Followers

Friday, October 21, 2011

மைக்ரோசாப்ட்...சோனி மற்றும் ஹாலிவுட் பாலா எங்கே?

முந்தைய பதிவின் விட்ட குறை தொட்ட குறையாக பதிவுலக நட்பு என்பது பதிவுகளை ரசித்துப் பின் ஆளைக் காணோமே என்று தேடி திடிரேன திரும்ப வரும் பதிவர் வவ்வால் வருகையின் நீள் உறக்கம் மகிழ்ச்சி மாதிரி இருக்க வேண்டும்:) அதே மாதிரி தலைப்புல உட்கார்ந்துகிட்டு இருக்கிற ஹாலிவுட் பாலாவும் மீள் தரிசனம் தந்தால் மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கும். 

நிறைய தேடல்களில் பதிவுகளில் புதிய தகவல்களை தரலாமென்பதோடு எனது சுயதேவையாகவும் சில புதிய முயற்சிகளை செய்யலாமே என்று நினைத்ததில் மைக்ரோசாப்ட்,சோனி பயில்வான்களின் போட்டியில் சில ஃபாரம்களில் வேடிக்கைப் பார்க்க போக பதிவுகளில் கவனத்தை செலுத்த முடியாது போய் விட்டது.விசயம் என்னன்னு சொல்வதற்கு அக்கரை சீமை பதிவர் ஹாலிவுட் பாலாவிலிருந்து துவங்க வேண்டும்.அவரது சிறந்த பதிவுகள் அனைத்தும் காணாமல் போனதோடு சொல்லிக்கொள்ளாமல் ஹாலிவுட் பாலாவும் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை.யாரோ ஒரு பதிவுலக நண்பர்(கேபிள் சங்கரா?) அவரது பதிவுகளைப் பின்னூட்டம் நீங்கலாக மீண்டும் இணையத்தில் இணைத்திருக்கிறார்.மீண்டும் இணைத்தவர் ஒருவேளை இந்தப் பதிவைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவருக்கு எனது நன்றி.இந்தப் பதிவின் கால கட்டத்துக்கு ஆப்பிள் ஐபோனும்,ஆப்பிள் நிறுவன இயக்குநர் ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்து போனதும் பிரபலமானவை.ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி இரமணிதரன் அவர்கள் ஒரே வார்த்தையில் Jobs well done என்று ஸ்டீவ் ஜாப்ஸ் படத்தைப் போட்டு அஞ்சலி முடித்துக்கொண்டார்!

ஹாலிவுட் பாலாவோ ஸ்டீவ் ஜாப்ஸ் இன்ன பிற குழுவினர் பட்ட வாழ்க்கை அனுபவங்களை தமிழ் சினிமாவுக்கெல்லாம் எட்டாத ஸ்கிரிப்ட் மாதிரி சொன்னதோடு கூடவே பிரிஞ்சு மேய முயன்றது பிக்ஸார் அனிமேசன் தொழில்நுட்ப கோனார் நோட்ஸ்.பிக்ஸார் நிறுவனம்,தொழில்நுட்பம் பற்றியும்,ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றியும்(வால்ட் டிஸ்னியும்ன்னு சேர்த்து சொன்னா நிறைய பேர் அடிக்க வருவீங்க...நீங்களாச்சு...ஹாலிவுட் பாலாவின் பிக்ஸார் இணைப்பாச்சு) பதிவுலகத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே தமிழில் அறிமுகப்படுத்தியது ஹாலிவுட் பாலா மட்டுமே!வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டியில் குழந்தைகள் கார்ட்டூன் பார்க்கனுமென்று அடம் பிடித்தால் பெரியவர்களுக்கோ சீரியல் அல்லது செய்தி,விளையாட்டு சேனல்களின் பட்டனை அழுத்தும் ஆர்வம் இருக்கும்.ஹாலிவுட் பாலாவின் பிக்ஸார் புரிதலுக்குப் பின் பெரியவர்களுக்கும் கார்ட்டூனில் ஆர்வம் வரலாம்.

