பைபிளின் பழைய ஏற்பாட்டில் மோசஸ் எப்படியிருந்திருப்பார் என்று கற்பனை செய்யாமலே பத்துக்கட்டளைகள் எனும் The Ten Commandments திரைப்படம் சார்லடன் ஹெஸ்டனை மோசஸஸ் உருவகப்படுத்தி வைத்தியுள்ளது.கூடவே பென்ஹர் திரைப்படமும் ஹெஸ்டனை ஹாலிவுட்டின் நிரந்தர வரலாற்றுக்குள் நிரந்தரப்படுத்தியுள்ளது.யதார்த்த வாழ்க்கைக்கும், திரைப்படங்களுக்கும் தூரம் என்பதை இந்திய திரைப்படங்கள் மட்டுமல்ல, ஹாலிவுட் திரைப்படங்களும் விதிவிலக்கல்ல.ஹெஸ்டனின் திரைப்பட முகம் மோசஸ் மாதிரியாக இருந்தாலும் அவரது இயல்பான வாழ்க்கை முறை விமர்சனத்துக்குரியது என்கிறார் Fahrenheit 9/11 மற்றும் Bowling for Columbine ஆவணப்படங்களின் இயக்குநர் மைக்கேல் மூர்.
சில மாதங்களுக்கு முன் பள்ளி ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற மாணவன் பற்றி சமூக,பொருளாதார,மதம் சார்ந்த விவாதங்கள் பலரிடமிருந்து பதிவுகளாய் வெளிப்பட்டது.அதே மாதிரி அமெரிக்காவில் கொலம்பைன் உயர்நிலைப் பள்ளியில் இரு மாணவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி சக மாணவர்களை உயிர்ப்பலிகள் கொண்டதன் காரணம் என்ன என்பதை பொது அங்காடிகளில் எளிதாக கிடைக்கும் துப்பாக்கி,அமெரிக்காவின் வன்முறை கலாச்சாரம்,ஹாலிவுட் திரைப்படங்கள்,வறுமை போன்றவற்றை மைக்கேல் மூர் குற்றம் சுமத்துகிறார்.என்னது! அமெரிக்காவில் வறுமையான்னு யாராவது வியப்படைந்தால் மைக்கேல் மூர் பிறந்த இடமே பிளின்ட் எனும் வறுமையான ஊராம்.அமெரிக்க அண்ணன்,அக்கா யாராவது இதனை உறுதிப்படுத்தவும்.
இதற்கு முன் சின்ன பிளாஷ்பேக் போயிட்டு வந்து விடலாம். வாரத்திலோ,மாதத்திலோ நாள் குறிச்சிட்டு முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் முதல் NRA என்ற துப்பாக்கி சுடுவோர் சங்கத்தில் அங்கத்தினர் வரை சுட்டுப்பழகவோ அல்லது பறவைகள் சுடுவதோ அமெரிக்காவில் வழக்கம்.இந்த சுடுற சங்கத்துக்கு சார்ல்டன் ஹெஸ்டன் தான் தல! அதுவும் எப்படிப்பட்ட தலைவர்ன்னா நான் இறந்து போனால் எனது குளிரான கரங்களிலிருந்து மட்டுமே துப்பாக்கியை நீக்க இயலும்ங்கிற அளவுக்கு தீவிர துப்பாக்கிவாதி!
சரி இதையெல்லாம் விவரணப் படுத்தி ஆஸ்காரை வாங்கிட்டுப் போகவேண்டியதுதானே,அதை விட்டு விட்டு நம்ம மோசஸ் சார்லடன் ஹெஸ்டன் வீட்டு கேட்டுக்குப் போய் நேர்காணலுக்கு அனுமதி கேட்டு விட்டு மறுநாள் ஹெஸ்டன் நாள் குறிச்சு தர மைக்கேல் மூர் நம்ம தமிழ்நாட்டு நிருபர்கள் மாதிரி நீங்க எத்தனை படத்தில் நடிச்சீங்க,உங்களுக்கு எந்த நடிகையைப் பிடிக்கும்ன்னு கேள்வி கேட்காம ஷங்கரின் முதல்வன் மாதிரி மெதுவாக நானும் துப்பாக்கி சுடும் அங்கத்தினன்தான் என்று அடையாள அட்டையை காண்பித்து விட்டு ஹெஸ்டனிடம் வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறீர்களா என்று கேட்க ஹெஸ்டன் குண்டுகள் நிரப்பியே வைத்திருக்கிறேன் என்று பதில் சொல்ல அடுத்து அமெரிக்க துப்பாக்கி கலாச்சார வன்முறைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க ஹெஸ்டன் அமெரிக்காவின் நீண்ட வன்முறை வரலாறும் மற்ற நாடுகளை விட கலப்படமான இனக் கலப்பும் காரணமென்கிறார்.
