Followers

Monday, June 30, 2008

எனக்கும் எக்ஸ்புளோரருக்கும் என்ன சண்டை?

இத்தனை நாட்கள் நல்லாத்தானே பேசிகிட்டு இருந்தே?திடீர்ன்னு என் மேல் என்ன கோபம்?அல்லது யூனிகோடுக்கும் உனக்கும் ஏதாவது மனஸ்தாபமா? உன்கிட்ட அன்பாத்தானே இருந்தேன்?நேற்று முதல் தொடாதே தொடாதே ன்னு எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறாயே?

போடின்னு கோவிச்சுகிட்டு நெருப்பு நரிக்கு ஹலோ சொன்னா வாய்யா மச்சான்! உட்கார்ன்னு அழகா உபசரிக்குது.தமிழ்மணத்துக்கு கூட்டிட்டுப் போகவான்னு கேட்குது.ஒழுங்கா என்கிட்ட சண்டை போடாம இருக்குறதுன்னா இரு இல்ல உன் முகத்துலேயே முழிக்காம நெருப்பு நரியே கதின்னு இருக்கப் போறேன்.

நாட்டாமைகள் யாராவது இந்த சண்டையை தீர்த்து வச்சீங்கன்னா ஒரு கும்புடு போடுவேன்.

வெயில் காலத்து கிறுக்கல்கள்

இன்று காலை அலுவலகம் போகலாம் என்று கிராண்ட் சிறுக்கியை தொட்டால் கிர்.கிர் என்ற சத்தத்துடன் தடைமிதிப் பலகை (நம்ம ஊரு பிரேக்)யைத் தொடும்பொதெல்லாம் சத்தமிட்டுக் கொண்டு என்னையும் கலவரப் படுத்திக் கொண்டே வந்தது.அலுவலகத்தில் தலையைக் காட்டிவிட்டு பழுதுபார்க்கலாம் என்று போனேன்.

குளிர்சாதன அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது சில சமயம் எரிச்சல் ஊட்டும் விசயம்.அதனால் சில சமயம் மதிய வெயிலில் கடற்கரையை சீப்பு போடும் நோக்கத்தில் போகும்போது கூட வெயிலின் உக்கிரம் தெரிவதில்லை.காரணம் அனல் கக்கும் மணல் ஒருபுறமும் கடல் அலைகளின் மெல்லிய சத்தம் ஒருபுறமும் இடையில் ஈரமான மணலில் நீர் காலைத் தொடாமல் சுமார் இரண்டு கிலோமீட்டர் நடப்பது கூட ஓர் சுகமான அனுபவம்.கூடவே வெயிலின் உஷ்ணத்தால் வெளியே மதியம் கடலை அண்டாத மக்கள் கூட்டமில்லாத தனிமையும் ஓர் அலாதி சுகமே.

ஆனால் வண்டியை இயந்திரம் சீர்திருத்துமிடத்துக்கு கொண்டு சென்றதில் அந்த சுகமில்லை.கண்விழி புருவம் வரை முத்துக்களாய் வியர்வை.நாக்கு வரட்சி.சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வெயிலின் நிழலில் உட்காரவேண்டிய நிர்பந்தம்.குஜராத் மாநிலத்து 20 மதிக்கத்தக்க எளந்தாரி(வார்த்தைத் திருடல் லதானந்த் ஆபிசரிடமிருந்து) வெயிலில் டிஸ்க் எனும் இரும்பு வளையத்துடன் தடைமிதி அரைச் சந்திர வட்டம் போன்ற உருளையை இணைக்க முயன்று கொண்டிருந்தார்.

என்னால் வெயிலின் நிழலில் ஒருமணி நேரத்துக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை.இந்த மாதிரி உழைப்பாளிகள் சாலைப்பணி செய்யும் பன்நாட்டு தொழிலாளிகள்,நகர் சுத்திகரிப்பு வேலை செய்யும் பங்களாதேஷ் மற்றும் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கை நிலை பரிதாபத்துக்குரியது.மிக அதிகக் குளிர்,உஷ்ணம்,குறைந்த சம்பளம் என்று இத்தனை இன்னல்களையும் தாங்கிக் கொள்ளும்படியான தேச,காலச் சூழ்நிலைகள்.சுதந்திரக் காற்றை சுவாசித்த பங்களாதேஷ் இயற்கையின் தொடர் சீற்றங்களுடன் மதப் படுகுழிக்குள் விழுந்துவிட்டது பரிதாபத்திற்குரிய விசயம்.

கிருஸ்மஸ்,புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டாய மரபுகளாய் பாவிக்கும் சென்னை நண்பரின் வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டதால் இந்தியா,இலங்கை,நேபாளம்,பிலிப்பைன்ஸ்,இங்கிலாந்து,அமெரிக்கா (உபயம் சென்னை மொழி பேசும் தமிழ் பேச மட்டுமே தெரிந்த நண்பர்கள்)லெபனான்,எகிப்தியர் என்று தேசத்துறவித்தனம் கொண்ட இந்த வாழ்க்கையில் அத்தனை தேசத்து மனிதர்களுடனும் நட்பு கொண்டாகிவிட்டது.

உலக மயமாக்கலையும் உலகம் ஒரு சிறிய கிராமம் என்ற சொல்லை நடைமுறைப் படுத்தலையும் முன்னெடுத்துச் செல்லும் நாடுகளில் மத்திய கிழக்கு நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கிறது எனலாம்.இஸ்லாமிய மார்க்கத்தின் மெல்லிய பண்புகளை புறம் தள்ளிவிட்டு அடிப்படை வாதம் உலகளாவியதும் மனித மேம்பாட்டின் ஓர் சரிவே எனக் கொள்ளலாம்.ஆனாலும் இந்த அடிப்படை வாதம் உலக மயமாக்கலுக்கு மேலும் துணை புரிகின்றது என்றே தோன்றுகிறது.

தன் நாட்டின் வேர்களுடன் மேலை நாட்டின் விழுதுகளை இணைத்துக் கொண்டே இங்கே பெரும்பாலோனோர் வாழ்வின் ஓட்டம் நகருகிறது. இன்றைய கால கட்டத்தில் நாடுகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக மத்திய கிழக்கு நாடுகள் உள்ளன.எரிபொருளின் அத்தியாவசியத் தேவையில் நாளையும்,வரும் நாட்களும் எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்று உற்று நோக்க வேண்டிய கால கட்டாயத்தில் உள்ளது மனித இனம்.

