கடந்த பதிவிலிருந்து பதிவுலகை விட்டுப் போய் விடவுமில்லை.அதே நேரத்தில் பதிவுக்கும் அப்பால் பதிவர் சார்வாகன் சமரசம் உலாவும் இடமே தளத்தில் பதிவின் நீண்ட வாசிப்பில் மாட்டிக்கொண்டு எது உண்மையாக இருக்கும் என்ற நீண்ட ஆய்வுக்கான எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிய பாதி பயணத்தின் போது பின்னாலிருந்து காலை இழுத்து சென்னை கூவம் சாக்கடையில் தள்ளி விட்ட மாதிரியான உணர்வு இப்பொழுது.
இந்திய வரலாற்றில் சுதந்திர காலப் போராட்ட காலம் தொட்டு ஆங்கிலேயர்களாலும் ராஜா ராம் மோகன்ராயின் முயற்சியால் உடன்கட்டை போன்ற அவலங்கள் சட்டரீதியாக நீக்கப்பட்டும்,தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியார் ராமசாமி காலத்தில் சாதீக்கு எதிரான புரட்சி ஒரு முக்கிய காலகட்டம் என்ற போதிலும்,அரசு நிர்வாகத்துக்கு வந்து இதுவரை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இரு திராவிட கட்சிகளின் காலம் வரை சட்டங்கள் செய்தும் சாதி மிக தூரம் பயணம் செய்து அவ்வப்போது நீண்ட தூக்கம் போட்டு விட்டு தன் கோர முகத்தை முகமூடி போட்டுக்கொண்டு தன்னை வெளிப்படுத்தி திரும்பவும் மக்களோடு மக்களாகப் பயணம் செய்து கொண்டே வந்திருக்கிறது என்பதை தி.மு.க ஆட்சியின் சட்டக்கல்லூரி மாணவர்கள் சண்டை,இப்பொழுது அ.தி.மு.க பரமக்குடி வன்முறை சம்பவம் என்று தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
காவல்துறையின் துப்பாக்கி சூடு காரணமாக அனைவரையும் பாதிக்கும் விசயமாகவும்,இப்போதைக்கு நாமும் கவலைப்பட்டு விட்டு அடுத்து இனியும் வரும் புதிய பிரச்சினைகளைப் பதிவு செய்பவர்களாகவே பயணிப்போம். சாதீயும் இன்னொரு எதிர்கால சம்பவத்தில் நம்மைப் பார்த்து கொக்கரித்து சிரிக்கும் என்று நம்புவோமாக!
காரணம், தமிழ் திரைப்படங்கள் வியாபார நோக்காக தயாரிக்கப்பட்ட போதும் சமூகம் சார்ந்த,சாதிக்கு எதிரான ஏதாவது ஒரு முக்கிய கருத்தை பாமரனுக்கும் போய்ச் சேரும் விதத்திலும் நானெல்லாம் யோசிக்கிற வகுப்பாக்கும் என்பவர்களுக்கு கமலஹாசன் படங்கள் சொல்லியவற்றை விட பதிவுகள் ஒன்றும் புது விழிப்புணர்வைக் கொண்டு வந்து விடப்போவதில்லை.கூடவே ஒரு திரைப்படத்தை எப்படி காண்பது எப்படி என்பதை பதிவர் மதுரை சரவணன் பதிவின் சாரமான good touch and bad touchல் பார்வையிடும் போது புதிதான படிப்பினை தோன்றியது. .
பதிவர் நிரூபன் தளத்தில் ஈழத்தில் வட,கிழக்கு பகுதிகளில் சாதியம் வெளிப்படுவது பற்றிச் சொல்லும் போது தீவுக்கே உரித்தான பின் தங்கிய நிலையென்றே நினைத்தேன்.புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவு மேற்கத்திய கலாச்சார வாழ்க்கைக்குப் பழக்கமாகியிருப்பார்கள்.ஆனால் அவர்களுக் குள்ளும் சாதிய வேறுபாடுகள் இருப்பதாகவும் அவை திருமணம் போன்ற சூழல்களில் வெளிப்படுகிறதென்றும் கலந்துரையாடலில் காண நேர்ந்தது.
இவற்றையெல்லாம் கட்டுடைத்து வர்ணாசிரம கட்டமைப்பை குழிதோண்டி புதைக்கும் காதல் திருமணங்களையும் தமிழ் சமூகம் அங்கீகரிக்காமல் பின் தள்ளி விடுகிறோம்.காதல் திருமணம் செய்தவர்களும் அவர்களது சொந்த விருப்பத்தால் தமது வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்வதால் பொதுவாக உறவினர்கள் ஆதரவும் கிடைப்பதில்லை.தனி மனித வாழ்க்கை இப்படியிருக்க அரசியல்,சமூகம் சார்ந்த மொத்த கோட்பாடுகளையும் தாண்டி சுயநலமாகவோ,அல்லது சாதி உள் கட்டமைப்பின் விசுவரூபம் எந்த விதத்தில் வெடிக்கும் என்று அறியாமலோ தமக்கு தாமே சூனியம் வைத்துக்கொள்ளும் சூத்திரத்தை நாம் கற்று வைத்திருக்கிறோம்.
