Followers

Tuesday, April 6, 2010

காசா,பணமா, அரபிக் கற்றுக்கொள்ளுங்கள்

ஜார்ஜ் புஷ் இப்ப என்ன செய்துகிட்டு இருக்கிறார்?பதவியில் இருக்கும் போது ஆங்கிலத்துடன் வேறு ஒரு மாற்று மொழியைக் கற்றுக்கொள்ள சிபாரிசு செய்தார்.அவரது அரசியல் காலத்தில் அமெரிக்கர்களுக்கு சொன்ன உபயோகமான விசயம் இது.பதிவுலகில் இருக்கும் காலத்தில் நாமும் ஏதாவது பதிவர்களுக்கும்,பதிவுகள் பக்கம் எட்டிப் பார்ப்பவர்களுக்கும்,அரேபிய மொழி கற்க ஆவல் உள்ளவர்களுக்கும்,துபாய் குறுக்கு சந்துல இருந்துகிட்டும் அரேபிய மொழி தெரியாதவர்களுக்கும் இதனை செய்யலாமே என்ற எண்ணத்தில் கூட பணிபுரிபவரின் கணினியிலிருந்து சுட்ட:) PDF நகலை பகிர்ந்து கொள்ளலாமே என நினைக்கிறேன்.இந்தி திணிப்புங்கிறதால விட்டு விட்டோம்.இங்கே திணிப்புன்னு ஒன்னும் கிடையாது.விருப்பமுன்னா மட்டுமே பாடம்.

அதற்கு தபால் பெட்டி எண்,வங்கி கணக்கெல்லாம் கொடுத்து காசு அனுப்புங்கன்னு சொன்னா யோவ்!அதுக்கெல்லாம் வேறு ஆளு இருக்குதய்யா,போய் உருப்படியா ஏதாவது வேலையப் பாருன்னு நீங்க சொல்வீங்கன்னு எனக்கு தெரியும்.அதனால ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம் மாதிரி ஒரு பின்னூட்டத்திலோ அல்லது என்னோட தனிமெயிலுக்கோ வந்தீங்கன்னா PDF அனுப்பி வைக்கப்படும்.தனித்தனியா வந்து பின்னூட்டம்,தனிமெயில் அனுப்பாட்டியும் ஒருத்தர் வந்து வரிசையில நின்னுட்டு மற்ற நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்க.PDF வேண்டாதவங்க பின்னூட்டம்,தனிமெயில் அனுப்பாம வழக்கம் போல பதிவ படிச்சிட்டு அப்படியே அப்பீட் ஆகிக்குங்க.நன்றி.

Sunday, April 4, 2010

ஈரோடு கதிரின் புலம்பலும்,ஒரு நில ஏய்ப்பு அனுபவமும்

நன்செய் விளைநிலங்கள் எல்லாம் எப்படி பிளாட்டுகளாக விற்கப்படுகின்றன என்ற ஈரோடு கதிரின் பதிவு படித்ததும் மனம் துணுக்குற்றது.பதிவுக்கான சுட்டி இங்கே.அந்தியூர் போன்ற இடங்களில் விளைநிலங்கள் கூட விற்கப்படுவதென்பதற்கும் பின்புலங்கள் என்ன?தண்ணீர் பற்றாக்குறையா?90களில் வீரப்பனின் நடமாட்ட எல்லைக்கான பூமியா?மக்களின் நகர்நோக்கிய பயணமா?முன்பு போல் விவசாயம் பார்க்க ஆட்கள் கிட்டாத விவசாயிகளின் போராட்டங்களா?அல்லது இவைகளுக்கும் மேலாக பணம் சேர்க்கவேண்டும் என்ற சிலரின் பேராசையா?இப்படி தெரிந்த காரணிகளை தெரிந்தவர்கள் பின்னுட்டத்தில் தெரிவியுங்கள்.

ஆனால் மொத்த நிலங்களையும் ஒருவர் வாங்குகிறாரென்றால் அங்கே தவறுகளுக்கான அடிப்படைகள் உருவாகின்றது.(உயர்நீதி மன்ற நீதிபதி தினகரன் விவகாரங்களும் கூட அதனையே நிரூபிக்கின்றது.)அரசு நிறுவனங்கள் சரியாக செயல்படாத நிலையில் தனியார் நிறுவனங்களில் உற்பத்தி திறனும்,வளர்ச்சியும் அதிகம்.அந்த வளர்ச்சியின் சுழற்சியில் உள்நுழைந்து விட்ட பின் இருப்பதை தக்கவைக்க வேண்டியும்,இனியும் நிறுவன கட்டமைப்புக்களாகவும் குறுக்கு வழிகளும்,சில சமயம் குடும்ப சிக்கல்களும் எதிர்பார்த்த பலனை அளிக்காமல் துயரத்தின் வலைக்குள் சிக்க வைத்து விடுகிறது.அப்படியொரு நண்பர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூட இருந்து பார்த்த நிலம் சார்ந்த ஞாபகம் இது.

