2008 டிசம்பர் 31 வரையான உலக நிகழ்வுகளை வெறும் பார்வையாளனாய் பார்த்து விட்டு அவ்வப்போது பதிவர்களின் பதிவுப்பக்கங்களையும் கண்ணோக்கி விட்டு தூங்கி எழுந்தால் ஜனவரி 2ம் நாள் கிளிநொச்சி மனதையும் உணர்வுகளையும் ஆக்கிரமித்துக்கொண்டது.
நீரு பூத்த நெருப்பாய் மனதுக்குள் உறங்கிக் கிடந்த உணர்வுகள் தமிழகத்தில் தலையெடுக்க ஆரம்பித்த கணங்களில் இவ்வளவு நாள் துயரங்களை அனுபவித்த ஈழத்து தமிழர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கையை தமிழக அனைத்துக் கட்சிகளும் சட்டசபையில் அங்கீகாரம் கொண்ட காரணத்தால் மேலும் வலுவான நிலை வரை நம்பிக்கைகள் நிலைகொண்டே இருந்தது.ஆனால் அரசியல் கட்சிகளின் குளருபடிகளில் துவங்கிய சலசலப்பு ஈழத்துப்பிரச்சினையை திசை மாறும்படியாக மாற்றியது.இருந்தும் அவ்வப்போது தொடர்ந்த தார்மீக ஆதரவுகள் ஈழத்துக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் என்ற எண்ணத்தில் விழுந்த அடி கிளிநொச்சி பின்நகர்வு.
ஒருபுறம் போர்த்தந்திரங்கள் என்ற சமாதானம் கொண்டாலும் முன்னோக்கித் தாக்கும் திறன் யுத்தத்தில் இருக்கும் உத்வேகம்,அனுகூலங்கள் பின்னகர்வில் குறைவே எனலாம்.ஈராக்கின் யுத்த களத்தில் கூட வேகமாக முன்னேறும் படையின் வேகமும் அதற்கேற்றாற் போல ஈராக்கின் ராணுவமும் எந்த எதிர்ப்பும் காண்பிக்காத நிலையில் தலைநகர் பாக்தாத் நோக்கிய அமெரிக்கப் படை நகர்வில் நிலைதடுமாறிய ஈராக் இன்னும் எழுந்துநிற்க முடியாமல் பல நிகழ்வுகள் நடந்து விட்டது.
போர்களை வெறுக்கும் சாதாரணமாய் உலக நிகழ்வுகளை காணும் எவருக்கும் அமெரிக்காவின் ஈராக் யுத்தம் தவறென்று பட்டது.ஈராக் யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கோடானு கோடி மனித நேயம் கொண்ட எதிர்ப்பையும் எதிர்த்து ஈராக் யுத்தம் நடந்து முடிந்து அதன் விளைவுகள் கண்ணெதிரில்.ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் தனது பதவியின் இறுதிப் பேருரையில் போர் தவறென்று பிரகடனம் செய்கிறார்.
விடுதலைப் புலிகள் தங்கள் நிலைப் பாட்டை உலகத்தமிழர்களுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.மொழி உணர்வாளர்களும்,மனித நேயம் கொண்டவர்களும் ஈழத்து மக்களுக்கு விடிவைத் தேடுகிறார்கள்.விடுதலைப் புலிகளின்பால் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களும்,பாதிக்கப் பட்டவர்களும் ஈழத்து சுதந்திரத்திற்கு எதிராக உள்ளனர்.தமிழகம் ஈழத்துப் பிரச்சினையை மொழி உணர்வோடும்,மனிதாபிமான சாயலிலும் கூடவே ராஜிவின் கோணத்திலும் பார்க்கிறது.
இலங்கையில் சிங்களவர்களும் தங்கள் நாடு மற்றும் மொழி உணர்விலும் பார்ப்பதில் தவறில்லை.ஆனால் சில ஈழத்து தமிழர்கள் புலிகளுக்கெதிரான நிலைபாடுகள் தாங்கள் எதனை எதிர்காலத்தில் இழக்கப்போகிறோம் என்ற உணர்வே மறந்து ஒரு உரிமைப் போராட்டத்தையும் கூடவே தன்சக மனிதர் இழப்புக்களையும் கண்டுகொள்ளாமல் இலங்கை அரசின் அபிலாசைகளுக்கு துணை போகின்றன.
இலங்கையின் இறையாண்மையில் நம்பிக்கை கொண்டு விடுதலைப் புலிகளை எதிர்த்தாலும் இலங்கை அரசு ஈழத்துக்கு எந்தவிதமான எதிர்காலத்தை தரப்போகிறது என்பதில் இலங்கை அரசாங்கமே கூட உறுதியற்றும், நம்பிக்கையற்றும் காணப்படுகிறது. காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முதலில் விடுதலைப் புலிகள் ஒழியட்டும் என்பதில் கண்ணாயிருக்கும் சில இலங்கைத் தமிழர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது.
