Followers

Friday, June 17, 2011

ஈழ மக்களுக்கும் மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு - பகுதி 5

மக்கள் சக்தியின் விழிப்புணர்வு
 
மக்கள் சக்தி, மனிதநேயம்கொண்டவர்கள், தமிழ் உணர்வாளர்கள், இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள், ஊடகவியளாளர்கள், திரைப்படத்துறையினர், பொருளாதார மேம்பாடு கொண்டவர்கள், அரசியல்வாதிகள், கட்சி சார்ந்தவர்கள், வழக்கறிஞர்கள்,  அரசு ஊழியர்கள், பதிவர்கள், சித்தாந்தவாதிகள், வடகிழக்கில் பிறந்தவர்கள், தன்னையும் மீறிய பொது நல உணர்வு கொண்டவர்கள், இளைய தலைமுறையினர், சிங்கள இனத்தின் சமவாழ்வு மனித நேயம் மிக்கவர்கள், (ஒரு இனம் இன்னொரு இன மக்களை மதிக்கும் நிலை உருவாகாத நிலை வரை பிரச்சினைகளை நீட்டிக்கொண்டு போவதே நிகழும்.) என இன்னும் பல நிலைகளிலும், இணையத்திலும் வலம் வருபவர்களுக்கு  சமூக கடமைகளும், பொறுப்புகளும், சுமைகளும் உள்ளன.வெறுமனே விரக்தி கொள்வதிலோ விமர்சனம் மட்டுமே செய்வது என்ற நிலை ஈழ மக்களை இன்னும் இரண்டாம் தர குடிமக்களாகவே விட்டுச் செல்லும் நிலையை உருவாக்கும் என்பதோடு எந்த தீர்வுக்குமான பாதையையும் காட்டாது என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளின் இலங்கை அரசின் செயற்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன
 
நாடு கடந்த தமிழீழ அரசும் புலம் பெயர்ந்த தமிழர்களும்

புலம் பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதித்துவத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசை மேலும் வலுப்படுத்துவது தமிழீழம் மட்டுமெ குறிக்கோள் எனும்பட்சத்தில் போராட்டத்தின் காலங்களும்,அதன் வடிவங்களும் பல பரிமாணங்களில் உருவாகும்.அதற்கான கால வரையறை கிடையாது.மிக கடினமான ஒன்று.ஆனால் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சுகமும்,அங்கீகரிக்கப்பட்ட நாடும் நிரந்தரமானது.

 வட கிழக்கு நிலங்களின் தமிழர்களின் வலிமையும், பலவீனமும் எனலாம்.வலிமையெனும் போது தமிழீழ தாகம் பெரும் பான்மையானவர்களிடம் காணப்படுவதும்,பலவீனம் எனும் போது தாம் அடைய வேண்டிய எல்லைகள் குறித்த பார்வையில்லாமல் தமக்குள் சண்டையிட்டுக்கொள்வதும்,எதிர் விமர்சனங்கள் செய்வதும்.புலம் பெயர்ந்த வாழ்க்கையின் சுகங்கள் என்ற சிறு சலுகைகளை விட சுமைகளையும் அதிகமாகவே சுமப்பவர்களாகவும் அதே நேரத்தில் தமது மக்கள் குறித்த கவலை கொண்டவர்களாயும் விளங்குவது பலமென்று கொண்டாலும் பொன்,கோயில்,உடைகள் போன்றவற்றின் அதி ஆர்வங்களை இனிமேலாவது மக்கள் நலன்களுக்கு செலவழிக்கலாம். குழந்தைகள், தத்தெடுத்தல், விதவைகளின் மறுவாழ்வு,ஊனமுற்றோருக்கு வாழ்வாதாரம்,காணிகள்,கல்வி என நிறைய பொறுப்புக்கள் இருக்கின்றன.

