வணக்கம்.
துவக்கமாக திரு.கமல்ஹாசன் அவர்களின் பதினாறு வயதினிலே பற்றி சில வார்த்தைகள். தமிழ்த் திரை உலகின் கதைக்
களத்தையும் கதை சொல்லும் விதத்தையும் மாற்றிப் போட்ட படம் அது.கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேசனிலிருந்து ராயல் தியேட்டருக்கு
லுங்கியை முழங்காலுக்கு மடித்துக் கட்டிக்கொண்டு ( இங்கே மீண்டும் பதிவுக்குள்ளேயே ஒரு குட்டிக் கதை சொல்ல
வேண்டியிருக்கு.அப்பொழுதெல்லாம் லுங்கியை மடித்துக் கட்டுவதில் கூட ஓர் அழகிருக்கும்.கூடவே கோவைப் பெண்கள் தாவணி
கட்டுவதில் உள்ள அழகின் நேர்த்தி மனதுக்கு இதமாயிருக்கும். இப்போதைய திரைக் கதாநாயகர்கள் ட்ரவுசர் தெரியுமாறு லுங்கி கட்டும்
பழக்கம் அப்போது இல்லை.எனக்குத் தெரிந்து கைதி கண்ணாயிரம் என்பவர்...இயற்பெயர் ஊருக்குள் யாருக்கும் தெரியாது.அவர்
ஜெயிலுக்குப் போய் வந்தவர் என்பதால் அந்தப் பட்டப்பெயர்.அவர் மட்டுமே காக்கி நிற ட்ரவுசர் தெரியும்படியும் லுங்கியை உயர்த்தியும்
கட்டிக்கொண்டு திரிவார்.கூடவே அதன் ஸ்டைலுக்கு எதுகை மோனையாக ஒரு பீடி. எது ஒதுக்கலாக இருந்ததோ அதுவே இன்று
கலாச்சாரக் கொடி பிடிக்கத் துடிக்கிறது.சரி வாங்க பதினாறு வயது படத்துக்குப் போவோம்.
இசை,கதை,யதார்த்தம்,நடிப்பு,இயக்கம் என்று தமிழ் மண்ணின் கிராமியத்தை செல்லுலாய்ட் திரைக்கு அறிமுகப்படுத்தி தமிழ்சினிமா
ரசனையை சுழற்றிவிட்டு மாற்றி விட்ட வண்ண ஓவியம் அது எனலாம்.இன்றும் அந்த முழங்கால் மழைக்குள் படம் பார்க்கச்சென்ற
அனுபவமும் கதையும் பசு மரத்தாணி போல் ஒட்டிக் கொண்டது.ஒரு விதத்தில் அந்த அனுபவம் கூட டூரிங் டாக்கிஸின் மணல்
குவிப்பிலிருந்தும்,மரப்பலகையின் பெஞ்சு டிக்கட்டிலிருந்து பதவி உயர்வு தந்த படம் எனக்கூடக் கொள்ளலாம்.சிவாஜி,எம்.ஜி.ஆர் என்ற
விளையாட்டுப் பயல்களின் கோஷ்டிகளில் மனோரீதியாகப் பார்த்தால் ஓடி ஆடி விளையாண்டு குச்சிகளில் கத்திச் சண்டை போடும்
பயல்களுக்கு எம்.ஜி.ஆரையும் புத்தகம்,கதைப் பிரியர்களுக்கு சிவாஜியும் பிடித்துப்போய் விட்டது.அதுவரை சிவாஜியின் முக,நரம்பு
அசைவுகளுக்கு மட்டுமே புளகாங்கிதம் அடைந்த மன உணர்வுகள் கமல்ஹாசன் என்ற மனிதனின் பக்கம் மெல்ல எட்டிப்பார்க்க
துவங்கியது.பாலச்சந்தரின் படங்களுக்கு அப்பால் இளமை ஊஞ்சலாடுகிறது,அவள் அப்படித்தான் தவிர ரஜனியின் நடிப்பு பைரவியாகிப்
போனது.பின்பு திரைப்படத்தின் முதல் நாளன்று பூசை போடும் ரசிகர்களின் கதைகள் கேட்டு வியப்பும்! என்ன இந்த இளைஞர்களை
ஈர்க்கிறது என்று புரிவதற்கு காலமும் எடுத்தது. ஸ்டைலுடன் ரஜனி என்ற மனிதனின் மனிதநேயம் என்ற ஒன்று இந்த இளைஞர்களை
ஆட்டுவிக்கறதோ என்னவோ.மகுடத்தை தாம்பூலத்தட்டில் வைத்து தமிழர்கள் வரவேற்க தயாராக இருந்தும் இமயமலைத் தனிமை அவரை
வித்தியாசப்படுத்துகிறது.
