Followers

Tuesday, January 5, 2010

புவி வெப்பம்

2012 எண்களில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம்.ஆனால் தண்ணீர்!தண்ணீர் பஞ்சம் கே.பாலச்சந்தர் சினிமாப் படம் எடுத்தும்,பின் தமிழக,கர்நாடகா காவிரிப் பிரச்சினையாக விசுவரூபம் எடுத்து காவிரி போலவே வளைந்து நெளிந்து,கூனி குறுகி,குமுறி,அகன்று பின் சோர்ந்தும் போனது.(தூசு தட்ட ஆள் இல்லாத காரணத்தால்)யானை கட்டி நெல் உதிர்த்த காலம் தொட்டு நெல்வயல் உழவு டிராக்டர் வரை உண்பது தவிர மாற்றங்கள் நிறையவே வந்து விட்டது.

நீர் கொதிக்க மின்சாரம்,எரிபொருள் எதுவும் தேவையில்லை.வளைகுடா நாடுகளின் வெப்பத்தில் குளிர்நீர் சுடுநீராகவே மாறிவிடுகிறது.மாதங்களில் மார்கழி தனது சுய அழகு இழக்கிறது.இதுவரை மழைக்காலம்,குளிர்காலம்,கார்காலம்,கோடைக்காலம் என்ற காலங்கள் மருவி சூடான ஒரே காலம் என்ற தனித்துவ பெருமை வந்தடையும் காலம் மிக சமீபத்தில்.

மைக்கேல் ஜாக்சன் தனது கீச்சுக்குரலில் "த்ரில்லர்" பாடிய ஆல்பத்தின் புகழ் மழைக்காடுகளின் அழிப்புப் பற்றிச் சொன்ன "பூமி பாடல்"(earth song)க்கு இல்லாமல் போனது.இதுல மைக்கேல் ஜாக்சனுக்கு நேர்ந்த கொடுமை என்னன்னா பூமி பாடல் U.K யில் வெற்றி பெற்றும் U.S.A யில் அந்த நேரத்தில் வெளியிடாமல் போனது.உயிரோடு Forest Destruction பற்றி சொல்லும் போது ஸ்டியரிங்,பிரேக்கால் தாளம் போட்ட அமெரிக்க கரங்கள்,கால்கள் மைக்கேல் ஜாக்சன் இறந்தபின் அவரது சமாதி Forest lawnக்கு கண்ணீர் வடித்தது.

விமானம் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்குப் போட்டியாக 1912ம் வருடம் உருவாக்கப் பட்ட ஆஸ்திரேலியா அண்டார்டிகா ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப் பட்ட விக்கர்ஸ் விமானம் அண்டார்டிக்கா பனியில் விபத்துக்குள்ளாகி இப்போதைய வெப்பத்தின் துணையால் மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டது.அமெரிக்காவில் வருடா வருடம் ஏதாவது புதுப்பெயர் சூட்டிக்கொள்ளும் புயல் காத்ரீனா விபத்துக்குப் பின் இன்னுமொரு புதுப்பெயருக்காக ஏங்கிக் காத்திருக்கிறது.தாமதத்தின் காரணம் புவி வெப்ப மாறுதலா?

டிசம்பர் 26ன் சுனாமியின் கோரங்கள் வடுக்களாகி தசாவதாரம் பிரமிப்போடு மூழ்கிப் போனது.இரண்டு எவரெடி குண்டு பேட்டரியில் இயங்கிய வானொலி சத்தம் மட்டுமே கேட்ட விஞ்ஞான அதிசயத்தின் காலத்திலும் வாழ்வின் நிகழ்வுகள் நகரத்தான் செய்தது.பணம் பற்றாக்குறை,உணவு,உடைப் பஞ்சம் மீறிய வாழ்க்கையில் ஸ்விட்சை போட்டால் பல்ப் எரியும் அத்தியாவசியமும் கிடைத்ததை நொறுக்கும் புத்தகத்தீனியும் தவிர்த்து வில்லனாக மெல்ல நுழைந்தது தொலைக்காட்சி.கம்பிப் பின்னல்களில் வித்தை காட்டிய தொலைக்காட்சிக்கு பக்க வாத்தியமாக வந்து நுழைந்தது வி.சி.ஆர்.அப்பொழுதும் "ஸ்டேண்ட் பை" யின் வெப்பக் காற்று உறுத்தவில்லை.பின் திருட்டு டி.வி.டி,வி.சி.டி இன்னும் பல...இன்னும் பல....

