Followers

Saturday, October 24, 2015

பதிவுலக ராதாரவிக்கு

நண்பரே!ஓடிக்கொண்டிருப்பதாலும்,இணைய தடங்களாலும் உடனடியாக மல்லுக்கு நிற்க முடியாததற்கு முதலில் உங்களுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.இலவச விளம்பரத்துக்கு நன்றி என்று பின்னூட்டம் போட்டால் கூட வெளியிட மறுக்கும் நண்பரே உங்கள் பதிவு பாணியிலேயே பதில் சொல்ல வேண்டி காலம் கடந்து தட்டச்சுகிறேன்.

தமிழ்மணம் இப்பொழுதெல்லாம் சண்டை களமில்லாமல் அழகாய் நகர்கிறது.அதற்கான காரணங்களில் விவாதப் பொருள் உரைப்போரும், முக்கியமாக கருத்தாளர்கள்,சண்டைக்கோழிகள் பெரும்பாலும் ட்விட்ரேன், முகத்தை பார்க்கிறேன்,பஸ் விடறேனாக்கும்,பதிவே போட மாட்டேன்... ஆனால் பின்னூட்டத்தில் கவனிச்சுக்கிறேன் என்று பலர் பிரிந்து போனதாக இருக்கலாம். 

பதிவுகள் எழுதுவதை விட மற்றவர்களின் பார்வைகள் எப்படி என்று கவனிக்கும் எனக்கு முன்பு மாதிரி பதிவுலகமே கிடையா இருக்க முடியவில்லை. இதோ போன வார கோழிச்சண்டைக்கே இப்பத்தான் பதில் சொல்ல முடிகிறது.

திரைப்படங்களை நியூஸ் ரீலில் துவங்கி,டைட்டில் கார்டில் பெயர்கள் பார்த்த படங்கள் முதல்,கதாநாயக,நாயகிகளை பின் தள்ளி இளையராஜாவின் இசை,ஒளிப்பதிவாளர்கள் அசோக் குமார்,ஸ்ரீராம்,எடிட்டிங் லெனின்,விஜயன் இன்னும் பல தொழில் நுட்ப கலைஞர்கள்,கவுண்டமணி,செந்தில்,வடிவேல் காலம் என மாறிய போதும் கூட திரைப்படங்கள் அனைத்தும் பார்க்கும் ஞான பண்டிதம் என்னிடம் இல்லை.நடிகர்,நடிகைகள்,இசை,ஒளிப்பதிவு.கதை நல்லாயிருக்கு என விமர்சனம் படித்தோ,இப்பொழுது பதிவர்கள் பலர் ஆஹா,ஓஹோ என்றால் மட்டுமே சில படங்களை இப்பொழுது இணையத்தில் பார்க்கிறேன்.

முக்கியமாக உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, மேதாவித்தனம் என்ற அகம்பாவம் என்னிடம் இல்லை.அப்படி புரிந்து கொண்டால் அது உங்கள் பார்வை. இணைய தளமும்,கைபேசியும் வராத கால கட்டத்தில் என் குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் கூட இதே பாணியில் தான் நான் கடித பரிபாஷை செய்துள்ளேன். இவன் கடிதம் எழுதுகிறானா இல்ல கதை வசனம் எழுதுகிறானா என்ற கிண்டலை என் அண்ணனிடம் வாங்கி கட்டியுள்ளேன்.

பூச்சி முருகனை நினைத்துத்தான் கருத்து சொன்னேன். ஆனால் சங்கிலி முருகன் பெயரை கை தட்டி விட்டது. பின்னூட்டத்தில் பெயர் குழப்பத்தை லூஸ்ல விட்டுட்டேன்.ஆனாலும் நம்ம நக்கீரன் பொருள் குற்றம் கண்டு இலவச விளம்பரம் தந்து விட்டார்.பதிவின் கருத்துக்கள் எதையும் அடைகாத்து சொல்வதில்லை. அந்த அந்த நேரத்து மன நிலை,நிகழ்வுகளை ஒட்டியே கருத்து சொல்லியிருக்கிறேன். 