திருட்டு விசிடிக்களின் ஆக்கிரமிப்பிலும் நினைத்தபோது பட்டனைத் தட்டி கொஞ்சம் படம் இதர பல வேலைகள் என்ற பழக்கத்தினால்
இங்கு சினிமாத் தியேட்டர் பக்கம் போவது அரிது அரிது அத்தனை அரிது.ஒன்று இரண்டு விரல்களில் எண்ணி விடும்படியான திரை
அனுபவங்கள் மட்டுமே அவை.கண்ணுக்கு கண்ணாடி போட்டாத்தான் படம் காண்பிப்பேன் என்ற 3 D படம் ஒன்று.ராம் கோபால் வர்மாவின்
ரங்கீலா, படத்தை திரையில் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் கொடுத்த டினாருக்கு லாபம்தான் என்ற நிறைவுடன் திரையரங்கை விட்டு
வெளியே வந்த இந்தியன் என்று திரையரங்கு அனுபவங்களுக்கு குறைவான மதிப்பெண்கள்தான்.நீண்ட கால இடைவெளியில் மீண்டும்
ஒருமுறை வரிசையில் நின்று முதல் நாள் முதல் சினிமா பார்த்தது சிவாஜி.படத் துவக்கத்தின் முன்பு அனிமேசன் காட்சியைக் கண்டு
படம் பிரமாதமாக இருக்கும்போல என்று நினைக்க வைத்து பிலிம் காட்றதுங்கிறது இதுதான் என நினைக்க வைத்து பின் சிவாஜி என்ற
எழுத்துக்களுடன் படம் துவங்கியது.எல்லோரும் படம் பார்த்து சிவாஜியை ஆணி பிடுங்கி அக்கு வேறாக்கி விட்டதால் மேற்கொண்டு
சிவாஜியைப் பற்றி என்ன சொல்ல?படத்தின் பாடல்களும் பிரமாண்டமும் ரஜனியின் மொட்டைத்தலை நடிப்புமே இப்பொழுதும்
நினைவுக்கு வருகிறது. திரையரங்கில் எப்பவாவது படம் பார்ப்பது கூட புது அனுபவம் என்பதைத் தவிரவும் சும்மா தூங்கிக்
கொண்டிருக்கும் திரை அரங்குகளை பொருளாதார ரீதியாக பணம் கொட்டும் கட்டிடங்களாக மாற்றுவது ரஜனியும் கமலும்தான்
எனக்கண்கூடாக கண்டது சிவாஜி தசாவதாரங்கள் மூலமாகத்தான்.ரஜனி மயக்கம் அங்கு போலவே இங்கும் கொட்டிக்கிடந்தாலும் அதே
நாளில் டிக்கட்டை முன்கூட்டி வரிசையில் வாங்குவதென்பது சாத்தியமானதாகவே இருந்தது.