இரு இனங்களின் கலவரங்களின்,போர்களின் அடிப்படையில் ஒருமித்த சூடான் நாடு வட சூடான்,தென் சூடான் எனவும் பிரிந்து தென் சூடான் நாடு முதலாவது நாடாக நாடுகடந்த தமிழீழ அரசை அங்கீகரித்திருக்கிறது.நாடு கடந்த தமிழீழ அரசை வலுப்படுத்தவும்,இன்னும் பல நாடுகளின் அங்கீகாரத்தையும் தேட வேண்டியது அவசியம்.இந்த பாரத்தை புலம்பெயர் தமிழர்களே சுமக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.தற்போதைய நிலையில் தமிழக அரசின் ஆதரவுக்குரல்களை நாடுகடந்த தமிழீழ அரசு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அணுக முயற்சி செய்யலாம்.அதன் முதல் முயற்சியாக தமிழகத்தின் மேற்பார்வையில் வட-கிழக்கு மக்களுக்கு உதவிகள் நேரடியாகப்போய் சேர்வதற்கும் அதற்கான தடையாக இலங்கை அரசோ ராணுவமோ இல்லாத சூழலை உருவாக்குவதும் அவசியம்.தற்போதைய நிலையில் இந்தியாவின் பொருளாத உதவிகள் நிகழ்ந்தாலும் அவை நேரடியாக வட கிழக்கு தமிழ் மக்களுக்குப் போய்ச் சேராமல் சிங்கள மக்களின் நலன் கருதிய செயல்களுக்காய் பயன்படுகிறது.

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க முயற்சி செய்வது.ஒரு இயக்கமே வேரறிந்து போன பின் தடையென்ற பெயரில் மக்களை மட்டும் தனிமைப்படுத்துவதில் அர்த்தம் என்ன இருக்கிறது?மக்கள் இயல்பு வாழ்க்கைக்கும் உலக தொடர்புகளுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தடைகள் நீக்குவது அவசியமான ஒன்று.இதனால் அகதிகள் என்ற பெயரில் தனிமைப்படுத்தப்படும் மக்களும் தமிழகத்தின் ஒரு அங்கம் என்ற நிலையில் கல்வி,வேலைவாய்ப்புக்கள் உருவாகும்.இதற்கு வை.கோவின் நீதிமன்ற வழக்குப் போராட்டம் வெற்றி பெற வேண்டும்.

பத்திரிகைகள்,தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழ் இணையங்கள்,சேனல்4, இங்கிலாந்து பாராளுமன்றத்தில்,அமெரிக்காவில் சட்டத்துறையில்,மனித உரிமைக்குழுக்களில் ஆதரவான நிறைய பெயர்கள் தென்படுகின்றன.இவர்களின் தார்மீக ஆதரவு வெளிப்படையாகவே தெரிகிறது. இந்தியாவில் அருந்ததி ராய் தவிர வேறு இண்டலக்சுவல் குரல்கள் எதுவும் ஈழ ஆதரவாய் புலப்பட வில்லை.இந்திய முன்ணணி பத்திரிகை,தொலைக்காட்சி ஊடகங்களை அணுகுவது அவசியம்.குறைந்த பட்சம் ஆங்கில பின்னுட்டங்களை வெளிப்படுத்தலாம்.

கையெழுத்து இயக்கம்
கையெழுத்து இயக்கத்தை இன்னும் வலுப்படுத்தி மொத்த ஆதரவின் உண்மையான வலுவை அடையாளம் காணுதல்.