உள்ளூருக்குள்ளேயே நிலைத்து நிற்பதில் எவ்வளவு சிரமங்கள் உள்ளதோ அந்தளவுக்கு வெளிநாட்டு முதலீடு தேடுவதில் இல்லையோ என்று நினைக்கும் படி வீட்டு நிலம்,வீடுகட்டுதல் போன்ற நிறுவனங்கள் HDFC உதவியுண்டு என்ற விளம்பரங்களுடன் அடிக்கடி வளைகுடா வருகை.

நவீன CEO க்களின் நடை,உடை,பாவனைகளில் விமானம் ஏறும் வசதியும் ஷெராட்டன் போன்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதியும்,பத்திரிகை விளம்பரங்களும்,இலவச VCR டேப்களுடனும்,200-300 பேருக்கான விருந்துக்கான செமினாரும்,பேச்சுத் திறனும்,அல்லக்கையாக இரண்டு பேரும் வைத்துக்கொண்டால் நீங்கள் இடும் திட்டத்தில் முக்கால் வெற்றியடைந்த மாதிரி.மீதி கால் பங்கு முன்பணம் கட்டியதும் மீதிப்பணத்தை வசூல் செய்வதில் சிரமம் இருக்கப் போவதில்லை.அப்படித்தான் VHF Selve என்ற திட்டத்துடனும் அதிக போனஸாக ராஜிவ் காந்தி உயிரோடு இருந்த காலத்தில் அவரது கையால் அவார்டு வாங்கினவர் என்ற முத்திரையுடனும் ஜெகநாதன் என்பவர் வளைகுடா நாடுகள் முழுவதுக்கும் வருகை தந்தார்.

மேற்சொன்ன ஷெராட்டன் ஸ்டைல் செமினாருடன் அவருடைய திட்டம் இதுதான்.5 தேக்கு மரம்,3 மாமரம்,2 கொய்யா மரம் போன்றவற்றுடன் தோட்ட வளாகத்திலேயே ஒரு வீடு கட்டிக்கொள்வதற்கான நிலமும் அரசு அங்கீகாரத்துடன் வழங்கப்படும்.இதற்கான பணத்தை முழுவதுமாகவோ,இயலாவிட்டால் ஒரு வருட கால தவணையில் கட்டி முடிக்க வேண்டும் என்ற உடன்படிக்கையோடு கேட்கவே நன்றாக இருக்கிறதே என்று வளைகுடா மக்களை கவர்ந்தார்.அந்த கால கட்டங்களில் பெங்களூர்,தமிழகம் போன்றவை இணைய தொழில் நுட்பத்துறையில் கலக்கும் நேரம் வேறு.இயற்கையாகவே பெங்களூரில் வீடு இருந்தால் நன்றாக இருக்குமே என்றும் இருக்கிற காசுக்கு தமிழ்நாட்டிலும்தான் ஒரு இடத்தை பிடிச்சு வைப்போமே என்ற கோவாவின் பீட்டர் போன்றவர்களும் VHFல் முதலீடு செய்தார்கள்.என்னோட நண்பர்களாய் விஜயராகவனும்,ஆந்திராவைச் சேர்ந்த சுந்தரராஜன் போன்றவர்களும் இதில் பங்குதாரர்கள்.என்னையும் இதில் இணைக்கப் பார்த்தார்கள்.எனக்கும் நண்பர்கள் சொல்வதற்காக வேண்டி இணையலாம் என்ற எண்ணமிருந்தாலும் வீட்டு உடன்படிக்கையின் ஒரு வரிசை மூளைக்கு தந்தி அடிக்கிறது.

அதாவது இந்த வீட்டுப்பத்திர உடன்படிக்கையின் படி தேக்கு வளரும் காலம் 20-25 வருடங்கள்.20 வருடத்திற்கும் நிலத்தை பாதுகாப்பது ஜெகநாதனின் கடமை.இத்தனை வருட கால இடைவெளிக்குள் காய்க்கும் காய்கறி,மா,கொய்யா(மரம் வளர்க்கும் திட்ட லக்கிலுக்கோ, நணபர்களோ கவனிக்க) போன்றவைகளை விற்று வரும் பணம் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.20-25 வருட காலத்திற்கு ஜெகநாதனே அதிகார பூர்வ நில உரிமையாளர்.இத்தனை வருட காலத்துக்கும் நிலபத்திரம் கிடைக்காது என்ற உடன்படிக்கை ஓட்டை காரணமாக நான் ஷெராட்டனின் புஃபே நன்றாக முழுங்கி விட்டு வந்து விட்டேன்:)

அதற்கு பின் VHF திட்டத்தில் பணம் செலுத்தியவர்கள் பெரும்பாலோருக்கு செலுத்திய பணம் வீணாகப் போனது.மொத்தமாக பணம் கட்டியவர்கள் சிலபேர் சுதாரித்துக் கொண்டு நில உரிமையை உரிமை கொண்டாடுகிறார்கள் என்பதையும்,ஜெகநாதன் இறந்து விட்டார் என்பதையும்,அவர் மகன் ஜெகநாதனின் வியாபாரத்தை தொடர்வதாகவும்,அவரும் காணாமல் போனவர்கள் வரிசையில் என்பது இணையம் தேடலில் தெரியவந்தது.அதற்கான நுகர்வோர்குறைகள் வலைத்தளமும் இங்கே காண நேர்ந்தது.சீட்டு பணம்,கந்துவட்டி,நில வியாபாரம்,ஆன்மீக ஏமாற்றுதல்கள்.எப்படி நம்ம மண்ணுல மட்டும் இவைகள்?

