Followers

Tuesday, June 28, 2011

மெரினாவும் ,வரலாற்றுப் பக்கங்களும்

பதிவர் கும்மி மெழுகுவர்த்தி அஞ்சலி கூட்டம் பற்றி முன்பு தெரிவித்த போதும்,மே 17 இயக்க இணைப்பாளர் திருமுருகன் முன்பு பேசிய போது மெரினாவில் கூடும் கூட்டத்தைப் பொறுத்தே தமிழகத்தில் ஈழ உணர்வு சரியான பாதையில் பயணிக்கிறதா என்பதை சொல்ல முடியுமென்றிருந்தார்.எனவே ஜூன் 26ம் தேதிக்கான மெரினாவின் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
 நிகழ்வின் செலவுகளுக்காக யாரிடமும் பண உதவி கேட்காமல் முக்கியமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் கேட்காமல் தோழமை உணர்வு கொண்ட சென்னை நண்பர்களுடன் மட்டுமே பகிர்வு என்ற நிலையில் இதனை செயல்படுத்த நினைத்ததாக பதிவர் கும்மி கூறியிருந்தார்.சுயநலம் பாராத,கடின உழைப்புடன் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அனைத்து இயக்கத் தோழர்களுக்கும் முக்கியமாக மே 17 இயக்க குழுவினருக்கும்,நாம் தமிழர் இயக்கத் தோழர்களுக்கும்,தனது உடல் நிலை சரியில்லாத போதும் பதிவர் கும்மியின்  உழைப்புக்கும் மெழுகுவர்த்தி ஏந்திய அனைத்து பதிவுலக நட்புக்களுக்கும்,தமிழ் அன்பு சொந்தங்களுக்கும் நன்றி.


பதிவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பின் 27ம் தேதியே பதிவை தமிழ்மணத்தில் இணைத்ததைக் காண முடிந்தது.முந்தைய தமிழக ஆட்சியின் பக்கசார்பாக செயல்பட்ட  கோபத்தை நேற்று மெரினா நிகழ்வை உடனுக்குடன் படத்துடன் செய்தியிட்டு நக்கீரன் பத்திரிகை பாவப் பிராயசித்தம் செய்துகொண்டது.நக்கீரன் தகவல் தருவதிலும் கொஞ்சம் மாற்றம் இருப்பதாக உணரமுடிகிறது.பக்கசார்பற்ற பத்திரிகையாக திகழ நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்.

தேர்தலுக்கு அப்பாலான தி.மு.கவின் நிலை பரிதாபமாக இருப்பதால் இனியும் விமர்சிப்பதற்கு என்ன இருக்கிறது?ஆட்சி பீடத்தில் இருந்தும் சாதிக்காத சுயநல அரசியலுக்கான தண்டனையை தி.மு.கவும் அதன் தலைமையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.தற்போதைய சூழலில் தி.மு.க என்ற இயக்கத்தின் சமுதாயப் பணிகள் இறுதி பெற்றுவிட்டதென்றே கூறலாம்.

அதே போல் ஜெயலலிதா என்ற ஒற்றை ஆளுமைக்குப் பிறகு அ.தி.மு.கவும் தி.மு.கவின் முதுமையை எட்டும்.எங்கும் சுற்றிப் பார்த்தாலும் அனைத்தும் கிழடுதட்டிய இயக்கங்களாகவே இருக்கிறது.இப்படியான காலகட்டத்தில் நாம் தமிழர் மற்றும் மே17 இயக்கங்களை வரலாறு தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டுவது மாதிரி தெரிகிறது. இவர்கள் இன்னும் தங்களைப் புதுப்பித்துக் கொண்டு புதிதாய்ப் பிறப்பார்களா என்பதை இனி வரும் காலம் பதில் சொல்லும்.மாற்றங்களை வரவேற்போம்!பரிட்சித்துப் பார்ப்போம்.

மெரினா பீச்சுக்கு நீண்ட அரசியல் வரலாறு உண்டு என்பதை சென்னைவாசிகளும்,அரசியல் நோக்கர்களும் நன்கு அறிவார்கள்.இங்கே பூத்த இயக்கங்கள் கிளைகள் படர்ந்து தமிழக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட வரலாறுகளும் உண்டு.கோசங்கள் கிளப்பி பெயர் சூட்டு விழா நிகழ்த்தி லெட்டர் பேடு கட்சிகளாய் காணமல் போனவர்களும் உண்டு. 
 
மெரினாவின் பட்டாணி,சுண்டல்,முறுக்கு விற்கும் முகங்களே மாறியிருக்கின்றன.அந்தக் குரல்கள் இன்னும் மாறவில்லை.அவர்கள் ஒருதொடர்கதைமாதிரி.அரசியல்,சமூக,எழுத்தாளகள்,நண்பர்கள்,வானம் அண்ணாந்து பார்க்கும் மன நிலையாளர்கள்,வேலை தேடி மனதை ரிலாக்ஸ்செய்பவர்கள்,திருவல்லிக்கேணிபிரம்மசாரிகள், நடைப்பயிற்சியாளர்கள்,காதலர்கள்,குடும்ப கூட்டங்கள் என மெரினாவின் வரலாற்றுப் பக்கங்கள் ஒரு தொடர்கதையாகவே இன்னும் தொடர்கிறது.
 
 

Wednesday, June 22, 2011

ராகுல் காந்தி பிரதமராவது சாத்தியமா?

பதிவுக்குப் போறதுக்கு முன்னாடி யாராவது கடைப் பக்கம் வந்தீங்கன்னா வடை சூடா கிடைக்குதா அல்லது முன்பு மாதிரியே ஆறிப்போய்த்தான் கிடைக்குதான்னு தயவு செய்து சொல்லுங்க.காரணம்,முன்னாடி பதிவர்கள் சித்ரா   கடை திறக்க ரொம்ப நேரமாகுதுன்னு சொல்லியிருந்தாங்க.போன வாரம் பதிவர் கிரி ஒன்னு டெம்ப்ளட் மாத்துங்க அல்லது வேண்டாத ஸ்கிரிப்ட்டுகளை தூக்குங்க என்றார்.இப்ப வேண்டாத ஸ்கிரிப்ட்டையெல்லாம் தூக்கி எறிஞ்சு எளிதான டெம்ப்ளட்டைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.இக்பால் செல்வன் போன வாரம் போட்ட பதிவைப் பார்த்து Arial மற்றும் 12Px ஐ 13 Px ஆக மாற்றியுள்ளேன்.நேரம் கிடைக்கும் போது இன்னும் கொஞ்சம் மெல்லிய முகப்பூச்சு மட்டும் செய்யலாமுன்னு இருக்கிறேன்.எனவே பதிவு தரவிறக்கம்,பின்னூட்ட வேகம் பற்றி யாராவது சொல்லுங்க.
சரி!இப்ப கச்சேரி ஆரம்பிச்சிடலாம்.

இவ்வளவு நாள் என்னமோ விளையாட்டுத்தனமா நேரு மாமா,இந்திரா காந்தி அன்னை,ராஜிவ் அண்ணன்னு சொந்தம் கொண்டாடி மன்னராட்சிக்கு மாறாக ஒரு பரம்பரை ஆட்சி வருவதற்கு இந்திய மக்கள் துணை போய் விட்டார்கள்.தமிழகத்திலும் கருணாநிதி அதற்கான வித்திட்டார்.தற்போதைக்கு அந்த கனவுகள் தவிடு பொடியாகி விட்டது ஒரு புறமிருக்க அதிகார பிறப்பின் இருப்பால்,விருப்பால் மத்தியிலும்,மாநிலத்திலும் அதற்கான சூழல்கள் உருவாகக் கூடும்.சுயமான முயற்சியாளர்களாய் இருந்திருந்தால் ராகுல்,ஸ்டாலின் போன்ற ஆளுமைகள் இந்தியாவிற்கு தேவையென்றாலும் வாரிசு அரசியலின் விளம்பரத்தால் இவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்வது இந்தியா என்ற ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.இருந்தாலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கிற வாசகப் படி இதனை காலம் எப்படி பதிவு செய்யப்போகிறது என்று கணிப்பதற்காக வேண்டி இந்த பதிவு.

இப்ப சுப்ரமணியன் சாமி என்ன சொல்றாருன்னா,ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு வர முடியாதாம்!ஏனய்யா உனக்கு எப்ப பார்த்தாலும் குட்டையக் குழப்பி விடுறதே பொழப்பா போச்சுன்னு அலுத்துக்கொள்றவங்களுக்கு அவர் என்ன சொல்றாருன்னா...சோனியா பெருந்தன்மையா பிரதமர் நாற்காலியை மன்மோகன் சிங்கிற்கு விட்டுக் கொடுத்திட்டதாகத்தான் நான் கூட முன்னாடி நம்பிகிட்டிருந்தேன்.ஆனால் சோனியாவுக்கே பிரதமர் நாற்காலி மேல ஒரு கண்ணு இருந்துச்சாம்.அதுல மண்ணை அள்ளிப் போட்டது நம்ம முந்தைய ஜனாதிபதி அப்துல் கலாம் என்கிறார்.எப்படின்னா சட்டப்படி சோனியா பிரதமர் ஆகமுடியாதுன்னு தமிழ்நாட்டுல இருந்து டெல்லிக்கு மூடிய கடிதம் போகிறமாதிரி ஒரு கடிதத்தை எழுதி அதனை சோனியாவுக்கு அனுப்ப அந்தக் கடிதத்தை படிக்கும் போது சாட்சியாக இருந்தவர்கள் அப்போது சதாம் உசைன் ஈராக் ஊழலில் சிக்கிக் கொண்ட நட்வர்சிங்கும்,பிரதமர் மன்மோகன் சிங்கும் என்கிறார் சுப்ரமணியன் சாமி.

எனவே ராகுல் காந்தி சோனியாவின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சோனியா மட்டுமல்ல அவரது இரு குழந்தைகளும் பிரதமராக முடியாதுன்னு பத்த வச்சுட்டார்.இதற்கு சுப்ரமணியன் சாமி சொல்லும் இன்னுமொரு காரணமென்னவென்றால் ராகுல் காந்தி இத்தாலியன் பாஸ்போர்ட்டில்தான் வேறு ஒரு பெயரில் ஐரோப்பா முழுவதும் சுற்றி வந்தாராம்.

Does Subramanian swamy got a valid point.? 
காலம்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

எவன் மாட்டுவான்னே ராத்திரி தூங்குற போது சுப்ரமணியன் சாமி நினைச்சுகிட்டு தூங்குவாரோன்னு தெரியல. மாட்டுனது திக்விஜய் சிங்க். சிங்கை ஜன்பத்தின் ஊதுகுழல் என்று ஒரு காய்ச்சு 

நானே இந்த திக்விஜய் சிங்க் என்கிற காங்கிரஸ் சிங்குச்சாவை எங்கேயாவது ஒரு பிடி பிடிக்கனுமின்னு பார்த்தேன்.அதற்குள் சுப்ரமணியன் சாமியே முந்திக்கொண்டார்.ஹசாரேவும்,ராம் தேவும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தா முந்தைய முதல்வர் கருணாநிதிக்கு திருமாவளவன் வாய்ஸ் கொடுக்குற மாதிரி காங்கிரஸ்க்கு ஊதுகுழல் திக்விஜய் சிங்க்.நல்லதுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பரவாயில்லை,நீ ஏன் ஊழலுக்க்கு எதிராக குரல் கொடுக்கிறாய் என்று திக்விஜய் சிங் அறிக்கை விட்டா இந்தாளை என்ன செய்யலாம்?கரிச்சுக்கொட்டுறதத் தவிர வேறு வழியில்லை.

சரி காங்கிரஸ்தான் இந்த லட்சணத்துல இருக்குதுன்னு பார்த்தா பி.ஜே.பி சொல்லவே வேண்டாம்.தற்போது 2G.4G,ஆதர்ஸ்,காமன்வெல்த் ஊழல்....இதற்கு செயல்படாத பிரதமராக மன்மோகன் சிங்க்,ஊழலுக்கு எதிரான ஹசாரே,ராம் தேவ் குரல்கள்....எவ்வளவு அருமையான சந்தர்ப்பங்கள்.உருப்படியா ஏதாவது மக்களிடம் போய்ச் சேருகிற மாதிரி ஏதாவது செய்ததா என்றால் இல்லை.பல பத்திரிகைகளும்,சில தொலைக்காட்சி ஊடகங்களே இதுவரையிலும் எதிர்க்கட்சி செய்ய வேண்டிய பணியை செய்திருக்கின்றன.

உள்நாட்டுப் பிரச்சினைகளை பின் தள்ளி நாம் சீனாவுடன் தெற்காசிய பொருளாதாரத்தில் போட்டி போட வேண்டிய சூழலில் இருக்கிறோம்.ஊழல், மாவோயிஸ்ட்,பாகிஸ்தான் என்ற பெரும்பிரச்சினகளிலும் சாலை, கல்வி,சுகாதாரம் என்ற அடிப்படைக் கட்டமைப்புக்களிலும் பின் தங்கி 2020ல் இந்தியா வல்லரசு என்ற வார்த்தை இப்ப 2050க்கு பின் தள்ளப்பட்டு விட்டது.எனவே காங்கிரஸ் என்ற வாரிசு அரசியல்,பி.ஜே.பி என்ற மத அடிப்படைகளைக் கடந்து இந்தியா புதிய தலைமைகளையும்,கட்சி மாற்றங்களையும் கொண்டு வரவேண்டும்.அதனை கல்வி மேம்பாடு மட்டுமே செயல்படுத்தும்.

அரசியல் பதிவு போடக்கூடாதுன்னு பார்த்தாலும் இந்த மாதிரி செய்திகள் ஏதாவது கண்ணுல பட்டா .நான் என்ன செய்வேன்:) 

Tuesday, June 21, 2011

இரண்டாவது காந்தி மண்டேலாவா?ராஜபக்சேவா? - திரைப்பட விமர்சனம்.

நட்சத்திர வாரம்தான் முடிஞ்சிருச்சே அப்புறமென்ன அதே எஃபக்ட்டுன்னு யாரும் தப்பா நினைக்க வேண்டாம்.இது அவன் - இவன் திரை விமர்சனம்.சி.பி இந்த படத்திற்கான வசனங்களை அவரது பதிவில் விலா வாரியாக சொல்லியிருந்தார்.ஆனால் தலைப்பில் சொல்லிய வசனத்தை கோட்டை விட்டுட்டார்.எனவே பின்னூட்டமாகப் போட வேண்டிய முக்கியமான படத்தின் வசனத்தை பதிவின் தலைப்பாகப் போட்டு விட்டேன்.

பாலா படம்ன்னா எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும்.கதைக்களம் எந்த மாவட்டத்துக்கு சேர்ந்ததுன்னு தெரியாத ஒரு புனைவு.கதையின் கருவாக தெரிவது தெருக்கூத்தாடிகளின் கதையை சொல்ல முயன்ற மாதிரி தெரிகிறது.ஆனால் மாட்டுத்தொழுவத்திலிருந்து சட்ட விரோதமாக அடிமாடுகளாக கேரளாவுக்கு மாடுகள் கடத்தப் படுவதே கதை.பொருளாதார வளர்ச்சியில் மாடுகளின் எண்ணிக்கையும்,லாரி மூலமாகவே கடத்தப்படுவதும் இப்பொழுது அதிகரித்து விட்டதா எனத் தெரியவில்லை.ஆனால் கேரளாவிற்கும்,வால்பாறை போன்ற மலைப் பிரதேசங்களுக்கும் காங்கேயம்,பொள்ளாச்சி சந்தைகளில் நடையாகவே மாடுகளைக் கொண்டு சென்ற காலங்கள் உண்டு.எனவே பசுக்கள் கடத்தல் அதுவும் அடிமாட்டுக்கு கடத்தல் சட்ட விரோதம் என்ற அடிப்படையில் தமிழுக்குப் புதிய கதைக் களம்.

திரைப்படம் பார்ப்பதற்கு முன்பே தொலைக்காட்சி விளம்பரம் காணும்போது பிதாமகன் பார்க்கும் உணர்வு வந்தது.படம் பார்த்ததும் அது உறுதியாகி விட்டது.விஷாலுக்கு நடிப்பதற்கான நிறைய சந்தர்ப்பங்கள்.உடல் மொழி கமல்,விக்ரம் வரிசையில் விஷால்.அரங்கிலிருந்து திரும்பிப் போன சூர்யாவை மட்டுமல்ல படம் பார்க்கும் அனைவரையும் வியக்க வைக்கும் நடிப்பு,முகபாவம்.நாட்டிய நடனம்,கதகளி போன்ற கலைகளுக்குத் தேவையான அழுத்தமான முகபாவங்கள்.இனி மேல் அவன் - இவன் மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் என்று விஷால் சொன்னதாகப் படித்தேன்.விஷால் மறுபரிசீலனை செய்யலாம்ஆர்யாவும் கேலியும் கிண்டலுமான நடிப்பில் சோடை போகவில்லை.

விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி சொல்லனுமின்னா யதார்த்தமான குணநலன்கள் கொண்ட மக்கள் நிறைய இருக்கிறார்கள்.யாரையாவது தேர்ந்தெடுத்திருக்கலாம்.ஆனால் அதிலும் எதிர்ப்புக் குரல்கள் வருமென்று இயக்குநர் சமரசங்கள் செய்து கொண்டிருக்கலாம்.அம்பிகா!கதாநாயகி சான்ஸ் முடிஞ்சு போச்சுன்னா உடம்பை இப்படி உப்ப வைக்க வேண்டுமா?துறு துறுன்னு ஆர்யா கூட சுத்தும் பையனும்,பதவி உயர்வு ஏட்டய்யாவும்,ஊருக்குப் புதுசு இரண்டு பேரில் விஷாலின் போலிசு காதல்(லைலா கால்ஷீட் கிடைக்கலியா)பரவாயில்லை.யுவன் சங்கர் ராஜா பாடலை இன்னொரு முறை கேட்டாத்தான் கருத்து சொல்ல முடியும்.

மக்களும்,காவல்துறையும் படத்தில் இருக்கிற மாதிரி நட்பு நிலையில் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்!யதார்த்தம் என்ற பெயரில் வசனங்களில் கொஞ்சம் கவிச்சி வீசுகிறது.அய்னஸ் (Highness) மாதிரி ராஜ பரம்பரை கதாபாத்திரங்கள் இன்னும் தமிழகத்தில் எங்காவது உலவுகிறார்களா எனத் தெரியவில்லை.ஆனால் அந்த கதாபாத்திரத்தின் சாயலில் நிறைய சராசரி மனிதர்கள் இருக்கக்கூடும்.கதையின் படி நிர்வாணமாக நடிக்க வேண்டுமென்ற பாலாவின் எண்ணத்திற்கு துணிந்து நடித்ததும் இது மாதிரியான முழு ஆண் நிர்வாணம் தமிழ்ப் படத்திற்கு புதியது. மெல்லிய நகைச்சுவையோடு  போய்க்கொண்டிருந்த படத்தின் கதையை, வன்முறைக்காட்சியாக நிர்வாணமாய் திசை மாற்றுகிறது.

இறப்பின் வலியை குடியாகவும்,கும்மாளமாகவும் நகர்ப்புறங்களே முன்னிலைப் படுத்துவதைக் கண்டிருக்கிறேன்.தமிழ்க் கலாச்சாரத்தின் வேர்கள் எங்கோ ஒளிந்து கிடக்க தாரை,தப்பட்டை,பூ வண்டி போன்றவை பண்பாட்டின் இப்போதைய மாற்றங்கள் எனலாம்.பெண்களின் ஒப்பாரியே தமிழ் சாவின் பரம்பரை.

படைப்பவன் மனிதம் சார்ந்த தனது உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு தடைகள் உள்ள நிலையில் தலைப்பின் வசன இடைச்செறுகல்கள் மூலமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடும்.இதே வசனத்தை சீமான் தனது படத்துக்கு சொல்லியிருந்தால் படம் முக்கி முனகி வெளி வந்திருக்கும்.அல்லது வசனம் வெட்டுப்பட்டிருக்கும்.அந்த விதத்தில் இயக்குநர் பாலாவுக்கும்,கதை வசனகர்த்தாவுக்கும் இந்த வசனத்திற்காக ஒரு பாராட்டு.

Monday, June 20, 2011

தமிழ் மணத்திற்கு நன்றி

ஹேமா!நன்றி சொல்றதுக்குள்ளே வந்து நாற்காலியைப் பிடிச்சிட்டீங்க போல இருக்குதே!என்னோட பதவிக்காலம் 20ம் தேதி முடியத்தானே!நான் தமிழ்மணம் கவர்னர்களிடம் பிராது கொடுக்கப்போறேன்.

ஒரு வாரமாக நிறைய எழுதிவிட்டு ஒற்றை வரியில் தமிழ்மணத்துக்கு நன்றின்னு சொல்லி விட்டு டாட்டா காட்டிவிட்டால் நல்லாயிருக்காது:) எனவே வழக்கமாக வள வளக்கும் பாணியில் இன்னும் கொஞ்சம் சொல்லி விடுகிறேனே!

பொது ஊடகங்கள் செய்ய வேண்டிய பணியின் ஒரு பகுதியை தமிழ்மணம் செய்கிறது என்பதோடு பல பரிமாணங்களை தமிழ்மணம் திரட்டித் தருவது தமிழுக்கான அரும்பணி.இதனை எப்படி உபயோகித்துக்கொள்கிறோம் என்பதில் தமிழ் பதிவுலகின் எதிர்காலமிருக்கிறது.

