இந்திய அரசியலமைப்பு சட்டம், பாராளுமன்றம், குற்றவியல், நீதித்துறை, மக்களாட்சி போன்ற ஜனநாயகத்தின் தூண்கள் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் மூவரின் மரணதண்டனை இடைக்கால தடை முக்கியமான ஒரு கால கட்டத்திற்கு வந்துள்ளது.இதற்கு முன்பும் நீதிமன்ற மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட சான்றுகள் இருந்தாலும் முந்தைய பிரதமர் ராஜிவ் காந்தி மரணம் நிகழ்ந்த விதம்,சோனியா குடும்பத்தாரின் அரசியல் பங்கீடு மற்றும் காங்கிரஸ் விசுவாசிகளின் அழுத்தம்,நீதிமன்ற தீர்ப்பின் காலகட்டம், தமிழர்களின் உணர்வு போன்றவை மரணதண்டனை குறித்தான புதிய கேள்விகளைஉருவாக்கி உள்ளது.
ஒருபக்கம் மரணதண்டனையை நிறுத்துவது குற்றங்களை ஊக்குவிக்கும் என்றும்,இன்னொரு பக்கம் ஒரு உயிரைக் கொல்லும் அதிகாரம் இன்னொரு மனிதனுக்கு இல்லையென்ற மனித உரிமைக்குரல்கள் என்ற இருபக்கங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன. நேற்றும் கூட ஒரு நீதிபதி மரணதண்டனை விதித்தால் மட்டுமே இன்னொருவன் குற்றங்களுக்கு பயந்து குற்றம் செய்ய மாட்டான் என்று NTDV யில் கருத்து தெரிவித்தார்.தேசிய அளவில் தமிழக மக்களின் குரலும், மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க வேண்டுமென்ற அ.தி.மு.க அரசின் சட்டசபை தீர்மானமும் இன்னும் தலைக்கு மேல் கயிறு தொங்கிக் கொண்டிருக்கும் மரணதண்டனை இடைக்கால தடையும் என்ன பாதிப்புக்களை உருவாக்கும் என்ற கருத்துரையாடல் என்.டி.டிவியில் நிகழ்ந்தது.
மரணதண்டனைக்கு ஆதரவாக சுப்ரமணியன் சுவாமி,காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி, ராஜிவ் காந்தி கொலைவழக்கை துப்பு துலக்கிய கார்த்திகேயனும்,மரணதண்டனைக்கு எதிரான குரலாக வழக்கறிஞர் வைகை,மீனா கந்தசாமியும் குரல்கொடுத்தார்கள்.நீதிமன்ற தீர்ப்பின் சார்பாக ஜெசிகா லால் கொலைவழக்கில் தீர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதி(R.S.sodhi)யும் பங்கு பெற்றார்கள்.பர்கா தத்தின் நிகழ்ச்சியின் முன்னுரையாக கிரிமினல் லாயர் ராம் ஜெத்மலானி மரணத்தின் வலி 30 வினாடிகள் என்றும் 11 வருடங்கள் தாமதிக்கப்பட்ட கருணைமனு ஆயிரம் மரணதண்டனைகளுக்கு சமம் என்ற தொலைபேசி வாக்கியங்களோடும், சோவின் நிலைப்பாடான மூவருக்கான நீதிமன்ற இடைக்காலத்தடை போல் மற்றவர்களும் கேட்பார்கள் என்ற பெருந்தன்மையான கவலையுடனான கருத்துரையாடல் துவங்குகிறது.
கலந்துரையாடலில் சுப்ரமணியன் சுவாமி தனது வாதத்திற்கு துணையாக இந்திய ராணுவம் இலங்கை சென்றது பற்றியும் விடுதலைப்புலிகள் மீதான வெறுப்பைக் காட்டினாலும் மரணதண்டனைக்கு எதிரான தமிழர்களின் குரலின் பின்ணணியில் சோனியா காங்கிரஸின் இலங்கைப் போர்க்குற்றங்களுக்கான ஆதரவு இருப்பதை பதிவு செய்யாமல் மூவரின் மரணதண்டனை இடைக்கால தடையை அப்சல் குருவின் மரணதண்டனையோடு ஒப்பிட்டு மட்டுமே விவாதம் முடிவடைகிறது.
ஆங்கில வாதங்களை நேரில் காண நேரமுள்ளவர்கள் இங்கே போய் கேட்கலாம்.
http://www.ndtv.com/video/player/news/rajiv-killers-should-they-hang/209435
(ஒருவேளை இன்னும் சில தினங்களில் தொடுப்பு நீக்குவார்கள் என்று இணைக்கவில்லை)
நேரம் இல்லாதவர்களுக்கும் பதிவுக்கு இணைய பூ சர்க்கரையாக...
பர்கா தத் முன் வைத்த முதல் கேள்வியாக ரேணுகா சவுத்ரியிடம் இடைக்கால தடை குறித்து நீங்கள் வருத்தப்படுகிறீர்களா என்பதற்கு காங்கிரஸ் நிலைப்பாட்டில் பதவி சுகம் அனுபவிப்பவர் என்ன சொல்வார் என்று சொல்லத்தேவையில்லை.இருந்தாலும் தமிழக சட்டசபை தீர்மானம் தமிழக அரசைப்பொறுத்தவரையில் சரியாக இருக்கலாம்.இந்திய பிரஜையாக இது குறித்து கவலைப்படுகிறேன் என்றார்.
