பைபிளின் பழைய ஏற்பாட்டில் மோசஸ் எப்படியிருந்திருப்பார் என்று கற்பனை செய்யாமலே பத்துக்கட்டளைகள் எனும் The Ten Commandments திரைப்படம் சார்லடன் ஹெஸ்டனை மோசஸஸ் உருவகப்படுத்தி வைத்தியுள்ளது.கூடவே பென்ஹர் திரைப்படமும் ஹெஸ்டனை ஹாலிவுட்டின் நிரந்தர வரலாற்றுக்குள் நிரந்தரப்படுத்தியுள்ளது.யதார்த்த வாழ்க்கைக்கும், திரைப்படங்களுக்கும் தூரம் என்பதை இந்திய திரைப்படங்கள் மட்டுமல்ல, ஹாலிவுட் திரைப்படங்களும் விதிவிலக்கல்ல.ஹெஸ்டனின் திரைப்பட முகம் மோசஸ் மாதிரியாக இருந்தாலும் அவரது இயல்பான வாழ்க்கை முறை விமர்சனத்துக்குரியது என்கிறார் Fahrenheit 9/11 மற்றும் Bowling for Columbine ஆவணப்படங்களின் இயக்குநர் மைக்கேல் மூர்.
சில மாதங்களுக்கு முன் பள்ளி ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற மாணவன் பற்றி சமூக,பொருளாதார,மதம் சார்ந்த விவாதங்கள் பலரிடமிருந்து பதிவுகளாய் வெளிப்பட்டது.அதே மாதிரி அமெரிக்காவில் கொலம்பைன் உயர்நிலைப் பள்ளியில் இரு மாணவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி சக மாணவர்களை உயிர்ப்பலிகள் கொண்டதன் காரணம் என்ன என்பதை பொது அங்காடிகளில் எளிதாக கிடைக்கும் துப்பாக்கி,அமெரிக்காவின் வன்முறை கலாச்சாரம்,ஹாலிவுட் திரைப்படங்கள்,வறுமை போன்றவற்றை மைக்கேல் மூர் குற்றம் சுமத்துகிறார்.என்னது! அமெரிக்காவில் வறுமையான்னு யாராவது வியப்படைந்தால் மைக்கேல் மூர் பிறந்த இடமே பிளின்ட் எனும் வறுமையான ஊராம்.அமெரிக்க அண்ணன்,அக்கா யாராவது இதனை உறுதிப்படுத்தவும்.
இதற்கு முன் சின்ன பிளாஷ்பேக் போயிட்டு வந்து விடலாம். வாரத்திலோ,மாதத்திலோ நாள் குறிச்சிட்டு முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் முதல் NRA என்ற துப்பாக்கி சுடுவோர் சங்கத்தில் அங்கத்தினர் வரை சுட்டுப்பழகவோ அல்லது பறவைகள் சுடுவதோ அமெரிக்காவில் வழக்கம்.இந்த சுடுற சங்கத்துக்கு சார்ல்டன் ஹெஸ்டன் தான் தல! அதுவும் எப்படிப்பட்ட தலைவர்ன்னா நான் இறந்து போனால் எனது குளிரான கரங்களிலிருந்து மட்டுமே துப்பாக்கியை நீக்க இயலும்ங்கிற அளவுக்கு தீவிர துப்பாக்கிவாதி!
