மானத்தை ஒட்டியே மேலும் தமிழர்கள் நகரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.சீனா,ரஷ்யா போன்ற நாடுகள் ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்து உதவப் போவதில்லை.

இப்பொழுது இந்திய பாராளுமன்றத்தில் தி.மு.க,அ,தி.மு.க போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தங்கள் போன்றும்,கலைஞர் கருணாநிதி கூட்டணியிலிருந்து தி.மு.க விலகிக்கொள்கிறது என்று காங்கிரஸை கழட்டி விட்டது போன்ற சூழலுக்கு ஏற்ப இந்தியா செயல்படும்.எனவே ஓரளவுக்கு மனித உரிமைகளை மதிக்கும் ஐரோப்பிய நாடுகள்,அமெரிக்காவின் ஆதரவோடு மட்டுமே ஈழத்தமிழர்களின் நல்வாழ்வுக்கான வழிகளை தேட முடியும்.

மாணவர்கள் போராட்டங்கள் அவசியமான ஒன்று என்பது நிரூபணமாகி விட்ட ஒன்று என்ற போதிலும் அமெரிக்காவிற்கு எதிராகவும் பெப்சி,கோகா கோலாவை புறக்கணிப்போம் போன்ற போராட்ட அணுகுமுறைகள் போராட்டத்துக்கு உதவாது.பெப்சி,கோகா கோலா புறக்கணிப்பு போராட்டம் ஏற்கனவே அமெரிக்கா ஈராக்கின் ஆக்கிரமிப்பில் பரிசோதனை செய்து பார்த்து தோல்வியடைந்த ஒன்று.அமெரிக்கா ஒரு புறம் மனித உரிமைகளை வலுப்படுத்தவும் இன்னொரு புறம் இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவுவது போன்ற இரட்டை கொள்கையாக போராட்ட களம் அமைய வேண்டும்.அமெரிக்கா மீதான எதிர்ப்பு சீனா,ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் முக்கியமாக இலங்கைக்கு உதவுவது மாதிரியாக அமைந்து விடும்.

ஒவ்வொரு இடத்தின் தூதரகங்கள் சார்ந்து மக்கள் போராட்டங்கள்,ஒரு நாட்டின் பிரச்சினைகள்,அரசியல் நகர்வுகள் என அத்தனையும் அரசு கொள்கைகள் அமைவதற்கு ஆவணப் பத்திரங்களாகின்றன என்பதை பத்திரிகை செய்திகளுக்கும் அப்பால் என்ன நிகழ்கின்றன என்பதை விக்கிலீக்ஸ் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது.எனவே போராட்டக்கள சாதுர்யம்,ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்த அல்லது மனித உரிமைகளைக்கு ஓரளவுக்கு முக்கியத்துவம் தரும் நாடுகளீன் நட்போடு இன்னும் மேல் நோக்கி நகர்வதே ஈழத்தமிழர்களுக்கு விடியலைப் பெற்றுத் தரும்.

வரும் நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தின் குரலையும்,ஈழத்தமிழர்களின் பிரச்சினையை ஜனநாயக ரீதியாக முன்கொண்டு செல்ல வேண்டிய ஒரு முக்கியமான காலகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.அரசியல் சுயநலங்கள்,ஓட்டுக்கு பணம் போன்றவைகளை புறம் தள்ளி யார் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் குரல் கொடுப்பார்கள் என்றுணர்ந்து  செயல்பட வேண்டிய தருணமிது.மொத்தமாக ஒரே கட்சிக்கு வாக்களிப்பது கட்சி சார்ந்து நாடாளுமன்றத்தில் வலுவான நிலையை கொண்டு வருமென்றாலும் கூட ஜனநாயக ரீதியாக ஆரோக்கியமான ஒன்றல்ல.தமிழர்களின் மனநிலை என்னவென்பதை தேர்தல் முடிவுக்கு பின் அலசுவோம்.