Followers

Monday, July 20, 2015

உப்புவேலியும்,ரோப்வேயும்

பதிவர் கிரியின் உப்புவேலி குறித்த தகவலில் ராய் மாக்ஸம் (Roy moxham) பிரிட்டிஷ் உப்பு சத்தியாகிரக காலத்து உப்பு வரிக்கு காவலான இப்பொழுது காணாமல் போன உப்பு வேலி பற்றி கூறியிருந்தார்.

மொகஞ்சோதாரோ,ஹரப்பா காலம் தொட்டு இந்திய வரலாறு சரியாகவே இல்லை.ஏதோ அங்கொன்றும்,இங்கொன்றுமாக சிதிலமடைந்த கட்டிடங்கள்,கல்வெட்டுக்கள்,ஓலைச்சுவடிகள்,முப்பாட்டன்கள் எழுதிவைத்த பாடல்கள்,கூத்து,நகர்ப்புற பாடல்கள் என கிடைப்பதை வைத்து காதும்,கண்ணும்,மூக்கும்,வாயும் வைத்து நிலைத்து நிற்பவையே இந்திய சரித்திரம். அரசு சார்ந்த அறங்காவல் துறை மூதாதையர் சொத்து என பலவற்றை பாதுகாத்தாலும் இரும்பு கதவோடு அரசு இயந்திர கதவும் சேர்ந்து என்பதால் ஆராய்ச்சி குறித்த தேவைக்கு பலருக்கும் சென்றடைவதில்லை என அன்பர் ஒருவர் புலம்பியிருந்தார்.

மொழிகள் உருவாகியது எப்படி  என்ற ஆர்வம் குறித்த தேடலில் தமிழ் மொழி குறித்து ஏராளமான தகவுகள் இருப்பது பற்றி தமிழ் தனது தொன்மை சார்ந்தும்,வரலாறு சார்ந்தும் எப்பொழுதும் பெருமை பட்டுக்கொள்ளலாம்.மனு காலம் தொட்டு இருக்கிறேனாக்கும் என்று சொல்லும் சமஸ்கிருதம் தத்துவார்த்தம் சார்ந்தும்,இப்பொழுது கோயில் மொழியாக மட்டுமே இருக்கிறதே ஒழிய அகண்ட பாரதம் வரலாறு சொல்வதில்லை. வரலாற்று முக்கியத்துவத்தை பாடம் படிப்பவர்களுக்கு கொடுத்திருந்தால் ஒருவேளை இந்திய வரலாற்று தொகுப்பு இன்னும் செழுமையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். இப்பொழுதும் கெட்டுப்போகவில்லை.காமிராவின் புகைப்படக்கலையை பொழுது போக்காக மட்டுமின்றி வரலாற்று பாடத்தின் ஒரு பகுதியாக வைப்பது நிகழ்வுகளை தொகுப்பதற்கு உதவும். இப்போதைய கணினி யுகம் இந்திய வரலாற்றை மென்மேலும் மேன்மை படுத்த உதவும்.

இந்த ஆதங்கத்தை தொடர்ந்து ராய் மாக்ஸம் தளத்திற்கு சென்றால் அவர் வெள்ளைக்கார துரையாக தேயிலை எஸ்டேட்டில் வேலை பார்த்தவர் என்ற தகவல் அறிய நேர்ந்தது. 

இனி கல்லூரி காலத்தில் கோயம்புத்தூரிலிருந்து  வால்பாறை வரை சுமார் 120 கி.மீட்டர் சைக்கிள் பயணம் செய்த நினைவுகளிலிருந்து.

இப்பொழுது ஆழியார் அணைக்கட்டு முதற்கொண்டு வால்பாறை வரை சுற்றுலா பகுதியாகி விட்டன. முன்பெல்லாம் அப்படியில்லை. பெரும் பதிவர் கந்தசாமி அவர்களே கூட அந்த காலகட்டத்தில் அட்டகட்டி தாண்டியிருப்பாரோ என்பது கூட எனக்கு சந்தேகமே:) காரணம் பொள்ளாச்சியில் துவங்கும் பஸ் பயணம் எங்கும் நிற்காது அட்டகட்டியில் டீகுடிக்க,ஒண்ணுக்க அடிக்க என இடை நிறுத்தம் செய்து வாட்டர்பால்ஸ்,கவர்க்கல்,ஐயர்பாடி,ரொட்டிக்கடை,புதுதோட்டம்,வால்பாறை என முடியும். ஆனைமலை,ஆழியார் கிராம வாகனங்களுக்கு ஆழியார் அணையின் வளைவுகளை கண்டாலே நடுக்கம் என்பதால் அந்தப்பக்கமே போகாது என்பதாலான ஊகம்.எனவே என்னை மாதிரி சைக்கிள் பேர்வழிகளுக்கும்,மோட்டார் சைக்கிள்காரர்களுக்கு மட்டுமேயான அபூர்வ அனுபவங்கள் எனலாம்.பேச்சாளர்கள் சொல்லிக்கொள்ளும் நேரமின்மை காரணத்தால் சுருக்கமாக பயணிப்போம்.

