Followers

Friday, August 12, 2011

ஜெயலலிதா 100க்கு எத்தனை மார்க்?

 2011ம் வருட சட்டசபை தேர்தலின் வெற்றியில் தி.மு.க தரப்பில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத இன்னுமொரு வாய்ப்பு அ.தி.மு.கவுக்கு அமையுமா என்ற கேள்வியுடன் 100 நாட்களுக்கான அ.தி.மு.க வின் ஆட்சியை விமர்சனம் செய்யும் நேரம் வந்து விட்டது.பல முறை கருத்துக்கள் வெளியிட கை பரபரத்தும் நிகழ்வுகளின் அடிப்படையில் கருத்து சொல்லாமல் வெறுமனே விமர்சிக்கலாமென நினைப்பது சரியாக இருக்காது.என்னைப் பொறுத்த வரையில் முந்தைய தி.மு.க மீதான கோபம் மலை தூக்கும் வல்லமையுடைவன் மலை முழுங்கி மகாதேவனாகப் போனதிலான ஈழப்பிரச்சினையில் திசை திருப்பியதில் துவங்கியதே எனலாம்.இதன் மீதான எதிர்வினைகளைத் தொடர்ந்து தி.மு.க மீளமுடியாத சாக்கடைக்குள் சிக்கிக்கொண்டுள்ளதை பத்திரிகை ஊடகங்களும்,பதிவுலகமும் படம் போட்டுக் காண்பித்தன.எனவே தி.மு.க மீதான விமர்சனம் பல தி.மு.க சார்பு நிலையாளர்களுக்கும் அ.தி.மு.க என்ற அமைப்பு என்று சொல்வதை விட ஜெயலலிதா சார்பாளர்கள் தி.மு.க மீது சேறை வாரி இறைக்கிறார்கள் என்ற கோபத்தையே உண்டாக்கியிருக்கும்.


மடங்கள் போலவே தி.மு.க இயக்கமும் மாறிப்போனதை விமர்சிக்காதவன் பகுத்தறிவுள்ள தி.மு.க சார்பு நிலையாளனாக இருக்க முடியாது.தன்னை தி.மு.க காரன் என்று இன்னும் பிரகடனப்படுத்திக் கொள்பவர்கள் தி.மு.க இயக்கத்தில் மந்திரி ஏனைய பதவிகள் மற்றும் ஏதாவது ஒரு விதத்தில் பலனடைந்தும்,எந்த பலனும் அடையாமல் தொண்டன் என்ற நிலையில் தி.மு.க இயக்கத்தை நேசித்து பட்டா எழுதிக்கொடுத்த வட்டத்துக்குள் வருபவர்களாகவே இருக்க முடியும்.எத்தனை ஆண்டுகள்,எத்தனை மனிதர்களின் உழைப்பும்,சமூகம் சார்ந்த மாற்றங்களும்!கடந்த ஐம்பது ஆண்டுகள் தமிழக வரலாற்றிலும்,வளர்ச்சியிலும் தி.மு.க என்ற இயக்கத்துக்கு நிறையவே பங்குண்டு.கூடவே சுயநலங்களால் விளைந்த பக்க விளைவுகளாய் மனிதர்களை காவு கொடுத்தலும் ஆரிய,திராவிட,மலையாளி பிரித்தலும்,லஞ்சத்தின் உச்சங்களும்,சுயநலத்தின் திசை திருப்புதலாய் மாற்றுக்கட்சிக்காரன் என்ற வெறுப்புணர்வும் அடங்கியதே எனலாம்.

ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழர்களின் அரசியல் விழிப்புணர்ச்சியும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றே என்ற போதிலும் சாய்ந்தால் சாயும் மாடுகள் மாதிரியான கட்சி என்ற வட்டத்துக்குள் மட்டுமே சிந்திப்பது என்ற ஒற்றைப் பார்வையினாலே அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றும் சூழல்களே உருவாகின எனலாம்.

