2011ம் வருட சட்டசபை தேர்தலின் வெற்றியில் தி.மு.க தரப்பில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத இன்னுமொரு வாய்ப்பு அ.தி.மு.கவுக்கு அமையுமா என்ற கேள்வியுடன் 100 நாட்களுக்கான அ.தி.மு.க வின் ஆட்சியை விமர்சனம் செய்யும் நேரம் வந்து விட்டது.பல முறை கருத்துக்கள் வெளியிட கை பரபரத்தும் நிகழ்வுகளின் அடிப்படையில் கருத்து சொல்லாமல் வெறுமனே விமர்சிக்கலாமென நினைப்பது சரியாக இருக்காது.என்னைப் பொறுத்த வரையில் முந்தைய தி.மு.க மீதான கோபம் மலை தூக்கும் வல்லமையுடைவன் மலை முழுங்கி மகாதேவனாகப் போனதிலான ஈழப்பிரச்சினையில் திசை திருப்பியதில் துவங்கியதே எனலாம்.இதன் மீதான எதிர்வினைகளைத் தொடர்ந்து தி.மு.க மீளமுடியாத சாக்கடைக்குள் சிக்கிக்கொண்டுள்ளதை பத்திரிகை ஊடகங்களும்,பதிவுலகமும் படம் போட்டுக் காண்பித்தன.எனவே தி.மு.க மீதான விமர்சனம் பல தி.மு.க சார்பு நிலையாளர்களுக்கும் அ.தி.மு.க என்ற அமைப்பு என்று சொல்வதை விட ஜெயலலிதா சார்பாளர்கள் தி.மு.க மீது சேறை வாரி இறைக்கிறார்கள் என்ற கோபத்தையே உண்டாக்கியிருக்கும்.
மடங்கள் போலவே தி.மு.க இயக்கமும் மாறிப்போனதை விமர்சிக்காதவன் பகுத்தறிவுள்ள தி.மு.க சார்பு நிலையாளனாக இருக்க முடியாது.தன்னை தி.மு.க காரன் என்று இன்னும் பிரகடனப்படுத்திக் கொள்பவர்கள் தி.மு.க இயக்கத்தில் மந்திரி ஏனைய பதவிகள் மற்றும் ஏதாவது ஒரு விதத்தில் பலனடைந்தும்,எந்த பலனும் அடையாமல் தொண்டன் என்ற நிலையில் தி.மு.க இயக்கத்தை நேசித்து பட்டா எழுதிக்கொடுத்த வட்டத்துக்குள் வருபவர்களாகவே இருக்க முடியும்.எத்தனை ஆண்டுகள்,எத்தனை மனிதர்களின் உழைப்பும்,சமூகம் சார்ந்த மாற்றங்களும்!கடந்த ஐம்பது ஆண்டுகள் தமிழக வரலாற்றிலும்,வளர்ச்சியிலும் தி.மு.க என்ற இயக்கத்துக்கு நிறையவே பங்குண்டு.கூடவே சுயநலங்களால் விளைந்த பக்க விளைவுகளாய் மனிதர்களை காவு கொடுத்தலும் ஆரிய,திராவிட,மலையாளி பிரித்தலும்,லஞ்சத்தின் உச்சங்களும்,சுயநலத்தின் திசை திருப்புதலாய் மாற்றுக்கட்சிக்காரன் என்ற வெறுப்புணர்வும் அடங்கியதே எனலாம்.
ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழர்களின் அரசியல் விழிப்புணர்ச்சியும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றே என்ற போதிலும் சாய்ந்தால் சாயும் மாடுகள் மாதிரியான கட்சி என்ற வட்டத்துக்குள் மட்டுமே சிந்திப்பது என்ற ஒற்றைப் பார்வையினாலே அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றும் சூழல்களே உருவாகின எனலாம்.
