நாம் ஒவ்வொருவரும் பலவேறு பட்ட காரணங்களுக்காக பதிவிடுகிறோம்.மூளை குறு குறுப்பதை பதிவு செய்வதை தவிர வேறு ஆதாயமில்லாமல் நான் கிறுக்குவதைப் போலவே பெரும்பாலும் சக பதிவர்களும் என்னோடு கூட சக பயணம் செய்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.
கனடாவில் கான்சரில் இறந்தவரின் இறுதி பதிவு என்ற தலைப்பை படித்து விட்டு உள்ளே சென்றால் டெரிக் மில்லர் என்பவரின் இறுதி பதிவு மில்லியன் கணக்கில் ஹிட் வாங்கியதென செய்தி.
41 வயதுடைய டெரிக் மில்லர் என்பவர் 16 வருடம் தன்னுடன் வாழ்ந்த மனைவிக்கு சொன்னது ”நாம் ஒருவருக்கொருவர் என்ற உறவு இல்லாமல் இருந்திருந்தால் இந்த உலகம் எப்படியிருந்திக்குமென தெரியவில்லை.ஆனால் அது மிக மோசமான ஒன்றாக இருந்திருக்கும்.உன்னை நான் ஆழமாக நேசித்தேன்...நேசித்தேன்...நேசித்தேன்.”
சென்ற புதன்கிழமை டெரிக் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இறப்பதற்கும் முந்தைய ஒரு தினத்தில் www.penmachine.com என்ற அவரது தளத்தில் பதிவு செய்யப் பட்ட பதிவு.
நம்ம ஊர் பழபெரும் பதிவர்கள் மாதிரி பிரிட்டிஷ் கொலம்பியாவில் 10 வருடத்திற்கும் மேலாக புகழ் பெற்ற பதிவர். கான்சரில் நான்காம் நிலையெனப்படும் மெட்டாஸ்டேடிக் கலரெக்டல் கேன்சர் இருக்கும் அறிகுறிகள் 2007ல் தெரிந்தது.டெரிக் இறந்த பின் மே நான்காம் தேதி 143 பின்னூட்டங்கள் நண்பர்களும்,முகமறியாதவர்களும் போட்டதில் அதிக தள நெரிசலில் மூச்சுத் திணற நண்பர் ஒருவரின் உதவியால் வேறு ஒரு சர்வருக்கு டெரிக்கின் தளம் மாற்றப்பட்டது.
”இதோ இங்கே நான்!நான் இறக்கப் போகிறேன்.இதுவே எனது தளத்தின் கடைசி பதிவு.அதற்கு முன் எனது கான்சரின் தண்டனையால் எனது உடலவயங்கள் மூடிக்கொள்ளும் போது என் குடும்பத்தாலும்,நண்பர்களாலும் இதனை வெளியிட வேண்டுகிறேன்.இயங்கும் தளமாக இருந்த ஒன்று இனி வரலாறாகப் போகிறது.”
நமது வாழ்க்கையில் என்ன நிகழும் என்பதை யாரும் கற்பனை செய்து விடமுடியாது.நாம் என்ன செய்கிறோமோ அது பற்றி மகிழ்ச்சியடையலாம்.நாம் திட்டமிடலாம்,ஆனால் அது செயல்படுமா என்பதனை சொல்ல இயலாது.எனது நோயிலும்,இறப்பிலும் இதனையே எனது மகள்கள் கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்...நம்புகிறேன்.எனது அன்பான வியப்புக்குரிய மனைவி ஆர்ட்ரியும் இதனையே காண இயலும்.இவர்களும் ஒரு நாள் இறப்பார்கள் என்றாலும்,தாம் செய்பவைகள் குறித்து மகிழ வேண்டும்.மூளையின் திசுக்களை உற்சாகப்படுத்த வேண்டும்.முடிந்த வரை சந்தர்ப்பங்களுக்கு காத்திருக்க வேண்டும்.அதே சமயத்தில் தாங்கள் நினைத்தபடி நிகழாமல் போவதால்,அப்படி நிகழும் பட்சத்தில் ஏமாற்றமடைந்து விடக் கூடாது.
டெரிக் மில்லரின் தளம் மூன்று மில்லியன் ஹிட்களுக்கும் மேல் சென்றதாக அவரது மனைவி ஆர்ட்ரிக் மில்லர் கூறுகிறார்.டெரிக் மில்லரின் நண்பர்,ஆலிஸ்டர் கால்டர் வேறு பெரும் இணையத்திற்கு மாற்றிய பின் சொன்னது”மில்லரின் தளம் கிட்டத்தட்ட எட்டு மில்லியன் ஹிட்களாவது அடைந்திருக்கும்.ஆனால் அவரது தளம் க்ராஷ் ஆனதால் கணக்கை கணிப்பது கடினமாகிவிட்டதென்கிறார்.
ஆர்ட்ரிமில்லரும் வலைப்பதிவரே.அவரது கணவரின் கேன்சர் அனுபவங்களை www.talkingtoair.com என்ற தளத்தில் குறிப்பிடும் போது அவரது கணவர் கடந்த இரு மாதங்களாக பேச இயலாமல் போன போது மில்லரின் வலைத்தளமே உதவியாக இருந்தது.மில்லரால் பேச இயலாவிட்டாலும் மூளை நன்றாகவே செயல்பட்டுக்கொண்டிருந்தது.
"மில்லர் பேச இயலாத போதே அவரது தளத்தை முழுவதுமாக படிக்க ஆரம்பித்தேன்...அப்பொழுதுதான் மில்லரின் மூளைக்குள் என்ன நிகழ்கிறது என்பதை என்னால் உணரமுடிந்தது.மில்லரின் பிளாக் எனக்கு நினைவுப் பரிசாக அமைந்தது” என்கிறார் ஆர்ட்ரிக் மில்லர்.
இன்னும் கொஞ்சம் ஆங்கில தகவல்களுக்கு NDTV யின் இந்த செய்திக்கும் மற்றும் டெரிக்,ஆர்ட்ரி மில்லரின் தளங்களுக்கு செல்லுங்கள்.