Followers

Saturday, January 31, 2009

நாகேஷ் நினைவாக

வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அசலாகவும் ,திரையுலகம் மூலமாகவும் மனதை நகைச்சுவை கொண்டு நிறைய பேர் குதுகலப்படுத்தியிருக்கிறார்கள். திரை உலகின் நகைச்சுவை நாயகர்களாக நிறைய பேர் வந்து போய் விட்டார்கள்.என்.எஸ்.கிருஷ்ணன்,டணால் தங்கவேல்,சந்திரபாபு போன்றோரின் சிரிப்பின் அறிமுகம் தற்போதைய தொலைக்காட்சிகள் வாயிலாகவே கிடைத்தது. அமராவதி நீரில் முங்கி விட்டு நாகேஷின் பிறந்த வீட்டைக் கடக்கும் போதெல்லாம் அந்த மனிதனின் பரிணாமங்கள் தெரியவில்லை.அதன் பின் புரிந்தும் புரியாமலும் முதல் முறையாக மனதில் வந்து ஒட்டிக்கொண்ட சிரிப்பு முகம் நாகேஷ்.


படம் போட்டால் பக்கத்து சீட்டிலோ,முன் சீட்டிலோ யார்,என்ன நடக்கிறதென்று யார் கவனிக்கிறா?கூட்டாளிகளோடு நாகேஷின் நகைச்சுவையில் மூழ்கிப் போய் இஃகி!இஃகி ன்னு விடாமல் சிரித்து அவரது மனைவியைத் தான் கிண்டல் செய்கிறோமென்று நினைத்து முன் சீட்டில் இருந்தவர் சண்டைக்கு வந்து சண்டை சமாதானம் ஆகி 5 நிமிடம் வாய் மூடிகளாய் இருந்து விட்டு முடியாமல் மீண்டும் இஃகி!இஃகி தொடர்ந்தது.உடல் சேட்டைகள்,நடனம் இவற்றுடன் டைமிங் என சொல்லப்படும் வசனங்கள் அனைத்துக்கும் மேலாக நகைச்சுவையின் பரிமாணங்கள் இவரது காலத்துடன் வேறு திசை நோக்கி போய் விட்டது.

சில பழைய படங்களை தொலைக்காட்சிகளில் இப்பொழுது பார்க்கும் பொழுது இயக்குநர் பாலசந்தர் நன்றாகவே நாகேசின் திறமைகளை பட்டை தீட்டியுள்ளார் எனத் தெரிகிறது.அந்தப் பரிமாணத்தை நிகழ்காலத்துக்கும் கொண்டு வந்ததில் கமலின் பங்கு நிறையவே உண்டு.இருந்தும் நகைச்சுவையின் சிகரமாக திருவிளையாடல் தருமி சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டார்.

சிரிப்பைக் கற்றுத் தந்த நகைச்சுவை என்ற நினைவிற்கு விதை தூவிய நாகேஷின் நினைவாக இந்தப் பதிவு சமர்ப்பணம்.

Thursday, January 29, 2009

சிங்கிலீஷ்

படங்களை நோக்கும்போது ஒருபக்கம் சிரிப்பும் அதே நேரத்தில் சிங்கிலீசை வைத்துக்கொண்டே சீனாவின் சிங்கிலீஷ் முன்னேற்றம் வியக்க வைக்கிறது.நமது ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் அவலங்களைக் கூட நீக்க முடியாமல் இருக்கிறோம்.

சிங்கிலீசில் வரவேற்கிறோம்

நேரமிருந்தால் படத்தை பெரிதாக கிளிக்கவும்

இவ்வளவு தூரம் வந்துட்டு இதையும் கடைசியா கிளிக்கிப் பார்த்துடுங்களேன்

இந்தப் பட விளக்கத்திற்கு சீனாக் கதாநாயகன் குடுகுடுப்பையாரை உதவிக்கு கூப்பிடுங்களேன்!

தமிழகம்,ஈழம், இலங்கை-ஓர் பார்வை

அனைவரும் இயலாமையினாலும் செய்வதறியாது பதிவுகளாகவோ பின்னூட்டமாகவோ புலம்பிக்கொண்டிருக்கிறோம்.தலைமைகள் இருந்தும் தவறாக மாறிக்கொண்டிருக்கும் மத்திய அரசின் முடிவுகளால் தமிழகத்தில் கோபங்கள் அதிகரிக்கின்றன.சிலர் மவுன சிரிப்பிலும் ஈழம் பிரிந்து தொலைந்து விட்டதில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.இவற்றையெல்லாம் கடந்து ஒரு மக்கள் புரட்சி ஈழம் சார்ந்து எழத்தொடங்கியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து வாழ்க்கை மட்டத்தில் உள்ளவர்களும் தங்கள் கோபத்தை,ஆதங்கத்தை ஊர்வலமாக,முக்கியமாக மாணவர்கள் உண்ணாவிரதமாக வெளிப்படுத்துகிறார்கள்.இந்தக்கூட்டு முயற்சிகள் தோல்வியடைந்த விரக்தியில் மனஉணர்வுகள் எதிர்திசையில் திரும்பும் சாத்தியங்களை நிகழ்வுகள் உருவாக்குகிறது.(இதை எழுதி 3 நாட்களாகியும் இன்னும் பதிவுக்கு திரும்பாத நிலையில் இன்று முத்துக்குமாரன் தீக்குளிப்பு).

முதல் முறையாக தமிழகம் முழுவதும் குரல்கள் எழுப்பியும் அந்த ஜனநாயக குரல்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்காதது வேதனையையும் அந்நியப்படும் மனப்பான்மையையும் உருவாக்குகிறது.தமிழன் தனக்கென்று ஒரு பண்பாடு, இலக்கியம், வரலாறுகள்,சமூகம் சார்ந்த பார்வை கொண்டவன் என்ற உணர்வுகளாலுமே மாறுபட்டு நிற்கிறான்.

ஈழ உணர்வு இலங்கை ராணுவ வெற்றியோடு முடிந்து விடும் விசயமல்ல.அதனையும் தாண்டி நிகழும் மனித அவலங்கள் இலங்கை தமிழனுக்கு கவுரவமான எதிர்காலத்துக்கு வழிவகுப்பதோடு தொடர்புடையது.அதன் காரணம் கொண்டே ஈழம் தமிழனை பாதிக்கிறது.

முந்தைய ஈழம் குறித்த பதிவுகளில் சொன்னதையே மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது.விடுதலைப் புலிகளுக்கு மாற்றாக ஈழத்து மக்களுக்கு வேறு மாற்று சக்தி உருவாகாத காரணம் கொண்டும்,விடுதலைப் புலிகள் தோல்வியின் விளிம்பில் கூட இலங்கை தமிழர்களின் அபிலாசைகளுக்கு அங்கீகாரம் உரியவர்கள் என்ற காரணம் கொண்டே ஈழ சுதந்திர விடுதலை உணர்வை மதிக்கவேண்டியிருக்கிறது.

கருணா,அனந்தசங்கரி,பிள்ளையான் போன்றவர்கள் இடம் மாறியும் கூட உங்களை புதுப்பித்துக் காட்டும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளை நீங்கள் உருவாக்காததே தமிழக தமிழர்களின் நம்பிக்கையின்மைக்கான காரணமும், இருப்பதை உறுதியாகப் பற்றிக் கொண்டாவது சுய கவுரவத்துடன் வாழலாம் என்ற நம்பிக்கைதான் ஈழத்தமிழனுக்கு இத்தனை அவலங்களுக்கும் மத்தியிலும் இன்னும் மக்களை விடுதலைப்புலிகளின் பக்கம் இழுக்கிறதெனலாம்.

இலங்கை அரசு புலம் பெயர்ந்த தமிழனை மீண்டும் சம உரிமையோடு அணைத்துக்கொள்வதும், அல்லது இரண்டாம்தரக் குடிமகனாக வரவேற்பதும்,அல்லது அகதியாக உலகம் முழுவதும் ஊர்சுற்றவிடுவதும் போன்ற முக்கியமான நிகழ்வுகள் எதிர்காலத்தில் காத்துக் கிடக்கின்றன.மண்வாசனை காரணமாகவோ இயலாமையினாலேயோ தன் மண்ணை விட்டு நகராத உயிரோடிக்கும் உண்மை தமிழர்களின் எதிர்காலம் நிலைக்கவேண்டும்.

மூன்று சகாப்தத்தை தொடும் கொரில்லா இயக்க நிலையிலிருந்து போர்ப் படைகள் நிலை ,அரசாங்க நிர்மாணங்கள் என்று வளர்ந்த ஒரு இயக்கம் எப்படி இப்படி நிலைதடுமாறியது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.கிளிநொச்சி பத்திரிகையாளர்கள் கூட்டத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் தருணத்தில் பிரபாகரனின் முக அசைவுகளையும் பெரும்பாலான கேள்விகளுக்கான பதிலாக ஆன்டன் பாலசிங்கம் பதில் கூறுவதை நினைவுபடுத்தும் போது பிரபாகரனின் ராணுவ வெற்றிகளின் அளவுக்கு அரசியல் முன்நகர்வுகளை நகர்த்த இயலாமை தென்பட்டது. ராணுவ பலம் மற்றும் அரசியல் கட்டமைப்புக்கள் கொண்டு வளர்ந்த ஒரு இயக்கம் அரசியல் ரீதியாக தமிழ்செல்வன் இழப்புடன் கீழே விழத்தொடங்கியதெனலாம்.

