Followers

Showing posts with label பதிவுகள். Show all posts
Showing posts with label பதிவுகள். Show all posts

Saturday, October 24, 2015

பதிவுலக ராதாரவிக்கு

நண்பரே!ஓடிக்கொண்டிருப்பதாலும்,இணைய தடங்களாலும் உடனடியாக மல்லுக்கு நிற்க முடியாததற்கு முதலில் உங்களுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.இலவச விளம்பரத்துக்கு நன்றி என்று பின்னூட்டம் போட்டால் கூட வெளியிட மறுக்கும் நண்பரே உங்கள் பதிவு பாணியிலேயே பதில் சொல்ல வேண்டி காலம் கடந்து தட்டச்சுகிறேன்.

தமிழ்மணம் இப்பொழுதெல்லாம் சண்டை களமில்லாமல் அழகாய் நகர்கிறது.அதற்கான காரணங்களில் விவாதப் பொருள் உரைப்போரும், முக்கியமாக கருத்தாளர்கள்,சண்டைக்கோழிகள் பெரும்பாலும் ட்விட்ரேன், முகத்தை பார்க்கிறேன்,பஸ் விடறேனாக்கும்,பதிவே போட மாட்டேன்... ஆனால் பின்னூட்டத்தில் கவனிச்சுக்கிறேன் என்று பலர் பிரிந்து போனதாக இருக்கலாம். 

பதிவுகள் எழுதுவதை விட மற்றவர்களின் பார்வைகள் எப்படி என்று கவனிக்கும் எனக்கு முன்பு மாதிரி பதிவுலகமே கிடையா இருக்க முடியவில்லை. இதோ போன வார கோழிச்சண்டைக்கே இப்பத்தான் பதில் சொல்ல முடிகிறது.

திரைப்படங்களை நியூஸ் ரீலில் துவங்கி,டைட்டில் கார்டில் பெயர்கள் பார்த்த படங்கள் முதல்,கதாநாயக,நாயகிகளை பின் தள்ளி இளையராஜாவின் இசை,ஒளிப்பதிவாளர்கள் அசோக் குமார்,ஸ்ரீராம்,எடிட்டிங் லெனின்,விஜயன் இன்னும் பல தொழில் நுட்ப கலைஞர்கள்,கவுண்டமணி,செந்தில்,வடிவேல் காலம் என மாறிய போதும் கூட திரைப்படங்கள் அனைத்தும் பார்க்கும் ஞான பண்டிதம் என்னிடம் இல்லை.நடிகர்,நடிகைகள்,இசை,ஒளிப்பதிவு.கதை நல்லாயிருக்கு என விமர்சனம் படித்தோ,இப்பொழுது பதிவர்கள் பலர் ஆஹா,ஓஹோ என்றால் மட்டுமே சில படங்களை இப்பொழுது இணையத்தில் பார்க்கிறேன்.

முக்கியமாக உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, மேதாவித்தனம் என்ற அகம்பாவம் என்னிடம் இல்லை.அப்படி புரிந்து கொண்டால் அது உங்கள் பார்வை. இணைய தளமும்,கைபேசியும் வராத கால கட்டத்தில் என் குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் கூட இதே பாணியில் தான் நான் கடித பரிபாஷை செய்துள்ளேன். இவன் கடிதம் எழுதுகிறானா இல்ல கதை வசனம் எழுதுகிறானா என்ற கிண்டலை என் அண்ணனிடம் வாங்கி கட்டியுள்ளேன்.

பூச்சி முருகனை நினைத்துத்தான் கருத்து சொன்னேன். ஆனால் சங்கிலி முருகன் பெயரை கை தட்டி விட்டது. பின்னூட்டத்தில் பெயர் குழப்பத்தை லூஸ்ல விட்டுட்டேன்.ஆனாலும் நம்ம நக்கீரன் பொருள் குற்றம் கண்டு இலவச விளம்பரம் தந்து விட்டார்.பதிவின் கருத்துக்கள் எதையும் அடைகாத்து சொல்வதில்லை. அந்த அந்த நேரத்து மன நிலை,நிகழ்வுகளை ஒட்டியே கருத்து சொல்லியிருக்கிறேன். 

