Followers

Monday, October 4, 2010

CWG விளையாட்டும் கல்மாடியும் டெல்லி அரசியலும்

காமன்வெல்த் போட்டிகளின் மொத்த குழறுபடிகளுக்கு இரண்டு முக்கிய காரணங்கள்.ஒன்று கல்மாடியின் ஊழல் நிர்வாகம்.இரண்டு டெல்லியின் முதலமைச்சர் ஷீலா தீக்சித்க்கு மாநிலப் பங்கீடின்மை. எனவே குழறுபடிகளின் நிலைகளில் இருவரும் வேறுபடுகிறார்கள்.எப்படியென்றால் கல்மாடியின் நிர்வாகத் திறமையின்மைக்குப் பின் ஊழல் விரிச்சாடுவது இடிந்த பாலம்,நடைபாதைப் பாலம்,புதிதாகக் கட்டிய பாத்ரூம்களின் வெத்திலைப் புகையிலை (புகையில என்று நினச்சிருப்பாரோ கல்மாடி)எச்சில் துப்பல்கள் என்ற இந்திய சுகாதாரம் போன்றவை அப்பட்டமாகக் காட்டுகின்றன.

2003 ம் ஆண்டிலிருந்து 7 வருடங்கள் எனும் போது இரண்டாவது முறை வருவதற்கு வாய்ப்பில்லை!சுருட்டுவதற்கு இதை விட்டால் வாய்ப்பில்லை என்று முதல் இன்னிங்ஸில் கணக்குப் போட்டிருப்பாரோ? நேற்று காமன்வெல்த் துவக்கவிழாவில் கல்மாடி பேசும் போது ஆடிட்டோரியம் முழுக்க பூ....பூ என்ற மக்களின் எதிர்ப்புச் சத்தத்தை மக்களின் மகிழ்ச்சி ஆரவாரக் குரல் என்று நினைத்திருப்பாரோ கல்மாடி? ஒரு சிறந்த பொருளாத நிபுணராக, ஆனால் முதுகெலும்பில்லாத பிரதமராக மக்களின் கல்மாடி எரிச்சல் குரல்  சத்தங்கள் என்பது  தெரிந்தோ அல்லது தெரியாமலே கல்மாடிப் பேச்சுக்கு கைதட்டுகிறார் மன்மோகன்சிங். பார்க்க சகிக்கவில்லை பிரதமரே!

விளையாட்டுக்கள் முடிந்த பின்னாவது கல்மாடிக்கு ஆப்பு காத்திருக்கிறதா என்று தெரியவில்லை.எப்படியோ மணி சங்கருக்கு அவல் மெல்ல சந்தர்ப்பம் கிடைச்சாச்சு கல்மாடி.இவரு கல்மாடியில்ல களவாடியின்னு அறிக்கை விடப்போறாரு பாருங்க.அதுவும் பத்தாம ஆப்புன்னா நாற்காலியும் புடுங்கப் போறாரு.இது என்னோட கணிப்பு.பார்க்கலாம் என்ன ஆகிறதென்று. இது  நடக்கலின்னா இதெல்லாம் அரசியலில் சகஜமப்பான்னு தோளில் துண்டைப் போட்டு போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான்.

அடுத்து ஷீலா தீக்சித்! டெல்லியின் முதலமைச்சர் என்ற காரணம் கொண்டே இவரால் சுயமாக செயல்பட இயலாத நிலை.மத்திய அரசும்,மாநில அரசும் ஒரே இடத்தில் இருந்தும் நிர்வாகப் பங்கீடுகளுக்கான stream lining இல்லை.விளையாட்டுத்துறையோ கல்மாடியிடம்.டெல்லிக்கு வரும் அவப்பெயரோ முதல் அமைச்சருக்கு.மத்திய,மாநில அதிகாரப் பங்கீடு அரசியல் பனிப்போர்கள் கூட உலக அரங்கில் இந்தியா அவமானப்பட்டதற்கு காரணம் எனலாம்.இறுதி மூன்று தினங்களில் முதலமைச்சர் ஷீலா தீக்சித் பொறுப்பேற்றுக்கொண்டு ஓரளவுக்கு நிவர்த்தி செய்து விளையாட்டுப் போட்டிகளை துவங்கியிருக்கிறார்கள்.Let the game begin என்று சார்லஸ் சொல்வதற்கு பதில் இந்திய ஜனாதிபதி முந்திக்கொண்டார் என்ற கிசுகிசு வேறு கேள்விப்பட்டேன்.