உங்களுக்கு வந்ததோ இல்லையோ கார்ட்டூன்கள் வீடு முழுதும் சிதறிக்கிடக்க இது நம்ம ஏரியா இல்லைன்னு இருந்த நான் நேற்று பிக்ஸார் ஸ்டோரி டாகுமெண்டரி பாதி பார்த்து விட்டுத்தான் குறட்டையே விட்டேன்.கூடவே அடுத்தநாள் Toystory 3 வேறு.குழந்தைகளுக்கு கார்ட்டூன் முன்னுரிமையெனும் போது குழந்தைகள் கார்ட்டூன் மாய உலகில் சுற்றித் திரிவது வாழ்வியலின் ஒரு மிகப்பெரிய அதிசயம்.நம்ம தலைமுறைக்கு எல்லாம் கிடைக்காத அம்புலிமாமா,சிந்துபாத்தை விசுவலாக பார்க்கும் வரம் பெற்றவர்கள் குழந்தைகள்.இனி பெரியவர்களுக்கு குழந்தைகளுடன் கும்மியடிக்கவும்,வால்ட்டிஸ்னியும்,பிக்ஸார் தொழில் நுட்பமும்,ஸ்டீவ் ஜாப்ஸும்,ஜார்ஜ் லூகாஸ்களுடன் பயணம் செய்ய ஹாலிவுட் பாலாவின் பிக்ஸார் பதிவுகள் துணை புரியும். 

அதோடு அன்று 14 இன்ஞ்ன்னு சொல்லிக்கிட்டு 30 வரைக்கும் பெருத்த இடை தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தாண்டி,பிளாஸ்மா, எல்.சி.டி  இஞ்சி இடுப்பையும் தாண்டி இப்போது இடுப்பே இல்லாத எல்.இ.டி பெட்டிகள் விற்பனை நிலையங்களை அலங்கரிக்கின்றன.இப்போதைய விஞ்ஞான வளர்ச்சிகளை தங்கள் மதப்புத்தகங்களில் அப்போதே சொல்லி வைத்து விட்டார்கள் என்று இறை நம்பிக்கையாளர்கள் பெருமைப்பட்டுக்கொள்வது போல் ஹாலிவுட் பாலா நிறைய விசயங்களை இரண்டு வருடங்களுக்கு முன்பே சொல்லி விட்டார்.

அப்படி அவர் அறிமுகப்படுத்திய ஒன்று PS3.இங்கே துவங்குகிறது சோனியின் விளையாட்டு.தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்ங்கிற மாதிரி சோனி பிளேஸ்டேசன் மாதிரி ஒரு பன்முகப்பட்ட கன்சோல் எனும் பெட்டியை இனியெங்கும் காணோம் என சொல்லலாம்.இந்த கன்சோல் சாதனம் ஒரு விளையாட்டு மைதானம்.ஒரு இணையதளம்.ஒரு கலந்துரையாடல் களம்.ஒரு சினிமா தியேட்டர்.விளையாட்டு ப்ளு ரே தட்டுக்களை ஆன்லைனிலே வாங்கும் கடை என பல வசதிகள் கொண்டது..

இதோடு லினக்ஸ் இயங்குதளமாகவும் உபயோகிக்கலாம் என்று 2003ல் இணையத்தில் சுற்றுபவர்கள் அத்தனை பேரும் ரொம்ப......நல்ல பசங்கன்னு தமிழ்மணம் நம்பிய மாதிரி சோனி 80GB வரையிலும் லினக்ஸ் மாற்று இயங்குதளத்தையும் இணைக்கும் வசதியை சேர்த்திருந்தது.இப்படியெல்லாம் சோனி மாதிரி ரொம்ப நல்ல பிள்ளைன்னு ஆங்கிலத்தில் நல்ல ரிவுயூ செய்தா டாலர் கூட கொடுப்பதாக கேள்வி.நமக்கு நல்லதும் சொல்லி அதன் குளறுபடிகளும் சொல்லாட்டி தூக்கம் வராது என்பதாலும் சோனி சிக்ஸாஸிஸ்ல வளவளா பதிவு தட்டச்சு செய்யறுதுக்கும் சோனி தரவிறக்க கண்சிமிட்டல் செய்யும் நேரத்துல குட்டி தூக்கம் போடும் பொறுமையெல்லாம் இல்லையென்பதால்  இது நமக்கு ஆவுறதில்ல.

