அரசியல்,சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அலசும்போது எதிர்மறையான கருத்துக்களும் வந்து மோதி பார்வையாளனை குழப்பி விடும் சாத்தியங்கள் நிறையவே உண்டு.தான் சார்ந்த பிரச்சினை என்பதாலும் தான் நம்பும் கருத்துக்களுக்கு மாறுபட்ட காரணம் கொண்டும் எதிர்கருத்துக்கள் அமைந்து விடும் சாத்தியங்கள் நிறையவே உண்டு. ஆனால் எழுதுபவனின் கருத்துக்கும் தான் நம்பும் கருத்துக்கும் இடையில் ஏதோ ஒரு நூல் இழையில் உண்மை உயரத்தில் நின்று கொண்டிருக்கும்.எனவே இருவிதமான கருத்துக்களின் இடையிலும் மெய்ப்பொருள் காண்பதறிவு.
ஈழம் சார்ந்த உணர்வுகளையும்,கோபங்களையும்,எதிர்ப்புக்களையும்,நயவஞ்சகங்களையும் பிரதிபலிக்கும் தொலைகாட்சி ஊடகங்கள் சில நிமிட நேரத்தில் தமது பங்கை செய்துவிட்டு அடுத்த செய்திக்கு தாவி விடுகின்றன.அதில் ஒரு மாற்றமாக தமிழன் தொலைக்காட்சியில் திருமாவளவன் உண்ணாவிரதம் துவங்குவதற்கு முன் பேசிய உரையின் முழு சாரத்தையும் நோக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
திருமாவளவனின் உரையை நேரில் கேட்பதிலும் எனது எழுத்துக்களிலும் பொருள் மாறுபடும் வாய்ப்புக்கள் அதிகம்.காரணம் திருமாவளவனின் ஏற்ற இறக்கமில்லாத சமநிலைக் குரலினூடே ஒரு பேச்சாளனக்குரிய முத்திரைகளுடன் எனது புரிதலும் கூடவே எழுதும் முறையும் சேர்ந்து திருமாவளவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தங்களில் மாற்றங்களைக் கொண்டுவரும் வாய்ப்புக்களும் இதில் அடக்கம்.
வாழ்க்கையில் ஜாதியக் கோட்டைக் கடந்தும் தேசங்களாலேயே அடையாளம் காணப்படும் எனக்கு திருமாவளவன் பற்றி எழுதுவதும் கூட பார்வைகளை திசை திருப்பிவிடும் சந்தர்ப்பத்தை உருவாக்கி விடக்கூடும். இதுவரை ஜாதியக் கோட்டுக்குள்ளேயே பார்க்கப்பட்ட திருமாவளவனின் ஈழ தமிழ் உரை கேட்கும் யாரையும் சிந்திக்கத் தூண்டும்.ஒருவிதத்தில் பார்த்தால் திருமாவளவனின் உண்ணாவிரதம் அவரை ஜாதியக் கண்ணோட்டத்தில் காண்பவர்களுக்கு அந்த நோக்கை தகர்த்தெரியும் ஒரு சந்தர்ப்பம் எனலாம்.
அனைத்துக் கட்சி கூட்டங்களின் ஒப்புதலும்,பின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும்,மனித சங்கிலி ஊர்வலமும்,மத்திய அரசிடம் நேராக அனைத்துக் கட்சிகளும் நேராகச் சென்று வேண்டியும் தமிழக முதல்வரும் மத்திய அரசுக்கு பல கடிதங்கள் எழுதியும்,பல அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு அழுத்தங்கள் கொடுத்தும் எந்த விதமான பலனுமில்லாத போன நிலையில் உண்ணாவிரதம் மூலம் மத்திய அரசின் கவனத்தை திருப்பவும் போரை நிறுத்தும் படியும் அகிம்சை வழியில் தொடர்வது திருமாவளவனின் உண்ணாவிரதம்.
