இன்று காலை அலுவலகம் போகலாம் என்று கிராண்ட் சிறுக்கியை தொட்டால் கிர்.கிர் என்ற சத்தத்துடன் தடைமிதிப் பலகை (நம்ம ஊரு பிரேக்)யைத் தொடும்பொதெல்லாம் சத்தமிட்டுக் கொண்டு என்னையும் கலவரப் படுத்திக் கொண்டே வந்தது.அலுவலகத்தில் தலையைக் காட்டிவிட்டு பழுதுபார்க்கலாம் என்று போனேன்.
குளிர்சாதன அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது சில சமயம் எரிச்சல் ஊட்டும் விசயம்.அதனால் சில சமயம் மதிய வெயிலில் கடற்கரையை சீப்பு போடும் நோக்கத்தில் போகும்போது கூட வெயிலின் உக்கிரம் தெரிவதில்லை.காரணம் அனல் கக்கும் மணல் ஒருபுறமும் கடல் அலைகளின் மெல்லிய சத்தம் ஒருபுறமும் இடையில் ஈரமான மணலில் நீர் காலைத் தொடாமல் சுமார் இரண்டு கிலோமீட்டர் நடப்பது கூட ஓர் சுகமான அனுபவம்.கூடவே வெயிலின் உஷ்ணத்தால் வெளியே மதியம் கடலை அண்டாத மக்கள் கூட்டமில்லாத தனிமையும் ஓர் அலாதி சுகமே.
ஆனால் வண்டியை இயந்திரம் சீர்திருத்துமிடத்துக்கு கொண்டு சென்றதில் அந்த சுகமில்லை.கண்விழி புருவம் வரை முத்துக்களாய் வியர்வை.நாக்கு வரட்சி.சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வெயிலின் நிழலில் உட்காரவேண்டிய நிர்பந்தம்.குஜராத் மாநிலத்து 20 மதிக்கத்தக்க எளந்தாரி(வார்த்தைத் திருடல் லதானந்த் ஆபிசரிடமிருந்து) வெயிலில் டிஸ்க் எனும் இரும்பு வளையத்துடன் தடைமிதி அரைச் சந்திர வட்டம் போன்ற உருளையை இணைக்க முயன்று கொண்டிருந்தார்.
என்னால் வெயிலின் நிழலில் ஒருமணி நேரத்துக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை.இந்த மாதிரி உழைப்பாளிகள் சாலைப்பணி செய்யும் பன்நாட்டு தொழிலாளிகள்,நகர் சுத்திகரிப்பு வேலை செய்யும் பங்களாதேஷ் மற்றும் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கை நிலை பரிதாபத்துக்குரியது.மிக அதிகக் குளிர்,உஷ்ணம்,குறைந்த சம்பளம் என்று இத்தனை இன்னல்களையும் தாங்கிக் கொள்ளும்படியான தேச,காலச் சூழ்நிலைகள்.சுதந்திரக் காற்றை சுவாசித்த பங்களாதேஷ் இயற்கையின் தொடர் சீற்றங்களுடன் மதப் படுகுழிக்குள் விழுந்துவிட்டது பரிதாபத்திற்குரிய விசயம்.
கிருஸ்மஸ்,புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டாய மரபுகளாய் பாவிக்கும் சென்னை நண்பரின் வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டதால் இந்தியா,இலங்கை,நேபாளம்,பிலிப்பைன்ஸ்,இங்கிலாந்து,அமெரிக்கா (உபயம் சென்னை மொழி பேசும் தமிழ் பேச மட்டுமே தெரிந்த நண்பர்கள்)லெபனான்,எகிப்தியர் என்று தேசத்துறவித்தனம் கொண்ட இந்த வாழ்க்கையில் அத்தனை தேசத்து மனிதர்களுடனும் நட்பு கொண்டாகிவிட்டது.
உலக மயமாக்கலையும் உலகம் ஒரு சிறிய கிராமம் என்ற சொல்லை நடைமுறைப் படுத்தலையும் முன்னெடுத்துச் செல்லும் நாடுகளில் மத்திய கிழக்கு நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கிறது எனலாம்.இஸ்லாமிய மார்க்கத்தின் மெல்லிய பண்புகளை புறம் தள்ளிவிட்டு அடிப்படை வாதம் உலகளாவியதும் மனித மேம்பாட்டின் ஓர் சரிவே எனக் கொள்ளலாம்.ஆனாலும் இந்த அடிப்படை வாதம் உலக மயமாக்கலுக்கு மேலும் துணை புரிகின்றது என்றே தோன்றுகிறது.
தன் நாட்டின் வேர்களுடன் மேலை நாட்டின் விழுதுகளை இணைத்துக் கொண்டே இங்கே பெரும்பாலோனோர் வாழ்வின் ஓட்டம் நகருகிறது. இன்றைய கால கட்டத்தில் நாடுகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக மத்திய கிழக்கு நாடுகள் உள்ளன.எரிபொருளின் அத்தியாவசியத் தேவையில் நாளையும்,வரும் நாட்களும் எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்று உற்று நோக்க வேண்டிய கால கட்டாயத்தில் உள்ளது மனித இனம்.
No comments:
Post a Comment