சோனி அறிமுகப்படுத்தியது.விளையாட்டு போதை பிரியர்களுக்கும்,விண்டோஸ் இயங்குதளத்திற்கு மாற்று எனும் லினக்ஸ் பிரியர்களுக்கும்,கூடவே ஹேக்கர்களுக்கும் நான் முன்பே சொன்ன ஐஸ்கிரிமுடன் கிரிம் காரமலை கலந்து சாப்பிட்ட மாதிரி ஒரே கொண்டாட்டம்.இந்த கொண்டாட்டம் நீடிக்க விடாமல் அடுத்த வெர்சன் ஸ்லிம் மாடலில் லினக்ஸ் இயங்குதளத்தை நிறுத்தியதோடு முன்பு வாங்கியவர்கள் பிளே ஸ்டேசனை அப்டேட் தரவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் இல்லாவிட்டால் வாங்கும்  நீலக்கதிர் வட்டுக்கள்(ப்ளு ரே) போன்றவற்றுடன் சோனியில் பன்முக பலன்களை அனுபவிக்க முடியாது என்று தடா,பொடா,கெடா வெட்டியது.போடா என்றார்கள் ஹேக்கர்கள்.உபயோகிப்பாளர்களோ சோனியை கோர்ட்டுக்கு இழுத்து விட்டார்கள்.ஹேக்கர்களோ ப்ளே ஸ்டேசனை அப்டேட் செய்யாதீங்க!மாற்று வழிகளை உருவாக்கித் தருகிறோம் என சவால் விட்டார்கள்.

ஹேக்கர்களுக்குப் பயந்த அப்பாவிகளோ சோனி செய்வதை செய்கிறேன் என்று அப்டேட் செய்யப் போக உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணா என மூட்டைப்பூச்சி(bug),இடை நிறுத்தம்(crash) என்று அலறிக்கொண்டிருக்க இன்னும் சிலர் இவங்க சண்டை முடியட்டும் என்று லினக்ஸ் போகாமலும்,அப்டேட் செய்யாமலும் இயங்கிக்கொண்டிருக்க,லினக்ஸ் நரி குருக்கள் வடை போச்சேன்னு வருந்திக்கொண்டிருக்க மைக்ரோசாப்ட்டுக்கு மார்க்கெட் நிலவரம் மூக்கு வேர்த்து தயாரித்த கன்சோல்தான் எக்ஸ்பாக்ஸ் (Xbox 360).

அல்லது சோனியின் விளையாட்டு தாதா பிம்பம் உடைக்க எக்ஸ்பாக்ஸ் பயன்பட்டாலும் வடிவமைப்பில் சோனியின் பிளே ஸ்டேசன் முன்பு Xbox 360 மற்றும் Nintendo போன்ற விளையாட்டு வீரர்கள் நிற்க முடியாது.

இதை உதாரணத்தோடு சொல்லனும்ன்னா சச்சினோடு ஏனைய பேட்ஸ்மென் ஒப்பீடோ அல்லது ரோல்ஸ் ராய்ஸ் கார் மாதிரி சோனி பிளே ஸ்டேசன்.நம்ம ஊர் அம்பாசிடர் கார் மாதிரி மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ்.மைக்ரோசாப்டின் இயங்குதளம் விளையாட்டுக்கு மட்டும் என எளிதாக வடிவமைக்கப் பட்டது.2000 ரூபாய்,4000 ரூபாய் கொடுத்து ப்ளு ரே வட்டுக்களை வாங்கி விளையாடுவதை விட எக்ஸ்பாக்ஸ் குறைந்த விலையிலோ வழக்கமான திருட்டு டி.வி.டி மாதிரியாகவோ விளையாடுற மாதிரி.

ஆனால் சோனியை விட ஒரு புத்திசாலித்தனமான வேலையை மைக்ரோசாப்ட் செய்தது.நமக்கு அவதார் படம் தெரியும்தானே.அதன் 3D அனிமேசன் என்பதெல்லாம்(மறுபடியும் பிக்ஸார்,பாலா,ஜார்ஜ் லூகாஸ் மற்றும் ஜேம்ஸ் கேமரூன் etc..etc) ஒருவர் பின்புலத்திலிருந்து உடல் அவயங்களை அசைக்க அதற்கு தகுந்த மாதிரி நமக்கு திரைப்படத்தில் அனிமேசன்கள் ஓடுவதோ,நகர்வதோ,காதல் செய்வதோ வரும்.இதேமாதிரியான தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் கைநெக்ட்(Kinect)என்ற கேட்ஜட் மற்றும் எக்ஸ்பாக்ஸ் 360(Xbox 360) இணைத்து இயக்குகிற மாதிரியான தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியது.சோனியின் விளையாட்டு எப்படின்னா ப்ளு ரே வட்டை பிளே ஸ்டேசனில் இட்டு வயர்லெஸ் சிக்ஸாக்கிஸ்(Sixaxis)பட்டன்களை நகர்த்தி விளையாடுவது.ஆனால் எக்ஸ்பாக்ஸ்+கைநெக்ட்,அதோடு கூட அட்வென்ஸர் கேமை இட்டு தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னாடி 2 மீட்டர் தள்ளி நின்று உங்கள் உடல் அசைவுக்குத் தகுந்த மாதிரி தொலைக்காட்சி பிம்பம் இயங்கும்.அதாவது நீங்களே டான்ஸர்,நீங்களே பிரபுதேவா டான்ஸ் மாஸ்டர்:).

