Followers

Monday, July 4, 2011

30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா?

சாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ இந்தி சீக்னக்கா தோ இந்தி பிக்சர் தேக்கோ! டீக்கே:)...அக்மார்க் இந்திப்படம் பார்த்து கற்றுக்கொண்டது.

வரலாறு ஒரே முறைதான் எழுதப்படும்.மனிதனின் பரிணாம வளர்ச்சியும் கூட அதனையொட்டியே தவழ்ந்து வந்திருக்கிறது.இந்தியாவின் மொத்த படையெடுப்புக்கள், தாஜ்மஹால், உலகப்போர், பெர்லின் சுவர், இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை, பங்களாதேஷ் புதிய நாடு, மனிதன் சந்திரனில் இறங்கியது என்று துவங்கி முந்தா நாள் கவிழ்ந்து படுத்துக்கொண்ட தி.மு.க,ஸ்பெக்டரம் ஊழல் என்பது வரை எல்லாமே எழுதி முடிக்கப்பட்டவை.புதிதாகவும் வரலாறும்,உலகமும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றது.கூகிளிலிருந்து,லோக் பால் மசோதா தொட்டு தமிழீழ கனவு வரை நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.எனவே எழுது முடிக்கப்பட்ட பக்கங்களை ஒரு போதும் மாற்றி விடமுடியாது.ஆனால் வரலாற்று நிகழ்வுகளின் பாடங்களை ஒட்டி மீண்டும் புதிதாய் எதனை புதிதாகப் புதிப்பித்துக்கொள்ளலாம் எதனை தவிர்க்கலாம் எதனை அதன் போக்கிலே விட்டு விடலாமென்று கற்றுணர்வது அவசியம்.

மேலே சொன்ன சிறுகுறிப்புக்கள் மாதிரிதான் இந்திப்போராட்டமும் தமிழக வரலாறாக முன்பே எழுதப்பட்டு விட்ட ஒன்று.திராவிட இயக்கங்களில் குறிப்பாக தி.மு.க கலைஞர் கருணாநிதியின் சுயநலத்தால் திசைமாறிப்போய் விட்ட ஒற்றைக்காரணத்தினால் மட்டுமே இந்திப் போராட்டத்தையோ,அதன் இந்திய சூழல்களையோ விரிவாக ஆராயமல் 50 வருடங்களுக்கும் அப்பால் இப்பொழுது உள்ளொன்றும்,புறமொன்றுமாக கருணாநிதி ஏமாற்றிவிட்ட கோபத்திலும் இந்தி கற்றுக்கொள்ளாதது தவறாகப் போய்விட்டதே என்ற ஆதங்கங்கள் எழுகிறது.மனித மூளைகள் ஒரு கால கட்டத்திற்குப் பின் அரித்துப் போகிறதா அல்லது மாற்றுச்சிந்தனையை உருவாக்குகிறதா என்று சந்தேகம் கொள்வது மாதிரியே அறிவுஜீவிகளாய் ஜெயகாந்தன், பெரியார்தாசன்,சாலமன் பாப்பையா போன்றோர்களின் கருத்துக்கள் அவ்வப்போது வெளிப்படுகின்றன.இறுதியில் தான் கொண்டிருக்கும் நம்பிக்கையில் மாறுபட்டு சந்தேகக்குரலோடு ஈனஸ்வரத்தில் ஒலித்து சமூகத்திலிருந்து மெல்ல காணாமல் போய்விடுவதையே பார்க்கிறோம்.

இந்திக்கும்,தமிழுக்கும் பங்காளித் தகராறு உண்டாக்கியதே இலங்கையின் மொழிக்கொள்கை மாதிரி நேரு காலத்து மொழிக்கொள்கையல்லவா? இப்போதைய இலங்கையின் நிலைக்குத் தள்ளப்படாமல் இந்தி எதிர்ப்பு போராட்ட மாணவர்களின் குரலுக்கு மதிப்பு கொடுத்து மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் கைவிட்டதில் நேரு காலத்து காங்கிரஸ்க்கு பங்குண்டு.தனி நாடு,மாநில சுயாட்சி கொள்கைகளில் மொழி உணர்வை தூண்டி விட்டு இருமொழிக்கொள்கையை சாதித்ததில் தி,க,தி.மு.க கட்சிகளுக்கும் பங்குண்டு.இந்திப் போராட்டம் தமிழகத்தின் வரலாற்றின் பக்கம்.மொத்த தமிழகத்தின் மாணவர்களின்,மொழி உணர்வாளர்களின் உழைப்பும் உயிரும் ரத்தமும் கூட.மொழி உணர்வின் விளைவாக குலக்கல்வி கொள்கை கூட தமிழகத்தில் காணாமல்ப் போயிருக்கின்றன.