ஜெ அரசு பற்றி சொல்வதற்கு முன் தி.மு.க என்ற பார்வையை முன் வைப்பதற்கு காரணம் தி.மு.க இயக்கமாக இயங்கிய போதும் கருணாநிதி, எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என்ற  மூன்று தனிமனித ஆளுகைக்கு உட்பட்டே தமிழக அரசியல் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறதெனலாம்.கருணாநிதி தனது சுய உழைப்பால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட அதே வேளை எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என்ற தனி மனிதர்களையும் வளர்த்து விட்ட பெருமை கருணாநிதிக்கே சாரும்.ஜெயலலிதாவையும் கூட மக்கள் எப்படி ஆட்சி பீடம் வரை கொண்டு வருகிறார்கள் என்றே எனது முந்தைய பார்வையாக இருந்தது:).இன்னும் கூட ஒரு முழுமையான அரசியல்வாதியா என்ற சந்தேகத்துக்கும் காரணம் அவரது மூன்று கால் முயல் சுபாவம்.தமிழக,இந்திய கால சூழ்நிலைகளும்,சராசரி மனிதர்களும்,கருணாநிதியும் மட்டுமே ஜெயலலிதாவின் வெற்றிக்கு பங்காளிகள்.

தனது கடந்த கால அரசியலில் ஜெயலலிதா தற்போது பாடங்கள் கற்றுக்கொண்டதாகவே தெரிகிறது.இல்லையென்றால் 90 டிகிரி நிலைப்பாட்டிலிருந்து 180 டிகிரிக்கு சோமர்செட் டைவ் அடிக்கும் சாத்தியமேயில்லை.கூடவே வயது, அனுபவத்திற்கேற்ற மெச்சூரிட்டியும் இருப்பதை மறுப்பதற்கில்லை.இலவசங்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்தே திரும்ப கொடுக்கப்படுவதால் கருவூலத்தின் பணம் பெரும் திட்டங்களுக்கு உதவ இயலாமல் நெல்லுக்கு நீர் என சொல்லி புல்லுக்கும் பாயும் வித்தைகளுடன் உலக வங்கி கடன் வாங்கி அதன் வட்டியையும், மக்களே சுமக்க வேண்டிய நிலைகளை இரண்டு கழக ஆட்சிகளுமே ஊக்குவிக்கின்றன.இது ஒரு சுழல் வட்டம்.இதனை சுழற்சியிலிருந்து மாற்று அரசியல் இல்லாத வரை தமிழகம் இதனை சுமந்து கொண்டே திரிய வேண்டியுள்ளது.

எந்த ஆயுதத்தை தேர்ந்தெடுப்பது என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்ற வாக்கியங்கள் ஜெயலலிதாவுக்கும் பொருந்தும் என்பதால் முந்தைய தி.மு.க வின் இலவச திட்டங்களுக்கு எதிர்க்கணை என்ற விதத்தில் ஜெயலலிதாவின் யுக்தியும்,வெற்றிக்குப் பின் வாக்குறுதிகளை செயல்படுத்தும் விதம் பாராட்டுக்குரியது.