முன்பு மனிதன் மிருகங்களை வேட்டையாடிய காலம் போய் இப்பொழுது பாரஸ்ட் ரேஞ்ச் எனும் காவல் கட்டுப்பாடு,விலங்குகள் மனிதனை வேட்டையாடும் பயத்தில் வாகனம் தவிர சைக்கிள் பயணம் சாத்தியமில்லை. 

இயக்குநர் பாலாவின் பரதேசி ஒரே நேர்கோட்டில் பயணிக்காமல் ஆழியார் அணைக்கட்டைத் தாண்டி கிட்டத்தட்ட வேதாந்திரி மகரிஷி அறிவுத்திருக்கோயில்,அதனை அடுத்த குரங்கு நீர்வீழ்ச்சி தாண்டிய வளைவிலிருந்தாவது கதை துவங்கியிருக்கலாம். மனிதன் துயரங்களுக்கு மத்தியிலும் வாழ்வின் இனிமைகளை ரசிப்பதாகவே வாழ்கிறான். இந்த நோக்கு பிரிட்டிஷ் காலத்து மழை,குளிர்,மரக்குடிசை,காலில் ஒட்டிக்கொள்ளும் அட்டை,பெண்களின் நனைந்த தாட்டு (தேயிலை கொழுந்து பறிக்க  உடைக்கு மேல் உடுத்திக்கொள்வது) என பல சிரமங்களுக்குள்ளூம் மனிதர்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பதனை ஒட்டியே.

 முந்தைய ஆங்கிலேய நிர்வாக முறைகள் மாறி இப்பொழுது இந்திய வணிக நிறுவனங்கள் தேயிலை தோட்டங்களை நிர்வகிக்கின்றன. இந்தியாவின் ஏதோ ஒரு நகரத்திலிருக்கும் நிறுவன அலுவலகத்துக்கு பெண்கள் வெட்டும் தேயிலையின் எடை கணினி கார்டு பதிவின் வழியே போய் விடும் வசதி வந்து விட்டது. ஒரு ஆங்கிலோ இந்தியன் தேயிலை தொழிற்சாலை போர்மென் தனியாக காட்டிற்கு போய் பெரும் கொம்புகள் கொண்ட மானை வேட்டியாடிய காலம் போய் இப்பொழுது புலிகளும்,சிறுத்தைகளும் தேயிலைத்தோட்ட மனிதர்களை வேட்டையாடும் காலம் வந்தும் அங்கே உழைக்கும் மக்கள் இடம் நகர்வதாக காணோம்.
முன்பெல்லாம் டீ என உருவாகும் தேயிலை தொழிலாளர்களுக்கு கூட சிறிதும் பங்கீடில்லாமல் கோவையில் தேயிலை யூனியன் மூலமாக கொச்சின் வழியே வெளிநாடுகளுக்கு சென்று விடும். தேயிலை தோட்ட கண்காணியின் வேலையே பெண்கள் இளம்தளிர்களை பறிக்கிறார்களா என பார்வையிடுவதுதான். ஒரு பெரும் இலை,ஒரு தளிர்,ஒரு மொட்டு என மூன்றே இலைதான். 

இப்பொழுது பெண்களுக்கு இயந்திரம் கொடுத்து மொத்தமாக கத்திரிக்கோல் மாதிரி வெட்டி விடுகிறார்கள்.தரம் எப்படியென தெரியவில்லை.ஆனால் நிறைய தேயிலை வால்பாறை துவங்கி,ஆழியார்,பொள்ளாச்சி என தாரளமாக கிடைக்கிறது.

இப்பொழுது பரதேசி படத்தை நினைக்கும் போது கதைக்களத்தை பாரதிராஜா கையாண்டிருக்கலாமோ என தோன்றுகிறது..காரணம் பாரதிராஜா சினிமா துறைக்கு வருவதற்கு முன் அந்த பகுதிகளில் மலேரியா இன்ஸ்பெக்டராக சுற்றித் திரிந்ததாக கேள்வி ஞானம். இதனை பாரதிராஜாவே வந்து ஆமாம் இல்லை என கமெண்டினால் ஒழிய இந்த தகவலும் தமிழக திரைப்பட வரலாற்றில் இல்லாமல் போகும் சாத்தியங்கள் அதிகம்.