தமிழக அரசியல் ஆதரவு
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் தமது சுயநலங்கள் சார்ந்த ஈழ மக்களுக்கான குரல் எழுப்பவே செய்கின்றன எனபதாலும் பாராளுமன்றத் தேர்தலையும்,சட்டசபை தேர்தலையும் தனித்தே கட்சி நிலை சார்ந்தே குரல் கொடுத்த காரணத்தால் ஈழப்பிரச்சினையைப் பொறுத்த வரை தமிழகம் வலுவற்ற நிலையிலே இருக்கிறது.வாக்கு நலன் கலந்த ஈழ ஆதரவாக இருப்பதால் தனித்து குரல் கொடுத்தாலும் பரவாயில்லை.ஈழப்போராட்டம் என்ற ஒற்றைக்குறிக்கோளில் மட்டும் தேவைப்பட்ட போது யாராவது ஒருவரது தலைமையின் கீழ் கட்சியின் தலைவர்கள் ஒன்றாகும் சாத்தியத்தை உருவாக்குவது.இதற்கான முழு தகுதியும ஈழமக்களுக்காக இன்னும் அதிக வலுவாக குரல் கொடுக்கவும்,செயல்படுத்தவும் முன்னெடுத்து செல்வதும் யார் என்பது பெரும் கேள்வி.இதன் காரணம் கொண்டே பிரபாகரனின் தனித்துவம் இன்னும் வெளிச்சத்தோடு தென்படுகின்றது.மேலும் அதிகார ஒன்று குவிப்பின் காரணமாகவே ஒரு இயக்கத்தின் நோக்கங்கள் முடிவுக்கு வந்து விட்டதென்பதால் ஒரே அமைப்பு என்ற ரீதியில் போராடுவதை நசுக்க இந்தியாவோ அல்லது இலங்கையோ முயற்சி செய்யுமென்பதால் அவரவர் கட்சி சார்ந்த கொள்கைகளோடு ஆனால் ஈழ மக்களின் நலன் கருதி ஆதரவு தெரிவிப்பது நல்லதே என்ற இன்னுமொரு பரிமாணத்தையும் நோக்குவோம்.தமிழக தேர்தலின் முடிவில் சில புதிய மாற்றங்கள் தென்படுகின்றன.எனவே கட்சிகளின் கொள்கைகள் என்பவை உள்நாட்டுக்கொள்கை மாதிரியும் ஈழம் தமிழ்நாட்டு அரசியலின் வெளிநாட்டுக்கொள்கை என்ற அடிப்படையில் கலைஞர் கருணாநிதி,ஸ்டாலின்,விஜயகாந்த்,திருமாவளவன்,ராமதாஸ் போன்ற அரசியல் தலைவர்களும் வை.கோ,சீமான், திருமுருகன், தா.பாண்டியன், நெடுமாறன் போன்ற ஈழ உணர்வாளர்களும் Last but not least ஆட்சி பீடமும், அதிகாரமுமே நினைத்தவைகளை செயல்படுத்துமென்பதால் முதல்வர் ஜெயலலிதாவும் செயல்பட வேண்டும்.கட்சி அடிப்படையில் என்னவோ சொல்லுங்கள் செய்யுங்கள்!ஆனால் தமிழீழத்தின் உயிர் நாடியை ஆதரியுங்கள்.இன்றைக்கு சகோதர யுத்தமென்ற கரகரப்பு குரலையும், புலிகளால் ஆபத்து என்ற பிரச்சாரங்களையும் கடந்து வந்திருக்கிறோம்.

தமிழக சட்டசபையில் ஈழப் பிரச்சினை குறித்து விவாதிப்பதும்,தீர்மானங்கள் நிறைவேற்றுவதும்,தீர்மானங்களே தீர்வுக்கு வழியில்லையென்றாலும் அரசியல் ரீதியாக முன்னெடுப்புக்களை கொண்டு செல்வதற்கு இது துணை புரியுமென்பதாலும் தீர்மானங்கள் என்பவை ஜனநாயக அடிப்படையிலான ஆவணங்கள் என்பதையும் நினைவில் கொள்வோம்.குழுவாக இயங்கும் சில இணைய தளங்கள் தீர்மானம் நிறைவேற்றுவதிலோ,ராமநாதபுரம் ஜமின் காலத்து ஆவணங்களை சாட்சியாக கட்சத்தீவுக்கு வைப்பதாலோ பயன் ஒன்றுமில்லை,போராடுவதே புது மாற்றங்களை உருவாக்கும் என்று சொன்னதைப் படிக்க நேர்ந்தது.தீர்மானத்தின் அடிப்படையில் அரசியல் ரீதியாக மக்கள் ஆதரவுடன் போராடுவதற்கும்,உச்சநீதிமன்றம் மூலமாக செயல்வடிவம் கொடுப்பதற்கும் உள்ள வலிமை குழுக்கள் என்றோ கட்சி சார்பாகவோ குரல் எழுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது.ஜமீன் காலத்து ஆவணம் காலாவதியகிப் போனது என்பதால் உச்ச நீதிமன்றத்தில் செல்லுபடியாகாது என்ற கூற்றைக்கூட காண நேர்ந்தது.இந்தியாவில் இயங்கும் தற்போதைய வங்கிகள் அனைத்தும் ஜமீன் முறைகள் ஒழிக்கப்பட்ட பின் தனியாரிடமிருந்து தேசிய மயமாக்கப்பட்ட ஒன்றுதான்.மக்களுக்காகவே அரசியல் சாசனமே ஒழிய அரசியல் சாசனத்திற்காக மக்கள் அல்ல.