ஹிந்து பத்திரிகை கடந்த சில தினங்களுக்கு முன் புதிய சட்டசபையை என்ன செய்யலாம் என்று மக்கள் கருத்தை கேட்கும் விதத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.கூடவே படங்களும்.ஜெர்மன் கட்டிடக்கலை நிறுவனமான http://www.gmp-architekten.de/en/projects.html அப்படியொன்றும் 2G ஸ்வான் கம்பெனி மாதிரி டுபாக்கூர் நிறுவனமல்ல. பல உலக நிறுவன கட்டிடங்களைக் கட்டி முடித்து தனது பெயரை தக்க வைத்துக்கொண்டுள்ள நிறுவனம்.இதனை தேர்ந்தெடுத்த அரசு அதிகாரிகளும்,ஆலோசனையாளர்களும், முக்கியமாக கருணாநிதியும் பாராட்டுக்குரியவர்களே.ஆனால் தி.மு.க அரசு எதிர்பார்த்த கட்டிட கனவுக்கும் கிடைத்ததோ பதிவர் கோவி கண்ணன் தமிழக சட்டசப்பை குறித்து சொன்னது போல் எண்ணை சட்டிக்கும் நிறையவே வித்தியாசம்.இன்னும் புரிதலுக்கும்,ஜெயலலிதாவின் நிலைப்பாடு சரியா தவறா என்ற விவாதத்திற்கும் இடமளிக்கும் என்பதால் சட்டசபை கட்டிடம் குறித்து தனியாகவே ஒரு பதிவிடுவது நல்லது.
                                                       நினைச்சது ஒண்ணு!

பாஞ்சாலி சபதம் மாதிரி புதிய சட்டசபைக்குள் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்ற கட்டிட வேலை நேரத்திலேயே ஜெயலலிதா சூளுரைத்த காரணத்தால் சமச்சீர் கல்வி மாதிரியான பிடிவாதமா அல்லது ஜெயலலிதாவின் வாதப்படி சட்டசபை கட்டுவதில் தில்லுமுல்லுகள் என்பது சரியா எனபதையும்,தேன் எடுத்தவன் கையை நக்காமல் விடமாட்டான் என்ற கருணாநிதியின் முந்தைய காலத்து கூற்றுப்படி தேன் தொட்ட கையை நக்கிய சாத்தியங்களும் இருக்கலாம் என நம்பலாம். சமச்சீர் கல்வி மாதிரி உச்சநீதிமன்றம் மட்டுமே தீர்ப்பை வழங்க இயலும்.
                                                      கிடைச்சது ஒண்ணு!
            
இப்போதைய  நில அபகரிப்பு என்ற பெயரில் தி.மு.க சார்ந்தவர்கள் கைது படலங்கள் மேலும் அதிர்ச்சியையே தமிழக மக்களுக்கு வழங்குகிறது.தி.மு.க தோல்விகளின் திசை திருப்பும் படலமாகவே சிறை நிரப்புவோம் கோசம் ஒலிக்கிறது எனலாம்.எல்லோர் மீதும் பொய்க்குற்றம் சாட்டி கைது செய்து விட முடியாது.எனவே தவறு செய்தவர்கள் களி தின்னட்டுமென்றே மக்கள் நினைப்பார்கள்.

ஜெயலலிதாவுக்கு எதிரி ஜெயலலிதாவே என்பதை சமச்சீர் கல்வி விசயத்தில் நிருபித்திருக்கிறார்.துவண்டு போயிருந்த கருணாநிதிக்கு வைட்டமின் மாத்திரை கொடுத்து உசுப்பி விட்டிருக்கிறார்.விடுதலைப்புலிகள் இல்லாமல் ஈழப்போராட்டமா?முந்தைய ஜெயலலிதாவின் ஈழம் குறித்த அணுகுமுறை ஆலோசனை குரு சோ வின் அணுகுமுறையைச் சார்ந்தது.முந்தைய ஜெயலலிதாவின் ஈழம் குறித்த அணுகு முறையில் தவறுகள் உண்டு என்பதும் தமிழக அரசியலில் ஈழ விடுதலைப் பின்தள்ளப்பட்டதற்கும்,திசை மாறிப்போனதற்கும் ஜெயலலிதாவும் ஒரு காரணி என்பதை மறுப்பதற்கில்லை.ஆனால் புதிய மனுசியாக ஈழம்,இலங்கை குறித்த அவரது நடவடிக்கைகள்,கருணாநிதிக்கு வைக்கும் செக்மேட் என்று கருதுவதா அல்லது போரின் துயரங்களின் காணொளிகள் கண்டு மனம் மாற்றம் அடைந்துள்ளாரா என்பது இன்னும் வினாக்குறியே.
 