அவலங்களும்,மனித அழிவுகளும் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் மனம் பதைக்கும் மனித நேயமாகவே ருவாண்டா கொலைகளும்,எத்தியோப்பியா வறுமையும்,ரஷ்ய மண்ணின் செச்சின்யா போர்களும்,வளைகுடா யுத்தங்களும்,பாலஸ்தீனப் பரிதாபமும்,ஈராக்கின் துயரங்களும் கண்ணில் படுகின்றன.மனித நேயம் என்பது எனது மொழிக்கான,தமிழ் இனத்துக்கான குரலாக மட்டும் ஈழம் நோக்கிய பார்வையில் திரும்பவில்லை என்பது ஏனைய உலக நிகழ்வுகளையும் உற்று நோக்கியதிலும் அந்த துயரங்களில் பங்கு கொண்டதிலும் தென்படுகிறது.

கருணாநிதி,ஜெயலலிதா இருவருக்கும் ராஜபக்சே அழைப்பு விடுத்திருக்கிறார் தங்கள் கண்ணாலேயே ஈழத்து நிலையினை வந்து பார்க்குபடி.மறைந்த இலங்கை பத்திரிகை ஆசிரியர் லசந்தே விக்கிரமசிங்கே சொன்னதுபோல் மனிதநேயங்கள் இழந்தும்,வருங்காலம் இலங்கைக்கு எந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்ற பார்வையில்லாதும் உலகப் பத்திரிகை ஊடகங்களுக்கு கூட அனுமதி வழங்காத இலங்கை ஜனாதிபதி இந்த அழைப்பின் மூலம் எதனை நிலை நாட்ட முயல்கிறார்? எதுவாக இருந்தாலும் அவரது அரசியல் தமிழக அரசியலை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார் எனபதைக் காட்டுகிறது.ஒருவர் வேனை விட்டு நகரமாட்டார்,இன்னொருவர் வயதின் முதுமை காரணமாக கடல் கடக்கமாட்டார் என்ற நிலையில் இந்த அழைப்பு எந்த அளவுக்கு சாத்தியமென்று தெரியவில்லை.தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரு சக்திகளும் நிகழ்கால அரசியலை சமன்படுத்த விரும்பா எதிர் சக்திகள்.

கூடவே தமிழகம் அனைத்தும் எழும் சிந்தனையும் உணர்வும் நியாயமானது என்று மக்கள் குரல்கள் எதிரொலிக்கின்றன.மக்களின் குரல்கள் வெறும் கூச்சலாகவும்,தமிழக தலைவர்கள் கோமாளிகளாகவும் தென்படும் இலங்கை அரசுக்கு தமிழகமும்,இந்தியாவும் வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற ஜனநாயகம் என்ற வேர்களுக்குள் நிலைத்து விட்டதால் மாத்திரமே அனைத்தும் கோமாளித்தனமாக தெரிகின்றது.

ஒரு முக்கியமான மண்,மொழி,இனம் சார்ந்த பிரச்சினையில் எங்கள் தலைமைகள் குட்டையை குழப்பினாலும் ஒரு பொறுப்பான நிலையில் உட்கார்ந்து கொண்டு உதிர்த்த பொன்முத்துக்கள் கண்டனத்துக்குரியது Mr.பொன்சேகா!

ஈழம் குறித்த எதிர்க்குரல்கள் தமிழகத்திலும் ஈழத்திலும் எழுந்தாலும் அவை குறைவான எண்ணிக்கையின் விழுக்காடு என்பதால் புறம் தள்ளி விடலாம்.தீவிரவாதம் என்ற கோட்டுக்குள் பார்க்கப்படுகின்ற ஒரு இனத்தின் உரிமைக்குரல் காரண காரியங்கள் தமக்கு சார்ந்த அனுகூலங்கள் என்ற காரணத்தால் ராணுவ ரீதியாக இலங்கை அரசுக்கு வெற்றியைத் தந்துள்ளது.மனரீதியான வெற்றியைப் பெறும் தகுதி தற்போதைய இலங்கை அரசுக்கு உள்ளதா என்பது கேள்விக்குரியது.இருந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு என்ற முத்திரையின் காரணமாக காயங்கள்,இழப்புக்கள்,வடுக்களுடன் இன்னும் ஏதாவது ஒரு வகையில் இலங்கை அரசை எதிர்கொள்ளவே வேண்டியிருக்கிறது.போரின் அவலங்கள் இத்தனை நிகழ்ந்தும் போருக்கெதிரான குரலாக சிங்கள மக்களின் ஒரு விழுக்காட்டில் கூட சமாதான குரல் எழும்பாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.இந்த நிலையில் எந்த விதமான எதிர்கால கூட்டு வாழ்க்கை இயலும் என்ற நம்பிக்கையும் கேள்விக்குரியதாக இருக்கிறது.

சில எதிர்மறையான பதிவுகளும் முக்கியமாக பின்னூட்டங்களும் தென்படுகின்றன.போய் புள்ள குட்டிகளைப் பாருங்கய்யா!தமிழ் நாட்டையும் இலங்கை மாதிரி ஆக்கிடுங்க போன்ற எழுத்துக்களும்.ஆட்டு மந்தையாக ஒரே மாதிரி சிந்திப்பது சரியல்ல.ஆனால் வித்தியாசமாக சிந்திக்கிறேன் என தனது இயல்புகளையும் பண்புகளையும் இழந்துவிட்டு யோசிப்பதில் என்ன பலன்?எழுத்து,மொழி ஆர்வம் கொண்டே பதிவர்களும் பின்னூட்டக்காரர்களும் தமிழ் வலைப்பக்கம் எட்டிப்பார்க்கிறார்கள்.ஈழம் பற்றி பதிவு எழுதுகிறவர்களும் ஏன் எதிர்மறை பின்னூட்டமிடுபவர்கள் கூட ஏதோ ஒரு சமூக அக்கறையினாலும்,சமுதாய சிந்தனை அடிமனத்தில் தொக்கி நிற்பதாலுமே தமது கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்பது எனது கணிப்பு.

பதிவுகளை எட்டிப்பார்க்கும் கால அவகாசம்,வசதிகள் இருந்தும் தனது சுயநலம் மட்டுமே போதுமென்று நினைத்தால் நிச்சயம் மாற்றுவழிகள் ஏராளமாயிருக்கின்றன.ஆனாலும் அனைவரும் ஏன் ஒரு பொதுக்கருத்தை உணர்வதிலும் நிறுவுவதிலும் ஆர்வம் கொள்கிறேமென்றால் இது நமது மனம் சார்ந்த, மூளையின் அணுக்கள் சார்ந்த ஒரு மொழியின்,இனத்தின் மக்களின் உயிர்,வாழ்க்கை,எதிர்காலம்,உரிமைகள் போன்ற முக்கியமான வாழ்வாதாரங்களை உட்படுத்தியது .இது இயல்பாக அனைவருக்கும் உருவாகும் சிந்தனையின் வெளிப்பாடு.

ஈழம் சார்ந்த நல்லது ,கெட்டது அனைத்தும் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை சார்ந்ததுதான்.ஒன்று விடுதலைப் புலிகளையும் ஈழத்து மக்களையும் ஆதரிக்கிறோம் என சொல்லி விட்டுப் போங்கள்.அல்லது விடுதலைப் புலிகளையும் ஈழத்து மக்களையும் ஆதரிக்கவில்லை என்று சொல்லுங்கள்.அதனை விடுத்து நாங்கள் விடுதலைப் புலிகளை எதிர்க்கிறோம், ஈழத்து மக்களை ஆதரிக்கிறோம் என்பது ஓட்டு வங்கியில் கவனம் செலுத்தும் அரசியல் கணக்காகவே முடியும்.இந்த அரசியல் கோசங்களை காங்கிரசும்,பி.ஜே.பியும் அறிக்கையாக வெளியிடுகிறது.தனிப்பட்ட முறையில் விடுதலை இயக்கத்தையும்,ஈழ மக்களையும் எப்படி பிரித்துப் பார்ப்பதென்று தெரியவில்லை.அப்படி தனிமைப் படுத்த வேண்டுமென்றால் ஏனைய இயக்கங்கள் சுகாதார சிந்தனையுடனும்,மக்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையும் சாத்தியங்கள் உள்ளதா என சிந்திக்கவேண்டியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் சில மாதங்களில் வருகின்ற மத்திய அரசு வாக்குரிமை அஸ்திரமே ஈழத்து தமிழனுக்கு ஆதரவாக கடைசி ஆயுதமாக இருக்கப் போகின்றது.ஆனால் நிகழும் அரசியல் சறுக்குகள் ஒரு நிலையான வாக்குகளாக மாறாமல் போவதற்கான சாத்தியங்களாக அனைத்து அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளும் இருக்கின்றன.