கலைஞர கருணாநிதி தமிழகத்துக்கு நிறைய செய்திருக்கிறார்.நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். ஆனால் 2ஜி கால கட்டத்தில் குடும்ப நலனை முன் வைத்து ஈழ பிரச்சினையை திசை திருப்பியதை ஆதங்கத்தோடு சொன்னால் அப்ப நீ அ.தி.மு.கவுக்கு வால் பிடிக்கிறவன் தானே என்று நண்பர் பிராண்டுவார். எந்த கட்சிக்கும் வாக்க படாததால் நேர்,எதிர் கருத்துக்களை மட்டுமே முன் வைக்கிறேன். எங்கோ யோகா பற்றி சொல்லியிருக்க கூடும்.அல்லது இஸ்லாமிய சகோதரர்கள் பிரச்சாரம் பண்ணுறேன் பேர்வழிகள் என பதிவுகள் இட்ட கால கட்டத்தில் அரசல் புரசலாக பின்னூட்டங்களும்,பதிவும் வந்திருக்கலாம். உடனே நீ இந்துத்வா என்று இவர் பல்லிளிக்க நான் பல்லை எனக்குள்ளே நற நறக்க... இதோ இப்பொழுது மோடியின் தேனிலவு முடிந்து விட்டது.மாட்டுக்கறி,அப்பாவி இஸலாமியரை கொலை செய்த பஜ்ரங்க பலிகள் பற்றி சொன்னால் எனக்கு பச்சை வர்ணம் பூசுவீரோ?  

எங்கடா சந்து கிடைக்கும்,பேந்தா ஆடலாம்ன்னு பின்னூட்ட நாயகன் வவ்வால் ஏதாவது சொன்னால் நம்ம நண்பர் மாற்று கருத்தை முன் வைப்பார். அவர் ஒன்றை சொல்ல,இவர் ஒன்றை சொல்ல நான் பேன்னு பேய் முழி முழிப்பேன். ஒரு கட்டத்தில் வரம்புகள் மீறி அண்ணன் ராதாரவியின் அங்குசத்தை வீசுவார் நண்பர். நீங்க பதிவுலகில் சொன்னதை விட,சண்டை தவிர... வவ்வால் நிறையவே சொல்லியிருக்கிறார் என நான் பிராண்ட இவருக்கு அமெரிக்காவில் எகிறுவதை எழுத்திலேயே உணர முடியும்.ஏற்கனவே வவ்வால்,ஜெயதேவ் போன்றவர்கள் உங்களை துவைத்து காயப்போட்டு விட்டார்கள். இனி புதிதாக நான் என்ன சொல்ல! உங்கள் பதிவுலக உறவுகள் முறிந்து போனாலும் கூட நான் நட்போடுதானே உங்களை கிண்டல் செய்திருக்கிறேன். உங்கள் தமிழ்,ஆங்கில மொழி நடைக்கு இதை விட இலக்கண,இலக்கிய லட்சணமாய் யாரும் சண்டை போட முடியாது.

பதிவுலகம் நல்ல பாடங்களைத்தான் நிறைய கற்றுத்தந்திருக்கிறது. ஒரு கருத்துக்கு பல பரிமாணங்கள் இருக்கிறது என்பதை நண்பர் மற்றும் வவ்வால் போன்றவர்களின் கருத்து மோதல்களில் கற்றுக்கொண்டிருக்கிறேன்.. எனக்கு பிடிக்கும் கருத்துக்கள் இன்னொருவருக்கு பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்து கொண்டுள்ளேன். எதற்காக பதிவிடுகிறேன்? எனக்காகவா!பிறரின் கவனம் ஈர்க்கவா என்ற புரிதல் கூட இன்று வரை என்னிடமில்லை.