வீடு கட்ட எவ்வளவு பொட்டல் நிலங்கள் இருக்கின்றன.விளையுற பூமில வீடு கட்டுறது நியாயமா?எனவே ஈரோடு கதிரின் இடுகையும்,விளைநிலங்கள் அழிவதோடு அதற்கான பின்புலங்களாய் பணமோசடிகளும் கூட நிகழும் வாய்ப்புகள் இருக்கலாம்.இந்தியாவின் மண்ணும்,வாழ்க்கையும் விவசாயம் சார்ந்த ஒன்று.இதனை மேம்படுத்த சாலை வசதிகள்,(நல்ல சாலைகள் போட்டாலே பாதி மக்கள் படிச்சு முன்னேறிடுவாங்க)கிராமத்து கட்டமைப்பு வசதிகள் இவைகளுக்கும் மேலாக மக்கள் கிராமங்களில் வாழ்வதற்கு சாதகமாய் இரட்டை கிளாஸ் இல்லாத சமவாழ்க்கை நிலை போன்றவைகள் அவசியம்.இதெல்லாம் நடக்குற காரியமாய்யான்னு சங்க மனப்பான்மையோடு நினைத்தால் இந்த இடுகையப் படிக்கிறவங்க ஆளுக்கு ஒரு பெட்ரோல் டேங்கர இங்கே அனுப்பவும்.பெட்ரோல் விற்று பொழப்பு நடத்திக்கலாம்.

Saturday, April 3, 2010

பிரிட்டிஷ் கால தொழுகையும்,பதிவர் குழுவும்

வார இறுதியில் கடற்கரை போகலாம் என புறப்பட்ட வேலையில் நண்பர் ஜேம்ஸ் நல்ல வெள்ளிக்கிழமைக்காக தேவாலயம் போக வேண்டும் கூட்டிச் சென்று திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டியதால் ஒரு மணி நேரம் நடை போட்டு விட்டு நண்பர் வந்து விடுவார் என்று காத்துக் கொண்டிருந்தேன்.அவர் திரும்ப வராத 15 நிமிடங்களுக்குப் பின் தேவாலயத்திற்குள் ஒரு பார்வையிடலாமே என்று உள்ளே போனேன்.உள்ளே போனால் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.

சுவரின் ஒரே வளாகத்துக்குள் பல விசாலமான அறைகள்,பூங்காடுகள் கொண்ட மைதானம் போன்ற இடங்களில் தனித்தனியாக ஒவ்வொரு மொழிக்கும் தகுந்த வாறு சிலர் பிரார்த்தனை செய்து கொண்டும்,சிலர் சங்கம் கலையும் முன் வடை,டீ சாப்பிடுவது மாதிரி கேக்,சாண்ட்விச்,பெப்சி பானங்களுடன் காணப்பட்டார்கள்.இந்த கூட்டுப் பிரார்த்தனைகளுக்கு வந்தவர்கள் தனித்தனி குழுக்களாக மலையாளம்,தெலுங்கு,தமிழ்,அரேபிய,ஆப்பிரிக்க,ஆங்கில மொழிகளை சார்ந்தவர்கள் என்பது பேச்சு சத்தங்களாலும்,முக உருவங்களிலும் தெரிந்தது.

உருவ வழிபாடுகளில் நம்பிக்கை கொண்ட கத்தோலிக்க திருச்சபையும்,உருவ வழிபாடுகளில் நம்பிக்கையற்ற புரொட்டஸ்டண்ட்,இசைவடிவங்களால் இறைவனை தேடும் பெந்தகொஸ்தே போன்ற பிரிவுகள் இருந்தாலும்,பல நாட்டு கலாச்சார, மொழிகள் கொண்ட இவர்கள் அனைவரும் கிறுஸ்துவர்கள் என்ற ஒரே குடையின் கீழ் இணைகிறார்கள்.