ஜெயலலிதா ஈழ தமிழ் மக்களின் வாழ்விற்கு எதிரான அறிக்கைகளை விடுகிறார். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தமிழக அரசியல் வாழ்வில் நிலைத்த சாமர்த்தியம் ஆச்சரியத்திற்குரியது.இவ்வளவு நாட்கள் அரசியலில் இருந்தும் அரசியல் முதிர்வு பேசுவதில் தென்படுவதில்லை.கலைஞர் தானும் முன்னிற்காமல் மற்ற கட்சிகளையும் செயல்பட விடாமல் அறிக்கைகள் தினம் வேறுபடுகின்றன.தண்டவாளத்தில் தலை கொடுத்த மு.க வின் இளமை அரசியல் கால கட்டங்களிலிருந்து கடந்து வந்த அரசியல் ஏறுமுகம்,சறுக்கல்கள்,சோதனைகளை தாக்கு பிடிக்கும் தைரியம் அசாத்தியமானவை.அரசியலின் இறுதி கால கட்டங்களில் ஈழம் குறித்த கலைஞரின் பார்வை வரலாற்றில் விமர்சனத்துக்குரியதாகவே இருக்கப் போகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை பிரச்சினையை எப்படி அலசிப்பார்த்தாலும் இறுதியில் ராஜிவ் காந்தி என்ற கோட்டுக்குள் வந்து முடிந்துவிடுவதால் ஈழத்துமக்களின் நலன்களை விட இழந்த இந்திய தலைவனின் துயரேமே முக்கியமாக சிலரின் மனதில் நின்றுவிடுகிறது.திசை மாறிப்போய் விட்ட இத்தனை சிக்கல்களுக்கும் இதுவே காரணமென்ற போதிலும் இழந்தது பெரிய இழப்பாகிப் போனாலும் வாழ்க்கையையும்,வரலாற்றையும் முன்னோக்கி நகர்த்த வேண்டிய கால கட்டத்தின் பாதையில் ஓர் இனம் அலைக்கழிக்கப்படுவது எதிர்காலத்தில் யாருக்கும் நல்லதல்ல.

கருணாநிதி,ஜெயலலிதா இருவருக்கும் ராஜபக்சே அழைப்பு விடுத்திருக்கிறார் தங்கள் கண்ணாலேயே ஈழத்து நிலையினை வந்து பார்க்குபடி.மறைந்த இலங்கை பத்திரிகை ஆசிரியர் லசந்தே விக்கிரமசிங்கே சொன்னதுபோல் மனிதநேயங்கள் இழந்தும்,வருங்காலம் இலங்கைக்கு எந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்ற பார்வையில்லாதும் உலகப் பத்திரிகை ஊடகங்களுக்கு கூட அனுமதி வழங்காத இலங்கை ஜனாதிபதி இந்த அழைப்பின் மூலம் எதனை நிலை நாட்ட முயல்கிறார்? எதுவாக இருந்தாலும் அவரது அரசியல் தமிழக அரசியலை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார் எனபதைக் காட்டுகிறது.ஒருவர் வேனை விட்டு நகரமாட்டார்,இன்னொருவர் வயதின் முதுமை காரணமாக கடல் கடக்கமாட்டார் என்ற நிலையில் இந்த அழைப்பு எந்த அளவுக்கு சாத்தியமென்று தெரியவில்லை.தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரு சக்திகளும் நிகழ்கால அரசியலை சமன்படுத்த விரும்பா எதிர் சக்திகள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பான சூடான இடுகைகள் பக்கம் முழுவதும் கல்மடுவின் குளம் உடைக்கப்பட்டதும் அதனால் இலங்கை ராணுவ வீரர்களின் எண்ணிக்கை பற்றிய பதிவுகளும் பொய்யாகிப் போய் அதே தின மாலையில் முல்லைத் தீவை ராணுவம் கைப்பற்றியது செய்தியானது.பல நாடுகளிலிருந்தும் பதிவிடும் அன்பர்கள் கல்மடுகிணறு உடைந்த செய்தி உண்மையாகியிருந்தும் உயிர்ச்சேதம் குறித்த செய்திகள் எந்த மூலத்திலிருந்து பதிவர்களை மட்டுமல்லாது தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் உட்பட ஏமாற்றுவித்தது என்ற புலனாய்வு முக்கியம்.முக்கியமாக பதிவர் வட்டத்தில் இதன் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரவேண்டும்.

இதனையும் தாண்டி வாழ்க்கை நிகழ்வுகளை தமிழகமும் இலங்கையும் எதிர்கொள்ள வேண்டிய மொழி,பூகோளம் சார்ந்தவை தொடர்கதையாக மாற்று தலைமுறைக்கு எதிர்காலம் எடுத்துச் செல்லும்.தற்போதைக்கான தீர்வையே சிந்திக்காத இலங்கை ஜனாதிபதிக்கு இதனையெல்லாம் சிந்திக்கும் சுழல்கள், கால அவகாசங்கள்,மன நிலைகள் அமையாது போனது இலங்கை மக்களுக்கான சரியான தலைமை அமையாமல் போனது துயரத்திற்குரியது.அதே நேரத்தில் நிகழும் ராணுவ முன்நகர்வுகள் துவக்க கால போராட்டத்தின் வட்டத்திற்கு மீண்டும் தள்ளப்பட்டு விட்டது.

புதிய தீர்வுக்கான வழிமுறைகளை அனைவரும் சிந்திப்பதே எஞ்சி நிற்கும் மக்களின் உயிர் காப்பதற்கும் இலங்கைக்கும் துணை புரியும்.

Friday, January 23, 2009

எழுந்து நில் அமெரிக்கா

அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் வேறு வேறு கோணங்களில் பார்க்க வேண்டியது அவசியம்.ஆப்கானிஸ்தான் யுத்தம் அமெரிக்காவின் இறையாண்மைக்கு விட்ட சவால்.அமெரிக்கா ஈராக்கின் இறையாண்மைக்கு விட்ட சவால் ஈராக் யுத்தம்.ஜார்ஜ் புஷ் ரம்மி விளையாட்டுக் கார்டுகளாக படங்கள் போட்டு விளையாட்டை துவக்கி வைத்து விட்டுப் போய் விட்டார்.வரும் காலங்கள் ஈராக்கின், வளைகுடாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகின்றது.வரலாற்றை பின் நோக்கிப் பார்த்தால் ஈராக்கும் பீனிக்ஸ் பறவை போல பலமுறை உயிர்த்தெழுந்தது தெரிகிறது.வளைகுடா மண்ணின் நாகரீகத் தொட்டிலான ஈராக் உயிர்த்தெழட்டும் மீண்டுமொரு முறை.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தில் துவங்கிய தீவிரவாத பயங்கரம் இன்னும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது.அமெரிக்காவின் சிக்கல்கள் நிறைந்த வெளிநாட்டுக்கொள்கைகளில் விமர்சனங்கள் இருந்தபோதும் அமெரிக்க மக்களின் சுதந்திரமும்,தொழில் நுட்பங்களும்,புதிய கண்டுபிடிப்புக்களுக்கான ஆர்வமும்,அதனை ஊக்குவிக்கும் கோட்பாடுகளும் ஆச்சரியம்,வியப்புக்கள் நிறைந்தவை.அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தின் இரும்பு,அலுமினியம் போன்ற பொருட்களை ஏனைய நாடுகளாய் இருந்தால் காயலாங்கடைக்கோ அல்லது இடைத்தரகர்களால் வேறு ஒரு நாட்டுக்கோ கொண்டு செல்லப்பட்டிருக்கும்.அமெரிக்கா மறுசுழற்ச்சி முறையில் இந்த இரும்பு,அலுமினியம் போன்றவற்றை ஒரு கப்பலாக மாற்றி இருக்கிறது.

Long live America and your freedom of thoughts.Bravo.

நல்லவைகளை வரவேற்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் புகழாரமும் பதிவும் அமெரிக்காவிற்கு அர்ப்பணம்.கீழே உள்ள படங்கள் சொல்லும் மீதிக் கதை.

USS New York - built using World Trade Center scrap steel !!!

Here she is!!


மூக்கையும் முகத்தையும் காட்டினா எப்படி?
இடையழகும் அழகாவே இருக்குது மறந்திடுமா என்ன?
இன்னும் கொஞ்சம் முன்னுக்கு வாயேன்
அழகே!உன்னை ஆராதிக்கிறேன்
USS New York

It was built with 24 tons of scrap steel from the World Trade Center .

