தகவல்கள அனைவரையும் போய் சேர இயலாத தமிழகத்தின் மழை இடரிலும் கமலின் வெட்கபடுகிறேன் கருத்து பொது தள விவாதமாகி இருக்கிறது.முன்பெல்லாம் கமல் அரசியல் சாயம் ஒட்டாமல் அறிவு ஜீவி கருத்துக்களை பட வசனங்களில் மட்டும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.தானுண்டு தன் வேலையுண்டு இருந்தபோது இவர் ரொம்பத்தான் தலை கர்வமாக்கும் என்று கிட்டியது பிம்பம்.
நிற்பதுவோ!நடப்பதுவோ! வெறும் காட்சி பொருள்தானோ? யாமறியோம் கமல் சார்!
முந்தைய சூழலை புரட்டிப் போட்டது விஸ்வரூபம் பட வெளியீடு சிக்கலும் அதன் மன அழுத்தத்தில் வெளிநாட்டுக்கு போய் விடுவேன் என்ற மனவெளிப்பாடும் விமர்சனத்துக்கும்,எதிர்வினைக்கும் வசதியாகிப் போனது அவரது விஸ்வரூப காலத்து மனநிலை. பிரச்சினைகளிலிருந்து வெளிவந்த பின் தனக்கு ஆதரவும் அன்பு வெளிப்பாடுகளும் இருப்பதை உணர்ந்த பின் தான் சார்ந்த சமூகம் குறித்து கருத்துக்களை இப்பொழுது கொஞ்சம் அதிகமாகவே வெளிப்படுத்துகிறார்.வாய் மூடி மவுனிப்பதை விட எதிர்வினைகள் நல்லதுதான்.மௌனம் சிக்கலில்லாதது. எதிர்வினைகள் வரலாற்றை சொல்லி வைக்கும்.
தூங்கா வனம் சந்தானம் மூலம் வசனம் வைத்தது போல் ரெண்டு டூயட் பாடிக்க,சண்டை சீன் வச்சுக்க உனக்கு ஏன் கருத்து வசனம் போல மேடம் ஜெயலலிதாவும் அமைச்சர் மூலம் அரசு அறிக்கை விடுகிறாரோ! தமிழகத்தின் பெரும் மழையில் தனது இயலாமை குறித்து வெட்கப்படுகிறேன் என்ற கருத்துக்கு மழையின் துயரத்தில் இருக்கும் பல கோபக்குரல்கள் பொது கருத்தாக ஒலித்தது ஜனநாயக கோப வடிவம் பெறுகிறது.
ஜெயலலிதா என்ற ஆளுமையை மதிக்கத் தெரியாத வாய் மூடி,சிரம் தாழ்,சீர் மண் தாழ்,பெண் கால் தாழ் என மூச்சு ஒன்றை தவிர அம்மா புராணம் பாடும் அமைச்சர்களில் மூத்த அமைச்சர் அம்மாவின் குரலாக கருத்து கந்தசாமி என கமலுக்கு மறு அறிக்கை விடுகிறாரோ அப்பொழுதிலிருந்து கமலின் கேள்வியின் வடிவம் உரு மாறுகிறது.
கமலின் கேள்வியில் என்ன தவறு? நான் ஒழுங்காக வருமான வரி கட்டுகிறேன் என்ற கருத்தில் சொல்லின் ஆழம் நிறைய நிறைந்து கிடக்கிறது. காதுள்ளவர்கள் கேட்க கடவர்.கண்ணுள்ளவர்கள் பார்க்க கடவர்.பொது நலனுக்கு உதவுவதோடு தனி மனித திருப்தியடைந்து விடுகிறது மனம்.சிறு துளி பெரு வெள்ளம் எங்கே கரை சேர்கிற்து என்பது யாருக்கும் தெரிவதில்லை. இதோ இப்பொழுது காணாமல் போன சென்னை வடிந்த மழை மாதிரி.
சுனாமியிலேயே நாம் பாடம் கற்றுக்கொள்ள வில்லையென்ற போதிலும் நம்மிடம் இன்னும் குறைகள் நிறைய இருக்கிறது என்ற போதிலும் மனிதாபிமானம் நிறைந்து இருக்கிறது அவசர நேரத்து பெரும்பாலான உதவிகளை சுனாமி காலத்தும் இப்பொழுதும் காண முடிந்தது.அதே போல் அவசர பொருளாதார உதவிகளும் சுனாமி காலத்தும் இப்பொழுதும் வந்தடைகின்றது. சுனாமி காலத்து பொருளாதார கணக்குகளை யாராவது ஒருவர் வெளியிட முடியுமா? அரசு இயந்திரத்திடம் வெளிப்படத் தன்மையில்லையென்பதால் உதவுவதோடு நாம் மனதால் திருப்தி பட்டுக்கொண்டு வாழ்வில் மேலும் நகர்ந்து கொண்டுள்ளோம்.
கமலின் வெட்கத்தை பிடிக்காதவர்கள் பலர் சமூக தளங்களில், தொலைக்காட்சிகளில் தங்கள் அதிருப்தியை வெளிப்படித்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக அரசு தரப்பிலிருந்து அறிக்கை வருவதில் மெல்லப் புகைவதை ஊதிப் பெரிதாக்கி விடுவதாகவே முடியும். இது தனிமனிதனின் கருத்து என்று எண்ணாமல் கமல் என்ற மனிதனின் கருத்துக்கு வலு சேர்ந்து விடுமென்றும் எதிரணிக்கு சாதகமாக முடியுமென்று அறிக்கை விடுவது தற்போதைய சூழலில் அ.தி.மு.கவுக்கு பாதகத்தையே உருவாக்கும்.
தேர்தல்களை,குறிப்பாக தமிழக தேர்தல் முடிவுகளை மக்களின் தேர்தல் காலத்து மனநிலையே முடிவு செய்கின்றன. படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற படிக்காத மேதை காமராஜர் கூட தோற்றுப் போயிருக்கிறார்.
அம்மா அரசாமிகளை விட கருத்து கந்தசாமிகள் ஜனநாயகத்தின் பிரதிபலிப்புகள்.