Wednesday, June 25, 2008

எந்த புத்தகக் கணினி வாங்கலாம்?

எந்த புத்தகக் கணினி வாங்கலாம்?இப்பவெல்லாம் யாரும் மடியில் கணினிகளை தாலாட்டுவதை பார்க்க இயலவில்லை.எல்லோரும் தோளில் மாட்டிக்கொண்டு திரிவதால் வேண்டுமானால் தோள் கணினி என்று பெயரை மாற்றிக்கொள்ளலாம்.

தோள் கணினிகளின் பங்குச் சந்தை நிலவரம் என்ன?எனக்குத் தெரிந்து டெல்,கம் பேக்(?) அல்லது ஹம்பக்(?)ஏசர் என்பவர்கள் சந்தையில் ஆடி விளையாண்டாலும் சந்தையின் கதாநாயகன் என்னவோ தொஷிபா மட்டுமே.தோள் கணினிகளின் பங்குச் சந்தையில் சில ஆண்டுகளில் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 70 சதம் தொஷிபாவின் கையில்.இனி வகைகள் கீழே:-

சாட்டிலைட்= வீட்டு உதவிக்காக = விலை 850 டாலர் முதல் 1500 டாலர் வரை.

சாட்டிலைட் புரோ= அதுதான் பெயரிலேயே தெரியுதே புரொ ன்னு. = விலை 1000 முதல் 1300 டாலர் வரை.

டெக்கரா= விமானத்திலேயே சுத்தி திரியும் பன்னாட்டு வியாபாரிகளுக்கு = விலை 1300 முதல் 1600 டாலர் வரை.

போர்ட்டிஜ் = கனத்தையெல்லாம் என்னால் தூக்க முடியாது என்பவர்களுக்கு = விலை 1750 முதல் 2000 டாலர் வரை.

கொஸ்மியோ= தொலைக்காட்சிகளைக் கூட கணினியில்தான் பார்ப்பேன் என அடம் பிடிப்பவர்களுக்கு = விலை 1600 முதல் 2250 டாலர் வரை

பதிவுக்கு மட்டும் சின்னச் சின்ன வேலைகளுக்கு என்றால் மேற்சொன்ன ஏசர்,கம்பேக் போன்றவர்களை நாடுவது நலம்.

இவங்களையெல்லாம் மிஞ்சும்படி மேக்நோட் என்று உலகத்திலேயே ஒல்லியானவள் நான் தான் என்ற விளம்பரத்துடன் _ அது ஆப்பிள் பிரியர்களுக்கு. விலை விபரம் தெரியவில்லை.

மேற்கண்ட விலையுடன் உள்ளுர் வரி,விற்பனை வரி,லாபம் என்று கொஞ்சம் கறந்துவிடுவார்கள்.இதில் விலையினை சமன் செய்யும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கிய சில விபரங்கள்.

Processor between 1.83 GHz to 2.5 GHz with latest technology of Core Duo / Core 2 Duo

Ram 1 GB to 3 GB

HDD 100 GB to 320GB.

Screen 12" /15.4"/ 17" with TFT or Crystal Screen

மேலும் கணினியைச் சுற்றி என்ன என்ன கைப்பைகள்(option) தேவை என்ற நிர்ணயம்.பெரும்பாலோர் யு.எஸ்.பி (USB) யையே பயன்படுத்துகிறார்கள். பயர்வயர்(Firewire) இருந்தால் நலமாக இருக்கும்.எல்லாவற்றிற்கும் மேலாக பாக்கெட்டின் எடையை கவனித்துக் கொண்டு கடையின் கண்ணாடி கதவுகளுக்குள் நுழையவும்.

ஒரு டிஸ்கி போட்டுடலாமா: விலை விபரங்கள் தேச தேசத்துக்கு வித்தியாசப்படும்.எந்தப் பொருள் வாங்கச் சென்றாலும் கையில் பணம் இல்லாமல் செல்வது நல்லது.கூடவே வாங்குகிற மாதிரி பந்தா காட்டிவிட்டு வந்து விடவும். காரணம் வீட்டுக்கு வந்து யோசனை செய்தபின் அல்லது யாருடனாவது மொக்கை போட்டுக்கொண்டு பின் இதைத்தான் வாங்கப்போகிறோம் என்ற தெளிவுக்கு வந்தவுடன் பணத்தோடு மீண்டும் செல்வது நல்லது.

Tuesday, June 24, 2008

செட்டிநாடு,சரவணபவனர்களின் கவனத்திற்கு

சந்தை நிலவரம் மட்டும் சேகரித்துள்ளேன்.(பங்குச் சந்தையல்ல)இங்கே மெக்டொனால்ட்,கென்டக்கி கோழி,பிசா இத்தாலி யெல்லாம் கோலோச்சினாலும் இந்திய உணவகத்திற்கு சைவத்திற்கு ஒரு உடுப்பியும்,அசைவத்திற்கு ஒரு மொகல்மஹாலும் துவங்கி கிளைகள் ஆரம்பித்து ஜே ஜே லாபம் கொள்கிறார்கள்.பிரம்மச்சரியர்களின் துணைவர்களாக சேட்டன்கள் ஓரளவுக்கு மலிவு விலையில் புரோட்டா போட்டு சந்திரனில் கூட சாயா சத்தம்போடும் கூற்றினை உண்மையாக்கும்படி உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். நம்மூர்க்காரர்கள் திருச்சி ஓட்டல் என்றும் பாலிவுட் என்றும் பெயருடன் அங்கொன்று இங்கொன்றாகத் தென்படுகிறார்கள்.ஆனால் நம்மவர்களின் அசல் சுவைக்குப் பஞ்சம்.ஆனாலும் இட்லி தோசையாவது தருகிறார்களே என்று திருப்தி கொள்ள வேண்டியிருக்கிறது.
துணி வியாபாரம் செய்பவர்கள் கடைகள் கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் கடிகாரக் கடையாக மாறிப்போய் விடுகிறது அல்லது வேறு ஏதாவது ஒன்றாய் கண்ணில் தென்படுகிறது.ஆனால் உணவகங்கள் மட்டும் அப்படியே இடம் மாறாமல் ஆட்சி புரிகிறது.யாரும் தோல்வி கண்ட மாதிரி தெரியவில்லை.
நம்மர்வர்களில் குறிப்பாக செட்டிநாடு உணவகம் அசைவத்திற்கும் சரவண பவன் உணவு சைவத்திற்கும் இடம் காலியாகவே உள்ளது.நண்பர் ஒருவர் செட்டிநாடு உணவு கொண்டு வரவேண்டும் என்று முயன்று பொருளாதாரக் காரணங்களால் கைவிட்டு விட்டார்.ஒரு மண்ணின் மைந்தரின் பண உதவியுடனோ அல்லது தூங்கும் பங்கோ கிடைத்தால் மட்டும் போதும்.குறுகிய காலத்தில் அதென்னமோ பிரேக் ஈவன் பாய்ண்ட் ( யாராவது தமிழாக்கத்துக்கு உதவ வாருங்களேன்) உடைத்து பாக்கெட்டுக்குள் டினாரை சேமிக்கலாம்.சென்னைக்கும் பக்கத்து வீட்டு அமீரகத்தார்கள் யாராவது காதில் விழுகிறதா?

