இன்று மீனகம் வெளியிட்டிருந்த இந்த பதிவை காண நேர்ந்ததும் அதிர்ச்சியாக இருந்தது.அதுவும் கோவை ,திருப்பூர் என்றதும் முகத்தில் அறைந்த மாதிரி ஒரு உணர்வு. நகர்,மலை,ஆறுகள்,வனம்சார்ந்த இடங்களாய் சுற்றித்திரிந்த காரணமாக புறநகருக்கும் அப்பாலான பேச்சு வழக்கு, கிராமிய கட்டமைப்புக்கள் அனைத்தும் பெரும்பாலும் புத்தகங்கள் மற்றும் தமிழ் திரைப்படங்கள் கற்றுக்கொடுத்தவையே. இந்து ,இஸ்லாமியன் ,கிறுஸ்தவன் என்ற முத்திரைகள் ஒட்டிக்கொள்ளாத இளமைக்கால நட்புறவுகளுக்கும் மனிதர்களுக்கும் இந்த கணத்தில் மரியாதை செலுத்திக்கொள்கிறேன். கல்லூரிக்காலத்தில் பல்லடம் அருகே கிராமம் ஒன்றுக்கு நடந்து போகவேண்டிய வெயிலில் செங்கல் சூலையில் வேலை செய்து கொண்டவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டதற்கு சாமி இங்கேயெல்லாம் தண்ணி குடிப்பீங்களா என்று கேட்டதன் பொருள் விளங்காமல் குடிப்பேன் என்று சொல்லி தாகம் தீர்த்தது மட்டுமே குவளைக்கான எனது புரிதலாக இருந்தது.
இன்னும் அதிகம் சொல்லப்போனால் திராவிட,பார்ப்பனீய அதீத வெறுப்புக்களை கூட பதிவுலகம் வந்தே கண்டு கொண்டேன்.ஒரு தனி மனிதனைப் பார்க்கும் போதும் ,பேசும் போதும் ஹலோ சொல்லுவதோ,யதேச்சையாக பேச்சுக்கொடுப்பதோ என இருக்கும் மனிதன் எப்படி கூட்டாக வாழும்போது கட்டுக்களை விதித்துக்கொள்கிறான்.கல்லூரி விடுதிகளிலும் கூட அவனவன் சாதிபூதம் அவனவன் ட்ரங்குப்பெட்டி,சூட்கேஸ்களில் மட்டுமே உறங்கிக் கொண்டிருந்தனவே.எப்படி கிராமங்களில் அவை அகோர முகம் காட்டித்திரிகிறது.வெள்ளாந்தியான மனிதர்களுக்குள் எப்படி மன இறுக்கமான பூட்டுகள்?
இல்லாத ஒன்றை இருக்குது,இருக்குதுன்னு டமாரமடிச்சு திரிந்ததாலா அல்லது கம்யூனிஸ்ட்டுகள் சிந்தனையின்படி பிரபுத்துவ,பூர்ஷ்வா வேறுபாடுகள் மண்ணில் ஆழப்பதிந்து கிடக்கிறதா.நகர்ப்புற உணவகங்களில் கல்லாவுக்கு காசு வருகிறதா என்று மட்டும்தானே பார்க்கிறார்கள்?தலையில் உருமா கட்டியவன்,ஜீன்ஸ் போட்டவனென்றா பார்க்கிறார்கள்?கிராமப்புற டீஸ்டாலில் மட்டுமெப்படி இரட்டைக்குவளை வந்து தொலைக்கிறது.பெரியாரின் காலத்திலிருந்து நகர்ந்து வந்து 30,40 ஆண்டுகள் கழித்தும் இரட்டைக்குவளை இழிநிலையெனும் போது நமது சமூக வளர்ச்சியின் விகிதாச்சாரம் புரிகிறதா?ஒரு தலைமுறை கழிந்து அடுத்த தலைமுறைக்கான புதிய வித்துக்கள் அல்லவா வளர்ந்திருக்க வேண்டும்.திராவிட இயக்கங்களின் பெயர் சொல்லியே ஆட்சிக்கு வந்தவர்கள் காலத்திலேயே சமூக அசுத்தங்களை அகற்ற முடியவில்லையென்றால் இனி எந்தக்காலத்தில் இவைகள் அவை அந்தக்காலம் என்ற பழைய வரலாறாகப் போகின்றன?திராவிட,பார்ப்பனீய சண்டைகளை மூட்டை கட்டி கூவத்துல தள்ளிவிட்டு உண்மையாகவே சமூகத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் சாதியவாதிகளை அடையாளம் காண்பது மிக முக்கியம்.