It is the fifth in a new class of warship - designed for missions that include special operations against terrorists. It will carry a crew of 360 sailors and 700 combat-ready Marines to be delivered ashore by helicopters and assault craft.

Steel from the World Trade Center was melted down in a foundry inAmite , LAto cast the ship's bow section. When it was poured into the molds on Sept 9, 2003, 'those big rough steelworkers treated it with total reverence,' recalled Navy Capt. Kevin Wensing, who was there. 'It was a spiritual moment for everybody there.'

Junior Chavers, foundry operations manager, said that when the trade center steel first arrived, he touched it with his hand and the 'hair on my neck stood up.' 'It had a big meaning to it for all of us,' he said. 'They knocked us down. They can't keep us down. We're going to be back.'

The ship's motto? 'Never Forget'
நாங்கள் மறக்க மாட்டோம்.நீயும் நல்லவைகளுக்கே பயன்படு.

Wednesday, January 21, 2009

அணுவை நோக்கி- மைக்ரோ பகுதி 1

இதுவரைக்கும் மேலே மேலே என்று மேக்ரோ பாடங்களில் பறந்தோம்.இனி தாவரவியலையும்,மனித இனம் அல்லது இந்த பூமி,நிலம் சார்ந்தவை எந்தப்புள்ளியிலிருந்து எப்படி உருவாகியிருக்கும் என்ற கேள்வியின் சந்தேகங்களுடன் மைக்ரோ துவங்குகிறது.இந்த சந்தேகங்களுக்கு விடை காண்பது அவ்வளவு எளிதல்ல என்றபோதும் தாவிரவியல்,உடலியல், மற்றும் அணு நோக்கிய ஒரு பயணமாக இதனை சொல்லலாம்.

பயணம் துவங்கும் முன் பதிவர் கிரி கண்ணில் பட்டார்.எனக்கு ரஜனி சாரிடம் நிறைய ஆன்மீகம்,தனி மனித எளிமை,அரசியல் குழப்பங்கள் பற்றி நிறைய சந்தேகங்களை கேட்க வேண்டியுள்ளது.

பதிவுப்பக்கம் வருபவர்களே பதிவுக்கு வருவதில்லைங்கிறபோது அவருக்கெல்லாம் நமது பதிவுப்பக்கம் வருவதற்கான நேர,கால அவகாசங்களோ அல்லது இருந்தாலும் பதிவு பற்றி சொல்வதற்கு யார் இருப்பார்கள் என்ற சந்தேகத்திலும் அவர் வராவிட்டாலும் நம்ம சின்ன ரஜனி கிரி நம்ம பதிவுப் பக்கம் எட்டிப் பார்க்கிறாரே என்ற சந்தேகத்தில் எந்திரன் எப்ப வெளீயீடுங்க என்றேன்.அதற்கு அவர் படைக்கும் சங்கருக்கும் கூட தெரியாத புரியாத புதிர் என்றார்.சரி எனக்கு இன்னொரு சந்தேகமுங்க என்றேன்.கேளுங்க என்றார்.இந்தப் படத்தைக் கொஞ்சம் பாருங்கள் இது எப்படிங்க சாத்தியமென்றேன்.

( No comments to the picture.It is self explanatory)

அதற்கு அவர் இந்த பூமராங் கூட நம்புறீங்க இது பற்றி ஏன் மக்கள் நம்ப மாட்டாங்க அதுவும் ரஜனி ஸ்டைலில் செய்யும் போது என்றார்.இஃகி!இஃகி(பழமைவாசம்)இதை கோளங்கள் பகுதி 4 ல் உள்ள உலக அதிசயப் படஙகளோடு ஒரு அதிசயமாகத்தான் சேர்க்கலாமுன்னு இருந்தேன்.விடுபட்டுப் போனதால் இங்கே இடைச்செறுகலா ட்ரெயிலர் காட்டியாச்சு.இனி பிலிம் காட்டலாமா:)

தட்டச்சும்போது எதையும் யோசித்து வைத்துக்கொண்டு துவங்கவில்லை.எனவே மனம் இழுத்துச் செல்லும் வழியில் நானும் பதிவுப் பக்கம் எட்டிப்பார்ப்பவர்களும்.

Now we are going to dig inside of the matter in an inverse trip...

We arrived at our starting point. We could reach it with our arms... ( 0)

செடி,கொடி,இலை,இயற்கை வளங்களைப் பற்றி நினைக்கும் போது இன்னொரு கிளிக் மனதில்.ஒரு வார இறுதி கூட்டுக்கும்மாளத்தில் நண்பர்களுக்கிடையில் பலபொருள் பேசி ஒன்றிலும் ஒட்டாத விவாதம்.அதில் ஒன்று இப்பொழுது நினைவுக்கு வருவது நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஒளி அதனூடே விரிந்த ஐம்பூதங்களையும் வணங்குவதே இந்தியக்கலாச்சாரத்தின் துவக்கமாகவும் உருவங்களும் அதனூடே உருவான உருவாக்கங்களுமே இலக்கியம்,இசை,கட்டிடக்கலை,ஓவியம் என்ற மதம் சார்ந்த உருவகங்கள் என்று விவாதங்கள் தொடர்ந்தது.

Getting closer at 10 cm ...We can delineate the leaves. ( 10 Centimeters)

இயற்கையின் மாற்றங்கள் கொண்டு புல்,பூண்டுகள் முளைத்திருக்க வேண்டும்.அப்படி உருவான புல்,பூண்டுகளின் ஒரு அங்கமான இலைதான் தாவிரவியலுக்கான அணுவை நோக்கிய பாகம் 1.என்னய்யா இலை,தழைன்னு ஒரே சைவமா தெரியுதுன்னு நொந்து கொள்பவர்களுக்கு, நாம் இலை,மரம்,செடி,கொடிகளின் சூரிய வம்சா வழிகள்.உதாரணம் வேண்டுமென்றால் வேப்பிலை அடிப்பது,வாழை இலையில் சாப்பிடுவது,தென்னங்கீற்றிலே வீடு இன்னும் உங்களுக்குத் தெரிந்த இயற்கை சார்ந்த இயல்புகள் பலவும்.


வாழை இலை என்றதும் சின்ன வயதில் அப்பா வயிற்றுப்போக்குக்கு தரும் மருத்துவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.வாழை மரத்தை முழங்கால் அளவுக்கு விட்டு வெட்டி அதன் நடுக்குருத்தை குமிழ் கரண்டி வடிவத்தில் வெட்டி எடுத்து விட்டு, சமைக்கிற சீரகம் இருக்குதல்லவா? அதனை சிறிது கொட்டிவிட்டு ஒரு வாழை இலையை மேல் போர்த்தி மூடி விடுவார்.சில மணி நேரம் கழித்தோ அல்லது அடுத்த நாள் காலையிலோ மூடிய வாழை இலையை திறந்து பார்த்தால் வாலைக்குருத்து நீர் சீரக வாசத்துடன் மிதந்து கொண்டிருக்கும்.அந்த நீரை தேநீர் கரண்டி கொண்டோ அவசரத்துக்கு வாழை இலையையே கரண்டியாக குவித்து சீரக குருத்து நீரை குடிப்பதற்கு தருவார்.அப்புறம் என்ன வயிற்றுப் போக்கு போயே போயிந்தி.இந்த வைத்தியம் நல்ல பிள்ளைகளுக்கு ஒரு முறை செய்தாலே போதும்.ஆனால் என்னை மாதிரி ஒரே நாளில் 10 பூவாழ,5 செவ்வாழ,5 பச்ச வாழ,(உண்மைதான்!நம்புங்க)கொய்யப் பழம்,செடியிலேயே பழுத்த தக்காளின்னு சிறு தீனியும் கூடவே கூட்டாளிக கூட கடிக்கும் கமறுகட்டு,கடலைமிட்டாய் போன்ற வாயசைப்பும்,காலையிலே சோளக்கூழும்,மதிய,இரவு சோறும் விழுங்கும் கடோத்கஜனுக்கு மறுபடியும் வயிற்று பேதி வந்து தொலைக்கும்.அப்புறமென்ன இருக்கவே இருக்கு வாழக்குருத்து நீரும் சீரகமும்.

(நாத்திக நம்பிக்கை கொண்டவர்கள் யாரேனும் பதிவுப்பக்கம் எட்டிப்பார்த்தால் மேலே உள்ள படத்தின் அழகை ரசிக்க வேண்டுகிறேன்.நான் ஆத்திகம்,நாத்திகம்,மனிதர்களை மதிக்கும் மனோநிலைக்கு வந்து விட்டதால் இவைகளுக்கும் அப்பாலான பார்வையில் பார்க்கிறேன்.

(படம் Design Flute வலைத்தளத்திலிருந்து சுடப்பட்டது)

இனி பதிவுப் பக்கம் திரும்பினால் கோளங்களை நோக்கிய பதிவின் அதே கணக்குதானுங்க.கணக்கெல்லாம் கன கச்சிதமாக இருக்கும்.சத்யம் மாதிரி பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாத துல்லியமான கணக்கும் அதனைச் சார்ந்த படங்களும் உங்கள் பார்வைக்கு....