தனது உண்ணாவிரதப் போராட்டத்திற்கான சூழ்நிலைகளை விளக்கி சொன்னால் கலைஞர் புரிந்து கொள்வார் என்றும் மற்ற படி அரசுக்கோ கலைஞருக்கோ எந்த நெருக்கடியும் கொடுக்கும் எண்ணத்தில் தான் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபடவில்லையென்றும் கூறினார்.ஈழத்து மக்கள் தங்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தமக்கு ஈகோ என்ன வேண்டிக் கிடக்கிறதென்று மருத்துவர் ராமதாஸ்,வீரமணி,பழ.நெடுமாறன்,தா.பாண்டியன் என ஈழ மக்களின் வாழ்வில் அக்கறை கொண்ட அனைவரையும் சந்தித்ததாகவும் ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்ததாகவும் வைகோவை தாயகம் சென்று சந்திக்க முயன்றதாகவும் ஆனால் சந்திக்க முடியவில்லையென்றும் திருமாவளவன் தாயகம் வந்தானே என்ன விசயம் என்று ஒரு வார்த்தை வைகோ கேட்டிருக்கலாமென்றார்.(அனைவருக்கும் ஈழம் உணர்வுபூர்வமான விசயமாக இருந்தாலும் அரசியல் சதுரங்கமும் விளையாடுவது தெரிகிறது)
துக்ளக் பத்திரிகையில் கலைஞரின் கண்டம் திருமாவளவன் என்றும் தானும் சோவும் இதுவரை நேரில் கூட சந்தித்ததில்லையென்றும் சோவுக்கும் தமக்கும் எந்தவிதமான பிரச்சினைகளோ கூட கிடையாதென்றார்.தான் சொல்லாத வார்த்தைகளும் கூட சிலரால் காது மூக்கு வைத்து திசை திருப்பிப் படவிடுகிறதென்றும், திருமாவளவன் 10000 பேரை படகில் ஈழத்துக்கு தயார் செய்கிறார் என்றும் கூட வதந்திகளைப் பரப்பி விடுகிறார்கள் என்றார்.இப்படிப் பட்ட வதந்திகளைக் கேட்ட பின்பே ஓ! இப்படியும் கூட முன்பு செய்திருக்கலாமோ என்று இப்பொழுது தனக்குத் தோன்றுவதாக கூறினார்.
உண்ணாவிரதம் துவங்க நினைத்த தினங்களுக்கு முன்பே தனது கட்சியைச் சார்ந்தவர் தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க விரும்புவதாகவும் அப்படி ஒரு தொண்டரை பலிகடாவாக்க விரும்பவில்லையென்றும் சொன்னார்.வீட்டில் காலையில் கஞ்சியும்,பின் இரவில் மட்டுமே அம்மா தரும் உணவும் வாழ்க்கையில் பழகிய விசயமே என்றார்.
மேலோட்டமாகப் பார்க்கும் யாருக்கும் திருமாவளவனின் உண்ணாவிரதம் ஒரு அரசியல் சித்துவிளையாட்டு மாதிரியே தோன்றும்.ஆனால் உரையைக் கேட்ட எவருக்கும் அவர் முழு ஆத்மார்த்தமாக ஈழப்பிரச்சினைக்கு ஒரு அழுத்தத்தை தேடும் பொருட்டே இதில் ஈடுபட்டுள்ளார் என்பது விளங்கும்.
உண்ணாவிரதம் இருக்கும் போது முதல் நாள் ஏற்படும் உடல் மாற்றங்கள்,பின் அடுத்த நாள் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதனை விளக்கினார்.உடலில் உயிர் தங்கி இருக்க உணவில்லா விட்டாலும் தண்ணீர் தேவையென்றும் தண்ணீர் குடித்தே ஒரு புத்த பிக்கு ஒரு வருடம் வரை உண்ணாவிரதமிருந்தாரென்றும் தண்ணீர் இல்லாவிட்டால் கிட்னி பாழடைந்து விடுமென்றும் அப்படி உடல் உபாதைகள் ஏதாவது ஏற்பட்டால் ஒரு கொள்கைக்காக அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.எத்தனையோ சிரமங்களை எதிர்நோக்கும் ஈழமக்களுக்கு வெறும் கண் துடைப்புக்காக மேடைகளில் பேசி விட்டு தான் போய் விட விரும்பவில்லையென்றார்.தனது தொண்டர்களை அமைதி காக்கும் படியும் இல்லையென்றால் உண்ணாவிரதத்திற்கான குறிக்கோளை திசை மாற்றி விடுவார்கள் என்றும் கூறினார்.
முதல் நாள் உண்ணாவிரதம் சாத்தியமே எவருக்கும்.
இரண்டாம் நாள் உண்ணாவிரதம் உடலில் மாறுதலை உருவாக்கும்
மூன்றாம் நாள் ரத்த அழுத்தங்களும் உடல் இயங்கும் முறையையும் மாற்றும்
நான்காம் நாள் இன்று.உண்ணாவிரதத்தின் உண்மையான சுவடுகள் தெரிகிறது.
