அனைவரும் இயலாமையினாலும் செய்வதறியாது பதிவுகளாகவோ பின்னூட்டமாகவோ புலம்பிக்கொண்டிருக்கிறோம்.தலைமைகள் இருந்தும் தவறாக மாறிக்கொண்டிருக்கும் மத்திய அரசின் முடிவுகளால் தமிழகத்தில் கோபங்கள் அதிகரிக்கின்றன.சிலர் மவுன சிரிப்பிலும் ஈழம் பிரிந்து தொலைந்து விட்டதில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.இவற்றையெல்லாம் கடந்து ஒரு மக்கள் புரட்சி ஈழம் சார்ந்து எழத்தொடங்கியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து வாழ்க்கை மட்டத்தில் உள்ளவர்களும் தங்கள் கோபத்தை,ஆதங்கத்தை ஊர்வலமாக,முக்கியமாக மாணவர்கள் உண்ணாவிரதமாக வெளிப்படுத்துகிறார்கள்.இந்தக்கூட்டு முயற்சிகள் தோல்வியடைந்த விரக்தியில் மனஉணர்வுகள் எதிர்திசையில் திரும்பும் சாத்தியங்களை நிகழ்வுகள் உருவாக்குகிறது.(இதை எழுதி 3 நாட்களாகியும் இன்னும் பதிவுக்கு திரும்பாத நிலையில் இன்று முத்துக்குமாரன் தீக்குளிப்பு).
முதல் முறையாக தமிழகம் முழுவதும் குரல்கள் எழுப்பியும் அந்த ஜனநாயக குரல்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்காதது வேதனையையும் அந்நியப்படும் மனப்பான்மையையும் உருவாக்குகிறது.தமிழன் தனக்கென்று ஒரு பண்பாடு, இலக்கியம், வரலாறுகள்,சமூகம் சார்ந்த பார்வை கொண்டவன் என்ற உணர்வுகளாலுமே மாறுபட்டு நிற்கிறான்.
ஈழ உணர்வு இலங்கை ராணுவ வெற்றியோடு முடிந்து விடும் விசயமல்ல.அதனையும் தாண்டி நிகழும் மனித அவலங்கள் இலங்கை தமிழனுக்கு கவுரவமான எதிர்காலத்துக்கு வழிவகுப்பதோடு தொடர்புடையது.அதன் காரணம் கொண்டே ஈழம் தமிழனை பாதிக்கிறது.
முந்தைய ஈழம் குறித்த பதிவுகளில் சொன்னதையே மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது.விடுதலைப் புலிகளுக்கு மாற்றாக ஈழத்து மக்களுக்கு வேறு மாற்று சக்தி உருவாகாத காரணம் கொண்டும்,விடுதலைப் புலிகள் தோல்வியின் விளிம்பில் கூட இலங்கை தமிழர்களின் அபிலாசைகளுக்கு அங்கீகாரம் உரியவர்கள் என்ற காரணம் கொண்டே ஈழ சுதந்திர விடுதலை உணர்வை மதிக்கவேண்டியிருக்கிறது.
கருணா,அனந்தசங்கரி,பிள்ளையான் போன்றவர்கள் இடம் மாறியும் கூட உங்களை புதுப்பித்துக் காட்டும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளை நீங்கள் உருவாக்காததே தமிழக தமிழர்களின் நம்பிக்கையின்மைக்கான காரணமும், இருப்பதை உறுதியாகப் பற்றிக் கொண்டாவது சுய கவுரவத்துடன் வாழலாம் என்ற நம்பிக்கைதான் ஈழத்தமிழனுக்கு இத்தனை அவலங்களுக்கும் மத்தியிலும் இன்னும் மக்களை விடுதலைப்புலிகளின் பக்கம் இழுக்கிறதெனலாம்.
இலங்கை அரசு புலம் பெயர்ந்த தமிழனை மீண்டும் சம உரிமையோடு அணைத்துக்கொள்வதும், அல்லது இரண்டாம்தரக் குடிமகனாக வரவேற்பதும்,அல்லது அகதியாக உலகம் முழுவதும் ஊர்சுற்றவிடுவதும் போன்ற முக்கியமான நிகழ்வுகள் எதிர்காலத்தில் காத்துக் கிடக்கின்றன.மண்வாசனை காரணமாகவோ இயலாமையினாலேயோ தன் மண்ணை விட்டு நகராத உயிரோடிக்கும் உண்மை தமிழர்களின் எதிர்காலம் நிலைக்கவேண்டும்.