19ம் நூற்றாண்டின் காலனி ஆதிக்கத்தில் பிரிட்டிஷ்காரர்கள்,ஏனைய மேற்கத்தியர்கள் தங்கள் தொழுகைக்கான இடமாக தேர்ந்தெடுத்த இடங்கள்,கட்டிட மாறுபாடுகளுக்கிடையிலும் இன்றும் நிலைத்திருக்கின்றன.இரு ஆலய இடத்தையும் சுற்றி நகரை மேம்படுத்தும் நோக்கில் அகண்ட, நீண்ட ரோடுகளுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.இந்த இரு ஆலயங்களும் மாற்று இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று அரசாங்க தீர்மானங்கள் ஏனோ ஒத்தி வைக்கப்பட்டு நீண்ட ரோடுகளுக்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது.காலனி ஆதிக்கக்காரர்கள் நாட்டை விட்டு செல்லும் முன் கத்தோலிக்க ஆலயத்தை ரோம் போப்பின் டயாசிஸில் இணைத்த காரணம் கொண்டோ பின் ஏனைய நாட்டவர்களின் கிறுஸ்தவ நம்பிக்கைகளுக்கு குவைத் அரசாங்கம் மதிப்பு கொடுத்தோ இந்த இரு வழிபாட்டு இடங்களும் இன்றும் நின்று கொண்டிருக்கின்றன.இந்த இடத்தை வழிபாட்டு நிலமாக உருவாக்கியவர்கள் மேற்கத்திய நாட்டவர்களாக இருந்தாலும் இதன் வழிபாட்டு பலனை அனுபவிப்பவர்கள் பெரும்பான்மையாக ஆசிய நாட்டைச் சார்ந்தவர்களே. தலைப்பில் சொல்ல வந்தது விதை விதைத்தவர்கள் சில பேர்.அதனை அறுவடை செய்து பலன் அடைபவர்கள் ஏனையோர்.

சென்ற வார சென்னை பதிவர்கள் சங்கம் அமைக்கும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்த பதிவர்களின் கருத்துக்களும்,எதிர் வினைகளும்,கும்மிகளும் எதிர்காலத்துக்கான விதை விதைக்கிறோம் என்ற தூரப் பார்வையில்லாமல் இப்பொழுதே விதைத்து சில மாதங்களில் அறுவடை செய்யும் பார்வையும்,கூடவே சிலருக்கு அதன் பலன்கள் போய் சேர்ந்து விடுமோ என்ற ஐயங்களும்,கட்சிகள் சார்ந்த அமைப்பாக ஆகி விடுமோ என்ற அச்சமும் கும்மிகள் அடித்து ஒரு விவாதக்களத்தை நீர்த்துப் போவ செய்வதும் பதிவுகளில் தெரிகிற்து.கூடவே பதிவர் குழுவுக்கான அக்கறையும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

சில நேரங்களில் இணைய தளங்களில் சலசலப்புகள் ஏற்பட்டாலும்,தொலைக்காட்சிகள் ஆற்ற இயலாத விவாதங்களை இடுகைகளின் கருத்துகளும்,பின்னூட்டங்களும் மாற்று ஊடகமாக இணைய எழுத்துகள் செயல்படுகின்றன.எனவே முதல் கூட்டம் பிசுபிசுத்து விட்டதென்று சோர்ந்து போகாமல் சென்னை பதிவர்கள் மொத்த தமிழ் பதிவர்களின் சார்பாக தமிழ் பதிவர்கள் சங்கம் என செயல்படாமல் சென்னையின் சுற்றுப் புறத்தில் உள்ளவர்களை துவக்கமாக கொண்டு செயல்படலாம்.இயலுமென்றால் தற்போது குழுவாக இயங்கும் மதுரை,திருச்சி,நெல்லை,கோவை,ஈரோடு மற்றும் ஏனைய குழுக்களுடன் இணையும் பாலமாக அமையலாம்.

துபாய்,சிங்கப்பூர்,அமெரிக்க பதிவர்கள் அவ்வப்போது ஒன்று கூடுகிறார்கள்.இலண்டன்,ஆஸ்திரேலியா,கனடா போன்ற இடங்களிலும்,இலங்கையிலும் பதிவர்கள் இணைகிறார்கள்.இவர்களையெல்லாம் மொத்த குழுவாக தமிழ்மணம் போன்ற இணைப்புக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளலாம்.தனித் தனியாக தீவுகளாய் இருப்பதை விட மொத்த கருத்துக்களின் தளமாக ஒருமுகப் படுத்துவது அவசியம்.பிரச்சினைகளாக தனி மனித விமர்சனங்கள்,கோபங்கள்,சட்டம்,பொருளாதாரம்,தற்போதுள்ள சூழலிலும்,எதிர்காலத்திலும் தமிழக அரசோ, மத்திய அரசோ,இலங்கை அரசோ குழுவாக செயல்படுவதற்கு முட்டுக்கட்டை போட முன் வரலாம்.இவைகள் தன்னம்பிக்கையை குலைக்கும் எதிர்விளைவுகள்.சரியான வழிகாட்டுதலும்,சட்டபூர்வமான ஆலோசனைக்குழுக்களும்,தலைமை அமைப்புகளும் அமையும் பட்சத்தில் எதிர்விளைவுகளை எதிர்கொள்வது கடினமானதாக இருக்காது.ஆனாலும் அடுத்த கால் நூற்றாண்டில்,அரை நூற்றாண்டில் இணையம் ஒரு வலிமை மிக்க ஏனைய இசங்களை பின் தள்ளக்கூடும் சாத்தியம் இருக்கிறது.அதற்கான விதையாக மட்டும் இப்போதைய பதிவர்கள் நன்மை,தீமைகளை அலசுவதும்,விவாதிக்க மட்டுமாவது செய்வது அவசியம்.