At this distance it is possible to observe the structure of the leaf. (1 Centimeter)

The cellular structures start showing... ( 1 Millimeter )


The cells can be defined. You could see the union between them. (100 microns)

Start our trip inside the cell... ( 10 microns )

இனி வரும் பகுதியில் மேலும் மைக்ரோ உள் கட்டமைப்புகளைக் காணலாம்.

Tuesday, January 20, 2009

மசாலா தோசையும் குஜராத்தி குஜிலிகளும்

கல்லூரிக் காலங்களில் பெங்காளி முகர்ஜி,சேட்டன் பிரவின், மதராசி நானும் ஒன்றாக ஓடித் திரிந்து கொண்டிருந்தோம்.அப்படி மும்பாயில் ஒரு நாள்...

சென்னையின் திருவல்லிக்கேணி பிரம்மச்சாரிகளுக்கு எப்படி ஒரு வரப்பிரசாதமோ அப்படி ஒரு பிரம்மச்சாரிகளின் வில்லா ஒன்று விலே பார்லேவில் இருந்தது.அப்போதைய மெட்ராஸையும் பம்பாயையும் இணைக்கும் பாலமாக இருந்தது அந்த பிரம்மச்சாரிகளின் கட்டிடம்.

காலை வேளையில் 11 மணி வாக்கில் பக்கத்திலிருக்கும் உடுப்பி ஓட்டலில் ஏதாவது கொட்டிக்கலாமுன்னு மூவரும் சென்றோம்.மும்பையின் பெரும்பாலான உடுப்பி உணவு விடுதிகளின் மேசைதளம் பளிங்கு மார்பிள் கல்லால் செய்யப்பட்டிருக்கும்.பளிங்கு மார்பிள் விலை குறைவின் காரணமாகவோ அல்லது உண்டு முடித்தவுடன் சுத்தம் செய்வதற்கு வசதியாகவோ அந்தக் கல் பதிக்கப் பட்டிருக்க வேண்டும்.உணவுத் தட்டுகளும்,டம்ளரும் சில்வர் பண்டங்களாகவே இருந்தன.தண்ணீரில் போட்டு முக்கி எடுக்கவும்,உடையாத காரணத்தாலும்,வாடிக்கையாளர்களைக் கவருவதற்கும் ஏற்ற பாத்திரங்கள்.நானும்,முகர்ஜியும் ஒரு பக்கமும் எதிர்த்தார் போல் பிரவினும் உட்கார்ந்து கொண்டான்.உபசரிப்பவரிடம் 3 மசாலா தோசை ஆர்டர் செய்து விட்டு ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தோம்.

அப்பொழுது எங்கள் பார்வையில் படும் படியாக 4 குஜராத்தி குஜிலிகள் வந்து பக்கத்து நாற்காலிகளில் வந்து உட்கார்ந்து கொண்டன.பெண்களை லுக் விடுவதில் முகர்ஜி முதலினம்,நான் இடையினம்,பிரவின் மெல்லினம்.பார்வைகள் சரசமாடிக் கொண்டிருந்தன.

அதற்குள் எங்களது மசாலா தோசை,சட்னி,சாம்பார், சில்வர் முள்கரண்டி,ஸ்பூன் சகிதம் வந்து டேபிளில் உட்கார்ந்து கொண்டது.மூவருமே ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்ளாமல் கரண்டியையும்,ஸ்பூனையும் தோசைக்கு அப்பால் நகர்த்தி விட்டு கையால் மசால் தோசையை சாம்பார் சட்னியுடன் பதம் பார்க்க ஆரம்பித்தோம்.பக்கத்து சீட்டு குஜிலிகளின் களுக்கென்ற சிரிப்பு சத்தம்.முகர்ஜி என்னிடம்" nat! they are laughing at us because we are using fingers" என்று கிசு கிசுத்தான்.பிரவின் ஒன்றும் பேசாமல் எங்கள் இருவரையும் பார்த்து மெல்லிதாய் சிரித்து விட்டு தோசையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டான்.

இந்த நேரத்தில் குஜிலிகளுக்கும் தட்டுக்கள் வந்தது.பார்த்தால் 4 மசாலா தோசைகள்.நானும்,முகர்ஜியும் கைக்கும் வாய்க்கும் வேலை கொடுத்து விட்டு கண்களால் எதிர் மேசையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தோம்.அப்பொழுது ஒரு குஜிலி துவக்கமாக ஸ்டைலாக முள்கரண்டியையும்,ஸ்பூனையும் வைத்துக் கொண்டு மெல்ல மசாலா தோசையை குத்த ஆரம்பித்தது.தோசை சில்வர் தட்டுடன் பளிங்குக் கல்லில் ஒரு சுற்று வட்டம் வந்தது.அதற்குள் இன்னொரு குஜிலியும் தோசை சுற்றலில் இறங்க எனக்கு மனசுக்குள் சிரிப்பும் முகர்ஜி நேரிடையாகவே "Hey look look, watch the fun" என்றான்.மச்சா this is our turn to laugh என்றேன் நான்.குஜிலிகளும் பிடிவாதமாக தோசையை சுத்துவதிலும் சிரமப் பட்டு முள்கரண்டி யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.தாளி ( சரியா?) சாப்பாட்டுத் தட்டென்றால் கமுக்கமாக உட்கார்ந்து கொள்ளும் தட்டு தோசைக்கு மட்டும் செக்குமாடு மாதிரி சுத்தறமாதிரி பாத்திரங்கள் அடிப்பகுதி வட்டம் சற்று மேல் நோக்கிய் வண்ணம் குவிந்து போய் விடுவது பளிங்கு கல்லின் அணைப்புக்கு ஏற்புடையதாயில்லை.நாங்கள் காபி சொல்லி அருந்திவிட்டு பில்லைக் கொடுத்து விட்டு வந்தோம்.(அப்பவெல்லாம் இந்தி தெரியாத காரணத்தால் எனக்கு வாயாடி வேலை எதுவும் இல்லாமல் போய் விட்டது)

மசாலா தோசைக்கு தன் கையே தனக்குதவி திட்டமும் இட்லி வடை க்கு சாம்பார் துணையுடன் கரண்டி உபயோகிப்பதில் தவறில்லை என்பது எங்கள் நண்பர் குழுவின் கூட்டறிக்கை.

நீங்க எப்படி?

பின் குறிப்பு: கல்லூரி என்றதும் நான் பதிவுப் பக்கம் வந்ததே வெட்டிப்பயலின் கல்லூரிக் கலாட்டா கோழி பிடிக்கிறப் பதிவைப் பார்த்துத்தான்:)வெட்டிப்பயலுக்கு மீண்டும் ஒரு நன்றி.

கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்

பழமை சரமாரிப் பொழியும்படி பாடல்கள் எடுத்து விடுகிறார்.தமிழும்,இலக்கியமும்,பாடல்களும் புகுந்து விளையாடும் படியான பதிவுகள்.இலக்கியவாதி ன்னு பெயர் வைக்க வேண்டியவர் பழமைவாதின்னு வைத்துக்கொண்டார். அவரோடப் பாடல்களைப் படிக்கும் போது நாமளும் நம்ம அனுபவத்துக்கு ஒரு சினிமா பாடலை எடுத்து விடலாமேன்னுதான் இஃகி!இஃகி! இந்தப் பதிவு.


கோவை வாழ்நாட்களில் ஒரு நாள்....

நானோ இளமை எட்டிப்பார்க்காத வயதுக்காரன்.கலப்புத் திருமணம் செய்து கொண்ட நண்பர் ஒருவர் இரண்டு மகன்களுக்கு தகப்பனார்.வயது வித்தியாச நட்பாக இருந்தாலும் ஓசிப் புத்தகம் கொடுக்கல் வாங்கல்,சினிமாவுக்கு ஒண்ணாப் போவது,டீ குடிப்பது,பொது விசயங்களை என்னிடம் பேசுவது ,சில சமயம் அவரது சொந்த விசயங்களைக் கூடப் பகிர்ந்து கொள்ளும் நண்பர் சின்னசாமி.ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது

பாடல்கள் என்றால் கண்ணதாசன் பாடல்கள் மாதிரி இருக்கவேண்டும் என்றார்.

கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்.

இந்த சரணத்தில் துவங்கும் பாடலின் வரிகளான

அவனை அழைத்து வந்து
ஆடடா ஆடு என்று
ஆடவிட்டு பார்த்திருப்பேன்
படுவான்!பாடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவி மகன் பெண்குலத்தை
படைப்பதையே நிறுத்தி வைப்பான்.

என்ன ஒரு அனுபவசாலிடா கண்ணதாசன் என்றார்.எனக்கு இந்தப் பாடல் எந்தப் படமென்று கூட இன்று வரை தெரியவில்லை.ஆனால் அந்தப் பாடல் வரிகளை அவர் ரசித்து சொன்னவிதம் இன்று வரை மனதில் நங்கூரமிட்டு உட்கார்ந்து கொண்டது.