மூன்று சகாப்தத்தை தொடும் கொரில்லா இயக்க நிலையிலிருந்து போர்ப் படைகள் நிலை ,அரசாங்க நிர்மாணங்கள் என்று வளர்ந்த ஒரு இயக்கம் எப்படி இப்படி நிலைதடுமாறியது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.கிளிநொச்சி பத்திரிகையாளர்கள் கூட்டத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் தருணத்தில் பிரபாகரனின் முக அசைவுகளையும் பெரும்பாலான கேள்விகளுக்கான பதிலாக ஆன்டன் பாலசிங்கம் பதில் கூறுவதை நினைவுபடுத்தும் போது பிரபாகரனின் ராணுவ வெற்றிகளின் அளவுக்கு அரசியல் முன்நகர்வுகளை நகர்த்த இயலாமை தென்பட்டது. ராணுவ பலம் மற்றும் அரசியல் கட்டமைப்புக்கள் கொண்டு வளர்ந்த ஒரு இயக்கம் அரசியல் ரீதியாக தமிழ்செல்வன் இழப்புடன் கீழே விழத்தொடங்கியதெனலாம்.
அவலங்களும்,மனித அழிவுகளும் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் மனம் பதைக்கும் மனித நேயமாகவே ருவாண்டா கொலைகளும்,எத்தியோப்பியா வறுமையும்,ரஷ்ய மண்ணின் செச்சின்யா போர்களும்,வளைகுடா யுத்தங்களும்,பாலஸ்தீனப் பரிதாபமும்,ஈராக்கின் துயரங்களும் கண்ணில் படுகின்றன.மனித நேயம் என்பது எனது மொழிக்கான,தமிழ் இனத்துக்கான குரலாக மட்டும் ஈழம் நோக்கிய பார்வையில் திரும்பவில்லை என்பது ஏனைய உலக நிகழ்வுகளையும் உற்று நோக்கியதிலும் அந்த துயரங்களில் பங்கு கொண்டதிலும் தென்படுகிறது.
கருணாநிதி,ஜெயலலிதா இருவருக்கும் ராஜபக்சே அழைப்பு விடுத்திருக்கிறார் தங்கள் கண்ணாலேயே ஈழத்து நிலையினை வந்து பார்க்குபடி.மறைந்த இலங்கை பத்திரிகை ஆசிரியர் லசந்தே விக்கிரமசிங்கே சொன்னதுபோல் மனிதநேயங்கள் இழந்தும்,வருங்காலம் இலங்கைக்கு எந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்ற பார்வையில்லாதும் உலகப் பத்திரிகை ஊடகங்களுக்கு கூட அனுமதி வழங்காத இலங்கை ஜனாதிபதி இந்த அழைப்பின் மூலம் எதனை நிலை நாட்ட முயல்கிறார்? எதுவாக இருந்தாலும் அவரது அரசியல் தமிழக அரசியலை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார் எனபதைக் காட்டுகிறது.ஒருவர் வேனை விட்டு நகரமாட்டார்,இன்னொருவர் வயதின் முதுமை காரணமாக கடல் கடக்கமாட்டார் என்ற நிலையில் இந்த அழைப்பு எந்த அளவுக்கு சாத்தியமென்று தெரியவில்லை.தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரு சக்திகளும் நிகழ்கால அரசியலை சமன்படுத்த விரும்பா எதிர் சக்திகள்.
கூடவே தமிழகம் அனைத்தும் எழும் சிந்தனையும் உணர்வும் நியாயமானது என்று மக்கள் குரல்கள் எதிரொலிக்கின்றன.மக்களின் குரல்கள் வெறும் கூச்சலாகவும்,தமிழக தலைவர்கள் கோமாளிகளாகவும் தென்படும் இலங்கை அரசுக்கு தமிழகமும்,இந்தியாவும் வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற ஜனநாயகம் என்ற வேர்களுக்குள் நிலைத்து விட்டதால் மாத்திரமே அனைத்தும் கோமாளித்தனமாக தெரிகின்றது.
ஒரு முக்கியமான மண்,மொழி,இனம் சார்ந்த பிரச்சினையில் எங்கள் தலைமைகள் குட்டையை குழப்பினாலும் ஒரு பொறுப்பான நிலையில் உட்கார்ந்து கொண்டு உதிர்த்த பொன்முத்துக்கள் கண்டனத்துக்குரியது Mr.பொன்சேகா!