சரி இதையெல்லாம் விவரணப் படுத்தி ஆஸ்காரை வாங்கிட்டுப் போகவேண்டியதுதானே,அதை விட்டு விட்டு நம்ம மோசஸ் சார்லடன் ஹெஸ்டன் வீட்டு கேட்டுக்குப் போய் நேர்காணலுக்கு அனுமதி கேட்டு விட்டு மறுநாள் ஹெஸ்டன் நாள் குறிச்சு தர மைக்கேல் மூர் நம்ம தமிழ்நாட்டு நிருபர்கள் மாதிரி நீங்க எத்தனை படத்தில் நடிச்சீங்க,உங்களுக்கு எந்த நடிகையைப் பிடிக்கும்ன்னு கேள்வி கேட்காம ஷங்கரின் முதல்வன் மாதிரி மெதுவாக நானும் துப்பாக்கி சுடும் அங்கத்தினன்தான் என்று அடையாள அட்டையை காண்பித்து விட்டு ஹெஸ்டனிடம் வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறீர்களா என்று கேட்க ஹெஸ்டன் குண்டுகள் நிரப்பியே வைத்திருக்கிறேன் என்று பதில் சொல்ல அடுத்து அமெரிக்க துப்பாக்கி கலாச்சார வன்முறைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க ஹெஸ்டன் அமெரிக்காவின் நீண்ட வன்முறை வரலாறும் மற்ற நாடுகளை விட கலப்படமான இனக் கலப்பும் காரணமென்கிறார்.
இதனைத் தொடர்ந்து பிளிண்ட் எனுமிடத்தில் ஆறு வயது சிறுவன் அதே வயதுடைய பெண்ணை சுட்டுக்கொன்றதையும் அந்த நேரத்தில் ஹெஸ்டன் துப்பாக்கி சுடுவோர் சங்க கூட்டங்களில் கலந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்களா என்ற திடீரென்ற எதிர்பாராத கேள்விக்கு பதில் சொல்லாமல் காமிரா இயங்க ஹெஸ்டன் எழுந்து போய் விடுகிறார்.இறந்து போன ஆறு வயதுப்பெண்ணின் புகைப்படத்தை நடந்து போகும் ஹெஸ்டனை கூப்பிட்டு காண்பித்தும் ஹெஸ்டன் சென்று விட அவர் வீட்டு சுவற்றில் சிறுமியின் புகைப்படத்தை வைத்து விட்டு வருகிறார் மைக்கேல்.
சின்ன நேர்காணல்தான்!பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=Q1iuEcu7O50
இது ட்ரெய்லர்தான். ஆவணப்படத்திற்கு ஆஸ்கார் வாங்கிய முழுப்படம் பார்க்க
Bowling for Columbine மற்றும் மைக்கேல் மூர் மீதான மாற்றுக் கருத்துக்களுக்கு இணைய தேடல் உதவும்.
இப்ப மைக்கேல் மூரை அமெரிக்காவில் KFC சாப்பிட உட்கார வைச்சுட்டு நம்ம காமிரா அப்படியே கூகிள் பூமி பந்தாக சென்னையில் கோபாலபுரத்துக்கு கலைஞர் கருணாநிதி வீட்டுக்கு ஜூம் ஆகிறது.
அனுபவஸ்தன்,நிர்வாகி,நாவன்மையாளன்,வயதான காலத்துல மக்களுக்கு நல்லது செய்வார் என்று எண்ணி கலைஞர் கருணாநிதிக்கு தமிழக மக்கள் தாம்பூலத்திற்கு பதிலாக சக்கர நாற்காலியில் உட்கார வைத்து பதவியை கலைஞருக்கு தந்தது.மனித வாழ்க்கை மட்டுமல்ல, ஒருவரின் ஆட்சி முறையிலும் கூட நிர்வாக நன்மை,தீமை,எதிர் விமர்சனம் என்பது இயல்பான ஒன்றே.யோசித்துப் பார்த்தால் அனைத்து குறைபாடுகளையும் தாண்டி குறிப்பாக 2G யைக்கூட தமிழக மக்கள் காலப்போக்கில் மறந்து விடுவார்கள்.
ஆனால் 2009ம் வருடத்தின் காலப்பகுதியில் இலங்கையின் வரலாற்றை மாற்றி அமைக்கும் சந்தர்ப்பத்தை காலம் கலைஞர் கருணாநிதிக்கு தனது பதவியின் வலிமையாக நாற்காலியில் உட்கார வைத்து தந்தும் அந்த கணங்களில் அழுவதற்கு நேரமில்லாமல் இப்பொழுது கண்ணீர் விடுவதாக பத்திரிகை செய்திகள்.கலைஞர் கருணாநிதி முழு உள்ளத்துடன் இப்பொழுது எதை செய்தாலும் அது சந்தேக கண்ணோடு மட்டுமே பார்க்கப்படும்.நிகழ்ந்தவைகளை இனி மாற்றிப் போடும் வலிமை இனி கால நிகழ்வுகளுக்கு மட்டுமே உண்டு.