முன்பெல்லாம் பாடல் என்றால் அதன் அழகிலே மனம் மயக்கம் போட்டுவிடும்.இப்ப தொட்ட தொண்ணூறுக்கும் காரண காரியங்கள் ஆராய்வதால் பாடலின் வரிகளில் முரண்படுவதோடு பெண்ணியம் கவுரவப்படுத்தவேண்டும் என்ற நிலைக்கு மனம் வந்து விட்டதாலும் பெண்குலத்தை நிறுத்தவேண்டும் என்று கள்ளிப்பால் கலாச்சாரம் புகுந்துவிட்டதாலும் பாடல் வரிகள் உலக இயங்குதலுக்கு மாறானது.எனவே கவிதைக்குப் பொய் அழகு மட்டுமே.

நண்பர் பாடலை அனுபவித்து சொன்னதற்கும் சில காரணங்கள் உண்டு.அதனை சொல்வதற்கு அவர் முன் அனுமதியும் தேவையென்ற காரணத்தால் கண்ணதாசன் பாடலின் ரசனை மட்டும் உங்கள் பார்வைக்கு.

இலங்கை-பாகிஸ்தான் உறவு

முந்தைய அமெரிக்க வெளியுறவுத்துறை சதுரங்கர் கிஸ்ஸிங்கர் காலத்திலிருந்தே பாகிஸ்தான் பூகோளரீதியாக இந்தியா,ரஷ்ய,சீன,ஆப்கானிஸ்தான்,ஈரான் நாடுகளின் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும் உலகளாவிய அரசியலில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

முந்தைய காலங்களில் இந்தியாவுக்கு தலைவலியாக காஷ்மீர் பிரச்சினையில் நுழைந்து அதில் வெற்றிபெற முடியாமலும்,தற்போதைய காலகட்டத்தில் நீர்வழி மார்க்கமாக பம்பாய் குண்டுவெடிப்புகளில் பெற்ற தாக்கத்தினைக் கருத்தில் கொண்டும் நிலம் வழிக்கு மாற்றாக இப்பொழுது நீர்வழியும் போர்க் கருவியாக உதவும் என்ற நிரூபணத்திலும் பாகிஸ்தான் தனது எதிர்காலக் கனவைக் காண ஆரம்பித்திருக்கிறது.

அதன் பொருளாதார,ராணுவ வளர்ச்சிகளுக்கு இலங்கை தீனி போடக் காத்திருக்கிறது.ஒவ்வொரு நாடும் தமது அயலுறவுக் கொள்கையில் தமக்கு சாதகமான நிலைகளை எடுப்பது நியாயம் என்ற கண்ணோட்டத்தில் தற்போதைய தனது எல்லைக்கு சமீபமாக தமிழ்நாட்டில் ஏற்படும் அரசியல் மாறுதல்களை கவனத்தில் கொண்டும், எதிர்காலத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய இலங்கையின் உறவு நிலைப்பாடுகள் எப்படியிருக்கப் போகிறதோ என்ற மனக்கணக்கிலும், வருங்காலத்தில் தனது தற்காப்பு கருதியும், இந்தியாவிற்கு எதிரான காய்நகர்த்தலாகவோ மாற்று உதவி என்ற கோட்பாட்டில் இலங்கை அரசு பாகிஸ்தானுடனான தமது ராணுவ உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ள விரும்புகிறது.

பாகிஸ்தானும் தனது பொருளாதார வளர்ச்சி கருதியும் இந்தியாவிற்கெதிரான நிலைகொள்வதற்கும் தெற்கு திசையிலிருந்து தனது அரசியல்,போர் சதுரங்கத்தில் காய் நகர்த்தவும் அரிய வாய்ப்பாக அமையப் போகிறது இலங்கை பாகிஸ்தான் ராணுவ உறவு.இந்தியா இலங்கை அரசுக்கு உதவாவிட்டால் பாகிஸ்தான் உதவும் என்ற கூற்றுப் பொய்யாகிப் போகிறது.

மூன்று பக்கமும் நீரினால் சுற்றப்பட்டு இந்தியா மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்ற எண்ணம் மாறும் விதமாக பம்பாய் குண்டுவெடிப்பு,பாகிஸ்தான்-இலங்கை உறவு,இன்னும் எதிர்காலத்தில் இந்தியாவிற்கெதிரான நிலைகள் என வேறு மாற்றங்களும் வரலாம்.

இனி இலங்கையின் டெய்லி மிரர் தளம் தந்த தகவல் கீழே.

Pakistan-Sri Lanka to promote defence coop

ISLAMABAD, Jan 19 (APP): Pakistan and Sri Lanka on Monday underscored the need for maintaining and promoting closer cooperation particularly in the area of defence. This was discussed at a meeting between Secretary Defence, Lt. General ® Syed Athar Ali, and the visiting Sri Lankan Defence Secretary Gotabhaya Rajapakse, who called on him in Ministry of Defence Rawalpindi.

The meeting emphasized the need for developing military to military cooperation at all levels. Secretary Defence told his Sri Lankan counterpart that there existed a wide scope of cooperation between two sides which needed to be further enhanced for the mutual benefits of the two countries.

He said Pakistan would continue to provide support to Sri Lanka in all fields. The meeting agreed to enhance cooperation in the area of military training, exercises and intelligence sharing so as to contain and counter the growing threat of terrorism.

Sri Lankan Defence Secretary stressed the need for closer interaction between the Armed Forces of the two countries.

He thanked the government of Pakistan for its continued support to Sri Lankan Armed Forces.

The visiting dignitary also called on Secretary Defence Production, Lt. General ® Shahid Tirmizey and discussed with him matters of mutual interest.

The Secretary briefed him about the potential of defence industry of Pakistan.


Refered From daily mirror.lk

Sunday, January 18, 2009

திருமாவளவன்

அரசியல்,சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அலசும்போது எதிர்மறையான கருத்துக்களும் வந்து மோதி பார்வையாளனை குழப்பி விடும் சாத்தியங்கள் நிறையவே உண்டு.தான் சார்ந்த பிரச்சினை என்பதாலும் தான் நம்பும் கருத்துக்களுக்கு மாறுபட்ட காரணம் கொண்டும் எதிர்கருத்துக்கள் அமைந்து விடும் சாத்தியங்கள் நிறையவே உண்டு. ஆனால் எழுதுபவனின் கருத்துக்கும் தான் நம்பும் கருத்துக்கும் இடையில் ஏதோ ஒரு நூல் இழையில் உண்மை உயரத்தில் நின்று கொண்டிருக்கும்.எனவே இருவிதமான கருத்துக்களின் இடையிலும் மெய்ப்பொருள் காண்பதறிவு.

ஈழம் சார்ந்த உணர்வுகளையும்,கோபங்களையும்,எதிர்ப்புக்களையும்,நயவஞ்சகங்களையும் பிரதிபலிக்கும் தொலைகாட்சி ஊடகங்கள் சில நிமிட நேரத்தில் தமது பங்கை செய்துவிட்டு அடுத்த செய்திக்கு தாவி விடுகின்றன.அதில் ஒரு மாற்றமாக தமிழன் தொலைக்காட்சியில் திருமாவளவன் உண்ணாவிரதம் துவங்குவதற்கு முன் பேசிய உரையின் முழு சாரத்தையும் நோக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

திருமாவளவனின் உரையை நேரில் கேட்பதிலும் எனது எழுத்துக்களிலும் பொருள் மாறுபடும் வாய்ப்புக்கள் அதிகம்.காரணம் திருமாவளவனின் ஏற்ற இறக்கமில்லாத சமநிலைக் குரலினூடே ஒரு பேச்சாளனக்குரிய முத்திரைகளுடன் எனது புரிதலும் கூடவே எழுதும் முறையும் சேர்ந்து திருமாவளவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தங்களில் மாற்றங்களைக் கொண்டுவரும் வாய்ப்புக்களும் இதில் அடக்கம்.

வாழ்க்கையில் ஜாதியக் கோட்டைக் கடந்தும் தேசங்களாலேயே அடையாளம் காணப்படும் எனக்கு திருமாவளவன் பற்றி எழுதுவதும் கூட பார்வைகளை திசை திருப்பிவிடும் சந்தர்ப்பத்தை உருவாக்கி விடக்கூடும். இதுவரை ஜாதியக் கோட்டுக்குள்ளேயே பார்க்கப்பட்ட திருமாவளவனின் ஈழ தமிழ் உரை கேட்கும் யாரையும் சிந்திக்கத் தூண்டும்.ஒருவிதத்தில் பார்த்தால் திருமாவளவனின் உண்ணாவிரதம் அவரை ஜாதியக் கண்ணோட்டத்தில் காண்பவர்களுக்கு அந்த நோக்கை தகர்த்தெரியும் ஒரு சந்தர்ப்பம் எனலாம்.