ஈழம் குறித்த எதிர்க்குரல்கள் தமிழகத்திலும் ஈழத்திலும் எழுந்தாலும் அவை குறைவான எண்ணிக்கையின் விழுக்காடு என்பதால் புறம் தள்ளி விடலாம்.தீவிரவாதம் என்ற கோட்டுக்குள் பார்க்கப்படுகின்ற ஒரு இனத்தின் உரிமைக்குரல் காரண காரியங்கள் தமக்கு சார்ந்த அனுகூலங்கள் என்ற காரணத்தால் ராணுவ ரீதியாக இலங்கை அரசுக்கு வெற்றியைத் தந்துள்ளது.மனரீதியான வெற்றியைப் பெறும் தகுதி தற்போதைய இலங்கை அரசுக்கு உள்ளதா என்பது கேள்விக்குரியது.இருந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு என்ற முத்திரையின் காரணமாக காயங்கள்,இழப்புக்கள்,வடுக்களுடன் இன்னும் ஏதாவது ஒரு வகையில் இலங்கை அரசை எதிர்கொள்ளவே வேண்டியிருக்கிறது.போரின் அவலங்கள் இத்தனை நிகழ்ந்தும் போருக்கெதிரான குரலாக சிங்கள மக்களின் ஒரு விழுக்காட்டில் கூட சமாதான குரல் எழும்பாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.இந்த நிலையில் எந்த விதமான எதிர்கால கூட்டு வாழ்க்கை இயலும் என்ற நம்பிக்கையும் கேள்விக்குரியதாக இருக்கிறது.
சில எதிர்மறையான பதிவுகளும் முக்கியமாக பின்னூட்டங்களும் தென்படுகின்றன.போய் புள்ள குட்டிகளைப் பாருங்கய்யா!தமிழ் நாட்டையும் இலங்கை மாதிரி ஆக்கிடுங்க போன்ற எழுத்துக்களும்.ஆட்டு மந்தையாக ஒரே மாதிரி சிந்திப்பது சரியல்ல.ஆனால் வித்தியாசமாக சிந்திக்கிறேன் என தனது இயல்புகளையும் பண்புகளையும் இழந்துவிட்டு யோசிப்பதில் என்ன பலன்?எழுத்து,மொழி ஆர்வம் கொண்டே பதிவர்களும் பின்னூட்டக்காரர்களும் தமிழ் வலைப்பக்கம் எட்டிப்பார்க்கிறார்கள்.ஈழம் பற்றி பதிவு எழுதுகிறவர்களும் ஏன் எதிர்மறை பின்னூட்டமிடுபவர்கள் கூட ஏதோ ஒரு சமூக அக்கறையினாலும்,சமுதாய சிந்தனை அடிமனத்தில் தொக்கி நிற்பதாலுமே தமது கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்பது எனது கணிப்பு.
பதிவுகளை எட்டிப்பார்க்கும் கால அவகாசம்,வசதிகள் இருந்தும் தனது சுயநலம் மட்டுமே போதுமென்று நினைத்தால் நிச்சயம் மாற்றுவழிகள் ஏராளமாயிருக்கின்றன.ஆனாலும் அனைவரும் ஏன் ஒரு பொதுக்கருத்தை உணர்வதிலும் நிறுவுவதிலும் ஆர்வம் கொள்கிறேமென்றால் இது நமது மனம் சார்ந்த, மூளையின் அணுக்கள் சார்ந்த ஒரு மொழியின்,இனத்தின் மக்களின் உயிர்,வாழ்க்கை,எதிர்காலம்,உரிமைகள் போன்ற முக்கியமான வாழ்வாதாரங்களை உட்படுத்தியது .இது இயல்பாக அனைவருக்கும் உருவாகும் சிந்தனையின் வெளிப்பாடு.