பலரும் பதிவுலகில் தமது கருத்துக்களை வைக்கும் நிலை உருவாகும் போது பதிவுகள் எழுத்தாளன் என்ற தகுதியை தருவதை விட கருத்து பரிமாற்றம் என்ற நிலையையே எதிர்காலத்தில் தரும்.ஒரு வரம்புக்குள் இல்லாமல் எழுத்தின் பல பரிமாணங்களை பதிவுலகமே முன் வைக்கிறது என்பதோடு சமூகத்தின் தளங்களை சரியாக பிரதிபலிக்கும் ஊடகமாக பதிவுலகமே பல பரிமாணங்களிலே இது வரை பயணிக்கிறது.கூடவே கிள்ளி விடுவது,கீச்சிடுவது,பொது இடத்தில் இப்படியா குந்திக்குவ குரல் விடுவது என்று ஒரு சில விமர்சனங்கள் இருந்தாலும் கருத்து,உலக வலம்,நகைச்சுவை,சமையல்,அரசியல்,தொழில்நுட்பம்,உதவி,வேலைவாய்ப்புக்கள்,ஈழம் குறித்த அக்கறை,ஈழ விமர்சனம்,திரைப்படங்கள்,உடைக்கும் செய்திகள் என பல பரிமாணங்களை பதிவுலகின் திரட்டியாக தமிழ்மணம் செயல்படுகிறது.தமிழ் தொலைக்காட்சிகளும்,பத்திரிகைகளும் கண்ணாமூச்சி விளையாட உலக நிகழ்வுகளை கணநேரங்களில் முந்திக்கொண்டு வந்து தருவது இணையமும் இணையம் சார்ந்த பதிவுலகும் அதன் அடிநாதமாக விளங்கும் தமிழ்மணமே.

வாழ்க்கைச் சூழலில் தமிழே தொடாத நேரத்தையெல்லாம் நினைக்கும் போது தமிழ் மணமும், பதிவுலக நட்புக்களும் கடந்த சில வருடங்களின் வாழ்க்கையின் இனிமையான கணங்களின் ஒரு பகுதி என்ற மகிழ்ச்சியாகவே இருக்கிறது.கட்டுடைப்புக்களோடும்,சமூகஉணர்வோடும்,இலகுபடுத்திக் கொள்ளும் முகமாகவும் கற்றல் என்ற கடலை நீந்தும் இனிய அனுபவத்தை தரும் தமிழ்மணத்தின் நிர்வாக குழுவுக்கும், பதிவுலக நட்புக்களுக்கும் நன்றி.

Sunday, June 19, 2011

எழுத்தாளர் அருந்ததி ராயின் இலங்கை,காஷ்மீர் குறித்த ஒரு பார்வை.

அருந்ததி ராய்க்கு அறிமுகம் தேவை இல்லை.மக்கள் புரட்சிக்கு குரல் கொடுப்பவராகவும்,அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கைகளை விமர்சிப்பவர்களில் அருந்ததி ராயும்,நோம் சாம்ஸ்கியும் குறிப்பிடத்தக்கவர்கள் எனினும் தேசத்துரோக குற்றம் சாட்டப்படுமளவுக்கு நாகலாந்து,அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் போராடும் மாவோயிஸ்ட்டுகளையும் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதனால் புரட்சி சிந்தனையாளர்களும்,மனித உரிமை ஆர்வலர்களும் மதிக்கும் பெண்மணியாக அருந்ததி ராய் விளங்கினாலும் அரசு இயந்திரங்களே உலகை உருட்டிச் செல்கின்ற காரணத்தால் இடதுசாரி புதிய சிந்தனைவாதியான அருந்ததி ராய் விமர்சனத்துக்குரியவராகிறார் என்பதோடு இந்திய மத்திய அரசில் காங்கிரஸை விமர்சிக்கும் நிலையில் அருந்ததி ராயின் கருத்தான இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என்ற கருத்தை மனித உரிமை கழகங்களும்,தமிழர்களும் வரவேற்றாலும் நிச்சயம் இலங்கை ரஷ்யா,சீனர்களின் ஆதரவுக்குரலைக் கோரி மதில் மேல் பூனையான இந்தியாவையும் துணைக்கு அழைத்துக் கொள்ள நினைக்கும்.அருந்ததி ராயின் குரல் மட்டுமல்ல,இந்திய,உலக ஊடகங்களின் ஈழ ஆதரவு கருத்துக்கள் அடுத்த கட்ட நகர்வை நோக்கிச் செல்ல உதவும்.

இலண்டனில் வாழும் புலம்பெயர் தமிழ் ஊடகவியளாலர்கள் சார்பாக சவுத்ஹாலில்  பேசும் போது இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என்றும் இதற்கு உலகநாடுகள் அனுமதித்தன என்றும் குற்றம் சாட்டுகிறார்.மொத்த உலகமும் நியதிகளைப் பேசுவதற்கும் செயல்படுவதற்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன.நான் இலங்கைக்கு செல்லும் போது போரினால் அனைத்தும் மூடப்பட்டிருந்ததை பார்த்தேன்.பொருளாதார முன்னேற்றங்களூக்கான விழாக்கள் நிகழ்ந்த போதும் அங்கே நிகழ்ந்தது பற்றிய ஒரு நீண்ட மௌனமே தெரிந்தது.மேற்கத்திய நாடுகள்  எப்படி குறிப்பிட்ட நாடுகளை நீதியின் காரணங்களால் தாக்குவதும் சில நாடுகளின் போர்க்குற்றங்களை அனுமதிப்பதும் சிலவற்றை மறுப்பதும் ஏன் என்ற கேள்வியை எழுப்பினார்.(தமது எரிபொருள் தேவைக்காக வேண்டி லிபியாவில் ஆயுத புரட்சியாளர்களை ராணுவ உதவிகளுடன் ஆதரிப்பதும் அதுவே பஹ்ரைனில் மக்கள் குரலாக ஒலித்த போரட்டங்களை பஹ்ரைன் அரசு சவுதி அரேபிய ராணுவத்துணை கொண்டு அடக்கிய போது அமெரிக்காவும்,ஏனைய மேற்கத்திய நாடுகளும் வாய்மூடிகளாய் இருந்ததையும் கூறலாம்)

((A selective democracy is dancing to the tune of western vested interests).இதற்கு மாற்றாக வேறு நாடுகள் மட்டுமல்ல...ஐ.நா என்ற மொத்த பலத்தையும் சேர்த்தாலும் கூட மேற்கத்திய நாடுகளே இலுப்பை பூ சர்க்கரை மாதிரி தெரிவதால் வேறு மாற்று வழிகளும் கிடையாது))

இலங்கை இனப்படுகொலையை முன் மாதிரியாக வைத்துக்கொண்டு ஏனைய நாடுகளும் கூட இலங்கையினாலேயே இதனை நிகழ்த்த முடியுமென்றால் நம்மால் ஏன் இயலாது என்று அவர்கள் வெளியே சொல்லாவிட்டாலும் கூட அவ்வாறு சிந்திக்கிறார்கள்.மேலும் அவர் கூறும் போது மக்கள் ஆயுதங்களை தூக்கும் உரிமையிருக்கும் போது அவர்கள் ஆயுதம் தாங்க வேண்டிய காரணம் என்ன என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.இலங்கை ராணுவம் மருத்துவமனைகளில் குண்டுகளால் தாக்கினார்கள் என்றும் பாதுகாப்பு நிலப்பகுதியென்று கூறி மக்களை குண்டு போட்டு கொன்றொழித்தார்கள் என்றும் கோபப்பட்டார்.உலகம் இதனை அனுமதித்தது,இனி மேலும் இதனை அனுமதிக்கும் என்றார்.

ஆயுதம் தாங்குவதில் நம்பிக்கை கொண்டவர்கள் தவறுகள் எங்கே நிகழ்ந்தது என்று ஆராய்வதும் அவசியம்.அதிகார குவிப்பை ஒரு சிலரின் கையில் கொடுத்ததனாலா என்ற கேள்வியையும் எழுப்பினார்.

வருத்தம் தெரிவிப்பதோ அல்லது இரக்கப்படுவதிலோ அர்த்தமில்லை. ஏனென்றால் இது வெறும் வாய்ப் பேச்சே.உயிர்கள் மட்டும் அழிக்கப்படவில்லை.ஒரு ஆயுதப் போரின் வடிவமே அழிக்கப்பட்டுள்ளது.

ஈழம் என்ற பெயர் சொல்லி தங்கள் பதவிகளை உயர்த்திக் கொண்டவர்களை விமர்சித்தார்.தமிழக அரசியல்வாதிகளின் கவலைகள் கேலிக்குரியன வென்றும் தங்கள் பொருளாதார வளத்தையே முன்னிலைப்படுத்தினார்கள் என்றும் தமிழக அகதி முகாமில் மனிதர்கள் மிருகங்கள் மாதிரி நடத்தப்படுகிறார்கள் என்றும் இதனை தங்கள் தினசரி வாழ்க்கையில் அனுபவிக்கிறார்கள் என்றும் கூறினார்.நான் இந்த அகதி முகாம்களை சென்று பார்த்தேன்.தமிழர்களுக்காக குரல் எழுப்புகின்றவர்கள் எப்படி அகதிகளின் நிலைகளை கண்டு அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லையென்றார்.

ஈழத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதோடு காஷ்மீர், மணிப்பூர், நாகலாந்து மக்களின் போராட்டங்களின் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அருந்ததி ராயின் ஈழம் குறித்த பார்வைக்கான ஆதரவினால் மட்டுமே அருந்ததி ராயின் முழுக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியுமா என்றால் இல்லையென்றே கூறலாம்.மாவோயிஸ்டுகளுடனான ஆதிவாசிகளின் போராட்டங்களுக்கு அவர் ஆதரவு தருவதை வரவேற்க முடிந்தாலும் காஷ்மீர் பிரச்சினை முந்தைய பதிவில் பிரமிள் புத்தகத்தில் சீக்கியர்களின் தனிநாடுக்கோரிக்கை எப்படி வலுவிழப்பதற்கு காரணமாக இருக்கிறதோ அதே மாதிரி காஷ்மீர் பிரச்சினையும் வலுவிழக்க காரணங்கள் இருக்கின்றன.காஷ்மீருக்கு ஒரு நிலை ஈழத்திற்கு இன்னொரு தராசா என்று சிலர் விவாதிக்கும் முன் இந்திய மாநிலங்களில் பஞ்சாப்பிற்கு எப்படி இந்தியாவின் அத்தனை வாய்ப்புக்களும் உள்ளதோ அதனை விட அதிக சலுகைகள் மற்ற எந்த மாநிலத்துக்கும் இல்லாத தனி உரிமைகள் காஷ்மீருக்கு உண்டு.எனவே இந்தியாவுக்கும் காஷ்மீர் சுதந்திரத்துக்குமிடையேயான போராட்டமல்ல.மாறாக இந்திய ராணுவத்துக்கும் மத அடிப்படைவாதிகளோடு, பாகிஸ்தானின் சுயலாபங்களுடன் சேர்ந்து நிகழும் கயிறு இழுக்கும் போட்டி.காஷ்மீர் பிரச்சினை.

ராணுவத் தலையீடு காரணமாக மக்களின் பொது வாழ்க்கை பாழடைந்ததோடு ராணுவ அத்துமீறல்களும் கூட காஷ்மீர் மக்களை இந்தியாவிலிருந்து தனியே பார்க்கும் மனோபாவத்தை வளர்த்துள்ளது என்பதையும் இதனை நிவர்த்தி செய்ய இந்தியா முன்வருவது நல்லது.இதனை விட காஷ்மீர் பிரச்சினை வலுத்ததன் காரணம் பாகிஸ்தான் ஆதரவோடு ஹென்றி கிஸ்ஸிங்கர் அமெரிக்க வெளியுறவுத்துறையை கையாண்ட காலம் தொட்டு தூபம் போடப்பட்டு 9/11 பின்பான வெளியுறவுக்கொள்கை மாற்றங்களில் காஷ்மீர் பிரச்சினை பின் தள்ளப்பட்டுள்ளது.அதே போல் இந்திய முஸ்லீம்களுக்கு உள்ள சம உரிமைகளுக்கும் மேலாக காஷ்மீர் மக்களுக்கு உள்ளது.இதே அளவுகோலில் இலங்கையில் வாழும் முஸ்லீம்களுக்கும் சம உரிமைகள் உள்ளதா எனபதையும் மத ரீதியில் பிரச்சினைகளை அணுகுபவர்கள் சிந்திக்க வேண்டும்.எனவே காஷ்மீர் பிரச்சினையையும்,ஈழப்போராட்டத்தையும் வேறு வேறு அளவுகோலில் காண வேண்டியது அவசியம்.ஒரு வேளை இந்தியாவால் ஈழப்பிரச்சினையை தீர்க்க முடியாது போனால் மேற்கத்திய நாடுகளில் முக்கியமாக பிரிட்டனின் உதவியோடு இதற்கான தீர்வையும் நோக்க வேண்டியது அவசியம்.பூகோள அமைப்பில் இந்தியாவின் செயற்பாடுகளுக்கே முன்னுரிமை தரலாம்.அதுவே தமிழகம் சார்ந்த தீர்வுக்கு வழி வகுக்கும்.

பின்னூட்டங்களைப் படிக்கும் போது மீண்டும் புதிய சிந்தனைகள் நிறைய உருவாகின்றன.பிரமிள் குறிப்பிட்ட அகிம்சை பற்றியும்,தீபன் உண்ணாவிரதம் பற்றியெல்லாம் சொல்ல இயலாமல் போய் விட்டது.எப்பவோ நிகழ்ந்த வரலாறாக எல்லாளன்,துட்ட கைமுனு பற்றியெல்லாம் இப்பொழுதும் நாம் பேசுவதற்கும்,சிந்திப்பதற்கும் வரலாறு அதன் போக்கிலேயே வாய் மொழியாக, எழுத்தாணி ஓலைச்சுவடியாக காலம் கடந்து வந்திருக்கிறது. மகாபாரதத்திற்கும்,இராமயாணத்திற்கும் இணையான தமிழ்க் காவிய கால கட்டங்களாக ஈழப்போராட்டம் தமிழர்கள்,சிங்களவர்கள் என்ற இரு இனம் மொழியின் அடிப்படையில் பல திசைகளிலும் பயணித்திருக்கிறது. சம உரிமை மறுப்பு,சுதந்திர தாகம்,மக்கள்வாழ்க்கை,போராட்டம், போர்ப்பரணி, பெண்போராளிகளின் வீரம், அகதிகள், பின்னடைவுகள், அவநம்பிக்கை, குழு மனப்பான்மை, துரோகம் இவைகளையும் தாண்டி பாதுகாப்பு, நிர்வாகம், ஒழுங்கு, நீதி, அரசியல் என்ற ஆட்சி அமைப்பை நிர்வகித்த திறன்,தமிழின் வளர்ச்சிக்கு ஈழத்தமிழர்களின் பங்காக கதை, கட்டுரை, கவிதை, உரையாடல் என இலக்கிய பங்கீடு புலம் பெயர்வு,சென்ற இடத்தில் தமது கலாச்சார அடையாளங்களைக் காண்பித்தமை,விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்றவாறு தம்மை மாற்றி அமைத்துக் கொண்ட விதம் என வரலாற்றை எழுதி வைக்க ஆயிரமாயிரமுண்டு. தமிழகம்,புலம்பெயர்ந்த நாடுகள்,ஈழத்து மக்கள் என்ற மூன்றும் இணைந்த நிலையிலேயே  மக்களின் வாழ்விற்கான தீர்வுகளையும், சுதந்திரத்தையும் கொண்டு வர முடியும்.இணையமும்,21ம் நூற்றாண்டும் இனி வ்ரும் புதிய தலைமுறைக்கு சொந்தமாகட்டும்,மனிதநேயம் மேலோங்கட்டும் என நாளை நன்றி கூறி முடிக்கிறேன்.

Saturday, June 18, 2011

ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை - பிரமிள் மற்றும் பொன்னியின் செல்வனும்,EXODUS

கருணாநிதி,ஜெயலலிதா,தமிழர்கள்,சிங்களவர்கள் அனைவரும் காணவேண்டிய வரலாற்று உண்மைகள்
சென்ற பதிவின் இறுதியில் பதிவர் ரதி எஸ்.ஜே.வி.செல்வநாயகம் காலத்திற்கும் முன்பும் இலங்கை பற்றியும் ஈழ விடுதலை பற்றியும் சொல்லியிருக்க வேண்டுமென்றும் சொன்னார்.பதிவுகளைப் படித்து விட்டு பதிவர் வானம்பாடிகள் பாலா ”ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை - பிரமிள்” என்ற pdf புத்தகத்தை படித்தீர்களா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.இவற்றோடு பதிவர் தருமி ”Exodus by Leon Uris" என்ற ஆங்கில நாவலை அவரது பதிவில் முன்னொரு முறை குறிப்பிட்டிருந்ததும் நினைவுக்கு வந்தது. என்றும் சொல்லியிருந்தேன்.தொடுப்புக்கான தேடலில் பொன்னியின் செல்வனும் EXODUS-ம் என்ற தலைப்பில் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை - பிரமிள் என்ற புத்தகம் 36 பக்கங்களைக் கொண்டது.புத்தக வாசிப்புக்கள் குறைந்த போன இந்த கால கட்டத்தில் 1984ல் “ இலங்கை இன்று,போர்க்காலத்தின் தீவிர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.சிங்களவரின் மனிதாய சக்திகளும் இலங்கை தமிழர்களின் மனிதார்த்தங்களும் இந்த தீவிர நிலையை அறிவுசார்ந்த தளத்துக்குக் கொண்டு செல்ல முடியாதவாறு நிலமை ஆக்கப்பட்டு விட்டது.இந்நிலை தவிர்க்க முடியாதவாறு நிகழ்ந்த ஒன்றுதானா?இதற்கு இரு பிரிவினருள் ஒருவர் மட்டும்தான் பொறுப்பாளியா? இத்தகைய கேள்விகளின் சலனங்களைக்கூட எழ முடியாத தீவிர நிலைதான் இன்றுள்ளது என உணர்கிற போதே இக்கேள்விகள் கேட்டாக வேண்டியவை என்பதையும் நாம் கண்டு கொள்வது மிக அவசியம்” என்ற முகவுரையுடன் இலங்கையின் ஆதி அந்தமாக துவக்க காலம் முதல் தமிழர்கள் யார், சிங்களவர்கள் யார்,மகாவம்சத்தின் திரிபுகள் என துவங்கி  போர்ச்சுகீசியர்,டச்சுக்காரர்கள்,ஆங்கிலேயர் வருகையென சொல்லி செல்வநாயகம் பற்றிய பகுதி 2ல் குறிப்பிட்டது வரை படிக்கும் போது எழுத்து நடையும்,வரலாற்று உண்மைகளும் 1984லிருந்து இன்றைய 2011 ஜூன் மாதம் 18ம் தேதி வரை மாறாமல் போனது சோகத்துக்குரியது.
 கீழே வரும் வரிகளிலிருந்து துவங்கி -

’இலங்கைக்குப் பிழைக்குப் போன தமிழர்கள்’ இது இந்தியாவில் மெத்தனமான ஒரு சாராரின் அபிப்பிராயம்.முதலாவதாக இலங்கைவாழ் தமிழினம் இலங்கைக்குப் பிழைக்கப் போன ஒரு இனமல்ல.இலங்கையிலுள்ள ‘இலங்கைத் தமிழர்கள்’ விசயத்தில் மட்டுமல்லாமல் அங்குள்ள ’இந்திய வம்சாவழித் தமிழர்கள்’ விசயத்திலும் இது பொருந்தும்.இலங்கைத் தமிழர்களுக்கு அவர்கள் வாழும் பகுதிகள் மீது பூர்வீக உரிமை உண்டு.இலங்கையில் வழங்கும் தமிழ் இடப்பெயர்களின் தொன்மை முதலியன இதற்கு சாட்சியமாகும்.அங்குள்ள சிங்களவர்களையும் விட தொன்மையான தொடர்புகளுக்கு சாட்சியங்கள் இவை.