சட்டசபை தீர்மானங்கள் தி.மு.கவின் காலத்திலேயே கூட நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.இப்பொழுதும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இரண்டு தீர்மானங்களுக்குமுள்ள வித்தியாசங்கள் தி.மு.கவின் தீர்மானங்கள் கருணாநிதிக்கு பயத்தை தந்தது. அ.தி.மு.கவின் தீர்மானம் ராஜபக்சேக்களுக்கு பயத்தை தருகிறது.டெல்லிக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்ற அறிக்கையை விட தமிழகத்தில் உள்ள அகதிகளுக்கும் ஓய்வூதியம் என்ற அறிக்கை உலக தமிழர்களை மகிழ்ச்சியில் திளைத்தது எனலாம்.தன்னை எதிர் கால வரலாற்றில் பதித்துக்கொள்ள வேண்டுமென திட்டமிட்டு ஒவ்வொரு கட்டிடங்களையும்  கருணாநிதி எழுப்பியும் வரலாற்றுக் கறையாக ஈழப்பிரச்சினையில் துவக்கம் முதல் சார்பு நிலையிலிருந்தும் ஆட்சி பறிபோன பரிதாப நிலையிலிருந்தும் மாறி துரோகி என்ற முத்திரையை இறுதியில் பதித்துக்கொண்டார்.

தமிழக வரலாற்றிலும்,இந்திய,உலக வரலாற்றிலும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் வாய்ப்பு ஜெயலலிதாவிற்கு தமிழீழ மக்களின் உரிமையை மீட்டுத்தருவதற்கான அஸ்திவாரத்தை காலம் தந்திருக்கிறது.இதனைப் பயன்படுத்திக்கொள்வது ஜெயலலிதாவின் கரங்களில் உள்ளது.அந்த திசையில் பயணம் செய்வார் என்பதற்கு நம்பிக்கையாக முந்தா நாள் ஹெட்லைன்ஸ் டுடேவுக்கு கோத்தபய ராஜபக்சே கொடுத்த பேட்டியில் Jayalalitha trying to get a political milage என்பதற்கு, எங்கே குத்தினால் கோத்தபயலுக்கு வலிக்கும் என்று மத்திய அரசின் செயல்படாற்ற நிலையால்தான் கோத்தபய தமிழக அரசின் தீர்மானத்தை கேலி செய்வதாகவும் இந்திய தூதரகம் மூலம் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்றும் குரல் எழுப்பியுள்ளார்.கூடவே ஈழத்தமிழ் மக்களுக்கான சம உரிமை வாழ்க்கையைப் பெற்றுத்தராமல் தனது தலைமையிலான அரசு ஓயாது என்ற சட்டசபை அறைகூவலும்.இதனை ராஜபக்சே பணிவிடையாளன் ஹிந்துப் பத்திரிகை தலைப்புச் செய்தியிடுவது இன்னும் ஆச்சரியம்!

குறைகள் இல்லாத மனிதனா?விமர்சனம் இல்லாத அரசியலா? சமச்சீர் கல்விக்கு 15 மதிப்பெண்களை குறைத்து விட்டு ஜெயலலிதா வாங்கும் மதிப்பெண் 100/85%

பொறுப்பி: நல்லாப் படிச்சதுக்கு மட்டுமே பாஸ் மார்க் கொடுக்கப் பட்டிருக்கிறது.நல்லா ஆப்படிச்சதுக்கு கொடுக்கப்பட்ட மார்க் என  மாத்தி வாசிச்சு  பக்கத்து பெஞ்சிலிருந்து தி.மு.க சார்பாளர்கள் முருங்கை மரம் ஏறிக்கொண்டால் விமர்சக வகுப்பு வாத்தியார் பொறுப்புக் கிடையாது:)   

Thursday, August 11, 2011

அப்சல் குருவின் தூக்குத்தண்டனை

வாஜ்பாய் அரசின் பி.ஜே.பி காலத்து சம்பவங்களில் பொக்ரான் அணுகுண்டு சாதனைக்கு மாற்றாக ஜனநாயக தோல்விகளில் முக்கியமானவைகளில் இரண்டு தலிபான்களால் December 24, 1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814  ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டதும்,13 December 2001ல் இந்திய பாராளுமன்றத் தாக்குதலும் எனலாம்.