இல்ல எனக்கு டான்ஸெல்லாம் வராது,சினிமான்னா கண்கொட்டாமல் பார்ப்பேன் என்று டி.வி.டி பிளேயரில் படம் பார்ப்பவர்களுக்காக இன்னும் கொஞ்சம் விவரிக்க முடியுமா என்பது அடுத்த பதிவில்....  

ஹாலிவுட் பாலா மயில் ஆடிய அழகைக் கண்டு மயங்கிப் போன வான்கோழி நான்.பாலா அசல் மாதிரி உள் கட்டுமானமெல்லாம் என்னிடம் எதிர்பார்க்க கூடாது.மென்பொருட்கள் பற்றி தொடர்ந்து சசிகுமார் சொல்லி வருகிறார்.ஆனால் மென்பொருட்களை இயக்கும் கேட்ஜட் பல அமெரிக்க சந்தையில் தூங்கி எழுந்த காலையிலே அறிமுகமாகும்.நமக்கு திருட்டு வி.சி.டி மாதிரியெல்லாம் தேடி அலைய வேண்டி வரும்.அது மாதிரியான குறைகளைப் போக்கவும்,தொழில் நுட்ப வளர்ச்சிகளோடு நாமும் கூடவே பயணிக்கவுமான எனது அனுபவங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.நான் தமிழ்ச் செய்திகளுக்கே சிங்கி அடிக்கும் போது(இந்த லட்சணத்துல தமிழ்மணம் தடை ?) இணையத்தில் இநியுஸ்,ஜிநியுஸ் வாசிக்கிறேன் கேளேன் என்று அமெரிக்க அம்மணிகள் உசுப்பேத்துனா எப்படியிருக்கும்...

ஹாலிவுட் பாலாவோ அல்லது ஆப்பிள்,மைக்ரோசாப்ட்,சோனி தமிழ் உஸ்தாதுகள் யாராவது இந்த பதிவைப் பார்த்தால் சிரிக்காமல் இருப்பார்களா என்பது சந்தேகமே.அனிமேசன்,கார்ட்டூன் போன்றவை 2Dயிலிருந்து 3Dக்குப் பயணித்து விட்டது.தொலைக்காட்சிகள் கூட 3D என்ற விளம்ப்ரங்கள் வந்து விட்டன.பழையன நகர்தலும் புதியன புகுதலும் என நுகர்வு கலாச்சாரம் நகர்ந்துகொண்டேயிருக்கிறது.அவற்றில் சில கடுகுகளை மட்டுமே போட்டு தாளித்திருக்கிறேன் நானும் தொழில்நுட்ப பதிவு போடுகிறேன் பேர்வழியென:)

இந்த பதிவு அக்கரை சீமை பதிவர் ஹாலிவுட் பாலாவுக்கு சமர்ப்பணம்.

அடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் நுனிப்புல் தகவல்களுடன் வருகிறேன்.நன்றி.     

Tuesday, October 18, 2011

எல்லா தமிழ்மண நண்பர்களும் முக்கியமானவர்களே!

ஏர்டெல்... தலைப்பு மாதிரிதான் வித்தியாசமான விதத்தில் நண்பர்கள் அடிக்கும் லூட்டிகளை தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்து வருகிறது. போன பதிவுக்கும் முந்திய பதிவு வரையில் தினசரி தமிழ்மண தரிசனம் செய்யாமல் வேறு ஆங்கில தளங்களில் நுழைந்து கொண்டு தேடல்களில் நாட்கள் நகர்ந்து விட்டன.இந்தப் பதிவு போடுவதற்கு முன்பு கூட உடல் களைப்பால் ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு திடீரென இன்று தமிழ்மணம் எட்டிப்பார்த்த பாதிப்பால் சொல்லவா வேண்டாமா என்ற பூவா காயாவில் யாரோ கருத்து கோபம் கொள்கிறார்கள் நமக்கேன் வம்பு என்று அமைதியாக ஆட்டம் பார்ப்பதை விட தமிழ் பொதுவெளியில் நானும் ஒரு அங்கத்தினன் என்பதால் சொல்லியே விடுவது என்று தட்டச்சு செய்கிறேன்.

