Followers

Wednesday, June 10, 2009

பத்திரிகை ஆசிரியர் அய்யநாதன்

எத்தனை நாட்களுக்குத்தான் கருணாநிதி,ஜெயலலிதா,வைகோ,ராமதாஸ்ன்னே பேசுக்கொண்டு இருப்பது?மாறுதலுக்காக சில தமிழ் அறிவுஜீவிகளையும் முன்னிலைப் படுத்துவோம்.


பத்திரிகையாசிரியர் அய்யநாதனை முதலில் பார்த்தது மக்கள் தொலைக்காட்சியின் பார்வைகள் என்ற நிகழ்ச்சியின் மூலமாக.நிகழ்ச்சி தொகுப்பாளர் முத்துக்குமாரின் கேள்விக்கு நல்ல விளக்கங்களோடு பார்ப்பவரை சொல்வது சரிதான் என நினைக்கவைக்கும் அன்றாட பொது நிகழ்வுகளின் தொகுப்பே பார்வைகள் நிகழ்ச்சியாகும்.இதற்கு எத்தனை பார்வையாளர்கள் என்பது மக்கள் தொலைக்காட்சிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.ஆனால் உலகநிகழ்வுகளின் அலசலுக்கு ஒரு சிறந்த உரையாடல் இது.

இவரும் இணையம் சார்ந்தவர் (தமிழ் வெப்துனியா)என்பதாலோ என்னவோ இணையங்களில் அடிபடும் பொதுக்கருத்துக்களும் இவரது பேச்சில் அடிபடும்.போருக்குப் பின் சோர்ந்து போய் இருந்த ஈழ உணர்வை கணினி தொழில் நுட்பம் சார்ந்தவர்களோடு இணைந்து நிகழ்த்திய அமைதிப் போராட்டம் விரக்தியான மனநிலையில் இருந்தவர்களுக்கு மீண்டும் ஈழத்தமிழர்களுக்கு தமிழன் என்ற முறையில் என்பதை விட மனிதாபிமானம் உள்ளவர்கள் என்ற நிலையிலிருந்து ஏதாவது நல்லது செய்து விட முடியாதா என்ற உணர்வை மீண்டும் வெளியே கொண்டு வந்திருக்கிறது.

தமிழ் உணர்வு கொண்ட அரசியல்வாதிகளை பின்னுக்கு உட்கார வைத்து ஆலோசனைகளை மட்டும் கேட்டுக் கொண்டு இப்படி தொழில் நுட்பம் சார்ந்தவர்கள்,மாணவர்கள் என அணி திரண்டு ஏனைய பல்துறைகளிலும் இருப்பவர்களை துணைக்கழைத்துக் கொண்டு விவேகமான முறையில் கல்லெறிதல்,தீவைத்தல்,பஸ் எரிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடக்கா வண்ணம் அமைதி முறையில் உலகத்தின் கண்களுக்கு இந்தப் போராட்டம் முடியவில்லை என்பதை கண்முன் நிறுத்துவது அவசியம்.

இந்தக் கலவரங்கள் பற்றிச் சொல்லும் போது கூட்டம் கூடுமிடத்தில் தான் பலசாலி என்ற உணர்வு ஒரு தனி மனிதனுக்கு வருவதுடன் கலவரத்தின் தாக்கங்கள் என்னவென்று தெரியாமலும் சிலர் கல்வரங்களைத் தூண்டுவதுண்டு.இன்னுமொரு கோணத்தில் பார்த்தால் கூட்டத்தில் கலவரங்கள் நிகழ்வதற்கு முக்கியமான காரணி காவல்துறை.காவல்துறைன்னு சொன்னவுடன் நம்ம ஊர் காவல்துறை மட்டும் என்ற கணிப்புக்கு யாரும் வந்து விடவேண்டாம்.உலகளாவிய காவல்துறையினரே போராட்டங்களில் கலவரம் வெடிப்பதற்கு முதல் நிலையில் இருப்பார்கள் என்று ஒரு விவாதக் களத்தில் கேட்டது.காவல்துறை சார்ந்தவர்களின் கருத்து இதற்கு மாறுபட்டும் கூட இருக்கலாம்.இன்னுமொரு நிலையில் காவல்துறையை நோக்கினால் இவர்களுக்கு வேலைப்பணியின் நேரம்,மனஅழுத்தங்கள், மேலிடத்து அழுத்தங்கள் அதிகம்.எனவே இதன் காரணம் கொண்டும் கூட்டத்தின் வலுவுக்கு ஏற்றாற்போல் பிரச்சினையை ஊதிவிடும் சாத்தியங்கள் உண்டு.இவைகளையும் அடுத்து ஒரு கலவரக் கலாச்சாரத்தை தமிழகம் கற்று வைத்திருக்கிறது.அது என்னவென்றால் எதிர்க்கட்சி சார்ந்த அணிவகுப்பா அடியாட்களுக்கு காசு கொடுத்து கலாட்டாவை உருவாக்குவது.அப்புறம் பழியை அணிவகுப்பு நடத்தினவர்கள் மேலேயே போட்டு விடுவது என்ற குறுக்குப்புத்தித்தனம்.முன்பு பொராட்டா,கள்ளச்சாராயம்ன்னு மட்டும் கட்சி சார்பா வளர்ந்த கலாச்சாரம் இப்ப எங்க வந்து நிற்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.இப்படி வளர்ந்த எதிர்விளைவுகள் இப்பொழுது கட்சிகளின் ஒரு அங்கீகரகமாக மாறிவிட்டது.எனவே இவைகளையெல்லாம் சமாளித்து வரும் ஆற்றலை அணிவகுப்பாளர்களின் பொறுப்பாளிகள் கவனிப்பது அவசியம்.உலகம் தொழில் நுட்பம்,காணொளி,செல்போனில் காமிரா என்று மிகவும் வளர்ந்து வருகிறது.எனவே இந்தக் கலாச்சாரங்களின் முகமூடிகளை கிளித்தெறிய வேண்டியது அணி வகுப்பாளர்களின் பொறுப்பாகும்.