25 ஆண்டு காலத்திற்கும் மேலான பிரபாகரனின் பெயரின் ஆதிக்கம் இலங்கையின் வரலாறுகளாக எழுதப்பட்டுவிட்ட பின் விடுதலைப் புலிகளின் ஆதரவும்,எதிர்ப்பும் விடுதலைப் புலிகளின் எழுச்சியும்,வீழ்ச்சியையும் ஒட்டியே ஈழத்தமிழனுக்கு வாழ்க்கையாக அமையும்.இந்தப் பார்வை ஈழத்தில் வாழும் தமிழ் எதிர் அணிக்கு தவறாகப் பட்டாலும் தமிழகத்தின் பெரும்பான்மையானோர் பார்வை இதுவே.
இயக்க உணர்வுகளையும் தாண்டி வெளிப்படும் கோபமும்,தொலை நோக்குப் பார்வை இல்லாமையும் பெரும் பின்விளைவுகளை ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்தும்.விடுதலைப் புலிகளுக்கு மாற்றாக தமிழர்களை முன்னோக்கி கொண்டு செல்லும் எந்த வலுவான அமைப்பும் கண்ணுக்கு தெரியவில்லை.விடுதலை இயக்கத்துக்கான எதிர்க் குரலாக தோன்றும் எந்த அமைப்பும் எதிர்கால நம்பிக்கையை தரவில்லை.இலங்கை அரசாங்கமும் இதுவரையிலும் அடைந்த போர் முன் நகர்வுகளுக்கும் அப்பால் ஒருங்கிணைந்த அடையாளமாக எந்தவிதமான தீர்வினையும் முன்வைக்கவில்லை.தீர்வை முன்வைக்காத அரசியல் நகர்வுகள் விடுதலைப்புலிகளின் வருங்கால நிலைப் பின்னடைவடைந்தால் இலங்கை அரசு வைக்கும் தீர்வுகளுக்கு செவி சாய்க்கவேண்டிய கட்டாயத்துக்கு ஈழம் நகரவேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.
50 ஆண்டுகளாய் அதிலும் இயக்கங்கள் தலையெடுத்த கால கட்டத்திற்குப் பிறகு உருவான சமூக,மனித அர்ப்பணிப்புகளுக்கு அர்த்தங்கள் இல்லாத சூழலை தோற்றுவிக்கும் எதிர் முகாமிடும் தமிழனைப் பார்த்து மனது வேதனையடைகிறது!தமிழீழம் தூரக்கனவுக்கு இலங்கைப் படையுடன் தமிழனும் துணைபோய்விட்டான். இலங்கை அரசு வலைத்தளங்கள் கூட தங்களது போர் வெற்றிகளை மட்டுமே முன்னிலைப்படுத்தும் போது சில தமிழ் தளங்கள் புலிகள் இயக்கத்துக்கு எதிரான செயல்களாய் மட்டுமே செய்திகள் வெளியிடுகின்றன.விடுதலைப் புலிகளுடனான கருணாவின் உட்பூசல் எந்தவிதத்தில் நியாயப்படுத்தலாய் இருந்தாலும் ஈழ வரலாறு எட்டப்பன் சொந்தக்காரன் என்றே எழுதி வைக்கப் போகின்றது தமிழர் மத்தியில் முக்கியமாக தமிழகத்தில்.
இனி ஈழத்துக்காக வேண்டி குரல் எழுப்ப தமிழகத்தை விட்டால் நாதியில்லை என்ற நிலையில் சமகாலத்தில் நிகழும் இரு நிகழ்வுகள் என்ற கண்ணோட்டத்தில் நோக்கினால் இஸ்ரேல் ,பாலஸ்தீனியப் பிரச்சினை உலகம் முழுவதும் ஒலிக்கிறது.ஈழத்து மக்கள் படும் அவதிகள் தமிழ்நாட்டுக்குள்ளும் தமிழ்வாழ் உலகு மட்டும் ஒலிக்கிறது.மனிதநேயம் என்பது கூட தனக்கு சாதகமான தராசில் வைத்தே உலகம் எடைபோடுகிறது.
பைபிளின் கதைகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இஸ்ரேலியர் என்ற ஒரு இனம் இடம் பெயரலுக்கு பாலஸ்தீனியர்கள் காரணமாக இருக்கக்கூடும்.ஆனால் வாழ்க்கை மாற்றங்கள் கொண்டது என்ற காரணம் கொண்டு நோக்கினால் நவீன வாழ்வியலுக்கு இஸ்ரேலியர்கள் வருவதே பாலஸ்தீனம்,இஸ்ரேல் நாடுகளுக்கான நன்மையாக இருக்கும்.அதுவன்றி பழமைவாதங்களில் மனித வெறுப்புக்கள் உச்சமடையும் நிலையில் எதிர்காலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கேள்விக்குரியதாகவே இருக்கும்.