சமய சார்பற்ற மதங்கள் கடந்த தமிழீழம்
மனித உரிமை சார்ந்த மேற்கத்திய அறிவுபூர்வ தொடர்பும்,பொருளாதார வளைகுடா உதவியும்.ஈரான் இலங்கைக்கு உதவி செய்வதால் ஏனைய வளைகுடா நாடுகளில் சில தமிழர்களுக்கு உதவி செய்வதும் கூட சாத்தியமே.இதனை மதம் கடந்து இஸ்லாமியர்கள் இலங்கை முஸ்லீம் தமிழர்களின் நலன் கருதியும்,தமிழ் உணர்வும் தமிழ் முஸ்லீம்கள் என்ற நிலையில் முன்னெடுக்கலாம்.மதம் என்ற நிலையில் தூர இருக்கும் சவுதி அரேபியாவே சொந்தமாகும் போது அடுத்த கரையில் இருக்கும் தமிழ் முஸ்லீம்களும் தமிழ் மொழி காரணத்தால் இலங்கையில் வாழும் முஸ்லீம் தனது சகோதரனே என்ற பார்வையில் இஸ்லாமியர்களும் தமிழ் தேசியத்துக்குள் பயணிக்கலாம்.வெறுமனே மதில் மேல் பூனை போல் இருப்பது இலங்கையில் வாழும் இஸ்லாமிய தமிழர்களுக்கு விடிவைத்தராது.மெல்லிய வேறுபாடுகள் உள்ளுக்குள் காணப்பட்டாலும் தமிழகம் என்ற கட்டமைப்பில் இந்துவும்,இஸ்லாமியரும்,கிறிஸ்துவர்களும் ஒன்றாகவே சம ஓட்டு உரிமை அடிப்படை,கல்வியென வாழவே செய்கிறார்கள் என்ற முன்மாதிரிகள் மிக அருகிலேயே நம் கண் முன்னே இருக்கின்றன.

முதல் கட்டமைப்பு
வட,கிழக்கு மக்களை நெருங்கும் தடையின்மை எப்படியென்பது?

இரண்டாம் கட்டமைப்பாக
ஈழத்து மைந்தர்களும் அவர்களை சார்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் சார்ந்தவர்களின் தொடர்பு

மூன்றாம் கட்டமைப்பாக தமிழகமும் தமிழ் மக்களும்

தமிழகத்தைப் பொறுத்த வரையில் வட,கிழக்கு நில உள்பிரிவினைகளை நோக்காது ஈழத்தமிழர்கள் என்ற பொதுப்பார்வையிலேயே தங்கள் ஆதரவை பெரும்பான்மையோர் வழங்குகிறார்கள்.சில முணுமுணுப்புக்கள் கட்சிகள் என்ற நிலையில் காணப்பட்டாலும் தற்போதைய நிலையில் இலங்கை பொருளாதார தடைக்கு மொத்த கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததை தமிழகத்தின் குரலாக இலங்கை அரசு உணரவேண்டும். 
தமிழகம் இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் ஒரு முக்கிய சக்தியென்று உணராமல் இலங்கை அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இலங்கை அரசு பேச்சு வார்த்தைகளை இந்தியாவின் மத்திய அரசுடன் மட்டுமே நிகழ்த்தும் என்ற By pass surgery செய்துகொள்வது இலங்கையின் இதய இரத்த ஓட்டத்தை குறுகிய காலமே ஓடச்செய்யும்.இவை குறுகிய பார்வைக்கும் தீர்வுக்கும் வழிகாட்டாது என்பதோடு இலங்கை அரசின் கொள்கையையும் வெளிச்சம் போட்டுக்காண்பிப்பதாகவே இருக்கிறது.

சரியோ தவறோ அல்லது இரண்டும் கலந்த குரலாக இருந்தாலும் கூட வெறுமனே உறங்குபவர்களை விடவும்,குறைகளிலே நிறைவு காண்பவர்களையும் விடவும் வை.கோவும்,சீமானும்,மே 17 இயக்கத்தின் திருமுருகனும் அமைப்பு ரீதியாக ஓரளவுக்கு இன்னும் நம்பிக்கை தருபவர்களாகவே இருக்கிறார்கள்.ஜனநாயக ரீதியாக இவர்களுக்கு ஆதரவு குரல்களை எழுப்புவதும் அவசியமான ஒன்று.