பதிவுலகில் எத்தனை சண்டைகள் பார்த்திருக்கிறோம் இதையும் பார்க்க மாட்டமா என்ன என்ற முந்தைய சண்டைகளுக்கும் இப்போதைய சண்டைக்கும் வித்தியாசம் இருக்கிறது.புராணக்கதை ஒன்றில் வரம் கொடுத்தவன் மீதே வரத்தை பரிட்சித்துப் பார்க்கிற மாதிரியான சூழல் இது.நகைச்சுவையாகவோ,மொக்கையாக பதிவுகள் தரும் நண்பர்களுக்கு கூடும் கூட்டத்தை விட  நீட்டி முழக்கி கருத்துக்கள் வெளியிடும் நண்பர்களுக்கான வாசிப்போ அல்லது கூடும் கூட்டமோ குறைவு என்பது பதிவுலக யதார்த்தம்.இதற்கு விதிவிலக்கான பதிவுகளும் இருக்கும்.ஆனால் அலெக்சா ரேட்டில் மொக்கைகள் முந்திக்கொள்வது வாசிப்பின் தரமா அல்லது மனம் எங்கும் நிறைந்து கிடப்பதால் அவையே ருசிக்க கிடைக்கின்றனவா என்பது விவாதத்திற்குரிய ஒன்று. 

யாருக்கும் யார் மீதான கருத்து மாறுபாடுகள் மீதான  பதிவுகளோ அதன் பின்னூட்டங்களோ மாற்று கருத்து என்ற பெயரில் முன்வைக்கும் கருத்து சுதந்திரத்தை நான் எப்போதும் ஆதரிக்கவே செய்கிறேன்.ஆனால் இப்போது தமிழ்மணமே மன்னிப்பு கேள் பேனரை தூக்கிகிட்டு பதிவுலகை இந்தியன் ஏர்லைன்ஸ்  814 விமானத்தை தலிபான்கள் மதம் என்ற பெயரில் ஹைஜாக் செய்த மாதிரி பதிவு குழு சேர்க்கும் கருத்து வெளிப்பாடுகளை மறுக்கிறேன்.

இன்றைய தினம் வரைக்கும் பெயரிலி யாரென்றே நான் அறிந்திருக்கவில்லை.பெயரிலியாகவே அவர் தம் கருத்தை முன் வைத்திருக்கலாம்.நிர்வாகத்தில் ஒருவர் என்று அடையாளம் காட்டியது பதிவுலக கல்லூரி மாணவர்களுக்கு பேனர் தூக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுத்து விட்டது. அவரது ஆங்கிலம் கலந்த பின்னூட்ட விளாசல்களும், பின்னூட்ட தொடுப்பாக பெயரிலியின் 2003ம் வருடம் தொட்ட பதிவுகளைப் பார்க்கும் போதும் அவர் சொல்லும் விதத்தை உள்வாங்கிக்கொள்வதில் தவறியோ அல்லது வழக்கமான பின்னூட்ட வகையிலோ சிக்கிக்கொண்டு பின்னூட்டம் இடுவதற்கு மீண்டும் மீண்டும் அவர் மறுமொழி சொன்ன முறையில்  கோபம் கொண்ட்வர்களே அதிகம். பின்னூட்டங்களை கையாளும் பதிவுலக பின்னூட்டக்காரர்களுக்கு பெயரிலி விளாசியது உச்சமே.

அவரது பின்னூட்டத்திற்கு மறுமொழி சொல்லும்  தார்மீகப்பொறுப்பும் தளத்தின் பதிவ்ருக்கான உரிமை.அதனை விடுத்து கூட்டத்துப் பஞ்சாயத்தில் குரல் கொடுத்து சண்டை வளர்க்கும் தமிழ்க் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சமூக கடமைகள் நமக்கு இருந்திருந்தால் கூட பரவாயில்லை.தனது கருத்து வெளிப்பாடாய் பதிவுகள் போடுவது பதிவரின் உணர்வு சார்ந்த விசயம்.ஆனால் பதிவும் போட்டு ஒற்றைப் பார்வையாய் ஆள் சேர்த்து இணைத்துக்கொண்டு செல்வேன் என்பது மறுக்கவும் கண்டிக்க வேண்டிய ஒன்று.இதன் உச்சமாக பதிவர் ஒருவர் அமெரிக்காவில் இயங்கும் தளத்தை வளைகுடாவில் தடை செய்வேன் என்று எச்சரிக்கை விடுவது.ஆஹா!தொழில் நுட்ப திறன் புல்லரிக்க வைக்கிறது.இந்த தடை சராசரி மேய்ப்புக்கு வேண்டுமென்றால் சரியாக இருக்க கூடும்.அதனையும் தாண்டிய வாசிப்பு நேசிப்பு அசாங்கேகளுக்கு இது சரிப்பட்டு வராது.மேலும் தன் கையால் தன் கண்ணை  குத்திக்கொள்ளும் விவேகம் பற்றி மேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