பில்கேட்சுக்கு ஒரு கடிதம்

வாழ்க்கையின் திசைகளை மாற்றிப் போட்ட பில் கேட்சே!ஓய்வெடுக்கப் போவதாக கேள்விப்பட்டேன்.ஓய்வெடுக்கும் முன் உன்னுடன் சில வார்த்தைகள்.முதலாவதாக ஆயிரமாயிரம் கணினி நிபுணர்களுகளின் வீட்டில் ஒளி ஏற்றி வைத்த உனக்கும் உனது மைக்ரோசாப்ட் புரட்சிக்கும் நன்றி.இனி உனது ஓய்வில் மைக்ரோசாப்ட் எந்த திசையில் பயணிக்கும் என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆனால் எனக்கோ 90களில் துவங்கிய ஓட்டம் இன்னும் தீர்ந்தபாடில்லை.கமாவை விட்டால் டோஸ் உனக்கு தோஸ்த் இல்லை என்று சொல்லி விண்டோஸ் என்ற ஜன்னல் பக்கம் இழுத்து வந்தாய்.துவக்கத்தில் வேர்ட் என்ற வார்த்தையும் எக்ஸலண்ட் எக்ஸல் என்றும் அதைவிட புரோக்ராம் என்று என்னவே தெரியாமல் அக்சஸ்2 ஒரு சக்ஸஸ் என்று போதை ஏற்றினாய்.
ஜன்னலைத் திறந்து அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு மேசை(டேபிள்)களை இணைத்து உட்கார்ந்து கொண்டு கேள்வி(குயரி)கள் கேட்டால் பதில் கிடைக்கும்.பாரத்தை (பார்ம்)பூர்த்தி செய்து விட்டால் ரிப்போர்ட்டராக வரவு செலவுக் கணக்குகளைக் கூட கணிக்க முடியும் என்றாய்.தத்து நடை போடுவதற்குள் விசுவல் என்றாய்...பேசிக் பாலம் என்றாய். அங்கே துவங்கிய உனது சித்து விளையாட்டில் ஒன்றைத் தொட்டு நிபுணன் ஆகும் முன் ஜன்னல் 97 என்றாய் பின் 98 என்றாய்.வா எனது விருந்துக்கு என்று ஷெராட்டனுக்கு அழைத்து 2000 ஜன்னல் சர்வர் இப்படித்தான் இருப்பான் என்று படம் பிடித்துக் காட்டினாய்.கணினி உலகத்து காவலனாய் நீ மட்டுமே இருக்க விரும்பினாய்.அந்த முயற்சியில் பெரும்சதம் வெற்றியும் பெற்றாய்.

சபிர்பாட்டியா என்ற எனது தேசத்துக்காரன் ரொம்ப ஹாட் மச்சின்னு சொல்லி தபால்பெட்டி ஒன்று இலவசமாகத் தந்தான்.அந்தப்பெட்டியையும் நீ பிடுங்கிக்கொண்டாய்.நீ கொடுத்த காசில் சபிர்பாட்டியா பெராரி வாகனத்தில் ஊர்வலம் வந்ததாய் கேள்விப் பட்டேன்.எப்படியோ உனது புண்ணியத்தில் எனது தேசத்து மூளைகளுக்கு விலை உயர்ந்தது.

உனக்குப் போட்டியாக ஐ.பி.எம் என்ற ஆள் ஹில்டனில் விருந்து தருகிறேன்.இனிமேல் இ வியாபாரம் இப்படித்தான் இருக்கும் என்றான்.கேக்கர் என்ற கொக்கர்கள் அதற்கும் வேட்டு வைத்ததால் ஈ தான் ஓட்டவேண்டியிருந்தது.சரி ஓராக்கிள் என்று ஒருத்தன் வந்தான்.அவனிடமும் ஹலோ சொல்லிப் பார்த்தேன்.

அப்புறம் வலையென்ற வலையில் விழுந்தேன்.இன்னும் வலைப்பின்னல்களின் சிக்குகளிலிருந்து வெளிவர இயலவில்லை.ஆனாலும் மூழ்கியதில் கிடைத்தது தமிழ்மணம் என்ற முத்து.விட்டுப்போன தமிழை மீண்டும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.தமிழ் கற்றுக்கொள்ளப் போனால் பிட் படம் காட்டுறேன்னு படம் காண்பிக்க ஆரம்பிச்சுட்டாரு ஒருத்தர்.அங்கே படம் பார்க்கப்போனா படம் தயாரிச்சா மட்டும் போதாது.பிற்தயாரிப்பு செய்யவேண்டும்.அப்பத்தான் படம் கிளு கிளுப்பா இருக்கும் என்று சொல்லி ஜிம்ப்ன்னு ஒருத்தர் இருக்கார் அவரப் பார்ன்னாரு சி.வி.ஆர்ன்னு ஒரு படத்தயாரிப்பாளர்.