இரட்டைக்குவளையுடன் தமிழன் உலகின் மூத்த குடி என சுய முதுகு சொறிந்து கொள்கிறோம்.ஒரு முறை சில அரேபியர்கள் ஏழெட்டுப்பேர் வட்டமாக உட்கார்ந்து கொண்டு பெரிய அண்டா மூடி மாதிரியான பாத்திரத்தில் கூஸி எனப்படும் முழு ஆட்டுப்பிரியாணியை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.ஒருவர் குடித்த கிளாசில் இன்னொருவர் குடிப்பதற்கும் கூட முகம் சுளிக்கவில்லை.அரேபியர்கள் பெண்ணுரிமைகளில் பிற்போக்காக இருந்தாலும் (இப்போது தொலைக்காட்சி ,உலகளாவியல் ,பன்னாட்டு கலாச்சாரத்தால் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது) சாப்பாட்டில் காட்டும் ஒற்றுமை இரட்டைக்குவளை நிலைக்கு மாறுபட்டது.
உடன்கட்டையேறுவது தவறு என்று சட்டமாக்கப்பட்டு இப்போது உடன்கட்டையே காணாமல் போய்விட்டது.இரட்டைக்குவளையும் தவறு என்பது அரசியல் சட்டத்தினால் மட்டுமே இயலும்.கூடவே கிராமம்,தமிழகம் என்ற வட்டத்துக்கும் அப்பால் பிரபுத்துவ மனப்பான்மையாளர்கள் இயன்ற வரை இந்தியா சுற்றுலா செல்வது பாரதம் பற்றிய புரிதலோடு மனிதம் என்ற உன்னதமான வெளிச்சத்தையும் காட்டும்.
20 comments:
உடன்கட்டையேறுவது தவறு என்று சட்டமாக்கப்பட்டு இப்போது உடன்கட்டையே காணாமல் போய்விட்டது.இரட்டைக்குவளையும் தவறு என்பது அரசியல் சட்டத்தினால் மட்டுமே இயலும்.கூடவே கிராமம்,தமிழகம் என்ற வட்டத்துக்கும் அப்பால் பிரபுத்துவ மனப்பான்மையாளர்கள் இயன்ற வரை இந்தியா சுற்றுலா செல்வது பாரதம் பற்றிய புரிதலோடு மனிதம் என்ற உன்னதமான வெளிச்சத்தையும் காட்டும்.
....ஒரு விழிப்புணர்வு இல்லாததால் வரும் விளைவு இது. வேதனையான விஷயம்.
//எப்படி கிராமங்களில் அவை அகோர முகம் காட்டித்திரிகிறது.வெள்ளாந்தியான மனிதர்களுக்குள் எப்படி மன இறுக்கமான பூட்டுகள்?//
இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் பாருங்க
:)
இது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் வருமில்லையா? புகார் கொடுக்க யார் முன்வருவார்கள் என்பது ஒன்று. இன்னமும் ஜாதியை விட்டு தள்ளி வைக்கிற இழவு இருந்துகொண்டுதானே இருக்கிறது.
வேதனையான விஷயம்.
சாதி தீண்டாமை எல்லமே கொஞ்சம் ஒளிந்திருக்கிறதே தவிர ஒழிந்துவிடவில்லை நடா.விடவும் மாட்டார்கள்.ரொம்பக் கஸ்டம்.
அதுசரி...ஏன் இப்பல்லாம் உதைபந்தாட்ட நியூஸ் தாறதில்லை.
களைச்சுப்போனீங்களோ !
வேதனையான விஷயம்.
வருகின்றேன்..........
வருகின்றேன்..........