நட்பு கொண்ட மற்றும் துணிவுள்ள ஊடக நிருபர்கள் கலைஞரிடம் கேட்க வேண்டிய ஒரே கேள்வி...
கலைஞரே!தி.மு.க ஆட்சிக்காலத்தின் ஈழ நிலைப்பாட்டுக்கு இப்பொழுது வருந்துகிறீர்களா என்பதே!
ஹெஸ்டன் போல் கேள்விக்கு பதில் சொல்லாமலே சென்று விடுவதும் தமிழர்களின் மனங்களை மாற்றுவதும் கலைஞரைப் பொறுத்ததே!
14 comments:
வணக்கம் அண்ணா,
நல்லா இருக்கிறீங்களா?
ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவூட் இயக்குனர் பத்தி சொல்லி அப்படியே கமெராவை தாய்த் தேசப் பக்கம் திருப்பி, சொறணையே இல்லாத ஒரு மனுசனுக்கு செருப்படி கொடுப்பது போல் ஓர் கேள்வி கேட்டிருக்கிறீங்க. நல்ல படைப்பு. ஒப்பீட்டு அலசலும் அருமை
நிரூ!நலம்.நலமறிய ஆவல்.
உங்கள் கோபம் புரிகிறது.ஆனால் இனி கோபப்பட்டு நாம் எதையும் சாதிக்கப் போவதேயில்லை.
தவறுகளை திருத்திக்கொண்டு மேலும் நகர்வது மட்டுமே எதிர்காலத்திற்கு பயன் தரும்.
கலைஞர் செய்த தவறு வரலாற்றுக்கறை என்ற போதிலும் அவருடைய வயதுக்கான மதிப்பை தருவோம்.நன்றி.
ஈயடிச்சான் காபியாக ஒரே பின்னூட்டம் இரண்டு முறை வந்து உட்கார்ந்து விட்டதால் ஒன்றை நீக்கி விட்டேன் சகோ!நிரூபன்.
துப்பாக்கி கலாச்சரத்துடன் வந்துவிட்டு கலைஞஜர் குழப்பத்துடன் விட்டுவிட்டீங்களே்!காலம் அவருக்கான மன்னிப்பை கொடுக்குமா என்பதே சந்தேகம்தான் அண்ணா!
தனிமரம்!இந்தப் பதிவை பலகோணங்களிலிருந்து விமர்சிக்க இயலுமென்றாலும் ஹெஸ்டனையும் கலைஞரையும் இணைதத காரணம் தவறுகளை நினைத்து வருதப்படுகிறார்களா என்பதே!
துப்பாக்கியால் சுடப்பட்டு ஊரே துக்கப்படும் பொழுது துப்பாக்கி சுடுவோர்கள் சங்க கூட்டம் எனப்து சரியான் ethics இல்லை என்பதே ஹெஸ்டன் சார்ந்த மைக்கேல் மூரின் குற்றச்சாட்டு.ஹெஸ்டன் நயமாக மூரை கையாண்டிருக்கலாம் அல்லது நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்திருக்கலாம்.காமிரா இயங்க பதில் சொல்லாமல் எழுந்து போனது அவரது குற்ற மனப்பான்மையை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.
கலைஞருக்கு இப்பொழுது இல்லாத உளவுத்துறை தகவல்கள் ஆட்சிக்காலத்தில் கிடைத்திருக்கும்.அப்போதைய தருணங்களில் முடிவு எடுக்காதது மட்டுமல்ல,போராட்டங்களை முடக்கியது,தவறான வழிகாட்டல் செய்தது,மத்திய ஆட்சியின் நிலையே மாநில ஆட்சியின் நிலையும் என்ற செயல்பாடுகள் எல்லாம் தவறான முடிவுகள் எனப்தை காலமும்,ஆட்சி இழப்பும் பறைசாற்றுகின்றன.