நண்பரை மறந்து விட்டேனே!கருத்துகளிலும்,கொள்கைகளிலும் இருவரும் மாறுபட்டு இருந்தாலும் நட்பு இருவரையும் இணைக்கிறது.கண்டு பிடித்து விட்டேன் அத்தனை கூட்டத்துக்குள்ளும்.

Wednesday, March 31, 2010

ஈரோடு பதிவுலக வேண்டுகோளும் கூட்டாஞ்சோறும்.

நீரை சிக்கனமாக்கும் குறிக்கோளாக ஈரோடு வலைப்பதிவர்கள் குழு குறிப்பிட்ட வழக்கத்தை மீறி இந்த வருடம் கோடை வெப்பமாக இருக்கிறது என்ற இடுகையின் சாரமாக இங்கே புவி வெப்பம் பற்றி குறிப்பிட்டாகி விட்டது.

நமது நாட்டில் பொதுவாக குளியல்,உணவு,தாகம்,கழுவுதல் போன்ற நான்கு பிரிவில் நீர் தேவைப்படுகிறது.கர்நாடகா,ஆந்திரா,கேரளா என தமிழகம் தண்ணீரை நம்ப வேண்டிய சூழலும்,அதிகரிக்கும் ஜனத்தொகையும்,புவி வெப்பமும் நீரை Scarcity commodity என்ற பகுதியில் நிறுத்தி விட்டது.பதிவர்களுக்கு வேண்டுகோளின் பின்னூட்டத்தில் கார்த்திகைப் பாண்டியன் சொன்னது போல இல்லத்தரசிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

நீர்,நிலம்,மலை,காடுகள் என்று இருக்கும் நாமே நீருக்கு சிரமப்படுகிறோமென்றால் உயர்ந்த கோபுரங்களுடன் நவீன யுகத்தில் உலாவரும் வளைகுடா நாடுகள் பெட்ரோல் கிடைப்பதற்கும் முன்பு தங்கள் வாழ்க்கையின் முக்கிய ஆதாரங்களை எப்படி சேகரித்திருப்பார்கள்,சிக்கனம் செய்திருப்பார்கள்?

ஈராக்கின்,யூப்ரடிஸ்,டைகிரிஸ்-எகிப்தின் நைல் போன்றவை நாகரீக தொட்டில்களாக அமைந்திருந்தாலும் ஏனைய அடர்ந்த பாலைவன நாடுகளாகவும்,கடல் எல்லைகளை ஒட்டியே இருந்த பாலைவன நாடுகள் பண்டமாற்று முறையில் வணிகம் செய்தும்,அரிசி,வாசனை திரவியங்கள்,தண்ணீர் போன்றவற்றை இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்து கொண்டார்கள்.அப்படியான சூழலில் நீர் உணவுக்காக பயன்பட்டிருக்குமென்று பார்த்தால் மைதாவால் சுடப்பட்ட ரொட்டி,செந்தழலால் சுடப்பட்ட ஆட்டிறைச்சி,குறைந்த நீர் நிலைகளில் வளரும் கீரை வகைகள் போன்றவை உணவுகளாகின.இப்பவும் வளைகுடா நண்பர்கள் ந்ன்கு அறிந்த குப்பூஸ்,மொட்டைக்கடலை மாதிரியான பருப்பு,நெருப்பின் அணலில் வறுத்த கோழி,ஆட்டுக்கறி,குதார் எனப்படும் இலைதழைகள் போன்றவற்றை குப்பூஸில் சாப்பிட்டால் கையைக் கழுவ வேண்டிய அவசியமில்லாமல் நாப்கினில் தடவிட்டு போய் விடலாம்.
நாமும் கலாச்சார மாற்றங்களில் மாறியிருந்தாலும் நெல்லைக் கண்டு பிடித்த முப்பாட்டன் காலம் தொட்டு அரிசி சோறும்,கஞ்சியும் மாறவில்லை.இங்கேயிருந்து துவங்கலாம் நீர் சேமிப்பை.நான் பார்த்த வரை கஞ்சியை தாய்க்குலம் வடித்து கொட்டி விடுகிறார்கள்.முன்பெல்லாம் கஞ்சி ஒரு நேரத்து ஆகாரமாகக் கூட இருக்கும்.கேழ்வரகும்,சோளமும்,கம்பும் அரிசிக்குப் போட்டியாக இருந்தன.இப்ப எப்படி?ஒரு கிலோ அரிசிக்கு 3 மடங்கு தண்ணீர் சேர்த்தாலே அரிசி வடித்து கஞ்சியை கீழே கொட்டலாம்:) பதிலாக 1கிலோ அரிசி,1-1/2 கிலோ தண்ணீர் பதத்தில் சோறு சமைத்தால் சுண்டும் தண்ணீரீலே சோறை சமைத்து விடலாம்.வடிக்கும் வேலை மிச்சம்.ஆனால் பொல,பொலன்னு சோறு சாப்பிட முடியாது.கூட்டாஞ் சோறு அதிகமாக சாப்பிட்டுப் பழகலாம்.உடல் நலத்துக்கும் நல்லது.தண்ணீர்,நேரத்தை மிச்சப்படுத்தி விடலாம்.அரிசியில் கார்போ ஹைட்ரேட் அதிகமாவதால் நம் உடலிலும் அதிகமாகிறது.வட இந்திய ஸ்டைலில் கொஞ்சம் சப்பாத்தி,கொஞ்சம் சாதம் சாப்பிடலாம்.இல்லையென்றால் சப்பாத்தி மட்டுமே.
தாகம் தீர்ப்பதில் பெப்சி,கோலா பானங்களை தவிர்க்கலாம்.அப்புறம் அது...அது....தவிர்க்கலாம்.நானெல்லாம் கிடைக்காம சும்மா இல்ல:)பழ ரசங்கள்,இளநீர் மாற்றாக அமையலாம்.