ஈழம் சார்ந்த நல்லது ,கெட்டது அனைத்தும் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை சார்ந்ததுதான்.ஒன்று விடுதலைப் புலிகளையும் ஈழத்து மக்களையும் ஆதரிக்கிறோம் என சொல்லி விட்டுப் போங்கள்.அல்லது விடுதலைப் புலிகளையும் ஈழத்து மக்களையும் ஆதரிக்கவில்லை என்று சொல்லுங்கள்.அதனை விடுத்து நாங்கள் விடுதலைப் புலிகளை எதிர்க்கிறோம், ஈழத்து மக்களை ஆதரிக்கிறோம் என்பது ஓட்டு வங்கியில் கவனம் செலுத்தும் அரசியல் கணக்காகவே முடியும்.இந்த அரசியல் கோசங்களை காங்கிரசும்,பி.ஜே.பியும் அறிக்கையாக வெளியிடுகிறது.தனிப்பட்ட முறையில் விடுதலை இயக்கத்தையும்,ஈழ மக்களையும் எப்படி பிரித்துப் பார்ப்பதென்று தெரியவில்லை.அப்படி தனிமைப் படுத்த வேண்டுமென்றால் ஏனைய இயக்கங்கள் சுகாதார சிந்தனையுடனும்,மக்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையும் சாத்தியங்கள் உள்ளதா என சிந்திக்கவேண்டியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் சில மாதங்களில் வருகின்ற மத்திய அரசு வாக்குரிமை அஸ்திரமே ஈழத்து தமிழனுக்கு ஆதரவாக கடைசி ஆயுதமாக இருக்கப் போகின்றது.ஆனால் நிகழும் அரசியல் சறுக்குகள் ஒரு நிலையான வாக்குகளாக மாறாமல் போவதற்கான சாத்தியங்களாக அனைத்து அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளும் இருக்கின்றன.
ஜெயலலிதா ஈழ தமிழ் மக்களின் வாழ்விற்கு எதிரான அறிக்கைகளை விடுகிறார். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தமிழக அரசியல் வாழ்வில் நிலைத்த சாமர்த்தியம் ஆச்சரியத்திற்குரியது.இவ்வளவு நாட்கள் அரசியலில் இருந்தும் அரசியல் முதிர்வு பேசுவதில் தென்படுவதில்லை.கலைஞர் தானும் முன்னிற்காமல் மற்ற கட்சிகளையும் செயல்பட விடாமல் அறிக்கைகள் தினம் வேறுபடுகின்றன.தண்டவாளத்தில் தலை கொடுத்த மு.க வின் இளமை அரசியல் கால கட்டங்களிலிருந்து கடந்து வந்த அரசியல் ஏறுமுகம்,சறுக்கல்கள்,சோதனைகளை தாக்கு பிடிக்கும் தைரியம் அசாத்தியமானவை.அரசியலின் இறுதி கால கட்டங்களில் ஈழம் குறித்த கலைஞரின் பார்வை வரலாற்றில் விமர்சனத்துக்குரியதாகவே இருக்கப் போகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை பிரச்சினையை எப்படி அலசிப்பார்த்தாலும் இறுதியில் ராஜிவ் காந்தி என்ற கோட்டுக்குள் வந்து முடிந்துவிடுவதால் ஈழத்துமக்களின் நலன்களை விட இழந்த இந்திய தலைவனின் துயரேமே முக்கியமாக சிலரின் மனதில் நின்றுவிடுகிறது.திசை மாறிப்போய் விட்ட இத்தனை சிக்கல்களுக்கும் இதுவே காரணமென்ற போதிலும் இழந்தது பெரிய இழப்பாகிப் போனாலும் வாழ்க்கையையும்,வரலாற்றையும் முன்னோக்கி நகர்த்த வேண்டிய கால கட்டத்தின் பாதையில் ஓர் இனம் அலைக்கழிக்கப்படுவது எதிர்காலத்தில் யாருக்கும் நல்லதல்ல.