தமிழ்நாட்டில் பள்ளி,கல்லூரியில் இந்தி கற்றுக்கொள்ளாத காரணத்தினால் வடமாநிலங்களுக்குப் போகும் போது மொழிப்பிரச்சினை என்ற வாதம் சரியல்ல.கேரளாவில் இந்தி கற்றுக்கொடுக்கபடுகிறது.ஆனால் பள்ளியில் கற்கும் இந்தியும் வடநாட்டுப் பயணத்தில் உதவாது என்பதை அனுபவ  பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.பிரவின் கேரளா,முகர்ஜி பெங்காளி நண்பர்களுடன் டெல்லி,கல்கத்தா,பம்பாய் என பயணம் செய்திருக்கின்றேன்.கேரள நண்பன் முக்கித் திக்கி பஸ் பெயர்களைப் படித்து விடுவான்.ஆனால் பேச வராது.நானோ இந்தி சுரைக்காய்.எனவே முகர்ஜி மொழி கைடு மாதிரி.எங்கும் பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை.கிணற்றுத் தவளை கதை சொல்லாமல் ரயிலில் டிக்கெட் எடுத்தோ எடுக்காமலோ தமிழகத்திலிருந்து பயணித்து வந்தோரை வாழவைக்கும் மும்பாய் சென்றடையும் தமிழர்கள் ஏதோ ஒரு நுனியைப் பிடித்துக்கொண்டு உழைத்துப் பிழைத்து விடுகிறார்கள்.அரபு நாடுகளில் குடியேறும் ஆசிய நாட்டுக்காரர்கள் பழக்கத்தில் வாழும் சூழலில் அரபி மொழியை பேசக் கற்றுக் கொள்கிறார்கள்.அதுவும் அரபிகளின் வீட்டில் வேலைசெய்யும் பணியாட்கள் மிக எளிதாகவே கற்றுக்கொள்கிறார்கள்.ஆனால் எனக்கு அரபி வருவதில்லை.காரணம் வாழும் அலுவலக,நண்பர்கள்,வீட்டுச் சூழல் போன்றவை.பிரெஞ்ச் கற்றுக்கொள்ள முயன்றும் அதற்கான சூழல்நிலைகள் அமையாததால் அதுவும் நாக்கில் ஒட்டிக்கொள்ளாமல் பான் ஜோர்,கொமத் தலாவு என்ற ஒரு சில வார்த்தைகளின் நினைவுடன் பிரெஞ்சுக்காரனிடமே பிரெஞ்சும் கூடப்படித்த இரு பெண்களும் கூட நினைவிலிருந்து மறைந்தே போய்விட்டார்கள்.எனவே தேவைகளும்,சூழலும் அமைந்தால் மட்டுமே மொழியும் கூட தன்னோடு ஒட்டிக்கொள்ளும்.

டெல்லி,பம்பாய்,கல்கத்தா என்று சுற்றியும் வராத மொழி இந்தி திரைப்படங்களைப் பார்க்கத் துவங்கியதும் மெல்லப் புரிந்தது.இந்தி சினிமாவின் பாடல்களின் வரிகள் இப்பொழுதும் புரியாமல் போனாலும் அதன் இசை கொள்ளை கொள்கிறது.கஜல் பாடல்கள் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வது மாதிரி.மொழிக்கொள்கையில் மத்திய அரசு சாதிக்க முடியாததை இந்திப்படங்கள் சாதித்துள்ளன.அமிதாப் பச்சனின் காலத்து 20 வருடத்துக்குப் பின் பையன் பெரியவனாகி வில்லனைப் பலிவாங்கும் பாதாள தாதாக்களின் முதலீட்டு கதைகள் மாறி  உலக கூட்டு முயற்சியுடன் பல பரிமாண பரிட்சை செய்யும் படங்கள் மும்பாயில் உருவாகின்றன.நிலமோ மராட்டிய மாநிலம்.மொழியோ இந்தி.மராட்டியர்களுக்கென்று மொழி, கலாச்சாரமிருந்தும் அவற்றை புறம் தள்ளி விட்டு இத்தனைக்கும் சிவசேனாவின் தாக்கம் இருந்தும் இந்தி மும்பாய் பேச்சுவழக்கில் ஆளுமை செய்கிற மறுபக்கத்தையும் மறந்து விடக்கூடாது.