ஜெ அரசு பற்றி சொல்வதற்கு முன் தி.மு.க என்ற பார்வையை முன் வைப்பதற்கு காரணம் தி.மு.க இயக்கமாக இயங்கிய போதும் கருணாநிதி, எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என்ற மூன்று தனிமனித ஆளுகைக்கு உட்பட்டே தமிழக அரசியல் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறதெனலாம்.கருணாநிதி தனது சுய உழைப்பால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட அதே வேளை எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என்ற தனி மனிதர்களையும் வளர்த்து விட்ட பெருமை கருணாநிதிக்கே சாரும்.ஜெயலலிதாவையும் கூட மக்கள் எப்படி ஆட்சி பீடம் வரை கொண்டு வருகிறார்கள் என்றே எனது முந்தைய பார்வையாக இருந்தது:).இன்னும் கூட ஒரு முழுமையான அரசியல்வாதியா என்ற சந்தேகத்துக்கும் காரணம் அவரது மூன்று கால் முயல் சுபாவம்.தமிழக,இந்திய கால சூழ்நிலைகளும்,சராசரி மனிதர்களும்,கருணாநிதியும் மட்டுமே ஜெயலலிதாவின் வெற்றிக்கு பங்காளிகள்.
தனது கடந்த கால அரசியலில் ஜெயலலிதா தற்போது பாடங்கள் கற்றுக்கொண்டதாகவே தெரிகிறது.இல்லையென்றால் 90 டிகிரி நிலைப்பாட்டிலிருந்து 180 டிகிரிக்கு சோமர்செட் டைவ் அடிக்கும் சாத்தியமேயில்லை.கூடவே வயது, அனுபவத்திற்கேற்ற மெச்சூரிட்டியும் இருப்பதை மறுப்பதற்கில்லை.இலவசங்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்தே திரும்ப கொடுக்கப்படுவதால் கருவூலத்தின் பணம் பெரும் திட்டங்களுக்கு உதவ இயலாமல் நெல்லுக்கு நீர் என சொல்லி புல்லுக்கும் பாயும் வித்தைகளுடன் உலக வங்கி கடன் வாங்கி அதன் வட்டியையும், மக்களே சுமக்க வேண்டிய நிலைகளை இரண்டு கழக ஆட்சிகளுமே ஊக்குவிக்கின்றன.இது ஒரு சுழல் வட்டம்.இதனை சுழற்சியிலிருந்து மாற்று அரசியல் இல்லாத வரை தமிழகம் இதனை சுமந்து கொண்டே திரிய வேண்டியுள்ளது.
எந்த ஆயுதத்தை தேர்ந்தெடுப்பது என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்ற வாக்கியங்கள் ஜெயலலிதாவுக்கும் பொருந்தும் என்பதால் முந்தைய தி.மு.க வின் இலவச திட்டங்களுக்கு எதிர்க்கணை என்ற விதத்தில் ஜெயலலிதாவின் யுக்தியும்,வெற்றிக்குப் பின் வாக்குறுதிகளை செயல்படுத்தும் விதம் பாராட்டுக்குரியது.
ஹிந்து பத்திரிகை கடந்த சில தினங்களுக்கு முன் புதிய சட்டசபையை என்ன செய்யலாம் என்று மக்கள் கருத்தை கேட்கும் விதத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.கூடவே படங்களும்.ஜெர்மன் கட்டிடக்கலை நிறுவனமான http://www.gmp-architekten.de/en/projects.html அப்படியொன்றும் 2G ஸ்வான் கம்பெனி மாதிரி டுபாக்கூர் நிறுவனமல்ல. பல உலக நிறுவன கட்டிடங்களைக் கட்டி முடித்து தனது பெயரை தக்க வைத்துக்கொண்டுள்ள நிறுவனம்.இதனை தேர்ந்தெடுத்த அரசு அதிகாரிகளும்,ஆலோசனையாளர்களும், முக்கியமாக கருணாநிதியும் பாராட்டுக்குரியவர்களே.ஆனால் தி.மு.க அரசு எதிர்பார்த்த கட்டிட கனவுக்கும் கிடைத்ததோ பதிவர் கோவி கண்ணன் தமிழக சட்டசப்பை குறித்து சொன்னது போல் எண்ணை சட்டிக்கும் நிறையவே வித்தியாசம்.இன்னும் புரிதலுக்கும்,ஜெயலலிதாவின் நிலைப்பாடு சரியா தவறா என்ற விவாதத்திற்கும் இடமளிக்கும் என்பதால் சட்டசபை கட்டிடம் குறித்து தனியாகவே ஒரு பதிவிடுவது நல்லது.