காலத்தில் செயல்படாமல் செய்த தவறுக்கு தமிழர்களிடம் வருத்தம் தெரிவிப்பது சரியான முடிவாக அமையும்.
திரைப்படம்,அரசியல்,ஈழம்....கலைஞர் !
ராஜ நட, எப்பிடி இருக்கிறீங்க!
புது பதிவு பார்த்து வந்தேன்.
ம்ம்ம்ம்ம்..... Bowling for Columbine பார்த்தேன் நானும்.
மைக்கேல் மூர் ஒரு முறை ஜோர்ஜ் புஷ்ஷுடன் நேரிடையா சந்தித்து பேசி மோதியது தான் எனக்கு ஆர்வமா இருந்தது.
மற்றப்படி கலைஞரை மற்ற விடயங்களில், கடிதம் எழுதுறது, தந்தி அடிக்கிறது, ஐயகோன்னு புலம்பறது, உண்ணாவிரதம் இருக்கிறது இப்பிடி ஏகப்பட்ட விடயஙகளில் உலகத்தில அடிச்சிக்க ஆள் ஏது, ராஜ நட :)))
வடிவேல் பாணியில் இவரை இன்னுமா உலகம் நம்புது :)
நான் பதிவுக்கு பொருத்தமா தான் கருத்து சொல்லியிருக்கேனா!
ஹேமா!உங்கள் கவிதைகள் சார்ந்து என்ன பின்னூட்டம் சொல்வது என்ற திகைப்பில் சில சமயம் மௌனமாக இருந்து விடுகிறேன்.
கலைஞர் கருணாநிதி நாம் விரும்பினாலும் விரும்பாமல் போனாலும் பதவியில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் தமிழர்கள் சார்ந்த தவிர்க்க முடியாத சக்தி கருணாநிதி என்ற பெயர்.சில சமயம் கோமாளித்தனமாகவும் நடந்து கொள்கிறார் என்பதில் சந்தேகமேயில்லை.
போன தடவையாவது 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார்.இப்ப அதுவும் இல்லையாம்:)
பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதால் உண்ணாவிரதமே இல்லை.
ரதி!உங்க பின்னூட்டத்தை தவற விட்டு விட்டேன்.நீங்க Bowling for Columbine ஐ விட Sicko பார்த்து மைக்கேல் மூரை எடை போடலாம்.காரணம் மைக்கேல் கொலம்பைனில் கனடாவிலும் துப்பாக்கி ஆயுதங்கள் தடையில்லாமல் மக்களுக்கு கிடைக்கின்றன.ஆனாலும் கனடாவில் வன்முறைகள் இல்லையென்கிறார்.இதனை விட நீங்க யாரும் வீட்டைப் பூட்டுவதேயில்லையாமே!உண்மையா:)
Sicko வில் மைக்கேல் அமெரிக்காவின் காப்புறுதி திட்டம் பற்றி விமர்சிக்கிறார்.கனடாவில் மருத்துவமே இலவசம் என்கிறார்.குவைத்தில் கூட முன்பு மருத்துவம் இலவசமாகவே இருந்தது.இப்பொழுது தமிழகம் போலவே காப்புறுதி நிறுவனங்கள் பணம் பார்க்கின்றன.
ஜார்ஜ் புஷ்,மைக்கேல் மூர் சண்டைக்கு சரியான ஆவணப்படம் 9/11 Farenheit மற்றும் அதனை தொடர்ந்த விவாதங்கள் எனலாம்.
ராஜ்,
தானியங்கி பின்னூட்டத்திற்கும் இங்கேயே பதில் சொல்லிடுறேன்,
முள்படுக்கையை விட ஒட்டகம் ரொம்ப படுத்துமோ?
