அரசியல் அதிகாரமில்லாத தி.மு.கவை விமர்சிப்பதில் இப்பொழுதெல்லாம் சலிப்பே தோன்றுகிறது.எதிர்க்கட்சியாக இருக்கும் தே.மு.தி.க ஆளும் கட்சியுடன் இணக்கமாக அடக்கி வாசிப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தாமல் நல் ஆட்சி புரிவதற்கு வழிவகுக்கும் நிலையில் குட்டையைக் கிளப்பும் பழைய பழக்கத்தில் தி.மு.கவே சலசலப்புக்களை அறிக்கைகளின் வாயிலாகவும் பொதுக்குழுக் கூட்டமெனவும் வெளிப்படுத்துகிறது.அறிக்கைகளும், பொதுக்குழு கூட்டமும் ஒரு ஜனநாயக கட்சியின் தேவையென்ற போதிலும் தேவைகளின் தேவைகள் குறித்த விமர்சனங்களை வைத்தாக வேண்டியுள்ளது.
இந்த பதிவின் தேவையும் கூட அரச அதிகாரத்தில் சுய சொறிதலாக பாராட்டு விழாக்களைக் கண்டு கழித்து வெறுமனே இருந்து விட்டு அதிகார அடக்குமுறைகளை ஏவி விட்டு இப்பொழுது பல் பிடுங்கப்பட்டு பதுங்கி கிடக்கும் நிலையில் தமிழீழம் குறித்த மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோவை பொதுக்குழு தீர்மானம் குறித்தே.
பக்கச் சார்புகளற்ற சமூக,அரசியல் நன்மை தீமைகளை விமர்சிக்கும் குணம் மட்டுமே தமிழர்களை நல்வழிப்படுத்தும்.தி.மு.க என்ற இயக்கம் அதன் வேர்களை நன்றாகவே ஊன்றியுள்ளதென்பதை கோவை பொதுக்குழு கூட்டம் தெரிவிக்கிறது.அதே சமயத்தில் புன்முறுவல் முகங்களை மு.க முதல் யாரிடத்திலும் காணவில்லை.அரசியல் அதிகாரம் சார்ந்தே உலக அரசியல் அனைத்தும் இயங்குகின்றன.மக்களின் தேவைகளையும், எவை வேண்டாம் என்பதையும் ஜனநாயகத்தில் மக்கள் குரலும் அரசியல் அதிகாரமும் தீர்மானிக்கின்றன.
எனவே அதிகார காலத்தின் இறுதியில் தனது குடும்பத்தையும்,சுய கௌரவத்தையும் கூட காப்பாற்ற முடியாத நிலையில்,அதிகார துஷ்பிரயோகங்கள் பல்லைக்காட்டிச் சிரித்துக் கொண்டிருக்கும் தற்போதைய தோல்வி நிலையில் கோவை தீர்மானங்கள் என்ன நலனை தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் கொண்டு வந்து சேர்க்கும்?20 அம்சத் திட்டங்களுக்குள் ஈழ பொது வாக்கெடுப்பு என்பதெல்லாம் இன்னும் யாரை ஏமாற்றும் வேலை?
தமிழர்களாய் ஈழக்கொலை செய்தோம்!கொலைக்கு உடந்தையாக இருந்தோம்!தொடர்ந்தெழுந்த தெருக்குரல்களின் போதேல்லாம் மௌனியாக இருந்து விட்டு உடல் ஊனம் மட்டுமல்ல,ஆத்மாவே முடமாகிப் போன பின் ஈழத்தமிழர்களுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கூட்டத்தோடு கோவையில் கோயிந்தா போடுகிறீர்களே!இப்போதாவது புத்திவந்ததே என்று சிலர் சமரசம் செய்து கொண்டாலும் இதோ ஜெயலலிதா சொல்லும் இலங்கைக்குப் பொருளாதாரத் தடை கம்பீர அதிகாரக் குரலுக்கும் மூன்றாம் கட்சியாய் முடமாகிப்போன பல் பிடுங்கப்பட்ட தீர்மானத்தின் வலுவுக்குமுள்ள வேறுபாடுகள் புரியாத காலத்திலா நாம் வாழ்கிறோம்?ஜெயலலிதாவால் உரக்கச் சொல்லும் பொருளாதார தடையை ஏன் கருணாநிதியால் வாய் திறக்க முடியவில்லை?உலகமே இன்று போர்க்குற்றவாளியென கைநீட்டும் ராஜபக்சேவை கோபப்படுத்தக்கூடாதென்ற கோழைத்தனமல்லவா கருணாநிதியிடமிருந்து வெளிப்பட்டது?அவசர காலத்தை தாண்டியும் தி.மு.க பயணித்ததற்கான காரணங்களும் 2Gக்குள் முங்கி முழித்துக்கொண்டிருக்கும் காரணங்களும் ஒன்றா?