ரேணுகா சவுத்ரியின் கருத்துக்கு சுப்ரமணி சுவாமி ஏன் சிரித்தீர்கள் என்று பர்காதத் கேட்டதற்கு முன்பொரு முறை 2G விவாதத்தில் ஜெயந்தி நடராஜனுக்கு சட்டம் தெரியாது என்று மூஞ்சியை கிழித்த மாதிரியே ரேணுகா சவுத்ரிக்கும் ஒன்றும் தெரியாது என்ற சுப்ரமணியன் சுவாமி தமிழக சட்டமன்ற தீர்மானம் மக்கள் அழுத்தங்களுக்கு பயந்த கோழைத்தனமானது என்றும் இதனால் எந்த தாக்கமும் இல்லையென்றார்.(It has a no impact at all)தமிழக சட்டசபை தீர்மானம் கோழைத்தனமானதா என்ற கேள்வியை ரேணுகா சவுத்ரியிடம் பர்காதத் திருப்ப இதுபற்றி தான் ஒன்றும் சொல்வதற்கில்லை என ரேணுகா தப்பித்துக்கொண்டார்.சுப்ரமணியன் சுவாமி ஒரு சிரிப்பை காமிராவுக்கு தந்தார்.
அடுத்து வழக்கறிஞர் வைகை அவர்கள் மூவரும் தடா மீதான குற்றத்தில் தண்டனை விதிக்கப்பட வில்லையன்றும்,கொலைக்குற்றம் தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டார்கள் என்றும் தமிழக சட்டசபை தீர்மானம் கோழைத்தனமானது அல்ல என்றும் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பது சட்டசபையின் பணியென்றும் வாதித்தார் வழக்கறிஞர் வைகை.பர்கா தத்தின் அடுத்த கேள்வியான மரணதண்டனைக்கு எதிரான குரலாக ஒலிக்கிறீர்களா அல்லது வெளிப்படைத்தன்மையில்லாத தீர்ப்பின் அடிப்படையில் வாதிக்கிறீர்களா என்றதற்கு 1998ம் வருடத்தில் கொலை குற்றத்திற்கு 1999ல் கருணைமனு கவர்னரால் நிராகரிக்கப்பட்டு 2000ம் வருடம் முதல் நிறுத்திவைக்கப்பட்ட காலம் கடத்திய அடிப்படையிலே தனது கருத்து என்றார்.
திரும்பவும் பர்காதத் சுப்ரமணியன் சுவாமியிடம் கேள்வி எழுப்ப முந்தைய அரசுகள் காலம் கடத்தின என்றும் இதே கருணைமனுவை அப்சல்குருவும் கேட்க கூடும் என்றார்.
அடுத்து முன்னாள் ஜஸ்டிஸ் ஆர்.எஸ்.சோதியிடம் பர்காதத் திரும்ப நீதிமன்ற தீர்ப்பை மாற்ற இயலாதென்றும் இங்கே பிரச்சினையென்னவென்றால் கால தாமதமாக்கப்பட்ட தீர்ப்பு என்று குறிப்பிட்டார்.இரண்டு வருட கால தாமதமான மரணதண்டனையே ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதென்றும் மூவரின் மரணதண்டனையின் காலம் 11 வருடங்கள் நீட்டிக்கப் பட்டுள்ளதென்றும் சொன்னார்.பர்கா தத்தின் மறுகேள்வியான இந்த மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்ற முடியுமா?முடியாதா என்ற கேள்விக்கு ஆம் என்று ஆர்.எஸ்.சோதி பதில் அளித்தார்.
இப்பொழுது முன்னாள் சி.பி.ஐ அதிகாரியும்,ராஜிவ் காந்தி கொலைவழக்கின் காலங்களை நினைவுபடுத்துபவருமான கார்த்திகேயனிடம் பூனைக்குட்டி இப்பொழுது வெளிவருமென்று கவலைப்படுகிறீர்களா என்றதற்கு (Are you worried about the pandora box will be opened now?) நான் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லையென்றும்,மூவரின் மரணதண்டனை நீக்கப்பட்டால் தனக்கு மகிழ்ச்சியே என்றும்,தான் தனது கடமையைச் செய்தேன் என்றும் சொன்னார்.மேலும் மூவரின் கருணைமனுவை ஏற்பதற்கு சமூகம், குற்றங்களுக்குப் பின்பான நடத்தை,இதனை விட தாம் செய்தது தவறு என்ற ஒப்புதல் மட்டுமே கருணை மனுவுக்கு தகுதியானது என்றார்.
இந்த நேரத்தில் கார்த்திகேயனின் போலிஸ் மூளை எப்படி வேலை செய்து வழக்கின் ஓட்டைகள் போலவே சிக்கலில் கொண்டு சேர்க்கும் எனபதற்கு நீண்ட வாசிப்பு ரசனையுள்ளவர்களுக்கு பழைய நாவலான சிட்னி ஷெல்டனின் அதர் டைட் ஆஃப் மிட்நைட் (Other side of midnight by Sidney Shelton) புத்தகத்தின் இறுதிப்பகுதி க்ளைமேக்ஸ் கதையின் ட்விஸ்ட்டை சிபாரிசு செய்கிறேன்.