எவ்வளவு ஓட்டம் ஓடியிருப்பேன்!தங்கமெல்லாம் கொண்டு வந்து இந்தியாவைப் பெருமைப்படுத்தினேன்.எனக்கு வெத்தலை பாக்கு வைக்கலியேன்னு பி.டி.உஷா அக்கா ஒரு பக்கம் புலம்பல்.உஷா அக்கா! டெல்லி முழுதும் சேட்டன்,சேச்சிகள் பீரோகிரசியில் இருந்தும் எப்படி கோட்டை விட்டாங்கன்னு தெரியலையே!எப்படியோ நீங்க புலம்பறது நியாயம்தான்.ஆனால் விளையாட்டில் சாதனை என்பதெல்லாம் இந்தியாவில் கடுகு மாதிரி கண்ணுக்குத் தெரியாது.விளையாட்டு முடிந்து மூணாவது நாள் துவங்கி மறுபடியும் மக்களின் கவனம் கிரிக்கெட்ல போயிடுமில்ல.

நான் என்னமோ எங்க பதிவு மக்கள்தான் என் பதிவை சுட்டுட்டாங்க,என் இடுகையை என்னைக் கேட்காமலேயே பத்திரிகைல போட்டுகிட்டாங்கன்னு இதுவரைக்கும் கேள்விப்பட்டிருக்கிறேன்.இப்ப bjc.com ன்னு கூகிள் அண்ணன்கிட்ட கேட்டா அவர் நேரா மன்மோகன்,சோனியா,ராகுல் காந்தி மூன்று பேர் படத்தைக் காண்பிச்சு அது இவங்க கடைதான்ன்னு சொல்றார்.பிஜேபிக்காரங்க கோவிச்சுகிட்டு காங்கிரஸ் மேல் கேஸ் போட்டிருக்காங்க.யோவ் உன்னோட கடைப்பேரு bjb.org ன்னு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அங்கே போய் பாருன்னு விரட்டுகிறார்.இவங்களே சைபர் கிரைம் செய்யறாங்க.இதுல பதிவுலக புள்ளப்பூச்சிகளையெல்லாம் சைபர் கிரைம்ல சேர்க்கனும்ன்னு பின்னூட்டம் போடறது நல்லதில்லை:)

இந்திய மக்களுக்கு சினிமா குஜாலாவுக்கும்,அரசியல் அடாவடிகளுக்கும் பஞ்சமேயில்லை போங்க!
 

ரஜனி சொன்ன ஜோக்

ரஜனி முகப்பூச்சு இல்லாமல் அவர் அவராகவே மைக்கின் முன் அமிதாப், ஐஸ்வர்யராய் கலந்துகொண்ட எந்திரன் பட விழாவில் ஏற்ற இறக்கங்களுடனான முகபாவனைகளுடன் சொன்னது அமர்ந்திருந்த அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.

ஒருவர்  ரஜனியிடம் வந்து இந்தியில் பேசி படத்தின் பெயரைக்கேட்டாராம்.ரஜனி படத்தின் பெயரை சொல்ல கதாநாயகி யார் என்று வந்தவர் கேட்க ஐஸ்வர்யராய் என்றாராம் ரஜனி.அடுத்து கதாநாயகன் யார் என்று ரஜனியிடமே கேட்கவும் தான்தான் கதாநாயகன் என்று சொல்லி சில வினாடிகள் தாமதத்திற்கு பிறகு ரஜனி தொடர்ந்தார்.

வந்தவர் ரஜனியைப் பார்த்துவிட்டு அமிதாப் பச்சனுக்கு என்ன ஆச்சு!,ஐஸ்வர்யராய்க்கும் என்ன ஆச்சு? என்று அருகில் இருந்தவரிடம் புலம்பினாராம்:) 

திரைப்படத்துக்கு வெளியே நடிக்காத ஒரே ஆள் ரஜனி என்று இயக்குநர் பாலசந்தர் ஒரு முறை ரஜனி பற்றிக் குறிப்பிட்டார்.கவியரசு வைரமுத்து அவர்களே!இது ரஜனியே சொன்ன நிகழ்ச்சி.எனவே அமிதாப்,போப் குட்டிக்கதையெல்லாம் இனிமேல் யார்கிட்டயும் சொல்லாதீங்க.