அங்கே போகலாமுண்ணு வழியைத் தேடினால் கூகிள் என்பவர் வா நான் வழிகாட்டுகிறேன் என்று அடோப் என்கிறவரின் விலாசத்தைக் கொடுத்திட்டாரு.அந்த ஆள் என்னடான்னா 2 லட்சம் கொடுத்தேன்னா போட்டோஷாப்,போட்டோஷாப்புக்குப் பின்னால் பிலிம் காட்டறது,சினிமாக்காரங்க மாதிரி படம் எடிட் செய்யறது,வலை அமைப்பது எப்படி அப்படி இப்படின்னு தலை சுற்ற வச்சுட்டாரு.

பில்கேட்சே!உன்னிடம் தொடங்கிய ஓட்டம் இன்னும் முடியாமல் உருப்படியா எதுவும் கற்றுக்கொள்ளாமல் எப்படியோ நாட்கள் மட்டும் அதன் சராசரி வேகத்தில் நகருகிறது.நீ ஓய்வெடு.வாழ்த்துக்கள்.

Sunday, June 22, 2008

தசாவதாரம் படம் பார்த்த பின்

முன் கதை:

சில வருடங்களுக்கு முன் உண்மையில் நடந்த நிகழ்வின் விவரணப் படம் ஒன்று காண நேரிட்டது. சிறியதொரு விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பனிப் பிரதேசத்தில் காணாமல் போய் விடுகிறார்கள்.காணாமல் போனது பயணிகள் மட்டுமல்லாது விமானத்தின் சின்ன பாகம் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்ற தகவலுடன் தேடும் விமானங்கள் பல வருடங்கள் முயன்றும் தோல்வியைத் தடவி முயற்சியைக் கிடப்பில் போட்டுவிட்டது.

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் பனிக்கட்டிகள் உருகி (இப்பத்தான் சீக்கிரம் உருகுவதற்கான சாத்தியக் கூறுகளை எல்லோரும் சேர்ந்து செய்கிறோமே.கூடவே கையெழுத்தும் போடமாட்டேன் என்ற தாதா புஷ்சின் அடம் வேறு.) விமானத்தின் பாகங்களும் பயணிகள் உடமைகளும் பூமியின் வெளிச்சத்துக்கு வருகின்றன.இத்தனை வருடம் தேடியும் கிடைக்காத பொருட்கள் இப்ப மட்டும் எப்படி கிடைத்தது என்ற நோக்கின் ஆய்வில் தெரிந்த உண்மைகள் பனிக்கட்டிகளின் படிமங்களாகிய (கிளேசியர்) நகர்வதும் சுழழ்வதும் கண்டுபிடிக்கப்படுகிறது. விபத்தின் வேகத்தில் பனிக்கட்டிகளுக்குள் புகுந்த விமானத்தின் பாகங்கள் மீண்டும் பூமியின் மேல் மட்டத்திற்கு வருவதற்கான நகர்வும் சுழலும் ஐம்பது வருடங்களுக்கும் மேல் என்ற வர்ணனுடையுடன் விபரணப்படம் முடிகிறது.

இனி

பல நூற்றாண்டுகளின் வாத விவாதங்களின் வரலாற்றுக்கு சொந்தக்காரர்களாகிய நாம் தமிழ்மண்ணுக்கு மறந்துபோன ஓர் நிகழ்வினைச் சொல்லவேண்டுமாயின் கதைகேட்டே தூங்கிப்பழகிப்போன பழக்கத்தோசத்தில் ஓர் சரித்திர நிகழ்வுடன் கொஞ்சம் கற்பனையும் கலந்தே சொல்லவேண்டிய கட்டாயத்தில் துவங்குகிறது தசாவதாரம்.

பென்கர்,சீன் கானரி,காட்பாதர் படங்களின் காலத்தில் என்னமாய் படமெடுக்கிறானுங்க என்ற அங்கலாய்ப்பு தோன்றும்.அவைகளையெல்லாம் ஓரளவுக்கு பூர்த்திசெய்யும் கமல் உண்மையில் பாராட்டுக்குரியவரே.ஓர் கலைஞனையும் பல கூட்டுத்திறமைகளின் உழைப்பையும் பலகோடி முதலீட்டு சந்தைப்படுத்தலையும் கொச்சைப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே கமலின் உழைப்பிற்காகவும்,கேமிராவின் தொழில் நுட்பங்களுக்காகவும் கதையை கிரகித்துக்கொள்ள ஒரு முறையும் கமலின் துண்டு வசனங்களுக்கும் அவர் எதனை சொல்ல வருகிறார் என்ற தீர்மானித்து விவாதக்களம் தொடங்குவதற்கும் இன்னொரு முறை பார்க்கலாம்.

அப்படியும் அதில் புதிய பரிமாணங்கள் தோன்றும்.படத்துக்குப் படம் மெல்லியதாக கம்யூனிஸ சிந்தனைகளை அங்கங்கே தூவிக்கொண்டு வருகிறார்.அதனையும் தாண்டி மனிதம் பேசிக்கொண்டு வருகிறார்.சமீபத்து உதாரணம் அன்பே சிவம். இப்போது தசாவதாரம்.

படத்தின் சோழர்காலத்து துவக்கக் காட்சியும் பின் வசனங்களும் நீண்ட நாட்களுக்குப் பின் சரித்திரப்படத்தின் முதிர்ச்சியுடன் வலம் வருகிறது.தடாலடியாக அமெரிக்காவிற்குள் கேமிரா புகுந்து ஆங்கிலப்படங்களை நினைவுக்கு கொண்டுவந்து ஒடுது ஓடுது துரத்தத் துரத்த ஓடுது சிதம்பரம் வரையில்.

பல்ராம் "ரா"வின் நகைச்சுவை ஓர் புதிய பரிமாணம்.பூவராகவன் பாத்திரத்தின் வார்த்தை உச்சரிப்பு வித்தியாசப் பட்டது.ஆனால் அதற்கும் நுண்ணரசியல் சொல்லி பதிவினர் கருத்து தேடும்போது மனம் வலித்தது.எதிர்வினையாகவும் சில பதிவுகள்.ஆனால் பதிவிடுவதற்கும் ஓர் நிகழ்வு ஒருவரைப் பாதிக்கவேண்டும்.எதிர்வினையும் அதன் பதில்வினையும் ஒரு படத்தின் சந்தைப்படுத்தலுக்கான ஜிம்மிக் என்றே கருதுகிறேன்.