கலைஞர கருணாநிதி தமிழகத்துக்கு நிறைய செய்திருக்கிறார்.நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். ஆனால் 2ஜி கால கட்டத்தில் குடும்ப நலனை முன் வைத்து ஈழ பிரச்சினையை திசை திருப்பியதை ஆதங்கத்தோடு சொன்னால் அப்ப நீ அ.தி.மு.கவுக்கு வால் பிடிக்கிறவன் தானே என்று நண்பர் பிராண்டுவார். எந்த கட்சிக்கும் வாக்க படாததால் நேர்,எதிர் கருத்துக்களை மட்டுமே முன் வைக்கிறேன். எங்கோ யோகா பற்றி சொல்லியிருக்க கூடும்.அல்லது இஸ்லாமிய சகோதரர்கள் பிரச்சாரம் பண்ணுறேன் பேர்வழிகள் என பதிவுகள் இட்ட கால கட்டத்தில் அரசல் புரசலாக பின்னூட்டங்களும்,பதிவும் வந்திருக்கலாம். உடனே நீ இந்துத்வா என்று இவர் பல்லிளிக்க நான் பல்லை எனக்குள்ளே நற நறக்க... இதோ இப்பொழுது மோடியின் தேனிலவு முடிந்து விட்டது.மாட்டுக்கறி,அப்பாவி இஸலாமியரை கொலை செய்த பஜ்ரங்க பலிகள் பற்றி சொன்னால் எனக்கு பச்சை வர்ணம் பூசுவீரோ?  

எங்கடா சந்து கிடைக்கும்,பேந்தா ஆடலாம்ன்னு பின்னூட்ட நாயகன் வவ்வால் ஏதாவது சொன்னால் நம்ம நண்பர் மாற்று கருத்தை முன் வைப்பார். அவர் ஒன்றை சொல்ல,இவர் ஒன்றை சொல்ல நான் பேன்னு பேய் முழி முழிப்பேன். ஒரு கட்டத்தில் வரம்புகள் மீறி அண்ணன் ராதாரவியின் அங்குசத்தை வீசுவார் நண்பர். நீங்க பதிவுலகில் சொன்னதை விட,சண்டை தவிர... வவ்வால் நிறையவே சொல்லியிருக்கிறார் என நான் பிராண்ட இவருக்கு அமெரிக்காவில் எகிறுவதை எழுத்திலேயே உணர முடியும்.ஏற்கனவே வவ்வால்,ஜெயதேவ் போன்றவர்கள் உங்களை துவைத்து காயப்போட்டு விட்டார்கள். இனி புதிதாக நான் என்ன சொல்ல! உங்கள் பதிவுலக உறவுகள் முறிந்து போனாலும் கூட நான் நட்போடுதானே உங்களை கிண்டல் செய்திருக்கிறேன். உங்கள் தமிழ்,ஆங்கில மொழி நடைக்கு இதை விட இலக்கண,இலக்கிய லட்சணமாய் யாரும் சண்டை போட முடியாது.

பதிவுலகம் நல்ல பாடங்களைத்தான் நிறைய கற்றுத்தந்திருக்கிறது. ஒரு கருத்துக்கு பல பரிமாணங்கள் இருக்கிறது என்பதை நண்பர் மற்றும் வவ்வால் போன்றவர்களின் கருத்து மோதல்களில் கற்றுக்கொண்டிருக்கிறேன்.. எனக்கு பிடிக்கும் கருத்துக்கள் இன்னொருவருக்கு பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்து கொண்டுள்ளேன். எதற்காக பதிவிடுகிறேன்? எனக்காகவா!பிறரின் கவனம் ஈர்க்கவா என்ற புரிதல் கூட இன்று வரை என்னிடமில்லை.

எத்தனை பேர் பொது வெளியில் இருக்கிறார்கள் என்று கருத்துரிமை காரணம் காட்டி விமர்சனம் செய்திருப்பேன். அதே போல் நானும் விமர்சனத்துக்கு உட்பட்டவனே. ஆனாலும் இன்னும் என்னை மற்றவர்கள் விமர்சிக்கும் தகுதி நிலைக்கு வளரவில்லையென்பதையும் அறிவேன். ஏதோ உங்களைப் போன்றவர்கள் அருள் பார்வை கிடைக்கிறது.