Jokes apart, ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிப்பதற்கு முதல் நாள்,இரண்டு,மூன்றாம் நாட்களின் வசூல் கணக்கை சொல்லி விடுவது வழக்கம்.ரஜனி விசிறி ஒருவர் அவதார் வசூலை எந்திரன் மிஞ்சப்போகிறது பாருங்கள் என்று முகம் மலர்ந்தார்.அவதார் படத்தின் முதல் நாள் வசூலைக் கூட அறிவிச்சாங்க.ஆனால் எந்திரன் வசூல் பற்றி மூன்று நாள் ஆகியும் கணக்கு சொல்றதுக்கு  ஆள் இல்லை.உங்களுக்கு தெரியுமா?பட்டு!நீங்கள் சொல்லுங்களேன்!

எத்தனை பஞ்சாயத்து செய்தும் எந்திரன் காய்ச்சலை நிறுத்தவே முடியவில்லை.மெய் உலகத்துக்கும் மெய் நிகர் உலகத்துக்கும் வித்தியாசம் இருக்குதுன்னு இப்பவாவது புரியுதுங்க்ளாண்ணா:)

Saturday, October 2, 2010

எந்திரன் விமர்சனங்கள் எங்கே?

தாரை,தப்பட்டைகளோடு எந்திரன் திரை விமர்சனம் களை கட்டுமென்று பார்த்தால் இன்று படம் பார்த்து விட்டு வந்தும் பிரபல திரை விமர்சன பதிவர்களின் இடுகை ஒன்றும் கண்ணில் படவில்லை.டிக்கட் கிடைக்கவில்லையா என்ன? கட்டவுட் பாலாபிஷேகம், தரையில் சாப்பாடுன்னு களைகட்டுச்சே என்னாச்சு? தமிழகத்தில் போட்ட காசு வந்துமென்று நினைக்கிறேன்.இந்தி சத்தத்தையே காணோம்!

எப்படியோ தமிழக கோமாளித்தனங்கள் இல்லாமல் தமிழகத்திலிருந்து வரும் அதே ரசிகர் கூட்டம் பிரம்மச்சாரிகளின் கூட்டமாக,குடும்ப சகிதமாக ஹவுஸ்புல்லா ரொம்ப மெச்சூர்டா அமைதியா படம் பார்க்கிறது பார்க்க சந்தோசமாய் இருந்தது.ஆனால் இந்த அமைதியைக் குலைக்க திரையரங்கின் ஸ்டிரியோபோனிக் சத்தம் காதை கிழி கிழின்னு....

படம் துவங்கியதுமே Son pictures லோகோ வந்ததும் சன் தொலைக்காட்சி செய்தி வருகிற மாதிரி ஒரு உணர்வு.அதனைத் தொடர்ந்த ஆராய்ச்சிக்கூடம் என்னையறியாமல் தசாவதாரத்தின் ஆராய்ச்சிக்கூடத்தை நினைவு படுத்தியது.கூட கருணாஸ்,சந்தானத்தின் பித்துக்குளித்தனங்களும் அதனைத் தொடர்ந்த கதை நகர்வும் என்னமோ கோடிக்கணக்கில் காசு கொட்டினாங்கன்னு சொன்னாங்களே ஒரு எபக்டுமே இல்லையேன்னு தோன்ற வைத்தது.எந்திரனின் நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமே கதையை நகர்த்திச் செல்கின்றது.அப்புறம் குறிப்பிட்டுச் சொல்லும்படியா என்ன என்று இப்ப யோசித்தாலும் ரயில்,ஆராய்ச்சிக்கூட கிராபிக்ஸ்,பீட்டர் ஹெய்ன் ரயில் சண்டைன்னு கொஞ்சம் நினைவு வருது.சும்மாவே சாமியாடுற ரஜனி ரசிகர்களுக்கு கிராபிக்ஸ்தான் படைப்பாளி.
 