இதுவரையிலும் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் கார்த்திகேயன், சுப்ரமணியன் சுவாமி,ரகோத்தமன் என்ற மூவரின் கருத்துக்களும்,ஜெயின் கமிசன் தீர்ப்பு,திருச்சி வேலுச்சாமி,சி.பி.ஐ முன்னாள் ஆய்வாளர் மோகன்ராஜ் போன்றவர்களின் அடக்கி வாசிக்கப்பட்ட மாற்றுக் கருத்துக்களும் இன்னும் வெளிப்படையான உண்மைகள் வெளி வராமலேயே நீதிமன்றத் தீர்ப்பின் மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து பர்காத்தின் கேள்வியான பேரரறிவாளனின் தாய் தனது மகன் கொலையின் சதித்திட்டம் பற்றி அறிந்திருக்கவில்லையென்றதற்கு சுப்ரமணியன் சுவாமியின் அகந்தையான பேச்சு (Arrogance of...we go as per supreme court judgement and not mother's judgement or girl friend's judgement)உச்சநீதி மன்ற தீர்ப்புதான் தனக்கு முக்கியமென்றும்,தாய்,பெண்நட்பு,ஆண்நட்பு தீர்ப்பையெல்லாம் கணக்கில் கொள்ளவியலாது என்றும் மூவரும் கருணைக்கு தகுதியில்லாதவர்கள் என்றும் கூறினார்.
பர்காத்தின் கேள்வி மீனா கந்தசாமி என்பவரிடம் திரும்புகிறது.இலங்கை தமிழர்கள் பற்றிய அனுதாபங்கள் தமிழர்களுக்கு இருந்தாலும்,ஒரு தேசிய தலைவரின் கொலைக்கும் அப்பால் இடைக்காலத் தடைக்கான தமிழக மக்களின் மகிழ்ச்சி இந்திய தேசிய உணர்வுக்கு எதிரான ஒன்றாக இருக்குறதே என்பதற்கு மீனா கந்தசாமியின் பதில்.
ராஜிவ் காந்தியின் குற்றவிசாரணை அரசியல் வாதிகளின் முகத்திரையையும் கிழிக்க வேண்டும். பேரறிவாளன் பேட்டரி கொடுத்ததாக வழங்கப்படும் நீதி நியாயமாக இருக்காது.பம்பாய் குண்டு வெடிப்புகளின் போது முஸ்லீம்களின் ஓட்டுரிமையை நீக்க வேண்டும் என்பது போன்ற நிலைப்பாடு நீதியைப் பெற்றுத்தராது.ஒருவேளை ராஜிவின் கொலை தற்கொலை தாக்குதலாக இல்லாமல் வேறு அரசியல் காரணங்களுக்காக இருந்தால் இதுவரை தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனை குறித்த நீதி என்ன?நளினியின் தாய் மருந்து வாங்கிய பார்மசி பில்லின் அடிப்படையில் கூட கைது செய்யப்படும் போது என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்?இன்றைக்கு நான் பேரறிவாளன் சார்பாக பேசுவதால் நான் கூட சதித்திட்டத்துக்கு உடந்தையென்பதா நீதி?அரசியல் பெரும்புள்ளிகளின் கோணமெல்லாம் விசாரணையில் மறைக்கப்பட்டுவிட்டது என்றார்.
பர்காதத் சுப்ரமணியன் சுவாமியிடம் மீனா கந்தசாமி சுட்டிக்காட்டும் கொள்கை முரண்கள்( Idealogy differences) பற்றி வேறு ஒரு நிகழ்ச்சியில் பேசலாம் என்றார்.
மீண்டும் ஆர்.எஸ்.சோதி நீதிமன்ற தீர்ப்பு மாற்றமில்லாதது என்று சட்டம் குறித்து சொன்னதற்கு சுப்ரமணியன் சுவாமியின் முகத்தில் சிரிப்புடனான மரணத்தை ரசிக்கும் மகிழ்ச்சி தென்பட்டது
இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் எம்.எல்.ஏ அப்சல் குருவின் மரணதண்டனை பற்றிக் குறிப்பிடும் போது தமிழக சட்டசபையின் தீர்மானத்தில் காஷ்மீர் மக்களும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளதென்றார்.
அப்சல் குருவின் மரணதண்டனை பற்றி காஷ்மீர் மக்களும்,சட்டசபையுமே தீர்மானிக்க வேண்டிய ஒன்று என்ற போதிலும் ராஜிவ் காந்தியின் ம்ரணம்,நீதிமன்ற தீர்ப்பு,தமிழக சட்டசபையின் தீர்மானம் போன்றவை இலங்கையை சுற்றிய ஒன்று என்பதும் இலங்கை குறித்த போர்க்குற்றங்கள் பின் தள்ளப்படுவதற்குமான துவக்கமாகக் கூட இந்திய அளவில் காஷ்மீருடனும், பாகிஸ்தானுடனும் அப்சல் குருவின் தீர்ப்பை இணைக்கும் ஆபத்துமுள்ளது என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
சுப்ரமணியன் சுவாமியின் வாதப்படி இந்தியாவிடம் இருக்கும் குற்றங்களுக்கான எதிர்ப்பு கருவியாக விளங்குவது மரணதண்டனை மட்டுமே என்றார்.முந்தைய கால கட்டத்தில் மரணதண்டனை குற்றங்களுக்கான எதிர்ப்பு சக்தியாக விளங்கியிருக்க கூடும்.ஆனால் இப்பொழுது உயிரையும் மதிக்காத தற்கொலைத் தாக்குதல் நிகழும் கால கட்டத்தில் மரணதண்டனை எப்படி எதிர்ப்பு கருவியாக பயன்படும் என்று மீனா கந்தசாமி எதிர்க்கேள்வியை முன் வைத்தார்.