அடுத்து இந்திய வம்சாவழித் தமிழர்கள் இலங்கைக்குப் ‘பிழைக்கப் போனவர்கள்’ அல்ல.இலங்கையின் சிங்கள மலையகங்களிலிருந்த காபி தோட்டங்களில் ஒரு கொடுமையான அடிமை முறையிலே உழைக்க பிரிட்டிஷாரால் 1840க்கும் 1850க்குமிடையில் ஏறத்தாழ பலவந்தமாக திருநெல்வேலி,மதுரை ஜில்லாக்களிலிருந்து ஜனத்தொகை கடத்தல் (Mass Deportation) செய்யப்பட்ட பாமரத் தமிழர்கள் இவர்கள்.இவர்களை இலங்கைக்குப் பிழைக்கப்போனதாக கூறுவது ஒரு ஆதிக்கமுறையின் சரித்திர சாட்சியம் வாய்ந்த கொடுரத்தைப் பற்றிக் கண்மூடித்தனமாகப் பேசும் மனோபாவமாகும்;இலங்கைக்குப் ’பிழைக்கபோன’ இந்தியர்கள் இருக்கிறார்கள்.இவர்கள் எந்தளவு சதவிகிதத்திலும் அடங்குவதில்லை.இவர்கள் வசதியுள்ள தொழிலதிபர்களிலிருந்து கள்ளத்தோணியில் சென்று பிடிபட்டு திருப்பி அனுப்பபடும் வகையினர் வரை உள்ளவர்கள்.இவர்கள் ஒன்றும் மலையகங்களிலுள்ள தோட்டங்களில் உழைத்து தங்கள் உழைப்பை இலங்கையில் அன்றிருந்து சுரண்டிய பிரிட்டிஷாருக்கும் பின்பு இலங்கை அரசின் கஜானாவுக்கு தானமாக வழங்கியவர்களல்ல.’பிழைக்கப் போன’ விசயம் இவ்விதம் அடிபட்டால் அடுத்து இலங்கைத் தமிழர்களின் ‘தனி நாட்டுக் கோரிக்கை’

1948ல் இலங்கைக்கு பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து சிங்களப் பெரும்பான்மையினர் இலங்கைத் தமிழர்களை இலங்கையினுள்ளே தனிமைப்படுத்த துவங்கினர்.இது தமிழர்களின் ஜீவாதார உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக ராஜீயத் தளத்தில் பறிக்கும் முறையில் ஆரம்பித்து தமிழ்க்குடிமக்கள் மீது தாக்குதல் செய்கிற முறை வரை செயல்படுத்தப் பட்டு வந்துள்ளது.இதன் சரித்திர விளைவே தனி நாட்டுக் கோரிக்கை.ஒரு குறிப்பிட்ட அரசியல் திருப்பு முனையிலிருந்து தொடர்ந்து,இலங்கை அரசே தனது ராஜீயக் கருவிகளான போலிஸ்-ராணுவம் ஆகியவற்றின் மூலம் தமிழ் பொதுமக்களை தாக்க ஆரம்பித்திருக்கிறது.(இது இரு நாட்களுக்கு முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் இல்லாத ஒன்று கூடல் வரை இன்னும் தொடர்கிறது)பதவிகளுக்கும்,கல்விக் கோட்டங்களுக்கும் தமிழர்கள் செல்வதற்கு முட்டுக்கட்டையிடுதல்,தமிழர்கள் வாழும் பகுதியிலேயே அவர்களை சிறுபான்மையாக்கும் வகையில் சிங்களவரைக் குடியேற்றுதல் முதலிய தந்திரங்களில் ஆரம்பித்த அடக்குமுறை போலிஸையும்,ராணுவத்தையுமே தமிழருக்கு எதிராகப் பிரயோகிக்கத் துவங்குகிறது.இது சிங்கள அரசின் மூலமே தமிழர்களைத் தனிமைப்படுத்திய தேசியப் பிளவு.இதன் அரசியல் பிரக்ஞை வடிவமே தமிழரின் தனி நாட்டுக் கொள்கை.இக்கோரிக்கையின் நியாயம்,தமிழரைத் தனிமைப் படுத்திய சிங்கள அரசாங்கங்க இயக்கங்களிடமே(JVP யின் சரித்திரம்) ஜனிக்கிறது.எனவே தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை எளிமையாக விமர்சிப்பது குருட்டுத்தனமாகும்”

என்று சொல்லி அந்த காலகட்டத்தில் சீக்கியர்களின் தனிநாட்டுக் கொள்கைக்கும் தமிழர்களின் தனிநாட்டுக் கொள்கைக்குமுடைய வித்தியாசங்களை சொல்லி ”சிங்கள,தமிழ் இனங்களை பிரிப்பது மொழி மட்டுமல்ல சிங்கள மொழியின் ஆரியச் சாயல் அவர்களை ஆரியர்களாக்கி,திராவிட மொழி பேசும் தமிழர்களை இனரீதியாகப் பிரித்து விடுகிறது.இந்தப் பிரிவினையை வலுவிழக்க வைக்கிற இந்து மதரீதியான ஆரிய-திராவிட உடன்பாடு இந்தியாவில் உண்டு.ஆனால் சிங்களவர்கள் பௌத்தர்கள்,அதிலும் ஹிந்துக்களால் இந்தியாவில் கொடுமைக்கு ஆட்படுத்தப் பட்ட பிக்ஷு பரம்பரை ஒன்று இலங்கைக்குப் போய் ஹிந்துக்களுக்கு எதிரான ஒரு ஆழ்ந்த பகைமையை பௌத்தத்துடன் சேர்த்து சிங்களவருக்குப்புகட்டியுள்ளது.இப்பகைமை விவேகநந்தரது சமகாலத்து இலங்கை பிக்ஷுவான அநகாரிக தர்மபாலாவின் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் சாட்சியம் பெறுகிறது.இது இலங்கையின் பிரிவினையுணர்வுக்கு மிகவும் தனித்த முகத்தை தருகிறது.இந்தியாவுக்கும்,இலங்கைக்குமிடையே உள்ள இந்த வேறுபாடு முக்கியமானதாகும்”

”1840க்கும் 1850க்குமிடையில் பிரிட்டிஷ் வர்த்தக அரசினால் தமிழகத்திலிருந்து இலங்கையின் சிங்களப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட சுமார் 10 லட்சம் பாமரத் தமிழ் தொழிலாள வர்க்கத்துடன் இலங்கைத் தமிழினம் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதில்லை.இது எல்லாத் தரப்பினரும்அறிந்த உண்மை என்பதுடன் முக்ய கவனத்துக்கும் உரியது.ஜாதிய உள்ப்பிரிவு,பிராந்திய மனோபாவம் என்ற குணங்களை விட இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழருக்கும் இலங்கைத் தமிழருக்குமிடையே இருந்த பிரிவினை முக்கியமானது.இன்று விஸ்வரூபமெடுத்துள்ள பிரச்னைக்கு மனிதாபிமானமற்ற இந்த பிரிவினையுணர்வு ஒரு வித்து.ஜாதிய,பிராந்தியப் பிரிவினை சிங்கள மகாஜனத்திடம் கூட உள்ள ஒன்றுதான்.செய்தொழில்,குடிமை ஆகியவற்றால் நிர்ணயிக்கப்பட்ட சிங்கள ஜாதியப் பகுப்புக்கு சிங்களவரது பௌத்தம் காரியாலாய ரீதியாக முத்திரை வழங்கியதில்லை.ஆனால் ஒருவன் புத்தபிக்ஷுவாக மாறிய நிலையில் கூட அவனது ஜாதிய மூலகம் கவனிக்கப்படுகிறது.இது வியப்புக்குரிய ஒன்றல்ல;ஏனெனில் சிங்களவர்கள் இனரீதியாகவும்,மொழி ரீதியாகவும் பூர்வீகத்தில் ஒரு ஹிந்து மரபைச் சார்ந்தவர்களேயாவார்கள்.இவர்கள் இந்தியாவின் வங்கப்பகுதியிலிருந்து அல்லது வடபுறப்பகுதியிலிருந்து ஒரு சரித்திரகதியினால் கடத்தப்பட்டவர்களாகச் சொல்லப்படுகிறது.இதைப் புராண ரீதியில் பதிவு செய்துள்ளது சிங்களவரின் சரித்திர இதிகாசமான ’மகாவம்ச’ என்ற பாளி நூல்.இந்தூல் வங்கத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட விஜயன் என்ற இளவரசனையும் அவனது இருநூறு தோழர்களையும் இந்த சரித்திர கதிக்கு ஆட்பட்ட மூதாதைகளாக இனம் காட்ட முயற்சிக்கிறது.”

இதனைத் தொடர்ந்து ஆய்வுரீதியான காளிவழிபாடாக சிம்மம்,மற்றும் விஜயனுடன்,அவனது தோழர்களும் சேர்ந்து 201 பேர் எனற தகவல்கள், ’சிங்கத்தின் பரம்பரை’ என்பதே ’சிங்கள’ என்ற இனக்குடிப் பெயராகவும் மொழியாகவும் ஆகிறது என்றும்,கிரேக்க கதைகளின் திரிபுகள் மகாவம்சத்தில் உள்ளன என்பது பற்றிய புராணக்கதைகள் சொல்லி மிக முக்கியமான குமரிக்கண்டத்தின் தமிழகமும்,இலங்கையும் இணைந்திருந்திருக்கலாமென்ற சாத்தியத்தையும்,சிங்களவர்களுக்கும்,கேரளத்துக்காரர்களுக்குமுடைய உடை போன்ற ஒற்றுமை கூறி,கேரளத்துக்காரகள் திராவிடர்கள் என்பதற்கு அவர்களது காவ்ய மொழியான இன்றைக்கும் தமிழ்மொழிதான் என்று சொல்லி சொற்களின் தொடர்புகளையெல்லாம் சுட்டிக்காட்டி தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்ற பெரும் வரலாற்று உண்மைகளையெல்லாம் சொல்லி சேர,சோழ,பாண்டியர் காலங்களைத் தொட்டு மீண்டும் SWRD பண்டார 1955ல் உபயோகித்த 24 மணிநேரத்தில் சிங்கள மொழி மட்டுமே அரச மொழி என்று கூறி அரசியல் சாசன நிராகரிப்பு செய்ததை உணர்ந்த தமிழ்த் தலைமை ஜூன் 5ம் தேதி,1956ல் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு முன் சாத்வீக ரீதியில் ஒரு எதிர்ப்பைக் காட்டிற்று.இது காந்தியின் அகிம்சா முறையாகப் பிரகடனமும் செய்யப்பட்டது.(இதனுடன் மீண்டும் முன்பு சொல்லிய பதிவின் பகுதி 2ம் தொடர்பு படுத்தினால் இதுவரை சொல்லியவைகளின் மெல்லியக் கோடுகள் மனதில் படியும்)

”1948 வரை இலங்கையை ஆண்ட பிரிட்டிஷ் அரசு தமிழர்களுக்கு இயற்கையாக கிடைத்திருக்க வேண்டிய பிரஜா உரிமைக்கான அஸ்த்திவாரங்களுக்கே இடம் விடவில்லை.சுமார் 100 வருசங்கள் இந்தியாவில் வாழ்ந்தது மட்டுமல்லாமல் இலங்கைக்காகவே உழைத்த இவர்களுக்குச் செய்யப்பட்ட அநீதி பிரிட்டிஷ் அரசியல் சாசனத்திற்கே விரோதமானதாகும்” என்ற வரிகள் எழுத்தாணி வாசகங்கள்.

இதனைத் தொடர்ந்த இந்திய அரசியலின் தலையீடும் IPKF ராணுவ காலம் துவங்கி தமிழகம் சார்ந்தோ அல்லது இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்ந்த தமிழர்களையோ கலந்து ஆலோசிக்காமல் சென்ற வாரம் மேனன்,நிருபமா ராவ் குழுவினரின் இலங்கை அரசு தரப்புடன் மட்டும் ஆலோசிக்கும் செயல்பாடுகள் இந்தியாவும் இன்னும் பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லையென்பதையே உணர்த்துகிறது.   
இதன் தரவுகளை ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை - பிரமிள் என குறிப்பிட்டு mediafire.comல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.இயலாதவர்கள் பின்னூட்டத்திலோ அல்லது எனது தனிமெயில் rajanatcbe ஜிமெயிலுக்கு தகவல் தந்தால் pdf வடிவமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

மூத்த பதிவர் தருமியின் வாசிப்புக்கள் பற்றியும் விவாத களங்களையும் அவரைத் தொடர்புவர்களுக்கு புரிந்த ஒன்றே.அதில் ஒன்று Exodus by Leon Uris என்ற நாவல் மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டது.

”இஸ்ரேல் என்ற நாடு உருவான நிகழ்வை வைத்து, உண்மையான மனிதர்களைக் கதை மாந்தர்களாக வைத்து புதினமாக எழுதப்பட்ட Exodus வெவ்வேறு இடங்களில் கண்ணீரை வரவைத்த வரலாற்று நவீனம். ஹிட்லரின் வெஞ்சினமும் யூதர்கள் ghetto-க்களில் பட்ட வேதனைகளும், kibbutz-களில் யூத இளைஞர்களின் வாழ்க்கையும் எல்லாமே கற்பனை என்ற சுவடே இல்லாதபடி நேரில் கண்முன் விரிவதுபோல் நகரும் கதை. இஸ்ரேல் என்றொரு நாடு உருவாவதற்கு U.N.O.- வில் ஓட்டெடுப்பு நடந்த பகுதியை வாசிக்கும்போது மூச்சை இறுக்கிப் பிடித்துதான் வாசிக்க வேண்டியதிருந்தது. ஐரோப்பிய நாடுகள் பெரும்பான்மையாக ஆதரித்து ஓட்டிட இந்தியாவும் இன்னும் சில கீழ்த்திசை நாடுகளும் எதிர்த்து ஓட்டுப் போட,பத்து நாடுகள் ஓட்டு போடாமல் "நடுநிலை" வகிக்க, 33:10 என்ற கணக்கில் இஸ்ரேல் ஒரு புதிய நாடாக அங்கீகரிக்கப் படும்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது.” என்ற அவரது வரிகள் இன்றும் ஐ.நாவின் குணங்கள்,தன்மைகள் மாறாமலே பயணிக்கிறதென்பதை உணர்த்துகிறது.EXODUS ஆங்கில நாவல் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை - பிரமிள், மற்றும் EXODUS இரு புத்தகங்களையும் உலக தமிழர்கள் அனைவரும் படிப்பதோடு கருணாநிதியும், ஜெயலலிதாவும் கட்டாயம் படிக்க வேண்டுமென்று சிபாரிசும் செய்கிறேன்.இந்த வரிகளை சொல்லும் போது அருந்ததி ராய் சமீபத்தில் லண்டன் புலம் பெயர் தமிழர்களுடன் பேசிய குறிப்புகளையும் குறிப்பிட வேண்டியதாகிறது.அதனை அடுத்த பதிவில் காண்போம்.   

Friday, June 17, 2011

ஈழ மக்களுக்கும் மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு - பகுதி 5

மக்கள் சக்தியின் விழிப்புணர்வு
 
மக்கள் சக்தி, மனிதநேயம்கொண்டவர்கள், தமிழ் உணர்வாளர்கள், இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள், ஊடகவியளாளர்கள், திரைப்படத்துறையினர், பொருளாதார மேம்பாடு கொண்டவர்கள், அரசியல்வாதிகள், கட்சி சார்ந்தவர்கள், வழக்கறிஞர்கள்,  அரசு ஊழியர்கள், பதிவர்கள், சித்தாந்தவாதிகள், வடகிழக்கில் பிறந்தவர்கள், தன்னையும் மீறிய பொது நல உணர்வு கொண்டவர்கள், இளைய தலைமுறையினர், சிங்கள இனத்தின் சமவாழ்வு மனித நேயம் மிக்கவர்கள், (ஒரு இனம் இன்னொரு இன மக்களை மதிக்கும் நிலை உருவாகாத நிலை வரை பிரச்சினைகளை நீட்டிக்கொண்டு போவதே நிகழும்.) என இன்னும் பல நிலைகளிலும், இணையத்திலும் வலம் வருபவர்களுக்கு  சமூக கடமைகளும், பொறுப்புகளும், சுமைகளும் உள்ளன.வெறுமனே விரக்தி கொள்வதிலோ விமர்சனம் மட்டுமே செய்வது என்ற நிலை ஈழ மக்களை இன்னும் இரண்டாம் தர குடிமக்களாகவே விட்டுச் செல்லும் நிலையை உருவாக்கும் என்பதோடு எந்த தீர்வுக்குமான பாதையையும் காட்டாது என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளின் இலங்கை அரசின் செயற்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன
 
நாடு கடந்த தமிழீழ அரசும் புலம் பெயர்ந்த தமிழர்களும்

புலம் பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதித்துவத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசை மேலும் வலுப்படுத்துவது தமிழீழம் மட்டுமெ குறிக்கோள் எனும்பட்சத்தில் போராட்டத்தின் காலங்களும்,அதன் வடிவங்களும் பல பரிமாணங்களில் உருவாகும்.அதற்கான கால வரையறை கிடையாது.மிக கடினமான ஒன்று.ஆனால் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சுகமும்,அங்கீகரிக்கப்பட்ட நாடும் நிரந்தரமானது.

 வட கிழக்கு நிலங்களின் தமிழர்களின் வலிமையும், பலவீனமும் எனலாம்.வலிமையெனும் போது தமிழீழ தாகம் பெரும் பான்மையானவர்களிடம் காணப்படுவதும்,பலவீனம் எனும் போது தாம் அடைய வேண்டிய எல்லைகள் குறித்த பார்வையில்லாமல் தமக்குள் சண்டையிட்டுக்கொள்வதும்,எதிர் விமர்சனங்கள் செய்வதும்.புலம் பெயர்ந்த வாழ்க்கையின் சுகங்கள் என்ற சிறு சலுகைகளை விட சுமைகளையும் அதிகமாகவே சுமப்பவர்களாகவும் அதே நேரத்தில் தமது மக்கள் குறித்த கவலை கொண்டவர்களாயும் விளங்குவது பலமென்று கொண்டாலும் பொன்,கோயில்,உடைகள் போன்றவற்றின் அதி ஆர்வங்களை இனிமேலாவது மக்கள் நலன்களுக்கு செலவழிக்கலாம். குழந்தைகள், தத்தெடுத்தல், விதவைகளின் மறுவாழ்வு,ஊனமுற்றோருக்கு வாழ்வாதாரம்,காணிகள்,கல்வி என நிறைய பொறுப்புக்கள் இருக்கின்றன.

இரு இனங்களின் கலவரங்களின்,போர்களின் அடிப்படையில் ஒருமித்த சூடான் நாடு வட சூடான்,தென் சூடான் எனவும் பிரிந்து தென் சூடான் நாடு முதலாவது நாடாக நாடுகடந்த தமிழீழ அரசை அங்கீகரித்திருக்கிறது.நாடு கடந்த தமிழீழ அரசை வலுப்படுத்தவும்,இன்னும் பல நாடுகளின் அங்கீகாரத்தையும் தேட வேண்டியது அவசியம்.இந்த பாரத்தை புலம்பெயர் தமிழர்களே சுமக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.தற்போதைய நிலையில் தமிழக அரசின் ஆதரவுக்குரல்களை நாடுகடந்த தமிழீழ அரசு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அணுக முயற்சி செய்யலாம்.அதன் முதல் முயற்சியாக தமிழகத்தின் மேற்பார்வையில் வட-கிழக்கு மக்களுக்கு உதவிகள் நேரடியாகப்போய் சேர்வதற்கும் அதற்கான தடையாக இலங்கை அரசோ ராணுவமோ இல்லாத சூழலை உருவாக்குவதும் அவசியம்.தற்போதைய நிலையில் இந்தியாவின் பொருளாத உதவிகள் நிகழ்ந்தாலும் அவை நேரடியாக வட கிழக்கு தமிழ் மக்களுக்குப் போய்ச் சேராமல் சிங்கள மக்களின் நலன் கருதிய செயல்களுக்காய் பயன்படுகிறது.

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க முயற்சி செய்வது.ஒரு இயக்கமே வேரறிந்து போன பின் தடையென்ற பெயரில் மக்களை மட்டும் தனிமைப்படுத்துவதில் அர்த்தம் என்ன இருக்கிறது?மக்கள் இயல்பு வாழ்க்கைக்கும் உலக தொடர்புகளுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தடைகள் நீக்குவது அவசியமான ஒன்று.இதனால் அகதிகள் என்ற பெயரில் தனிமைப்படுத்தப்படும் மக்களும் தமிழகத்தின் ஒரு அங்கம் என்ற நிலையில் கல்வி,வேலைவாய்ப்புக்கள் உருவாகும்.இதற்கு வை.கோவின் நீதிமன்ற வழக்குப் போராட்டம் வெற்றி பெற வேண்டும்.

பத்திரிகைகள்,தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழ் இணையங்கள்,சேனல்4, இங்கிலாந்து பாராளுமன்றத்தில்,அமெரிக்காவில் சட்டத்துறையில்,மனித உரிமைக்குழுக்களில் ஆதரவான நிறைய பெயர்கள் தென்படுகின்றன.இவர்களின் தார்மீக ஆதரவு வெளிப்படையாகவே தெரிகிறது. இந்தியாவில் அருந்ததி ராய் தவிர வேறு இண்டலக்சுவல் குரல்கள் எதுவும் ஈழ ஆதரவாய் புலப்பட வில்லை.இந்திய முன்ணணி பத்திரிகை,தொலைக்காட்சி ஊடகங்களை அணுகுவது அவசியம்.குறைந்த பட்சம் ஆங்கில பின்னுட்டங்களை வெளிப்படுத்தலாம்.

கையெழுத்து இயக்கம்
கையெழுத்து இயக்கத்தை இன்னும் வலுப்படுத்தி மொத்த ஆதரவின் உண்மையான வலுவை அடையாளம் காணுதல்.


தமிழக அரசியல் ஆதரவு
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் தமது சுயநலங்கள் சார்ந்த ஈழ மக்களுக்கான குரல் எழுப்பவே செய்கின்றன எனபதாலும் பாராளுமன்றத் தேர்தலையும்,சட்டசபை தேர்தலையும் தனித்தே கட்சி நிலை சார்ந்தே குரல் கொடுத்த காரணத்தால் ஈழப்பிரச்சினையைப் பொறுத்த வரை தமிழகம் வலுவற்ற நிலையிலே இருக்கிறது.வாக்கு நலன் கலந்த ஈழ ஆதரவாக இருப்பதால் தனித்து குரல் கொடுத்தாலும் பரவாயில்லை.ஈழப்போராட்டம் என்ற ஒற்றைக்குறிக்கோளில் மட்டும் தேவைப்பட்ட போது யாராவது ஒருவரது தலைமையின் கீழ் கட்சியின் தலைவர்கள் ஒன்றாகும் சாத்தியத்தை உருவாக்குவது.இதற்கான முழு தகுதியும ஈழமக்களுக்காக இன்னும் அதிக வலுவாக குரல் கொடுக்கவும்,செயல்படுத்தவும் முன்னெடுத்து செல்வதும் யார் என்பது பெரும் கேள்வி.இதன் காரணம் கொண்டே பிரபாகரனின் தனித்துவம் இன்னும் வெளிச்சத்தோடு தென்படுகின்றது.மேலும் அதிகார ஒன்று குவிப்பின் காரணமாகவே ஒரு இயக்கத்தின் நோக்கங்கள் முடிவுக்கு வந்து விட்டதென்பதால் ஒரே அமைப்பு என்ற ரீதியில் போராடுவதை நசுக்க இந்தியாவோ அல்லது இலங்கையோ முயற்சி செய்யுமென்பதால் அவரவர் கட்சி சார்ந்த கொள்கைகளோடு ஆனால் ஈழ மக்களின் நலன் கருதி ஆதரவு தெரிவிப்பது நல்லதே என்ற இன்னுமொரு பரிமாணத்தையும் நோக்குவோம்.தமிழக தேர்தலின் முடிவில் சில புதிய மாற்றங்கள் தென்படுகின்றன.எனவே கட்சிகளின் கொள்கைகள் என்பவை உள்நாட்டுக்கொள்கை மாதிரியும் ஈழம் தமிழ்நாட்டு அரசியலின் வெளிநாட்டுக்கொள்கை என்ற அடிப்படையில் கலைஞர் கருணாநிதி,ஸ்டாலின்,விஜயகாந்த்,திருமாவளவன்,ராமதாஸ் போன்ற அரசியல் தலைவர்களும் வை.கோ,சீமான், திருமுருகன், தா.பாண்டியன், நெடுமாறன் போன்ற ஈழ உணர்வாளர்களும் Last but not least ஆட்சி பீடமும், அதிகாரமுமே நினைத்தவைகளை செயல்படுத்துமென்பதால் முதல்வர் ஜெயலலிதாவும் செயல்பட வேண்டும்.கட்சி அடிப்படையில் என்னவோ சொல்லுங்கள் செய்யுங்கள்!ஆனால் தமிழீழத்தின் உயிர் நாடியை ஆதரியுங்கள்.இன்றைக்கு சகோதர யுத்தமென்ற கரகரப்பு குரலையும், புலிகளால் ஆபத்து என்ற பிரச்சாரங்களையும் கடந்து வந்திருக்கிறோம்.