தனது படைபலத்தால் மக்கள் வாழும் பகுதிகள் உட்பட தாக்கும் இஸ்ரேலிய யுத்தம் கண்டிக்கத் தக்கது.இதே நோக்கில் ஈழத்து மக்கள் படும் அவதியும் கவலைக்குரியது.ஆனால் உலகம் பாலஸ்தீனியத்தை மட்டுமே பார்க்கிறது.இஸ்ரேல் அரசு மக்கள் மீது குண்டு போட்டால் பாலஸ்தீனியர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.இலங்கை அரசு மக்கள் மீது குண்டு போட்டால் தீவிரவாதிகள் ஒழிக்கப்படுகிறார்கள்.என்ன வாதமோ தெரியவில்லை போங்க.(பாலஸ்தீனியப் பிரச்சினையில் பொருளாதாரம் விளையாடுகிறது அல்லது பயன்படுகிறது என்பது மட்டும் உண்மை)
இனி உள்ளுக்குள் கட்சிப் பூசல்கள் இருந்தாலும் ஒற்றுமை, பொருளாதார உதவி,எதிர்ப்பு குணம் மட்டுமே ஈழப்போரை வென்றிருக்க முடியும்.ஒற்றுமையில்லாத காரணத்தால் ஓர் உரிமைப்போர் நீர்த்துப்போகும் நிலைக்கு ஈழம் தள்ளப்பட்டிருக்கிறது. போர்கள் என்றும் வெற்றியாவதில்லை.ஆனால் அதன் விளைவுகளை ஒட்டியே வாழ்க்கை நிலை அமையும்.மண்ணின் மைந்தன் உரிமையில் உரிமைக்கானப் போரட்டம் தொடரவும் போராட்டத்தின் முகம் மாறினாலும் தனது உரிமைக்குரல் நிலைக்கச் செய்வது நிகழ்கால,எதிர்காலத் தமிழனின் கடமை. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். ஈழம் துயரத்தின் பிடியில் இருந்தாலும் பொங்கல் வாழ்த்துக்களை ஈழத்தமிழர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.காரணம் பொங்கல் தமிழனின் அடையாளம்.
8 comments:
/*மனிதநேயம் என்பது கூட தனக்கு சாதகமான தராசில் வைத்தே உலகம் எடைபோடுகிறது*/
வேதனையான விஷயம்
*மனிதநேயம் என்பது கூட தனக்கு சாதகமான தராசில் வைத்தே உலகம் எடைபோடுகிறது*/
வேதனையான விஷயம்
பாலஸ்தீனம் வரை ஏன் செல்கிறீர்கள்.
என்னோடு வேலை பார்க்கும் ஒரு தெலுங்கர், இலங்கை வேறு நாடு அங்கே தமிழர்கள் செத்தால் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்கிறார்.?
என்னத்த சொல்ல இந்த அறியாமையை
/*மனிதநேயம் என்பது கூட தனக்கு சாதகமான தராசில் வைத்தே உலகம் எடைபோடுகிறது*/
உண்மை.
பொங்கல் வாழ்த்துகள்
சிந்திக்க வைக்குற பதிவு...
Focus Lanka திரட்டியில் உங்களையும் இணைக்க
http://www.focuslanka.com
// நசரேயன் said...
/*மனிதநேயம் என்பது கூட தனக்கு சாதகமான தராசில் வைத்தே உலகம் எடைபோடுகிறது*/
வேதனையான விஷயம்//
மத்திய கிழக்கு நாடுகளின் போர்களான இஸ்ரேல், பாலஸ்தீனம்,குவைத்,ஈராக்,லெபனான்,சிரியாவுடனான யுத்த தாக்கங்களை மனிதாபிமான கண்ணோடே நோக்கி வந்திருக்கிறேன்.ஆனால் ஈழம் உதாசீனப்படுத்தும் இந்த கணத்தில் இஸ்ரேல்,பாலஸ்தீனம் போர்க்கொடுமைகள் என்னை மரத்துப் போக வைக்கிறது.
//குடுகுடுப்பை said...
*மனிதநேயம் என்பது கூட தனக்கு சாதகமான தராசில் வைத்தே உலகம் எடைபோடுகிறது*/
வேதனையான விஷயம்
பாலஸ்தீனம் வரை ஏன் செல்கிறீர்கள்.
என்னோடு வேலை பார்க்கும் ஒரு தெலுங்கர், இலங்கை வேறு நாடு அங்கே தமிழர்கள் செத்தால் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்கிறார்.?
என்னத்த சொல்ல இந்த அறியாமையை//
கூட வேலை பார்ப்பவர் முழு அமெரிக்கர் ஆகிவிட்டாரோ என்னவோ?ஏனென்றால் 9/11 க்கு முந்தைய நாட்களில் அமெரிக்கர்களுக்கு உலக நடப்புக்கள் தெரியாது என கேள்விப்பட்டேன்.
//
Blogger பழமைபேசி said...
சிந்திக்க வைக்குற பதிவு...//
வாங்க பழமை!விடுமுறை முடிஞ்சிடுச்சுங்களா?பதிவு எண்ணிக்கை குறையுது அதனால்தான் கேட்டேன்:)
Post a Comment