மக்கள் மறதியானவர்கள் என்பதை விட அவரவர் வாழ்வு சார்ந்த ஓட்டத்தில் தில்லாலங்கடி அரசியலை உற்றுநோக்கும் நேரமில்லாதவர்களாகிப் போனார்கள் என்பதே உண்மையாக இருந்தும் கூட தேர்தல் முடிவுகள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே பிரதிபலித்தது.இனியும் தேவை இது போன்ற தீர்மானங்கள் அல்ல.இன்னும் கனலும் கோபங்கள் தணிக்கும் ஈழமக்கள் முன் தி.மு.கவின் மன்னிப்பு. முந்தைய நாற்காலி மிராசுத்தனம் மன்னிப்பு கேட்கும் மனோபாவத்துக்கு இடம் கொடுக்காது என்றால் இனி தி.மு.க நாதியற்றே போகட்டும்.இது என் சாபம்!தமிழீழம் சார்ந்த மக்கள் வாக்கெடுப்பு செயல் திறனை ஈழ மக்களிடமும், ராஜபக்சே அரசிடமும்,இப்போது தமிழக ஆட்சியில் அமர்ந்திருக்கும் அ.தி.மு.கவிடமும்,ஐ.நா ச்பையிடமும் இப்பொழுது விட்டு விடுவோம்.ஈழ பொது வாக்கெடுப்புக்கான தார்மீக குரலை இந்த கணத்தில் தி.மு.க இழந்து விட்டது.
தி.மு.க புதிய நிலைகளில் இயங்கியதால் மட்டுமல்ல...தமிழ் உணர்வு சார்ந்த ஒருவன் தலைவனாய் இருக்கிறான் என்ற பழைய மூட நம்பிக்கையின் காரணமாகவும் அவசர காலத்தையும் தாண்டிய இயக்கமாக தி.மு.கவை பறைசாற்றிக்கொள்ள முடிந்திருக்கிறது.முந்தைய காலத்து தகவல் கொடுப்பது மட்டுமே என்ற நிலைமாறி இப்போதைக்கு தகவல் கொடுக்கலும் வாங்கலுமாய் மாறிப்போய் விட்டதால் 2Gயைக் கடந்த காலங்களும் அவசர நிலைக்கால கட்டங்களைத் தாண்டி வருமா என்பது கருணாநிதிக்குப் பின் மதிப்பீடு செய்ய வேண்டியவை.நமது தொலைக்காட்சிகளை விட கேரளத்து ஆசியநெட் செய்திக்காரன் தி.மு.கவை அங்குலம் அங்குலமாக கல்லூரி தவளை பரிசோதனை செய்கிறான்.