கருணாநிதி,ஜெயலலிதா இருவருக்கும் ராஜபக்சே அழைப்பு விடுத்திருக்கிறார் தங்கள் கண்ணாலேயே ஈழத்து நிலையினை வந்து பார்க்குபடி.மறைந்த இலங்கை பத்திரிகை ஆசிரியர் லசந்தே விக்கிரமசிங்கே சொன்னதுபோல் மனிதநேயங்கள் இழந்தும்,வருங்காலம் இலங்கைக்கு எந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்ற பார்வையில்லாதும் உலகப் பத்திரிகை ஊடகங்களுக்கு கூட அனுமதி வழங்காத இலங்கை ஜனாதிபதி இந்த அழைப்பின் மூலம் எதனை நிலை நாட்ட முயல்கிறார்? எதுவாக இருந்தாலும் அவரது அரசியல் தமிழக அரசியலை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார் எனபதைக் காட்டுகிறது.ஒருவர் வேனை விட்டு நகரமாட்டார்,இன்னொருவர் வயதின் முதுமை காரணமாக கடல் கடக்கமாட்டார் என்ற நிலையில் இந்த அழைப்பு எந்த அளவுக்கு சாத்தியமென்று தெரியவில்லை.தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரு சக்திகளும் நிகழ்கால அரசியலை சமன்படுத்த விரும்பா எதிர் சக்திகள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பான சூடான இடுகைகள் பக்கம் முழுவதும் கல்மடுவின் குளம் உடைக்கப்பட்டதும் அதனால் இலங்கை ராணுவ வீரர்களின் எண்ணிக்கை பற்றிய பதிவுகளும் பொய்யாகிப் போய் அதே தின மாலையில் முல்லைத் தீவை ராணுவம் கைப்பற்றியது செய்தியானது.பல நாடுகளிலிருந்தும் பதிவிடும் அன்பர்கள் கல்மடுகிணறு உடைந்த செய்தி உண்மையாகியிருந்தும் உயிர்ச்சேதம் குறித்த செய்திகள் எந்த மூலத்திலிருந்து பதிவர்களை மட்டுமல்லாது தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் உட்பட ஏமாற்றுவித்தது என்ற புலனாய்வு முக்கியம்.முக்கியமாக பதிவர் வட்டத்தில் இதன் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரவேண்டும்.
இதனையும் தாண்டி வாழ்க்கை நிகழ்வுகளை தமிழகமும் இலங்கையும் எதிர்கொள்ள வேண்டிய மொழி,பூகோளம் சார்ந்தவை தொடர்கதையாக மாற்று தலைமுறைக்கு எதிர்காலம் எடுத்துச் செல்லும்.தற்போதைக்கான தீர்வையே சிந்திக்காத இலங்கை ஜனாதிபதிக்கு இதனையெல்லாம் சிந்திக்கும் சுழல்கள், கால அவகாசங்கள்,மன நிலைகள் அமையாது போனது இலங்கை மக்களுக்கான சரியான தலைமை அமையாமல் போனது துயரத்திற்குரியது.அதே நேரத்தில் நிகழும் ராணுவ முன்நகர்வுகள் துவக்க கால போராட்டத்தின் வட்டத்திற்கு மீண்டும் தள்ளப்பட்டு விட்டது.
புதிய தீர்வுக்கான வழிமுறைகளை அனைவரும் சிந்திப்பதே எஞ்சி நிற்கும் மக்களின் உயிர் காப்பதற்கும் இலங்கைக்கும் துணை புரியும்.
12 comments:
நல்ல ஆழமான அலசல்
புதிய தீர்வுக்கான வழிமுறைகளை அனைவரும் சிந்திப்பதே எஞ்சி நிற்கும் மக்களின் உயிர் காப்பதற்கும் இலங்கைக்கும் துணை புரியும்.//
இருக்கிற உயிரை எப்படியாவது காப்பாத்துனா சரி.இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல
//நல்ல ஆழமான அலசல்//
வருகைக்கு நன்றி நசரேயன்.
//இருக்கிற உயிரை எப்படியாவது காப்பாத்துனா சரி.இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல//
வாங்க குடுகுடுப்பையாரே!போரை நிறுத்து என்ற குரலின் முக்கிய காரணமே இதுக்குதாங்க.
/கிளிநொச்சி பத்திரிகையாளர்கள் கூட்டத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் தருணத்தில் பிரபாகரனின் முக அசைவுகளையும் பெரும்பாலான கேள்விகளுக்கான பதிலாக ஆன்டன் பாலசிங்கம் பதில் கூறுவதை நினைவுபடுத்தும் போது பிரபாகரனின் ராணுவ வெற்றிகளின் அளவுக்கு அரசியல் முன்நகர்வுகளை நகர்த்த இயலாமை தென்பட்டது./
மிக நுணுக்கமாக கவனித்துள்ளீர்கள்.
/ஒன்று விடுதலைப் புலிகளையும் ஈழத்து மக்களையும் ஆதரிக்கிறோம் என சொல்லி விட்டுப் போங்கள்.அல்லது விடுதலைப் புலிகளையும் ஈழத்து மக்களையும் ஆதரிக்கவில்லை என்று சொல்லுங்கள்./
இது ஏற்றுகொள்ள முடியாதது. புலிகளும் ஈழத்து மக்களும் எப்படி ஒன்றாக முடியும் ?