நினைச்சது ஒண்ணு!பாஞ்சாலி சபதம் மாதிரி புதிய சட்டசபைக்குள் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்ற கட்டிட வேலை நேரத்திலேயே ஜெயலலிதா சூளுரைத்த காரணத்தால் சமச்சீர் கல்வி மாதிரியான பிடிவாதமா அல்லது ஜெயலலிதாவின் வாதப்படி சட்டசபை கட்டுவதில் தில்லுமுல்லுகள் என்பது சரியா எனபதையும்,தேன் எடுத்தவன் கையை நக்காமல் விடமாட்டான் என்ற கருணாநிதியின் முந்தைய காலத்து கூற்றுப்படி தேன் தொட்ட கையை நக்கிய சாத்தியங்களும் இருக்கலாம் என நம்பலாம். சமச்சீர் கல்வி மாதிரி உச்சநீதிமன்றம் மட்டுமே தீர்ப்பை வழங்க இயலும்.
கிடைச்சது ஒண்ணு!இப்போதைய நில அபகரிப்பு என்ற பெயரில் தி.மு.க சார்ந்தவர்கள் கைது படலங்கள் மேலும் அதிர்ச்சியையே தமிழக மக்களுக்கு வழங்குகிறது.தி.மு.க தோல்விகளின் திசை திருப்பும் படலமாகவே சிறை நிரப்புவோம் கோசம் ஒலிக்கிறது எனலாம்.எல்லோர் மீதும் பொய்க்குற்றம் சாட்டி கைது செய்து விட முடியாது.எனவே தவறு செய்தவர்கள் களி தின்னட்டுமென்றே மக்கள் நினைப்பார்கள்.
ஜெயலலிதாவுக்கு எதிரி ஜெயலலிதாவே என்பதை சமச்சீர் கல்வி விசயத்தில் நிருபித்திருக்கிறார்.துவண்டு போயிருந்த கருணாநிதிக்கு வைட்டமின் மாத்திரை கொடுத்து உசுப்பி விட்டிருக்கிறார்.விடுதலைப்புலிகள் இல்லாமல் ஈழப்போராட்டமா?முந்தைய ஜெயலலிதாவின் ஈழம் குறித்த அணுகுமுறை ஆலோசனை குரு சோ வின் அணுகுமுறையைச் சார்ந்தது.முந்தைய ஜெயலலிதாவின் ஈழம் குறித்த அணுகு முறையில் தவறுகள் உண்டு என்பதும் தமிழக அரசியலில் ஈழ விடுதலைப் பின்தள்ளப்பட்டதற்கும்,திசை மாறிப்போனதற்கும் ஜெயலலிதாவும் ஒரு காரணி என்பதை மறுப்பதற்கில்லை.ஆனால் புதிய மனுசியாக ஈழம்,இலங்கை குறித்த அவரது நடவடிக்கைகள்,கருணாநிதிக்கு வைக்கும் செக்மேட் என்று கருதுவதா அல்லது போரின் துயரங்களின் காணொளிகள் கண்டு மனம் மாற்றம் அடைந்துள்ளாரா என்பது இன்னும் வினாக்குறியே.
சட்டசபை தீர்மானங்கள் தி.மு.கவின் காலத்திலேயே கூட நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.இப்பொழுதும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இரண்டு தீர்மானங்களுக்குமுள்ள வித்தியாசங்கள் தி.மு.கவின் தீர்மானங்கள் கருணாநிதிக்கு பயத்தை தந்தது. அ.தி.மு.கவின் தீர்மானம் ராஜபக்சேக்களுக்கு பயத்தை தருகிறது.டெல்லிக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்ற அறிக்கையை விட தமிழகத்தில் உள்ள அகதிகளுக்கும் ஓய்வூதியம் என்ற அறிக்கை உலக தமிழர்களை மகிழ்ச்சியில் திளைத்தது எனலாம்.தன்னை எதிர் கால வரலாற்றில் பதித்துக்கொள்ள வேண்டுமென திட்டமிட்டு ஒவ்வொரு கட்டிடங்களையும் கருணாநிதி எழுப்பியும் வரலாற்றுக் கறையாக ஈழப்பிரச்சினையில் துவக்கம் முதல் சார்பு நிலையிலிருந்தும் ஆட்சி பறிபோன பரிதாப நிலையிலிருந்தும் மாறி துரோகி என்ற முத்திரையை இறுதியில் பதித்துக்கொண்டார்.