இன்னும் எத்தனை விவாதங்களை முன் வைத்தாலும் ராஜிவ் காந்தியின் படுகொலை தவறான ஒன்று என்பதிலும்,ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை முற்றுலுமாகப் புரட்டிப்போட்டு விட்ட நிகழ்வு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கொள்ல இயலாது.அதே வேளையில் முந்தைய பிரதமர் என்ற ஒரே காரணத்துக்காக தமிழர்கள் கொடுத்த உயிர்ப்பலிகளின் விலையும் அதிகம்.இந்தக்கோட்டிலிருந்து விலகியும்,ராஜிவ் காந்தி இலங்கை ராணுவ அணிவகுப்பில் அவமதிப்பை சந்தித்தும், இலங்கைக்கான உதவியும்,அது இந்தியாவையே மீண்டும் வந்து தாக்கும் பூமராங் என்பதையெல்லாம் எந்த தொலைக்காட்சிகளும் முன்வைத்து விவாதிப்பதில்லை.
ராஜிவ் காந்தியின் கொலைக்குற்ற விசாரணக்குப் பின்பான மக்களின் குரல் நசுக்கப்படுவதற்கு தடா போன்ற சட்டங்கள் எல்லாம் பயன்படுத்தி வாய்மூடிகளாய் போன தமிழர்களின் குரல் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைகளுக்குப் பின் மீண்டும் எழுந்துள்ளது.முந்தைய தி.மு.கவின் அரசியல் நிலைப்பாட்டால் ஆட்சி இழப்பு போன்ற நிகழ்வுகள் நடந்த உள்குத்து வேலையையும்,மக்களின் குரல்வளை நெரிக்கும் திட்டங்களும் கூட காங்கிரஸாலும்,சுப்ரமணியன் சுவாமி போன்றவர்களின் மரணதண்டனைக்கு ஆதரவாளர்களாலும் தமிழர்களின் முதுகில் குத்தும் வேலையாக பின்புலத்தில் நிகழ்த்தப்படக் கூடுமெனபதை இவர்களின் எண்ண வெளிப்பாடாக வெளிவருகின்றன.இதனை விட முக்கியமாக பேரறிவாளன்,சாந்தன், முருகனின் மரணத்தின் தூக்கு கயிறு இன்னும் முற்றிலுமாக நீக்கப்பட வில்லையென்பதையும் தமிழர்கள் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.
பட உதவி: கூகிள்
.
18 comments:
மரணதண்டனை ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும் .அதற்கு ஆதரவானவர்கள் நாகரிக காட்டுமிராண்டிகள்.
வண்க்கம் சகோ
அருமையான் பதிவு.மரண தண்டனை பற்றிய விவாதம் முக்க்ய விவாதப் பொறி ஆன சூழலில் உங்களின் அல்சல் தொலைகாட்சி விவாதத்தின் நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டியது.
மரண தண்டனை என்ப்தே அரசு செய்யும் கொலைதான்.அரசு என்றால் கொலை செய்யலாம? என்ற கேள்விக்கு நீங்கள் கூறியது போல் அப்ப்டி என்றால் குற்றம் செய்தவர்களை என்ன செய்வது என்ற எதிர் கேள்வி வரும்.இவ்விஷய்த்தில் மூவரும் வழக்கிற்கு தொடர்புள்ளவர்கள் என்று கூட சரியாக் நிரூபிக்கப் படாதவர்கள் என்பதால் மரண தண்டனை கூடவே கூடாது.
_________
சரி ஒருவன் பல கொலைகளை செய்த்வன் ,குற்றத்தில் ஈடுபட்டது ஐயந்திரிபர நிரூபிக்கப் பட்டது என்றால் அவனுக்கு இத்தண்டனை கொடுக்க்லாமா என்றால் நான் இதற்கும் கொடுக்க கூடாது என்றே சொல்வேன்.
ஜேத்மாலானியின் கருத்து மிக அருமை ,மரணம் 30 நொடி,வாழ்தலே கடினம்.இப்படி ஆட்களுக்கு 100 வருடம் சிறைத்தண்டனை கொடுக்க்லாம். இவர்கள் மாதிரி ஆட்களுக்கென்றே தனி சிறை, தண்டனையை குறைக்காமல் உடல் உழைப்பு வேலை செய்து, உணவு உண்டு அவன் வாழ்வது உலகை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.இதற்கு நீதித் துறை& காவல்,சிறை அதிகாரிகள் மிகுந்த பொறுப்போடு செயல் பட வேண்டும்.
ஒரு சிறு குற்றத்திற்கு 10 நாள் சிறை செல்பவன் பெரும் குற்றவாளிகளாவே மாற்றப்படுவது இத்துறைகளில் உள்ள நடைமுறைகளை காட்டும்.
இது பற்றிய விவாதம்&விழிப்புணர்வு மிக அவசியம்!