தினமும் மொண்டு மொண்டு ஊத்தி மொடாவை காலி செய்வதை விட வாரத்தில் இரண்டு நாட்கள் துவலைத் தொட்டு பிரஞ்சுக்காரனாகலாம்.(எல்லாத்துக்கும் அமெரிக்காவை பின்பற்றுவதற்கு மாறுதலாக பிரெஞ்சுக்காரர்களும்தான் மகிழ்ந்து கொள்ளட்டுமே)

பாத்திரம் விளக்கியாகனும்,துணி கழுவியாகனும்,பல் கழுவியாகனும்.எப்படி சுத்தி வந்தாலும் கழுவுதல் இடிக்குதே! யோசிச்சு சொல்றேன்.

Tuesday, March 30, 2010

சாராவின் மதமாற்றமும்,மனித உரிமை அமைப்புகளும்

இனியொரு தளத்தில் மதமாற்றம் தவறல்ல:சாராவை விடுவிக்க கோரும் மனித உரிமை அமைப்புகள் என்ற இடுகையை காண நேர்ந்தது.
இனியொரு தளத்திலிருந்து அடைப்பான்!

"பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறி பௌத்தத்துக்கு எதிராக நூல்கள் எழுதினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணை விடுவிக்குமாறு பஹ்ரேன் நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சாரா மலனி பெரேரா என்ற சிங்களப் பெண் தனது இளவயது முதல் பஹ்ரேனில் வசித்து வந்தவராவார். இஸ்லாத்தை தழுவிக்கொண்ட சாரா, தான் அந்த மதத்தை நேசிப்பதற்கான காரணத்தை விளக்கியும் மதங்களை ஒப்பிட்டும் இரு நூல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் விடுமுறைக்காக இலங்கை வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்தது."


இந்த திடீர் மனித உரிமை அமைப்புகள் எங்கேயிருந்து தோன்றின?குறைந்த பட்சம் இவைகளின் இருப்பாக விலாசமாவது வளைகுடாக்களில் வாழும் யாருக்காவது தெரியுமா?அப்படி ஏதாவது அமைப்புகள்,நிறுவனங்கள் இருந்தால் மகிழ்ச்சிக்குரியவை.

ஆனால் சாரா மலனி பெரேராவின் மனித உரிமை என்ற சொல்லுக்குப் பின்னாலிருந்து குரல் எழுப்பும் மனித உரிமைகளின் முகமூடிக்குப் பின்னால் மதம் சார்ந்த குரல்கள் எழுகிறதா என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.சாரா மலனி பெரேராவுக்கு மதமாற்றத்துக்கான உரிமை நிச்சயம் உண்டு.ஆனால் அவர் ஏனைய இலங்கையர்களை மதமாற்றத்துக்காக வேண்டி புத்தகம் எழுதியிருந்தாலோ,மத அமைப்புகளுடன் இணைந்து செயல்படுபவராகவோ இருந்தாலோ அது விமர்சனத்துக்குரியது.