உலகச் சந்தையினைக் குறி வைத்து எடுக்கும் பொருளாதாராத்தினுடன் ஒரு மொழி பேசும் மக்களின் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கும் திரைப்படத்தினை ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாக இருக்குமா?கிடைத்த தொழில்நுட்பத்தில் பெரும் பணம் முதலீடு செய்து அதனை திரும்ப லாபத்துடன் வியாபாரம் பார்க்கவே யாருக்கும் தோன்றும். அப்படியும் பாலுமகேந்திரா,மகேந்திரன் போன்றோர் பரிட்சார்த்தமாக படங்கள் செய்யவே செய்தார்கள்.ஜான் ஆப்ரகாம் போன்றோர் உலக சினிமா எடுக்கும் முயற்சியில் விலாசங்கள் கூட தெரியாமல் போய்விட்டார்கள்.

எனவே பணம்,நல்ல சினிமா எடுக்கும் முயற்சிக்கு இடையில் மக்களின் ரசனையுடன் இரண்டையும் காம்ப்ரமைஸ் செய்து படத்தை தயாரிக்க வேண்டிய நிலையில் தமிழ்ப்படங்களும் ஒவ்வொரு வட்டங்களிலிருந்தும் விடுபட்டு முன்னோக்கி தனது பாதங்களை நகர்த்துகின்றது என்றே சொல்லலாம்.

முகப்பூச்சுக்களற்ற குடிசை மாதிரி பரிட்சார்த்தப் படங்கள் சென்னை சபையரில் காலைக் காட்சியாக மட்டும் ஓடி தனது அனுபவத்தை முடித்துக்கொண்டது.ரசனையின் வேகம் பத்தாது எனக்குறைபட்டுக் கொள்ளலாமே தவிர திரைப்படங்கள் தேங்கிப்போய்விடவில்லை என உறுதியாகச் சொல்லலாம்.

மீண்டும் தசாவதாரத்துக்கு

அசின் பிசின் மாதிரி ஒட்டிக்கொண்டு கமல் கூடவே பயணிக்கிறார்.ஏய்!வாயாடிப்பெண்ணே! நீயில்லாமல் இருந்திருந்தால் கமலுக்கு பேச்சுத்துணைக்கு ஆளிருந்திருக்காது.

ஜார்ஜ் புஷ்சின் அறியாமை எலைட்களின் மத்தியில் பிரபலம்.இனி அது தமிழ்நாட்டுக்குள்ளும் வலம்வரும்.கமலின் நட்பு சார்ந்து மற்ற நடிகர்களுக்கு வாய்ப்புக்கள் தரப்பட்டிருக்கலாம்.கமலின் அவதாரங்களே படம் முழுவதும் ஆக்கிரமிப்பதால் மற்ற நடிகர்களுக்கு நடிப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு.ஒலிப்பெட்டிகளின் பக்கத்தில் D20 என்ற முத்திரையுடன் இருக்கை.மெல்லிய ஒலிகளும் வல்லிய ஒலிகளும் காதை துளைத்தது.தேவி பிரசாத் புதிய அனுபவம். சுனாமியின் காட்சிகளை அதன் உக்கிரப் பார்வையின் காலத்தில் காணும்போது ஏற்பட்ட உணர்வை மீண்டும் ஒருமுறை உயிர்ப்பித்தது போல் இருந்தது படப்பிடிப்பு.

படத்தின் இடையில் நெருடல்கள் இருந்தாலும் துவக்கக் காட்சியும் அதனை கதையோடு இணைக்கும் உத்தியின் கடைசிக் காட்சியும் படத்தின் சிறப்பென்றே கருதுகிறேன்.பிளட்சரும் கானும் முகமூடி என்ற புலம்பல்களும் பக்கத்துப் பதிவுகளில் கேட்கத்தான் செய்கிறது .முகத்தில் ஒட்டிப்பார்க்காமல் அதன் வலியை உணரமுடியாது.கடலை மாவை வார இறுதியில் முகத்துக்கு தண்ணீருடன் கலந்து ஒட்டி 10நிமிசம் காயவைத்த கல்லூரிக் கால அனுபவத்தில் சொல்கிறேன் இதை.நம்மிடம் நல்ல முகக்கலைஞர்கள் உள்ளார்கள்.வாய்ப்புக்கள் கிடைத்தால் அசத்துவார்கள்.

எனவே குறை கண்டு பிடிக்கும் சூழ்நிலையில் நான் இல்லை.ஏனென்றால் இல்லாத ஊருக்கு தசாவதாரம் சர்க்கரைப் பொங்கல் மாதிரி.எனவே மற்ற விமர்சனங்களிலிருந்து வேறுபடுகிறேன்.

Thursday, June 19, 2008

அ"ழ"கை இழக்கும் சென்னை நகரம்.