தமிழக சட்டசபையில் ஈழப் பிரச்சினை குறித்து விவாதிப்பதும்,தீர்மானங்கள் நிறைவேற்றுவதும்,தீர்மானங்களே தீர்வுக்கு வழியில்லையென்றாலும் அரசியல் ரீதியாக முன்னெடுப்புக்களை கொண்டு செல்வதற்கு இது துணை புரியுமென்பதாலும் தீர்மானங்கள் என்பவை ஜனநாயக அடிப்படையிலான ஆவணங்கள் என்பதையும் நினைவில் கொள்வோம்.குழுவாக இயங்கும் சில இணைய தளங்கள் தீர்மானம் நிறைவேற்றுவதிலோ,ராமநாதபுரம் ஜமின் காலத்து ஆவணங்களை சாட்சியாக கட்சத்தீவுக்கு வைப்பதாலோ பயன் ஒன்றுமில்லை,போராடுவதே புது மாற்றங்களை உருவாக்கும் என்று சொன்னதைப் படிக்க நேர்ந்தது.தீர்மானத்தின் அடிப்படையில் அரசியல் ரீதியாக மக்கள் ஆதரவுடன் போராடுவதற்கும்,உச்சநீதிமன்றம் மூலமாக செயல்வடிவம் கொடுப்பதற்கும் உள்ள வலிமை குழுக்கள் என்றோ கட்சி சார்பாகவோ குரல் எழுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது.ஜமீன் காலத்து ஆவணம் காலாவதியகிப் போனது என்பதால் உச்ச நீதிமன்றத்தில் செல்லுபடியாகாது என்ற கூற்றைக்கூட காண நேர்ந்தது.இந்தியாவில் இயங்கும் தற்போதைய வங்கிகள் அனைத்தும் ஜமீன் முறைகள் ஒழிக்கப்பட்ட பின் தனியாரிடமிருந்து தேசிய மயமாக்கப்பட்ட ஒன்றுதான்.மக்களுக்காகவே அரசியல் சாசனமே ஒழிய அரசியல் சாசனத்திற்காக மக்கள் அல்ல.

சமய சார்பற்ற மதங்கள் கடந்த தமிழீழம்
மனித உரிமை சார்ந்த மேற்கத்திய அறிவுபூர்வ தொடர்பும்,பொருளாதார வளைகுடா உதவியும்.ஈரான் இலங்கைக்கு உதவி செய்வதால் ஏனைய வளைகுடா நாடுகளில் சில தமிழர்களுக்கு உதவி செய்வதும் கூட சாத்தியமே.இதனை மதம் கடந்து இஸ்லாமியர்கள் இலங்கை முஸ்லீம் தமிழர்களின் நலன் கருதியும்,தமிழ் உணர்வும் தமிழ் முஸ்லீம்கள் என்ற நிலையில் முன்னெடுக்கலாம்.மதம் என்ற நிலையில் தூர இருக்கும் சவுதி அரேபியாவே சொந்தமாகும் போது அடுத்த கரையில் இருக்கும் தமிழ் முஸ்லீம்களும் தமிழ் மொழி காரணத்தால் இலங்கையில் வாழும் முஸ்லீம் தனது சகோதரனே என்ற பார்வையில் இஸ்லாமியர்களும் தமிழ் தேசியத்துக்குள் பயணிக்கலாம்.வெறுமனே மதில் மேல் பூனை போல் இருப்பது இலங்கையில் வாழும் இஸ்லாமிய தமிழர்களுக்கு விடிவைத்தராது.மெல்லிய வேறுபாடுகள் உள்ளுக்குள் காணப்பட்டாலும் தமிழகம் என்ற கட்டமைப்பில் இந்துவும்,இஸ்லாமியரும்,கிறிஸ்துவர்களும் ஒன்றாகவே சம ஓட்டு உரிமை அடிப்படை,கல்வியென வாழவே செய்கிறார்கள் என்ற முன்மாதிரிகள் மிக அருகிலேயே நம் கண் முன்னே இருக்கின்றன.

முதல் கட்டமைப்பு
வட,கிழக்கு மக்களை நெருங்கும் தடையின்மை எப்படியென்பது?

இரண்டாம் கட்டமைப்பாக
ஈழத்து மைந்தர்களும் அவர்களை சார்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் சார்ந்தவர்களின் தொடர்பு

மூன்றாம் கட்டமைப்பாக தமிழகமும் தமிழ் மக்களும்

தமிழகத்தைப் பொறுத்த வரையில் வட,கிழக்கு நில உள்பிரிவினைகளை நோக்காது ஈழத்தமிழர்கள் என்ற பொதுப்பார்வையிலேயே தங்கள் ஆதரவை பெரும்பான்மையோர் வழங்குகிறார்கள்.சில முணுமுணுப்புக்கள் கட்சிகள் என்ற நிலையில் காணப்பட்டாலும் தற்போதைய நிலையில் இலங்கை பொருளாதார தடைக்கு மொத்த கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததை தமிழகத்தின் குரலாக இலங்கை அரசு உணரவேண்டும். 
தமிழகம் இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் ஒரு முக்கிய சக்தியென்று உணராமல் இலங்கை அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இலங்கை அரசு பேச்சு வார்த்தைகளை இந்தியாவின் மத்திய அரசுடன் மட்டுமே நிகழ்த்தும் என்ற By pass surgery செய்துகொள்வது இலங்கையின் இதய இரத்த ஓட்டத்தை குறுகிய காலமே ஓடச்செய்யும்.இவை குறுகிய பார்வைக்கும் தீர்வுக்கும் வழிகாட்டாது என்பதோடு இலங்கை அரசின் கொள்கையையும் வெளிச்சம் போட்டுக்காண்பிப்பதாகவே இருக்கிறது.

சரியோ தவறோ அல்லது இரண்டும் கலந்த குரலாக இருந்தாலும் கூட வெறுமனே உறங்குபவர்களை விடவும்,குறைகளிலே நிறைவு காண்பவர்களையும் விடவும் வை.கோவும்,சீமானும்,மே 17 இயக்கத்தின் திருமுருகனும் அமைப்பு ரீதியாக ஓரளவுக்கு இன்னும் நம்பிக்கை தருபவர்களாகவே இருக்கிறார்கள்.ஜனநாயக ரீதியாக இவர்களுக்கு ஆதரவு குரல்களை எழுப்புவதும் அவசியமான ஒன்று.

இந்திய அரசு
மேலும் பக்கத்து வீட்டுக்காரனிடம் பகைமை கொண்டு சீனா,ரஷ்யா என்று இலங்கை சுற்றித்திரிவதன் காரணங்களை இந்திய அரசு உணரவேண்டும்.
இலங்கை அரசால் உருவாக்கும் இந்திய,சீன,ரஷ்ய லாபியையும் இந்திய வெளியுறவு அமைச்சர்,செயலாளர்,பாதுகாப்பு செயலாளர் என்ற அளவில் தமிழர்களால் ஏன் உருவாக்காமல் போகிறது?பக்கத்து மாநிலத்தில் இருக்கும் நாராயணனையும்,மேனனையும் தமிழர்களால் அணுக இயலாத போது இலங்கையால் மட்டும் அவர்களுக்கு சாதகமாக இயங்க வைக்க முடிகிறது?ஒரு வேளை பேச்சு வார்த்தைகள் என்ற கால கட்டங்கள் உருவாகும் போது எதிரி என்று நினைப்பவர்களுடனே கலந்துரையாட முடியும் என்ற அகன்ற பார்வைகளையெல்லாம் வளர்த்துக்கொள்வது அவசியம்.
 
இந்தியாவும் இலங்கை சார்பு நிலை கொண்டது என்பதற்கு காங்கிரஸ் கட்சியின் சுயகோபம் மட்டுமே முதற் காரணம்.நாளை காங்கிரஸ் கட்சியே தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் சூழலோ அல்லது மாற்றுக்கட்சியின் வெளியுறவுக்கொள்கைகள் கூட மாறலாம்.இவையெல்லாம் மக்கள் எழுச்சியையும்,உறங்கும் தன்மையைப் பொறுத்தது.

மொத்த சிங்களவர்களும் தமிழர்களுக்கு எதிரானவர்களா என்றால் இல்லையென்றே கூறலாம்.தமிழர்களிடையே எப்படி ஈழ ஆதரவும்,எதிர்ப்பு நிலையும் இருக்கிறதோ அதனை விட அதிகமாகவே ராஜபக்சே குழு,பொன்சேகா குழுவென மக்களும்,ராணுவமும் கூட பிரிந்து நிற்கிறார்கள் என நிச்சயம் கூற முடியும்.அவசர கால சட்டங்கள் ராஜபக்சே அரசுக்கு சில அவகாச சூழ்நிலையை உருவாக்குகிறதென்பதே உண்மை.அவசர கால சட்டமும்,சிங்களவர்களுடன் சுதந்திர தொடர்பு நிலை உருவாகும் காலத்தில் மக்கள் குரல்கள் ஒலிக்கத் துவங்கும்.இணைந்தும் அதே நேரத்தில் தமது கலாச்சார பண்பாடுகளோடு தனித்தும் வாழ இரு நாட்டுக்கொள்கை அவசியம் என்பதை உணர்ந்த மக்களும் இருப்பார்கள்.இவர்களுடன் நட்புறவை உருவாக்கலாம்.

நான்காம் கட்டமைப்பாக மனித உரிமைக்குழுக்களின் தொடர்பும் மனித உரிமை சார்ந்த பொது விழிப்புணர்வாக உலக மக்களின் அனுதாபம் தேடலும்.தற்போதைக்கு மனித உரிமைக்கழகங்கள் இலங்கையின் போர்க்குற்றங்களை உலகின் முன் வைக்கும் வலுவான சக்தியாக தமிழர்களுக்கு ஆதரவு தருவதை இவர்களுடன் இணைந்து மேலும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவை கொண்டு வரச்செய்வதன் மூலம் இலங்கையை பேச்சு வார்த்தை நிலைக்கு கொண்டு வரவோ ஐ.நா சபை தீர்மானங்கள் கொண்டு வரவோ உதவும்.இதன் முக்கிய பங்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் கையிலேயே இருக்கிறது.

ஐந்தாம் கட்டமைப்பாக உலக நாடுகளளின் ஆதரவு பிரிட்டனின் உதவியோடு அமெரிக்க ஆதரவும்,பிரான்ஸ்,ஜெர்மன் இன்னும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் உதவியும்.

ராஜபக்சே இந்தியாவை நம்புவதை விட சீனா,ரஷ்யாவின் நட்பை வளர்ப்பதில் கவனம் செலுத்துவது தெரிகிறது.இலங்கையின் சீனப்பாய்ச்சலும்,ரஷ்ய குசியும் தமிழர்களுக்கு நல்லதுதான்.பிரிட்டனுக்கு முன்பு செய்த வரலாற்றுத் தவறை சரி செய்யும் ஒரு வாய்ப்பு இலங்கைப் போரால் அமைந்திருக்கிறது.ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக உலக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான காலம் இன்னும் நீளுமென்றே தோன்றுகிறது.அதற்கு பதவியென்ற அதிகாரம் இல்லாத காலம் என்ற நீண்ட தொலைவு வரை போக வேண்டி வரும்.ராஜபக்சேவுக்கும் அடுத்தும் இலங்கை அரசு என்ற கட்டமைப்பும் அரசியலமைப்பும் இயங்கும்.எனவே தமிழர்களின் முக்கிய கவனம் அரசியலமைப்புக்கு எதிராய் செல்வநாயகம் காலம் தொட்டு துவங்கி,ஆயுதப்போராக உருவாகி,இப்பொழுது மக்கள் குரலாக ஒலிக்கத் துவங்கும் தமிழீழம் மட்டுமே இன்னும் தொடர்ந்து செல்ல வேண்டிய பாதை.என்பதை நினைவில் கொள்வோம்.

நேர் சிந்தனைகளும் எதிர்ப்பு மனப்பான்மையும் விரக்தி நிலைகளும்

பிரச்சினைகளுக்கு வழிகளையும் கூறாது எதிர் விமர்சனம் வைப்பதிலும் அதே சமயம் சிங்கள தேசத்து ஒவ்வாமையும் என பல குரல்கள் எழுவதை காண முடிகின்றது.மேலும் விடுதலைப்புலிகளின் தீவிரப்பற்றாளர்கள் என்றும்,இன்னொரு புறம் விடுதலைப்புலிகளின் வெறுப்பாளர்கள் என வடகிழக்கு நிலத்து புலம் பெயர்ந்த மக்களே அதிகம் தென்படுறார்கள்.ஆயுதப்போராளிகளின் முழு ஆதரவு நிலையோ அல்லது முழு எதிர்ப்பு நிலையையோ தவிர்த்து விடுதலைப் போராளிகளினால் விளைந்த நன்மைகள்,பின்னடைவுகள் என்று இரு பக்கத்தையும் அலசி ஆயுதப்போரட்டம் துவங்கியதின் தேவைகள் என்ன,எதனால் என்ற மையப்புள்ளியில் நிற்பதே தமிழர்களுக்கு வலு சேர்க்கும்.

மக்கள் நலன் சார்ந்த எதிர்ப்புக்களை மனச்சிதைவு என்பதா என தெரியவில்லை.தமிழர்களுக்கான எந்த எதிர்ப்பு நிலையையும் பாருங்கள்...குறைகள் சொல்லி காலை இழுத்து விடுவதாகவே இருக்கும்.விடுதலைப் புலிகள் வட கிழக்கு தமிழர்களுக்கு துயரங்களை மட்டுமே கொண்டு வந்து சேர்த்தார்கள் என்றும் வலிகள் தாங்கியவர்களை விட ஏனையவர்களே குற்றம் கண்டு பிடிக்கிறார்கள்.தமிழ் தேசியவாதிகளின் குரல்களே தவறு என்று வாதம் செய்தாலும் கூட ஆயுத சத்தங்கள் ஒய்ந்து போன நிலையில் மக்களின் மறுவாழ்வுக்கான முயற்சிகளை எதிர்வினை செய்பவர்கள் யாராவது செய்திருக்கிறார்களா?துன்பங்களையும், துயரங்களையும் கண்டு குறைகள் காண்பதை விட விமர்சனங்களுடன் மாற்று தீர்வுகளை முன்வையுங்கள்.

நீண்ட வாசிப்புக்கும், ஈழப்போராட்டத்திற்கும், ஈழம் என்ற சொல்லுக்கும், ஆவணங்களும்,சாகசங்களும்,சோகங்களும்,துயரங்களும் விடுதலைக்கான தேவைகளும்,கோபங்களும் கூட இணையம், சேனல் 4 தொலைக்காட்சியின் கோரங்கள் கண்ட உணர்வுடன் கூடிய மக்களின் மனம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன.தீர்வுகள் கண்டறிவதும்,வென்றெடுப்பதும் தமிழர்களின் கடமை.இல்லையென்றால் இதுவும் கடந்து போகும்.

ஆப்பிரிக்க மண்ணில் வைரம் தேடுபவர்கள் சல்லடை வைத்து தண்ணீரை நீக்கி மணலும்,கூழாங்கற்களின் இடையில் வைரத்தை கண்டெடுப்பார்கள்.இந்த பதிவுக்குள்ளும் அப்படி ஒரு சில வைரங்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.நட்சத்திர வாரத்தில் முன்பு எழுதிய பதிவுகளை துணைக்கு தேடும்போது காலம் கடந்து படிக்கும் போது சில உண்மைகளை இப்பொழுதும் படம் பிடிக்கிறதென்ற உணர்வு ஏற்பட்டது.அதே போல இதுவும் இனி வரும் காலங்களில் மெல்ல அசை போடும் போது உண்மைகளை இணையத்தில் உரக்கச் சொல்லும் என நம்புகிறேன்.

ஒரு சில பதிவுகளில் மட்டுமே மேலோட்டமாக சொல்லி விட்டுப் போகலாமென்று நினைத்ததை பதிவர் ரதி இட்ட பின்னூட்டத்தில் ஈழ வரலாற்றை  செல்வநாயகம் அவர்களையும் தாண்டி குறிப்பிட்டிருக்க வேண்டுமென்று சொல்லியிருந்தார்.பதிவர் வானம்பாடிகள் பாலா ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை - பிரமிள் என்ற pdf புத்தகத்தை படிக்குமாறு சொல்லியிருந்தார்.முன்பொரு முறை இஸ்ரேல் உருவாக்கத்தை Exodus by Leon Uris என்ற pdf வடிவைப் பற்றி பதிவர் தருமி குறிப்பிட்டிருந்தார்.எனவே மீண்டும் ஒரு முழு வட்டச் சுற்றாக இவற்றைப் பற்றி சுருக்கமாக அடுத்த பதிவில் தொட்டு விட நினைக்கிறேன்.

Thursday, June 16, 2011

ஈழ மக்களுக்கும் மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு - பகுதி 4

இதுவரை சொல்லப்பட்ட முந்தைய பதிவுகள் முன்னுரை மாதிரியே .இந்த பதிவிலிருந்து மட்டுமே தலைப்பின்  பொருளுக்கு தகுந்த படி  முக்கியமான தீர்வுக்கும் ஈழ மக்களின் வாழ்வுக்கு தமிழர்களின் பங்கு அமைந்துள்ளது.பிரபாகரனையும், விடுதலைப்புலிகளையும் கடந்தும் ஈழ மக்கள் சிலோன் தமிழர்கள் என இரண்டாம் தர குடிமக்களாக பாகுபாடான சிங்கள ஆட்சி முறை நிகழ்ந்தது என்பதை தந்தை செல்வாவின் ஆவண அறிக்கை நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் விட்டுச் சென்றதையும், சகாப்த கால விடுதலை இயக்கங்களின் பின்னடைவுகள்,விடுதலைப்புலிகள் குறித்த பார்வை, பிரபாகரனின் ஆளுமைகள் குறித்து பார்த்தோம். விடுதலைப்புலிகளுக்கு தீவிர வாத முத்திரை குத்தப்பட்ட காலம் இலங்கை ராணுவத்தின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளோடு முற்றுப் பெறுகிறது என்பதை சேனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப் பதிவு உலகத்திற்கு உரக்கச் சொல்கிறது

சென்ற பதிவின் இனப்படுகொலைகளின் ஆவணம்,ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும் காலம் மட்டுமே குணப்படுத்தும் வலிமையுடையது என்பதை இரண்டாம் உலகப்போரின் நாகசாகி,ஹிரோசிமா அழிவுக்குப் பின்னும் இதோ இப்பொதைய சுனாமி சீற்றத்திற்கு பின்னும் கூட ஜப்பான் அமைதியாக தன்னைக் கட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறதென்ற உண்மையும்,பிரிவினைக்குப் பின்பும் இந்தியா பாகிஸ்தான் இருநாடுகள் சுதந்திரமாக வாழ்கின்றன என்பதும்,பெங்களாதேஷ் உருவாக்கப்பட்டு தனி நாடாக செயல்படுவதும்,தைமூரும்,சமீபத்திய தென் சூடான் நாட்டின் ஐ.நாவின் அங்கீகாரமும் போன்றவை தமிழீழம் என்ற சொல்லை நினைவாக்குதலுக்கும் முன் உதாரணங்கள்.மக்கள் முன்னிலைப்படுத்துதல் ஒன்றால் மட்டுமே இதனை உருவாக்க முடியும். 

ஆக்கபூர்வமாய் சிந்திப்பதும்,தீர்வுகளுக்கான சாத்தியங்களை முன் வைப்பது மட்டுமே வடகிழக்கு தமிழ் மக்களுக்கு தன்னம்பிக்கையை விதைக்கும்..ஜனநாயகமாகவும்,ஆயுதப் போராட்டமாகவும் பல நிலைகளை கடந்து வந்துள்ள நிலையில் இப்பொழுதே சமூகம் சார்ந்து மக்கள் குரலோடு சாத்வீகமாக போராடும் தகுதியை ஈழ மண் பெற்றுள்ளது.துவண்டு போகலாமா?இப்போது இருக்கும் நிலையிலேயே பயணித்து முடித்து விடலாமா என்பது நமது முன் நிற்கும் கேள்வி.