வர்ணாசிரமத்தின் சூத்திரனை விட இன்னொரு சூத்திரன் தான் உயர்ந்தவன் என்று கற்பனை செய்து கொள்கிறான்.இது கற்பனையல்ல நிஜமே என்பதை இணையத்தில் தட்டச்சு செய்யும் புத்திசாலியே உறுதி செய்கிறான்.இதுல கொடுமை என்னவென்றால் வால்பையன் சாதி குறித்த பதிவின் பின்னூட்டத்தில் பல பதிவர்கள் சொல்லியும் புரியாமலும் ராஜன்,வருண் போன்றவர்கள் நச்சென்று நடுமண்டையில் கொட்டினாலும் அவர்களின் தடாலடிப் பின்னூட்டங்களுக்கும் சளைக்காமல் மூன்று கால் முயலாய் பதில் சொல்லும் சகோதரர்களின் சாதீய உணர்வும்,சவுக்கு தளத்தில் தனது கருத்துக்களை துணிந்து சொல்லும் சங்கருக்கும் கூட சாதிய சாயம் பூசும் சாதீ வெறித்தனம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
மனிதன் நேருக்கு நேர் சண்டையிட்டுக்கொள்வதிலோ,திட்டிக்கொள்வதிலோ மூளை கட்டளையிட்ட அடுத்த கணத்தில் கரங்களோ,உதட்டோடு நாக்கும் உடனே செயல்பட வைக்கின்றது.ஆனால் பதிவு செய்பவர்களுக்கும், பின்னூட்டமிடுபவர்களுக்கும் மூளை கட்டளையிட கைகள் தட்டச்சு செய்து வார்த்தைகள் வடிப்பதற்கும்,தான் சொல்வது சரிதானா என்று சரிபார்க்கும் கால அவகாசம் இருக்கிறது.இதனையும் தாண்டி வார்த்தைகளின் பொருளில் வந்து விழும் வன்மமே இப்படியிருந்தால் கூட்டமாய் சேரும் போது எழும் தைரியம் எவ்வளவு சாதீ வன்மத்தை உருவாக்கும்? இதன் விதைகள் எங்கே தூவப்பட்டிருக்கின்றன என்று பார்த்தால் வரண்ட பூமியில் வேலையின்மை,வறுமை என்பவற்றை விட தமிழக எல்லை தாண்டாத தவளை மனப்பான்மையா அல்லது விமானத்துக்குள்ளும் சீட்டுக்கு மேலே சூட்கேஸ் பெட்டிக்குள் சாதீ ஜீன்கள் உட்கார்ந்தே பயணம் செய்கிறதா?
முன்பு ஒரு பதிவு படித்ததன் விளைவாய் இரட்டைக்குவளை பற்றி தியரி மட்டுமே சொல்ல முடிந்தது.ஆனால்.கடந்த டிசம்பரில் இந்திய பயணத்தின் போது பொள்ளாச்சிக்கு அருகில் ஆழியார் அணைக்கு நேர் எதிரில் வாகன சாலையிலேயே ஒரு டீக்கடையில் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது.
படத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் பெரியவருக்கும்,கால் மேல் கால் போட்டு டீ குடிப்பவரும் சில்வர் கிளாஸ் பெருமைக்காரர்கள்.யாரோ ஒரு சகோதரனுக்கோ,சகோதரிக்கோ தாயாகி,நரை முடித்துப்போன அம்மா கண்ணாடி கிளாஸிருந்து இன்னும் பாவமன்னிப்பு அடையாதவர். 

இரண்டாம் படத்தில் பழுத்த ஐயப்ப பக்தராக இருப்பவர் டீ போடும் எந்த கிளாஸ் என்று தீர்ப்பளிக்கும் நீதிபதி.எனவே அரசியல் மட்டுமல்ல, அன்றாட சமூக வாழ்க்கையும் சாதீயை வளர்க்கின்றன.
தமிழகத்துக்கு சீனாக்காரனின் உதவியோடு இலங்கைக்காரன் சண்டை கொண்டு வந்தால் ஒழிய ஜனத்தொகை குறையாதுன்னு இயற்கையே பதிவர் தெகா சொல்வது போல் சமூக கட்டமைப்பின் வடிவில் சா தீ எனும் பெயரில் மரணத்தைக் கொண்டு வருகிறதா?
காரணம் சிலர் வளைகுடா வடிவேல்களாகவும் ட்விட்டுவதாக பதிவுகளின் பின்னூட்டங்களில் காண முடிகிறது.
மதங்களுக்கும் அப்பால் மனிதன் சிந்திக்க வேண்டுமென்ற பெரியாரின் சிந்தனைகளைத் தாண்டியும் கடவுள் பக்தர்களும், கூடவே மூட நம்பிக்கைகளும் வளரும் போது இவற்றோடுப் பின்னிப் பிணைந்த வர்ணாசிரமும் கூடவே வளர்கிறது.இதில் எப்படி அறுவடை செய்வது என்பதை யோசித்துக்கொண்டும் சிலர் உலா வருவார்கள்.ஈழம் குறித்த ஒருமித்த கருத்து திரண்டு வரும் இந்நேரத்தில் வன்முறை திசை திருப்பல்களுக்கு அரசியல் காரணங்களும் உள்ளதா என்ற சந்தேகங்களையும் தாண்டி சாதி நம்மைப் பார்த்து கைதட்டி சிரித்துக்கொண்டிருக்கிறது.எது குறைய வேண்டும்,மறைய வேண்டுமென்று நினைக்கிறோமோ அவை இன்னும் வேர் பிடித்து வளர்கின்றன.முன்பை விட சாதீயும் என்பதை பதிவுலகம் வரை வந்து நிற்கின்றது.சாதீயின் அடுத்த வருகைக்காக காத்திருப்போம்.