ஆனால் தசாவாரத்தின் அனுபவம் அப்படியில்லை.சில நாட்களாய் நகரத்திற்குள்ளேயே படியும் மணல் காற்றும் சூரிய ஒளி தெரியாமல்
வீசும் தூசும் மனித நடமாட்டமில்லாப் பாலைவனம் எப்படி இருக்கும் எனத் திகைக்க வைக்கிறது.இருந்தும் சபாத் என்ற நகரத்தின்
மையத்திலிருந்து சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் 40வது ஹைவேசில் 30 நிமிட நேரம் காரில் பயணம் செய்து பாஹில் என்ற
இன்னொரு நகரத்தை அடைந்தால் அழகான கட்டிடமும்,விற்பனைக் கூடங்களும் கூடவே மெக்டொனால்ட் போன்றவர்களின் கடை
விரிப்பும் எஸ்கலேட்டரும் அழகாகவே வரவேற்றது.டிக்கட் தரும் கண்ணாடி அறைக்கு முன் ஒரு சில இளைஞ்ர்கள் மட்டுமே.மனதுக்குள்
அற்ப சந்தோசம்.ஒரு பயல் கூட படம் பார்க்க வரவில்லை.நாம்தான் போணி பண்ண வந்திருக்கோம் என நினைத்து எகிப்திய கண்ணாடிக்
கூண்டுக்காரனிடம் டினாரை நீட்டினால் "ஃமாபி" (இல்லை)என்கிறான்.பதிலுக்கு நாம "லேஸ்?"(ஏன்) அவன் " குல்லு கலாஸ்"(எல்லாம்
முடிந்து விட்டது). மண் காற்றின் வீச்சால் வேறு ஒன்றும் செய்யத் தோன்றாமல் நேராக வீட்டுக்கு வண்டிக்கட்டு.சரி முதல் நாள்தான்
இப்படியென்று அடுத்த நாளும் திரையரங்குக்குப் போனால் மீண்டும் அதே கதை.இன்றுடன் ஒரு வார காலமாக மூன்று காட்சிகள் குல்லு
கலாஸ் "ஹவுஸ்புல்" என்ற அரபி வார்த்தைகளுடன் தியேட்டர் உண்மையிலேயே களை கட்டுகிறது.இன்னும் இரண்டு திரையரங்குகளில்
படம் ஓடுகிறது.நிலவரம் எப்படி எனத் தெரியவில்லை.
இனி இது சரிப்பட்டு வராது என்று காலை அலுவலகம் வந்தவுடன் மெனக்கெட்டு ஆன்லைனில் தேடிக் கண்டு பிடித்து வங்கிக்கார்டின்
எண்ணை பதிவு செய்து முன்பதிவு வசதியைப் பார்த்தால் மூலையில் இரண்டொரு இடங்கள் காலியாக இருந்தது.ஒரு இருக்கையை
கிளிக் செய்து யுவர் சீட் ரிசர்வேசன் சக்ஸஸ்புல் என்ற கண்சிமிட்டலுடன் இன்று இரவு படம் பார்க்கப் போகிறேன்.திரும்பிப் பார்த்தால்
டிக்கட் எடுக்கும் முன் அந்த நீண்ட கூண்டுக்குள் நுழைவதற்கு வேர்வைப் பட்டாளங்களாய் முண்டியடித்தும்,நுழைந்தும் கூட குரங்கு பலம்
கொண்டவர்கள் தலைகளுக்கு மேல் தாவித் தாவி ஓடிய காலம் நினைவுக்கு வருகிறது. ஆனால் தமது ரசனைகளின் தீவிரங்களிலிருந்து
தமிழ்நாட்டு வட்டத்துக்கும் மேலாக கணினிக் காலம் வரை ஒருபடி மேலாகவே உலகளாவிய அளவில் வியாபித்திருப்பது
நிரூபணமாகிறது.
2 comments:
A real சினிமா அனுபவம்
best wises !!
puduvai siva.
அனுபவம் நன்றாக இருக்கிறது...
கொஞ்சம் பத்தி பிரிச்சி எழுதினா - படிக்க வசதியா இருக்குமே!!!
Post a Comment