வலுவற்ற மக்களையும்,கூட்டமைப்பையும் வலுப்படுத்துதல்
முதலாவதாக மக்களின் நலனையும், அவர்களது குரலையும் முன்னிலைப் படுத்துவோம்.உடனடித் திட்டங்களாக வட,கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் தமிழர்களுக்கு இந்து,கிறுஸ்து,முஸ்லீம் என பாகுபாடில்லாமல் உதவிக்கரம் நீட்டுவது.துயரங்களின் இறுக்கமில்லாமல் மூச்சு விடும் நிலையேற்படும்போது மட்டுமே சுதந்திரத்திற்கான எண்ணம் இயல்பாய் வளரும்.இங்கே மக்கள் என்பவர்களாக ஈழ மண்ணின் மைந்தர்களையும், அவர்களை சார்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பையும்,இன்ன பிற   ஒன்றிணைந்த இலங்கை சார்பாளர்களும்,இஸ்லாமிய தமிழர்களும் என மொத்த தமிழ் பேசும் மக்களும் அடங்குவர்.இதில் எதிரும்,புதிருமான குரல்கள் ஒலிக்கவே செய்யும்.ஆனால் சுதந்திரம் சார்ந்த மக்கள் குரலை எப்படி உரக்க கேட்க வைப்பது என்பதில் மாற்றுக்குரல்கள் சிந்திக்கும் மாற்றம் செய்வதோ அல்லது அமுங்க செய்வதில் மட்டுமே தமிழீழத்தின் பாதை அமைந்திருக்கிறது.

பொருளாதார உதவிகளும் தார்மீக ஆதரவும்.
 தற்போதைய தமிழக அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் வட,கிழக்கு மக்களுடன் தொடர்பு கொள்ளும் நேரடி வாய்ப்புக்கள் உருவாக வேண்டும்.அதற்கு எந்த விதமான ராணுவ அனுமதியோ தடைகளோ இல்லாத நிலை வேண்டும்.எந்த விதமான உதவியும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் மத்திய அரசு மூலமாக செல்வதும் பொருளாதார உதவிகள் தமிழ் மக்களுக்குப் போய்ச் சேருகிறதா என்ற மேற்பார்வை அமைப்பு இல்லாமலே இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் அதன் நலன்கள் சார்ந்த பார்வையிலேயே இது வரை போய்ச் சேருகின்றன.தமிழக அரசு மூலமாகவும் இன்னும் அரசு சாரா அமைப்புக்கள் மற்றும் தனி மனித உதவிகள் அனைத்தும் நேரடியாக தமிழ் மக்களுக்கு அதிகார பூர்வமான தமிழ் கூட்டமைப்புக்கள் மூலமும்,தனி மனிதர்களிடமும் போய்ச் சேர்வதற்கு வழி வகைகள் செய்ய வேண்டும்.

பாலஸ்தீனியப் போராட்டமும்,மக்கள் வாழ்க்கையும் இதுவரை உயிர்ப்புடன் இருப்பதற்கான முக்கிய காரணம் வளைகுடாவிலிருந்து பெறும் பொருளாதார உதவிகளினால்தான்.யூதர்கள் வெற்றி பெற்றதின் பின்ணணியில் வலுவான பொருளாதாரம் இருக்கிறது.குஜராத் பூகம்பத்திற்கு உதவுவது மனிதாபிமான அடிப்படையில் என்றால் இனப்படுகொலையாலும்,போராலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதும் மனித நேயம்தான்.ஆயுதங்களுக்கு உதவியதை விட அரவணைப்புக்கு உதவுவது மிகவும் தேவையான ஒன்று.
 
நம்பகத்தன்மையும்,வெளிப்படையும்,பொறுப்புக்களும்
Reliability,Transparency,accountability என்று சொல்லப்படும் வெளிப்படத்தன்மை, பொருளாதார செலவீனங்களுக்கான பொறுப்பு என்பவைகளுக்கு மேற்பார்வையென்ற நிலையில் மட்டுமே மக்களுக்கான உதவிகள் செல்வதையும் தடம் புரளாமல் தடுக்கவும் இயலும்.புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் தமிழக தமிழர்களால் இதனை இலங்கை அரசு என்ற இயந்திரத்தின் அனுமதியோடு ஆனால் தமிழர்களின் கட்டுப்பாட்டில் என்ற நிபந்தனையோடு முன்வைப்பதும் இதனை இலங்கை அரசு எப்படி ஆதரிக்கிறது அல்லது எதிர்க்கிறது என்பதில் இலங்கையின் உண்மை முகமோ அல்லது முகமூடியோ தெரிந்து விடுவது நமக்கு இருவிதத்திலும் நன்மையே.உதவிக்கரம் நீட்டுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.ஆனால் இது மக்களுக்குப் போய்ச் சேருவதற்கு உத்தரவாதமென்ன என்பதே தொக்கி நிற்கும் கேள்வி.முந்தைய பதிவின் குமரன் பத்மநாதனின் பொருளாதார உதவி பார்முலா நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று.கூண்டுக்கிளியாய்,அரசு காவலில் இருப்பதாலே கே.பியின் செயல்கள் நம்பிக்கையற்றுப் போவதுடன் எந்த முன்னெடுப்பும் இலங்கை அரசு தேர்ந்தெடுத்த முடிவின் முன் முகமாக மட்டுமே கே.பி செயல்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.எனவே தமிழக அரசு சார்ந்தோ அல்லது நாடுகடந்த தமிழீழ அரசின் அங்கீகாரத்தாலோ இலங்கை அரசு செயல்பட முன்வருகிறதா என்பதை முன் வைக்கும் போது இலங்கை அரசின் உள் முக கொள்கை என்ன என்பது தெரிந்து விடும்.

உலகமயமாக்கலில் தமிழர்களின் வியாபார தொடர்புகள்:
உலகமயமாக்கலில் joint venture எனும் வியாபார தொடர்புகளை தமிழர்களுக்குள் வலுப்படுத்தலாம்.இதன் மூலம் தமிழர்களால் தமிழர்களுக்கு என்ற கோட்பாட்டில் தமிழகம்,புலம்பெயர்ந்தவர்கள்,வட,கிழக்கு மக்கள் என அனைவரும் வளம் பெருவதற்கு வாய்ப்புக்கள் இருக்கிறது.திருநெல்வேலி அண்ணாச்சிகள் உழைப்புக்கும்,வியாபார ரீதியான முன்னேற்றத்திற்குமான அடையாளங்கள்.

சுயநிர்ணய வாக்கெடுப்பு
ஒன்றிணைந்த இலங்கையா அல்லது தமிழீழ அரசா என்பதனை ஐ.நா.அறிக்கையின் அடிப்படையில் வாக்கெடுப்பு நிகழும் சாத்தியங்களை உருவாக்குவது.இதில் வாக்குரிமை கொண்டவர்களாக மண்ணிலும், புலத்திலும் வாழ்பவர்களின் கருத்தாக வாக்குகள் கேட்பது.

ஒன்றிணைந்த இலங்கையெனும் பட்சத்தில் பெரும்பாலான நாடுகள் தற்போதைய சூழலில்,முக்கியமாக இந்தியா தனது நலன் கருதி தனது ஆதரவை தர முன் வரக்கூடும்.மக்கள் குரலைப் பொறுத்து இந்த நிலை மாறுவதற்கும் சாத்தியங்கள் உண்டு.

தமிழீழத்தின் தேவைகள்
இப்பொழுது பார்க்கும் பொழுது இயலாத கடினமான எழுத்து பூர்வமான சிந்தனை மாதிரியே தோன்றினாலும் இங்கிலாந்தின் உள் கட்டமைப்பு சட்டங்களை உள்வாங்கிக்கொண்டு சுதந்திர இந்தியாவிற்காய் எழுதிய அரசியலமைப்பு இன்று வரை உயிர்ப்போடு இருக்கிறது.அது போலவே ஆயுதப்போராட்ட காலத்தில் தமிழீழ சிந்தனையோடு முன்பே உருவாக்கப்பட்ட சட்டம்,ராணுவம்,காவல்துறை,நீதித்துறை,பொருளாதாரம்,ஊடகம்,உள் கட்டமைப்புக்கள் ஒன்றும் புதிய முயற்சிகள் அல்ல.முந்தைய பதிவுகளில் குறிப்பிட்ட சாசன மாதிரிகளும்,இன்னும் நிறையவே  அரசியல் சாசன உருவாக்கம் எளிதானதே.மக்கள் குரல் மட்டுமே இதனை நிறைவேற்றும்.

இனி முக்கிய பகுதிகளாய் நாடு கடந்த அரசு,விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கவேண்டிய அவசியம்,பத்திரிகை,தொலைக்காட்சி ஊடகங்களின் ஆதரவு,தமிழக அரசியல் ஆதரவு,இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டியதன் தேவை,உலக நாடுகளின் பார்வை,மனித உரிமைக்குழுக்களின் ஆதரவு,நேர்,எதிர் சிந்தனைகள் மற்றும் விரக்தி நிலைகளை மாற்ற வேண்டிய தேவை,மக்கள் சக்தியின் விழிப்புணர்வு போன்றவற்றை  அடுத்த பதிவில் காணலாம்.


Wednesday, June 15, 2011

தமிழ் மணம்,சேனல் 4 ,இனப்படுகொலைகள் இன்னும் பிற

நேற்று இரவு இலண்டனின் சேனல் 4 தொலைக்காட்சியால் Srilanka's killing field என்று தலைப்பிடப்பட்டு  ஒளிபரப்பு செய்யப்பட்ட ஆவணப்படத்தைக் காண நேர்ந்தது.இரவு 3 மணியாகியும் தூக்கம் வராமல் மனம் அவதிப்பட்ட நேரம். இதனை முன்பே போர்க் குற்றங்களுக்கும் புதிய ஆதாரமாக ராஜதந்திரிகள், ஐரோப்பிய,அமெரிக்க,இந்திய தூதுவர்கள்,பத்திரிகையாளர்கள்,மனித உரிமைக் குழுவினர் பார்த்து வேதனைப்பட்டதும் கூட காணக் கிடைத்தது.இதில் இலங்கை சார்பாக அங்கம் வகித்த சனத் சூர்யா தனது பேச்சின் ஊடே நடு விரலைக் காட்டுவது மாதிரி பேசியது,தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய பொருளாதாரதடை, கச்சத்தீவு தீர்மானங்களை அலட்சியப்படுத்தல், மேற்கத்திய நாடுகளின் மறைமுக கண்டனங்கள் அனைத்தையும் உதாசீனப்படுத்துவதின் பின்ணணி என்ன? மனித உரிமைகள் மீறலாக இலங்கை எல்லை மீறி செயல்படுவதும் இந்தியாவும்,தமிழகமும் தேமேன்னு பார்த்துக் கொண்டு நிற்பதும் பார்க்க சகிக்கவில்லை.

சேனல் 4 ஆவணத்தின் காட்சிகள் பெரும்பான்மையானவை புகைப்பட வடிவிலோ,காணொளியாகவோ கடந்த இரண்டு வருடங்களில் தொடர்ந்தும் தமிழ்மணத்தின் ஈழம் பகுதியில் அவரவர் பதிவுகளின் சார்பாக வைக்கப்பட்ட போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையின் ஆதாரங்களாகும்.இவற்றின் பெரும்பான்மையானவை போர் நிகழ்ந்த மே 15ம்தேதிக்கும் முன் நிகழ்ந்தவையும் பல இலங்கை ராணுவ வீரர்களின் கைபேசி காமிராக்களில் பிடிக்கப்பட்டதும்,சில இலங்கை அரசு, ராணுவ பூர்வமாக பதிவு செய்யப்பட்டவைகளாகும்.உலக பத்திரிகையாளர்கள் யாரையும் நுழைய விடாமல் ராஜபக்சே அரசின் போங்கு பிடிக்காமல் கசிய விடப்பட்டவையும்,சரத் பொன்சேகா சார்பாளர்கள் மற்றும் சிங்கள மனித உரிமைகளை மதிக்கும் ஒரு சில பத்திரிகையாளர்களால் பொதுவெளிக்கு வந்தவை என ஆவணப்படத்தை தயாரித்த இயக்குநர்/தயாரிப்பாளர் கேலம் மெக்ரா (Callum Macrae) மற்றும் சேனல் 4 தொலைக்காட்சி கூறுகிறது.இவை புனையப்பட்ட காட்சிகள் என்று இலங்கை அரசு இதுவரை மறுத்து வருகிறது.ஆதார காட்சிகள் அனைத்தும் உண்மையே இதில் எந்த கணினி திணிப்பும் கிடையாது என்று புகைப்பட வல்லுநர்களும்,ஐ.நாவும் உறுதிப்படுத்தியுள்ளது.

சேனல் 4ன் ஆவண காணொளிக்கு சற்றும் குறையாத வண்ணம் புகைப்படமாக,ஆவணமாக பிரபாகரன் என்ற தோழரால் என்ன செய்யலாம் இதற்காக புத்தகமாக கிடைக்கிறது.http://www.panuval.com/ என்ற தளத்திலிருந்து ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம்.

போர்க்குற்றங்களுக்கும்,இனப்படுகொலைக்கும் துணையாக மௌனம் சாதிக்கும் இந்தியாவையும் வருடங்களின் நகர்வுகளிலேயே உயர் நாற்காலி பிடித்த மேனன்,நாராயணன்,நம்பியார்களும்,காங்கிரஸின் பார்வையிலேயே சதி செய்த பிரணாப் முகர்ஜியும்,தமிழக முதல்வராய் இருந்த கருணாநிதியும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் இந்திய இறையாண்மைக்கும், தமிழர்களின் உணர்வுக்கும் எதிரானவர்கள் என மனிதனாக,இந்தியனாக யாரும் குற்றம் சாட்டும் தகுதி படைத்தவர்கள்.மக்கள் நலன் என்பதை விட இவர்களின் மூடு மந்திர செயல்பாடுகளே ஜனநாயகத்திற்கு விரோதமானது.

சேனல் 4 தொலைக்காட்சி ஆவணம் நடுநிலையானது என்பதற்கு விடுதலைப்புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தினார்களென்றும், மருத்துவமனையிலே ஒரு தற்கொலைப்படை தாக்குதல் செய்தார்கள் என்றும் காட்சிபடுத்துகிறது.அந்த கணத்தில்,களத்தில் ஒருத்தனாக,ஒருத்தியாக நம்மை உட்புகுத்திக்கொண்டு தமிழ் தேசியம் பற்றியோ,ஒன்றிணைந்த இலங்கையில் வாழமுடியுமென்றோ தோன்றவில்லை.உயிர் வாழ்தல் ஒன்றே முக்கியமான ஒன்றாக இருந்திருக்கும்.அந்த காலகட்டங்களைக் கடந்து வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்கள் வாழ்வில் வடக்கு வசந்தம் வீசுகிறதா என்பது கேள்விக்குறியே.குண்டுகள் சத்தம் கேட்காத ஒரே காரணத்தால் மட்டும் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

வேலிக்கு ஓணானே சாட்சி மாதிரி இலங்கை அரசுக்கு குமரன் பத்மநாதனே அரசியல்,எதிர்காலத்தை பிரகடனப்படுத்துவதை இந்து பத்திரிகை இணையதளம் ‘The war is over… We’ve one way, one chance. That’s the peaceful way, peaceful negotiation, continuous engagement’ என்ற தலைப்போடு குமரன் பத்மநாதன் நேர்காணலை...

”இது ஒரு புதிய ஆரம்பம்.போர் முடிந்து விட்டது.நாங்கள் சுதந்திரத்திற்காக போராடினோம்.அது முடிந்தது.இப்பொழுது ஒரு புதிய ஆரம்பம்.புதிய உலக ஒழுங்குமுறை எங்களுக்கு கற்பித்தது என்ன வென்றால் நாங்கள்...நாங்கள் ஒன்றாக வாழ வேண்டும்.எங்களது பழைய அனுபவத்தில் கற்றுக்கொண்டது இரு இனத்திற்கு மிடையில் நாங்கள் பாலம் அமைக்க வேண்டும்.இந்த நாடு,ஒரு சிறிய தீவு நிறைய அனுபவித்து விட்டது.போதும்.இந்த சிறிய நாடு,சிறிய மக்கள் தொகைக்கு நாங்கள் அதிக விலை கொடுத்து விட்டோம்.எனவே நாங்கள் ஒன்றாக வாழவேண்டும்” என்று துவங்கி கருத்து சொல்வதை இங்கே காணலாம்.இவ்வளவு தூரம் வந்து விட்டு இந்து பத்திரிகையையும் விமர்சனம் செய்யாமல் போனால் சரியாக இருக்காது:)

இந்து பத்திரிகைக்கு என்று ஒரு பத்திரிகை பாரம்பரியம் உண்டு.முந்தைய தகவல்களோ,ஆவணப்பதிவுகளோ தேவையென்றால் பலர் கொண்டு வரும் ஆதாரமாக இருந்தது என இந்து பத்திரிகையை சொல்லலாம்.பிரபாகரனின் ஆயுதப்போராட்டத்தின் துவக்க கால நேர்காணலைக்கூட இந்து பத்திரிகை பதிவு செய்தது.போபர்ஸ் ஊழலை வெளிக்கொண்டு வந்ததில் என்.ராமுக்கு மிகுந்த பங்குண்டு.இப்படியெல்லாம் இருந்த இந்து பத்திரிகை தமிழர் நலன்களுக்கு எதிரான போக்கையும்,இலங்கை பேரினவாத ஆதரவையும் கொண்டு தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பைக் கண்டு கொஞ்சம் அடக்கி வாசித்து இப்பொழுது குடும்ப உட்பூசல்களில் பயணம் செய்கிறது என்பதை தெகல்கா பத்திரிகை வெளிச்சம் போட்டுக் காண்பித்து விட்டது.ஆங்கில மொழி வளத்தோடு இருப்பது இந்து பத்திரிகைக்கு பெருமை சேர்க்ககூடியது எனினும் அசாங்கே எப்படி பக்கசார்புள்ள இந்துபத்திரிகையை விக்கிலிக்ஸ் செய்திகளை வெளியிட உடன்பட்டார் என்று தெரியவில்லை.

Conspiracy theory பற்றி எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.இதனை உண்மைக்கு புறம்பான தீமையான திட்டமிடல் எனவும்,உள்நோக்கு கொண்ட பொய் பரப்புரை எனவும் பொருள் கொள்ளலாம்.பதிவுலகில் கோயபல்ஸ் பரப்புரை என்ற சொற்பதம் மிகவும் பிரபலம்.உண்மைக்கு புறம்பாக கோயபல்ஸ் பொய் பரப்புரைகளை சொன்னார் என்பது வரலாறு.இதற்கு உதாரணமாக அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத்தை யூதர் ஆதரவு அமெரிக்கர்களே தகர்த்தார்கள் என்ற ஈரானின் அகமது நிசாத்தின் பரப்புரை,அமெரிக்க படைகள் ஈராக்கின் பாக்தாத் தலைநகருக்குள் நுழையக் கூடிய தருணத்தில் ஈராக் தொலைக்காட்சி இன்னும் அமெரிக்கர்கள் ஈராக்கின் எல்லைப்பகுதியான பஸ்ராவைக் கூட என்பதுவும் இன்னும் கிட்ட நெருங்கி வந்தால் நக்கீரன் பத்திரிகையில் கிராபிக்ஸ் செய்து பிராபாகரன் செய்தி தாள் படித்துக்கொண்டிருப்பது போன்றவைகளைக் கூறலாம்.இதே அளவுகோலில் இந்து பத்திரிகையில் வெளியான குமரன் பத்மநாதனின் நேர்காணலையும் உள்நோக்கங்கள் கொண்ட பரப்புரை எனலாம்.கூடவே சில வரலாற்று உண்மைகளும் ஊடே வெளிப்படுகிற தெனலாம்.ஆனால் இவற்றையெல்லாம் மீறி உள்ளே ஒழிந்து கிடப்பது இலங்கை அரசின் பரப்புரையும்,தமிழர்களுக்கு எதிரான விரோதப் போக்கும்,இந்து பத்திரிகையின் அரசு தொடர்புகள் காரணமாக ராவின் பின்புலங்கள் கூட ஒளிந்து கிடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
காங்கிரஸ் கட்சி ஆட்சியின் தமிழர்களுக்கு எதிரான நிலை,ராஜபக்சே பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் விதமாக இந்திய சார்பு நிலையோடு, சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் ஓடுவதன் காரணம் ஐரோப்பிய நாடுகள் போர்க்குற்றங்களை உணர்ந்துகொண்டதால்.பெரியண்ணன் அமெரிக்கா எந்தப்பக்கம் தலை அசைகிறதென்பதைப் பொறுத்தோ அல்லது அமெரிக்காவின் அரசியலுக்கே உரித்தான இரட்டை நிலைப்பாடு பொறுத்தோ இலங்கை குறித்த உலக அரசியல் இன்னும் விரியும்.பின்னடைவுகளான இந்த கால கட்டத்தில் மக்களை நோக்கி நேரடி உதவிக்கரம் நீட்டுவதற்கோ,அனுதாபம் காட்டவோ இயலாத நிலை இருக்கிறது.இந்த நிலையில் இடைத்தரகனாக கே.பி என்னிடம் வாருங்கள்,ராணுவ பாஸ் வாங்கித் தருகிறேன் என்கிறார்.திருடனிமே சாவிக்கொத்தை கொடு என்கிற மாதிரி இருக்கிறது.தமிழகம் மூலம் ஏதாவது சாத்தியங்கள் இருக்கிறதா என்று பார்த்தால் தற்போதைய நிலையில் தமிழக அரசு சார்பாக ஜெயலலிதா அறிவித்துள்ள பொருளாதாரத் தடையின் நன்மை,தீமைகளையும் ஆராய வேண்டியிருக்கிறது.முதலாவதாக இதனை இந்திய அரசு செயல்படுத்துமா என்பதே சந்தேகம்தான்.அடுத்து பொருளாதார தடையால் மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள்.ராஜபக்சே போன்றவர்கள் கண் வீங்கி இன்னும் உண்டு கொழுக்கவே செய்வார்கள்.மறுபுறம் பார்த்தால் தமிழர்களின் மக்கள் உணர்வாக பொருளாதாரத் தடை இலங்கைக்கு சில அரசியல் அழுத்தங்களைத் தரலாம்.