தமிழக வரலாற்றிலும்,இந்திய,உலக வரலாற்றிலும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் வாய்ப்பு ஜெயலலிதாவிற்கு தமிழீழ மக்களின் உரிமையை மீட்டுத்தருவதற்கான அஸ்திவாரத்தை காலம் தந்திருக்கிறது.இதனைப் பயன்படுத்திக்கொள்வது ஜெயலலிதாவின் கரங்களில் உள்ளது.அந்த திசையில் பயணம் செய்வார் என்பதற்கு நம்பிக்கையாக முந்தா நாள் ஹெட்லைன்ஸ் டுடேவுக்கு கோத்தபய ராஜபக்சே கொடுத்த பேட்டியில் Jayalalitha trying to get a political milage என்பதற்கு, எங்கே குத்தினால் கோத்தபயலுக்கு வலிக்கும் என்று மத்திய அரசின் செயல்படாற்ற நிலையால்தான் கோத்தபய தமிழக அரசின் தீர்மானத்தை கேலி செய்வதாகவும் இந்திய தூதரகம் மூலம் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்றும் குரல் எழுப்பியுள்ளார்.கூடவே ஈழத்தமிழ் மக்களுக்கான சம உரிமை வாழ்க்கையைப் பெற்றுத்தராமல் தனது தலைமையிலான அரசு ஓயாது என்ற சட்டசபை அறைகூவலும்.இதனை ராஜபக்சே பணிவிடையாளன் ஹிந்துப் பத்திரிகை தலைப்புச் செய்தியிடுவது இன்னும் ஆச்சரியம்!
குறைகள் இல்லாத மனிதனா?விமர்சனம் இல்லாத அரசியலா? சமச்சீர் கல்விக்கு 15 மதிப்பெண்களை குறைத்து விட்டு ஜெயலலிதா வாங்கும் மதிப்பெண் 100/85%
பொறுப்பி: நல்லாப் படிச்சதுக்கு மட்டுமே பாஸ் மார்க் கொடுக்கப் பட்டிருக்கிறது.நல்லா ஆப்படிச்சதுக்கு கொடுக்கப்பட்ட மார்க் என மாத்தி வாசிச்சு பக்கத்து பெஞ்சிலிருந்து தி.மு.க சார்பாளர்கள் முருங்கை மரம் ஏறிக்கொண்டால் விமர்சக வகுப்பு வாத்தியார் பொறுப்புக் கிடையாது:)
18 comments:
வழக்கம்போல் நல்லதொரு ஆய்வு..சமச்சீர்க் கல்வி தவிர்த்து ஜெ.வின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவையே..
ஜெ.வின் இன்றைய சட்டமன்றப் பேச்சு அதிமுக்கியத்துவம் வாய்ந்த்து..ரொம்ப ஸ்ட்ராங்கான, போல்டான பேச்சு..நிச்சயம் கலைஞர் ஒருநாளும் இப்படி இனிமேல் பேசிக்கொள்ள மாட்டார். ஜெ.யை நாம் முழுதாக நம்ப மறுக்க காரணங்கள் உள்ளன..பார்ப்போம்..
//செங்கோவி said...
வழக்கம்போல் நல்லதொரு ஆய்வு..சமச்சீர்க் கல்வி தவிர்த்து ஜெ.வின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவையே..//
முதல் டிக்கட் வாங்கிட்டீங்க போல இருக்குதே!போணி செஞ்சதுக்கு நன்றி.
சமச்சீர் கல்வியில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு தோல்வியே.முக்கியமாக ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும் என்பதும்,மீண்டும் வாக்கு தேர்தலில் இது பிரதிபலிக்கும் என்பதையும் முன்பே ஜெயலலிதா உணர்ந்திருக்க வேண்டும்.
//செங்கோவி said...
ஜெ.வின் இன்றைய சட்டமன்றப் பேச்சு அதிமுக்கியத்துவம் வாய்ந்த்து..ரொம்ப ஸ்ட்ராங்கான, போல்டான பேச்சு..நிச்சயம் கலைஞர் ஒருநாளும் இப்படி இனிமேல் பேசிக்கொள்ள மாட்டார். ஜெ.யை நாம் முழுதாக நம்ப மறுக்க காரணங்கள் உள்ளன..பார்ப்போம்..//
பாஸ்!ஜெயலலிதா விசயத்தில் ஒரேயடியாக தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடும்.அதே நேரத்தில் திறமையான ஆட்சிக்கு ஊக்கம் தருவதும் நம்முடைய கடமையாகும்.