கார்கில் யுத்த காலத்தில் கே.சுப்ரமணியம் என்ற பாதுகாப்பு ஆலோசகர் இருந்தார்.CNN போன்ற விவாதக் களங்களில் பாகிஸ்தானுக்கு எதிர்க்கேள்வி கணை விடுப்பதில் வல்லவர்.அந்த மாதிரி உள்ளூர் தொலைக்காட்சி ஊடகமான வின் தொலைக்காட்சியில் நிகழும் விவாதத்திற்கும் பத்திரிகை ஆசிரியர் உலகநாதன் கருத்துக்கள் ஆழமானவையாக இருக்கும்.அவருடைய சமூக உணர்வுக்கும் கீழே உள்ள படத்தை பிரசுரிக்க அனுமதிக்கவும்,இந்த இடுகைக்கான தூண்டுதலாகவும் இருந்த கரையோரம் தளத்தின் பதிவர் செல்லமுத்து குப்புசாமிக்கும்,அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட தொழில் நுட்ப வட்டத்து சகோதர சகோதரிகளுக்கும் இந்த இடுகை தன் புன்முறுவலை சமர்ப்பணம் செய்கிறது.

கரையோரம் தளத்தின் முழுப் படங்களுக்கு
http://karaiyoram.blogspot.com/2009/06/blog-post.html

Monday, June 8, 2009

தமிழ் தொலைக்காட்சிகள் ஓர் பார்வை-பகுதி 2

சென்ற இடுகை போதுமென்று கை கட்டளையிட்டு விட்டதால் மூளையின் அங்கீகாரமில்லாமல் சார் போஸ்ட் சொல்லி விட்டது.சொல்ல வந்த கருத்து முற்றுப்பெறாத மாதிரி தோன்றிய காரணத்தால் பகுதி 2 தொடர்கிறது.

வாழ்வின் பல குழப்பமான விசயங்களில் தினமும் முக்கியமாக வேலை,தொழில் என்ற பணம் தேடுதலில் சிக்கித் தவிக்கும் காரணத்தாலும்,இளமை,கல்லூரிக்காலம்,வீட்டு நிர்வாகம்,பள்ளி செல்லுவது,பயணம் என்ற பல நிலைகளில் அனைவரும் வலம் வருவதாலும் அக்கடா என்று வீட்டில் அமரும் சமயம் கணினியை விட தொலைக்காட்சி அனைவருக்கும் எளிதான நுகர்வோர் பொருளாகி விடுகிறது.

இனி இணையம் என்ற பெருங்கடலில் மீன் பிடிக்கச் சென்றால் அது பல வகை மீன்களை இனம் காட்டி எங்காவது ஒரு இடத்தில் வலையை வீசச் செய்கிறது.சில மானுட உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட காட்சிகள் வாழ்க்கையின் கோரத்தை தோலுரித்துக் காட்டவும் செய்கிறது.ஆனால் தொலைக்காட்சி என்பது சமைத்த பண்டம்.இங்கே இதுதான் கிடைக்கும்,வேணுமுன்னா வாங்கிட்டுப் போ கதைதான்.இந்த தனி உரிமையின் காரணம் கொண்டு எது கிடைக்கிறதோ அதனை நுகர வேண்டிய சூழல் நுகர்வோருக்கு.

ஆறு மாதங்களுக்கு மேலாக ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் இணையத்தில் மிகத்தெளிவாகத் தெரிந்தும் அதனை மக்கள் பக்கம் கொண்டு செல்வதில் ஓரளவுக்கு மானிட உணர்வு கொண்டவர்கள் வெற்றியடைந்தும் கூட அன்றாட வாழ்வில் உழலும் மக்களுக்கு கொண்டு செல்ல முடியாத படி பங்கு வகித்ததில் தொலைக்காட்சிகளில் சன் குழுமத்திற்கு பெரும் பங்கு உண்டு.அதெப்படிங்க ஒரு நாள் முழுதும் சினிமா என்ற மயக்கத்திலேயே ஒரு தனி மனிதனை மூழ்கடிக்க முடிகிறது?இந்த மயக்கம் கூட தேர்தல் வெற்றியின் பணம்,ஓட்டுப் பிரித்தலுடன் ஒரு காரணியாக இருந்திருக்குமோ?டாஸ்மார்க் பார்ட்டிகள் கூட ராத்திரி அடிச்சா காலையில் தெளிந்து விடுகிறார்களே.ஆனால் தொலைக்காட்சி என்பது ஒரு ஊடகம் என்பதன் காரணம் கொண்டும் பகுத்தறிந்து சமூகத்தின் வெற்றி தோல்விகளின் முழுப் பொறுப்புக்கும் எதிர்கால வாழ்வின் உயர்வுக்கும் சறுக்கலுக்கும் மக்களே சொந்தக்காரர்களாகிறார்கள்.