டோனி சொல்ற மாதிரி கதையே இனிமேல்தான்னு இடைவேளையில் சொல்வதால் சரி பார்க்கலாமேன்னு உட்கார்ந்தா இயந்திரமா இருக்கிற யந்திரனுக்கு உணர்ச்சிகள் கொடுக்கனுமுன்னு 1 டெராபைட் 2ஹெக்டாபைட், பைட் இயந்திரனுக்கு டாய்பிரண்டா இருந்து இப்ப பாய்பிரண்டாகனுமுன்னு ஐஸ்வர்யா மேல் காதல் வந்து விடுகிறது.காதல் என்ற நட்டு கழண்டுகிச்சுன்னா என்னாகுமென்று கதை நகர்கிறது.ஏ.ஆர் ரகுமானை இயர்போனை காதுல மாட்டிகிட்டு இன்னொரு முறை கேட்டாலே கருத்து சொல்ல முடியும்.

ரஜனிக்கு ரொமான்ஸை விட வில்லத்தனம் அல்வா மாதிரி வருகிறது.அதனை மூன்று முடிச்சு முதல் லகலகலக வரை நிரூபித்திருக்கிறார்.இதிலும் எந்திரன் வில்லனாகும் போது அசத்தல்.ஆனால் இங்கே திரையரங்கில் விசில் அடிக்க மட்டுமே ஆட்கள் இல்லை.கண்ணை கழட்டி வேறு கண் மாற்றுவது,காயம்பட்ட உடலை ரீமோல்டிங்க் செய்வது போன்றவை டெர்மினேட்டரை நினைவுபடுத்தியது.ஆங்கிலப்படங்களுக்கு கண்ணில் விளக்கெண்ணைய் இட்டு எந்தக்காட்சி எங்கே அசல் என்று துப்பறியும் பதிவர்களுக்கு இன்னும் சில ஆங்கிலப்படப் பெயர்கள் அகப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
 
க்ளைமாக்ஸ் எந்திரன்களின் சாகசம் இதுவரை இந்தியத் திரைப்படங்களிலே முதல்முறையாக என்ற வாக்கியத்தை உண்மை என்கிறது.ஆங்கிலப்படங்களுக்கு சவால் விடும் சிறு முயற்சியாகவாவது இதனை ஷங்கரை பாராட்ட வேண்டும்.கலாநிதி தயாரிப்பாளர் என்றதும் உலையிலே போட்ட பணம் என்று சிலர் முணுமுணுக்கலாம்.ஐங்கரனால் முடியாததை கலாநிதி வெற்றி வியாபாரமாக்கியிருக்கிறார்.எனவே இதன் நுண்ணரசியல்களில் எனக்கு ஈடுபாடு இல்லை.

ரஜனி! உடலை மெலிதாக வைத்திருக்கும் ரகசியத்தை மட்டும் என் காதுல போட்டீங்கன்னா கூட்டாளியாக வசதியாக இருக்குமில்ல!டாட்!

அயோத்தியா தீர்ப்பு விமர்சனம் எளிது!தீர்வுகள் கடினம்

மழை விட்டும் தூவானம் விடாத மாதிரி அயோத்தியா பற்றி இன்னுமொரு இடுகை எழுத வேண்டியதாகி விட்டது.தீர்ப்பு வந்தும் அதுபற்றிய விவாதம் பலவிதத்திலும் பல இடங்களில் நடக்கின்றன.தீர்ப்புக்கு முன்பான நாட்களில் யாராவது விவாதம் கிளப்புவார்களா என எதிர்பார்த்தேன்.ஆனால் யாரும் அப்படி தொட்டமாதிரி எனது கண்ணில் படவில்லை.ஒரு வேளை நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு வழக்கு பற்றி கருத்து சொல்வது தவறு என்று பலரும் தவிர்த்திருக்கலாம்.தீர்ப்புக்குப் பின்னும் யாரும் தீர்வுகளை சொல்வதாக காணோம்.மாறாக திட்டுக்கள் திட்டேறி சூடான பகுதியில் போய் உட்கார்ந்து கொள்கின்றன.