கூடுதலாய் எளிதாக மொழி கற்றுக்கொள்ளவும் தமிழுடன்,தமிழ்ப்படங்களுடன் சமன் படுத்திப் பார்க்கவும் இந்திப்படங்கள் பார்ப்பது நல்லது.கடந்த சில தினங்களுக்கு முன்பு கேபிள் சங்கர் ரூப்தேரா மஸ்தானா என்ற இந்தி பாடல் காணொளியை அவரது கொத்துப்புரோட்டாவில் இணைத்திருந்தார்.படம் ஆராதனா என நினைக்கின்றேன்.ஒரு முழுப்பாடலையும் எப்படி ஒரே ஷாட்டில் எடுத்துள்ளார்கள் என்று சொல்லியிருந்தார்.கற்றுக்கொடுக்கவும், கற்றுக்கொள்ளவும் சந்தர்ப்பங்கள் இப்பொழுது நிறைய.இதுவரையில் இந்தி பற்றி இணையத்தில் தேடவில்லை.ஒருவேளை இணையமே கூட இந்தி கற்றுக்கொடுக்க கூடும்.எனவே இந்தி கற்றுக்கொள்ள வேண்டி தமிழையும்,தமிழ் இலக்கியங்களையும் பின் தள்ள வேண்டிய அவசியமில்லை.
இந்தியை வாசி அல்லது இந்தியே தூசு என்று அவரவர் தனிப்பட்ட விருப்பங்களுக்கானது இந்தி.எப்பொழுதும் தமிழை சுவாசி.

கருணாநிதியை ஒபாமா என்று புகழ்ந்த வாலி இப்பொழுது ரங்கநாயகி புகழ்பாடுகிறார் காலத்தின் தேவை கருதியென்றாலும்

இலங்கையில்

இது காறும் நடந்தது -
போர் அல்ல;

தீவிரவாதப் போக்கினை அறவே...
தூர்க்கவேண்டித்
துப்பாக்கிகளில் -
ரவைகளை நிரப்பியதாம்
ராணுவம்!
சொல்கிறார்
'சோ’ ;
நாம் நாணுவம்!

என்று வசை பாடவும் தமிழை பள்ளியில் கற்றுத் தேறவேண்டிய அவசியமில்லையெனும் குதர்க்க புத்தி சோ போன்றவர்களிடமிருந்து தமிழை உரக்க சொல்ல  வேண்டியும் கூட தமிழை இன்னும் ஆழ்ந்து கற்பிக்க வேண்டிய அவசியமாகிறது.இப்பொழுதே தங்கிலீஷ் பேசிக்கொண்டிருக்கும் தமிழகம் இந்தியும் ஊடுருவுவதன் மூலம் ததிந்தி என்ற புதுச்சொல்லை உருவாக்கும் ஆபத்தும் கூட இருக்கிறது.

மொழி உணர்வுக்கும்,தமிழகத்தின் மாற்றங்களுக்கும் பாராட்டுக்களை கலைஞர் கருணாநிதிக்கு தெரிவிக்கும் அதே சமயத்தில் தொலைக்காட்சி ஊடகங்களின் ஆதிக்கத்தின் பிதாமகனாக தமிழகத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு சன் தொலைக்காட்சி நிறைய செய்திருக்கலாம்.சன் குழு செய்யத் தவறியதையும்,மொழிச்சிதைவுக்குப் பங்காற்றியதையும் பங்குச் சண்டை காரணமாகத் தோன்றிய கலைஞர் தொலைக்காட்சியாவது செய்ய முயற்சி செய்திருக்கலாம்.பட்டும் புத்தி வரவில்லை என்பதை ரசிகன் போன்ற சுயசொறிதல் புது நிகழ்ச்சிகளே பறைசாற்றுகின்றன. இந்தப்பாட்டு எனக்குப் போடுங்கன்னு தொலைபேசியில் விருப்பமான பாடல் கேட்பவர்கள் கலைஞருக்கு மயக்கமா?கலக்கமா?மனதிலே குழப்பமா பாடலை அர்ப்பணம் செய்யலாம்.

தேவைப்பட்டால் இந்தி கற்றுக்கொள்ளலாம்.கழுகு தளத்தில் சவுக்கின் இந்தி குறித்து பின்னூட்டத்தில் சொன்னது போல் வரலாறு மட்டுமே படித்து விட்டு சிவசங்கர மேனன் போன்றவர்கள் UPSC பரிட்சை மற்றும் பின்புலம் காரணமாக தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் சூழல்களை தடுப்பதற்கு இந்தி கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதால் Learning hindi should be a selective method but not a collective method.அதாவது அவரவர் தேவையின் அவசியம் கருதி இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமே ஒழிய ஒரு சிலரின் தேவைக்காக அனைவரும் இந்தி கற்றுக்கொள்வோம் கொள்கை தவறானது.சிவசங்கரன் மேனன் போன்ற பதவியில் இருப்பவர்கள் கூட பதவியின் பொருட்டு சிங்களம் கற்றுக்கொள்ள இலங்கை அனுப்பி வைக்கப்பட்டவர்களே.மேனன் சிங்களம் கற்றுக்கொண்டாரா என்பதை யாராவது கேட்டுச்சொல்லுங்கள்.

முன்பை விட இப்பொழுது தமிழ் மொழி காக்கும் தேவை இன்னும் அதிகமாகவே இருக்கிறது.இதனை இன்னுமொரு தலைமுறைக்கும் விட்டுச் செல்வோம்.மும்மொழித் திட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் புறக்கணிப்போம்.