எனவே தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்பிலிருந்து மீளும் மாற்று முகமாகவும் மாற்றுப் பார்வைக்கான சாத்தியங்கள் அதிகம் தென்படுவதாலும் இணையதளம் புழக்கம் அவசியம் தேவை.வரும் சட்டமன்ற தேர்தலில் கணினி இலவசம்(தனிப்பட்ட முறையில் இலவசம் என்பது நிராகரிக்கப்படவேண்டியது என்றாலும் கூட) என்ற அறிக்கையை ஜெயலலிதா மீண்டும் அறிவிக்கலாம்.அல்லது அதனையும் தன் உரிமைப் படுத்தும் நோக்கில் தி.மு.கவும் கூட முந்திக்கலாம்.எப்படியோ தொலைக்காட்சிக்கு மாற்றுதளம் அவசியம்.மாணவர்களுக்கும் கூட கணினி வழிப்பாடம் மிக எளிது.Flash drive போன்ற எளிய முறைகள் வீட்டுப்பாடங்களைக் வீட்டில் கற்கவும் மீண்டும் பள்ளியில் சமர்ப்பிக்கவும் எளிது.(By the way desktop computers are going to be obsolete.)அத்தனை நோட்டுப் புத்தகங்களையும் சுமக்க வேண்டிய அவசியம் இருக்காது நோட்டுப்புத்தக கணினிகளை உபயோகிக்கும் பட்சத்தில்.(மின்சாரமும்,கட்டணமும் என்ற தடங்கல்களையும் கடந்தாக வேண்டும்).

அதென்னமோ தெரியல எங்கே எண்ணங்களை அழைத்துச் சென்றாலும் இறுதியில் ஈழம் என்ற கோட்டில் வந்து மனம் நின்று விடுகிறது.எனவே தொலைக்காட்சியை விட்டு அரசியல் பக்கம் நோக்கினால் சட்டசபையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது வரை அனைத்துக் கட்சிகளின் பங்கு பாராட்ட வேண்டியதே.ஆனால் அதற்கு பின் துவங்கிய அரசியல் குளிர்ப்போரில் குளித்தவர்கள் அனைத்துக் கட்சிகளுமே.
எதிர்பார்க்காத பல நிகழ்வுகள் குறுகிய கால தினங்களில் நடைபெற்று விட்டது.தமிழகத்தில் யாருக்கும் இன்று வரை தெளிவான முடிவில்லா சூழல்.யாருக்கும் பூமிப் பந்தில் இந்தியாவின் தென்கோடியாய் தமிழ்நாட்டை நெம்பிப் போடும் சக்தி இல்லாமல் போய் விட்டது.யாருக்கு எவ்வளவு ஆன்மீக பலமும் லௌகீக பலமும் உள்ளது என்ற புரிதல் மட்டும் நம்மில் சிலருக்கு கிடைத்திருக்கிறது.முன்பு நெஞ்சை பகீர் கொள்ளச் செய்யும் இந்திய நிகழ்வுகள் இப்பொழுது மரத்துப் போய் மட்டுமே பார்வையாளனாக்கியிருக்கிறது.உதாரணத்திற்கு ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் நிலை.

எப்படியிருந்த போதிலும் மானாட மயிலாட,அசத்தப் போவது யாரு,உலக திரைப்படங்கள்,மெகா சீரியல்கள் என்ற மக்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள்,அன்றாட வாழ்க்கைப் பயணம் என அன்றாட நிகழ்வுகள் அப்படியே வலம் வருகின்றன.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாலும் சிலருக்கு வேலை வாய்ப்பும் வயிற்றுக்கும் சிறிது ஊட்டப்படுகிறது என்ற சந்தோசத்தோடு சிலரை மக்கள் முன் அறிமுகப்படுத்துகிறது என்ற சமாதானத்தோடு் தொலைக்காட்சிகளை மக்கள் காண்பது தவிர வேறு வழியில்லை.நானும் இந்தப் பெட்டியின் கதவை சாத்திக் கொண்டு தொலைக்காட்சியாளர்களின் தொழில் சிரமங்கள்,அரசியல் விளையாட்டுக்கள்,மூலதனம்,தொழில்நுட்ப பங்களிப்பு,நிகழ்ச்சிகளை உருவாக்குதல் போன்ற உயர் ரகசியங்கள் தெரியாது சொல்வதற்கு எல்லோருக்கும் எளிதாம் என்ற ஞானோதயத்திலும் ஊடகங்கள் சமுதாயத்திற்கு இன்னும் நிறைய பங்காற்ற இயலும் என்ற ஆற்றாமையிலும் நிறைவு செய்கிறேன்.