இந்திய அரசு
மேலும் பக்கத்து வீட்டுக்காரனிடம் பகைமை கொண்டு சீனா,ரஷ்யா என்று இலங்கை சுற்றித்திரிவதன் காரணங்களை இந்திய அரசு உணரவேண்டும்.
இலங்கை அரசால் உருவாக்கும் இந்திய,சீன,ரஷ்ய லாபியையும் இந்திய வெளியுறவு அமைச்சர்,செயலாளர்,பாதுகாப்பு செயலாளர் என்ற அளவில் தமிழர்களால் ஏன் உருவாக்காமல் போகிறது?பக்கத்து மாநிலத்தில் இருக்கும் நாராயணனையும்,மேனனையும் தமிழர்களால் அணுக இயலாத போது இலங்கையால் மட்டும் அவர்களுக்கு சாதகமாக இயங்க வைக்க முடிகிறது?ஒரு வேளை பேச்சு வார்த்தைகள் என்ற கால கட்டங்கள் உருவாகும் போது எதிரி என்று நினைப்பவர்களுடனே கலந்துரையாட முடியும் என்ற அகன்ற பார்வைகளையெல்லாம் வளர்த்துக்கொள்வது அவசியம்.
 
இந்தியாவும் இலங்கை சார்பு நிலை கொண்டது என்பதற்கு காங்கிரஸ் கட்சியின் சுயகோபம் மட்டுமே முதற் காரணம்.நாளை காங்கிரஸ் கட்சியே தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் சூழலோ அல்லது மாற்றுக்கட்சியின் வெளியுறவுக்கொள்கைகள் கூட மாறலாம்.இவையெல்லாம் மக்கள் எழுச்சியையும்,உறங்கும் தன்மையைப் பொறுத்தது.

மொத்த சிங்களவர்களும் தமிழர்களுக்கு எதிரானவர்களா என்றால் இல்லையென்றே கூறலாம்.தமிழர்களிடையே எப்படி ஈழ ஆதரவும்,எதிர்ப்பு நிலையும் இருக்கிறதோ அதனை விட அதிகமாகவே ராஜபக்சே குழு,பொன்சேகா குழுவென மக்களும்,ராணுவமும் கூட பிரிந்து நிற்கிறார்கள் என நிச்சயம் கூற முடியும்.அவசர கால சட்டங்கள் ராஜபக்சே அரசுக்கு சில அவகாச சூழ்நிலையை உருவாக்குகிறதென்பதே உண்மை.அவசர கால சட்டமும்,சிங்களவர்களுடன் சுதந்திர தொடர்பு நிலை உருவாகும் காலத்தில் மக்கள் குரல்கள் ஒலிக்கத் துவங்கும்.இணைந்தும் அதே நேரத்தில் தமது கலாச்சார பண்பாடுகளோடு தனித்தும் வாழ இரு நாட்டுக்கொள்கை அவசியம் என்பதை உணர்ந்த மக்களும் இருப்பார்கள்.இவர்களுடன் நட்புறவை உருவாக்கலாம்.

நான்காம் கட்டமைப்பாக மனித உரிமைக்குழுக்களின் தொடர்பும் மனித உரிமை சார்ந்த பொது விழிப்புணர்வாக உலக மக்களின் அனுதாபம் தேடலும்.தற்போதைக்கு மனித உரிமைக்கழகங்கள் இலங்கையின் போர்க்குற்றங்களை உலகின் முன் வைக்கும் வலுவான சக்தியாக தமிழர்களுக்கு ஆதரவு தருவதை இவர்களுடன் இணைந்து மேலும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவை கொண்டு வரச்செய்வதன் மூலம் இலங்கையை பேச்சு வார்த்தை நிலைக்கு கொண்டு வரவோ ஐ.நா சபை தீர்மானங்கள் கொண்டு வரவோ உதவும்.இதன் முக்கிய பங்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் கையிலேயே இருக்கிறது.

