Followers

Saturday, June 6, 2009

மருத்துவத்தின் தண்டனை

பிறப்பின் துவக்கம் தொட்டும் நோய்க்கால இடைவெளியிலும் வாழ்வின் இறுதிச் சான்றிதழ் வரை மருத்துவர்களும் மருத்துவத்துறையும் நம்மோடு ஒட்டிக்கொண்டே வரும் பயணங்கள்.

பொதுவாக உங்கள் எதிர்காலக் கனவு என்ன என்று கேட்டால் பள்ளிக் குழந்தைகள் சொல்லும் வார்த்தை டாக்டர்.வாழ்வின் சூழலில் திசைகள் மாறிப்போனாலும் சிலருக்கு அந்த வரம் தானகவே அமைந்து விடுகிறது.எல்லாக் கல்லூரிகளும் ஸ்ட்ரைக் என்ற ஆயுதத்தை தொட்ட காலத்திலும் கூட படிப்பும்,கடமையே உணர்வாக வெள்ளைக்கோட்டும் ஸ்டெதாஸ் என்றும் வலம் வந்த தேவதூதர்கள். வாழ்வோட்டத்தில் இங்கும் அங்கும் சில எதிர் விளைவுகள்,மனிதர்கள் இருந்தாலும் கூட மருத்துவத்துறையின் மகத்துவம் சிறப்பானது.

உலக யுத்தங்களிலும் மருத்துவர்களின் பணி மகத்தானது.அதே மாதிரியான ஒரு சூழலில் பணிபுரிந்த மூன்று மருத்துவர்கள் இலங்கையின் போர்க் குற்றவாளிகள்.இவர்கள் செய்த தவறு என்ன?உலக ஊடகவியளாலர்கள் செல்ல முடியாத சூழலில் மண்ணின் மைந்தர்களாய் போர்க்களத்தில் பணிபுரிந்ததும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை புகைப்பட ஆதாரங்களோடு உலகின் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதும்.வெறும் புகைப்படங்கள்,ஒளிகாணலைக் காணும் மானுட உணர்வு கொண்ட எவருக்குமே போரின் பயங்கரங்கள் புரியும் போது களத்தில் நின்று பணிபுரியும் இந்த மாமனிதர்களுக்கு நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் எண்ணமும் துணிச்சலும் வந்ததில் என்ன தவறு இருக்க முடியும்?

போரில் உயிர் இழந்தவர்கள் பற்றியும் எஞ்சியிருப்பவர்கள் பற்றியும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டுக் கொண்டும் நடுநிலை ஊடகவியளாலர்களை அனுமதிக்காமலும் போர்க்குற்றங்களின் ஆதாரங்களை அழிப்பதில் மட்டுமே தனது நாட்களை நகர்த்துகின்றது இலங்கை அரசு.

இதனிடையே ஒரு செயலின் முடிவு இன்னொரு செயலின் துவக்கமாய் உலக அதிகாரங்களின் கரங்களில் இலங்கை வந்து விட்டது.இதில் இலங்கை பூகோளப் போரின் வெறும் பகடைக் காயே.தமது நலன்களைப் பாதுகாப்பதில் தெற்காசிய நாடுகள் என்றும் மேற்கத்திய நாடுகள் என்றும் இரு அணிகளாய் மாறிவிட்டது. மே 18ம் தேதிக்கு அப்பால் மெல்லக் கிளம்பும் அறிக்கைகள் இதனை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன.

மானிட வார்த்தைகள் எல்லாம் தமிழன் உணர்வு என்ற வட்டத்துக்குள் மட்டுமே பார்க்கப்படுகிறது . இலங்கை அரசின் முன்னணி அரசியல் விளையாட்டுக்காரர்களின் அறிக்கைகள் இந்தியாவுக்கு எதிராகவே வருகிறது.இதற்கான துணிச்சலாக பாகிஸ்தானும்,சீனாவும் தமக்குத் துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தனது விசயங்களில் தலையிட வேண்டாம் என இந்தியாவுக்கு செக் வைக்கிறது.இனி வரும் காலங்களில் கடல்வழிப் பொருளாதாரப் போரில் நீயா நானா எனும் நிலை வரும் சாத்தியங்களுக்கான முன்னுரையாக மட்டுமே இப்பொழுது பல தரப்புக்களிலிருந்தும் வரும் அறிக்கைகள்.

இவை ஒரு புறமிருக்க கூட்டமாய் கம்பிவலை வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கே குரல் கொடுக்க ஆட்கள் இல்லாத போது மருத்துவம் கற்றதிற்கு தண்டனையாகவும் மனித அவலங்களை வெளிப்படுத்தியதற்காகவும் மருத்துவர்கள் போர்க் குற்றவாளிகளாக்கப் படுகிறார்கள் இலங்கை அரசால்.வாழ்க இலங்கை இறையாண்மை.

மேலதிக தகவல்களுக்கு:

http://news.bbc.co.uk/2/hi/south_asia/8083505.stm

2 comments:

ஷண்முகப்ரியன் said...

கொடுமைகளைத் தெளிவாக வெளிக் காட்டி இருக்கிறீர்கள்,ராஜ நடராஜன்.நன்றி.
இன்றைய உலகில் கயமையும், பொய்மையும் பல வேடங்களில் பவனி வருகின்றன.
நாடுகளின் இறையாண்மை என்பதும் அதில் ஒன்று.

ராஜ நடராஜன் said...

//இன்றைய உலகில் கயமையும், பொய்மையும் பல வேடங்களில் பவனி வருகின்றன.
நாடுகளின் இறையாண்மை என்பதும் அதில் ஒன்று.//

வாங்க சார்!இணைய தகவல் தொடர்பினால் நாடுகளின் இறையாண்மையின் வண்டவாளம் நன்றாகவே வெளிச்சத்துக்கு வருகின்றது.