அனைத்துக் கட்சி கூட்டங்களின் ஒப்புதலும்,பின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும்,மனித சங்கிலி ஊர்வலமும்,மத்திய அரசிடம் நேராக அனைத்துக் கட்சிகளும் நேராகச் சென்று வேண்டியும் தமிழக முதல்வரும் மத்திய அரசுக்கு பல கடிதங்கள் எழுதியும்,பல அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு அழுத்தங்கள் கொடுத்தும் எந்த விதமான பலனுமில்லாத போன நிலையில் உண்ணாவிரதம் மூலம் மத்திய அரசின் கவனத்தை திருப்பவும் போரை நிறுத்தும் படியும் அகிம்சை வழியில் தொடர்வது திருமாவளவனின் உண்ணாவிரதம்.

தனது உண்ணாவிரதப் போராட்டத்திற்கான சூழ்நிலைகளை விளக்கி சொன்னால் கலைஞர் புரிந்து கொள்வார் என்றும் மற்ற படி அரசுக்கோ கலைஞருக்கோ எந்த நெருக்கடியும் கொடுக்கும் எண்ணத்தில் தான் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபடவில்லையென்றும் கூறினார்.ஈழத்து மக்கள் தங்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தமக்கு ஈகோ என்ன வேண்டிக் கிடக்கிறதென்று மருத்துவர் ராமதாஸ்,வீரமணி,பழ.நெடுமாறன்,தா.பாண்டியன் என ஈழ மக்களின் வாழ்வில் அக்கறை கொண்ட அனைவரையும் சந்தித்ததாகவும் ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்ததாகவும் வைகோவை தாயகம் சென்று சந்திக்க முயன்றதாகவும் ஆனால் சந்திக்க முடியவில்லையென்றும் திருமாவளவன் தாயகம் வந்தானே என்ன விசயம் என்று ஒரு வார்த்தை வைகோ கேட்டிருக்கலாமென்றார்.(அனைவருக்கும் ஈழம் உணர்வுபூர்வமான விசயமாக இருந்தாலும் அரசியல் சதுரங்கமும் விளையாடுவது தெரிகிறது)

துக்ளக் பத்திரிகையில் கலைஞரின் கண்டம் திருமாவளவன் என்றும் தானும் சோவும் இதுவரை நேரில் கூட சந்தித்ததில்லையென்றும் சோவுக்கும் தமக்கும் எந்தவிதமான பிரச்சினைகளோ கூட கிடையாதென்றார்.தான் சொல்லாத வார்த்தைகளும் கூட சிலரால் காது மூக்கு வைத்து திசை திருப்பிப் படவிடுகிறதென்றும், திருமாவளவன் 10000 பேரை படகில் ஈழத்துக்கு தயார் செய்கிறார் என்றும் கூட வதந்திகளைப் பரப்பி விடுகிறார்கள் என்றார்.இப்படிப் பட்ட வதந்திகளைக் கேட்ட பின்பே ஓ! இப்படியும் கூட முன்பு செய்திருக்கலாமோ என்று இப்பொழுது தனக்குத் தோன்றுவதாக கூறினார்.

உண்ணாவிரதம் துவங்க நினைத்த தினங்களுக்கு முன்பே தனது கட்சியைச் சார்ந்தவர் தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க விரும்புவதாகவும் அப்படி ஒரு தொண்டரை பலிகடாவாக்க விரும்பவில்லையென்றும் சொன்னார்.வீட்டில் காலையில் கஞ்சியும்,பின் இரவில் மட்டுமே அம்மா தரும் உணவும் வாழ்க்கையில் பழகிய விசயமே என்றார்.

மேலோட்டமாகப் பார்க்கும் யாருக்கும் திருமாவளவனின் உண்ணாவிரதம் ஒரு அரசியல் சித்துவிளையாட்டு மாதிரியே தோன்றும்.ஆனால் உரையைக் கேட்ட எவருக்கும் அவர் முழு ஆத்மார்த்தமாக ஈழப்பிரச்சினைக்கு ஒரு அழுத்தத்தை தேடும் பொருட்டே இதில் ஈடுபட்டுள்ளார் என்பது விளங்கும்.

உண்ணாவிரதம் இருக்கும் போது முதல் நாள் ஏற்படும் உடல் மாற்றங்கள்,பின் அடுத்த நாள் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதனை விளக்கினார்.உடலில் உயிர் தங்கி இருக்க உணவில்லா விட்டாலும் தண்ணீர் தேவையென்றும் தண்ணீர் குடித்தே ஒரு புத்த பிக்கு ஒரு வருடம் வரை உண்ணாவிரதமிருந்தாரென்றும் தண்ணீர் இல்லாவிட்டால் கிட்னி பாழடைந்து விடுமென்றும் அப்படி உடல் உபாதைகள் ஏதாவது ஏற்பட்டால் ஒரு கொள்கைக்காக அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.எத்தனையோ சிரமங்களை எதிர்நோக்கும் ஈழமக்களுக்கு வெறும் கண் துடைப்புக்காக மேடைகளில் பேசி விட்டு தான் போய் விட விரும்பவில்லையென்றார்.தனது தொண்டர்களை அமைதி காக்கும் படியும் இல்லையென்றால் உண்ணாவிரதத்திற்கான குறிக்கோளை திசை மாற்றி விடுவார்கள் என்றும் கூறினார்.

முதல் நாள் உண்ணாவிரதம் சாத்தியமே எவருக்கும்.
இரண்டாம் நாள் உண்ணாவிரதம் உடலில் மாறுதலை உருவாக்கும்
மூன்றாம் நாள் ரத்த அழுத்தங்களும் உடல் இயங்கும் முறையையும் மாற்றும்
நான்காம் நாள் இன்று.உண்ணாவிரதத்தின் உண்மையான சுவடுகள் தெரிகிறது.

திருமாவளவன்!தண்ணீர் போதும்!பழரசம் பருகுங்கள்.எழுந்து வாருங்கள்.மாற்று வழி காணுங்கள்.உங்கள் உணர்வுகள் புரிகிறது தமிழனுக்கு.

Wednesday, January 14, 2009

ஈழம் மீண்டும் ஓர் பார்வை

2008 டிசம்பர் 31 வரையான உலக நிகழ்வுகளை வெறும் பார்வையாளனாய் பார்த்து விட்டு அவ்வப்போது பதிவர்களின் பதிவுப்பக்கங்களையும் கண்ணோக்கி விட்டு தூங்கி எழுந்தால் ஜனவரி 2ம் நாள் கிளிநொச்சி மனதையும் உணர்வுகளையும் ஆக்கிரமித்துக்கொண்டது.

நீரு பூத்த நெருப்பாய் மனதுக்குள் உறங்கிக் கிடந்த உணர்வுகள் தமிழகத்தில் தலையெடுக்க ஆரம்பித்த கணங்களில் இவ்வளவு நாள் துயரங்களை அனுபவித்த ஈழத்து தமிழர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கையை தமிழக அனைத்துக் கட்சிகளும் சட்டசபையில் அங்கீகாரம் கொண்ட காரணத்தால் மேலும் வலுவான நிலை வரை நம்பிக்கைகள் நிலைகொண்டே இருந்தது.ஆனால் அரசியல் கட்சிகளின் குளருபடிகளில் துவங்கிய சலசலப்பு ஈழத்துப்பிரச்சினையை திசை மாறும்படியாக மாற்றியது.இருந்தும் அவ்வப்போது தொடர்ந்த தார்மீக ஆதரவுகள் ஈழத்துக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் என்ற எண்ணத்தில் விழுந்த அடி கிளிநொச்சி பின்நகர்வு.

ஒருபுறம் போர்த்தந்திரங்கள் என்ற சமாதானம் கொண்டாலும் முன்னோக்கித் தாக்கும் திறன் யுத்தத்தில் இருக்கும் உத்வேகம்,அனுகூலங்கள் பின்னகர்வில் குறைவே எனலாம்.ஈராக்கின் யுத்த களத்தில் கூட வேகமாக முன்னேறும் படையின் வேகமும் அதற்கேற்றாற் போல ஈராக்கின் ராணுவமும் எந்த எதிர்ப்பும் காண்பிக்காத நிலையில் தலைநகர் பாக்தாத் நோக்கிய அமெரிக்கப் படை நகர்வில் நிலைதடுமாறிய ஈராக் இன்னும் எழுந்துநிற்க முடியாமல் பல நிகழ்வுகள் நடந்து விட்டது.

போர்களை வெறுக்கும் சாதாரணமாய் உலக நிகழ்வுகளை காணும் எவருக்கும் அமெரிக்காவின் ஈராக் யுத்தம் தவறென்று பட்டது.ஈராக் யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கோடானு கோடி மனித நேயம் கொண்ட எதிர்ப்பையும் எதிர்த்து ஈராக் யுத்தம் நடந்து முடிந்து அதன் விளைவுகள் கண்ணெதிரில்.ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் தனது பதவியின் இறுதிப் பேருரையில் போர் தவறென்று பிரகடனம் செய்கிறார்.