உங்க ஊரிலும் புளுடைமண்ட் என்ற பெயரில் தியேட்டர் இருக்கா? தெருவுக்கு ரெண்டு ராஜானு பசங்க இருப்பது போலவா?
பரிணாமம் திரும்பவும் செய்யும் ,சோளப்பொறியாய் கிடைப்பது பதிவுகளை சொன்னேன், ஆனாலும் சோளப்பொறிய என்ன சோற்று வற்றலைக்கூட பானகத்துக்கு செட் சேர்த்துவிடுவேன் நான்.(சமோசா,பருப்பு வடை, ஓட்டை வடைனு எல்லாம் பதம் பார்ப்பேன்)
----
10 கட்டளைக்கு வருவோம், மோசஸ் ஆஹ் நடிச்ச படம் பார்த்திருக்கேன் கன் பார்ட்டி என்பதை இப்போது தான் கேள்விப்படுறேன்.
அமெரிக்கர்களின் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு வருவோம், அது அமெரிக்கா என்ற நிலப்பரப்பை வந்தேறி வெள்ளைத்தோளர்கள் பிடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே துவங்கிவிட்டது.
பூர்வகுடிகளான அபாச்சி இந்தியர்கல்,செவ்விந்தியர்களை மிரட்டவும், எதிர்த்தால் கொல்லவும் துப்பாக்கி பயன்ப்பட்டது. அவர்களின் மேச்சல் நிலம், அவர்களது கால்நடைகளை அபகரித்து பண்ணை வைத்துக்கொண்ட வெள்ளையர்கள் , என்னமோ அவர்கள் சொத்தை காப்பாற்ற ஆயுதம் ஏந்தியது போல நியாயம் கற்பித்துக்கொண்டு பூர்வகுடிகளை கொன்றொழித்தார்கள். கவ்பாய்கள் வேலையே இது தான். கவ்பாய்களை ஹீரோவாக்கி மகிழ்ந்தார்கள், பிற்காலத்தில் மனித உரிமையார்வளர்கள் கவ்பாய் படத்தின் மூலக்காரணத்தை முன்வைத்து எதிர்த்தாலே ,அப்பாடியான வெஸ்டெர்ன் படங்கள் எடுப்பது நின்றது.
மேலும் ஆப்பிரிக்க அடிமைகளை மிரட்டவும் துப்பாக்கிகள் தேவைப்பட்டதால் அமெரிக்கர்களுக்கு துப்பாக்கி ஒட்டிப்பிறந்த ஒரு உறுப்பாகிவிட்டது. இப்போதும் அது தொடர்கிறது.
கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டதுக்கு ஒரு காரணம் துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ் கொண்டு வருவேன் என சொன்னது என்றும் சொல்கிறார்கள்.
அதே சமயத்தில் கனடாவில் அந்த அளவு மோசம் இல்லை என்று சொன்னதிலும் இனக்குழுக்களின் வரலாறு இருக்கென நினைக்கிறேன்.
கனடாவில் ஆரம்பக்காலத்தில் குடிபுகுந்ததில் ஸ்காண்டினேவியன் , பிரஞ்ச் மக்களே அதிகம் , அவர்களுக்கு இடையேயும் சண்டை இல்லை, மேலும் அங்கே நிலம் பிடிக்க அதிக போராட்டமும் இல்லை எனலாம் எனவே அமைதியான வழியில் செட்டில் ஆனார்கள் எனலாம்.
வட அமெரிக்காவில் தான் அதிக போராட்டம்,காரணம் தங்கம் இருப்பதாக பரவலான நம்பிக்கை.பழைய அமெரிக்க கதைகளில் எல்லாவற்றிலுமே தங்க வேட்டை இருக்கும். மேலும் பிரிட்டிஷ்,பிரஞ்ச் குடியேறிகளிடையே பகைமை,, அதோடு ஸ்பானிஷ், இட்டாலியன் என அக்கால யுத்த பிரிய நாட்டுமக்களே அதிகம் வட அமெரிக்காவில் குடியேறினார்கள். எனவே இயல்பிலேயே போர்க்குணம் கொலைவெறி கொண்டவர்களாக இருந்தார்கள்.அது இன்றளவும் கொல வெறி துப்பாக்கி கலாச்சாரமாக தொடர்கிறது எனலாம்.