ஐந்தாம் கட்டமைப்பாக உலக நாடுகளளின் ஆதரவு பிரிட்டனின் உதவியோடு அமெரிக்க ஆதரவும்,பிரான்ஸ்,ஜெர்மன் இன்னும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் உதவியும்.

ராஜபக்சே இந்தியாவை நம்புவதை விட சீனா,ரஷ்யாவின் நட்பை வளர்ப்பதில் கவனம் செலுத்துவது தெரிகிறது.இலங்கையின் சீனப்பாய்ச்சலும்,ரஷ்ய குசியும் தமிழர்களுக்கு நல்லதுதான்.பிரிட்டனுக்கு முன்பு செய்த வரலாற்றுத் தவறை சரி செய்யும் ஒரு வாய்ப்பு இலங்கைப் போரால் அமைந்திருக்கிறது.ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக உலக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான காலம் இன்னும் நீளுமென்றே தோன்றுகிறது.அதற்கு பதவியென்ற அதிகாரம் இல்லாத காலம் என்ற நீண்ட தொலைவு வரை போக வேண்டி வரும்.ராஜபக்சேவுக்கும் அடுத்தும் இலங்கை அரசு என்ற கட்டமைப்பும் அரசியலமைப்பும் இயங்கும்.எனவே தமிழர்களின் முக்கிய கவனம் அரசியலமைப்புக்கு எதிராய் செல்வநாயகம் காலம் தொட்டு துவங்கி,ஆயுதப்போராக உருவாகி,இப்பொழுது மக்கள் குரலாக ஒலிக்கத் துவங்கும் தமிழீழம் மட்டுமே இன்னும் தொடர்ந்து செல்ல வேண்டிய பாதை.என்பதை நினைவில் கொள்வோம்.

நேர் சிந்தனைகளும் எதிர்ப்பு மனப்பான்மையும் விரக்தி நிலைகளும்

பிரச்சினைகளுக்கு வழிகளையும் கூறாது எதிர் விமர்சனம் வைப்பதிலும் அதே சமயம் சிங்கள தேசத்து ஒவ்வாமையும் என பல குரல்கள் எழுவதை காண முடிகின்றது.மேலும் விடுதலைப்புலிகளின் தீவிரப்பற்றாளர்கள் என்றும்,இன்னொரு புறம் விடுதலைப்புலிகளின் வெறுப்பாளர்கள் என வடகிழக்கு நிலத்து புலம் பெயர்ந்த மக்களே அதிகம் தென்படுறார்கள்.ஆயுதப்போராளிகளின் முழு ஆதரவு நிலையோ அல்லது முழு எதிர்ப்பு நிலையையோ தவிர்த்து விடுதலைப் போராளிகளினால் விளைந்த நன்மைகள்,பின்னடைவுகள் என்று இரு பக்கத்தையும் அலசி ஆயுதப்போரட்டம் துவங்கியதின் தேவைகள் என்ன,எதனால் என்ற மையப்புள்ளியில் நிற்பதே தமிழர்களுக்கு வலு சேர்க்கும்.

மக்கள் நலன் சார்ந்த எதிர்ப்புக்களை மனச்சிதைவு என்பதா என தெரியவில்லை.தமிழர்களுக்கான எந்த எதிர்ப்பு நிலையையும் பாருங்கள்...குறைகள் சொல்லி காலை இழுத்து விடுவதாகவே இருக்கும்.விடுதலைப் புலிகள் வட கிழக்கு தமிழர்களுக்கு துயரங்களை மட்டுமே கொண்டு வந்து சேர்த்தார்கள் என்றும் வலிகள் தாங்கியவர்களை விட ஏனையவர்களே குற்றம் கண்டு பிடிக்கிறார்கள்.தமிழ் தேசியவாதிகளின் குரல்களே தவறு என்று வாதம் செய்தாலும் கூட ஆயுத சத்தங்கள் ஒய்ந்து போன நிலையில் மக்களின் மறுவாழ்வுக்கான முயற்சிகளை எதிர்வினை செய்பவர்கள் யாராவது செய்திருக்கிறார்களா?துன்பங்களையும், துயரங்களையும் கண்டு குறைகள் காண்பதை விட விமர்சனங்களுடன் மாற்று தீர்வுகளை முன்வையுங்கள்.