இந்திய பாராளுமன்றத் தாக்குதலில் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2004ம் வருடம் உச்சநீதி மன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முகமது அப்சல் எனும் அப்சல் குரு மரண தண்டனை October 20, 2006ல் நிறைவேற்றப்பட்டு  அவரது மனைவியின் கருணை மனு ஜனாதிபதியின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்திய உள்துறை அமைச்சகம் அப்சல் குருவின் கருணை மனுவை ஏற்க வேண்டாம் என கூறியுள்ளது.இதில் இந்திய உள்துறையின் உள்குத்து வேலையில் முக்கியமானது என்னவென்றால்  June 23, 2010ல் ஜனாதிபதிக்கு அப்சல் கருணை மனுவை ஏற்கவேண்டாம் என்ற சிபாரிசை January 7, 2011ல் விக்கிலீக்ஸ் மாதிரி indianleaks.in வெளிப்படுத்திய அப்சல் குருவின் பைல் ஜனாதிபதியிடம் வந்து சேரவேயில்லையென்பதைக் கண்டு பிடித்த பின் நம்ம சிதம்பரம்  Feb 23, 2011ல் அது உண்மைதான் என ஏற்றுக்கொண்டார்.இப்பொழுது மீண்டும் August 10, 2011ல் மீண்டும் சிதம்பரம் தலைமையிலான உள்துறையே ஜனாதிபதிக்கு இதனை வலியுறுத்துகிறது.இதே போன்ற உள்குத்து வேலைகள் நளினியின் தண்டனைக்காலம் முடிந்தும் கடந்த தி.மு.க ஆட்சியில் தமிழக உள்துறையால் செயல்படுத்தப்பட்டது என்பதும் இங்கே நினைவுக்கு வருகிறது.

ஒருவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் அரசு செலவில் பாதுகாத்த பின்பும் மரண தண்டனை நிறைவேற்றுவது என்பது காலம் கடந்த செயலாகவே கூறலாம்.அரசியல் சார்ந்த இதுபோன்ற மரண தண்டனைகள் காந்தி-கோட்சே போன்ற லெகசியை மட்டுமே எதிர்காலத்தில் பதிவு செய்யும்.

கருணை மனுவை ஏற்று அப்சல் குரு விடுவிக்கப்படுவது எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற நிகழ்வு நடப்பதற்கும்,அதிலிருந்து தப்புவதற்கு வாய்ப்பான முன்மாதிரியாகவும் அமைந்து விடக்கூடும்.


இரண்டுமே சரியானதல்ல எனும்பட்சத்தில் வாழும் வரை அரசு செலவிலே இருந்து விட்டுப்போகட்டும் என்பதும் குற்றங்கள் செய்து சிறை நிரப்பும்!!! நிகழ்வாகவே அமைந்து விடும்.

மேற்கூறிய காலம் கடந்த மரணதண்டனை,கருணை மனு,வாழ்ந்து விட்டுப் போகட்டும் என்ற மூன்று நிலைகள் மிகவும் சிக்கலானவை.இவற்றிற்கு குற்றங்களின் அடிப்படையில் மட்டுமே உச்சநீதி மன்றம் மூன்று நிலைகளில் எது சரியானது என்ற தீர்ப்பை வழங்க முடியும்.