இன்றைய அதிரடியாக கோத்தபய ராஜபக்சேவுக்கு ஜனநாயக ரீதியாக சட்டசபைக்குள் விடுத்த அறிக்கை இலங்கை அரசுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.ஜெயலலிதா சொன்னது போலவே இலங்கை எதிர்வினை செய்வதிலிருந்தே அரசியல் சார்ந்த மனபயம் இலங்கை அரசுக்கு உள்ளது என்பது புரிகிறது.ஜெயலலிதாவின் கோத்தபயவுக்கான பதிலடி அறிக்கை தொலைக்காட்சி சொற்களாக இல்லாமல் சட்டசபை வளாகத்துக்குள் சொன்னது நீங்கள் சொன்னது போல அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.
கருணாநிதி சேலை கட்டிய பெண் என்றும் ஜெயலலிதா வேட்டி கட்டிய ஆண் என்றும் எந்த புண்ணியவான் சொன்னாரோ!
இப்போதும், துவக்கம் முதலே ராஜபக்சேக்களின் Political strategy என்ன தெரியுமா?
சீனா,ரஷ்யா கூட்டுத் துணையில் இந்தியாவை பகடைக்காயாக உபயோகப்படுத்துவதே.தங்கள் சுயபிரச்சினைகளையே தீர்த்துக்கொள்ள முடியாத நிலையில் காங்கிரஸ் தற்போது தள்ளாடுவதாலும்,இலங்கை சார்பு சார்ந்த நிலைப்பாடே காங்கிரஸ்க்கு இன்று வரை இருப்பதாலும் மத்திய அரசு இதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளுமா என்பது சந்தேகமே.அப்படியே ஊடகங்களுக்கும்,ஜெயலலிதாவுக்கும் சப்பைக்கட்டுக்கு வெளியுறவு செக்ரட்டரியோ,இலங்கை தூதுவர் மூலமாக ஒரு அறிக்கை விட்டு விட்டு உள்குத்து வேலைகளில் மட்டுமே செயல்படும் என நம்பலாம்.
ராஜ நட, பதிவைப் படித்தேன். பதிவை விட உங்க ரெண்டாவது பின்னூட்டம் (செங்கோவிக்கு சொன்னது) அதிகம் ஜொலிக்குது. ஜெ வின் ஈழம் குறித்த நகர்வுகள் பொறுத்திருந்தே பார்க்கவேண்டியுள்ளது.
ராஜ நட ஜெயலலிதா நிறையவே மாறியிருக்கிறார் தாங்கள் சொல்வது போல் வயதும் கடந்தகாலஅரசியலும் தான்.
மார்க் ரொம்ப அதிகம். 85 மார்க்கெல்லாம் தரமான தலைவர்களுக்கு தரப்படுவது.
நான் சாமி கும்பிடிறதெல்லாம் ஜெயா அம்மா இப்பிடியே மாறாம இருக்கோணும்ன்னுதான் !
//Rathi said...
ராஜ நட, பதிவைப் படித்தேன். பதிவை விட உங்க ரெண்டாவது பின்னூட்டம் (செங்கோவிக்கு சொன்னது) அதிகம் ஜொலிக்குது. ஜெ வின் ஈழம் குறித்த நகர்வுகள் பொறுத்திருந்தே பார்க்கவேண்டியுள்ளது.//
ரதி!நான் இதுவரை இட்ட பதிவுகளை விட பதிவர்களுக்கு இட்ட பின்னூட்டங்களே அதிகம்!பின்னூட்டங்கள் மட்டுமே நமது எண்ணங்களை வெளிப்படுத்துவதோடு பதிவர்களுக்கும் உற்சாகம் கொடுக்குது.
சில சமயம் பதிவில் சொல்ல இயலாததை பின்னூட்டங்களில் சொல்லவும் இயல்கிறதுதானே!