நீண்ட வாசிப்புக்கும், ஈழப்போராட்டத்திற்கும், ஈழம் என்ற சொல்லுக்கும், ஆவணங்களும்,சாகசங்களும்,சோகங்களும்,துயரங்களும் விடுதலைக்கான தேவைகளும்,கோபங்களும் கூட இணையம், சேனல் 4 தொலைக்காட்சியின் கோரங்கள் கண்ட உணர்வுடன் கூடிய மக்களின் மனம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன.தீர்வுகள் கண்டறிவதும்,வென்றெடுப்பதும் தமிழர்களின் கடமை.இல்லையென்றால் இதுவும் கடந்து போகும்.

ஆப்பிரிக்க மண்ணில் வைரம் தேடுபவர்கள் சல்லடை வைத்து தண்ணீரை நீக்கி மணலும்,கூழாங்கற்களின் இடையில் வைரத்தை கண்டெடுப்பார்கள்.இந்த பதிவுக்குள்ளும் அப்படி ஒரு சில வைரங்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.நட்சத்திர வாரத்தில் முன்பு எழுதிய பதிவுகளை துணைக்கு தேடும்போது காலம் கடந்து படிக்கும் போது சில உண்மைகளை இப்பொழுதும் படம் பிடிக்கிறதென்ற உணர்வு ஏற்பட்டது.அதே போல இதுவும் இனி வரும் காலங்களில் மெல்ல அசை போடும் போது உண்மைகளை இணையத்தில் உரக்கச் சொல்லும் என நம்புகிறேன்.

ஒரு சில பதிவுகளில் மட்டுமே மேலோட்டமாக சொல்லி விட்டுப் போகலாமென்று நினைத்ததை பதிவர் ரதி இட்ட பின்னூட்டத்தில் ஈழ வரலாற்றை  செல்வநாயகம் அவர்களையும் தாண்டி குறிப்பிட்டிருக்க வேண்டுமென்று சொல்லியிருந்தார்.பதிவர் வானம்பாடிகள் பாலா ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை - பிரமிள் என்ற pdf புத்தகத்தை படிக்குமாறு சொல்லியிருந்தார்.முன்பொரு முறை இஸ்ரேல் உருவாக்கத்தை Exodus by Leon Uris என்ற pdf வடிவைப் பற்றி பதிவர் தருமி குறிப்பிட்டிருந்தார்.எனவே மீண்டும் ஒரு முழு வட்டச் சுற்றாக இவற்றைப் பற்றி சுருக்கமாக அடுத்த பதிவில் தொட்டு விட நினைக்கிறேன்.

6 comments:

வானம்பாடிகள் said...

நீங்கள் சொல்லியிருப்பது அனைத்துமே சாத்தியப்படக்கூடியதே. நைந்த மன நிலையில் என்ன நடக்குமோ என்றிருக்கும் மக்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதைச் செயலால் காட்டவேண்டிய கடமை நமக்குண்டு. அதற்காக விட்டுக் கொடுக்க வேண்டிய ஈகோவும், ஒன்றுபட்டால் இதில் புகழ் என்ற எழவேயானாலும் அனைவருக்குமே என்பதை உணரத்தான் வேண்டும்.முதலில் செதம்பரம் வகையறாவுக்கு மண்டையில் அடித்தாற்போல் ராஜீவ் கொலைக்கு கொடுத்த விலை மிகவே அதிகம். இன்னும் அந்த வியாபாரம் செல்லாது என்று புரியவைக்க ஒட்டு மொத்த தமிழகமும் ஒன்றாய் நிற்க வேண்டும். நரிக்கூட்டத்தை ஓரம் கட்டி பிரச்சினை புரிந்த ஒரு ஆலோசகரை முதலில் பெறவேண்டும்.பார்க்கலாம்.

RISHAN SHERIF said...

அன்பு வணக்கங்கள்,

வலைப்பதிவுக்கு நான் புதியவன், வலைப்பதிவுகளை அண்மையக் காலமாக படித்து வருகின்றேன். எழுத வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை. இருப்பினும் - மதம் சார்ந்த பகுத்தறிவை மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற அவாவால் புதிய வலைப்பதிவை ஆரம்பித்து எழுதுகின்றேன். உங்களைப் போன்றோரின் கருத்துக்களை, வழிக்காட்டல்களை எதிர்ப்பார்க்கின்றேன்.