விடுதலைப் புலிகள் தங்கள் நிலைப் பாட்டை உலகத்தமிழர்களுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.மொழி உணர்வாளர்களும்,மனித நேயம் கொண்டவர்களும் ஈழத்து மக்களுக்கு விடிவைத் தேடுகிறார்கள்.விடுதலைப் புலிகளின்பால் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களும்,பாதிக்கப் பட்டவர்களும் ஈழத்து சுதந்திரத்திற்கு எதிராக உள்ளனர்.தமிழகம் ஈழத்துப் பிரச்சினையை மொழி உணர்வோடும்,மனிதாபிமான சாயலிலும் கூடவே ராஜிவின் கோணத்திலும் பார்க்கிறது.

இலங்கையில் சிங்களவர்களும் தங்கள் நாடு மற்றும் மொழி உணர்விலும் பார்ப்பதில் தவறில்லை.ஆனால் சில ஈழத்து தமிழர்கள் புலிகளுக்கெதிரான நிலைபாடுகள் தாங்கள் எதனை எதிர்காலத்தில் இழக்கப்போகிறோம் என்ற உணர்வே மறந்து ஒரு உரிமைப் போராட்டத்தையும் கூடவே தன்சக மனிதர் இழப்புக்களையும் கண்டுகொள்ளாமல் இலங்கை அரசின் அபிலாசைகளுக்கு துணை போகின்றன.

இலங்கையின் இறையாண்மையில் நம்பிக்கை கொண்டு விடுதலைப் புலிகளை எதிர்த்தாலும் இலங்கை அரசு ஈழத்துக்கு எந்தவிதமான எதிர்காலத்தை தரப்போகிறது என்பதில் இலங்கை அரசாங்கமே கூட உறுதியற்றும், நம்பிக்கையற்றும் காணப்படுகிறது. காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முதலில் விடுதலைப் புலிகள் ஒழியட்டும் என்பதில் கண்ணாயிருக்கும் சில இலங்கைத் தமிழர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது.

25 ஆண்டு காலத்திற்கும் மேலான பிரபாகரனின் பெயரின் ஆதிக்கம் இலங்கையின் வரலாறுகளாக எழுதப்பட்டுவிட்ட பின் விடுதலைப் புலிகளின் ஆதரவும்,எதிர்ப்பும் விடுதலைப் புலிகளின் எழுச்சியும்,வீழ்ச்சியையும் ஒட்டியே ஈழத்தமிழனுக்கு வாழ்க்கையாக அமையும்.இந்தப் பார்வை ஈழத்தில் வாழும் தமிழ் எதிர் அணிக்கு தவறாகப் பட்டாலும் தமிழகத்தின் பெரும்பான்மையானோர் பார்வை இதுவே.

இயக்க உணர்வுகளையும் தாண்டி வெளிப்படும் கோபமும்,தொலை நோக்குப் பார்வை இல்லாமையும் பெரும் பின்விளைவுகளை ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்தும்.விடுதலைப் புலிகளுக்கு மாற்றாக தமிழர்களை முன்னோக்கி கொண்டு செல்லும் எந்த வலுவான அமைப்பும் கண்ணுக்கு தெரியவில்லை.விடுதலை இயக்கத்துக்கான எதிர்க் குரலாக தோன்றும் எந்த அமைப்பும் எதிர்கால நம்பிக்கையை தரவில்லை.இலங்கை அரசாங்கமும் இதுவரையிலும் அடைந்த போர் முன் நகர்வுகளுக்கும் அப்பால் ஒருங்கிணைந்த அடையாளமாக எந்தவிதமான தீர்வினையும் முன்வைக்கவில்லை.தீர்வை முன்வைக்காத அரசியல் நகர்வுகள் விடுதலைப்புலிகளின் வருங்கால நிலைப் பின்னடைவடைந்தால் இலங்கை அரசு வைக்கும் தீர்வுகளுக்கு செவி சாய்க்கவேண்டிய கட்டாயத்துக்கு ஈழம் நகரவேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

50 ஆண்டுகளாய் அதிலும் இயக்கங்கள் தலையெடுத்த கால கட்டத்திற்குப் பிறகு உருவான சமூக,மனித அர்ப்பணிப்புகளுக்கு அர்த்தங்கள் இல்லாத சூழலை தோற்றுவிக்கும் எதிர் முகாமிடும் தமிழனைப் பார்த்து மனது வேதனையடைகிறது!தமிழீழம் தூரக்கனவுக்கு இலங்கைப் படையுடன் தமிழனும் துணைபோய்விட்டான். இலங்கை அரசு வலைத்தளங்கள் கூட தங்களது போர் வெற்றிகளை மட்டுமே முன்னிலைப்படுத்தும் போது சில தமிழ் தளங்கள் புலிகள் இயக்கத்துக்கு எதிரான செயல்களாய் மட்டுமே செய்திகள் வெளியிடுகின்றன.விடுதலைப் புலிகளுடனான கருணாவின் உட்பூசல் எந்தவிதத்தில் நியாயப்படுத்தலாய் இருந்தாலும் ஈழ வரலாறு எட்டப்பன் சொந்தக்காரன் என்றே எழுதி வைக்கப் போகின்றது தமிழர் மத்தியில் முக்கியமாக தமிழகத்தில்.


இனி ஈழத்துக்காக வேண்டி குரல் எழுப்ப தமிழகத்தை விட்டால் நாதியில்லை என்ற நிலையில் சமகாலத்தில் நிகழும் இரு நிகழ்வுகள் என்ற கண்ணோட்டத்தில் நோக்கினால் இஸ்ரேல் ,பாலஸ்தீனியப் பிரச்சினை உலகம் முழுவதும் ஒலிக்கிறது.ஈழத்து மக்கள் படும் அவதிகள் தமிழ்நாட்டுக்குள்ளும் தமிழ்வாழ் உலகு மட்டும் ஒலிக்கிறது.மனிதநேயம் என்பது கூட தனக்கு சாதகமான தராசில் வைத்தே உலகம் எடைபோடுகிறது.

பைபிளின் கதைகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இஸ்ரேலியர் என்ற ஒரு இனம் இடம் பெயரலுக்கு பாலஸ்தீனியர்கள் காரணமாக இருக்கக்கூடும்.ஆனால் வாழ்க்கை மாற்றங்கள் கொண்டது என்ற காரணம் கொண்டு நோக்கினால் நவீன வாழ்வியலுக்கு இஸ்ரேலியர்கள் வருவதே பாலஸ்தீனம்,இஸ்ரேல் நாடுகளுக்கான நன்மையாக இருக்கும்.அதுவன்றி பழமைவாதங்களில் மனித வெறுப்புக்கள் உச்சமடையும் நிலையில் எதிர்காலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கேள்விக்குரியதாகவே இருக்கும்.

தனது படைபலத்தால் மக்கள் வாழும் பகுதிகள் உட்பட தாக்கும் இஸ்ரேலிய யுத்தம் கண்டிக்கத் தக்கது.இதே நோக்கில் ஈழத்து மக்கள் படும் அவதியும் கவலைக்குரியது.ஆனால் உலகம் பாலஸ்தீனியத்தை மட்டுமே பார்க்கிறது.இஸ்ரேல் அரசு மக்கள் மீது குண்டு போட்டால் பாலஸ்தீனியர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.இலங்கை அரசு மக்கள் மீது குண்டு போட்டால் தீவிரவாதிகள் ஒழிக்கப்படுகிறார்கள்.என்ன வாதமோ தெரியவில்லை போங்க.(பாலஸ்தீனியப் பிரச்சினையில் பொருளாதாரம் விளையாடுகிறது அல்லது பயன்படுகிறது என்பது மட்டும் உண்மை)

இனி உள்ளுக்குள் கட்சிப் பூசல்கள் இருந்தாலும் ஒற்றுமை, பொருளாதார உதவி,எதிர்ப்பு குணம் மட்டுமே ஈழப்போரை வென்றிருக்க முடியும்.ஒற்றுமையில்லாத காரணத்தால் ஓர் உரிமைப்போர் நீர்த்துப்போகும் நிலைக்கு ஈழம் தள்ளப்பட்டிருக்கிறது. போர்கள் என்றும் வெற்றியாவதில்லை.ஆனால் அதன் விளைவுகளை ஒட்டியே வாழ்க்கை நிலை அமையும்.மண்ணின் மைந்தன் உரிமையில் உரிமைக்கானப் போரட்டம் தொடரவும் போராட்டத்தின் முகம் மாறினாலும் தனது உரிமைக்குரல் நிலைக்கச் செய்வது நிகழ்கால,எதிர்காலத் தமிழனின் கடமை. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். ஈழம் துயரத்தின் பிடியில் இருந்தாலும் பொங்கல் வாழ்த்துக்களை ஈழத்தமிழர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.காரணம் பொங்கல் தமிழனின் அடையாளம்.