22 comments:

ஆர்.கே.சதீஷ்குமார் said...

50 வருடங்களுக்கும் அப்பால் இப்பொழுது உள்ளொன்றும்,புறமொன்றுமாக கருணாநிதி ஏமாற்றிவிட்ட கோபத்திலும் இந்தி கற்றுக்கொள்ளாதது தவறாகப் போய்விட்டதே என்ற ஆதங்கங்கள் எழுகிறது.//
சாலமன் பாப்பையா போன்ற பழைய மனிதர்களுக்கு அதன் வலி நன்றாகவே தெரியும்.இது ரொம்ப நாள் கொதிப்பு.கேடு கெட்ட அரசியல் விளம்பரத்தின் விளைவு மோசமான பலனை புதிய சந்ததிக்கு கொடுத்திருக்கிறது

தவறு said...

“ தேவைகளும்,சூழலும் அமைந்தால் மட்டுமே மொழியும் கூட தன்னோடு ஒட்டிக்கொள்ளும். ”

இதாங்க உண்மை ராஜநட...

A.R.ராஜகோபாலன் said...

வீழ்வது நாமாக இருந்தாலும் - வாழ்வது
தமிழாக இருக்கட்டும்
என்று அழகு தமிழ் பேசியே
நம்மை அழித்த கூட்டம் அது
அதற்கு கருணாநிதி மட்டுமல்ல
அண்ணாதுரையும் காரணம் தான்

செந்திலான் said...

பெங்களூர்ல என்ன நடக்குது ஆந்திரா மெஸ்ல சர்வர்
கூட எனக்கு இந்தி மட்டும்தான் தெரியும்கறான். இங்க இருககிற மக்களும் அவன்கிட்ட
இந்தில பேசுறாங்க இதெல்லாம் தமிழ் நாட்டுல சாத்தியமா?
இங்க வந்துட்டு இங்க இருககிற மக்களையே இந்தி தெரியலனா இந்திக்காரன் கேவலமா
பேசுறான் இதெல்லாம் தேவையா? காங்கிரஸ்ல இருபத்தெட்டு உறுப்பினர்கள் இருந்த
போதுகூட எந்த மதிப்பும் தமிழ் நாட்டுக்குக் கிடைக்கல. இதுக்கெல்லாம் அரசியல்
வரலாறு தெரிஞ்சிருக்கணும். அந்த ஆப்பையா போன்றவர்கள் தங்களது கருத்துக்களை
வெட்டிமன்றத்தொடு நிறுத்திக்கொள்வது நலம்.அதை விட்டுட்டு தேவை இல்லாமல்
மொழித்தளத்துக்குள் வந்து உளறக்கூடாது.
இதெல்லாம் கருணாநிதி முன்னாடி இருந்தா பேசமாட்டார் இந்த "பேச்சு வியாபரி"
இந்த மாதிரி பேச்சு வணிகர்களுக்கு எங்கு தங்களது வாலை நீட்ட வேண்டும் எங்கு
சுருட்ட வேண்டும் என்று நன்றாகத் தெரியும்

Charles said...

எனக்கு ஒன்று தான் புரியவில்லை. வடஇந்தியர்கள் இங்கு சென்னை பணிபுரியும் போது இங்கு தமிழ் கற்றுக்கொண்டா வருகிறார்கள்? எத்தனை வருடங்கள் இங்கே இருந்தாலும் நம்மை ஹிந்தி கற்று கொள்ள சொல்வார்களே தவிர அவர்கள் கற்று கொள்ளமாட்டார்கள், இந்த வந்தேறிகள். முன்பு தென் இந்தியாவில் வாழ வழியில்லை, அதனால் ஹிந்தி கற்று வட இந்தியா சென்று பிழைத்தோம். இன்றைய சூழ்நிலை வேறு. வேண்டுமென்றால் அவர்களை தமிழ் கற்றுக்கொண்டு இங்கே வர சொல்லுங்கள். இன்றும் தாய்மொழி மறந்து ஹிந்தியை போற்றும் அண்டை மாநில நண்பர்களை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன். நான் சொல்வது ஒரு மொழியை அனுபவதிற்காக கற்கலாம். அல்லது சூழ்நிலைக்காக கற்கலாம். அதை விட்டு ஹிந்தி கற்காதத்தினால் நாம் பின்தங்கி விட்டோம் என்பது வீண் பேச்சு. its just a language. its not a knowlege. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை கண்மூடி எதிர்பவர்கள், உண்மையான மொழிப்பற்று கொண்ட தியாகிகளின் தியாகத்தை கேவலப்படுத்துகின்றார்கள்.

Jayadev Das said...