நன்றி
//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
மரணதண்டனை ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும் .அதற்கு ஆதரவானவர்கள் நாகரிக காட்டுமிராண்டிகள்.
//
வழக்கறிஞர் அவர்களே!சட்டம் குறித்த விரிவான பார்வை உங்களுக்கு இருக்கும்.நான் மனிதாபிமான அடிப்படையிலேயே எனது கருத்துக்களை முன்வைக்கிறேன்.மரணதண்டனை குற்றங்களைக் குறைக்கும் கால கட்டத்தை உலகம் கடந்து விட்டதென்றே சொல்லலாம்.இந்தியாவில் மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும்.அதற்கான சட்டங்கள் இல்லாத போது அதற்கான திறவுகோலாக சென்னை உயர்நீதிமன்ற இடைக்காலத் தடை முன் உதாரணமாகட்டும்.
ஆங்கில ஊடகங்கள் என்டிடிவி ஆகட்டும் டைம்ஸ்நௌ ஆகட்டும் சுப்பிரமணியன் சுவாமி, சோ போன்றவர்களின் கருத்துக்கள் என்னவோ அதே கருத்துக்களைக் கொண்டவையாகவே தமிழ் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் சம்பந்தமான விவகாரங்களில் நடந்துகொள்ளும். மாற்றுக்கருத்துக்களைச் சொல்லுபவர்கள் இரண்டொருவரை உட்கார வைத்திருந்தாலும் அவர்கள் முக்கியமான ஏதாவது தகவலைச் சொல்ல ஆரம்பித்தவுடன் சட்டென்று குறுக்குவெட்டாக வேறு எதையாவது பேசி பிரச்சினையை திசைதிருப்பி மறுபடி அவர்களின் கண்ணோட்டத்திற்கேற்பவே நிகழ்ச்சியை வடிவமைத்துக்கொள்ளும் கபடம் அவர்களுக்கு உண்டு.அதனாலாயே பெரும்பாலான விவாதங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை. நீங்கள் மிக கவனமாக நிகழ்ச்சியை கவனித்து தங்களின் எண்ணத்தையும் தெரிவித்து நிறைய சிந்தனைகள் படிக்கும்போதேயே கிளர்ந்து எழுகிறமாதிரி செய்திருக்கிறீர்கள். அந்த மூன்றுபேரின் தலைக்குமேலே இன்னமும் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது என்பது உண்மைதான்.
//சார்வாகன் said...
வண்க்கம் சகோ
அருமையான் பதிவு.மரண தண்டனை பற்றிய விவாதம் முக்க்ய விவாதப் பொறி ஆன சூழலில் உங்களின் அல்சல் தொலைகாட்சி விவாதத்தின் நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டியது.//
நாம் திறந்த மனத்துடன் இருபக்க நிலைப்பாடுகளையும் முன்வைப்போம்.மனிதாபிமானம் என்ன என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.
எந்த பிரச்சினைக்கும் அரசு என்ற இயந்திரத்தின் குறைகளே பிரச்சினைகளை உருவாக்குவதாக இருக்கும்.ஆனால் அரசு இயந்திரங்களின் குறைகளைப் பின் தள்ளி மட்டுமே பிரச்சினைகளை நோக்கும் வழக்கம் உள்ளது.ராஜிவ் காந்தி கொலைவழக்கைப் பொறுத்தவரை காலம் தாழ்த்திய தண்டனை என்பது மட்டுமல்லாமல் ஆட்சி செய்பவர்களைப் பொறுத்தே உள்துறையும்,நீதித்துறையும் முடுக்கி விடப்படுகின்றன.கட்டமைப்புக்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் சட்டத்தை மதிக்கும் தன்மை எல்லோருக்கும் வரும்.நிகழ்வது என்ன என்பது சொல்லத் தெரியவேண்டியதில்லை.
சிறை என்பதே குற்றம் செய்தவன் மீண்டும் திருந்தி வாழ்வதற்கான சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படும் வாழ்க்கை.நீங்கள் சொல்வது போல் காவல்துறை,சிறை அதிகாரிகளும் குற்றவாளிகளுக்குண்டான மனநிலையுடன் குற்றம் செய்தவனை இன்னும் குரூரமாக்கிறார்கள்.உலக அளவில் ஆசிய நாடுகள் மனித உரிமை மீறலில் மிகவும் பின்னடைந்தே உள்ளன.இதுவே இன்னும் குற்றம் அதிகரிப்பதற்கும் காரணங்களாகி விடுகிறது.
கசாப்பையும் கூட சிறையிலே வைத்து தண்டனை தருவதே மரணதண்டனைக்கு எதிரான சவாலாக இருக்க முடியும்.ஒரு பக்கம் பாகிஸ்தானின் அழுத்தங்களுக்கு தகுந்தவாறு பேச்சுவார்த்தை நிகழ்த்துவதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு என்றும் என இரட்டை இந்திய நிலையே விமர்சனத்துக்குரியது.
அமுதவன் சார்!NTDV யின் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் அரசியல் சார்ந்தவர்கள் பங்கு பெருவதால் இது வெள்ளோட்டம் பார்க்கும் நிகழ்ச்சியே என்பேன்.நீங்களும் விவாதங்களை உற்றுக்கவனிப்பவர் என்பது Anchor செய்பவர்கள் இடைமறிப்பதை புரிந்துள்ளது உணர்த்துகிறது.வடநாட்டு ஊடகங்கள் இன்னும் சோவையும்,சுப்ரமணியன் சுவாமியையே பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது மிகவும் ஆச்சரியமளிக்கிறது.இவர்களின் கருத்துக்கள் சமூகம் சார்ந்த ஒன்றாகவா பிரதிபலிக்கிறது?