இதுவரையிலான அரசியல் ஆக்கிரமிப்பில் கருணாநிதியின் ஆளுமையும்,நா சுழற்றும் வல்லமையும் இருந்த மாநிலத்து மன்னன் மனப்பான்மை காலம் போய் மாநிலத்து ஆதரவுக்கு மத்தியில் காங்கிரஸ்க்கு கப்பம் கட்டும் பந்தம் விடவே விடாது என்ற அடிமை கொள்கைக்குப் பின்னால்,குறுநில மன்னர்களாய்,குண்டர்களின் தலைவனாய்,திகார் அரசிகளாய் குடும்ப அரசியலுக்குள் தமிழகம் இனியும் பவனி வருவதை விட,இதுதான் சமயமென வெற்றிடத்தில் மீன்பிடிக்க நினைக்கும் காங்கிரஸையும் கடந்து புதிய அரசியல் களங்களை இனியாவது தமிழகம் தோற்றுவிக்குமா?இல்லை அப்போலோவில் ஆகாயம் கடந்து பயணிக்கும் வேகத்தில் இனியும் கழுதையிலும்,குதிரையிலுமே தமிழகம் தொடர்ந்து பயணிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
டிஸ்கி:இந்த பதிவை இண்ட்லியில் இணைக்கும் சகாவுக்கு தன்யனானேன் சொல்வேன்:)
16 comments:
என்னமோ சொல்வேன் சொல்லியிருக்கீங்க நடா.இணைச்சிட்டேன் இண்ட்லில !
//ஹேமா said...
என்னமோ சொல்வேன் சொல்லியிருக்கீங்க நடா.இணைச்சிட்டேன் இண்ட்லில !//
அதானே!நன்றி சொல்வேன் என்ற அழகான வார்த்தை இருக்கும் போது தன்யனானேன் சொல்வானேன்:)
நன்றி ஹேமா.
இதுவரையிலான அரசியல் ஆக்கிரமிப்பில் கருணாநிதியின் ஆளுமையும்,நா சுழற்றும் வல்லமையும் இருந்த மாநிலத்து மன்னன் மனப்பான்மை காலம் போய் மாநிலத்து ஆதரவுக்கு மத்தியில் காங்கிரஸ்க்கு கப்பம் கட்டும் பந்தம் விடவே விடாது என்ற அடிமை கொள்கைக்குப் பின்னால்,குறுநில மன்னர்களாய்,குண்டர்களின் தலைவனாய்,திகார் அரசிகளாய் குடும்ப அரசியலுக்குள் தமிழகம் இனியும் பவனி வருவதை விட// என்ன சாட்டையடி வரிகள்..
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
இதுவரையிலான அரசியல் ஆக்கிரமிப்பில் கருணாநிதியின் ஆளுமையும்,நா சுழற்றும் வல்லமையும் இருந்த மாநிலத்து மன்னன் மனப்பான்மை காலம் போய் மாநிலத்து ஆதரவுக்கு மத்தியில் காங்கிரஸ்க்கு கப்பம் கட்டும் பந்தம் விடவே விடாது என்ற அடிமை கொள்கைக்குப் பின்னால்,குறுநில மன்னர்களாய்,குண்டர்களின் தலைவனாய்,திகார் அரசிகளாய் குடும்ப அரசியலுக்குள் தமிழகம் இனியும் பவனி வருவதை விட// என்ன சாட்டையடி வரிகள்..//
கருன்!கலைஞர் கருணாநிதியிடம் கற்றுக்கொண்டதை அவருக்கே அர்ப்பணிப்பு செய்கிறோம்:)
Super artical . . . Super sir
அருமையான
அசத்தலான
பதிவு சார்
குறு(மா)நில மன்னனாக இருந்தவர்
கப்பம் கட்டும் அடிமை மாதிரியான
மன்னனாக
தலைவனாக மாறியதை
காலம் கடந்து
பதவி மாயம் மறைந்து
அதிகார போதை இறங்கியதை அடுத்து
வந்த ஞானத்தை சொல்லிய விதம் அமர்க்களம்
திமுக இவ்வாறு குடும்பச் சேற்றில் புரள்வதன் மூலம், நல்லதொரு எதிர்க்கட்சியை நாம் இப்போது இழக்கின்றோம்..இனியாவது திருந்தி, மீண்டு வரவேண்டும்..பார்ப்போம்.
முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும் என்பதனை விளக்கும் வண்ணம், குடும்ப அரசியலுக்கு உறைக்கும் வண்ணம் ஓர் அருமையான பதிவினைத் தந்திருக்கிறீங்க.
தி.மு.க. நாதியற்றே போகவேண்டும் இது நிறையபேரினுடைய ஆவல் ராஜநட.. மு.க. வின் அறிக்கைகள் தரம் தாழ்ந்தவை என்றே ஒதுக்கிவிடவேண்டும்.