சில மாதங்களுக்கு முன்பு டைரக்டர் சீமான் அவர்களின் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பார்வையிட நேரிட்டது.அழகான தமிழ் உச்சரிப்பில் தமிழின் அழகு தெரிந்தது.போன வாரம் கலைஞர் திரையில் சிரிப்போம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இளம் இயக்குனர் ஒருவர் பங்கேற்றார்.பெயரினைக் கவனிக்கத் தவறிவிட்டேன்.ஆனால் பேசும் தமிழின் அழகில் யார் இவர் என யோசிக்க வைத்தது.தான் கும்பகோணத்தைச் சேர்ந்தவன் என்றார்.சன் நிகழ்ச்சிகளை முன்பெல்லாம் பார்க்கும்போது கேட்கும் தங்கிலீஷ் ஐயோ ஐயோ என மனசை நோகச்செய்யும்.நல்லவேளை இப்பொழுது ஊமைப் படங்கள் மட்டும் காட்டுகிறார்கள்.கானாப் பாட்டு நிகழ்ச்சியிலும் இன்னும் சென்னையைச் சார்ந்த தமிழ் உச்சரிப்புக்களின் சில நேர்காணல் நிகழ்ச்சிகளிலும் "ள" வும் "ழ"வும் சுத்தமாக இசைப்பதில்லை.வல்லினம்,மெல்லினம்,இடையினம் என்பதெல்லாம் கடந்தகாலப் பள்ளிப் பாடங்களாக மட்டும் போய்விட்டது.காற்றின் சுவாசம்,அருந்தும் நீர்,உண்ணும் உணவு,உடுத்தும் உடை,வாழும் மண் என அனைத்தும் உடற்கூறிலும் வாழ்க்கை நெறிபாட்டிலும்,கலாச்சாரத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது.இதில் அருந்தும் நீரின் காரணமாக ஒரு மொழியின் எழுத்து மாறுபட்டுப்போகிறதா எனும் ஐயம் தொன்றுகிறது.ஆங்கிலக் கல்வியில் பயின்றவர்கள் ஆங்கிலமே துணையாக நாட்களைக் கடத்தி விடுகிறார்கள்.புழக்கத்திற்கு தமிழ் அதிகம் பழக்கத்தில் கொண்டு வராத காரணத்தால் மூன்று விகிதாச்சாரம் ஆங்கிலம் ஒரு பங்கு தமிழ் என ஒரு கலவையாக தமிழ் புதியதோர் வடிவம் கொள்கிறது.அரசாங்கப் பணிகளில் உள்ளோர் ஐம்பதுக்கு ஐம்பது விகிதாச்சாரத்தில் ரசாயன மாற்றம் காண்கிறார்கள்.சராசரி மனிதர்கள் வழக்குத் தமிழ் பேசினாலும் ல மட்டும் அனைவருக்கும் பொது உடமையாகிப் போய்விட்டது.முன்பெல்லாம் சென்னை நகர மொழியைப் பற்றி கிண்டலும் கேலியும் பேசியே அந்த லாவகத்தில் பேசும் விகிதாச்சாரம் குறைந்து போய்விட்டது போல் தெரிகிறது.ஆனால் அந்த இடத்தை இந்த ல பொதுவுடமையாக ஆக்கிரமித்துக் கொண்டது போல் தெரிகிறது.

சிவாஜியும் தசாவதாரமும் ஓர் அனுபவம்

வணக்கம்.