தொலைக்காட்சி ஊடகங்களில் இவர்களுக்கு எதிர்ப்பைக்காட்ட முடியாவிட்டாலும் தமிழகம் சார்ந்த மக்கள் உணர்வோடு இவர்களின் குரூர மனப்பான்மைகளை அடக்கி வைப்பது அவசியம்.இதனை காலம் நிச்சயம் நிறைவேற்றும்.
மக்களை திசை திருப்பும் நிகழ்வுகளையும் அரங்கேற்றும் முயற்சிகள் பின்புலத்தில் நடப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன.இதனை விட நீதிமன்ற தீர்ப்பும்,ஜனாதிபதியின் கருணைமனு நிராகரிப்பு என்ற அரசு கட்டமைப்பின் வலுவான சக்திகள் இடைக்காலத் தடையை மீறி இருப்பது ஒருபக்கம்,மக்கள் சக்தி,தமிழக சட்டசபையின் தீர்மானம் என்ற மறுபக்கம் இருப்பதால் மரணத்தை நேசிப்பவர்களுக்கும்,மனிதத்தை நேசிப்பவர்களுக்கும் இன்னும் கயிறு இழுக்கும் போட்டியே.
டைம்ஸ் நௌ தொலைக்காட்சியில் என்று நினைக்கிறேன்:
சுப்பிரமணிய சுவாமி பேசும்போது, "தமிழ்நாட்டில் ஒருசிலர்தான் இதனைப் பெரிதுபடுத்துகிறார்கள். மற்றபடி மக்களிடத்தில் இது ஒரு பெரிய விடயமாக இல்லை" என்று சொன்னார்.
சோ பேசும்போது "இராசீவுடன் உயிரிழந்த மற்ற குடும்பத்தினர் இதனை மன்னிப்பார்களா?" என்று கேட்டார். (இந்த கேள்வியை சங்கராச்சாரியரால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் சங்கரராமன் மனைவியிடம் கேட்பாரா? என்று தெரியவில்லை)
வட இந்திய ஊடகங்கள் தூக்கைத் தடுப்பது நீதியைத் தடுக்கும் செயல் என்பதாகவே பேசுகின்றன. இராசீவ் கொலை வழக்கை மற்றவர்களைவிட அதிகம் கவனித்தவர்கள் தமிழர்கள். இங்கு மிகப்பெரும்பான்மையான மக்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்தக் குற்றத்தை செய்யவில்லை என்றே கருதுகின்றனர். இத்தகைய ஒரு பார்வை வட இந்திய ஊடகங்களிடம் கொஞ்சமும் இல்லை.
தமிழக மக்களின் கருத்து என்றால் அது சோ, சுப்பிரமணிய சாமியின் கருத்தாக பார்க்கப்படுவதும் வியப்பளிக்கிறது.
ஒரே தேசம் என்றால் - அது ஒரேவிதமான சமூக மனப்பாங்குடைய மக்களைக் கொண்டதாக இருக்கும் என்பார்கள். ஆனால், இந்த விடயத்தில் தமிழக மக்களின் மனப்பாங்கிலிருந்து இந்திய மக்களின் மனப்பாங்கு மாறுகிறதா?
தூக்கு: தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறும் மத்திய அரசின் மூக்குடைக்கும் வழி என்ன?
http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_5747.html
ராஜீவ் கொலையில் சு.சாமி மீதே வைக்கப்படும் குற்றச்சாடு குறித்து யாரும் அங்கு பேசாதது ஏன்?
மீனாவின் பேச்சு சிறப்பாக இருந்தது. அவர்களுக்கு மரண தண்டனை கொடுத்ததே முதலில் தவறு. சீரான விசாரணை நடக்கவில்லை என்பதே என் கருத்து. கார்த்திகேயனின் காவல்துறை மூளை ஓய்வு பெற்ற பின்னும் நன்றாகவே வேலை செய்கிறது. அதற்காக அவருக்கு பாராட்டுகளை சொல்லவேண்டும். ஆங்கில சேனல்களுக்கு சோ, சாமி, இராம் இவங்களை விட்டா தமிழகத்தை சேர்ந்தவங்க யாரும் கிடைக்க மாட்டாங்களா??
மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். மரண தண்டனையால் குற்றத்தை ஒழிக்க அல்லது குறைக்க முடியவே முடியாது.
தமிழர்களின் முதுகில் குத்தும் வேலையாக பின்புலத்தில் நிகழ்த்தப்படக் கூடுமெனபதை இவர்களின் எண்ண வெளிப்பாடாக வெளிவருகின்றன!
பாருங்கள் கட்டாயம் இவர்கள் முதுகில் குத்துவார்கள்
சட்டவல்லுநர்களின் கருத்து, இந்த தூக்கு ஆயுளாக குறைக்கப்பட முடியும் என்றே சொல்கிறார்கள். நல்லதே நடக்கட்டும்.
சு.சாமியின் வன்மம் தான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இப்படியும் ஒரு ஜென்மமா என்றே தோன்றுகிறது.