ஆங்கில வார்த்தைகள் வராதபடி ஒரு நிமிடம் பேசுங்கள் பார்க்கலாம், என்று சவால் விட்டு அதற்க்கு பரிசு அறிவிக்கும் தொலைகாட்சி நிகழ்சிகள் நடக்கும் அளவுக்கு தமிழில் ஆங்கில மொழிச் சொற்க்கலப்பு உள்ளது. மொழியைக் காக்க வேண்டுமென்றால் முதலில் ஆங்கிலத்தைத் தான் தடை செய்ய வேண்டும். ஆனால், தெருவுக்குத் தெரு ஆங்கிலப் பள்ளிகள், ஆங்கிலமே தெரியாதவர்களை வைத்துக் கொண்டு நடத்தி கொழிக்கிறார்கள். மற்ற மூன்று தென்மாநிலப் பள்ளிகளில் ஹிந்தி கற்ப்பிக்கிறார்கள், அவர்கள் மொழியோ அவர்களோ என்ன வீழ்ந்து விட்டார்கள்? ஹிந்தியை எதிர்த்து நாம் என்ன அவர்களை விட மேலாக வாழ்ந்து விட்டோம்? \\கேரளாவில் இந்தி கற்றுக்கொடுக்கபடுகிறது.ஆனால் பள்ளியில் கற்கும் இந்தியும் வடநாட்டுப் பயணத்தில் உதவாது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.\\ நீங்கள் எஞ்சினியரிங் முடித்து வேலைக்குச் செல்லும் மாணவர்களைக் கேளுங்கள், நீங்கள் படித்ததற்கும் தற்போது செய்யும் வேலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று, 99.99 % பேர் இல்லை என்றே சொல்வார்கள். அதற்காக அவர்கள் கல்லூரிகளில் கற்றது வீண் என்று அர்த்தமல்ல. ஹிந்தியை பள்ளிகளில் சொல்லிக் கொடுத்தால், பின்னாளில் நாம் ஹிந்தி கற்றுக் கொள்ள அது மிகவும் உதவியாக இருக்கும், அப்படியே இல்லையென்றாலும், நன்றாக கற்பதற்கு வழி தேட வேண்டும். பெரியாரின் ஒரே உண்மையான தொண்டன் என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதி மஞ்சள் துண்டு போட்டுக் கொள்கிறார், மாறன்களுக்கு அத்துபடியாக ஹிந்தி தெரியும், அன்புமணி ராமதாசின் பிள்ளைகள் டெல்லியில் ஆங்கில வழிப் பள்ளிகளில் படிக்கிறார்கள், ஆனால் தமிழன் மட்டும் தமிழைக் காப்ப்ற்றுகிறேன் என்று சொல்லி இவன் வீணாகப் போகிறான்.

Indian said...

//சாலமன் பாப்பையா போன்ற பழைய மனிதர்களுக்கு அதன் வலி நன்றாகவே தெரியும்.//

இந்தி படிக்காம பாலமன் ஆப்பையா தெருவுல பிச்சை எடுத்திட்டிருந்தாரா?
தமிழ் அவருக்கு சோறு போடல?
மத்த எல்லோரையும் விட இவரோட துரோகம் வெட்ககரமானது.

செங்கோவி said...

தேவைப்பட்டால் எந்த மொழியையும் நாம் கற்றுக்கொள்ளலாம்..அதே நேரத்தில் அது கட்டாயமாக்கப்பட்டால் தொடர்ந்து எதிர்ப்போம்..தாய் மொழியை எந்நாளும் காப்போம்..நல்ல பதிவு சார்.

ராஜ நடராஜன் said...

சதீஷ் மற்றும் ஏனைய தோழர்களின் பின்னூட்டங்களுக்கு மறுமொழி உடனே சொல்லாததற்கு மன்னிக்கவும்.கூகிளின் தேடல்களில் கடைப்பக்கம் கூட வரவேயில்லை:)

சதீஷ்!சாலமன் பாப்பையாவுக்கு வலி என்பதெல்லாம் சரியாகவே தோன்றவில்லை.தமிழ் மொழியின் ஆழத்தை நம்மை விட அவர் நன்றாகவே உணர்ந்திருப்பார்.ஏனையவர்களின் கொதிப்பு என்பது மட்டுமே சரியாக இருக்கும்.

ராஜ நடராஜன் said...

//தவறு said...

“ தேவைகளும்,சூழலும் அமைந்தால் மட்டுமே மொழியும் கூட தன்னோடு ஒட்டிக்கொள்ளும். ”

இதாங்க உண்மை ராஜநட...//

நீங்க நேராகவே சொல்லலாம் தமிழகத்திற்கு இந்தி தேவையில்லையென்று:)

ராஜ நடராஜன் said...

//A.R.ராஜகோபாலன் said...