ஆனால் தீர்ப்பு வந்தும் தீர்ப்பு பற்றிய விமர்சனங்கள் மட்டுமே வெளிப்படுகிறதே ஒழிய தீர்ப்பு எப்படியிருந்தால் நன்றாக இருந்திருக்குமென பலரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக யாரும் விவாதிப்பதாக காணோம்.வழக்காடுபவர்கள் மத்தியில் தீர்வுகள் இல்லை என்கிற போதே நீதிமன்ற படிக்கட்டுகளும்,நீதிபதிகளின் தீர்ப்பும் தேவைப்படுகிறது.தீர்ப்புக்கு முன்பு தீர்ப்பு எப்படியிருந்தாலும் யாரும் கலவரம் செய்யக்கூடாது என்ற பலதரப்பட்ட குழுக்களின் கருத்துக்கள் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

இந்திய நீதிமன்றங்களில் உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புக்களே பெரும்பாலும் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்படுகின்றன.ஒரு சில விதிவிலக்குகள் இருக்க கூடும்.எனவே உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு என்ன வருகிறதோ என்று எதிர்பார்த்து அதனை ஏற்றுக்கொள்கிறோம் என இரு தரப்புமே கூறுகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறைந்த பட்சம் இன்னும் 10 வருடங்களுக்கு நீடிக்கப்போகிறது.மக்களின் வாழ்க்கை மேம்பாடுகளை சிந்திக்காமல் இதுபோன்ற தேவையற்ற காலதாமதங்களை நாமே ஏற்படுத்தி விட்டு அப்புறம் திட்டவும்,கட்டைப்பஞ்சாயத்து என்று நொள்ளைகள் நிறையவே பேசக் கற்றுக்கொண்டிருக்கிறோம்.
 
தீர்ப்பு எப்படியிருந்தால் விமர்சிப்பவர்கள் மகிழ்வீர்கள்? இந்த சமயத்தில் சமீபத்தில் திண்ணையில் படித்த ஜெயகாந்தனின்  அக்கினி பிரவேசம் நேர்காணல் மட்டுமே நினைவுக்கு வருகிறது.கதையின் கதாநாயகியான கங்காவின் தாய் நீ அறியாமல் நேர்ந்த தவறுக்கு நீ பொறுப்பல்ல என்று இரண்டு செம்பு தண்ணீர் ஊற்றி விட்டு நீ கற்புள்ளவள் என்று ஜெயகாந்தன் கதையை முடிக்க எதிர் விமர்சனங்களை கண்டு கங்காவின் தாயின் தீர்ப்பு அப்படியில்லாமல் இருந்திருந்தால் எப்படியிருக்குமென்று சிலநேரங்களின் சிலமனிதர்கள் எழுதினார்.என்னய்யா!எதையோ பற்றி பேசும்போது புனைவைக் கொண்டு சொருகிறாயே என்று நினைக்காமல் இருக்க மீண்டும் தலைப்பின் சாரத்துக்கு தாண்டி விடுவோம்.
 
தற்போதைய தீர்ப்பாக இல்லாமல் மொத்த நிலமும் பாபர் மசூதிக் குழுவுக்கு சொந்தமென்றோ அல்லது இந்துத்வா குழுக்களுக்கு சொந்தமானது என்று சொல்வதற்கு சான்றுகள்,சாத்தியங்கள் இருக்கிறதா?இந்திய சட்டங்கள் சாட்சிகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.அந்த விதத்தில் Title of deed க்கு சொந்தமானவர்கள் என்று ஏதாவது ஒரு குழுவாவது சாட்சிகளை முழுமையாக சமர்ப்பித்துள்ளார்களா என்றால் அதுவுமில்லை.அழிக்கப்பட்ட பாபர் மசூதி நமது கண்முன் உள்ள சாட்சியென்றாலும் ஒரு காலத்தில் அதுவும் வெளியுலக ஆக்கிரமிப்பின் அடையாளச் சின்னமென்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நேற்றைய தீர்ப்புக்கு பின் இன்று முலாயம் சிங்க்,ப.சிதம்பரம்,மாயாவதி போன்றவர்கள் தீர்ப்பு பற்றிய திரியை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.வரும்நாட்களில் இன்னும் சிலர் நெருப்பு புகைய வைக்கவும் கூடும்.இவர்களது அறிக்கைகளுக்கு பின் தங்கள் சுயநலம் கலந்த அரசியல் நன்மைகள் கருதிய முலாம் பேச்சுக்கள் இருக்கிறது என்பதை அனைவரும் நினைவில் வையுங்கள்.அரசியல்வாதிகளின் கடிவாளம் ஓட்டுப்போடும் அந்தக் கணம் தவிர அரசியல்வாதிகள் எகிறித்திமிறும் குதிரைகளாகவே இருக்கிறார்கள்.இந்த சண்டிக்குதிரைகளை அடக்குவது எப்படி என்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.இவர்களே இந்திய இறையாண்மைக்கும்,சகோதரத்துவத்துக்கும் முதல் இடையூறுகளாக இருக்கிறார்கள்.அரசியல்,மதம் சார்ந்த கலவையாக அயோத்தி ஆகிப்போனது துரதிஷ்டமானது.


உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படியிருந்தால் நன்றாக இருக்குமென்று பின்னூட்டத்திலோ அல்லது அவரவர் கடைகளிலோ விவாதியுங்கள்.இல்லையென்றால் உயர்நீதி மன்ற தீர்ப்பை ஏற்று எதிர்காலம் நோக்கி நகருவோம்.


நான் சில நிகழ்வுகளை உலாகளாவிய அளவிலே பார்க்கிறேன்.மனித தவறுகளாக இந்துத்வாவின் பாபர் மசூதி இடிப்பு ஒரு வரலாற்று தவறு என்பதில் ஐயமில்லை.இதற்காக வருந்துவதற்கு இந்தியாவில் மனிதர்கள் மதசார்பின்மையற்ற மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள்.ஆனால் பல நூற்றாண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்த புத்தர் சிலையையும்,இஸ்லாமிய வரலாற்று கலைப்பொருட்களையும் கூட இஸ்லாமிற்கு எதிரானது என அளித்து விட்டார்கள் மதப்பித்தர்கள்.Doesn't contradictory to a doctrine and  religious ethics? இதுபற்றியெல்லாம் மதம் சார்ந்து பேசுபவர்கள் யாரும் எதிர்ப்புக் குரல் கொடுத்த மாதிரி தெரியவில்லை.
 
நான் சொல்ல வருவதெல்லாம் எந்த மதத்தையும் பின் தள்ளி மனிதாபிமானத்தையும் மனிதகுலத்துக்கு நல்லதை மட்டுமே சிந்தியுங்கள்.

வளைகுடாக்களில் ஒரு மசூதி கூட மனிதனுக்கு பாதுகாப்பானதா இல்லையென்றால் இடித்துவிட்டு புதியதாக அதே இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ கட்டி விடுகிறார்கள்.மெக்கா,மதினா கூட ஆண்டாண்டு தோறும் பெருகும் கூட்டத்திற்கு ஏற்ப மக்கள் நலன் கருதி மேம்படுத்துகிறார்கள்

நாம் மட்டுமே கலைப்பொக்கிசம்,வரலாற்று சின்னம் என பாரம்பரியம் காக்கிறோம்.மனிதன் இறந்தால் கூட சிலையை எழுப்பி கொண்டாடவும்,உடைக்கவும் நாமே செய்கிறோம்.சவுதி அரேபியாவின் மன்னர் நம் ஊர் பாடை மாதிரி இரண்டு குச்சிகளில் துணி கட்டி எளிமையாக கொண்டு போய் அடக்கம் செய்தார்கள்.

தமிழக இஸ்லாமிய சகோதரர்களை வேண்டிக்கொள்வேன்.மதம் நம்பிக்கை மட்டுமே என்ற அளவில் மதத்தின் பின் செல்லாமல் மற்றவர்களுடன்  போட்டி போட்டு இந்திய உரிமைகளைப் பெறுவதற்கு தகுதியானவர்களாக கல்வியில் கவனம் செலுத்துங்கள்.கல்வி ஒன்றே உங்களை மேம்படுத்தவும், சமூகத்தில் ஒதுங்கிப் போனவர்களாக இல்லாமல் செய்யவும் துணை புரியும்.தொலைக்காட்சிகளில் நிறைய கூச்சல் ஒலிபெருக்கி சத்தங்களை காண்கிறேன். ஆனால் அவற்றுக்குள்ளும் பிரிவினைகளையும் காண்கிறேன்.இவற்றையெல்லாம் கடந்து வாருங்கள்.பலதரப்பட்ட கலாச்சாரங்களையும் உள்வாங்கிக் கொண்டு துபாய்,குவைத் போன்ற இஸ்லாமிய நாடுகள் எதிர்காலம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.
 