மிக மிக கேவலமான கொடூரமான ஒரு விஷயம் இது....இந்த கொடுரம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது...மிகவும் விவரம் தெரியாத வயதில் நண்பன் வீட்டுக்கு சென்றிருந்த பொழுது....அப்பொழுது அது கேள்வியாக மட்டும் என்னுள்...பின்பு விவரம் தெரிந்த பொழுது சிதறி போனேன்...ஆனால் தென்னகத்து கிராமங்களில் இன்று அன்நடை முற்றாக குறைந்து போயிருக்கிறது...ஆனால் வட தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது....தலித் விடுதலை என்று சொல்லி கொண்டு திரிந்த சிறுத்தைகள் புலிகள் எல்லாம் இன்று பன்னியாகி ஒற்றை தேர்தல் சீட்டுக்காக கொள்கைகளை அடகு வைத்து விட்டு சுற்றி கொண்டிருக்கிறது....மக்களின் மனநிலை மாற்றம் கொண்டு வர தலித்துகள் மட்டும் போராடி கொண்டிருந்தால் போதாது....ஆதிக்க சாதிகளில் சிறு மனிதாபிமானம் தோன்றினால் கூட போதும்....அது தோன்றும்..மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்ற சொல்லின் அர்த்தத்திர்க்காகவாவது...!
மனிதர்களின் மனங்களில் சாதீய விசங்கள் இருக்கும்வரை எதுவும் மாறாது..
தொடர்புடைய மீனகம் மற்றும் கோவியாரின் "இரட்டை தம்ளர் மற்றும் பிராமின்ஸ் ஒன்லி !"
பதிவுகளும் படித்தேன்..
//....ஒரு விழிப்புணர்வு இல்லாததால் வரும் விளைவு இது. வேதனையான விஷயம்.//
சித்ரா மேடம்!விழிப்புணர்வு இல்லையென்பதை நான் ஏற்க மாட்டேன்.காரணம்,மற்றவர்களுக்கு இல்லாத ஒரு வசதி டீக்கடை,பெட்டிக்கடை வைத்திருப்பவர்களுக்கு பத்திரிகை படிக்கும் வசதி.எழுதப்படிக்க தெரிஞ்ச வரையிலுமாவது டீ ஆற்றுவார்கள் என்றே நினைக்கிறேன்.மேலும்,சினிமா என்ற ஊடகம் பட்டி தொட்டி வரை சேர்ந்துள்ளது.மொக்கையாக இருந்தாலும் ஓரளவுக்கு சமூக கருத்துக்களை தமிழ் திரைப்படங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன என நினைக்கிறேன்.
//
இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் பாருங்க
//
கோவி.கண்ணன்!காலையில் உங்கள் இடுகையை ஒரு முறை படித்தேன்.மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டிய தேவை இருப்பதால் பின் மறுமொழி இடுகிறேன்.நன்றி.
//இது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் வருமில்லையா? புகார் கொடுக்க யார் முன்வருவார்கள் என்பது ஒன்று. இன்னமும் ஜாதியை விட்டு தள்ளி வைக்கிற இழவு இருந்துகொண்டுதானே இருக்கிறது.//
பாலாண்ணா!ஊர் மேன்மைத்தனம்,நாட்டாமை,சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் போன்ற வளையத்தால் புகார் என்ற ஆயுதம் தோல்வியடைந்து விடுகிறதோ என்னவோ.
ஜாதியை விட்டுத் தள்ளி வைக்கிறதென்பது எனக்குப்புரியவில்லை.நாட்டாமை தீர்ப்பு சொல்ற விசயமா இது?
//வேதனையான விஷயம்.//
அனாமிகா!உங்கள் மீள் வருகைக்கும்,வேதனை புரிதலுக்கும் நன்றி.
//சாதி தீண்டாமை எல்லமே கொஞ்சம் ஒளிந்திருக்கிறதே தவிர ஒழிந்துவிடவில்லை நடா.விடவும் மாட்டார்கள்.ரொம்பக் கஸ்டம்.
அதுசரி...ஏன் இப்பல்லாம் உதைபந்தாட்ட நியூஸ் தாறதில்லை.
களைச்சுப்போனீங்களோ !//
ஒளிஞ்சிட்டுருக்குதா?அம்மாடியோவ்:(
பெரும் நகரங்களாய் சுற்றியே திரிந்த காரணத்தால் எனக்கு இதன் தாக்கம் அதிகமாக தெரியவில்லை.அதுவும் வளைகுடா வந்தவுடன் சுத்தம்!