வீழ்வது நாமாக இருந்தாலும் - வாழ்வது
தமிழாக இருக்கட்டும்
என்று அழகு தமிழ் பேசியே
நம்மை அழித்த கூட்டம் அது
அதற்கு கருணாநிதி மட்டுமல்ல
அண்ணாதுரையும் காரணம் தான்//

ARR! இந்த மாதிரி வசனங்களைக் கேட்டால் எரிச்சல் வருவதற்கு கருணாநிதியின் குறுக்கு சால் புத்தியே காரணமே தவிர வசனத்தின் ஆழம் உண்மையானதே என நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

செந்திலான்!நீண்ட கருத்து வெளிப்பாடே எசப்பாட்டு பாடுவதற்கு வசதியாக இருக்கிறது.அதற்காக முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நேற்று மக்கள் தொலைக்காட்சியில் கோழி வறுவல் சமையல் நிகழ்ச்சி ஒன்று பார்த்தேன்.சமையல் விளக்கம் செய்தவர் பீகார்காரர்.தமிழகம் வந்து தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேசுகிறார்.குஜராத்தி சேட்களும்,ஜெயின்களும் தமிழகம் வந்து தமிழ் கற்றுக்கொள்கிறார்கள்.

ஆப்பையா:) பட்டம் கட்டிவிட்டுட்டீங்களே!தி.மு.கவின் பாராளுமன்ற சந்தர்ப்பம் மாதிரி இன்னுமொரு முறை வருமா என்று தெரியவில்லை.பேருக்கு செம்மொழியும்,மாநாடு மட்டுமே நிகழ்த்தி விட்டு தமிழுக்கான அங்கீகாரத்தைப் பெறவில்லை.அதுவாவது பரவாயில்லை. தமிழ்ப் பிச்சையெடுத்தே வளர்ந்த இயக்கம் தமிழை விட்டு நீண்ட தூரத்துக்குப் போய்விட்டது.கருணாநிதி மட்டும் தமிழ் பேசுவது ஒன்றே ஆறுதல்.அவருக்கு சற்றும் குறையாத பேச்சு வழக்கு தமிழ் சாலமன் பாப்பையாவின் சறுக்கல் வருத்தம் மட்டுமே கொள்ளச்செய்கிறது.

இன்னுமொரு முறை இவரது பட்டிமன்றத்தை ரசிக்க முடியுமா என்று தெரியவில்லை.

ராஜ நடராஜன் said...

சார்ல்ஸ்!எனது கோணப்பார்வையே நீங்களும் சொல்வது.ஆனாலும் குஜராத்தி சேட்டுகள் உடைந்த தமிழில் பேசக்கற்றுக்கொள்ளவே செய்கிறார்கள்.எனது நண்பன் முகர்ஜி கல்கத்தாக்காரனாக இருந்தாலும் தமிழ் பேச முயற்சி செய்து பேசவும் செய்தான்.ஒருவேளை நான் பதிவில் சொன்னது போல் தமிழ்ப்படங்களின் தரம் இந்தியா முழுவதுக்கும் போய்ச் சேரும் காலத்தில் பலரும் தமிழ் கற்றுக்கொள்ளும் சாத்தியம் கூட இருக்கிறது.ஆனால் வியாபார நோக்கில் அந்த அந்த மொழிமாற்றம் செய்து எந்த மொழியும் வளர்வதில்லை.ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டிய ஆங்கில திரைப்படங்களையும் கூட தமிழ் வசன டப்பிங்க் செய்யும் போது வரும் சிரிப்புக்கும் கூட அளவேயில்லை:)

//its just a language. its not a knowledge//

Beautiful and meaningful phrase.Thanks for sharing.

தமிழ் மொழியின் மீது கவனம் செலுத்தாமலும்,தமிழுக்கான வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் போய்விட்டதும்,அரசியல் முதுகில் குத்தியது போன்ற காரணிகள் சேர்ந்து இந்திப் போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் பின் தள்ளி விடுகின்றன.

சாரு போன்றவர்கள் பிரெஞ்சைக் கூட உயர்த்திப்பிடிப்பார்கள்.ஆனால் பிரெஞ்சுக்காரன் நேசிப்பது அவனது மொழியையும்,உணவையும்,கலாச்சாரத்தையும் என்பதை மறந்து பிரெஞ்சுக்காரன் மாதிரி முத்தமிட முடியுமா என்கிற மேம்போக்குத்தனத்தை முன்னிறுத்துவது மாதிரியானது இந்தியை உயர்த்திப்பிடிப்பதும்,கற்றுக்கொள்ளவில்லையே என்ற வருத்தமும்.

ராஜ நடராஜன் said...

ஜெயதேவ் தாஸ்!உங்களுக்கும் நீண்ட கருத்துக்காக நன்றி.

மொழியைக்காக்க ஆங்கிலத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.தமிழகத்தில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் தமிழை தமிழாகவும்,ஆங்கிலத்தை ஆங்கிலமாகப் பேசும் மொழிப் பயிற்சியின்மையே.உங்களுக்கு சரியாக விளக்கம் சொல்ல வேண்டி...