பொருளாதார தடையை விட ஆப்பிரிக்காவின் apartheidக்கு அனைத்து நாடுகளும் கிரிக்கெட் விளையாட்டை தவிர்த்த மாதிரியான செயல்கள் இன்னும் வலுவையும் ஜனநாயக ரீதியாகவும் இருக்கும்.இது ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக உபயோகிக்கப்பட்ட வெற்றிகரமான ஆயுதம். கிரிக்கெட்டே கடவுள் என்று நினைக்கும் மொத்த இந்திய இளைய தலைமுறைக்கும் இலங்கையை கிரிக்கெட்டிலிருந்து புறக்கணிப்பது விழிப்புணர்வையும் தரும்.தமிழ் உணர்வாளர்கள் இது பற்றி சிந்திக்க வேண்டுகிறேன்.

இதுபற்றி ஏற்கனவே சிங்களத்தமிழன் டாக்டர் பிரியன் செனவிரத்னே என்ற பதிவில் இலங்கை கிரிக்கெட்டை தவிர்க்க Boycott Srrlanka Cricket என்ற கூகிள் படத்துடன் சொல்லியிருக்கிறேன்.

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

பதிவுகள் போடுகிறோம்,பின்னூட்டங்கள் இடுகிறோம்.எத்தனை பேர் தமிழ்மணத்தின் ஈழம் பகுதிக்கு செல்கிறீர்கள் என்று தெரியவில்லை. தலைப்புக்களையாவது ஒரு பார்வை பார்த்து விடுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.தமிழ் மணத்தின் தனித்தனி பதிவுகளின் சாரம் சேனல் 4 தொலைக்காட்சியில் ம் ஆவணத் தொகுப்புக்கு பின் தமிழ்மணத்தின் அளவிட முடியாத சேவையின் தாக்கம் புரிகிறது.

போர்க்குற்ற ஆவண தாக்கத்திற்கு பிறகும் ஈழம் குறித்த தலைப்பான ஈழ மக்களுக்கும்,மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு என நிறைவு செய்ய இயலுமா எனத் தெரியவில்லை.இருந்தாலும் மனித வாழ்க்கை தொடர் கதை என்பதால் ஏற்பட்ட,உணர்ந்த வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்டும் மேற்கொண்டு பயணம் செய்தே தீர வேண்டும்.என்பதால் சில நாம் விரும்பியபடி நடக்கலாம்.இன்னும் சில மனித அறிவுக்கு அப்பாற்பட்டும் நிகழலாம்.எனவே நம்மால் என்ன செய்ய இயலும் என்பதை அடுத்த பதிவில் காணலாம்.

Tuesday, June 14, 2011

பிரபாகரன், விடுதலைப் போராளிகளின் சகாப்தமும்,தொடர்ச்சியும் - பகுதி 3

கிட்டத் தட்ட மூன்று தசம சகாப்த ஆண்டுகளின் ஈழப்போரின் முக்கிய நிகழ்வுகளை ஒரே பதிவில் ஆவண பூர்வமாக கொண்டு வருவது இயலாது என்பதாலும்,இணையம் முழுதும் தீவிர தமிழீழ பற்றாளார்கள்,அதற்கும் குறையாமல் கோப வி(மர்)சனக்காரர்கள்,பொய் பரப்பாளர்கள் என மொத்த கருத்துக்களும்,ஆவணங்களும் மிகுந்து கிடப்பதால் தேடுவோர் கண்டு அடைவார்கள் எனக் கூறி  சுருக்கமாக
சென்ற பதிவின் செல்வநாயகம் காலத்து சுதந்திர குரலின் தொடர்ச்சியாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் வட கிழக்கு இலங்கையின் மக்களின் ஜனநாயக குரலாக ஒலிக்கிறது.எனவே இப்பொழுது இரண்டாம் கட்ட நகர்வாக விடுதலைப் போராளிகளின் காலத்துக்குள் நுழைந்து விடலாம்.பண்டார நாயக்காவிடமிருந்து ஜெயவர்த்தனேயின் அரசு காலங்களில் தமிழகத்துக்கு இருந்த ஒரே ஒட்டுதல்  இன்றைய தொலைக்காட்சி,இணைய தகவல் வசதிகளுக்கு இணையாக இலங்கை வர்த்தக கூட்டு ஸ்தாபனத்தின் இலங்கை ரேடியோவின் சினிமா பாடல்களும்,பின்பு இந்திய வம்சா வழியாக தேயிலைத்தோட்ட தமிழர்கள் குடியுரிமை இழந்து தமிழகம் வந்தார்கள் என்பது தவிர தமிழகம் திராவிட இயக்க கொள்கைகளும்,அண்ணாவைத் தொடர்ந்தும் கருணாநிதி,எம்.ஜி.ஆரின் ஆளுமைக்குட்பட்ட சோசலிச இந்திய நிலையில் பயணித்ததை மட்டும் பதிவாக்கிக் கொண்டு சராசரி மக்களின் பார்வைக்கு வராத அரசியல் களத்திலேயே ஈழப்போராட்டத்தின் துவக்கம் இருந்திருக்க கூடுமென்று தெரிகிறது.

இறுகிய பொருளாதாரத்தில்  இந்தியாவே திணறிக்கொண்டிருந்த காலத்தில் இப்போதைக்கு பிம்பம் படுத்துவது போல் பிரபாகரனோ,ராஜிவ் காந்தியோ முகம் தெரியாதவர்களாக,அறியாதவர்களாக இந்திரா காந்தியே இந்திய அரசியலை ஆக்கிரமித்துக்கொண்ட காமராஜர் காங்கிரஸிலிருந்து விலகிய கால கட்டங்கள் தமிழகம் எனலாம்.அறியாத விசயங்களை பத்திரிகைச் செய்திகள் மட்டுமே ஊடகத் தகவல் என்ற நிலையில் மெட்ராஸில் துப்பாக்கி சூடு என்ற தலைப்பும், கருணாநிதி இந்திய அமைதிப்படையை வரவேற்க செல்லவில்லை செய்திகளும்,ராஜிவ் காந்தி இலங்கை ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கியினால் தாக்கப்பட்டார் என்றும், வை.கோ படகு மூலமாக ரகசியமாக இலங்கை சென்றார் என்றும்,இலங்கை பற்றிய செய்திகளில் இனப் பிரச்சினைகளையும்,ஆயுதப்போராட்டங்களையும்,தமிழகத்துக்கு அறிமுகப்படுத்துகிறது எனலாம்.

பின் 80களின் இறுதியிலும் 90களில் தமிழர்கள் இலங்கையிலிருந்து இடம் பெயர்தலும்,ராஜிவ் காந்தியின் குண்டுவெடிப்பு சம்பவமும் தமிழகத்தின் விடுதலைப்போராளிகளின் மக்கள் ஆதரவு நிலையை மாற்றி விடுதலைப்போராட்டத்தின் உள்ளீடுகள் தெரியாத விதத்தில் மாற்றிப்போட்டு விட்டதெனலாம்.இந்த கால கட்டத்தில் ஏனைய போராளிக்குழுக்கள் தங்கள் அடையாளங்களை இழந்து போக விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமே வடகிழக்கு தமிழ் மக்களின் அடையாள முகமாய் மாறிப்போனது.திலிபனின் உண்மையான உண்ணாவிரதமும் தீக்‌ஷித்தின் புறக்கணிப்பெல்லாம் கூட பின்பே அறியப்பட்டவை.சிரமமான இந்த காலகட்டத்தில் தங்கள் உரிமைக்கான உயிர்ப்பைத் தந்தவர்களாக நிலத்தின் மக்களும்,இயக்கமும், இயக்கத்துக்கு துணையாக தங்கள் வாழ்வியல் சிரமங்களுக்கும் மத்தியில் பொருளாதார உதவிகளை தந்து நிலைநிறுத்தியவர்கள் புலம் பெயர் தமிழர்களே எனலாம்.அமெரிக்காவின் அரசியல் களம் சந்தேக கண்ணோடு மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில் நார்வே என்ற குட்டி நாடு நாட்டாமை செய்து பிரச்சினையை தீர்த்து விடும் என்று எதிர்பார்த்த காலங்கள், விடுதலைப்புலிகளின் போர்ப் பரணி சாகசங்கள் என்பவை அண்டன் பாலசிங்கம் மொழி பெயர்க்கும் உலக ஊடகவியளாலர் மாநாடு கிளிநொச்சியில் நிகழ்ந்த போது பிரபாகரன் உலகம் அறிந்த கொரில்லா போரின் மற்றும் தமிழீழ அடையாள தமிழ் முகமாகி விட்டார்.
 





ஒன்று பட்ட இலங்கையில் ஏதாவது ஒரு விதத்தில் சமரசம் செய்து கொண்டால் போதும் என்ற இலங்கை அரசுகளின் பேச்சு வார்த்தை நிலைக்கு எதிராக (பேச்சு வார்த்தைகளின் இலங்கை அரசின் தரப்பில் இதே வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஷ்) தனி தமிழீழம் என்ற உறுதியான பிரபாகரனின் நிலையில் நின்றது அவரது மாவீரர் தின உரைகளிலிருந்து அறிய முடிகிறது. இலங்கை அரசு buying times என்கின்ற கால அவகாசங்களை உருவாக்கி மீண்டுமொருயுத்தத்திற்கான சூழ்ச்சிகளை உருவாக்கியிருக்கலாம். நிகழ்வுகளை கணிப்பீடு செய்தால் இரண்டுமே உண்மையெனவும் தெரிகிறது.
 சில ஆவணங்களாக...
சிறிலங்கா ஜனநாய சோசலிஸ குடியரசு அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி -23-2002
தமிழில்
http://1paththiram.wordpress.com/category/war-of-tamil-eelam/
ஆங்கிலத்தில்
Memorandum of Understanding – Cease-Fire Agreement 2002

De-escalation Plan proposed by Security Forces Commander, Jaffna Peninsula, Maj. Gen. Sarath Fonseka, to Enable Re-settlement of Civilians in High Security Zones, December 20, 2002

Security Forces Commander, Jaffna peninsula, Major General Sarath Fonseka, outlined a plan to enable the resettlement of civilians (internally displaced persons) in High Security Zones (HSZs) in Jaffna peninsula. He tabled these proposals in a letter sent to the Liberation Tigers of Tamil Eelam (LTTE), on December 20, 2002. Primarily, he had called for disarming the LTTE to enable such re-settlement, and for maintaining a ‘balance of forces’ between the LTTE and government forces.

முழு உடன்படிக்கையின் ஆதாரம்: http://1paththiram.wordpress.com/2006/10/14/de-escalation-plan-sarath-fonseka-re-settlement-high-security-zones-2002/

தமிழீழ விடுதலைப் புலிகளினால் கோரப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைபு
The Liberation Tigers of Tamil Eelam (LTTE) on November 1, 2003, submitted its proposals for an Interim Administration in the North East region to the Sri Lankan Government through the Norwegian facilitators. Following is the full text of the proposals:

தமிழில்
http://1paththiram.wordpress.com/2006/09/10/ltte-tamil-eelam-interim-government/

ஆங்கில மூலம்
http://1paththiram.wordpress.com/2006/09/22/ltte-proposals-interim-self-governing-northeast-sri-lanka/

ஆவணச் சான்றுகளாகவும் ஈழப்போராட்டத்தின் இன்னும் பல பரிமாணங்களை புரிந்து கொள்ளவும் தேடல் மட்டுமே நேர்,எதிர் சிந்தனைகளில் விழையும் முடிவுகளை எட்ட துணை புரியும்.

ஒரு புறம் de facto government என்று சொல்லப்படும் தன்னாட்சி முழு அதிகாரத்துடன் விடுதலைப்புலிகள் இருந்தாலும் இந்த சமரசங்களும்,உலக ஆதரவில்லாமல் செயல்பட்டது,இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியின் நிலைப்பாடு,கருணா,பிள்ளையான் பிரிவு போன்றவையும்,அமெரிக்காவின் 9/11க்குப் பின்பான சூழலை நார்வேயின் நாட்டாமைக்கு மத்தியிலும் கிழித்துப்போட்டு விட்டு சீன,ரஷ்ய,பாகிஸ்தான்,இந்திய ஆதரவுடன் ராணுவ உதவிகளுடன் செயல்பட்டது கிளிநொச்சி இடம் நகர்வை தந்ததும் முள்ளிவாய்க்கால் போரும் தொடர் மனித இனப்படுகொலைகளும் இப்போது நினைத்தால் இன்னும் அதிகமாக கண்ணீரை வரவழைக்கின்றது.

அப்போதைய கால கட்டத்தில்,அதாவது 2008ம் ஆண்டு மத்தியில் பதிவுலகம் பரபரப்பான ஈழப்போர் குறித்த பதிவுகளை கொண்டு வந்தன.பொதுவாக கவனித்துக்கொண்டிருந்த நானும் சூடான பதிவர்களின் தொடர் கருத்துக்கு மத்தியில் எனது பதிவை ஈழத்துப்பிரச்சினையும் இந்திய மாற்றங்களும் என  போரின் முழு வீச்சும் அறியாமல் உணர்ந்ததை சொல்லியிருக்கிறேன்.மனம் பதை பதைத்த கணங்களை விடுதலைப்புலிகளுக்கு ஓர் வேண்டுகோள் என  என 2009ம் வருடம் பெப்ரவரியில் சொல்லியிருக்கிறேன்.எத்தனை விதமான உணர்வுகளை,கோபங்களை பதிவுகளாக,பின்னூட்டங்களாக பதிவர்கள் பகிர்ந்திருக்கிறோம்.அந்தக் கோபத்தையெல்லாம் பாராளூமன்றத் தேர்தலில் காட்டியும் கூட காங்கிரஸின் தேர்தல் வெற்றியும்,தி.மு.கவின் காங்கிரஸ் சார்ந்த நிலைப்பாடும் அதற்கான காரணங்களாய் முகங்கள் கிழிந்து போன தற்போதைய நிலையும் கூட ஈழப்போராட்டத்தின் பின்னடைவே எனலாம்.

விடுதலைப்புலிகள் மீதான கோபங்களுக்கு காரணங்களாக சில வரலாற்றுத் தவறுகளாக ஏனைய போராளிக் குழுக்களை சிதைத்தது,பயணிகள் வாகன துப்பாக்கிச் சூடு,முஸ்லீம் தமிழர்களை இடம் பெயர்த்தல்,ராஜிவின் கொலை குற்றச்சாட்டு,இலங்கையில் பிரேமதசா,லஷ்மண் கதிர்காம போன்றவர்கள் குண்டுவெடிப்பு,துப்பாக்கிச்சூடு என்ற பல உலக நோக்கில் பின்னடைவுகள் இருந்தாலும் ஒரு கொரில்லா இயக்கமாக துவங்கி கட்டுப்பாடான ராணுவ நிலைக்கும்,தனக்கென்று நில,நீர்,வான்படைகள் என்றும்,சுய ஆட்சி முறை என்று வளர்ந்ததும்,உலக நாடுகள் பலவற்றின் தடை எதிர்ப்புக்கு மத்தியிலும் தனித்து நின்ற சாதுரியம் ஈழ,இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது.

தமிழகத்திலிருந்து வரும் ஆதரவுக்குரல்களை விட ராஜபக்சே அரசின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு நிலையாளர்களும்,சரத்பொன்சேகா ஆதரவு ராணுவத்தினரும்,குடும்ப சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான ஜனநாயக சிங்களவர்களும்,அரசு சார்பிலா நிறுவனங்கள்,செஞ்சிலுவை சங்கம்,போரினால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் என ஒரு கலவையாகவே இணைய வெளி சுதந்திரத்தின் வேகத்தால் வெளி உலகிற்கு உண்மைகள் வெளிவந்தன எனலாம்.இன்றைய ஜூன் 14ம் தேதி சேனல் 4 தொலைக்காட்சியில் கெலன் மேக்ரே என்பவரால் உருவாக்கப்பட்ட ஒளிபரப்பப்படும் காணொளிகள் ஏற்கனவே Stage actors எனக்கூறப்படும் ராஜதந்திரிகள்,தூதுவர்கள்,மனித உரிமை குழுவினர், பத்திரிகையாளர்கள் என பலரும் கண்டு ஒரு இனப்படுகொலை இலங்கை அரசின் கட்டளையோடு இலங்கை ராணுவத்தோடு நிகழ்ந்ததை  ஆவணபூர்வமாக வெளிக்கொண்டு வருகிறது.

(இந்த ஆவணங்கள் உலகின் கண்களுக்கு வருவதற்கு உறுதுணையாய் இருந்தவர்கள் தமிழர்களின் கோபத்தைப் போலவே ராஜபக்சே குழுவினரிடம் கோபம் கொண்ட ராணுவ வீரர்களில் சிலரும்,சரத் பொன்சேகா சார்பாளர்களும் என்பது குறிப்பிடத்தக்கது)
  
அவசர நிலைப்பிரகடனமும்,சுதந்திரமான ஊடகங்களின் அனுமதியுமில்லாத காலத்தே போர்க்குற்றங்கள் என்ற பெயரில் ஒரு இனப்படுகொலைகளின் தாக்கம் இவ்வளவு இருக்குமென்றால் உண்மை நிலவரங்கள் பொதுவில் வைக்கப்பட்டால் இன்னும் நிறைய உண்மைகள் வெளி வரக்கூடும். தற்போதைய அரசியல் நகர்வுகள்,மேற்கத்திய நாடுகளின் இலங்கை அரசு குறித்தான அணுகுமுறை,அதை விட மனித உரிமைக்கழகங்கள் எழுப்பும் கேள்விகளால் என்றாவது ஒரு நாள் ராஜபக்சே தனது நாற்காலியின் இறுதி நாட்களுக்குள்ளோ அதற்கும் அப்பாலோ போர்க்குற்றம் சாட்டப்படுவதோ, பதவி விலகுதலோ நிகழக் கூடிய ஒன்றாக தமிழர்கள் எதிர்பார்த்தாலும், ராஜபக்சே குழுக்கள் அதிகார பீடத்தில் இல்லாமல் போவதாலேயே ஈழப் பிரச்சினையும்,மக்களின் துயரங்களும் முடிவுக்கு வந்து விடுமா என்றால் இல்லை.

இந்த கால கட்டத்தில்  நிகழ்வுகள் அதன் போக்கில் போகட்டுமென்றோ அல்லது கிடைத்த வரை லாபம் என்று ஏற்றுக்கொள்ளலாம் என்று சிலரும், இப்படியொரு தீர்வுக்கு உடன்படுவதாக இருந்தால் விடுதலைப்புலிகள் இவ்வளவு தியாகங்களை செய்திருக்க மாட்டார்கள் என்று இன்னும் சிலரும் எதிர்காலத்தில் பிரிந்து நிற்கும் சூழல் உருவாகும்.

இலங்கையின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் போரின் வடுக்களால் அமுங்கி கிடக்கின்றன.மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு என வரும் கால கட்டத்தில் ஒன்றிணைந்த இலங்கையில் சில உரிமைகள் என்ற நிலையிலேயே இந்தியாவோ அல்லது ஏனைய நாடுகளோ பிரச்சினைக்கு தீர்வுகளை காண நினைக்கும்.இதனை இங்கே குறிப்பிடும் நேரத்திலேயே இரு தினங்களுக்கு முன்பு இலங்கை சென்ற மேனன்,நிருபமா குழுவிடம் நில அதிகாரமோ,காவல்துறை அதிகாரமோ கொடுக்கமாட்டோம் என ராஜபக்சே சொன்னதாக தகவல்கள் வருகின்றன.)

இப்படியான ஒரு கால கட்டத்தை இஸ்ரேல்-பாலஸ்தீனிய பிரச்சினைக்கு சிறுபான்மையான இஸ்ரேலியர்களுக்கு பெரும் நிலமும்.பெரும்பான்மை பாலஸ்தீனியர்களுக்கு குறுகிய நிலப்பகுதியும் என்ற வாக்குவாதத்தாலும், ஏனைய அரேபிய நாடுகளின் தூண்டுதலாலும் நிலம் பங்கை பாலஸ்தீனியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.அதனையடுத்து ஐ.நா தீர்மானத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டு தன்னை தனி நாடாக பிரகடனப்படுத்திக் கொண்டது.இதனைப் புறக்கணித்த பாலஸ்தீனியர்கள் இன்று வரை போராடி இறுதியில் 1967ம் ஆண்டு வரையிலுமான நிலத்தையாவது தரவேண்டும் என்று முந்தைய கால கட்டத்திற்கே இவ்வளவு வருட போராட்டங்களுக்குப் பிறகு தீர்வுக்கு வருகிறார்கள்.