பதிவுகளில் கருத்து சொல்வதற்கும் தமிழக அரசு இயந்திரங்களும்,மனிதர்கள் இயங்குவதற்கும் நிறைய வித்தியாசங்களை சமீபத்தில் அனுபவ பூர்வமாக கண்டேன்.பதிவுலகம் தீவு மாதிரி.வழி தவறி வந்து விட்டவர்கள் எப்படியோ வழி தேடி ஓடி விட்டார்கள். ஏதோ சிலர் இன்னும் ஓடிக்கொண்டும் தேடிக்கொண்டுமிருக்கிறோம்.

பூச்சி முருகனும் சங்கிலி முருகனும் பெயர் குழப்பத்திற்கு என்னை மன்னிப்பார்களாக!மூளை பதிவு செய்ததை கணினி சரியாக கொண்டு வரவில்லை.மீள் பார்வை பார்க்காத குற்றத்தால் தவறு தவறாகவே போய் விட்டது.

அய்யே! இந்த பதிவை பதிவேற்றும் முன் நண்பர் நம்ம பின்னூட்ட கருத்து வெளியிட்டிருக்கிறாரா என்று பார்த்தேன்.ம்ஹும்! பதிலா பதிவுலகம் போரடிக்கிற மாதிரியிருக்குதே தோரணையில் ஏதோ புலம்பிகிட்டிருக்கார். இதோ! ஏதோ என்னால் ஆன உதவி:)

Sunday, October 18, 2015

தமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்

அம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தியின் வெற்றி அறிவிப்பை தொடர்ந்து தோல்விகளை கௌரவமாக ஏற்றுக்கொண்ட ராதாரவி,சரத்குமார் தன்னிலை திரும்பியமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கி\றேன். ஓய்வாக இருக்கும் போது என்னவெல்லாம் பேசினோம் என்று யூடியுப் பக்கம் சென்று சுய பரிசோதனை செய்து கொள்ளூங்கள். யூ டூ சரத் சார்? So Sad.

தோல்விக்குப் பின் வந்த பண்புகளை தேர்வுக்கு முன்பே காட்டியிருந்தால் சரத்குமார் அணிக்கு எந்த தில்லு முல்லும் செய்யாமலே வெற்றி வாய்ப்புக்கள் வந்தடைந்திருக்கும். தபால் ஓட்டு சரத்குமார் அணிக்கு அதிகமாக வந்த போதே அவரின் குழு வெற்றியை நோக்கி நகர்வது மாதிரியே தெரிந்தது. நேரடி ஓட்டுக்கள் உண்மையான கள நிலையை கடைசி நேரத்தில் வெளிப்படுத்தியது. திரைக்கு முன்னால் மைக்கில் காட்டிய கோபம், குதர்க்கம், தனி மனித  தாக்குதல்கள் திரைக்கு பின்னால் எழாமல் தமிழ் tதென்னிந்திய திரையுலகம் மேலும் வளர வேண்டும்.

எனது அன்பிற்குறிய பாரதிராஜா,சேரன் போன்றவர்கள் திரைப்படங்களை உருவாக்கும் திறனுக்கும்,தனி மனித செயல் படும் விதத்திற்கும் வித்தியாசங்கள் உள்ளன என்பதை நிரூபணம் செய்தார்கள். தமிழ் திரைப்பட உலகம்  பல மாநிலங்களின் திறன் தேடுதல் கொண்ட அமைப்பு. முக்கியமாக பாரதிராஜாவின் தேடல் ஓட்டம் இருக்கிறதே! ஒரு தமிழ் நடிகையை கூட அறிமுகப் படுத்தாமல் தமிழனுக்கு வக்காலத்து  வாங்குகிறார் பாரதிராஜா.சீமானின் பிற்போக்கு மன பாவத்தோடு இணைகிறார் சேரன் .சரத்குமாருக்கு நன்றி கடமை பட்டவர் என்கிறார். உலகம் மொழிகளை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.இதில் தமிழ் திரைப்படமும் இணைந்தாலும் தமிழன் டா என்ற கொக்கரிப்புக்கு மட்டும் குறைவில்லை.பேசும் மொழியும்,உணர்வும் தமிழுக்கு வேறுபட்டவை.இவை திரைப்பட சண்டையில் சேர்த்தியில்லை. அப்படியிருந்திருந்தால் இன்னும் தமிழ் திரையுலகம் பாகவதம் பாடிக்கொண்டே இருந்திருக்கும்.