பாரதிராஜாவுக்கான மலை,காடு,வான் மேக முட்டம் என கொஞ்சம் சினிமா தேவதைகளை மட்டும் பயணத்தோடு கொண்டு சேர்த்தால் அழகாக படம் பிடித்துக்கொண்டு திரும்பியிருக்கலாம்.கூகிள்  மக்களின் துயர் பகுதிகளை விடுத்து கூகிள் தேடல் கூட அழகியலை மட்டும் வெளிப்படுத்துகிறது.இதன் காரணம் கூகிளின் பெரும்பாலான படங்கள் சுற்றுலா பயணிகள் சார்ந்திருக்கலாம்.

பரதேசி அழுது புரளாமல் அழகியலோடு சேர்ந்திருப்பான். பாலா சொன்னதில் இடமாற்றங்கள்,,சோகங்கள் உண்மையென்பது மட்டும் உண்மையென்பதை படம் பார்த்தும்,அந்த வாழ்வியலோடு வாழ்ந்த ஒரு வயதான பெண்மணியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது. 

ஆர்ம்ஸ்ட்ராங்க் முதன் முதலில் நிலவுக்கு போன மாதிரி வால்பாறைக்கு முதன் முதலாக பஸ் வாகன போக்குவரத்தை கொண்டு வந்தவர் நா.மகாலிங்கம் அவர்களின் அப்பா நாச்சிமுத்து பெரியவர்.
முதல் வாகனத்தின் பேருந்து ஓட்டுநரையும் திரு. நா.மகாலிங்கம் சார்ந்தவர்கள் ஆவணப்படுத்தினால நல்லது.

மற்றபடி தினசரி வேலைகள் தவிர வீட்டைச் சுற்றி காய்கறி தோட்டம் போடுதல்,மதுரை வீரன்,மாரியாத்தா,நாகம்மாள்,ஏசுவே பிதாவே,சப்பாரம்,அல்லாவை மனதிற்குள்ளே தொழுத குத்புதின்,ராவுத்தர் என கெடாவெட்டும்,திருவிழா, கொண்டாட்டம் என வாழ்வின் மறுபக்கத்தையும் ருசித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.முன்பு தேயிலைத் தோட்ட வேலை,வீட்டுத்தோட்டம்,வீட்டு வேலை என மூன்று மடங்கு உழைத்த மக்கள் தேயிலைத்தோட்ட வேலையை முடித்துக்கொண்டு தொலைக்காட்சி பெட்டிகளில் குளிருக்கு இதமாக போர்த்திக்கொண்டு உட்கார்ந்து கொள்கிறார்கள்.இதற்கு தோதாக புலி,யானை பயம் என்பதால் இருட்டிய பிறகு குடிமக்கள் தவிர யாரும் வெளியில் நடமாடுவதில்லை.

தமிழகத்தில் ஊட்டி,வால்பாறை பகுதிகள் தவிர இலங்கை,டார்ஜிலிங் தேயிலைகளும் உலக பிரசித்தம்.வாழ்க்கை முறை ஒப்பீடுகளில் தமிழக தேயிலை தோட்டங்கள் தொடர் போராட்டங்களாலும்,தொழிற்சங்கங்களின் உதவியினாலும், தொடர் போராட்டங்களாலும் ஒரு படி மேல் எனலாம். 

நகரம் , கிராமம் சாராத இரண்டையும் தொட்டும்,தொடாமலுமான மூன்றாவதான வாழ்க்கை முறை தேயிலை மலைக்காடுகள்.

சாரு புகழும் லத்தின் அமெரிக்காவின் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர உதவும் ஒரே இயந்திரம் ரோப்வே மட்டுமே.அதுவும் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் அறுந்து போகுமோ என்று அஞ்சக்கூடிய கம்பிகளை உயிரை பணயம் வைத்து பயணம்.
சமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிகமான உயரமான இடத்திலிருந்து பள்ளத்தை நோக்கி,தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில்  வந்து சேரும்படியான ரோப்வேக்கள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது. இதனை நிருபிக்கும் ஒரே ஆவணப்படம் எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன் படம் மட்டுமே. முள்ளூம் மலரும் கூட கொஞ்சம் தொட்டு விட்டு ரஜனி,ஷோபா அண்ணன் தங்கை பாசமலருக்கு டிக்கட் வாங்கி விடுகிறார்கள்.

நிலம் தவிர மனிதர்கள் காணமல் போனார்கள்.வாழ்ந்த வாழ்க்கை முறை திருப்பூர் போன்று இடம்,சமூக மாற்றங்கள் என காணாமல் போயின.
காணாமல் போன உப்புவேலியைப் போலவே இப்பொழுது கூகிள் உட்பட அந்த ரோப்வேயையும் காணோம்.