தமிழ் தொலைக்காட்சிகள் ஓர் பார்வை

தொலைக்காட்சிகள் மக்களின் மன இயல்பை,உளவியலை பிரதிபலிக்கக் கூடும்.பல தொலைக்காட்சிகள் தமிழகத்தில் வலம் வந்தாலும் சன் குழுமம் மட்டும் முன்னிலை வகிப்பதேன்?அரசியல் ஆதரவு இருந்தாலும் கூட கலைஞர் தொலைக்காட்சி வந்த பிறகும் தனது முதன்மையை தக்கவைத்துக் கொண்டதற்கு அதன் தொழில் அணுகுமுறையும் மக்களின் விருப்பம் எதுவென்று அறிந்து கொண்டு செயல்படுவது காரணமாக இருக்கக் கூடும்.

தனிப்பட்ட முறையில் ஈழம் குறித்த செய்திகளை கொண்டு செல்லாததும் வியாபார நோக்கிலே பயணம் செய்ததும் வருத்தத்தை உருவாக்கினாலும் சன் குழுமத்தை மட்டும் குறை சொல்ல இயலுமா என்ற கேள்வியை கேட்க வேண்டியதாக இருக்கிறது.காரணம்,சன் குழுமம் செய்யாததை செய்யத் தவறியதை மக்கள் தொலைக்காட்சி நிறையவே வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.ஆனால் ஈழ நிகழ்வுகள் என்ற ஒன்றை விடுத்தும்,தமிழ் என்ற சொல்லையும் விடுத்தும் ஏனையவை ஒரு தொலைகாட்சி பார்வையாளனை திருப்தி படுத்துமா என்ற கேள்வியும் எழுகிறது.

இன்னும் சொல்லப் போனால் இலங்கையில் மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டதும் தமிழகத்தில் அதற்கு சாதகமாகவே அமைந்திருக்க வேண்டும்.ஆனால் எதிர் விளம்பரத்தில் வியாபாரம் ஆகாததை யாரும் கவனிக்கவில்லை.ரஜனி எதிர்ப்பு என்ற காரணியும்,சினிமான்னாலே உவ்வே சொன்னதும் கூட மக்கள் தொலைக்காட்சி சிறப்படையாமல் போனதுக்கு காரணமாயிருக்கக் கூடும்.

கலைஞர் தொலைகாட்சி பக்கம் வந்தால் கட்டுமரக் கதையெல்லாம் இணையத்தில் மட்டுமே பவனி வரும் விசயம்.மானாட மயிலாட அடிச்சு ஆடுகிறது என்பது அதன் நடன அசைவுகளிலும்,வண்ண மயமான செட் அலங்கரிப்புகளிலும்,மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்யத் துணியாத காட்சி அமைப்புகளிலும் தெரிகிறது.இணைய தள களத்தின் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் இயல்பிற்கும் தொலைக்காட்சியின் வெளிப்படுத்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும் டொக்,டொக்குன்னு பெட்டி தட்டும் ஒத்தை ஆளு விளையாட்டை விட ரிமோட் விசையத் தட்டுனோமா ஒரு காட்சியப் பார்த்தோமா விளம்பரம் பிடிக்கலையா இன்னொரு அமுக்கு அடுத்த சேனலுக்கு கூடு விட்டு கூடு பாஞ்சோமான்னு வீட்டின் ஹாலில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களையும் கூட்டு சேர்ப்பதில் தொலைக்காட்சி வெற்றி பெற்று விடுகிறது.

இன்னும் சொல்லனுமுன்னு வந்த எண்ண அலை இப்போதைக்கு முற்றுப் பெறுகிறது.

Sunday, June 7, 2009

க.தங்கமணி பிரபு

சிந்தனி என்ற களத்தின் சொந்தக்காரர் க.தங்கமணி பிரபு வின் எழுத்துக்களை முன்பு பார்க்க கிடைக்கவில்லை.சிலரைக் கண்டவுடன் பிடித்துப் போவது போல் இவருடைய எழுத்துக்களை இன்று பார்வையிட்டவுடன் பிடித்துப் போயிற்று. இன்று அவரிட்ட வயசுப்பெண்ணின் இடுப்பு என்ற தலைப்பில் சொன்ன ஒரு கவிதையைப் பார்வையிடப் போய் மற்ற பேச்சு வழக்கின் எழுத்தின் கருத்துக்களில் மூழ்கிப் போய் நல்ல எழுத்துக்கள் ஏன் ஒளிந்து நிற்கின்றன என்ற ஆதங்கத்தில் எழுதிய இடுகை இது.

ஈழப் போரினை அலசும்,விமர்சிக்கும்,குறை சொல்லும் அத்தனை எழுத்துக்களிலும் வித்தியாசம் கொண்ட எழுத்து இவருடையது.கூடவே உணர்வு பூர்வமானதும்.மானுடம் என்ற அடிப்படையைத் தள்ளி விட்டு நவீனத்தின் பக்கங்களை மட்டுமே எழுதுவது என்பது இயல்பாகிப் போன விசயமாகி விடுகிறது சிலருக்கு.அவர்களில் இருந்து தனித்து நிற்கும் எழுத்துக்கு ஊக்கம் தரும் வண்ணம் சிந்தனிப் பதிவர் க.தங்கமணி பிரபுவின் எழுத்துக்கள் இங்கே உங்களுக்கு அறிமுகம்.