இதுவரைக்கும் ஜெயின் நடவடிக்கைகள் வெறும் தீர்மானங்கள் என்ற போதும் ஜனநாயக ஆட்சியில் அரசியல் முன்நகர்வுகள் இப்படித்தான் செயல்பட வேண்டும்.பார்க்கலாம் ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கைகள் எப்படி அமைகிறதென்று.
//Blogger தவறு said...
ராஜ நட ஜெயலலிதா நிறையவே மாறியிருக்கிறார் தாங்கள் சொல்வது போல் வயதும் கடந்தகாலஅரசியலும் தான்.//
நிச்சயம் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது.மக்கள் சார்ந்த பிரச்சினைகளை மக்களோடு இணைந்து நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்போம்.
//சிவானந்தம் said...
மார்க் ரொம்ப அதிகம். 85 மார்க்கெல்லாம் தரமான தலைவர்களுக்கு தரப்படுவது.//
வாங்க!தரமான தலைவர்கள் என்ற அடிப்படையை விட நூறு நாட்கள் எப்படி செயல்பட்டுள்ளார் என்ற அடிப்படையிலேயே விமர்சனம் செய்துள்ளேன்.இன்னும் ஒரு வருட காலத்துக்குள் அ.தி.மு.க வின் ஜெயல்பாட்டைப் பொறுத்து மார்க் சேர்ப்பதோ குறைப்பதோ அமையும்.மூன்று மாத காலத்துக்கு ஆட்சி வேக செயல்பாடுகள் அதிகமே.
சமச்சீர் கல்வி தவிர ஏனையவற்றில் என்னால் குறைகள் கண்டு பிடிக்க முடியவில்லை.ஒரு வேளை தமிழக சட்டசபை கட்டிடம் ஜெயலலிதாவுக்கு சாதகமா?பாதகமா என்பதைப் பொறுத்து இன்னும் விவாதிக்கலாம்.
//ஹேமா said...
நான் சாமி கும்பிடிறதெல்லாம் ஜெயா அம்மா இப்பிடியே மாறாம இருக்கோணும்ன்னுதான் !//
சாமிக்கு ரொம்ப கஷ்டமான வேண்டுதலையெல்லாம் வைக்காதீங்கோ:)
ஜெ.வின் இன்றைய சட்டமன்றப் பேச்சு அரசியல் பேச்சு என்பதை கூடிய சீக்கிரம் உணர்வீர்கள் !
சமச்சீர் கல்வியில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு தோல்வியே.முக்கியமாக ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும் என்பதும்,மீண்டும் வாக்கு தேர்தலில் இது பிரதிபலிக்கும்
//koodal kanna said...
ஜெ.வின் இன்றைய சட்டமன்றப் பேச்சு அரசியல் பேச்சு என்பதை கூடிய சீக்கிரம் உணர்வீர்கள் !//
கண்ணா அண்ணா!எனது நிலைப்பாடே கருணாநிதி,ஜெயலலிதாவை தாண்டிய அரசியல் பார்வை.தற்போதைய நிலையில் வெறுமனே கடிதம் எழுதியுள்ளேன் என்ற பத்திரிகையாளர்களுக்கான அறிக்கையை விட சட்டமன்றத்திற்குள் தீர்மான அறிக்கையை ஆதரிக்கிறேன்.
ஜெயலலிதாவின் பேச்சு வெறும் அரசியல் பேச்சா அல்லது தம்மால் முயன்ற முயற்சியா என்பதை காலம் சொல்லி விடும்.பொறுத்திருந்து பார்க்கலாம்.
//koodal kanna said...
சமச்சீர் கல்வியில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு தோல்வியே.முக்கியமாக ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும் என்பதும்,மீண்டும் வாக்கு தேர்தலில் இது பிரதிபலிக்கும்//
இது நச்சென்ற ஜோஸ்யம்.நிச்சயம் வாக்கு தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதோடு உடன்படுகிறேன்.
கருணாநிதி வீட்டு குழந்தைகள் சமசீர் கல்வி கற்கிர்களா?
//Blogger singam said...
கருணாநிதி வீட்டு குழந்தைகள் சமசீர் கல்வி கற்கிர்களா?//
அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால்
இந்தி சமச்சீர் கல்வி பொதுக்குழுவில் விவாதிக்கப்படும்:)
Post a Comment