அண்ணே, நன்றாக எடுத்து உரைத்து உள்ளீர்கள்! உடனடித் தேவை போர் நிறுத்தம். மேற்கத்திய உலகத்தால் மட்டுமே அது சாத்தியம். அதற்கு அரசியல் தலைவர்கள் இல்லாது போனதே இவ்வளவுக்கும் காரணம்.
அடிப்படையில் பிரபாகரன் ஒரு அரசியல் வாதி இல்லை, தனது மக்களை காக்கவேண்டும் என நினைக்கும் ஒரு தலைவன், அதனால்தான் மக்களும் புலிகளும் ஒன்றாகிப்போனதும், அரசியல் பேட்டியில் அவரால் அரசியல் பேச முடியாமல் போனதும், அவரது சிந்தனை எல்லாம், அவலத்தைதரும் ராணூவத்தை எப்படி அழிப்பது, அது தொடராது இருக்க என்ன வழி என்பதுமே.
///ஒன்று விடுதலைப் புலிகளையும் ஈழத்து மக்களையும் ஆதரிக்கிறோம் என சொல்லி விட்டுப் போங்கள்.அல்லது விடுதலைப் புலிகளையும் ஈழத்து மக்களையும் ஆதரிக்கவில்லை என்று சொல்லுங்கள்./
இது ஏற்றுகொள்ள முடியாதது. புலிகளும் ஈழத்து மக்களும் எப்படி ஒன்றாக முடியும் ?//
வாங்க அனானி!விமர்சனத்துக்குள்ளான கருத்தென்பதால் முகம் காட்டாமல் வருகிறீர்கள் என நினைக்கிறேன்.
ஈழப் போராட்டம் துவக்க காலங்களில் அறப்போராட்டம் போன்று துவங்கி ஆயுதப் போராட்டமாக மாறிவிட்டது.மாற்றுக் கருத்துக்களும் கொள்கை இயக்கங்களும் இருந்தாலும் கூட ஈழம் பற்றிய உலகம் தெரிந்து கொண்டது விடுதலைப் புலிகளால் மாத்திரமே.இந்தப் போராட்டத்தின் இறுதி முடிச்சும் விடுதலைப் புலிகளின் கைகளிலேயே இருப்பதால் அந்த இயக்கத்தையும் ஈழ மக்களையும் பிரிப்பதென்பது இயலாத ஒன்று பல இயக்கங்களாய் ஈழம் பிரிந்து போனாலும் கூட.
//அண்ணே, நன்றாக எடுத்து உரைத்து உள்ளீர்கள்! உடனடித் தேவை போர் நிறுத்தம். மேற்கத்திய உலகத்தால் மட்டுமே அது சாத்தியம். அதற்கு அரசியல் தலைவர்கள் இல்லாது போனதே இவ்வளவுக்கும் காரணம்.//
ஒரு நாட்டைச் சார்ந்து இன்னொரு நாடும் உறவுகள் கொள்ளும் காலகட்டங்களில் அரசியல் ரீதியாக ஈழம் வலுப்படுத்தாமல் போனதும் ஒரு காரணமே.
//அடிப்படையில் பிரபாகரன் ஒரு அரசியல் வாதி இல்லை, தனது மக்களை காக்கவேண்டும் என நினைக்கும் ஒரு தலைவன், அதனால்தான் மக்களும் புலிகளும் ஒன்றாகிப்போனதும், அரசியல் பேட்டியில் அவரால் அரசியல் பேச முடியாமல் போனதும், அவரது சிந்தனை எல்லாம், அவலத்தைதரும் ராணூவத்தை எப்படி அழிப்பது, அது தொடராது இருக்க என்ன வழி என்பதுமே.//
உங்கள் பார்வை கூட சரியாக இருக்கலாம் அனானி.நான் சொல்லவருவது பிரபாகரனின் மக்கள் வசீகரம்,ராணுவ யுக்திகளுடன் அரசியல் ரீதியாகவும் முன்னேறுவதில் காட்ட வேண்டிய யுக்திகள் வலுப்படாமல் போனதே.
விரிவான பகிர்வுக்கு நன்றிகள் பல
//விரிவான பகிர்வுக்கு நன்றிகள் பல//
உங்கள் வருகைக்கு நன்றி பாலா!
Post a Comment