உதைபந்தாட்டமா?அந்த கதையேன் கேட்கிறீங்க ஹேமா!ரிசீவர் கோபிச்சுகிட்டதால வேற ரீசிவர் வாங்க வேண்டியதாயிடுச்சு.இதுக்கு நடுவுல அம்மணி வேற பிறந்தநாள்,தம்பிக்கி கல்யாண நாள்,சூப்பர் மார்க்கெட்ன்னு அங்கே இங்கேன்னு இழுத்துகிட்டு திரியறாங்க.இரண்டு மேட்ச் எழுதி வச்சேன்.முழுமையா இல்லாததால ட்ராப்டில் கிடக்குது.
கார்த்திக்!எப்பவும் ஒட்டிக்கலாம்:)நன்றி!
//வருகின்றேன்.//
ஜோதிஜி!நீங்கள் திருப்பூரில் இருப்பதால் இது குறித்த தனிபதிவோ,உங்கள் கருத்தையும்,இதற்கான பின்புலங்களையும் அறிய விரும்புகிறேன்.
//மிக மிக கேவலமான கொடூரமான ஒரு விஷயம் இது....இந்த கொடுரம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது...மிகவும் விவரம் தெரியாத வயதில் நண்பன் வீட்டுக்கு சென்றிருந்த பொழுது....அப்பொழுது அது கேள்வியாக மட்டும் என்னுள்...பின்பு விவரம் தெரிந்த பொழுது சிதறி போனேன்...ஆனால் தென்னகத்து கிராமங்களில் இன்று அன்நடை முற்றாக குறைந்து போயிருக்கிறது...ஆனால் வட தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது....தலித் விடுதலை என்று சொல்லி கொண்டு திரிந்த சிறுத்தைகள் புலிகள் எல்லாம் இன்று பன்னியாகி ஒற்றை தேர்தல் சீட்டுக்காக கொள்கைகளை அடகு வைத்து விட்டு சுற்றி கொண்டிருக்கிறது....மக்களின் மனநிலை மாற்றம் கொண்டு வர தலித்துகள் மட்டும் போராடி கொண்டிருந்தால் போதாது....ஆதிக்க சாதிகளில் சிறு மனிதாபிமானம் தோன்றினால் கூட போதும்....அது தோன்றும்..மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்ற சொல்லின் அர்த்தத்திற்க்காகவாவது...!//
லெமூரியன்!உங்கள் கருத்துக்கு நன்றி.நீங்கள் தென்னக கிராமங்கள் என்று எவற்றை குறிப்பிடுகிறீர்கள்.குடிசைகள் தீ வைத்து எரிப்பது போன்றவை அரசியல் காரணங்களுக்காக அவ்வப்போது நிகழ்கிறதென்றே நான் நினைத்திருந்தேன்.இது பற்றிய சரியான புரிதல் இல்லை எனக்கு.திருமாவைக் கூட நான் ஈழப்போரின் காலகட்டத்திலேயே பதிவுகள் மூலமாக அறிந்தேன்.இப்பொழுது அது பசுத்தோல் போர்த்திய சிறுத்தை என்றே உணர்கிறேன்.
//மனிதர்களின் மனங்களில் சாதீய விசங்கள் இருக்கும்வரை எதுவும் மாறாது..
தொடர்புடைய மீனகம் மற்றும் கோவியாரின் "இரட்டை தம்ளர் மற்றும் பிராமின்ஸ் ஒன்லி !"
பதிவுகளும் படித்தேன்..//
மனங்களில் சாதியம் இருக்க வேண்டிய அவசியம் என்ன?திருவிழாக் காலங்களில் தலைப்பா கட்டு போன்ற மரியாதைகள் சிலருக்கு கிடைப்பது தவிர வேற என்ன லாபம் என்று தெரியவில்லை.சாதாரண மனிதனுக்கும் சாதியத்துக்கும் சம்பந்தம் என்ன?
கோவியாரின் இடுகையை மீண்டும் படிக்கிறேன்.
கோவியாரே!வேர்ட் பிரஸ்க்கு டிஸ்கி போட்டு விட்டு என்னை வேர்ட் பிரஸ் மாமி வீட்டுக்கு வழி சொல்லி அனுப்பி விட்டீர்களே:)
நோண்டிப்பார்த்தால் வர்ணாசிரமத்தின் வேரில் உங்கள் இடுகையின் தலைப்பு பொருந்தி வருவதற்கு சாத்தியம் இருக்கிறது.ஆனாலும் இரண்டையும் தனித்தனியான கண்ணோட்டத்தில்
பார்ப்பதே சரியாக இருக்கும்.
Post a Comment