எனவே இலங்கைப் பிரச்சினையிலும் அப்படியொரு சூழல் வருமானால் ஈழத்தமிழர்கள் எந்த தீர்வை தமது எதிர்காலமாக தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் எனபதற்கான முன் அனுமானங்களை இப்பொழுதே வகுத்துக்கொண்டு அதன் அடிப்படையில் குரல் கொடுப்பது நல்லது.இதற்கான தீர்வாக நிலத்திலும், புலத்திலும் என தமிழ் மக்கள் வாக்கெடுப்பை நிகழ்த்துவதும் அதன்படி சமரசமோ த்மிழீழத்தை நோக்கி செல்வதும்,தனி ஈழம் கோரிக்கையை முன் வைப்பதும் அவசியம்.இதனை மனித உரிமைக் கழகங்கள்,மேற்கத்திய நாடுகளுடனும், அண்டைய நாடான இந்தியாவுடனும் சேர்ந்தே தீர்வு காண வேண்டியது வரும்.
இந்தியா ஈழ மக்களின் நலம் என்று நினைப்பதை விட தனது எல்லைகள் சார்ந்த நலன்கள் என்ற அடிப்படையிலேயே பிரச்சினையை அணுகும் ஆபத்தும் இருப்பதை உணரவேண்டும்.தற்போதைய மேனன்,நம்பியார், பிரணாப் கூட்டு முயற்சியில் தமிழர்களுக்கு சாதகமான சூழல்கள் இல்லையென்றே கூறவேண்டும்.மத்திய அரசை நெருங்கும் தகுதி பெற்ற எம்.பிக்களில் லாபிகள் என்று சொல்லிக்கொள்வதற்கு எதுவுமேயில்லாததும் கூட பலவீனமே.எனவே உடனடித் தீர்வுகளுக்கான சரியான தருணமும் இதுவல்ல.தமிழகமும் பூகோள,மொழி ரீதியாக ஒரு அங்கம் என்பதால் தமிழகம்,புலம் பெயர்ந்தவர்கள் வரும் நாட்களை நகர்த்தி செல்வதில் ஒரு அங்கத்தினராகிறார்கள்.அரசு சார்ந்து யார் இருக்கிறார்களோ அவர்களது குரல் சார்ந்தும் தீர்வுகள் திசை மாறும் சூழல்களை அவதானிக்க வேண்டும்.ஒரு வேளை தீர்வுக்கான வழிகள் உருவாகும் போது தமிழக முதலமைச்சர் அரியணையில் அமர்ந்திருப்பவரின் குரலும் ஆதரவும்,ஆதரவின்மையும் இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கை தாண்டி இலங்கை சுயாதீனமாக செயல்பட்டு விட முடியாது.விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்த எல்லைகளுக்குட்பட்டே ஈழம் பயணிக்கும்.எனவே புலம்பெயர்ந்தவர்கள் தமக்கென்ற லாபியை உருவாக்குவது அவசியம்.வை.கோ சீமான் போன்றவர்கள் தவிர சமீபத்தில் மே 17 இயக்கம் என்ற புதிய அமைப்பும்,திருமுருகன்,பால் நியுமன் போன்ற இளைய,புதிய முகங்கள் உலக அரசியல் பார்வையோடு இருப்பது திராவிட கழகங்களுக்கும் அப்பால் தமிழகம் தன்னை புதுப்பித்துக்கொள்கிறதென்ற நம்பிக்கையை விதைக்கிறது.

தமிழக தேர்தல் இந்திய அரசியல் களத்திற்கு மட்டுமல்லாமல், தமிழகத்திற்கும்,ஈழப்பிரச்சினைக்கான தமிழகம் சார்ந்த நம்பிக்கைகளுக்கும் நல்ல வாய்ப்பு.இதனை ஜெயலலிதா எப்படி பயன்படுத்திக்கொள்ளப் போகிறார் என்பது இன்னும் பொருத்திருந்து பார்க்கவேண்டிய ஒன்று.கருணாநிதியால் இயலாத ஒன்றை ஜெயலலிதாவால் சாதிக்க கூடிய சந்தர்ப்பம் இந்த ஐந்தாண்டு கால ஆட்சி.இதனை தனது புத்திசாலித்தனத்தால் சாதித்து வரலாற்றில் இடம்பெற்றுக் கொள்ள முயற்சிப்பதும்,சோ போன்றவர்களின் ஈழ எதிர்ப்பு நிலைகளோடு உடன்பட்டு போவதும் அவரது சுய தீர்மானங்களில் இருக்கிறது.
 
விடுதலைப் புலிகளின் காலங்களுக்கும் அப்பால் ஈழமக்களின் பிரச்சினையை மனிதாபிமான நோக்கில் அணுகவேண்டிய காலமிது என்பதோடு ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் இணைப்புக்கான வழிகாட்டலாக உருவாக தம்மால் இயன்ற ஆதரவினை சோ போன்ற அரசியல் விமர்சகர்கள் உணரவேண்டும்.அதுவே பார்ப்பனிய,திராவிட பிரிவுகளாக தமிழன் பிரிந்து போவதை தடுக்கும் இணைக்கும் பாலமாக அமையும்.அது தவிர்த்து வர்ணாசிரம பார்வையோடு சிந்திப்பது அவரவர் அடையாளங்களையே இந்த மண்ணில் விட்டுச்செல்வதற்கு உதவும்.ராஜகோபலாச்சாரியின் குலக்கல்வி தத்துவத்தையும் தாண்டி தமிழகம் பயணித்திருக்கிறது.அதுபோலவே ஈழ உணர்வும் பயணிக்கும்.ஜாதிகளின் உட்பிரிவுகள்,மதங்கள் கடந்து சிந்திக்கும் தேவையில் ஈழப்பிரச்சினை பயணிக்க வேண்டும்.முழுமையான ஆதரவு என்பதை எங்கும் காண இயலாது என்பதால் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களில் சில மாதிரி தீய எண்ணங்கள் கொண்டவர்கள் இங்குமங்கும் உலாவருவதை தவிர்க்க இயலாது.எனவே பெரும்பான்மை தமிழர்கள் எப்படி உணர்கிறார்கள்,சிந்திக்கிறார்கள் என்ற அளவீட்டிலேயே ஈழப்பிரச்சினையை முன்னெடுத்துச் செல்ல இயலும்.
 
இந்த தலைமுறைக்கான போராட்டமிது. காட்சிப்பொருளாக.உணர்வுபூர்வமாக, களநிலைகள்,மக்கள்,ஆதரவாளர்கள் என்ற பலநிலைகளில் உணர்ந்தவர்கள் நாம்.நம்மால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலாமல் இன்னுமொரு தலைமுறைக்கு இதனை மாற்றி விட்டு விடுவதில் தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்களவர்களுக்கும் எந்த விதமான மாறுதலை,தாக்கத்தை உருவாக்கும் என்பதை காலம் மட்டுமே பதில் சொல்லும்.நாம் சுமந்த பாரத்தை நாமே இறக்கி வைக்க முயற்சி செய்வோம்.

2008ம் ஆண்டு துவக்கம் அவதானித்ததில் ஒன்று தொலை தொடர்பு,உணர்வு பூர்வமாக,அறிவு பூர்வமாக சிந்திப்பதில் தமிழர்களில் சிறந்து விளங்குவதோடு எதிர் மறை நிலைகளில் வலம் வருகிறார்கள்.ஒவ்வொன்றும் குட்டி குட்டித் தீவாக இருப்பதை எப்படி இணைப்பது என்ற தலைமைத்துவ பிரச்சினை இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.கவின் ஆட்சி மாற்றத்திற்கு பின் அ.தி.மு.கவின் அரசியல் நகர்வுகள் மிக வேகமாகவும்,அதே சமயத்தில் தி.மு.க செய்யாததை சுட்டிக்காட்டுவதோடு ராஜபக்சே அரசு மீதான போர்க்குற்றங்கள் அறிக்கையின் அடிப்படையில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும்,கச்சத்தீவின் வரலாற்று ஆவணங்கள் தமிழக அரசிடம் இருப்பதை சுட்டிக்காட்டி கச்சத்தீவு பிரச்சினையில் தமிழகத்தையும் ஒரு அங்கமாக சேர்க்கவேண்டுமென்று இரு தீர்மானங்களை பெரும்பாலோனோர் வரவேற்றாலும்,ஜெயலலிதாவின் கடந்த கால விடுதலைப்புலிகள் சார்ந்த ஈழத்தமிழர்களின் நிலைப்பாடு இன்னும் சிலருக்கு ஐயப்பாட்டையும் உருவாக்குகிறது.

தமிழக சட்டமன்ற இரு தீர்மானங்களே இறுதி தீர்வுக்கு முடிவில்லையென்ற போதிலும் சரியான பாதையில் பயணிப்பதன் துவக்கப் பாதைக்கான அழுத்தமாகவே இதனை எடுத்துக் கொள்ளவேண்டும்.மேலும் இலங்கை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல நேற்று தமிழக அரசின் இரு தீர்மானங்கள் பற்றிக் குறிப்பிடும் போது இலங்கை இறையாண்மையுள்ள நாடு என்றும் ஒரு மாநிலத்தின் குரலையெல்லாம் மதிக்க வேண்டுமென்ற அவசியமில்லை யென்றும்,தமது பேச்சு வார்த்தைகள் இந்தியாவின் மத்திய அரசின் நிலைப்பாட்டுடன் மட்டுமே இருக்கும் என்று கூறுவதின் மூலம் இந்திய இலங்கை பூகோள அரசியலை மறைத்தோ அல்லது மறுத்தோ கருத்து தெரிவிப்பதிலிருந்தே இலங்கை அரசின் குள்ள நரித்தனத்தையும்,தமிழர்களை பொருட்படுத்தாத நிலைப்பாட்டையும் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இலங்கையின் வட,கிழக்கு மக்களுக்கான தீர்வுக்கு இரு வழிகள்.

முதலாவதாக கூண்டுக்கிளி கே.பத்மநாதன் சொல்வது போல் இலங்கையின் அதிகார பகிர்வில்லாமல் வாழ்தலே முக்கியம் என்ற நிலையில் வாழவேண்டிய நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விடுவது.இரண்டாவதாக இலங்கையின் இறையாண்மையை மதிக்கும் விதத்திலும் அதே நேரத்தில் தமிழர்களின் உரிமைகளை மதிக்கும் விதத்திலும் தமிழீழம்.முந்தையது எளிதானதும்  இரண்டாவது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் இலங்கை அரசு நடந்து கொள்வதைப் பொறுத்தது.தற்போதைய கால கட்டத்தில் அதற்கான சூழல்கள் ஒன்றும் தெரியாததால் காலம் மட்டுமே இதற்கு பதில் சொல்லும்.

ஒரு வேளை உலக அரசியல் களமும்,இந்தியாவின் சீனா குறித்த கவலையும் இப்பொழுதே இந்திய மத்திய அரசுக்கு தலையையும்,சீனாவுக்கு வாலையும் காட்டும் இலங்கையின் இரட்டை வேடத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்.இலங்கையின் நீண்ட கால நலன் கருதியும் இலங்கையின் இரு தரப்பு மக்கள் விரும்பும் பட்சத்தில் இலங்கையை இந்தியாவின் கட்டுப்பாட்டிலான சுய உரிமைகள் கொண்ட ஈழத்தமிழ் நாடாகவும்,சிங்கள நாடாகவும் சமக்குடிமக்களாக உருவாக்குவதே நல்லது. இது நிகழ்வதும்,நிகழாமல் போவதும் இந்திய எல்லைப்பாதுகாப்பு குறித்த எதிர்கால நிலைகளைப் பொறுத்தது.அமெரிக்கா போன்ற வலுவான நாடாக இருந்தால் இது மாதிரியே செயல்படும் என்பதற்கு முன் உதாரணங்கள் இருக்கின்றன.தூரத்தில் இருக்கும் அந்தமானே இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் போது பத்து,இருபது நாட்டிகல் மைல் தூரத்திலிருக்கும் இலங்கையை தீர்வுக்கான வழியென தொலை தூரப்பார்வையிலும் மாறும் உலக வர்த்தக அடிப்படையிலும்,இந்தியா சார்ந்த இரு இன மக்களின் வாழ்வியல் நன்மைக்கும் இது சிறந்த தீர்வாக அமையும்.பூனைக்கு மணி கட்டுவது யார்?
இலங்கை ராணுவத்தின் கோரப்பசிக்கு இரையான அப்பாவி குழந்தைகள், பெண்கள்,இளம் வயதினர்,முதியோர்,விடுதலைக்காக உயிரையும் துச்சமென மதித்த போராளிகள்,பெண் வீராங்கனைகள்,குழுக்களாகவே இயங்கினாலும் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தோர்,போரில் வாழ்விழந்தோர்,போரால் தாங்கள் செய்யாத தவறுகளுக்காக மாற்று இடம் பெயர்ந்த புலம் பெயர்ந்த மற்றும் இஸ்லாமிய தமிழர்கள்,இரு இனங்களின் போர் பிடிக்குள் இறந்து போன அப்பாவி சிங்களவர்கள்,ராஜபக்சே அரசை எதிர்த்த சிங்கள பத்திரிகையாளர்கள் உட்பட அனைவருக்கும் பிரபாகரன் என்ற ஆளுமைக்கும் எனது 300வது பதிவு சமர்ப்பணம்.

படங்கள் உதவி:கூகிள்.

Monday, June 13, 2011

ஈழ மக்களுக்கும்,மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு-பகுதி 2

விடுதலைக்கான குரலாக எஸ்.ஜே.வி.செல்வநாயகம் காலம்
 

ஈழத்தமிழர் பிரச்சினையை தந்தை செல்வா காலத்திற்கும் முந்தைய சிலோன் வாழ்க்கை நிலை,பிரபாகரன் சகாப்த விடுதலைப் போராளிகள் காலம்,விடுதலைப்புலிகளுக்கும்,ஏனைய போராளிகளுக்கும் அப்பால் தற்போதும் இனியும் தொடர்ந்து பயணிக்கும் மூன்று நிலைகளில் மட்டுமே மதிப்பீடு செய்ய முடியும்.மன்னர் காலத்து வாழ்க்கையை அடுத்து மக்களாட்சி கோட்பாட்டுடன் உலகம் பயணிக்கும் கால கட்டத்திலிருந்து இனி ஈழப்பிரச்சினையை அணுகலாம்.

எனவே தமிழீழ சுய நிர்ணய உரிமை என சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களால் தமிழ் ஐக்கிய முன்ணணி என்ற பெயரால் 1974 வருட அறிக்கையின் சில அம்சங்களிலிருந்து துவங்குவது தமிழீழ உணர்வின் விதைகள் தூவப்பட்ட காலமாகும் என்பதால் பொறுத்தமாகவும் ஈழ வரலாற்றின் துவக்கமாகவும் இருக்கும்.

தற்போதைய நிலைக்கும் ,விடுதலைப் புலிகளின் சகாப்தங்களுக்கும் முன்பும் தமிழீழ குரலுக்கான துவக்கமான காலமாய் எஸ்.ஜே.வி செல்வநாயகம் காலத்து சிலோன் நிலையையும்,போராட்ட காலத்துக்கான வித்துக்கள் விதைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளையும் ஆவண பூர்வமாக இங்கே பார்த்து விடலாம்.

துவக்கப்புள்ளியாக சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் காலம் தொட்டு ஈழ விடுதலைக்கான தேவையை நோக்குவோம்.இலங்கை என்று பெயர் மாற்றம் பெருவதற்கு முன் போர்த்துகீசியர்,டச்சுக்காரர்கள் பின் ஆங்கிலேயர்கள் காலமும் அதனைத் தொடர்ந்த சுதந்திரம் பெற்ற சிலோன் என்று அழைக்கப்பட்ட காலங்களே விடுதலைக்கான தேவைக்கான வித்தை விதைக்கிறது.அதற்கான சான்றாய் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் உரை இங்கே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றமாக...

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமை.

Memorandum from Tamil United Front
to 20th Conference of Commonwealth Parliamentarians
Sri Lanka – 1 September 1974


சிலோன் தமிழர்கள் சார்பாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.எங்களது அன்பான வணக்கத்தை தெரிவிக்கிறோம்.

இந்த அறிக்கையை இங்கே சமர்ப்பிப்பதன் மூலம் உலகின் மனசாட்சியை தட்டி எழுப்புவதோடு, தமிழர்களின் மனித உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்படுவதையும், பல விதமான இனப்பாகுபாடுகளையும் ஏனைய முயற்சிகள் தமிழர்களின் இனப்படுகொலைக்கு மட்டுமே கொண்டு செல்லும்.

சிலோன் தமிழர்கள் பண்பாட்டால்,மதத்தால்,மொழியால்,நிலப்பரப்பில் சிங்கள தேசத்திலிருந்து பிரிந்து நிற்கும் தனி நாடாகும்.

ஐரோப்பியர்களின் படையெடுப்பிற்கு முன் வடக்கில் தமிழ் மன்னனின் ஆட்சியும் தெற்கில் இரு சிங்கள மன்னர்கள் என மூன்று அரசுகள் ஆட்சி புரிந்தன.1619ல் போர்த்துகீசியர் படையெடுப்பின் துவக்கம் முதற்கொண்டு 1659ல் டச்சுக்காரர்கள் கைப்பற்றிய பின் 1796ல் பிரிட்டிஷ்காரர்கள் வருகைக்குப் பின் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் துவக்கம் கொண்டு 1815ம் ஆண்டு மூன்று அரசுகளுமே ஒரே ஆட்சியின் கீழ் வருகிறது.தனித் தனியாக ஆட்சி செய்யப்பட்ட தமிழ்,சிங்கள அரசுகள் பின் ஒரே நிர்வாகத்தின் கீழ் வருகிறது.இந்த கால கட்டத்தில் யாருடைய கருத்தையும் கேளாமல் சுய அதிகார அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டதே பின்பு அனைத்து சிக்கல்களுக்கும் காரணமாகி விடுகிறது.இதனை முதலில் கண்டி சிங்களவர்கள்  எதிர்த்தார்கள்.1945ல் பிரிட்டிஷ்காரர்கள் அதிகார மாற்றம் செய்ய நினைக்கையில் அமைச்சர் குழுக்களின் ஆலோசனைகளை கேட்டார்கள்.பெரும்பான்மை இனத்தவர்களை சார்ந்திருக்கும் இதனை பெருமான்மையான தமிழர்கள் எதிர்த்தார்கள்.இதனை விசாரிக்க லார்ட் சௌல்பரியின் தலைமையில் ராயல் கமிசன் என்ற பெயரில் குழு அனுப்பியதில் சிறுபான்மையினரின் தேவைகளை பாதுகாக்க வேண்டியது குறித்த தேவையை உணர்ந்தார்கள்.

இது குறித்த எந்த சட்ட நடவடிக்கையும் சிறுபான்மையினர் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என வெள்ளை அறிக்கையும் தயாரிக்கப்பட்டாலும் கூட இவை நடைமுறை சாத்தியமில்லாத தனது ஏமாற்றத்தை சிலோன்,பிரிக்கப்பட்ட தேசம் என்ற பி.ஹெச்.பார்மர் (B.H.Farmer) புத்தகத்தின் முகவுரையில் சொல்லும் போது:

“இரு இனத்திற்குமிடையேயான முரண்பாடுகள் குறித்த குறைந்த அறிவே விசாரனைக் கமிசனுக்கு இருந்தது.நிகழ்வுகள் எனக்கும் விசாரணைக் குழுவுக்கும் ஏமாற்றத்தையே ஏற்படுத்துகிறது.”

இருந்த போதிலும் பிரிட்டிஷ் நிர்வாக ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்டதன் நம்பிக்கையின் அடிப்படையில் தமிழர்கள் மூன்று முக்கிய கருத்துக்களை முன் வைத்தார்கள்.
a) சம பங்கீடு
காலனித்துவ நாடுகளின் செயலாராக இருந்த டேவன்சயர் டியூக் சொன்னதின் அடிப்படையில் சட்டத்தில் சம பங்கீடு.இதன்படி ஒரு இனத்தில் மட்டுமே அதிகாரக் குவிப்பு இல்லாமல் அனைத்து வகுப்பினருக்கும் பங்கீடு என்பதோடு மொத்த மக்களின் நலன் சார்ந்த ஒன்றாக கருதியதை சவுல்பரி கமிசனர்கள் அனுமதிக்கவில்லை.
b) பெடரல் சட்ட அமைப்புக்கான தேவை
சுதந்திரம் பெற்ற ஒரு வருடத்திற்குள்ளாகவே தமிழர்களின் உரிமைகள் மோசமாகும் நிலையில் பெடரல் (Indian model of Central and state governance) அரசு முறை முன்வைக்கப்பட்டது.இதன் மூலமாக இரண்டு வேறுபட்ட தேசங்களை ஒரே நாடாக இணைக்கமுடியும் என்று உணர்ந்த காரணத்தினால் இதனை முன்வைக்கப்பட்டது.Mr. S. W. R. D. பண்டாரநாயக்கா மே 1926க்கும் முன்பே பெடரல் அமைப்பை முன்மொழிந்தது இங்கே நினைவுகூறத் தக்கதாகும்.இருந்தாலும் பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்தவுடன் இதனை புறக்கணித்தார்.ஜுலை 17ம்தேதி சிலோன் மார்னிங்க் லீடர் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்ட அவரின் பேச்சின் குறிப்பில் ஒன்றாக

“பழைய வரலாற்றைப் பார்த்தால் தமிழர்கள்,கீழ் நாட்டு சிங்களவர்கள்,கண்டியன் சிங்களவர்கள் என்ற மூன்று பிரிவினர் 1000 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்தார்கள் என்றும் அவர்கள் எந்தக்காலத்திலும் இணைந்து வாழ விரும்பியதேயில்லை.இருந்தாலும் ஒருமித்த ஒன்றுபட்ட நாடாக கருதுகிறது” என்பதன் கருத்துக்கு எதிர்ப்புக்கள் கிளம்பிய போது பெடரல் அமைப்பிலான அரசே இதற்கு தீர்வு என்று ஏற்றுக்கொண்டார்.
c) மூன்றாவதாக இந்த ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டு  யாருடைய ஆலொசனையும் கேட்காமல் 1972ல் ஒருமித்த கருத்தாக புதிய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது.இந்த புதிய சட்டம் சவுல்பரி அரசியமைப்பின் குறைந்த பட்ச பாதுகாப்பையும் முற்றிலுமாக துடைத்ததோடு மட்டுமல்லாமல் சிங்களவர்கள் அல்லாத புத்தமதத்தை சார்ந்தவர்கள் அல்லாதவர்களுக்கு மேலும் பின்னடைவைத் தந்தது.இதன் காரணமாக தமிழர்கள் ஐக்கிய முன்ணணி என்ற அமைப்பில் அரசியல் கட்சிகளையும்,தொழிற் சங்கங்களையும்,கட்சிகள் சாராத அனைத்து தமிழர்களையும் ஒன்றிணைத்தது.இன்று தமிழ் ஐக்கிய முன்ணணி (Tamil United Front (TUF).) தமிழர்களின் குரலாய் ஒலிக்கிறது.தமிழ் ஐக்கிய முன்ணணி புதிய சட்டத்தை நிராகரித்ததோடு மட்டுமல்லாமல் புதிய ஆறு அம்சத் திட்டத்தை முன் வைத்தது.