ஒரு மனிதன் செய்த குற்றத்திலிருந்து இன்னொரு மனிதன் பாடம் கற்றுக்கொள்வதே இல்லை.இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று குற்றம் சுமத்தப்பட்டவர் மீதான குற்றமே முன்வைக்கப் படுவதாலா என்பதும் குற்றம் செய்தவரின் மனக்குரலையும் சரியாக பதிவு செய்து வைக்காமல் போகும் மனபாவங்களும் ஒருவரின் குற்றத்திலிருந்து ஆளும் அரசோ அல்லது சமூகமோ பாடங்களைக் கற்றுக்கொள்வதுமில்லை.இப்போதைய நிலையில் அப்சல்,நளினி போன்றவர்களின் மனநிலைகள் எப்படியிருக்குமென்ற உண்மைகள் எதுவும் சமூகத்திற்கு வெளிப்படுவதேயில்லை.

காந்தியின் துப்பாக்கி சூடு முன்வைக்கப் ப்ட்ட அளவுக்கு கோட்சேயின் பக்கத்து நியாயம் என்ன என்பதெல்லாம் சுதந்திர இந்தியாவில் மறைக்கப்பட்ட உண்மைகளாகவும் இணைய தள தகவல் பரிமாற்றங்களுக்குப் பின்பே கோட்சேயின் குரலும் கூட கேட்க ஆரம்பிக்கின்றன.அதே போல் அப்சல்,நளினி போன்றவர்களின் குரலும் கூட காலம் கடந்தே கேட்கப்படுமா என்ற கேள்வியும் வருவதை தவிர்க்க இயலவில்லை.

குற்றங்கள் குறைந்த நாடுகள் என பறைசாற்றப் பட்ட நார்வே,லண்டன் போன்ற தனி மனித,குழு மனித மனித கோபங்களுக்கு காரணமென்ன என்பதும் இங்கே கேள்விக்குறியே. 




 

Tuesday, August 9, 2011

டைம்ஸ்க்கு அடுத்த ஹெட்லைன்ஸ் வாக்கெடுப்பு.

பதிவர்களே! ஆங்கில ஊடகங்கள் இலங்கை குறித்த பார்வையை செலுத்துவது வரவேற்க தக்கது. டைம்ஸ் பத்திரிகைக்கான வாக்கெடுப்பு சந்தர்ப்பத்திற்கு பின் நமக்கு ஹெட்லைன்ஸ் ஒரு அழகான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடேயின் முகப்பின் இடது புறத்தில் பெரிய கேள்வி -THE BIG QUESTION  என்ற பெயரில்  இந்த இணைப்பில்   வாக்கெடுப்பு க்ளிக் உள்ளது.
Should the Rajapakse brothers be tried for war crimes? என்ற வாக்கெடுப்புக்கு இது வரை 4124 மொத்த வாக்காளர்களில் 96.85% Yes என்ற நிலையில் உள்ளது.கணினி உபயோகிப்பாளர்கள் இந்தியாவிலும்,உலக அரங்கில் ஹெட்லைன்ஸ் டுடே பார்வையிடுபவர்களும் இன்னும் அதிகம்.டைம்ஸ் போல் அல்லாது நியாயமான முறையில் ராஜபக்சே சார்பு நிலையாளர்களும் கூட வாக்களிப்பதை வரவேற்கிறேன்.

அதிக எண்ணிக்கை மூலமும் விகிதாச்சாரங்களின் அடிப்படையில் மட்டுமே இணையம் சார்ந்த ராஜபக்சே சார்பு/எதிர் நிலைகளைக் கணிக்க இயலுமென்பதோடு தமிழீழம் குறித்த விழிப்புணர்வுக்கும் இதனை கொண்டு செல்லும்.உங்கள் வாக்குகளை க்ளிக் செய்யுங்கள்.இயன்றவர்கள் ஆங்கில பின்னூட்டங்களையும்  இங்கே  மற்றும் இங்கே  பின்னூட்டமிடுங்கள்.நன்றி.