ஆசிய நாடுகளின் மனித உரிமைகளின் நிலையும், அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளின் மனித உரிமைகள் பற்றியும் அதற்காக அர்பணித்துக் கொண்ட மனித உரிமைகளின் அமைப்புகள் பற்றியும் இங்கே சொல்லித் தெரியவேண்டாம்.மனித வள,மனித உரிமை,ஆசிய நாட்டு தூதரகங்கள் போன்றவைகள் நம் வயல்வெளிகளின் சோளக்காட்டு பொம்மைகள் மாதிரி. அப்படியில்லாமல் இருந்தால் உயிர் உள்ள அமைப்புகளாக மனித உணர்வுகளோடு வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ்,இலங்கை,பெங்களாதேஷ்,இந்திய,நேபாள பணிப் பெண்களுக்கும் இதர உழைக்கும் வர்க்கத்து மனிதர்களுக்கும் உதவிகள் செய்ய முன்வந்திருக்கும்.அந்த அந்த நாட்டு தூதரகங்கள் ஓரளவுக்கு பணியிலிருந்து ஓடிப்போவோர்களுக்கு உதவி செய்கிறதென்றாலும் அடைக்கலத்திற்கான மூல காரணங்களை வெளியுறவு துறை வரையிலும் எந்த நாடும் கொண்டு செல்வதில்லை.சிரமங்கள் பல இருந்தும் வளைகுடா மோகம் இன்னும் விட்டபாடில்லை.அதற்கான ஒவ்வொரு நாட்டின் வாழ்க்கை நிலைகளையும் விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டியது அவசியம்.

வளைகுடா நாடுகளின் மனித சுரண்டல் குறிப்பாக பெண்கள் விசயத்தில் எப்படி திசை மாறுகிறதென்றால் இந்திய தூதரக,பிலிப்பைன்ஸ் தூதரகங்களின் சிபாரிசுகளின் பேரில் அரசாங்கம் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க மறுத்தால் இலங்கையோ அல்லது நேபாளமோ விசா எண்ணிக்கைகளில் முந்திக் கொள்ளும்.எந்த ஒரு கூட்டு உடன்பாடும் கிடையாது.சார்க் போன்ற அமைப்புகளில் இது போன்ற மனித உரிமைகள் பற்றி சிந்திப்பதற்கு நேரமில்லாமல் முன்பு வாஜ்பாயும்,முஷ்ரஃபும் கை குலுக்கி கொள்கிறார்களா என்று ஆங்கில ஊடகங்கள் குறி பார்ப்பதிலும்,சென்ற ஆண்டில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் கவலைகள் கொல்லாமல் எங்கள் மேல் குண்டு விழாமல் நீங்கள் சண்டையிட்டுக் கொள்ளுங்கள் என்று ஆசிகள் கூறி சார்க்கை நிறைவு செய்தார்கள்.

ஏதோ மேற்கத்திய நாடுகளின் மனித உரிமை அமைப்புகளும்,அமெரிக்காவின் அனைத்து நாடுகளின் அவ்வப்போதைய மனித உரிமை படிகளை,தரங்களை வெளியிடுவது மட்டுமே ஓரளவுக்கு ஆறுதல்.அதிலும் மனித உரிமை விமர்சனங்கள் சி.என்.என் வரை செல்லாதவரை அரைக்கண் தூக்கமே அனைவருக்கும்.

இங்கே அரேபியர்கள் என்றவுடன் மேற்கத்திய நாடுகளின் வாழ்க்கை முறையிலோ அல்லது உள்ளூருக்குள்ளேயே இஸ்லாத்தின் வேர்களில் ஊன்றியவர்களோ கூட மனிதாபிமானத்துடன் இருப்பவர்களும் உள்ளார்கள்.ஆனால் விகிதாச்சாரத்தில் மனித உரிமை மீறல்காரர்கள் அதிகம்.இதற்கான சாட்சியாக ஒவ்வொரு நாட்டின் தூதரகங்களில் கடவுசீட்டு இல்லாமல்,கையில் காசு இல்லாமல் தஞ்சம் புகுவோரின் எண்ணிக்கை.

வெவ்வேறு அரேபிய,ஆசிய உடை,உணவு,பழக்கங்கள் என மாறுபட்டிருந்தாலும் துவக்க காலங்களில் வீட்டு வேலை பெண்களுக்கு மிகவும் தடையாக இருப்பது மொழி.இதனையெல்லாம் காலப்போக்கில் கடந்து அரேபிய கலாச்சாரத்தோடு ஒன்றி விடும் வீட்டில் பணிபுரிபவர்களை தங்களில் ஒருவராகவோ குறைந்த பட்சம் சகமனிதன் என்ற பரந்த மனப்பான்மையுடன் நடத்துவது அவசியம்.குவைத்தில் கூட தற்போது உழைப்பாளர் சட்டங்களில் (Labour Laws) குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வந்திருக்கின்றன.ஆனாலும் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான சலுகைகளுடன் ஒப்பிடும் போது வீட்டுபணிகளை செய்பவர்களுக்கு இல்லை.வளைகுடா மாற்றங்களின் பயணத்தின் தூரம் இன்னும் நீண்டு கிடக்கிறது.

அரேபிய இணையம்,சி,என்.என் தொலைக்காட்சிக்கு இணையான அல்ஜசிரா,துபாயின் பொருளாதார மாற்றங்கள்,உலகமயமாக்கல்,பன்னாட்டு கலாச்சாரங்களின் மாற்றங்களின் நிறை,குறைகள், அமெரிக்காவின் வளைகுடா கண்,ஈரானின் அணு நாடாகும் கனவு,இஸ்ரேல்,பாலஸ்தீனிய பிரச்சினை,பெட்ரோல் போன்றவை வளைகுடாவை ஒரு புதிய மாற்றத்துக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது.விளைவுகள் இனி மேல்தான் தெரியவரும்.