அருள்!வாங்க!பெரும்பாலான மத்திய அரசு அரசியல்வாதிகள் NDTVயில் கருத்து சொல்வதால் நான் அங்கேயே பெரும்பாலும் உட்கார்ந்து விடுவது வழக்கம்.டைம்ஸ் நவ் 2Gயோடு விட்டு விட்டேன்:)
நீண்ட பின்னூட்டத்தில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.ஜனதா கட்சியின் ஆட்சிக்குப் பின் சுப்ரமணியன் சுவாமியின் அரசியல் கேஸ் போடும் பேர்வழியென்று தூங்கியே கிடந்தார்.ஆனால் 2Gயில் அவரது பங்கு வடநாட்டு ஊடகங்களை உசிப்பி விட்டது.கருணாநிதி நிலைப்பாடும் இல்லாமல்,ஜெயலலிதா நிலைப்பாடும் இல்லாமல் இவரது நோக்கம் என்னவென்று பார்த்தால் சம்ஸ்கிருதம் வளரனும் என்பதோடு தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடே உள்ளது.ஆனால் இவர் இலங்கை குறித்த தீர்வாக மூன்று விடயங்களைத் தொடுகிறார்.இதுபற்றி இனி வரும் பதிவுகளில் தொட இயலுமா என்று பார்க்கிறேன்.
சோ உண்மையான நடுநிலையாளனாக இருந்தால் விடுதலைப்புலிகளின் மௌனத்துக்குப் பிறகு ஈழ தமிழ் மக்கள் துயரங்கள் பற்றிக் குரல் கொடுத்திருக்க வேண்டும்.ஆனால் சோவுக்கோ,சுப்ரமணியன் சுவாமிக்கோ தமிழர்களுக்கு எதிரான ராஜாஜி வழியிலான உள் திட்டங்கள் (Hidden agenda) உள்ளன.வெறும் டம்மி பீசுகளாகவே தமிழகத்தைப் பொறுத்தவரை ஈழத்தமிழர்கள் விசயத்தில் இவர்களை செயல்பட வைப்போம்.
தேசிய அடையாளத்தில் தமிழர்கள் என்ற உணர்வை நாம் காட்டாவிட்டாலும் நம்மை சுற்றி வீசும் வலை அதனை நோக்கியே செல்கிறதென நினைக்கிறேன்.குறைந்தபட்சம் மொழி உணர்வை வளர்க்கவாவது எதிர்ப்புகள் பயன்படட்டும்.
உங்கள் தொடுப்பை பின்னூட்டத்திற்கு பின் பார்க்கிறேன்.நன்றி.
//Rathnavel said...
நல்ல பதிவு.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html//
உங்களின் தொடர் பின்னூட்ட ஆதரவுக்கு நன்றி.
//செங்கோவி said...
ராஜீவ் கொலையில் சு.சாமி மீதே வைக்கப்படும் குற்றச்சாடு குறித்து யாரும் அங்கு பேசாதது ஏன்?//
பம்பாய் குண்டுவெடிப்பில் முஸ்லீம்களின் ஓட்டுரிமையை நீக்கவேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி சொன்னதாக மீனா கந்தசாமி எதிர்க்கணை விடுத்தார்.அதோடு அரசியல்வாதிகளின் தலையீடு என்பதையும் அவர் குறிப்பிட்டார்.அதற்குள் பர்கா தத் பதிவர் அமுதவன் சொல்வது போல் இடைமறித்து திசை திருப்பி விட்டார்.
சுப்ரமணியன் சுவாமி மீதான திருச்சி வேலுச்சாமியின் குற்றச்சாட்டை விவாதிக்க வேண்டிய கால கட்டமிது.
//குறும்பன் said...
மீனாவின் பேச்சு சிறப்பாக இருந்தது. அவர்களுக்கு மரண தண்டனை கொடுத்ததே முதலில் தவறு. சீரான விசாரணை நடக்கவில்லை என்பதே என் கருத்து. கார்த்திகேயனின் காவல்துறை மூளை ஓய்வு பெற்ற பின்னும் நன்றாகவே வேலை செய்கிறது. அதற்காக அவருக்கு பாராட்டுகளை சொல்லவேண்டும். ஆங்கில சேனல்களுக்கு சோ, சாமி, இராம் இவங்களை விட்டா தமிழகத்தை சேர்ந்தவங்க யாரும் கிடைக்க மாட்டாங்களா??
மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். மரண தண்டனையால் குற்றத்தை ஒழிக்க அல்லது குறைக்க முடியவே முடியாது.//
நீங்க முன்னாள் சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன் பற்றிக் குறிப்பிட்டதால் ஷிட்னி ஷெல்டன் நாவலின் க்ளைமாக்ஸை இங்கே அவிழ்த்து விடலாம்.பேரறிவாளன் தான் குற்றமற்றவர் என்று வாதாடுகிறார்.கார்த்திகேயன் வாதப்படி குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டுமென்கிறார்.இப்படித்தான் கதாநாயகனும்,பணக்காரனுக்கு வாழ்க்கைப்பட்ட இரண்டாவது கதாநாயகியும் காதலித்து கதாநாயகி மனைவியை கொல்ல முயற்சி செய்கிறார்கள்.பின் இருவரும் சிறையில் அடைக்கப்பட உங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டால் உங்களை தண்டனையிலிருந்து விடுவிக்கிறோம் என்று கவுன்சல் மூலமாக சொல்லி அதே போல் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்து மரணதண்டனை வாங்கிக் கொடுத்து வஞ்சம் தீர்க்கிறார் பணக்காரர்.