ரஜனி சார்! இவ்ளோ நாட்கள் வாய் மூடி மௌனம் சாதித்தீர்களே! இன்னும் சில மணி நேரம் ஓட்டுப் போடும் வரை மௌனம் கலைக்காமல் இருந்திருக்கலாமே?சென்ற பதிவில் உங்களுக்கும் சேர்த்துதானே உங்கள் மௌனத்துக்கு வக்காலத்து வாங்கினேன்:) மற்ற மாநில நடிகர் சங்கங்களை விட திராவிடம் என்ற சொல்லுக்கு இணையாக தென்னிந்தியா என்ற சொல் நன்றாகத்தானே இருக்கிறது! கமல் இந்திய நடிகர் சங்கம் என்கிறார்.உங்களை விட கமல் ஒரு படி மேல் என்பதில் ஐயமில்லை. நடிப்பு,சிந்தனை உட்பட. 

உலகப் பார்வை பார்க்கும் என்னைப் போன்றவர்களுக்கு தமிழ் திரையுலகம் எல்லைகள் கடந்ததாகவே படுகிறது. கலை விழாவுக்கு சிங்கப்பூர்,மலேசியா வாழ் மக்கள் கரம் நீட்டுகிறார்கள். டூயட் பாடலுக்கு அனைவரும் ஐரோப்பா ஓடுகின்றோம் ( பாடலுடன் கூடவே நானுமல்லவா பயணிக்கின்றேன்:))

திரைப்பட வசூலை லண்டன் போன்ற நாடுகள் தாங்கிப் பிடிக்கின்றன. வேண்டுமென்றால் அமிதாப்பையும், சாருக்கானையும், ஜாக்கி சானையும், அர்னால்ட் ஸ்வாஸ்னகரைக் கூட கொண்டு வந்து விடுகிறோம். பன்முகம் கொண்ட நம்மவர்களின் பரந்த மனப்பான்மையே இந்திய திரைப்பட துறையில் இந்தி திரைப்படங்களுக்கு இணையாக் செயல்படுகிறது எனலாம்

தமிழ் திரையுலகம் மொழி,கலாச்சாரத்தோடு,பொழுது போக்கு,மகிழ்ச்சி என்ற நகைச்சுவை, கலையோடு,ஒலி,ஒளிப்பதிவு காதலுடன்,பாடல்,இசையென்ற கலவையோடு வியாபார யுக்திகளை திரைப்படத்தின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கிறது. இவற்றின் பின் தனி மனித வாழ்க்கையின் வெற்றி தோல்விகள் அமுங்கி கிடக்கின்றன.

பெற்றோர் வைத்த பெயரே பலருடன் ஒட்டிக்கொண்டு வாழ்க்கை முழுவதும் உச்சரிப்பு சொல்கிறது. மரபு காக்க குரல் கொடுப்போர்கள் தென்னிந்திய திரைப்பட சங்கம் பெயருக்கே வாக்களிக்கலாம்.தற்போதைய சூழலில் ரஜனியின் குரலாக தமிழ் திரைப்பட நடிகர்கள் சங்கம்,இந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் விவாதத்தையும்,புது அரசியலையும் உருவாக்கும்.தமிழும் சேர வேண்டுமென்று  ரஜனியோடு விரும்புபவர்கள் தலைப்பில் உள்ள படி தமிழ் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் என வைத்துக்கொள்ளலாம்.தமிழும் இருக்கிறது,இந்தியாவும் இருக்கிறது:)

பெயரில் என்ன இருக்கிறது. பாண்டவர் அணி தமிழ் திரைப்பட நடிகர்களுக்கும்,முக்கியமாக நலிந்த நாடக நடிகர்களுக்கும்,துணை நடிகர்களின் வாழ்வுக்கும் எப்படி செயல்பட போகிறது என்பதும் இவர்களை தொடர்ந்து அடுத்த தலைமுறை எப்படி முன்னோக்கி செயல்படுகிறது என்பதே முக்கியம்.

Thursday, October 8, 2015

விஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்!


  • அரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிறது எனலாம்.சங்கிலி முருகன் யாரென்றும், அவர் வழக்கு தொடர்ந்து காலம் தொட்டு சுமார் 5 வருடங்களுக்கும் மேலாகியும்,குமரிமுத்து,எஸ்.வி.சேகர் போன்றவர்களை வெளியேற்றிய கால கட்டங்களில் புகைய துவங்கி இன்று கோபக்கனல்கள்,எதிர் மறுப்பு என பொது வெளிக்கு  வந்து விட்டதால் கருத்துரிமை பங்காளியாகிறேன்.