எனக்கு இவரின் முன் அறிமுகம் கிடையாது.படித்த இந்த கணத்தில் குறிப்பிட வேண்டும் என்று மனதுக்கு தோன்றியதால் அவரின் இடுகையில் ஒன்று கீழே.

http://chinthani.blogspot.com/2009/06/blog-post.html

மிச்சம் மீதியும் உங்களுக்குப் பிடித்துப் போகும் என நினைக்கிறேன்.

வாங்க தங்கமணி!நீங்களும் வந்து ஜோதில ஐக்கியமாயிடுங்க:)

கேள்விக்கு என்ன பதில்?

ரொம்ப நாளா பரிட்சை எழுதணும் பாஸாகணும் என்கிற கவலையில்லாம இருந்தவனை பழமையண்ணன் இந்த தொடர் விளையாட்டில் மாட்டி விட்டு விட்டார்.கூப்பிட்ட மரியாதைக்கு கேள்விகளுக்கு பதில்.

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அப்பாவின் பெயரும் என் பெயரும் இணைந்தது ராஜ நடராஜன்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?
இப்பத்தான் சமீபத்தில். பதிவர் ஷண்முகப்ரியன் மற்றும் ஏனைய பதிவர்களும் சுட்டிய இலங்கை சகோதரனின் நடன காணொளி கண்டதும்.காப்பத்துங்கன்னு சொன்ன அழுகைகளையும்,காப்பாற்ற இயலா அரசியல் சுயநலத்தில் சிக்குண்டு போரில் சிக்கிய மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை தமிழர்களாகிய நாம் காப்பாற்ற தவறவிட்டு விட்டோம்:( தேர்தல் முடிவுகளால் துவண்டோ போரின் தோல்வியால் விரக்தியடைந்தோ ஈழம் குறித்த இடுகைகள் குறைவாகப் போனது வருத்தத்தைத் தருகிறது.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பெயரை எழுதுவதை விட அனைத்தும் கணினி மயமாகி விட்டதால் கையெழுத்து எப்படியென்று ஒரு முறை பரிட்சித்துப் பார்க்க வேண்டும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
சாதம்,சாம்பார்,பொறியல்,அப்பளம்,ரசம்,மோர் ஊறுகாய்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
சில சந்திப்புக்கள் ஹலோவுடன் முடிந்து விடும். சில புன்முறுவல்களுடன் கூடவரும்.இன்னும் சில அடுத்த முறை புன்முறுவலுடன் குசலம் விசாரித்து ஒட்டிக்கொள்ளும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இந்தியாவில் அருவி.இங்கே கடல்தான் அருகில்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகம் பார்த்துப் பேசுவது.பேச்சு நீளும் பட்சத்தில் முகபாவங்கள்.

8.உங்ககிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
இன்றுவரை நேர்மை.வார இறுதியில் விடும் நீண்ட குறட்டை.

9. உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விஷயம் எது?
எனக்குத் தேவையான அனைத்தையும் கவனித்துக்கொள்வது.பிடிக்காதது உப்பு,காரம் சமையலில் குறைக்கச் சொன்னாலும் அதே அளவில் நிற்பதும் வந்து நீங்களே சமையுங்க என்பதும்.

10.யார் பக்கத்தில் இல்லாமல் இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
நிச்சயமாக அப்பா,அம்மா.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெள்ளை முழுக்கை,கருப்பு பேண்ட்,அதற்கு மேட்சாக கருப்பில் வெள்ளைக் கோடுகளால் டை.

12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
அலுவலில் பாடல்கள் தடா.

13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு.

14.பிடித்த மணம்?
மல்லிகை மற்றும் தாளிக்கும் மணம்.கூடவே பெர்ஃப்யூம்.முன்பு Brut Cologne by Faberge நன்றாக இருந்தது.இப்ப அதிலும் டூப்ளிகேட்.

15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

நடிகைகிட்ட எந்த நடிகரைப் பிடிக்கும்ன்னு கேள்வி கேட்கிற மாதிரி இருக்குது இந்தக் கேள்வி.எல்லாருடைய வீட்டுக்கும் நான் போகிறேன் அதனால் யாரைக்கூப்பிடுவது? அதுசரி,குடுகுடுப்பையார்,நசரேயன்,ச்சின்னப்பையன் யாராவது வந்து காப்பாத்துங்க.(பிடித்த காரணம், அதுசரியின் முரண்தொடை படித்தவுடன் போலித்தனமில்லாத எழுத்து.குடுகுடுப்பையார்,நசரேயன்,ச்சின்னப்பையன் நகைச்சுவைகள்)இல்ல இவங்க யாராவது முந்திகிட்டோ அல்லது வேலை நிமித்தம் இடுகைகள் இடாமல் இருந்தால் நான் யார் யார் வீட்டுக்கு இதுவரை பின்னூட்டம் போட்டிருக்கேனோ அவர்களில் முந்திக்காதவங்க யாராவது வந்து தொடரும்படி வேண்டுகிறேன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
பழமையண்ணன் விடாம அடிச்சு ஆடுறார்.எதைச் சொல்வது?இருந்தாலும் தனக்குன்னு ஒரு பாணியாக காளமேகப் புலவர் கனவுல வந்து கதை சொல்லுவது பிடிக்கும்.