நன்றி !

JOTHIG ஜோதிஜி said...

பிரச்சினை புரிந்த ஒரு ஆலோசகரை முதலில் பெறவேண்டும்.பார்க்கலாம்

பார்த்தசாரதியை இந்திராகாந்தி கொண்டு வந்த போது ஜெயவர்த்தனே நம்பர் ஒன் பாத்ரூம் போய்க் கொண்டேயிருந்தாராம். இப்ப அங்கே போறவங்க எல்லாருக்கும் ராத்திரிமட்டும் தான் வேலையாம்.

அப்ப பகலில் பேச்சுவார்த்தை.

அதுதான் ராத்திரியே டிஸ்கசன் முடிந்து விடுமே? அப்புறம் ரெஸ்ட் தானே?

இப்படித்தான் ராஜீவ் காந்தி தீட்சித் என்ற வின்ஸ்ட்ன் சார்ச்சில் என்று பாராட்டப்பட்டவர் முதல் இன்று வரைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

இதில் பார்த்த சாரதி, வெங்கடேஸ்வரன் அப்புறம் நம்ம புலனாய்வு தலைவர் கார்த்திகேயன் இவங்க மட்டும் தான் தமிழர்கள். மத்தது எல்லாம் ?

என்னமோ போங்க. ரொம்ப மெனக்கெட்டு ரதி உங்களை எழுத வச்சுட்டாங்க.

பாலாஜி அண்ணா அந்த பிஎப் சாரி பிடிஎப் ஐ எங்களுக்கு அனுப்ப கூடாதா?

ராஜ நடராஜன் said...

பாலாண்ணா!பிரமிள் பற்றி நீங்கள் சொன்னது இன்னும் அடுத்த கட்டத்திற்கு பதிவின் தூரத்துக்கு அழைத்துச் சென்று விட்டது.அடுத்த பகுதியில் அதுபற்றி உங்களையும் பதிவர் தருமி சொல்லிய EXODUS பற்றியும் சொல்லியுள்ளேன்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் இரண்டு வழியில் தீர்வுகளுக்கான பாதைகளை நோக்கிச் செல்லலாம்.முதலாவது மக்களின் குரலாக தமிழகத்திலும்,மொத்த உலகிற்கும் தமிழர்களின் குரல்கள் ஒலிக்குமா?

இரண்டாவது தமிழக அரசியல் மூலமாக மக்கள் துணையோடு குரலை வலுப்படுத்தச் செய்வது.

ஆனானப்பட்ட இந்திய ஊழல்களே அண்ணா ஹசாரே,பாபா ராம் தேவ் என திசை மாறிப்போய் விட்டது.

தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் மக்களை மயக்கத்தில் வைத்திருக்கின்றன.

நீங்கள் சொன்னது மாதிரி பிரச்சினை புரிந்த ஒரு ஆலோசகரை பெறவேண்டியது மிகவும் முக்கியம்.

ராஜ நடராஜன் said...

ரிஷான் ஷெரிஃப் என்ற பெயர் பதிவுலகில் தெரிந்த பெயர்.நீங்கள் புதிது என்று கூறுவதால் அவர் வேறு என நினைக்கிறேன்.

இணைந்து கொள்வோம்.பதிவுகளை ஒட்டி கருத்துகளுக்குப் பஞ்சமா என்ன?பதிவுலகின் பாதி நாட்கள் பின்னூட்டங்களிலேதான்:)

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!உங்களது ஈழம் குறித்த பதிவுகளை அடுத்த பகுதியில் சொல்லலாமென்று நினைத்தேன்.பதிவின் நீளம் மற்றும் புத்தக மதிப்பீட்டின் அடிப்படையில் சொன்னதால் உங்கள் பதிவுகளைப் பற்றிச் சொல்ல இயலவில்லை.மேலும் உங்கள் பதிவுகள பற்றி அனைவரும் தெரிந்திருப்பார்கள்:)

பிரமிள் புத்தகம் 36 பக்கங்களே கொண்டது.mediafire.comல் தரவிறக்கம் செய்யலாம்.தேவையென்றால் தனிமடலுக்கு அனுப்பி வைக்கிறேன்.