அலுவலகத்தில் நானும்,பம்பாயைச் சார்ந்த இன்னொருவரும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டாலும்கூட சில சமயம் பாஸ்க்கு தெரியாமல் பேச வேண்டியோ அல்லது கூட பணிபுரியும் பெண்களுக்குப் புரியாமல் இருக்கும் தேவை கருதியோ அல்லது ஓய்வு நேர அரட்டையிலும் கூட இந்தி மட்டுமே பேசுவதே வழக்கம்.எனக்கு இந்தி வார்த்தையின் தடங்கல் ஏற்படும் போது அனிச்சை செயலாகவே முழு ஆங்கிலத்துக்கும் நாக்கு திரும்பி விடும்.இதே போல் சென்னையைச் சேர்ந்த ஆங்கிலமே பேசிப்பழகின நண்பனுடன் பேசும் போதும் நண்பன் ஒன்று மெட்ராஸ் பாசைக்கு வந்து விடுவது வழக்கம்.இல்லையென்றால் முழு ஆங்கிலம் மட்டுமே.இந்தப் பயிற்சியின்மையே தமிழகத்தின் பெரும் குறை.இரண்டு தமிழ் வார்த்தை ஒரு ஆங்கில வார்த்தை என்று பேசிப்பழகியே தன்னிச்சையாக அதே மாதிரி பேச வருகிறது.

ஆங்கிலம் துணையிருக்கும் பட்சத்தில் எப்படியாவது வட மாநிலங்களில் இந்தி தெரியாமலே சமாளித்து விடமுடியும் என்பதும் எனது அனுபவம்.

ஹிந்தி கற்றுக்கொள்ளும் எல்லோருமே வடநாட்டைத் தேடிப்போய் விடுவார்களா?நான் டெல்லியோ,பம்பாயோ போகிறேன் என்பதற்காக தமிழகத்திலே மட்டும் தனது வாழ்வை அமைத்துக்கொள்பவரையும் எனக்காக வேண்டி இந்தி கற்றுக்கொள்ளச் சொல்வது சரியாகுமா?முக்கியமாக கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவர்களின் நிலையிலிருந்து இதனை சிந்திப்பது மிகவும் அவசியம்.

சரி!யாரோ சிலர் வடமாநிலங்களுக்குப் போவதற்காக (Random method of,we dont know who will land in north)எல்லோருமே இந்தி கற்றுக்கொள்கிறோம் என்று வைத்துக்கொண்டாலும் கூட மற்ற மாநிலத்தவர்கள் தமிழகம் வந்தால் தமிழ்க் கற்றுக்கொண்டு வா என சட்டமிட முடியுமா?டெல்லி போன்ற இடங்களில் இந்தி படிப்பவர்கள் ஒரு மொழி அல்லது இருமொழித் தகுதியோடு உங்களின் மும்மொழித் தகுதியோடு போட்டிப்போட அனுமதிப்பீர்களா?(நேரு காலம் தொட்டு பாராளுமன்ற நிர்வாகத்தை நடத்தியவர்கள் தென்னிந்தியர்களே தமிழர்கள் உட்பட.)

என்னைப் பொறுத்த வரையில் இந்தி கற்றுக்கொள்ளாமல் ஆங்கிலம் கற்றுக்கொள்வதும் கூட Shortcut of bypass move.

சுத்தி வந்துட்டீங்களே கருணநிதியின் மையப்புள்ளிக்கு:)அன்புமணி,மாறன்களையெல்லாம் கணக்கில் சேர்க்கிறீங்களே!

அரசியல் கோபத்தையும்,தமிழர்களுக்கான இந்தி மும்மொழித் திட்டத்தையும் தனியாக அலசுவதே நல்லது.தேவைப்பட்டால் மட்டுமே இந்தி என்பதே சிறப்பாக இருக்கும் என்பது எனது நிலை.

ராஜ நடராஜன் said...

//Indian said...//

நீங்க இந்தியனா அல்லது இந்தியன் தாத்தாவா:)

நீங்க இந்தியனாக இருந்தால் சாலமான் பாப்பையா மீதான உங்களது கோபமும் எனது ஆங்காரமும் நியாயமானதே.என்னா நீங்க சொல்லும் //மத்த எல்லோரையும் விட இவரோட துரோகம் வெட்ககரமானது.//காலை எழுந்தவுடன் திருக்குறள் உரை சொல்லி வயிறு வளர்த்த மனிதரல்லவா?சிரம் ஹா பாத்!

ஒருவேளை நீங்க இந்திய தாத்தாவாக இருந்தால் துரோக தாத்தாக்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று சொல்லுங்கள்.

ராஜ நடராஜன் said...

//செங்கோவி said...