துவக்கமாக திரு.கமல்ஹாசன் அவர்களின் பதினாறு வயதினிலே பற்றி சில வார்த்தைகள். தமிழ்த் திரை உலகின் கதைக்
களத்தையும் கதை சொல்லும் விதத்தையும் மாற்றிப் போட்ட படம் அது.கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேசனிலிருந்து ராயல் தியேட்டருக்கு
லுங்கியை முழங்காலுக்கு மடித்துக் கட்டிக்கொண்டு ( இங்கே மீண்டும் பதிவுக்குள்ளேயே ஒரு குட்டிக் கதை சொல்ல
வேண்டியிருக்கு.அப்பொழுதெல்லாம் லுங்கியை மடித்துக் கட்டுவதில் கூட ஓர் அழகிருக்கும்.கூடவே கோவைப் பெண்கள் தாவணி
கட்டுவதில் உள்ள அழகின் நேர்த்தி மனதுக்கு இதமாயிருக்கும். இப்போதைய திரைக் கதாநாயகர்கள் ட்ரவுசர் தெரியுமாறு லுங்கி கட்டும்
பழக்கம் அப்போது இல்லை.எனக்குத் தெரிந்து கைதி கண்ணாயிரம் என்பவர்...இயற்பெயர் ஊருக்குள் யாருக்கும் தெரியாது.அவர்
ஜெயிலுக்குப் போய் வந்தவர் என்பதால் அந்தப் பட்டப்பெயர்.அவர் மட்டுமே காக்கி நிற ட்ரவுசர் தெரியும்படியும் லுங்கியை உயர்த்தியும்
கட்டிக்கொண்டு திரிவார்.கூடவே அதன் ஸ்டைலுக்கு எதுகை மோனையாக ஒரு பீடி. எது ஒதுக்கலாக இருந்ததோ அதுவே இன்று
கலாச்சாரக் கொடி பிடிக்கத் துடிக்கிறது.சரி வாங்க பதினாறு வயது படத்துக்குப் போவோம்.
இசை,கதை,யதார்த்தம்,நடிப்பு,இயக்கம் என்று தமிழ் மண்ணின் கிராமியத்தை செல்லுலாய்ட் திரைக்கு அறிமுகப்படுத்தி தமிழ்சினிமா
ரசனையை சுழற்றிவிட்டு மாற்றி விட்ட வண்ண ஓவியம் அது எனலாம்.இன்றும் அந்த முழங்கால் மழைக்குள் படம் பார்க்கச்சென்ற
அனுபவமும் கதையும் பசு மரத்தாணி போல் ஒட்டிக் கொண்டது.ஒரு விதத்தில் அந்த அனுபவம் கூட டூரிங் டாக்கிஸின் மணல்
குவிப்பிலிருந்தும்,மரப்பலகையின் பெஞ்சு டிக்கட்டிலிருந்து பதவி உயர்வு தந்த படம் எனக்கூடக் கொள்ளலாம்.சிவாஜி,எம்.ஜி.ஆர் என்ற
விளையாட்டுப் பயல்களின் கோஷ்டிகளில் மனோரீதியாகப் பார்த்தால் ஓடி ஆடி விளையாண்டு குச்சிகளில் கத்திச் சண்டை போடும்
பயல்களுக்கு எம்.ஜி.ஆரையும் புத்தகம்,கதைப் பிரியர்களுக்கு சிவாஜியும் பிடித்துப்போய் விட்டது.அதுவரை சிவாஜியின் முக,நரம்பு
அசைவுகளுக்கு மட்டுமே புளகாங்கிதம் அடைந்த மன உணர்வுகள் கமல்ஹாசன் என்ற மனிதனின் பக்கம் மெல்ல எட்டிப்பார்க்க
துவங்கியது.பாலச்சந்தரின் படங்களுக்கு அப்பால் இளமை ஊஞ்சலாடுகிறது,அவள் அப்படித்தான் தவிர ரஜனியின் நடிப்பு பைரவியாகிப்
போனது.பின்பு திரைப்படத்தின் முதல் நாளன்று பூசை போடும் ரசிகர்களின் கதைகள் கேட்டு வியப்பும்! என்ன இந்த இளைஞர்களை
ஈர்க்கிறது என்று புரிவதற்கு காலமும் எடுத்தது. ஸ்டைலுடன் ரஜனி என்ற மனிதனின் மனிதநேயம் என்ற ஒன்று இந்த இளைஞர்களை
ஆட்டுவிக்கறதோ என்னவோ.மகுடத்தை தாம்பூலத்தட்டில் வைத்து தமிழர்கள் வரவேற்க தயாராக இருந்தும் இமயமலைத் தனிமை அவரை
வித்தியாசப்படுத்துகிறது.
திருட்டு விசிடிக்களின் ஆக்கிரமிப்பிலும் நினைத்தபோது பட்டனைத் தட்டி கொஞ்சம் படம் இதர பல வேலைகள் என்ற பழக்கத்தினால்
இங்கு சினிமாத் தியேட்டர் பக்கம் போவது அரிது அரிது அத்தனை அரிது.ஒன்று இரண்டு விரல்களில் எண்ணி விடும்படியான திரை
அனுபவங்கள் மட்டுமே அவை.கண்ணுக்கு கண்ணாடி போட்டாத்தான் படம் காண்பிப்பேன் என்ற 3 D படம் ஒன்று.ராம் கோபால் வர்மாவின்
ரங்கீலா, படத்தை திரையில் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் கொடுத்த டினாருக்கு லாபம்தான் என்ற நிறைவுடன் திரையரங்கை விட்டு
வெளியே வந்த இந்தியன் என்று திரையரங்கு அனுபவங்களுக்கு குறைவான மதிப்பெண்கள்தான்.நீண்ட கால இடைவெளியில் மீண்டும்
ஒருமுறை வரிசையில் நின்று முதல் நாள் முதல் சினிமா பார்த்தது சிவாஜி.படத் துவக்கத்தின் முன்பு அனிமேசன் காட்சியைக் கண்டு
படம் பிரமாதமாக இருக்கும்போல என்று நினைக்க வைத்து பிலிம் காட்றதுங்கிறது இதுதான் என நினைக்க வைத்து பின் சிவாஜி என்ற
எழுத்துக்களுடன் படம் துவங்கியது.எல்லோரும் படம் பார்த்து சிவாஜியை ஆணி பிடுங்கி அக்கு வேறாக்கி விட்டதால் மேற்கொண்டு
சிவாஜியைப் பற்றி என்ன சொல்ல?படத்தின் பாடல்களும் பிரமாண்டமும் ரஜனியின் மொட்டைத்தலை நடிப்புமே இப்பொழுதும்
நினைவுக்கு வருகிறது. திரையரங்கில் எப்பவாவது படம் பார்ப்பது கூட புது அனுபவம் என்பதைத் தவிரவும் சும்மா தூங்கிக்
கொண்டிருக்கும் திரை அரங்குகளை பொருளாதார ரீதியாக பணம் கொட்டும் கட்டிடங்களாக மாற்றுவது ரஜனியும் கமலும்தான்
எனக்கண்கூடாக கண்டது சிவாஜி தசாவதாரங்கள் மூலமாகத்தான்.ரஜனி மயக்கம் அங்கு போலவே இங்கும் கொட்டிக்கிடந்தாலும் அதே
நாளில் டிக்கட்டை முன்கூட்டி வரிசையில் வாங்குவதென்பது சாத்தியமானதாகவே இருந்தது.
ஆனால் தசாவாரத்தின் அனுபவம் அப்படியில்லை.சில நாட்களாய் நகரத்திற்குள்ளேயே படியும் மணல் காற்றும் சூரிய ஒளி தெரியாமல்
வீசும் தூசும் மனித நடமாட்டமில்லாப் பாலைவனம் எப்படி இருக்கும் எனத் திகைக்க வைக்கிறது.இருந்தும் சபாத் என்ற நகரத்தின்
மையத்திலிருந்து சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் 40வது ஹைவேசில் 30 நிமிட நேரம் காரில் பயணம் செய்து பாஹில் என்ற
இன்னொரு நகரத்தை அடைந்தால் அழகான கட்டிடமும்,விற்பனைக் கூடங்களும் கூடவே மெக்டொனால்ட் போன்றவர்களின் கடை
விரிப்பும் எஸ்கலேட்டரும் அழகாகவே வரவேற்றது.டிக்கட் தரும் கண்ணாடி அறைக்கு முன் ஒரு சில இளைஞ்ர்கள் மட்டுமே.மனதுக்குள்
அற்ப சந்தோசம்.ஒரு பயல் கூட படம் பார்க்க வரவில்லை.நாம்தான் போணி பண்ண வந்திருக்கோம் என நினைத்து எகிப்திய கண்ணாடிக்
கூண்டுக்காரனிடம் டினாரை நீட்டினால் "ஃமாபி" (இல்லை)என்கிறான்.பதிலுக்கு நாம "லேஸ்?"(ஏன்) அவன் " குல்லு கலாஸ்"(எல்லாம்
முடிந்து விட்டது). மண் காற்றின் வீச்சால் வேறு ஒன்றும் செய்யத் தோன்றாமல் நேராக வீட்டுக்கு வண்டிக்கட்டு.சரி முதல் நாள்தான்
இப்படியென்று அடுத்த நாளும் திரையரங்குக்குப் போனால் மீண்டும் அதே கதை.இன்றுடன் ஒரு வார காலமாக மூன்று காட்சிகள் குல்லு
கலாஸ் "ஹவுஸ்புல்" என்ற அரபி வார்த்தைகளுடன் தியேட்டர் உண்மையிலேயே களை கட்டுகிறது.இன்னும் இரண்டு திரையரங்குகளில்
படம் ஓடுகிறது.நிலவரம் எப்படி எனத் தெரியவில்லை.
இனி இது சரிப்பட்டு வராது என்று காலை அலுவலகம் வந்தவுடன் மெனக்கெட்டு ஆன்லைனில் தேடிக் கண்டு பிடித்து வங்கிக்கார்டின்
எண்ணை பதிவு செய்து முன்பதிவு வசதியைப் பார்த்தால் மூலையில் இரண்டொரு இடங்கள் காலியாக இருந்தது.ஒரு இருக்கையை
கிளிக் செய்து யுவர் சீட் ரிசர்வேசன் சக்ஸஸ்புல் என்ற கண்சிமிட்டலுடன் இன்று இரவு படம் பார்க்கப் போகிறேன்.திரும்பிப் பார்த்தால்
டிக்கட் எடுக்கும் முன் அந்த நீண்ட கூண்டுக்குள் நுழைவதற்கு வேர்வைப் பட்டாளங்களாய் முண்டியடித்தும்,நுழைந்தும் கூட குரங்கு பலம்
கொண்டவர்கள் தலைகளுக்கு மேல் தாவித் தாவி ஓடிய காலம் நினைவுக்கு வருகிறது. ஆனால் தமது ரசனைகளின் தீவிரங்களிலிருந்து
தமிழ்நாட்டு வட்டத்துக்கும் மேலாக கணினிக் காலம் வரை ஒருபடி மேலாகவே உலகளாவிய அளவில் வியாபித்திருப்பது
நிரூபணமாகிறது.