அமெரிக்க சட்டத்துறையிலும்,ஹாலிவுட் படங்களிலும் Not guilty என்ற வார்த்தை மிகவும் பிரபலம்.IMF ஸ்ட்ராஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்தாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது அவரது மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.ஆனால் நான் குற்றமற்றவன் என்ற வாதத்தை முன் வைத்து வெளியே வந்து விட்டார்.கார்த்திகேயன் சொல்வது மரணதண்டனை தற்கொலை.
குற்றங்கள் ஒழிய மேம்பட்ட மக்கள் வாழ்வும்,நல்ல சமூக சூழல்கள் மட்டுமே துணை புரியும்.மரணதண்டனையல்ல.
//sundarmeenakshi said...
தமிழர்களின் முதுகில் குத்தும் வேலையாக பின்புலத்தில் நிகழ்த்தப்படக் கூடுமெனபதை இவர்களின் எண்ண வெளிப்பாடாக வெளிவருகின்றன!
பாருங்கள் கட்டாயம் இவர்கள் முதுகில் குத்துவார்கள்//
அதை நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டுமாக்கும்:) அன்னா ஹசாரே உண்ணாவிரதம் முடிந்த சூட்டோடு கிரன்பேடி மீதும்,ஓம் பூரி மீதும் அவதூறு வழக்கு கொண்டு வந்து விட்டார்கள்.புதுசா சி.பி.ஐ தங்கள் சுய அதிகாரத்தை ஜன் லோக்பால் பாதிக்கும் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.தமிழர்களோ பிடிக்காத பொண்டாட்டி கைபட்டாலும் குற்றம்,கால் பட்டாலும் குற்றம்ன்னு நிலையில் மத்திய அரசுக்கு வாக்கப்பட்டிருக்கிறோம்.சொல்லவே வேண்டாம்:)
//செங்கோவி said...
// சட்டவல்லுநர்களின் கருத்து, இந்த தூக்கு ஆயுளாக குறைக்கப்பட முடியும் என்றே சொல்கிறார்கள். நல்லதே நடக்கட்டும்.
சு.சாமியின் வன்மம் தான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இப்படியும் ஒரு ஜென்மமா என்றே தோன்றுகிறது.//
இடைக்காலத் தடை,சட்டமன்ற தீர்மானம் என்ற இரு வலுவான நிலையில் மட்டுமே மேற்கொண்டும் தண்டனை குறைக்கவோ அல்லது முந்தைய நிலைப்பாட்டில் இன்னும் காலம் கடத்தவோ முடியும்.சட்டநுணுக்கங்களின் ஓட்டைகளை காங்கிரஸ்,சுப்ரமணியன்,சோ போன்றவர்களும் கவனிக்காமல் இல்லை.தமிழக மக்களின் எழுச்சியோடு நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்.
பாஸ்!சுப்ரமணியன் சுவாமிக்கு வன்மத்துக்கு காரணம் என்னவென்று நானும் அவரது தளத்தில் தேடிப்பார்த்தேன்.அவர் சொல்லும் காரணம் விடுதலைப்புலிகள் மார்க்சீய வாதிகளாம்:) ஆனால் அவர் இலங்கைப் பிரச்சினைக்கு மூன்று முக்கிய தீர்வுகளை முன்வைக்கிறார்.நீங்க சரின்னு சொன்னா அதுகுறித்து ஒரு பதிவு போட்டு விடலாம்!அவரது தளம் பழைய கதைகள் பல சொல்கிறது.ஆனால் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் திருச்சி வேலுச்சாமி முன் வைக்கும் குற்றச்சாட்டும்,சந்திரசாமி பற்றியெல்லாம் குறிப்பிடாமல் எஸ்கேப் ஆகி விடுகிறார்.
@
அவசரம்: 3 பேரின் தூக்கு தண்டனையை எதிர்ப்போர் கவனத்திற்கு!
http://arulgreen.blogspot.com/2011/09/3.html
ராஜ நடராஜன் கூறியது...
// //சட்டசபையின் தீர்மானத்தின் மீதான ரோசய்யா ரோசமாய் செயல்படுவதைப் பொறுத்தே மூவருக்கான நம்பிக்கை.// //
சட்டசபை தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படுகிறது. எனவே, இது ஆளுநரை கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்தான். அதேநேரத்தில், 3 பேரும் புதிய மனுவை அளித்து அதன்மீது மாநில அமைச்சரவை முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பினால் இந்த சிக்கல் எளிதாக முடிந்துவிடும்.
3 பேர் சார்பாக மற்றவர்களும் மனு அளிக்கலாம் என்கிற நிலை உள்ளதால், ஏற்கனவே பி.யு.சி.எல் அமைப்பு கருணை மனு அனுப்பியுள்ளதால் அதையே கூட ஏற்கலாம்.
இப்போதைய சிக்கல் சட்ட வழிகள் அல்ல, அரசியல் உறுதிதான். அந்த உறுதி இப்போதைய முதல்வருக்கு இருக்கும் என்றே நம்புகிறேன்.
Post a Comment