Followers

Showing posts with label நட்சத்திர வாரம் :அறிமுகம். Show all posts
Showing posts with label நட்சத்திர வாரம் :அறிமுகம். Show all posts

Sunday, June 12, 2011

தமிழ் மணம் நட்சத்திர வாரம் - அறிமுகம்

அப்பா பெயரின் துவக்கமும் எனது பெயரும் இணைந்தே ராஜ நடராஜன் என தமிழ் மணத்தில் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக எழுதி வருகிறேன்.பதிவின் எண்ணிக்கைகளையும்,ஹிட்,பின்னூட்டங்கள்   என்றில்லாமல் நட்புடன் கருத்துரையாடல் என்ற நிலையிலே பதிவுகளை இட்டு வருகிறேன்.நான் தற்போது குவைத்தில் பணி நிமித்தமாக தொசிபா மடிக்கணினி விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்.பதிவுகளை விட வாசிப்பிலும்,பின்னூட்டங்களில் அதிக நாட்டம் கொண்டுள்ளதால் பதிவுகள் எண்ணிக்கை பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதேயில்லை.யாதும் பதிவே!யாவரும் கருத்துரிமையாளர்களே என்பதில் நம்பிக்கை கொண்டவன் என்ற போதிலும் மத அடிப்படைவாதங்களையும்,தனி மனித விமர்சனங்களையும் கடந்து விடுவது வழக்கம். எனது பதிவின் பார்வையாக கொஞ்சம் சொல்லி நிறைய தேடி...மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும் என சுருக்கமாக முகப்பில் சொல்லியிருக்கிறேன்.
(சில வாரங்களுக்கு முன்னாடி க்ளிக்கியதில் காமிராவுடன் நான்:))

இடமிருந்து வலமாக படிக்கும் புத்தக வாசிப்புக்கு மாறாக,தமிழ் மணத்தில் அந்த கணத்தில் முதலில் நிற்கும் இடுகை தொட்டு தொடர்ந்து கீழே தலைப்புக்களையும்,இடமிருந்து சூடான இடுகைகள்,வாசகர் பரிந்துரையின் தலைப்புக்களையும்,பின் வலது புறம் மறுமொழிகள் வரிசைகளையும் ஒரு கண்ணோட்டம் விட்டு விட்டு கண்ணை ஈர்க்கும் பதிவுகளில் நுழைந்து விடுவதும்,பின்னூட்டங்கள் இடுவதும் வழக்கமாகிப் போய் விட்டதால் தமிழ் மண நட்சத்திரப் பக்கம் இறுதியான ஒன்றாகப் போய் விடுவதால் நிறைய தமிழ் மண நட்சத்திரங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல இயலாமல் போய் இருக்கிறது.
இணையத்தில் பதிவுலகமும்,தமிழ் மணம் ஒன்று கூடல் ஒரு அரிய கருத்து பரிமாற்ற கருவி.இதனை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் தமிழ் மொழியின் வெற்றி அமைந்திருக்கிறது.

பலரின் மனநிலைகள்,வாழும் கால சூழல்கள்,விருப்பங்கள் என்பவை வேறுபட்டிருந்தாலும் பரந்து கிடக்கும் உலகில் மொழியாக தமிழனை இணைப்பது எழுத்தும்,சொல்லும்.போன தலைமுறையின் மொழித் திணிப்பாக இந்திப் போராட்டம் நிகழ்ந்தது.இந்திப் போராட்டம் தமிழனின் வாழ்வில் பல பரிணாமங்களை உருவாக்கியிருந்தாலும் மொழி உணர்வாக தமிழகத்தின் வரலாற்று நிகழ்வு அது.அதே போல் இந்த தலைமுறைக்கும்,அடுத்த தலைமுறைக்கும் மொழி உணர்வாக ஈழப்போராட்டமும் தமிழர் வாழ்வில் ஒரு முக்கியத்துவ வரலாறாகும்.சேரன்,சோழன்.பாண்டியன்,பல்லவன் என்ற அரசாட்சியில் நமது தாத்தனும்.பாட்டியும் வாழ்ந்த காலங்கள் மறைந்து விட்டாலும் வரலாற்று சான்றாக அரசாட்சியின் காலங்கள் மட்டுமே இன்றும் நிலைத்து நிற்கின்றன.நம்முடைய காலமும் அது போன்ற ஒரு வரலாற்று முக்கியத்துவ காலம் என்பதை உணர வேண்டும். கண்களை அகன்று விரித்து நோக்கினால் நமக்குள்ளும் நிறைய வரலாற்று மனிதர்கள் மொழி உணர்வோடு அடையாளம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அதிகார வட்டங்களையும்  தாண்டிய பார்வையும்,சிந்தனையும் நமக்கு தேவை.நாமும் வாழ்ந்தோம் என்பதை வரும்காலத்தில் பதிவு செய்யப்போவது ஈழ யுத்தமும் இனி வரும் காலத்தின் நிகழ்வின் நெளிவு சுளிவுகளுமே என்பதை நம்புகிறேன்.

முந்தைய பதிவான ஈழ மக்களுக்கும் மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு-பகுதி 1 என்று துவங்கி அடுத்த பகுதியை துவங்கலாம் என்று நினைத்த நேரத்தில் தமிழ்மண நட்சத்திர அழைப்பு வந்து விட்டதால் ஈழ மக்கள்,மண் பற்றியே நட்சத்திர வாரத்தில் தொடர்வது சிறப்பாக இருக்குமென்று நினைத்து அடுத்த பகுதியை இணைக்க வில்லை.இங்கே பல பரிமாணம் கொண்ட ஈழம் பற்றி நட்சத்திர வாரத்தில்  எனது கருத்தை பதிவர்களின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
 
தமிழ்மணத்திற்கும்,பதிவுலக நட்பு உள்ளங்களுக்கும் நன்றி.