தமிழக சட்டமன்ற தேர்தல் காலத்தில் தொடர்ந்த  பதிவர் சதிஷ் அரசியல் பதிவுக்கு பெரும்பாலும் பின்னூட்டங்கள் சொல்லியிருக்கிறேன்.ஆனால் அவரது சோதிடம் சார்ந்த விசயங்கள் எனக்கு உடன்பாடு இல்லையென்ற போதும் அவை தவிர்த்து அவரது கருத்துக்களை ஆதரித்திருக்கிறேன்.சமூக கருத்துப் பரிமாற்ற்ங்கள் என்ற தளத்தில் வியாபார அணுகுமுறையை அவர் முறைப்படுத்தியதால் பதிவுகள் இணைப்பதை தமிழ்மணம் மறுத்துள்ளதாகவும் அவரது பின்னூட்டங்கள் மூலமாக அறிய முடிகிறது.எந்த ஒரு  மென்பொருளையும் உபயோகிக்கும் போதும் I accept சொல்லியே அதன் சாரங்களைக் கூடப் படிக்காமல் உபயோகிக்க துவங்கி விடுவது பெரும்பாலோரான வழக்கம்.தமிழ்மணம் சில நெறிமுறைகளை செயல்படுத்தும் போது அதற்கு உட்பட்டே நடக்க வேண்டிய பொறுப்பு பதிவர்களுக்கு இருக்கிறது.இந்தப் பதிவின் நேரத்தை மைக்ரோ சாப்ட் vs சோனி என்ற தொழில்நுட்ப பதிவுதான் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.அடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் மெருகு படுத்தி விட்டு இணைக்க இயலுமா என்று பார்க்கிறேன்.

உலகும்,அதன் விசயங்களும் பரந்து கிடக்கின்றன.எல்லாமே எல்லோருக்கும் தெரிந்திருக்கும் சாத்தியமில்லை.கொடுக்கலும்,வாங்கலும் என்ற பரிமாற்றத்தை தமிழ்மணம் இதுவரைக்கும் லாபகரமான நோக்கில்லாமல் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது.வாங்குதல் தவிர்த்து கொடுத்தேனே காரணம் காட்டி தமிழ்மணத்தை மறுக்கும் செயல்கள் தவிர்ப்பது எனது நிலைப்பாடு.

கூடவே பதிவுலகம் மூலமாக பெயர்கள் அறிமுகமான நண்பர்களின் வெளிநடப்பும் வருத்த்தை தருகிறது.எத்தனையோ கடந்தோம்.இதனையும் கடப்பதே வாசிப்பின் நேசிப்பை தரும்.

Tuesday, October 4, 2011

உலகத் தமிழர்கள் 896 பேரா?

பதிவுகள் பல கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கின்றன.தேவையும்,அவசியமும் என்பதால் ஏற்கனவே பெரியார் தளம் தமிழ்மணத்தில் இணைத்துள்ள இந்த பதிவைதமிழ்மணம்,இண்ட்லியென இணைக்காமலே  பதிவிடுகிறேன்.இதுவரையிலும் இலங்கைப் பிரச்சினை குறித்து எத்தனையோ ஓட்டளிப்பு பங்காற்றியாகி விட்டது.இறுதியாக வெள்ளை மாளிகை வரையென்பதால் பதிவுலகம் சார்பாக இன்னுமொரு ஓட்டு சேர்த்து முயற்சி செய்துவிடலாமே!தகவல் உடனடியாகப் போய் சேரும் இந்த நேரத்திலும் 5000 ஓட்டுக்கு இன்னும் ஆயிரம் கூட எட்டிப்பிடிக்க முடியாத நிலையிலா தமிழர்கள் இருக்கிறோம்?

தமிழர்களின் குரலை வெள்ளை மாளிகை வரை கொண்டு செல்வோம்.வெள்ளை மாளிகை தளத்தில் ஓட்டுப் போடுங்கள்.நன்றி.