திறமைகளை வளர்த்துக் கொண்டால் வெளிநாடு போவோர் மத்திய கிழக்கு நாடுகளில் உங்களுக்கென இடங்களைப் பிடிக்க முடியும்.இதுவரை ஒரு தலைமுறை சிறு வியாபாரிகளாக, ஹோட்டல் பணியாளர்களாக, அலுவலங்களில் தேநீர் பரிமாறுபவர்களாக, வாகன ஓட்டிகளாக,வீடுகளில் பணிபுரிபவர்களாக மட்டுமே அதிகம் காட்சியளிப்பதற்கு கல்வியில் கவனம் செலுத்தாமையும் எப்படியாவது வெளிநாடு போனால் போதும் என்ற திட்டமிடல் இன்மையே.உள்ளூருக்குள் உழன்று கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு மத மைக் ஒலி ஒரு வரப்பிரசாதம் மாதிரி.அரசியல் மைக் ஒலி பிரசாரத்தில் மயங்கி புத்தி தெளிந்தவர்கள்  இங்கே நிறைய உண்டு.இவற்றையெல்லாம் நினைவில் கொள்ளுங்கள் என்று வேண்டிக்கொள்வேன்.


உலகளாவிய அளவில் மிகவும் ஆச்சரியமான உலக அதிசயமான எகிப்து பிரமிடுகள் எகிப்தியர்களுக்கு எந்த பெருமிதத்தையும் தருவதில்லை.உடன் பணிபுரியும் ஒருவரிடம் கேட்டால் அது செத்தவர்களை புதைத்த இடம் என்கிறார்.ராமன், தாஜ்மஹால்,பாபர் மசூதி போன்றவை வரலாற்றுக் கதைகளே!கொண்டாடுவதற்கு அதுவே வாழ்க்கையல்ல சராசரி மனிதர்களான நமக்கு.  

Friday, October 1, 2010

அயோத்தி தீர்ப்பும் உலகளாவிய பார்வையும்

வரலாறு மட்டுமே பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. மனிதனின் வாழ்க்கைச் சக்கரமோ முன்னோக்கியே போய்கொண்டிருக்கிறது.ஆனாலும் இன்றைய நிகழ்வே நாளைய வரலாறு.மொகஞ்சோதாரா துவங்கி வரலாற்று சான்றுகள் இந்தியாவில் பல இருக்கும் போது ஒரு நாட்டை ஆண்ட தசரதனுக்கோ அதற்கு பின் பட்டாபிசேகம் சூடிக்கொண்ட ராமனுக்கோ இதிகாச ராமயாணம் என்ற myth தவிர எந்த ஒரு ஆதாரமும் இல்லாதது ஆச்சரியமே.

இருந்தாலும் பல மனிதர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ராமர் பிறந்தது அயோத்தியே என்பதாலும் லக்னோ நீதிமன்ற தீர்ப்பு எதிர்காலத்தில் எந்த விதமான தாக்கங்களை யார் மூலம் எப்படி கொண்டு போகும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.அயோத்தி ராமர்,பாபர் தீர்ப்பு வரலாற்றை தன்னுள் தக்க வைத்துக்கொண்டு இந்தியாவின் எதிர்கால நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு என்றே உணர்கிறேன்.ஆனால் இந்த நல்லிணக்கம் இருபக்க மத உணர்வாளர்களிடமிருந்தும் விடுபட்டு மதச்சார்பின்மையற்ற பெரும்பான்மை எதிர்கால இந்திய மக்களின் கரங்களில் உள்ளது.பெரிதாக hype செய்யப்பட்ட கலவரம் எதுவும் தற்போது வெடிக்காமை மகிழ்ச்சியை தருகிறது.அதற்கான காரணமாக இது வரை தீர்ப்புக்கு திரி வைக்காமையும்,அரசின் முன்னேற்பாட்டால் நாடு தழுவிய நடவடிக்கையும் என்பேன்.The government decision making and precaution has paid a dividend.