ஒவ்வொருவருக்கும் இயல்பாக ஒன்று... மதம்,காதல்,மனிதம் என்று பிடித்துப் போவதில் தவறில்லை.இதில் காதல்,மனிதம் போன்ற உணர்வுகள் இயல்பாகவே ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் ஒட்டிக்கொள்கின்றன.ஆனால் மதம் அப்படியில்லை.அதற்கு ஒரு கிரியா ஊக்கியாக ஒரு தனி மனிதன்,ஒரு அமைப்பு தேவைப்படுகிறது.மதமாற்றம் கூட யாருக்கும் இயல்பாய் வருவதில்லை.அதன் பின்புலங்களை ஆய்ந்தால் சூழல்,சுயநம்பிக்கையின்மை,தாழ்வு மனப்பான்மை,துயரம்,சுய லாபங்கள்,மத மாற்றத்துக்கென்றே அர்பணித்துக் கொண்ட அமைப்புகள் என்று ஏதாவது ஒன்று இருக்கும்.தான் வாழும் குடும்பம்,நாடு,சூழல் என்ற வட்டத்துக்குள் ஒருவருக்கு இயற்கையாகவேஅவரின் மதத்தின் சாயல்கள் வந்து விடுகிறது.இதனை புறக்கணித்து இன்னொரு நிலைக்கு மாறுவது நட்பு,புத்தகம்,சூழல் என்ற சுய உணர்வில் மத மாற்றம் என்ற பரிட்சார்த்தம் என்பது மிக அபூர்வம்.அப்துல்லா சேஷாசலம் போன்றவர்கள் ஒருவேளை இந்த விதிக்குள் வருவதற்கு சாத்தியமிருக்கிறது.ஆனால் இதற்கான உட்காரணங்கள் இன்னும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.அப்துல்லா சேஷாசலம் இப்பொழுதுதான் விதைத்திருக்கிறார்.அறுவடை வரை பொறுத்திருப்போம்.

ஆனால் சிலர் மத கடைகள் திறந்து வைத்து மதமாற்றமும் மறைத்து வைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களில் (Hidden Agenta) ஒன்று என்ற அவர்களின் பிரசாரத்தில் தொண்டனாகிப் போவது சுய புத்தியில்லாததும் சுய சோதனைக்குள்ளாக்கி கொள்ளாததுமே.தொலைக்காட்சிகள் ஓரளவுக்கு சமூக சூழல்களை எடை போட உதவுவதால் அதன் நோக்கில் பார்த்தால் சுய மருத்துவ விளம்பரதாரர்கள்,மொழி மாற்றம் செய்யப்பட்ட உடல் வளைக்கும் சாதனங்கள்,செய்தி,மெகா,சினிமா,நகைச்சுவை நேரங்களோடு ஒவ்வொரு மதமும் வித்தியாசப்படாமல் ஒரு மணி நேரமாவது மூளை சலவைக்கு தயார் படுத்துகிறார்கள்.

இந்தியாவில் கிறுஸ்தவம் புகுந்ததின் சில நன்மைகள் பள்ளிக்கூடங்கள்,மருத்துவமனைகள் போன்றவை.எதிர்வினையாகவும் மதத்தின் அடையாளமாகவும் தேவாலயங்கள் நிற்கின்றன.ஷாஜகானின் தாஜ்மஹால்,குதுப்மினார்,ஜும்மா(வெள்ளிக்கிழமை)மசூதி,செங்கோட்டை போன்றவைகளில் ஜும்மா மசூதி மதத்தின் அடையாளம்.கூடவே அல்கைடா என்ற வரை மதத்தின் மாற்றங்கள் மனிதனை இழிவுபடுத்துகின்றன. சமணம்,ஜைனம்,சைவம் என கோயில்கள் மதத்தின் அடையாளமாய் இருந்தாலும் வர்ணாசிரமம் இணையம் வரை சிவதாண்டமாடுகிறது.

நேற்று வரை தனக்கு சொந்தமான மதம் இன்றைக்கு மதம் மாறிப் போனதும் அந்நியமாகிப் போக இயலுமா என்பது கேள்விக்குரியது.கட்சிகள் கூட மதங்களுக்கு இணையானவை.ஏனென்றால் இரண்டுமே தோற்றுவிக்கப்பட்டவை ஒரு காலகட்டங்களில் தனிமனித வெளிப்பாடாகவோ அல்லது ஒரு கூட்டு நம்பிக்கைகளாலோ.கட்சியிலும் மாறிக்கொள்ளலாம்.மதத்திலும் அப்படியே.இரண்டும் குறை,நிறை கொண்ட வலுவான, மனிதனை உளவியல் ரீதியாக பாதிப்பவை.இரண்டும் சில இசங்களை தன்னுள் தக்க வைத்துக் கொள்கிறது.அரசியலும்,மதமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை காலம் காலமாய்.