Friday, June 13, 2008

ஜுன் மாதம் பெயர்ச்சொல் வினைச்சொல் போட்டிக்கு

வணக்கம்.ஜுன் மாதம் போட்டிக்கான படம்.வழக்கம் போல் நிறைய படங்கள் போட்டியின் முதல் வரிசையில் ஜில் ஜில் எனவும் பிவி என ஜல்லிக்கட்டு வேகத்திலும் வாசி த்துக்கொண்டும் ஆனந்த் தமாக வலம் வருகின்றன.நானும் உள்ளேன் ஐயா சொல்ல மட்டுமே ஒரு படம்.வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.


Wednesday, June 4, 2008

வாழ்வின் அழகு,அவலங்கள் மற்றும் அப்துல்கலாமின் கனவு.

ஜுன் மாதப் போட்டா போட்டி அறிவிப்பு வந்தவுடன் தலைப்பு என்னவென்று மட்டும் ஒரு முறைப் பார்த்ததும் சர்வேசன் சொல்லிய பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லும் பழைய காலத்து தமிழ் வகுப்புக்களை நினைவு படுத்தியது.படித்தவையெல்லாம் மறந்து உதடுகளில் "நவுன்" என்றும் "வெர்ப்" என்றும் புதிய வார்த்தைகள் ஒட்டிக்கொண்டன. இருந்தாலும் பரவாயில்லை.தமிழ் தமிழாக குறைந்தபட்சம் வழக்குத் தமிழாக தமிழ் வலம் வந்த காலமது. ஆங்கிலக் கல்வியும் குட்டைப் பாவாடைக் காலம் கூட தண்டவாளத்தின் கோடு மாதிரி ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளாமல் தமிழும் ஆங்கிலமும் அதனதன் பாதைகளில்தான் போய்க் கொண்டிருந்தது. இந்த இடைச் செறுகல்களாக மொழி மாறிய காலமெது?

85வது வருடம் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய முதல்வர் கலைஞரின் உதடுகளில் மட்டும் எப்படி தனித் தமிழ் நர்த்தனமாடுகிறது? கூட பணி புரியும் அரசு அதிகாரிகள் அவ்வப்போது தொலைக்காட்சிகளில் பேட்டி தரும்போது சொல்லும் வார்த்தைகள் எப்படி தமிழ்,ஆங்கிலம் எனக் கலப்படம் கொள்கிறது? பெண்மகள் ஒருத்தி தமிழ்த் தொலைக்காட்சியில் பேசும்போது கலக்கும் ஆங்கில வார்த்தைகள் எத்தனை?இவையென்ன நமது அறியாமையா அல்லது அறிந்தும் அறியாமையா?


நேற்று பெருமைக்குரிய அப்துல் கலாம் அவர்கள் திருவனந்தபுரத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூட்டத்தில் பேசும்போது அதற்கு முன் பேசிய அனைவரும் மலையாளத்தில் பேசும் போது தனக்கும் தமிழில் பேசவேண்டும் என்ற மன உந்துதல் ஏற்படுவதாகச் சொல்லி தனது உரையை ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.சரளமான ஆங்கிலம் கொஞ்சம் குழந்தைத்தனக் குரல் கலவை கேட்க நன்றாகத்தானிருந்தது.வாருங்கள் நல்ல தனித்தமிழ்பேசுவோம்! நல்ல ஆங்கிலம் பேசுவோம்.(தமிழ்நாட்டின் தலைநகரை இன்னும் கொஞ்சம் தள்ளி கடற்கறையோரமாகவே தஞ்சாவூர்ப் பக்கம் அமைத்தால் சென்னையின் பாதிப்புக்கள் குறையுமோ என்னவோ?)

இனி ஜூன் மாதம் மாதிரிப் புகைப் படங்கள் பற்றிய ஓர் பார்வை. அனைத்து உதாரணப் படங்களுக்குமுள்ள ஓர் ஒற்றுமை அனைத்தும் தொழிலாளர் வர்க்க்த்தின் படங்கள். மே மாதம் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என்னவோ? அன்றாட வாழ்க்கையில்தான் எத்தனை அழகுகள் கொட்டிக் கிடக்கின்றன.ஆனால் அவற்றையெல்லாம் நின்று பார்த்து ரசிக்கவும் , அசைபோடும் நேரமின்மையுமின்றி நமது வாழ்க்கையின் அவலங்கள். கூடவே படங்களின் மனிதர்கள் அன்றாட வாழ்க்கைக்காக படும் பாடு.இந்த யதார்த்தங்கள் அழகாயிருந்தாலும் வாழ்க்கையை கொண்டு செல்லும் தின வாழ்க்கை சுகமாயில்லை.இந்த அடிப்படை நிலை மாறவேண்டும்.அதுவே திரு.அப்துல் கலாம் அவர்களின் 2020 ன் கனவு.

பின்குறிப்பு: ஜூன் மாதப் புகைப்படப் போட்டிக்கு அனுப்பவேண்டிய பின்னூட்டம் நீளமாகியதால் தனிப்பதிவிடுகிறேன்.