1972 ன் புதிய சட்டத்தின் ஆறு அம்ச திட்டங்கள்

a) சிங்கள மொழிக்கு இணையாக தமிழ் மொழியும் நிலை நாட்டபடவேண்டும்.
b) சட்டப்படி அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் குடியுரிமை உத்தரவாதம் தேவை.
     தனித்தனிப் பிரிவாக குடியுரிமை வழங்கவோ குடியுரிமையை நிராகரிக்கும் அதிகாரமோ இருக்க கூடாது.
c) மதச் சார்பற்ற நாடாக அனைத்து மதங்களையும் பாதுகாக்க வேண்டும்
d) அரசியல் அனைத்து கலாச்சார மக்களுக்கும் சட்ட அமைப்பு அடிப்படை உரிமைகளை பாதுகாக்க உத்தரவாதம் தரவேண்டும்.
e) அரசியல் சட்டம் தீண்டாமை, ஜாதி,மத பேதமின்றி அனைவரையும் சமமாக பாதுகாக்க வேண்டும்.
f)  சமூக மக்களாட்சியில் அதிகாரம் ஒருமுகப்படுத்தப் படாமல் அதிகார பரவலாக்குவதன் மூலமே ஆட்சி அதிகாரத்தை விட மக்கள் அதிகாரம் விளங்கும்.

புதிய காலனியாட்சி முறையில்:

1. தமிழர்களுக்கான மனித உரிமைகள் மறுப்பு
2. இன வேறுபாடு சட்டம்
3. சிலோன் தமிழர்கள் தாம் வாழும் மண்,மொழி,மதம்,கலாச்சாரத்தால் சிங்களவர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள்
4. சம பங்கீடு
5. பெடரல் அரசியல் சட்ட அமைப்பு

இரு தேசிய,இரு மொழி,பல மத சிலோன் நாட்டை ஒரு சிங்கள மொழி,புத்த மத முன்னிலைப்படுத்தலில் 1974 ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி ஆகஸ்ட் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.தமிழ் மக்களுக்கான அடக்கு முறைக்கு சான்றாக 6 சான்றுகள் இங்கே குறிப்பிடப்படுகிறது.

1.குடியுரிமையும் தனிமைப்படுத்தலும்

சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே சிங்களத் தலைமைகளுக்கு தமிழர்களுக்கு கொடுத்த உறுதிமொழிகளை மறப்பதில் சிரமம் இருக்கவில்லை.சுதந்திரத்திற்கு முன் ஒரே தகுதியிலான குடியுரிமை பெற்றவர்கள்,1948ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் எண் 19ன் படி ஒரு மில்லியன் தமிழர்கள் குடியுரிமை இழந்தவர்களாக்கப்பட்டார்கள்.இந்த சட்டத்தினால் தமிழர்களும்,முஸ்லீம்களும் கூட பாதிக்கப்பட்டார்கள்.தமிழ்,முஸ்லீம் பெயர்கள் கொண்டவர்கள் அரசு சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு தங்கள் குடியுரிமை சான்றிதழ்களை வழங்க வேண்டுமென வற்புறுத்தப்பட்டார்கள்.கீழ் கண்டவைகள் அவைகளில் சில:
a)    அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு
b)    கடவுச்சீட்டு(Passport) மற்றும் பயண சான்றுகள்
c)    குடியுரிமை பத்திரம்
d)    அரிசி வழங்குவதற்கான ரேசன் கார்டுகள்
e)    தேர்தல் அட்டவணையில் பெயர்கள் சேர்த்தல்
f)    சொத்துரிமைப் பத்திரங்கள் மாற்றம்
g)    சிலோன் வியாபாரத்தில் பதிவு செய்தல்
h)    சிலோன்காரர்களுக்கு பகுதியாகவோ முழுமையாகவோ ஒதுக்கப்பட்ட பகுதிகள்

இதற்கும் அடுத்த ஆண்டு 1949ம் வருட பாராளுமன்ற தேர்தல் மாற்ற சட்டம் எண்.48ன் படி தமிழர்களுக்கான ஓட்டுரிமைகள் மறுக்கப்படும் படி சட்டம் இயக்கப்பட்டது.பாதியாக இருந்த தமிழ் மக்கள் தொகைக்கு மாறாக வாக்குரிமைகள் சிங்களவர்களுக்கு 58 இடங்களும்,சிலோன் தமிழர்களுக்கு 15 இடங்களும்,இந்திய தமிழர்களுக்கு 14 இடங்களுமென மாற்றம் செய்யப்பட்டது.
கீழ்கண்ட அட்டவணை இந்த சமமின்மையை உறுதிப்படுத்தும்.

COMMUNITY     1947     1952     1956     1960     1960
    % of seats     % of seats     % of seats     % of seats     % of seats
Sinhalese     63     73     73     78     77
Ceylon Tamils     13     12     12     11     11
Indian Tamils     7     Nil     Nil     Nil     Nil
Muslims     6     8     7     6     7

மேற்கண்ட அட்டவணை சிறுபான்மையினருக்கும் வாக்குரிமை போன்று தென்பட்டாலும் உண்மையில் பெரும்பான்மையானவர்களுக்கு அதிக இடங்களைத் தருவதற்காக வகுக்கப்பட்ட சட்டமாகும்.

2. தமிழர் பகுதியில் தலையீடுகள்.
பெரும்பானமை தமிழர்கள் வசித்த கிழக்கு மாகாண பகுதியிலும் சிங்கள மக்களை குடியேற்றம் செய்து சிங்கள வாக்குரிமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்ததோடு மட்டுமல்லாமல் நிலம் வாங்குவதற்கு தனி உரிமங்கள் வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் தமிழர்கள் தண்டனைகளுக்குட்பட்டு வெளியேற்றபட்டார்கள்.இவையெல்லாம் மக்கள் இயக்கத்தால் இயல்பாய் நிகழ்ந்த ஒன்றாக இல்லாமல் அரசால் திட்டமிடப்பட்ட செயல்கள்.

3. மொழி
மற்ற மொழிக்காரர்களுடன் சம உரிமை என்ற முந்தைய நிலை மாறி தமிழர்கள் அவமதிக்கப்பட்டு ஏமாற்றம் அடைந்தார்கள்.1955ம் வருடம் வரை சிங்களர்களும்,தமிழர்களும் ஒரே உரிமையைக் கொண்டிருந்தார்கள் எனபதில் சந்தேகமேயில்லை.உண்மையில் சிங்களமும்,தமிழும் அரசு மொழிகள் என அரசு கவுன்சில் தீர்மானம் கொண்டு வந்ததை பெரும்பான்மையானவர்கள் வரவேற்றார்கள்.

இது பற்றி திரு.S. W. R. D. பண்டாரநாயகே சொல்லும் போது:

ஒரு தேசத்தின் முக்கிய அங்கம் மொழியென்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.மொழி என்ற வாகனத்தின் மூலமாகவே மக்களின் ஆசைகள்,கனவுகள்,வெற்றிகள் என்பவை பல்லாண்டு காலமாக போற்றவும் பாதுக்காக்கப்பட்டும் வந்துள்ளது.எனவே ஒரு தேசம் எனபது மனவியல்,உணர்வுபூர்வமாக கலாச்சார அடிப்படையில் மொழியின் மூலமாகவே தேசத்தின் மதிப்பு வெளிப்படுத்தப் படுகிறது.இதனால் தான் ஒரு தேசத்தின் முக்கிய அங்கமாக மொழி கருதப்படுகிறது.சிங்கள மொழி மட்டும் அரசு மொழி குறிக்கோளாக இருந்தால் என்ன?ஒரு மொழிக்கும் மேலான திட்டத்திற்கு மறுப்பு இருந்தால் ஏனைய நாடுகள் இரு மொழிக்கும் மேலான அரசு மொழிகள் கொண்டிருந்தும் ஓரளவுக்கு திருப்தி கொள்ளும் நிலையே காணப்படுகிறது.

தமிழை தேசிய மொழியாகவும் அரசு மொழியாக கருதுவதில் எந்த தீங்குமில்லையென்றே நினைக்கின்றேன்.பல தரப்பட்ட வகுப்புகளிடமிருந்தும் இந்த நம்பிக்கையை கொண்டு வருவதற்கு நாம் முயற்சிகள் செய்கிறோம்.எனவே தனிப்பட்ட முறையில் இரு மொழிக்கொள்கையை கடைப்பிடிப்பதில் எனக்கு எந்த மறுப்பும் கிடையாது.மேலும் இதனால் எந்த தீமையோ,ஆபத்தோ,பிரச்சினையோ கிடையாது என நினைக்கிறேன்(அரசு ஆவண பூர்வமான அரசு கவுன்சில் தகவல்,25th May 1944:Vol.1 c809)

ஆனால் 1956ம் வருடம் மொழி திருத்த சட்ட எண் 33ன் படி சிங்கள மொழியே சிலோனின் அரசு மொழியாக விளங்கும் என அறிவிக்கப்பட்டது.இதனால் தமிழர்கள் தமிழ் மொழிக்கான சம உரிமைக்காக தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்தார்கள்.தமிழ் பேசும் பகுதிகளான பட்டிகாலா,திருகோணமலை,வவுனியா,மன்னார்,ஜஃப்னா தமிழர் பகுதிகளில் அரசாங்க அலுவலகங்கள் முன்பு 1961ம் ஆண்டு 57 நாட்களுக்கு சத்யாகிரக போராட்டத்தை செய்தார்கள்.இதனால் அரசு நிர்வாகம் முடங்கிப் போயின.அரசாங்கம் அவசர கால சட்டத்தைப் பிறப்பித்து ராணுவ அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது.தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தையா வைத்தியநாதன் போன்றோர் கைது செய்யப்பட்டார்கள்.வட, கிழக்குப் பகுதியில் தமிழை சட்டப்படி உபயோகிக்க முயன்ற போதிலும் சிங்கள மொழி மட்டுமே பொதுவான அரசு சம்பந்தப்பட்ட மொழியாக இருந்தது தமிழர்களுக்கு அவமதிப்பையும்,சிரமத்தையும் உருவாக்கியது.

4. கல்வி
கல்வியிலும் கீழ்மைப் படுத்தலுக்கான சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.
a)    1960ம் வருட கல்வி சீர்திருத்த சட்டம் எண் 5ன் படியும் 1961ம் வருட சட்டம் எண் 8ன் படி தமிழர்களாலும்,கிறுஸ்தவர்களாலும் நடத்தப்பட்ட பள்ளிகள் தடை செய்யப்பட்டன.ஆனால் புத்த பிரிவீனா பள்ளிகள் தன்னிச்சை பள்ளிகளாக அரசு உதவியுடன் நடத்தப் பட்டன.
b)    எஸ்டேட்கள் என்று அழைக்கப்படும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிகள் அரசால் நிர்வகிக்கப் படாமல் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே எப்பொழுதும் போல் இருந்தது.
c)    தமிழ் மொழியில் கற்பிக்கப்படும் பள்ளிகள் சிங்கள மொழியில் கற்பிக்கப்படும் பள்ளிகளாக மாற்றப்பட்டு சிங்கள மொழியை கற்க வற்புறுத்தப்பட்டார்கள்.
d)    தென் சிலோனில் அரசால் எடுத்துக்கொள்ளப் பட்ட தமிழ்ப் பள்ளிகளில் அதிகம் தமிழ்க் குழந்தைகளே படித்த போதும் இவர்களுக்கு மாற்று வசதிகள் ஏற்படுத்தாமல் சிங்கள பள்ளிகளாக மாற்றப்பட்டது.
e)    வடக்கில் தமிழ் மொழி வழிக்கல்வியாக இருந்த நான்கு பள்ளிகள் சிங்கள மொழி பள்ளிகளாக மாற்றப்பட்டது.
f)    மேற்கல்வி கற்பதற்கான வழிகள்-தற்போதைய அரசு நிர்வாகம் ஆட்சிக்கு வந்த பின் இன பாகுபாடு பின்பற்றப்பட்டது.1970ல் தமிழ் மாணவர்கள் அனுமதி பெறுவதற்கு மேல் நிலை தேவைப்பட்டது.தகுதிகள் மறுக்கப்பட்டு கிராமப் புறங்களுக்கு முன்னுரிமை தருவதன் போர்வையில் இனப்பிரிவினையை உருவாக்கியது.1970ம் வருடம் தமிழ்,சிங்கள மாணவர்கள் பெறப்பட வேண்டிய மதிப்பெண்கள் தேவையைக் குறிப்பிடுகிறோம்.

கல்லூரிகளில் உள்நுழைவுக்கு தேவையான மொத்தம் மதிப்பெண்கள் 

                                                              Tamils     Sinhalese
Peradeniya- Engineering                            250     225
Katubedde- Engineering                            232     212
Medicine and Dentistry                              250     229
Agriculture, Veterinary & Bio-Science        184     174
Physical Science                                        204     183
Architecture                                              194     180

இந்த பிரிவினை ஒரு அரசாங்கத் தவறு என்று அரசு ஏற்றுக்கொண்ட போதிலும் இந்த திட்டம் ரகசியமாக தொகுதி வாரியான அடிப்படையில் தொடர்ந்தது.இதன் அடிப்படையில் தமிழ் மாணவர்கள் தகுதியின் அடிப்படையிலேயே மேற்படிப்புக்கு தகுதி பெற்றவர்களாகிறார்கள்.

5. தமிழர்களுக்கெதிரான வன்முறைகள்.
  1956ம் வருடம் முதல் 1961ம் வருடம் வரையும் 1974ல் தமிழர்கள் வன்முறைக்கு ஆட்பட்டார்கள்.1958ம் வருடம் சில சிங்கள குழுக்களால் உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் மூலம் தமிழர்கள் நிலப்பகுதிகள் அல்லாத பகுதிகளில் வசித்த தமிழர்கள் கொலை,துன்புறுத்தல்,கற்பழிப்பு மற்றும் திருட்டு கட்டவிழ்த்து விடப்பட்டது.1961ம் வருடம் சத்யாகிரகிகளை அப்புறப்படுத்த இந்த குழுக்கள் உபயோகிக்கப்பட்டது.1971ம் வருடம் அரசியல் சாராத கலாச்சார நிகழ்வில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.காவல்துறையும்,ராணுவமும் வன்முறையை குறிப்பிட முடியாத அளவுக்கு கட்டவிழ்த்து விட்டது.

6. பட்டினியும்,சாவும்.

தேயிலை,ரப்பர்,தேங்காய் தோட்டங்கள் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தன.சுதந்திரத்திற்கு பின் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ரத்த ஓட்டமாக விளங்கும் தமிழ் தொழிலாளர்கள் மீது சொல்ல இயலாத அளவுக்கு அரசியல்,சமூக,பொருளாதார ரீதியாக தேசிய சட்டங்கள் மூலமாக ஒடுக்கப்பட்டார்கள்.மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழ் தோட்ட தொழிலாளர்கள் மீது வேலை வாய்ப்பின்மை,குறைந்த ஊதியம்,உணவு பங்கீட்டு அளவு குறைப்பு போன்றவைகளால் இனப்படுகொலைக்கு நிகரான பட்டினிச் சாவு நிலை உருவாக்கப்பட்டது.இதன் மொத்த பாதிப்பாக அதிக இறப்பு விகிதமும், தோட்ட தொழிலாளர்களும் அவர்களது குடும்பமும் உணவு, வேலைக்காக நகரங்களை நோக்கி நகர வேண்டிய சூழல் உருவானது.

தமிழர்களின் துயரங்களுக்கு காரணங்களை குறிப்பிட வேண்டுமானால்
1.அரசு துறைகளில் வேலை வாய்ப்புக்களில் சமமான சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுவது.
2. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி புத்தக பாடங்களில் தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரம்.
3. காவல்துறை,ராணுவத்தின் தொடர்ந்த செயல்கள்
4. அமைதியாக ஒன்று கூடுவதற்கு அனுமதி மறுப்பு
5. தமிழர்களும்,தமிழ் தலைவர்களும் நாட்டை விட்டு வெளியேறும் உரிமை மறுப்பு
6. சிறுபான்மையோரை பாதுகாக்கும் அடிப்படை உரிமையின்மை
7. சரியான காரணங்களின்றி கைது மற்றும் சிறையடைப்பு
8. கைதின் போதும்,சிறையிலும் மனிதாபிமானமற்ற குரூரமான தண்டனைகள்
9. புத்த மதத்திற்கு முக்கியத்துவமும் சட்ட அமைப்பில் அந்த மதத்தை பாதுகாப்பதும் முன்னிலைப்படுத்துவதும்
10. காங்கேசன்துறை மக்களில் 50,000க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்தல் வாக்குரிமை மறுப்பும் கடந்த இரு ஆண்டுகளாக இடைத்தேர்தல் மறுப்பும்.

காமன்வெல்த் மற்றும் தமிழர்கள்.

இன்று சிரிலங்கா இரு தேசம் என்ற கோட்பாட்டில் தமிழர்கள் தங்கள் சுய நிர்ணய உரிமையை நோக்குகிறார்கள்.தமிழர்களின் பிரச்சினை உள்நாட்டு விசயமல்ல.இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் திரு.ராஜகோபாலாச்சாரி குறிப்பிட்ட படி:

“அதிகமான தவறுகள் குடும்பத்தின் சுவர்களிலும்,அதிகமான பொது தவறுகள் நாட்டின் எல்லைகளுக்குள்ளேயே நிகழ்கின்றன.ஒரு நாட்டின் உள் மாகாணங்களின் மதிப்பை மாற்றி அமைப்பதை உலகம் கருதுமானால் அப்புறம் மொத்த உலகின் முன்னேற்றத்திற்கு சந்தர்ப்பமே கிடையாது;சர்வாதிகாரம் உலகின் அதிகாரமாகி விடும்”.

தமிழர் பிரச்சினை சிரி லங்காவின் உள்நாட்டுப் பிரச்சினையென்ற முயற்சிகள் மேற்கொண்டால் அரசியல்,சமூக நிதர்சனங்களை அனுமதிக்காமல் தப்பிக்கவே வழிவகுக்கும்.அதிக ஆபத்துக்கள் கொண்ட இந்த சூழ்நிலை கை நழுவிப்போய் விடுமென்பதில் சந்தேகமேயில்லை.எல்லா வகையிலும் சிலோன் தமிழர்கள் தங்கள் உரிமைகளை பேச்சு வார்த்தைகள் மூலமாகவும்,சமாதான வழிகளிலும் அடைய விரும்புகிறார்கள்; மன கொதிப்பும்,ஏமாற்றங்களும் உருவாகும் சுற்றி வரும் பிரச்சினைகள் இப்பொழுதோ அல்லது சிறிது காலத்திலோ திரும்ப இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு விடும்.

இன்றைய சிலோனில் மோசமான சூழ்நிலைகள் இன்னும் அதிக மோசமாகும் முன் உடனடி நடவடிக்கையும்,உதவியும் தேவை.கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இது குறித்த விவாதக் குறிப்பு இல்லாதுபோயினும்,சிறுபான்மை நாடுகள் பற்றி காமன்வெல்த் நாடுகளில் விவாதிக்கும் நிலை உருவாகும்.இதே போன்ற நிலைகள் நிகழ்ச்சி நிரலில் இல்லாமல் இருந்தும் காஷ்மீர் மற்றும் ஆப்பிரிக்க இனவேற்றுமை போன்றவற்றில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இங்கே மிகவும் மோசமாகும் சூழல்கள் மனிதாபிமான அடிப்படையில் சிலோன் தமிழர் பிரச்சினை குறித்து 20வது கான்பரன்ஸ் கூட்டத்தில் விவாதிக்கப்படவேண்டும். அடிப்படை உரிமைகளுக்காக பலரும் வாழ்வை இழந்த பின்னரே உலக நாடுகள் சிறிய நாடுகள் சிரமத்திலிருக்கும் போது உதவுவதை தற்போதைய வரலாறுகள் காட்டுகின்றன.

CPA என்ற காமன்வெல்த் அமைப்பு 

 பாராளுமன்றத்தால்,இனம்,மதம்,கலாச்சாரங்களுக்கும் அப்பால் சட்டம்,உரிமைகள் என தனி மனித சுதந்திரத்தை பாராளுமன்ற ஜனநாய குறிக்கோள்களோடு  இணைந்து மதிக்கும் அமைப்பு.எனவே சிலோன் தமிழர்களின் பிரச்சினைகள் இந்த கூட்டத்தின் அங்கத்தினவர்களின் அனுதாப கண்ணோட்டத்தோடு நோக்கும் எனபது எங்களின் நம்பிக்கை.இந்த அமைப்பு தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுகிறோம்.

S. J. V. Chelvanayakam, Q.C.,
President, Tamil United Front,
16, Alfred House Gardens
Colombo 3,
Sri Lanka.

அறிவிப்பு: பதிவின் நீளத்திலும்,மொழி பெயர்ப்பிலும் சில பகுதிகள் விட்டுப்போயிருக்க கூடும்.எனவே முழு வாசிப்பின் தேவை வேண்டி பத்திரம் என்று அழகாக பெயர் சூட்டப்பட்ட பதிவின் ஆவணத்திலிருந்து இணைத்த ஆங்கில மூலத்தையும் இணைத்துள்ளேன்.

ஆதரவுக் குரல் நட்புக்களுடன்,ஆக்கபூர்வமான,நேர்மையான மாற்றுக் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.

இனியும் ஈழம் தொடரும்....