ஹுசைனின் ஓவியம் பற்றிய ஒட்டிய விவாதங்களூம்,அவருக்கு எதிரான எதிர்வினைகளுக்கான இடுகைகளும்,பின்னூட்டங்களும் எனக்கு ஒரு புரிதலை தந்தது.அதாவது கருத்து விவாதம் என்பதை விட பொருளின் கரு யாரால் சொல்லப்படுகிறதென்பதே முன்னிறுத்தப் படுகிறது.
என்னை மாதிரி நோஞ்சான் பதிவராக இருந்தால் ஒரு பார்வையிட்டு விட்டு ஒதுங்கிப் போகும் மனப்பான்மையோ,பிள்ளைப் பூச்சியையெல்லாம் அடிப்பதா என்ற பரிதாபம் கொண்டோ,நமக்கு நிகரான கருத்துவாதியா என்றோ,மூக்குல ரோசம் வர்றமாதிரி எழுத மாட்டேன்கிறானே என்று அகன்று போவதையும் அவதானித்தேன்.அப்படியும் வந்து விட்டோமே என்று நாகரீக எதிர்வினை மாற்றுக்கருத்து பின்னூட்ட நண்பர்களுக்கும் நன்றி.இதே எதிர்வினைக்காரர்கள் இன்னொரு பிரபல பதிவரின் தளத்திற்கு சென்றால் விவாதத்திற்கான களம் மாறி வார்த்தை சொற்றாடல்கள் மாறிப் போகின்றன.எனவே யார் யார் வாய் எப்பொருள் கேட்பினும் சொல்பவரின் பெயர்ச்சொல் முன் நிற்கும் புதிய மொழியை உணர்ந்து கொண்டேன்.
இப்பொழுது லீனா மணிமேகலை என்ற பெண்ணின் கவிதைகள் விவாதப் பொருளாகியுள்ளது.நிர்வாணம்,உடல் பற்றிய உணர்வுகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் உளவியலாக தனிமனிதனுக்கு ஒரு அதிர்ச்சியை தருகிறது என்ற புரிதலையும் இப்பொழுது ஏற்படுத்துகிறது.ஆனால் தனிமனிதக் கோபங்கள் ஒரு இசத்துக்குள் நுழையும் போது விவாதப் பொருள் ஒரு புதிய வடிவம் பெறுகிறது.
உதாரணம் லீனா மணிமேகலையின் கவிதைக்கு இந்துக்கட்சி என்ற புதுமுக அறிமுகமும்,சித்தாந்தவாதிகளான கம்யூனிஸ்ட்டுகளும் குரல் கொடுப்பது.ஒரே பொருள் இரு விதமாகப் பேசப்படுகிறது.இருவருக்குமான காரண காரியங்களை விளக்க வேண்டிய அவசியமில்லை என்பதை லீனா மணிமேகலை குறித்த விமர்சனங்களை கவனித்து வருபவர்களுக்கு புரியும்.
ஹுசைன் விசயத்தில் இந்துக்கடவுள்களை கொச்சைப்படுத்தும் ஹுசைன் முகமதுவை அப்படி வரைய துணிவாரா என்ற கேள்விக்கு நிகராக லக்கிலுக் யுவகிருஷ்ணா "கம்யூனிஸத் தலைவர்களுக்கு பதிலாக பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பின், வினவுத் தொழர்கள் செய்த கலாட்டாவை விட மிகப்பெரிய கலாட்டாவை திராவிட இயக்கத்தவர் செய்திருப்பார்கள்."
கலாட்டாக்கள் செய்தே கட்சி வளர்த்த பரம்பரைக்காரர்கள் அல்லவா நாம்,எனவே அந்த உணர்வுகள் நமத்துப் போகாது என்பதுடன் குறிப்பிட்ட தலைவர்கள் விவாதத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என்ற மாயையிலிருந்து விடுபட நாம் விரும்பா விட்டாலும் திராவிட இயக்கத்தில் கூடவே பயணித்த கண்ணதாசன் ஏற்கனவே திராவிட தலைவர்களில் சிலரை துவைத்து காயப்போட்டு விட்டார்.
கண்ணதாசன் பற்றிக் குறிப்பிடும் போது அவரது காலத்தில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் கூட விவாதத்திற்குட்படுத்தாமல் திறந்த புத்தகமாக இருந்து போய் விட்டார்.அப்படியும் அவரது கூந்தல் கருப்பு,குங்குமம் சிவப்பு,எலந்தப்பழம் போன்ற பாடல்கள் பொது மேடைகளில் விவாதங்களுக்குட்பட்டதும் அதனையெல்லாம் பின்னால் தள்ளி விட்டு அவரது சினிமா பாடல்களின் கவிதை வரிகளும்,அர்த்தமுள்ள இந்துமதமும் மக்கள் மனதில் நிரந்தரமாக குடிகொண்டு விட்டது.
அண்ணா,கருணாநிதி போன்றவர்களின் துவக்க கால திராவிட இலக்கியங்களும் கூட காலம் கடந்து எடைபோடும் போது நகைப்புக்குரியதாக இருந்த போதிலும் அந்தக்கால கட்டத்தில் சிலரை கோபப்படுத்தியிருக்கும் என்பதையும் கடந்து அவர்களின் பொது முகங்கள் மாறிப் போயிருக்கின்றன.
எரிக்கா யங்க்(Erica Yong) என்ற 1942ம் ஆண்டு பிறந்த ஜெர்மன் யூத பெண் எழுத்தாளரும்,கவிதாயினியும்,1970,80களின் கால கட்டத்து கேரளத்து எழுத்தாளரும்,கவிதாயினிமாகிய கமலாதாஸின் என்னுடைய கதை,அவரது ஓவியத்துக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்ததும் கூட அந்த அந்த கால கட்டத்தில் ஆணாதிக்க மனோபாவங்களுடன் விவாதங்களை ஏற்படுத்தியது.ஆனால் காலங்கள் கடந்து இவர்களின் கவிதைகள் இன்றும் உயிரோடு நிரந்தரமாகி விட்டன.எனவே லீனா மணிமேகலையின் தொடர்ந்த கவிதைகள் மட்டுமே விமர்சனங்களை கடந்தும் நிலைத்து நிற்கும்.