இன்றைய NTDVயில் அயோத்தி தீர்ப்பு குறித்த பல தரப்பு கருத்துக்களை பர்கா தத் பல பிரபங்களுடன் (வித் அக்தார்,இந்தியன் எக்ஸ்பிரஸ் குப்தா,ரவிசங்கர்,உமா பாரதி இன்னும் பலர் உட்பட)வழங்கிக்கொண்டிருந்தார். அதில் குப்தா குறிப்பிட்ட ஒன்று இந்தியாவில் தனக்கு பிடித்த இடம் காஞ்சிபுரமென்றும் அதற்கான காரணமாக காஞ்சி மடமும்,அதற்கும் பக்கத்தில் மசூதியும்,பஸ் நிலையத்துக்கருகில் பெரியார் சிலையும் அதன் கீழ் கடவுளை நம்புவன் முட்டாள் என்ற வாசகமும் என்றார்.

இந்திய,பாகிஸ்தானின் பிளவுக்கு காரணிகளான அடிப்படை மதவாதம் நாட்டை இருகூறாக்கியதற்கு பின்பு தற்கால இந்தியாவில் அதேபோன்ற ஒரு நிலை உருவாகிய பின் ஒரு நிலம் எப்படி பிரிக்கப்படும் என்பதை கண்கூடாக காண்கிறோம்.மண்ணாக ஒன்றாக ஒட்டியிருக்கும் நிலம் இனி மனிதன் போடும் கோட்டால் பிரிக்கப்படும்.ஆனால் தற்போதைய சூழலும் நீதிமன்ற தீர்ப்பும் இந்திய,பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் எப்படி உருவாகியிருக்கும் என்பதை சிந்திக்க வைக்கிறது.இந்தியாவுக்குள் பல பிரச்சினைகள் இருந்தாலும் it is matured enough to followup the long path of democracy.இதையே பாகிஸ்தானும் தொடர்ந்திருந்தால் பிரிந்திருந்தாலும் பிரச்சினைகள் உருவாவதற்கு சந்தர்ப்பங்கள் இல்லாமல் இருந்திருக்கும்.ஆனால் பாகிஸ்தான் மதம் என்ற கற்கள் நிறைந்த பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டது.இதனைக்கடந்து பாகிஸ்தான் வரும்போது இருநாடுகளும் முன் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுர நினைவுச் சின்னமும் இஸ்லாமிய தொழுகைச் சின்னமும் லக்னோ நீதிமன்ற தீர்ப்பைப்போல் அமெரிக்காவில் ஒரு நிலையை எடுப்பதற்கு இந்தியா ஒரு முன்வழிகாட்டி.இதனை அமெரிக்கா எதிர்காலத்தில் எப்படி கையாளப்போகிறது என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.

கிட்டத்தட்ட அயோத்தி மாதிரியான ஒரு நிலையை அதாவது myth Vs history என்ற நிலையில் யூதர்களின் கோயிலும்,பாலஸ்தீனியர்களின் மசூதியும் ஒரே இடத்திற்கு ஜெருசலமே எங்கள் தலைநகரம் என்று போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.விரும்பியோ விரும்பாமலோ நிகழ்ந்த வரலாற்று கசப்புக்களை பின்னோக்கி வரலாற்றையே நோண்டி உயிர்ச்சேதம் உருவாக்காமல் அயோத்தி நீதிமன்ற தீர்ப்பின் வழியில் எதிர்காலத்தை கட்டி அமைப்பதே இஸ்ரேல்,பாலஸ்தீனியப் பிரச்சினை தீர்வுக்கு வழிவகுக்கும்.

இந்திய-பாகிஸ்தான், அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் எதிர்காலம், இஸ்ரேல்-பாலஸ்தீனிய பிரச்சினைக்கும் சற்றும் குறைவில்லாத வரலாற்று காயங்களை இலங்கை கொண்டிருக்கிறது.முந்தைய நாடுகள் எல்லாம் ஏதாவது ஒரு வழியில் தங்கள் பிரச்சினை தீர்வுக்கான நிலப்பங்கீடுக்கான சூழல்கள் இருக்கும் போது இனத்தால்,மொழியால் மாறுபட்டிருக்கும் இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?2.7 ஏக்கரே சமாதானாத்துக்கு பிரிக்கப்படும் போது இரு இனமும் சம உரிமையோடு தங்கள் கலாச்சாரப்படி வாழ இலங்கையைப் பிரிப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?முன்பு ராமன் பின்பு பாபர் இருவருமே நூற்றாண்டுகள் கழித்து பங்காளிகளாகும் போது ஈழத்தமிழனும், சிங்களவனும் ஏன் பங்காளியாக முடியாது?வழிகள்?