கனடாவில் கதவு மூடுவார்களா என்ன தெரியவில்லை தமிழ்நாட்டில் இப்போவும் கிராமத்தில் இரவிலும் கதவடைப்பதில்லை, எளிய மக்கள் கயிற்று கட்டில் ,ஈச்சம் பாய் என போட்டு வீட்டுக்கு முன்னால் தூங்குவார்கள். இரவில் யாராவது நடந்து போனால் யாரது இன்னேரத்தில என விசாரிப்பும் வரும்!ஆனால் நகரத்தில் 24 மணிநேர கதவடைப்பு. இதற்கு திருடர்களும் ஒருக்காரணம், சும்மா 5000-10000 திருட்டுக்கு எல்லாம் தனியே இருக்கும் பெண்களை கழுத்தறுத்துக்கொல்கிறார்கள்.எனவே பாதுகாப்பின்மை, நம்பகமின்மை,அச்சம் ஆகிய உணர்வுகளே மனிதனை வன்முறைக்கு தூண்டுகிறது எனலாம்.
ஒருகாலத்தில் எம்ஜிஆர் எல்லாரும்(தொண்டர்கள்) கத்தி வச்சுக்கனும்னு சொல்லி புரட்சி எல்லாம் செய்தார் :-))
----
படம் எல்லாம் எடுத்து முடிச்சு போட்டுப்பார்க்கும் போது காமெடி மிஸ்ஸிங்க் ஆகிறது என்று கடைசியில் கண்டுப்பிடிச்சு அவசரமாக காமெடி டிராக் சேர்க்கும் இயக்குனர் போல கலைஞர சேர்த்துக்கிட்டிங்களா பதிவுல :-))
ராஜ நட, மைக்கேல் மூர் திரைப்படங்களில் நான் பார்க்காதது காப்பிட்டலிசம் மட்டும் தான்.
கனடாவின் Health Care - Universal Healthcare, மற்றைய எத்தனயோ நாடுகளை விட சிறப்பு தான். நாட்டின் பிரதமமந்திரிக்கு ஒரு நோய்க்கு கிடைக்கும் அத்தனை மருத்துவ வசதியும் ஒரு கடைநிலை குடிமகனுக்கும் செலவின்றி கிடைக்கும். ஆனால், இலவசம் போல் தெரிந்தாலும் அது இலவசமில்லை. இங்கே நாங்கள் செலுத்தும் வரி மற்ற எத்தனையோ நாடுகளை விட அதிகம். எல்லாமே வரிப்பணத்திலிருந்து தான்.
தவிர, மைக்கேல் மூர் Sarnia என்கிற ஒரேயொரு ஊரிலுள்ள Emergency Ward ஐ காட்டி இங்கே காத்திருக்கும் நேரம் குறைவு என்று சொன்னது உண்மையில்லை. அந்த ஊரில் பெரும்பான்மையினர் வெள்ளையினத்தவர்கள், வசதியானவர்கள் அதற்கேற்றாற் போல் தான் மற்றைய சேவைகளும் அரசால் மக்களுக்கு வழங்கப்படும். இதுவே பொதுவா மற்ற எல்லா இடங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கும் பொருந்தாது.
ஆனா, இப்போ எமர்ஜென்சியில் காத்திருக்கும் நேரம் குறைவென்றால் அதற்கு அரசு தனியாக இவர்களுக்கு, மருத்துவமனைகளுக்கு பணம் கொடுக்கும் என்பது வேறு கதை. அதை பெற இவர்கள் என்ன தில்லுமுல்லு செய்கிறார்கள் என்பது இன்னொரு கதை :)
அவர் Ontario-Canada வில் மக்கள் பெரும்பாலும் கதவை திறந்து வைத்துவிட்டு பயமில்லாமல் இருப்பார்கள் என்பது உண்மைதான் :) நான் அறிந்த வரையில்.