Tuesday, August 2, 2011

இந்திய ஜனநாயகத்தின் தரம்

உடல் சைஸ் பெருசாக இருப்பது மட்டுமே மதிப்புன்னா ராஜபக்சே கூட உலகத்தின் தலைசிறந்த ஜனாதிபதிதான்:)இந்திய ஜனநாயகம் கூட அப்படித்தான். ஒரு மூட்டை பொரி கடலைக்கும் ஒரு சவரன் தங்கத்துக்குமிடையே இருக்கும் அளவு,விலைக்குமிடையே இருக்கும் வித்தியாசம்தான் இந்திய ஜனநாயகத்துக்கும் உண்மையான உலக ஜனநாயகத்துக்குமிடையே உள்ள வித்தியாசங்கள்.உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக்கொள்ளும் இந்தியா கொள்ளவில் பொரிகடலை மாதிரி அதிகமாக இருந்தாலும்  தரம் எடையில் ஏனைய உலக ஜனநாயகத்தின் தரத்தை விட குறைவாகவே இருக்கிறது.

ஒரே ஆறுதல் தங்கமில்லாமல் இருந்து விடலாம்.பொரிகடலை சாப்பிட்டாவது உயிர்வாழ்ந்து விடலாம்ங்கிற மாதிரி இந்தியாவின் பல்வேறு பட்ட மக்களின் இணைப்பால்தான் இந்திய ஜனநாயகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது.ஆனால் அதற்கெல்லாம் வேட்டு வைக்கும் விதமாகவே காங்கிரஸ் ஆட்சியில் இந்திய ஜனநாயகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.ஆட்டைக் கடிச்சு,மாட்டைக் கடிச்சு கடைசில மனுசனக் கடிக்கிற பழமொழி மாதிரி கோவையில் இராணுவ வண்டியை மறித்து எதிர்ப்புக் காட்டியும்,ராணுவ பயிற்சி கொடுத்து,கோயில் சுற்ற வைத்து,விளையாட்டைக் கண்டு களிக்க வைத்து,சிவப்புக் கம்பளம் கொண்டு நடக்க வைத்து கடைசியாக பாராளுமன்றத்திலே இலங்கைக்காரனை பார்வையாளனாக வைத்து தமிழர்களின் உணர்வுகளுக்குப் புறம்பான, ஜனநாயகத்திற்கு புறம்பான போர்க்குற்றத்துக்கு துணைபுரியும் காங்கிரஸின் ஜனநாயக முகமூடி செயல்களுக்கு பஞ்சாப்,வங்காளம் போன்று இன்னுமொரு மாநிலமாக இருந்தால் நிச்சயம் வன்முறைக் கலாச்சாரத்தின் விதைகள் விதைக்கப்பட்டே இருக்கும்.அந்த விதத்தில் தமிழனின் இதுவரையிலான பொறுமைக்கு வந்தனம் செய்யலாம். கூடவே தமிழகத்தில் போராட வேண்டியவன் நில அபகரிப்புக்களை செய்பவனாய்,சுயம் விரும்பியாய் தன் தேவைக்கே கொடியேந்துபவனாய் இருந்து விட்டதும் கூட மத்திய அரசின் மொத்த சீண்டலுக்குமான காரணமெனலாம்.தமிழகம் இன்னும் ஆபத்துக்கான பாதையிலே பயணிக்கும் வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பி.ஜே.பி என்ற மதவாதியை விட செக்குலர் முகமூடி போட்டுக்கொண்ட தமிழர்களின் உணர்வுக்குப் புறம்பான காங்கிரஸ்காரன் ஆபத்தானவன்.ராசா ஊதும் மன்மோகன்,சிதம்பரம் ஊழல் சங்கு அடுத்த தேர்தலுக்கு காங்கிரஸ்க்கு சங்கு ஊதும் என்பது நிச்சயம் என்பது மட்டுமே தற்போதைக்கான ஆறுதல்.