தேவைப்பட்டால் எந்த மொழியையும் நாம் கற்றுக்கொள்ளலாம்..அதே நேரத்தில் அது கட்டாயமாக்கப்பட்டால் தொடர்ந்து எதிர்ப்போம்..தாய் மொழியை எந்நாளும் காப்போம்..நல்ல பதிவு சார்.//

பாஸ் தோழமையாக இருக்குதே பாஸ்!அப்படியே தொடருவோமே:)
தாமதப்பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்.

முன்பு தமிழ் செத்துப்போகுமென்று யாரோ ஒரு பாடு ஐ.நா அறிக்கை விட்டதாம்.இப்ப இணைய பயன் அதிகரித்த பின் இப்ப கொஞ்சம் நிலைமை பரவாயில்லைன்னு மறு அறிக்கை விட்டாங்களாம்.இதோ நாம் கலந்துரையாடல் செய்யும் சமகாலத்தின் நல்ல பின்னூட்டங்களும் கூட இனி வரும் காலங்களில் இலக்கியமாய்ப் போய் விடும் வாய்ப்புக்கள் உள்ளன.

தொல்காப்பியன் முதல் இணைய ’காப்பி’யன் வரை தமிழுக்கு இடைவெளியே இல்லை என உலகுக்கு உரக்கச் சொல்வோம்.ஊறுகாயாக ஏனைய மொழிகளையும் தொட்டுக்கொள்வோம்:)

selvas said...

y should v learn hindi... v r in tamilian.... tamil vaalha...

Rathina vinayagam said...

Oru Thamizhanai Kaapatra Inda Hindi Mozhi udhavumaanal, Athai Karpadhu Thavarillai, Athaividhuthu naam Thamizhargal endrumea nam mozhiyal Keele Veezhndhu vidavillai nanbargalea...Tamilai katru, Aangilam Katrukondal Pothum ivvulagil naam vaazha....HINDI oru Mozhiyea Thavira vera enda oru sirappum atharku kidaiyathu, Tamil mozhi pol...Idhai Bharathi Urudhi Seithullaar..En tamil nanbargalea.

Rathina vinayagam said...

Oru Thamizhanai Kaapatra Inda Hindi Mozhi udhavumaanal, Athai Karpadhu Thavarillai, Athaividhuthu naam Thamizhargal endrumea nam mozhiyal Keele Veezhndhu vidavillai nanbargalea...Tamilai katru, Aangilam Katrukondal Pothum ivvulagil naam vaazha....HINDI oru Mozhiyea Thavira vera enda oru sirappum atharku kidaiyathu, Tamil mozhi pol...Idhai Bharathi Urudhi Seithullaar..En tamil nanbargalea.

Anonymous said...

கொஞ்ச கொஞ்சமாக பையாக்காரன் ஆக்கரமிப்பு தமிழ் நாட்டில் வேரூன்று கிறது ,ஹிந்தியும் உடன் நுழைகின்றது ,இனிதான் தமிழர்கள் ,தன்னுடைய அடையாளத்தை இழக்கப்போகிறார்கள் ,ஹிந்தி மோகத்தால் ,முதலில் தமிழ் தனது தனித்தன்மையை இழக்கும் ,பண்பாடு சிறிது சிறிதாய் குலையும் (ஏற்கெனவே ஒரு விழுக்காடு குறைந்து விட்டது ),மொழியில் கலப்படம் ஏற்ப்படும்,அதற்கு தமிழ் மொழியை வைத்து ஈன பிழைப்பு நடத்தும் முன்னணி தமிழ் நாளேடுகள் துணை போகும் ,காணும் நாள் வெகு தொலைவில் இல்லை

Unknown said...

இடை இடையே ஆட்சி மாற்றம் நடந்திருக்கின்றதே அப்போதெல்லாம்கூட இந்தியை யாருமே கொண்டு வரவில்லையே. கருணாநிதி மட்டும் தான் செய்ததை போல் கருத்திடுகிறிரீர்கள்.இது எந்தவிதத்தில் நியாயம்.ஆக நீங்கள் யார் என்பது தெளிவாகவே அனைவருக்கும் தெரியவருகிறது.இந்தியை மூடி பெட்டகத்தில் வைத்து வேறுயாரும் திறக்க முடியாதபடி பூட்டிவிட்டாரா கருணாநிதி.

ரவி Thiyagaraajan கல்யாணம் said...

இடை இடையே ஆட்சி மாற்றம் நடந்திருக்கின்றதே அப்போதெல்லாம்கூட இந்தியை யாருமே கொண்டு வரவில்லையே. கருணாநிதி மட்டும் தான் செய்ததை போல் கருத்திடுகிறிரீர்கள்.இது எந்தவிதத்தில் நியாயம்.ஆக நீங்கள் யார் என்பது தெளிவாகவே அனைவருக்கும் தெரியவருகிறது.இந்தியை மூடி பெட்டகத்தில் வைத்து வேறுயாரும் திறக்க முடியாதபடி பூட்டிவிட்டாரா கருணாநிதி.