ஸ்டேடிக் மின்சாரம் என்ற முதல் வார்த்தை கணினிப் பொட்டி கண்டுபிடிப்பில் பிரபலமானது.ரெமிங்க்டன் பழைய வார்த்தையும் டொக்,டொக் கேட்ட சத்தமும் மறந்து ஓய்ந்து போனது.மெல்லிய இசையாய் கணினியின் பரிசமும் எலி வாலும் வித்தியாசமான அனுபவமாயிற்று.ஸ்டேடிக் மாத்திரைகள் உடலில் ஏற்படுத்தும் ரசாயன விளைவுகளா இல்லை பருத்தி உடை மாற்றங்களில் வந்த பின் விளைவுகளா தெரியவில்லை உடைக்குள்ளும் மின் ஒளிகள் தென்பட்டன.பக்கத்தில் இருப்பவனைத் தொட்டால் ஷாக் ஆனான்.வாக்மேன் தொலைந்து MP3 ஆட்டம் போட்டது.டிஜிட்டலின் சூறாவளிக் காற்று.சொல்லிக் கொண்டே போகும் நீளமாய் டிஜிட்டலின் ஆக்கிரமிப்பு.

விஞ்ஞான கண்டுபிடிப்புக்களின் மேம்பாடும் கணினி தொடாமல் அதன் ரகசியம் புரியாமல் யதார்த்தமாய் தானும் நகைத்து நகைப்பின் அலையை அருகில் உள்ளோருக்கும் அள்ளித் தெளித்த எகிப்தியன் தட்டுத் தடுமாறி கணினி விளையாட்டைத் தொட்டு இப்போது முகத்தில் சிரிப்பில்லாமல் போனான்.தனி மனித மாறுதலுக்கும் அப்பால் அனலும்,புகையும் கக்கும் தேசங்களின் பொருளாதாரக் குழாய்கள் வான் நோக்கி புகைந்து கொண்டிருக்கிறது.சில இடங்களில் ரத்த மழை பெய்கிறது.வளைகுடா யுத்தத்தில் மேகங்கள் கருப்பாகி மழையின் நிறம் கருப்பானது.மனிதர்களின் பூமி பலாத்காரம் அளவில்லாமல் போனது.ஹாலிவுட் படத்து கற்பனையாக மட்டுமில்லாமல் நோவா ஆர்க் ஒன்றை யதார்த்தமாய் இப்பொழுதே கட்ட ஆரம்பிக்கலாம்.

எனக்கு ஏன் இந்த வெட்டிப் புலம்பல் என்றால் டிசம்பர்,ஜனவரி குளிர் காலத்தில் கண் மட்டுமே குளிர்க் காற்றை பரிசித்த அனுபவம் கடந்த காலமாகிப் போயிற்று.சுகமோ இதமில்லையோ சொல்லத் தெரியவில்லை.ஆனால் வருடா வருடம் வந்து விட்டுப் போகும் குளிர்கால இயற்கை நிகழ்வு இந்த வருடம் காணாமல் போனது.இதோ தேதி ஜனவரி 5 2010.விதி விலக்காய் குளிர் காலத்திலும் இப்பொழுது ஏர்கண்டிஷன்.மேல்கோட்டு அணியாத கோடை காலத்து உடையணிந்து அலுவலகம் நோக்கிய பயணம்.பூமி வெப்பமாவதின் நிதர்சனத்தை இப்பொழுதே காண்கிறேன்.எதிர்கால சந்ததிக்கு நிறையவே சம்பாதித்து வைத்துள்ளோம்.