இதனைத் தொடர்ந்து பிளிண்ட் எனுமிடத்தில் ஆறு வயது சிறுவன் அதே வயதுடைய பெண்ணை சுட்டுக்கொன்றதையும் அந்த நேரத்தில் ஹெஸ்டன் துப்பாக்கி சுடுவோர் சங்க கூட்டங்களில் கலந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்களா என்ற திடீரென்ற எதிர்பாராத கேள்விக்கு பதில் சொல்லாமல் காமிரா இயங்க ஹெஸ்டன் எழுந்து போய் விடுகிறார்.இறந்து போன ஆறு வயதுப்பெண்ணின் புகைப்படத்தை நடந்து போகும் ஹெஸ்டனை கூப்பிட்டு காண்பித்தும் ஹெஸ்டன் சென்று விட அவர் வீட்டு சுவற்றில் சிறுமியின் புகைப்படத்தை வைத்து விட்டு வருகிறார் மைக்கேல்.
சின்ன நேர்காணல்தான்!பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=Q1iuEcu7O50
இது ட்ரெய்லர்தான். ஆவணப்படத்திற்கு ஆஸ்கார் வாங்கிய முழுப்படம் பார்க்க
Bowling for Columbine மற்றும் மைக்கேல் மூர் மீதான மாற்றுக் கருத்துக்களுக்கு இணைய தேடல் உதவும்.
இப்ப மைக்கேல் மூரை அமெரிக்காவில் KFC சாப்பிட உட்கார வைச்சுட்டு நம்ம காமிரா அப்படியே கூகிள் பூமி பந்தாக சென்னையில் கோபாலபுரத்துக்கு கலைஞர் கருணாநிதி வீட்டுக்கு ஜூம் ஆகிறது.
அனுபவஸ்தன்,நிர்வாகி,நாவன்மையாளன்,வயதான காலத்துல மக்களுக்கு நல்லது செய்வார் என்று எண்ணி கலைஞர் கருணாநிதிக்கு தமிழக மக்கள் தாம்பூலத்திற்கு பதிலாக சக்கர நாற்காலியில் உட்கார வைத்து பதவியை கலைஞருக்கு தந்தது.மனித வாழ்க்கை மட்டுமல்ல, ஒருவரின் ஆட்சி முறையிலும் கூட நிர்வாக நன்மை,தீமை,எதிர் விமர்சனம் என்பது இயல்பான ஒன்றே.யோசித்துப் பார்த்தால் அனைத்து குறைபாடுகளையும் தாண்டி குறிப்பாக 2G யைக்கூட தமிழக மக்கள் காலப்போக்கில் மறந்து விடுவார்கள்.
ஆனால் 2009ம் வருடத்தின் காலப்பகுதியில் இலங்கையின் வரலாற்றை மாற்றி அமைக்கும் சந்தர்ப்பத்தை காலம் கலைஞர் கருணாநிதிக்கு தனது பதவியின் வலிமையாக நாற்காலியில் உட்கார வைத்து தந்தும் அந்த கணங்களில் அழுவதற்கு நேரமில்லாமல் இப்பொழுது கண்ணீர் விடுவதாக பத்திரிகை செய்திகள்.கலைஞர் கருணாநிதி முழு உள்ளத்துடன் இப்பொழுது எதை செய்தாலும் அது சந்தேக கண்ணோடு மட்டுமே பார்க்கப்படும்.நிகழ்ந்தவைகளை இனி மாற்றிப் போடும் வலிமை இனி கால நிகழ்வுகளுக்கு மட்டுமே உண்டு.
நட்பு கொண்ட மற்றும் துணிவுள்ள ஊடக நிருபர்கள் கலைஞரிடம் கேட்க வேண்டிய ஒரே கேள்வி...
கலைஞரே!தி.மு.க ஆட்சிக்காலத்தின் ஈழ நிலைப்பாட்டுக்கு இப்பொழுது வருந்துகிறீர்களா என்பதே!
ஹெஸ்டன் போல் கேள்விக்கு பதில் சொல்லாமலே சென்று விடுவதும் தமிழர்களின் மனங்களை மாற்றுவதும் கலைஞரைப் பொறுத்ததே!