சரத்குமார் அணியில் ஓரளவுக்கு தன்மையாக,மென்மையாக பேசும் குரல் சரத்குமாருக்கு மட்டுமே இருக்கிறது.ஆனாலும் அரசியல சாவகாசம்,பொதுப் பிரச்சினைகளை கையாண்ட அனுபவங்களால் கட்டப்பஞ்சாயத்து அரசியல் தொனியில் குற்றங்களை தொடுகிறார்.வாதங்களை வைக்கிறார். 

திரைப்படத்துறையினருக்கு கிடைக்கும் பயணங்கள்,மனித உறவுகளின் உளவியலை நடிப்பு,கதை,வசனம்,முகபாவங்கள் என பல வடிவத்தில் கொண்டு வரும் வாய்ப்பு பெற்றவர்கள்.இதுவே அனுபவங்களாகவும் ,தமிழகத்தின் வாழ்வியலை உணரும் அதிக வாய்ப்புகளும், வரங்களும் பெற்றவர்கள். ஆனாலும் ராதாரவி,சிம்பு,ராதிகா என அனைவரும் ஞான சூன்யங்களாக இருக்கிறார்கள்.

 நண்பர்களிடம் கெட்ட வார்த்தை பேசுவதற்கும்,மைக்கை கையில் ஏந்திக்கொண்டு திட்டுவதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.என்ன வருண் காதில் விழுகிறதா:) பதவிக்கு ஆசை என்பதை விட 29 வருடம் 11 மாதம் குத்தகைக்கு விட்டதில் குளறுபடிகள் இருக்கின்றன என்பதை சங்கிலி முருகன் பேச்ச்சிலும்,சரத்குமாரின் மறுப்பு அறிக்கையிலும் உணர முடிகிறது.

ரஜனி,கமல்,சூர்யா,விஜய்,அஜித் போன்றவர்கள் பேசாமல் இருப்பதில் அர்த்தம் இருக்கிறது.அவர்கள் அமைதியாக இருப்பதை ஆதரிக்கிறேன். 

 சின்னப்பையனிலிருந்து நடிக்கிறேன் என்று ஒருமையில் விஷாலை திட்டி சிம்பு கத்துவதற்கும்,கமலின் சின்ன வயது முதல் நடிப்பிற்கும்  வீணாப்போன சென்னை ஆற்றுக்கும்,,இமயமலை அடிவார அருவிக்குமான வித்தியாசங்கள் உள்ளது.

இரண்டு அணிகளின் மேடைகளின் பக்கவாத்தியமாக நிற்பவர்களின் முகபாவங்களிலேயே தெரிகிறது பஞ்ச பாண்டவர் குழுவின் வெற்றிக்கான அறிகுறியும்,சோர்ந்து போன முகங்களாய் சரத்குமார் அணியும். 

சரத்குமார் அணிக்கு தோல்வி நிச்சயம் என்ற போதிலும் பின்வாங்காது ஜனநாயக தேர்தலுக்கான அடிக்கல்லை அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லட்டும்.ராதாரவி திரைப்படக்குழுவினர்க்கு ஆற்றிய பணிகள்,சரத்குமார் வங்கியில் பேசி கடனை குறைத்த நல்ல காரியங்கள் ஒரு தராசிலும்,கெட்ட வார்த்தைகள்,ஈகோ போன்றவை மறு தராசிலும் ஒப்பிட்டாலும் பெரும் தவறாக 30 வருட குத்தகை மாபெரும் தவறு. 

எட்டாத,கிட்டாத தூரத்தில் நான் வனவாசம் செய்வதால் திட்டக்குழுவினரான சண்டைக்கோழிகளான சரத்குமார் அணி மைக்கை பிடிக்காமல் மனதுக்குள்ளே என்னை திட்டுமாறு வேண்டுகிறேன்.

முடிக்கிறதுக்கு முன்னாடி சத்யராஜ் கடைசி ரயிலை பிடித்து வந்ததற்கு பாராட்டுகள். சிவக்குமார்,பாக்கியராஜ், பிரகாஷ் ராஜ், போன்றவர்களிடம் பெரும் மெச்சூரிட்டி வெளிப்படுகிறது.