17. பிடித்த விளையாட்டு?
உலக கால்பந்து விளையாட்டு.

18. கண்ணாடி அணிபவரா?
கணினித் திரைக்கு மட்டும்.காருக்கு கறுப்புக் கண்ணாடி.

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
மூளைக்கு வேலை கொடுக்கும் எல்லா திரைப்படங்களும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
டி.வி.டியில் Paradise now. இந்தப் படம் இரு பாலஸ்தீனிய நண்பர்கள் எப்படி பஸ்ஸில் பயணம் செய்யும் இஸ்ரேல் மக்கள் மீதான தற்கொலைப் படைக்கு தயாராகிறார்கள் என்பது பற்றிய ஆங்கில சப்டைட்டிலுடன் கூடிய பாலஸ்தீனிய அரபி மொழிப் படம்.படத்தை தயாரித்தவர் இஸ்ரேலியர் என நினைக்கிறேன். முன்பு ஆஸ்கருக்கு சென்ற ஒரே பாலஸ்தீனியப் படம்.சென்னைப் பதிவர்கள் கூடும் உலகத்திரைப் படங்கள் வரிசைக்கு இந்தப் படத்தை சிபாரிசு செய்கிறேன்.

21. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
Exodus. (pdf format.தகவல் உதவி தருமி ஐயா)

22.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
மழலைச் சத்தம் பிடித்தது.பிடிக்காதது பாதையில் விலக இடமில்லாமல் இருந்தாலும் சைடு கேப்ல நுழைய முயன்று கொய்ங்,கொய்ங்ன்னு ஹார்ன் செய்வது.

23.பிடித்த பருவ காலம் எது?
கல்லூரிப் பருவம்.

24. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
இந்த வேலையெல்லாம் கூட நடக்குதா:)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு?
இந்தியாவில் டெல்லி,கல்கத்தா-இந்தியாவுக்கு வெளியே குவைத்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
சின்னப்பையன்ல சீசன் சீசனுக்கு விளையாட்டு மாறுகிற மாதிரி இப்பவும் சீசன் சீசனுக்கு காமிரா,மீன்பிடித்தல்ன்னு மாறும்.ஒரு மொட்டை கிரவுண்ட்ல காரை வைச்சு கியர் எது,பிரேக் எது,சாவி கொடுப்பது எப்படின்னு எனக்கு நானே கார் ஓட்டக் கத்துகிட்டதும் லைசென்ஸ் வாங்கியதும்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கொஞ்சம் யோசிக்க வேண்டிய கேள்வி.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அப்படியெல்லாம் ஒருத்தனும் கிடையாதுங்க.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?
தஞ்சை பெரிய கோயில்,திருச்சி மலைக்கோட்டை மற்றும் பொள்ளாச்சி கடந்து புளிய மரங்களைப் பார்த்துகிட்டே ஆழியார் அணை துவங்கி,அட்டைகட்டி,தேயிலைக் காடுகள்,வால்பாறை,சோலையார்,அப்படியே கேரளாவுக்குள்,குருவாயூர்,திருச்சூர் புகுந்து கொச்சின் வாஸ்கோடா காமா வந்த இடம்,இந்திய யூதர்களின் கோயில்,மட்டாஞ்சேரின்னு நீண்ட பயணம்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
நான் நானாகவே.இதுவரைக்கும் நோய் நொடிகளுக்குள் மாட்டிக்கொள்ளவில்லை.இனியும் அப்படியே இருக்க.

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
கடற்கரையில் தனிமையில் சேர் போட்டு உட்கார்ந்துகிட்டு கடலைப் பார்ப்பது,இல்லைன்னா மீன் பிடிப்பது.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
போரில்லா உலகம் வேண்டும்.காதுல கேட்க மட்டுமே நன்றாக இருக்கிறது.நடைமுறையில் கார்கில்,வளைகுடா யுத்தம்,ஈழ இலங்கைப் போர் மனதை நிறைய பாதித்தவை.

Saturday, June 6, 2009

மருத்துவத்தின் தண்டனை

பிறப்பின் துவக்கம் தொட்டும் நோய்க்கால இடைவெளியிலும் வாழ்வின் இறுதிச் சான்றிதழ் வரை மருத்துவர்களும் மருத்துவத்துறையும் நம்மோடு ஒட்டிக்கொண்டே வரும் பயணங்கள்.

பொதுவாக உங்கள் எதிர்காலக் கனவு என்ன என்று கேட்டால் பள்ளிக் குழந்தைகள் சொல்லும் வார்த்தை டாக்டர்.வாழ்வின் சூழலில் திசைகள் மாறிப்போனாலும் சிலருக்கு அந்த வரம் தானகவே அமைந்து விடுகிறது.எல்லாக் கல்லூரிகளும் ஸ்ட்ரைக் என்ற ஆயுதத்தை தொட்ட காலத்திலும் கூட படிப்பும்,கடமையே உணர்வாக வெள்ளைக்கோட்டும் ஸ்டெதாஸ் என்றும் வலம் வந்த தேவதூதர்கள். வாழ்வோட்டத்தில் இங்கும் அங்கும் சில எதிர் விளைவுகள்,மனிதர்கள் இருந்தாலும் கூட மருத்துவத்துறையின் மகத்துவம் சிறப்பானது.