பாருங்க..காலம் சொல்லும் பதிலை...
//"என் ராஜபாட்டை"- ராஜா said...
Super artical . . . Super sir//
ராஜா!நீங்க இண்ட்லியில் பதிவை இணைப்பீங்களோன்ன்னு எதிர்பார்த்தேன்.ஹேமா முந்திகிட்டாங்க:)தொடர் கருத்துக்கு நன்றி.
மூனா கானா குடும்பம் உருப்படவே உருப்படாது ஏன்னா செய்த அநியாயம் அப்பிடி....!!!
//A.R.ராஜகோபாலன் said...
அருமையான
அசத்தலான
பதிவு சார்
குறு(மா)நில மன்னனாக இருந்தவர்
கப்பம் கட்டும் அடிமை மாதிரியான
மன்னனாக
தலைவனாக மாறியதை
காலம் கடந்து
பதவி மாயம் மறைந்து
அதிகார போதை இறங்கியதை அடுத்து
வந்த ஞானத்தை சொல்லிய விதம் அமர்க்களம்//
வாங்க ARR!பட்டும் புத்தி வராத அளவுக்கா தி.மு.க இயக்கமும்,கருணாநிதியும் இன்னும் இருக்கிறார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.டைட்டானிக் கப்பல் மாதிரி ஒரு இயக்கம் மூழ்கும் போதிலும் கூட தி.மு.க இயக்கத்தின் தொண்டர்கள் குரல் கொடுக்காது குடும்ப தலைவன் சொல் மிக்க மந்திரமில்லையென்ற நிலையில் காங்கிரஸ்க்கு கப்பம் கட்டும் அடிமைத்தனம் மட்டுமே மிஞ்சுகிறது.
// செங்கோவி said...
திமுக இவ்வாறு குடும்பச் சேற்றில் புரள்வதன் மூலம், நல்லதொரு எதிர்க்கட்சியை நாம் இப்போது இழக்கின்றோம்..இனியாவது திருந்தி, மீண்டு வரவேண்டும்..பார்ப்போம்.// தமிழகத்துக்கு தி.மு.க செய்த சமூக மாற்றங்கள்,நன்மைகளையும் கருத்தில் கொண்டே நாம் தி.மு.கவுக்கு எதிராக விமர்சனங்களை வைக்கிறோம்.வாழ்க குரல் கொடுக்கும் அடிமைத் தொண்டர்களை விட விமர்சனங்களை முன் வைக்கும் பதிவர்களின் கருத்துக்களையும்,பத்திரிகையாளர்கள் செய்தி வெளியீடுகளையும்,இன்னும் சொல்லப்போனால் சீமான் குரல் எழுப்பிய காலத்தே தி.மு.க சுதாரித்துக்கொண்டிருந்தால் இப்போதைய நிலைக்கு ஆலமரமாக வளர்ந்த இயக்கம் பேரழிவை சந்தித்திருக்காது.குருட்டு திருதராஷ்டிரன் மாதிரி சக்கர திருதராஷ்டிரனாய் குடும்பமே பெரிதென்ற சுயநலத்தால் வந்த விளைவுகள் அல்லவா இப்போதைய நிலை?ஸ்டாலின்,அழகிரி,கனிமொழிக்கும் அப்பால் ஏன் தி.மு.க சிந்திக்க மறுக்கிறது என்பது 1,76,000000000000000 நீண்ட பூஜ்யங்கள் கொண்ட கேள்வி:)திருந்துவதற்கான அழகான வாய்ப்பாக அமைந்தது கோவை பொதுக்குழு கூட்டம்.இப்போதைக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.இப்போதைய நிலையில் தனி மனுஷி ராணுவத்துக்கு மாற்று தி.மு.க மட்டுமே என்ற போதிலும் குடும்ப பூசல்களில் விடுபடுகிற மாதிரி தெரியாத காரணத்தால் நாம் தமிழர் இயக்கம்,ம.தி.மு.க இன்னும் சொல்லப்போனால் கம்யூனிஸ்ட்களைக் கூடப் பரிட்சித்துப் பார்க்கலாம்.என்னைப்பொறுத்த வரையில் வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு எதிரி.