திருமாவளவன்!தண்ணீர் போதும்!பழரசம் பருகுங்கள்.எழுந்து வாருங்கள்.மாற்று வழி காணுங்கள்.உங்கள் உணர்வுகள் புரிகிறது தமிழனுக்கு.
8 comments:
உங்கள் எழுத்து சரியே..திருமாவளவன் அரசியல் செய்வதாக நானும் எண்ணவில்லை.... எத்தனை செய்தும் ஈழ தமிழருக்கு விடிவு ஏற்படவில்லையே என்ற கையறு நிலையில் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிகிறது...
//
திருமாவளவன்!தண்ணீர் போதும்!பழரசம் பருகுங்கள்.எழுந்து வாருங்கள்.மாற்று வழி காணுங்கள்.உங்கள் உணர்வுகள் புரிகிறது தமிழனுக்கு.
//
இதையே நானும் சொல்ல விரும்புகிறேன்...திருமாவளவன் நோயுறுவதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை...அவர் இருந்து செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது.
//இதையே நானும் சொல்ல விரும்புகிறேன்...திருமாவளவன் நோயுறுவதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை...அவர் இருந்து செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது.//
முதல் போணிக்கு நன்றி!
பதறுகிறது. இந்திய வஞ்சக அரசு திருமாவை இப்படியாவது தீர்த்துவிடலாம் என்று நாவைச் சப்புக்கொட்டிக் கொண்டிருக்கும். அவர்களது சிறிய பிரச்சினைகளுக்குக் கூட அலறிய அவர்களது ஊடகங்கள் திருமாவின் உண்ணாவிரதத்தை அமுக்கிப் போட்டிருக்கின்றன.
//பதறுகிறது. இந்திய வஞ்சக அரசு திருமாவை இப்படியாவது தீர்த்துவிடலாம் என்று நாவைச் சப்புக்கொட்டிக் கொண்டிருக்கும். அவர்களது சிறிய பிரச்சினைகளுக்குக் கூட அலறிய அவர்களது ஊடகங்கள் திருமாவின் உண்ணாவிரதத்தை அமுக்கிப் போட்டிருக்கின்றன.//
உங்கள் வருகைக்கு நன்றி.திருமாவளவன் ஊடக விளம்பரம் தேடி இந்த முடிவை எடுக்கவில்லையென்பது அவரது பேச்சைக் கேட்டால் புரியும்.யாருக்கு இந்த உண்ணாவிரதத்தின் அர்த்தம் போய்ச் சேரவேண்டிமோ அந்த மத்திய அரசுக்குப் போகவில்லை.காந்தியமும் தோற்றுப்போகும் காலம் என நம்பிக்கை இழக்க வைக்கிறது.
திருமாவளவன்!தண்ணீர் போதும்!பழரசம் பருகுங்கள்.எழுந்து வாருங்கள்.மாற்று வழி காணுங்கள்.உங்கள் உணர்வுகள் புரிகிறது தமிழனுக்கு.
தமிழக அரசியல் எனும் சாக்கடையில் விழாமல் தொடர்ந்து திருமா உண்மையான உணர்வுடன் உழைத்தால் தமிழினத்தின் ஒபாமா உருவாகுகிறார் என்பது உருவாகும்.
உலகத் தமிழர்கள் உங்களுடன் ஒத்துழைக்கத் த்யாராக இருக்கிறார்கள்.
தமிழினத்தின் இன்றைய தேவை பெரியாரும் அம்பேத்கரும் ஒரே உருவில் உள்ள தமிழன் தான்.
உங்கள் எழுத்து சரியே..திருமாவளவன் அரசியல் செய்வதாக நானும் எண்ணவில்லை.... எத்தனை செய்தும் ஈழ தமிழருக்கு விடிவு ஏற்படவில்லையே என்ற கையறு நிலையில் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிகிறது///
இங்கு முழுமனதுடன்
எந்த முயற்சியும் நடக்கவில்லை.
தேவா..
//இங்கு முழுமனதுடன்
எந்த முயற்சியும் நடக்கவில்லை.//
வாங்க தேவா!அரசியல் காய்நகர்த்தல்கள் பிரச்சினையை திசை திருப்பி விட்டது வருத்தமே:(
Post a Comment