உலக யுத்தங்களிலும் மருத்துவர்களின் பணி மகத்தானது.அதே மாதிரியான ஒரு சூழலில் பணிபுரிந்த மூன்று மருத்துவர்கள் இலங்கையின் போர்க் குற்றவாளிகள்.இவர்கள் செய்த தவறு என்ன?உலக ஊடகவியளாலர்கள் செல்ல முடியாத சூழலில் மண்ணின் மைந்தர்களாய் போர்க்களத்தில் பணிபுரிந்ததும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை புகைப்பட ஆதாரங்களோடு உலகின் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதும்.வெறும் புகைப்படங்கள்,ஒளிகாணலைக் காணும் மானுட உணர்வு கொண்ட எவருக்குமே போரின் பயங்கரங்கள் புரியும் போது களத்தில் நின்று பணிபுரியும் இந்த மாமனிதர்களுக்கு நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் எண்ணமும் துணிச்சலும் வந்ததில் என்ன தவறு இருக்க முடியும்?

போரில் உயிர் இழந்தவர்கள் பற்றியும் எஞ்சியிருப்பவர்கள் பற்றியும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டுக் கொண்டும் நடுநிலை ஊடகவியளாலர்களை அனுமதிக்காமலும் போர்க்குற்றங்களின் ஆதாரங்களை அழிப்பதில் மட்டுமே தனது நாட்களை நகர்த்துகின்றது இலங்கை அரசு.

இதனிடையே ஒரு செயலின் முடிவு இன்னொரு செயலின் துவக்கமாய் உலக அதிகாரங்களின் கரங்களில் இலங்கை வந்து விட்டது.இதில் இலங்கை பூகோளப் போரின் வெறும் பகடைக் காயே.தமது நலன்களைப் பாதுகாப்பதில் தெற்காசிய நாடுகள் என்றும் மேற்கத்திய நாடுகள் என்றும் இரு அணிகளாய் மாறிவிட்டது. மே 18ம் தேதிக்கு அப்பால் மெல்லக் கிளம்பும் அறிக்கைகள் இதனை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன.

மானிட வார்த்தைகள் எல்லாம் தமிழன் உணர்வு என்ற வட்டத்துக்குள் மட்டுமே பார்க்கப்படுகிறது . இலங்கை அரசின் முன்னணி அரசியல் விளையாட்டுக்காரர்களின் அறிக்கைகள் இந்தியாவுக்கு எதிராகவே வருகிறது.இதற்கான துணிச்சலாக பாகிஸ்தானும்,சீனாவும் தமக்குத் துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தனது விசயங்களில் தலையிட வேண்டாம் என இந்தியாவுக்கு செக் வைக்கிறது.இனி வரும் காலங்களில் கடல்வழிப் பொருளாதாரப் போரில் நீயா நானா எனும் நிலை வரும் சாத்தியங்களுக்கான முன்னுரையாக மட்டுமே இப்பொழுது பல தரப்புக்களிலிருந்தும் வரும் அறிக்கைகள்.

இவை ஒரு புறமிருக்க கூட்டமாய் கம்பிவலை வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கே குரல் கொடுக்க ஆட்கள் இல்லாத போது மருத்துவம் கற்றதிற்கு தண்டனையாகவும் மனித அவலங்களை வெளிப்படுத்தியதற்காகவும் மருத்துவர்கள் போர்க் குற்றவாளிகளாக்கப் படுகிறார்கள் இலங்கை அரசால்.வாழ்க இலங்கை இறையாண்மை.

மேலதிக தகவல்களுக்கு:

http://news.bbc.co.uk/2/hi/south_asia/8083505.stm

Tuesday, June 2, 2009

ஒரு மொக்கை அறிக்கை

இங்கே வால்பையன் போன்ற Self proclaimed யாருக்கும் அனானி பின்னோட்டம் இடுவதில்லையென்ற குழுவில் நானும் அங்கத்தினன்.கடை திறந்த நாள் முதல் இன்று இந்த கணம் வரை நான் யாருக்கும் அனானிப் பின்னூட்டம் இட்டதில்லை. இனிமேலும் இடமாட்டேன்.சிலர் நிரந்தரமா கடை போடாம கருத்து சொல்வதற்கு வேண்டியும் கூட அனானி வசதியை உபயோகிக்கக் கூடும்.ஆனால் விளையாட்டாகவோ சிலர் மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ அனானிப் பகுதியை உபயோகிக்கிறார்கள்.அனானி என்றாலே திட்டுபவன் என்ற முத்திரை விழுந்து விட்டதால் அனானிப் பகுதி எனக்குப் பிடிப்பதில்லை.எனக்குப் பிடித்த கருத்துக்களுக்கு மொக்கையாகவோ,சிரிப்பாகவோ,கருத்தின் களம் கொண்டு அதில் மூழ்கியுமே பின்னூட்டங்கள் இட்டுள்ளேன்,இனியும் இடுவேன் .