// நிரூபன் said...
முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும் என்பதனை விளக்கும் வண்ணம், குடும்ப அரசியலுக்கு உறைக்கும் வண்ணம் ஓர் அருமையான பதிவினைத் தந்திருக்கிறீங்க.//சகோ!நிருபன்!தமிழக அரசியலை விடுங்க!இலங்கையில் சுதந்திரமான கருத்துரிமைகள் இல்லாத நேரத்தில் கூட தங்கள் வாக்குகளின் மூலம் தமிழர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளதற்கு தமிழ் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
// MANO நாஞ்சில் மனோ said...
மூனா கானா குடும்பம் உருப்படவே உருப்படாது ஏன்னா செய்த அநியாயம் அப்பிடி....!!!// மனோ!உங்க குளியல் ரொம்ப பிரபலமாகி விட்டதே:)அந்த குடும்பம் உருப்படுவது பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை.ஆனால் ஒரு பெரும் இயக்கம் வீணாப் போவது தமிழகத்துக்கு இழப்பல்லவா?படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைத்தால் வரிவிலக்கு சொன்ன அரிவாள் கதைக்கெல்லாம் இன்னைக்கு ஆத்தா ஆப்பு வச்சிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்.இனி மதுரை கொலை வெறிப் படங்களைப் பார்க்கும் இம்சையில்லைன்னாலும் இந்த செய்தியால் உங்கா டா அண்ணன் சி.பிக்குத்தான் கவர்ச்சிப் படம் போட முடியாதபடி பேரிழப்பு:)
//தவறு said...
தி.மு.க. நாதியற்றே போகவேண்டும் இது நிறையபேரினுடைய ஆவல் ராஜநட.. மு.க. வின் அறிக்கைகள் தரம் தாழ்ந்தவை என்றே ஒதுக்கிவிடவேண்டும்.
பாருங்க..காலம் சொல்லும் பதிலை...//கருணாநிதி ஒரு டெக்னிக் கற்று வைத்திருக்கிறார் என்பது இப்பொழுது மெல்ல புரிகிறது.அதாவது அரசியலில் வலம் வருவதற்கும் மக்கள் தன்னை நினைவு கொள்வதற்கும் ஏதாவது ஒரு அறிக்கையை விட்டுக்கொண்டே இருக்கவேண்டுமென்பது.அறிக்கைகள் விடுவதிலும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதிலும் தவறில்லை.ஆனால் பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்தவன் என்று டமாரமடிச்சுகிட்டு ஒரு லாஜிக்கும் இல்லாமல் அறிக்கைகள் விடுவதல்லவா எரிச்சலை ஊட்டுகிறது.மு.க. வின் அறிக்கைகள் தரம் தாழ்ந்தவை என்பது 63 சீட்டுக்கு இரண்டு நாள் மல்லுக்கட்டி நின்று விட்டு மூன்றாம் நாள் மாலையில் காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று அறிக்கை விட்டப்பவே தெரிந்து விட்டதென்றாலும் ஈழம் குறித்த தனது தவறுகள் என்னவென்பதை ஒருமுறையாவது இதுவரையில் அறிக்கை வந்துருக்குமா?அதிகாரத்தில் இருக்கும் போது எவ்வளவு அருமையான சந்தர்ப்பம் காங்கிரஸ்க்கும்,ராஜபக்சேவுக்கும் ஆப்பு வைக்க!தனது ஊழல் பயங்களையும் மிஞ்சி வரவேண்டிய வீரமாக அல்லவா இருந்திருக்க வேண்டும்?பிஞ்சுகளும்,பாட்டியும்,பாட்டனுமா ஆயுதங்கள் தூக்கினார்கள்?இனப்படுகொலைக் காட்சிகள் கண்முன் வரும்போது வாய்மூடி மௌனியாக இருந்ததற்கும் திசை திருப்பியதற்கும் நாதியற்று போகவேண்டுமென்ற கோபத்தில் தவறேயில்லை.
Post a Comment