ஊடகப் பதிவர் சிவா சின்னப்பொடிக்கு...

சிவா அவர்களுக்கு!

உங்களை நேற்று ஜீ.டிவியின் செய்தி பார்வை நிகழ்ச்சியில் காண நேர்ந்தது.நேற்று பதிவுலகில் வெளியாகிய அமெரிக்கா திவாலாகுமா என்ற பதிவின் சாரம் பற்றி சொல்லப்பட்டதைக் கண்டேன்.சில நேரங்களில் இணைப்புக் கிடைத்தும் சில நேரங்களில் Scrambled எனவும் வருவதற்கு காரணம் பெரும்பாலும் எனது ரீசிவரின் கோளாறாகவே இருக்குமென நினைக்கின்றேன்.நீங்களும் நீங்கள் இணைந்த ஊடகக் குழுவினர்,செய்தி வாசிப்பாளர்கள் தமிழக செய்தி அலசல்களிலிருந்து மாறுபட்டு செய்திப் பகிர்வைத் தருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.இதற்கான உழைப்பின் சிறு பகுதியையாவது ஏன் நீங்கள் உங்கள் பதிவில் கொண்டு வருவதில்லை?ஏனைய செய்திகளின் காபி பேஸ்ட்டை மட்டுமே ஏன் உங்கள் பதிவில் முன் வைக்கிறீர்கள்?முக்கியமாக தி.மு.க மற்றும் தமிழகம் சார்ந்த செய்தி விமர்சனங்களுக்கும் தகவல்களுக்கும் உங்களை விட தமிழகத்திலிருந்து பகிர்வு செய்ய நிறைய பேர் இருக்கிறார்களே?

பதிவுகள் என்பது கருத்து வெளியீடும் பரிமாறல்களுக்குமான சமூக பரிவர்த்தனைக்கான  தளம்.ஒரு பொதுவெளி ஊடகத்திலிருந்து கொண்டு உங்களால் அந்தப்பணியை இன்னும் நிறைவாக செய்ய இயலும் நிலையில் வெறும் காப்பி பேஸ்ட் மட்டும் செய்வது உங்கள் நிலை சார்ந்த ஊடகப் பணிகளுக்கும் நிலம்,புலம் மற்றும் தமிழக இணைய பார்வையாளர்களுக்கு என்ன நன்மையை செய்து விட முடியுமென்று புரியவில்லை.எந்த வித பின்புலமும் இல்லாமல் டைம்ஸ் பத்திரிகை வரை குரல் கொடுக்கும் பதிவர்கள் இருக்கும் போது உங்களுக்கான இணையம் இணைந்த பணி இன்னும் சிறப்பாக இருக்க வேண்டுமென நினைக்கின்றேன்.

உங்கள் தளத்தில்  யாருக்கும் பின்னூட்ட மறுமொழி சொல்வதாகக் காணோம். இல்லையென்றால் உங்கள் தளத்திலேயே இதனை பேசி முடித்துக் கொண்டிருக்கலாம்:)இதனை பதிவாக பொதுவில் வைக்க வேண்டிய அவசியம் கூட இருந்திருக்காது.

ஏனையவர்களின் கருத்துரிமைகளில் தலையிடுவதில் எனக்கு விருப்பமில்லையென்ற போதிலும் விதிவிலக்காக உங்கள் பதிவுகள் பற்றி கருத்து தெரிவிப்பதன் காரணம் உங்கள் தளத்தின் ஆற்றல் இன்னும் அதிகமாக வெளிப்பட வேண்டுமென்ற நல்ல எண்ணத்தால் மட்டுமே.தமிழகத்தையும், பதிவர்களையும்,நிலம்,புலம்பெயர் தமிழர்களையும் இணைக்கும் வகையில் பதிவுகள் செய்து செயல்படுங்கள்.நன்றி.