ஆனால் முந்தைய பதிவான நானும் பின்னூட்ட வாத்தியார்தான் பின்னூட்டத்தில் ஒரு அனானி இட்ட பின்னூட்டம் இங்கே:

//அப்படியே திவ்யான்ற பேர்ல நீங்க எழுதற இன்னொரு டுபாக்கூர் ப்ளாக்லையும் பண்ணலாமே?//

யாருப்பா இந்த திவ்யா?அனானி!அது நான் இல்ல கண்ணு!திவ்யாங்கிற பேர்ல நான் ஒரு இடுகையைப் பார்த்ததாகக் கூட நினைவில்லை.எனக்கு இடுகை எண்ணிக்கை கூட்டறது,டுபாக்கூர் ப்ளாக்ல எழுதுவதில் ஆர்வமில்லை.சொல்லப்போனா நான் 100வது பதிவை எப்ப கடந்தேன் என்று கூட கணக்கு வைத்துக்கொள்ளவில்லை.பதிவுகள் பல பரிமாணங்களில் இருந்தாலும் கடந்த ஆறு மாதங்களாக என்னை மனதால் ஆக்கிரமித்துக் கொண்ட ஒரே விசயம் ஈழமும் ஈழம் சார்ந்த இடுகைகளும்,பதிவர்களும். தமிலிஷ் இணைக்கறதுல கூட சோம்பேறி பட்டுகிட்டு இன்னைக்கு நாளைக்கின்னு நாட்களை தள்ளிப் போட்டு அண்ணன் நசரேயன் இன்றைக்கு நினைவூட்டி அதை ஒட்ட வச்சிருக்கேன்.

So my dear friends! Anony is not my cup of tea and I will remain as gentleman as far as this blog exist.Thank you.

Monday, June 1, 2009

நானும் பின்னூட்ட வாத்தியார்தான்

நானும் ரவுடிதான் பேட்டைல நிறைய பேரு திரியறதால நானும் வாத்தியார்தான் பேட்டைக்கு முண்டாசு கட்டிகிட்டு வந்திருக்கேன்:).இது எங்க ஏரியா!யாரும் உள்ளே வரலாம்.

விசயம் என்னன்னா இந்த பதிவு(இடுகைன்னு சொல்லணுமாம்!தமிழ் அண்ணா பழமை சொல்லிக் கொடுத்தாரு) எழுதறதெல்லாம் நமக்கு சைடு பிசினஸ்ங்க.இடுகை வாசிப்பதும் மனசுக்குள்ள குதிச்சுகிட்ட வர்ற வார்த்தைகளுக்கு பின்னூட்ட உருவம் கொடுக்கறதுதான் மெயின் பிசினஸ்ங்க.இடுகையெல்லாம் நல்லாத்தான் சொல்றாங்க.ஆனா பின்னூட்டம் பக்கம் போனா சில உஸ்தாதுகள் ஆங்கிலம் சொல்லுன்னு(word verification) பேஜார் செய்யுறாங்கோ.

மொக்கை போடணுமின்னா comment moderation எடுத்துறுங்கன்னு ஒரு தபா வருங்கால முதல்வர் குடு குடுப்பையார் சொல்லப் போக உள்ளே நுழைஞ்சப்பத்தான் ஆங்கிலம் சொல்லு கண்ணுல பட்டுச்சு.அதே மாதிரி சில வூட்டுக்குப் போனாலும் இந்த word verification கேட்கிறாங்க.அதனால இங்கே coding kings & queens ஆணி கட்டமைப்பாளர்கள்,பழம் தின்னு கொட்டை போட்ட பதிவுப் பெருசுகள்,customization அப் புடிச்சு நோண்டிகிட்டு இருக்குறவங்களைத் தவிர புதுசா ஜோதில கலந்துகிட்ட அண்ணாத்த யாராவது இருந்தீங்கன்னா word verification எடுக்கணுமுன்னு ஆசைப்படறவங்களுக்கும் அது எங்க உட்கார்ந்துகிட்டு இருக்குன்னு கண்ண உருட்டாம இடுகையே கண் என நினைப்பவர்களுக்கும் இன்னைலருந்து நான் தான் வாத்தியார்.(அதுக்குன்னு அதிகமா சந்தேகமெல்லாம் கேக்கப்படாது!வாத்தியார் முண்டாசெல்லாம் சும்மா ஒரு பந்தா)

இனி பாடத்துக்குப் போவோமா? log in செஞ்சதும் காஞ்ச மாடு கம்புல பூந்தமாதிரி நேரே new post ல போய் உட்கார்ந்துக்காம அதுக்கு பக்கத்தில customize இருக்கும்.அங்க இருந்துதான் ஆங்கிலத்துக்கு நோ சொல்றது எப்படின்னு ஆரம்பம்.

1.)Customize
2.)Settings
3.)Comments
4.)Show word verification for comments - No

டிஸ்கி: வீடு வீடா போய் மாஞ்சு மாஞ்சு வோர்ட் வெரிபிகேசன் எடுத்துறுங்க,எடுத்துறுங்கன்னு சொல்லிகிட்டே இருக்கேன்.அதுக்கான குறுக்கு வழிதான் இந்த பதிவு.