இது எல்லாத்தையும் விட மைக்கேல் மூருக்கு எதிராக அவரது ஆவணப்படம் போன்ற திரைப்படங்களை 'Manufacturing Content' என்று ஏதோ எதிர்ப்படம் எடுத்து அவரது பெயரை டமேஜ் செய்தவர்களும் கனேடியர்கள் தான்.
ஆனாலும், எனக்கு மைக்கேல் மூர் திரைப்படங்கள் பிடிக்கும் :) அவரது பாணியில் அவர் மனதில் தோன்றியதை சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்கார்.
வவ்!உங்களுக்குப் பின்னூட்டம் போட்டு விட்டு பாதியிலேயே இணைக்காமல் கார் மெக்கானிடம் ஓடிவிட்டேன்.மன்னிக்கவும்.
இந்தியாவில் யோகிகள் என்று சொல்லிகொள்பவர்கள் முட்படுக்கையில் படுத்து உறங்குகிறார்கள்.நெப்போலியன் கூட குதிரையில் உட்கார்ந்து கொண்டே தூங்கியதாக செய்திகள்.ஆனால் ஒட்டகம் படுத்தும்ங்கிறதால யாரும் தூங்குவது கிடையாது.மாறாக ஒட்டகத்தை நிறுத்தி விட்டு அதன் நிழலில் ஓய்வெடுக்கிற மாதிரி டேவிட் லீன் Lawrence of Saudi Arabia என்ற படத்தில் காட்டியிருப்பார்.நம்மளை படுத்துற அரேபிய ஒட்டகங்களே வேறு:)
மேற்கிந்தியர்களைப் பற்றி நீங்க சொல்லும் போது வெஸ்டர்ன் என்றும் கவ்பாய்ஸ் என்றும் சொல்லும் படங்கள் வன்முறையும்,துப்பாக்கி சூட்டுக்களை முன்னிறுத்தினாலும் இந்தியர்களின் பூர்வீக பூமியை அமெரிக்க தலையீட்டால் எப்படி அபகரிக்கிறார்கள் என்று சொல்லும் நீண்ட படம் கெவின் காஸ்ட்னர் நடித்த Dancing with wolves கட்டாயம் காட்சி அமைப்புக்கும்,கதைக்கும் பார்க்க வேண்டிய படம்.
கூடவே அமெரிக்காவில் தங்கம் இருப்பதாக சொல்லும் கதைகளில் முன்னிலையில் நிற்பது எப்பொழுதும் Mackenna's Gold.
கனடாவில் கதவை மூடுவதில்லை என்பதோடு நம்ம ஊர் கிராமங்களை ஒப்பிட்டது சிறப்பாக இருக்கிறது.
என்னது!ட்ரெயில் மாதிரி கலைஞரைக் கொண்டு வந்து இணைத்து விட்டேனா!பதிவில் ஹெஸ்டனுக்கும்,கருணாநிதிக்கும் உள்ள தொடர்பே தவறுக்கு வருந்துகிறார்களா என்பதே.
ரதி!மைக்கேல் மூரின் காப்பிடலிஸம் பற்றிக் குறிப்பிட்டதற்கு நன்றி.பார்க்க முயற்சி செய்கிறேன்.மூர் இடதுசாரி சிந்தனையாளர் என நினைக்கிறேன்.எனவே கேபிடலிஸ அமெரிக்காவில் மைக்கேல் மூர்,நோவம் சாம்ஸ்கி போன்றவர்களின் குரல்கள் உரத்து ஒலிப்பதில்லை என நினைக்கிறேன்.ஆனாலும் அவர்களுக்கான இண்டெலெக்சுவல் கூட்டம் உள்ளது என்பதும் உண்மை.
காப்பீடு பற்றி உங்கள் விளக்கத்திற்கு நன்றி.நீங்க சொல்லாமல் போனால் ஊடகம் சொல்வதை மட்டுமே நம்ப வேண்டியதாக இருந்திருக்கும்.
Post a Comment