எத்தனை பேர் பொது வெளியில் இருக்கிறார்கள் என்று கருத்துரிமை காரணம் காட்டி விமர்சனம் செய்திருப்பேன். அதே போல் நானும் விமர்சனத்துக்கு உட்பட்டவனே. ஆனாலும் இன்னும் என்னை மற்றவர்கள் விமர்சிக்கும் தகுதி நிலைக்கு வளரவில்லையென்பதையும் அறிவேன். ஏதோ உங்களைப் போன்றவர்கள் அருள் பார்வை கிடைக்கிறது.

பதிவுகளில் கருத்து சொல்வதற்கும் தமிழக அரசு இயந்திரங்களும்,மனிதர்கள் இயங்குவதற்கும் நிறைய வித்தியாசங்களை சமீபத்தில் அனுபவ பூர்வமாக கண்டேன்.பதிவுலகம் தீவு மாதிரி.வழி தவறி வந்து விட்டவர்கள் எப்படியோ வழி தேடி ஓடி விட்டார்கள். ஏதோ சிலர் இன்னும் ஓடிக்கொண்டும் தேடிக்கொண்டுமிருக்கிறோம்.

பூச்சி முருகனும் சங்கிலி முருகனும் பெயர் குழப்பத்திற்கு என்னை மன்னிப்பார்களாக!மூளை பதிவு செய்ததை கணினி சரியாக கொண்டு வரவில்லை.மீள் பார்வை பார்க்காத குற்றத்தால் தவறு தவறாகவே போய் விட்டது.

அய்யே! இந்த பதிவை பதிவேற்றும் முன் நண்பர் நம்ம பின்னூட்ட கருத்து வெளியிட்டிருக்கிறாரா என்று பார்த்தேன்.ம்ஹும்! பதிலா பதிவுலகம் போரடிக்கிற மாதிரியிருக்குதே தோரணையில் ஏதோ புலம்பிகிட்டிருக்கார். இதோ! ஏதோ என்னால் ஆன உதவி:)

Sunday, December 21, 2014

மறுபடியும் வவ்வாலை காணவில்லை

பதிவர் அமுதவன் இடுகை காண நேர்ந்தது. யார் இந்த வவ்வால்? யாருக்காவது தெரியுமா?வவ்வால் வருவதும் வந்து விட்டு ஓடிவிடுவதும் இது ஒன்றும் முதல் முறையல்ல. எனது பழைய பதிவுகளை தேடியதில் 2008ம் வருட தினங்களில் ஒரு முறை காணாமல் போயிருக்கலாம்.தமிழ்மணத்தில் இணைவதில்லையென வவ்வால் விஸ்வாமித்திர சபதம் எடுத்துக்கொண்டும் அவரது பதிவை தேடிப் போய் வாசிக்கும்,சண்டை போடும் பதிவுலக வாசகர்கள் ஏராளம். அனானிகளின் குரு:)

மறுபடியும் 2010ம் ஆண்டு வாக்கில் காணவில்லை என காணா பாடியிருக்கிறேன். என்பதால் வவ்வால் மறுபடியும் பறக்கும் சாத்தியங்கள் உண்டு. ஆனால் எப்பொழுது வருவார் எனபது யாருக்குமே தெரியாது.முந்தைய வனவாசத்திற்கான காரணங்களில் இணைய தொடர்பு இல்லாத சூழல் என்று சொன்னதாக நினைவு.

இப்பொழுது மறுபடியும் காணவில்லையென பதிவர் அமுதவன் தேடுகிறார்.  எங்கிருந்தாலும் அவரின் பின்னூட்ட பகுதிக்கு வவ்வால் வரவும்.

எத்தனை அடிச்சாலும் தாங்குவேன் எனும் சில பதிவுலக நண்பர்களில் ஒட்டியும்,வெட்டியும் அசத்துவதில் வவ்வால் குறிப்பிடத்தக்கவர்.  2010க்குப் பின் திரும்ப வந்ததில் கடந்த நான்கு ஆண்டுகளாக பதிவர் அமுதவன் சொன்னமாதிரி ஆள் யார் என்பது முக்கியமில்லை,சொல்லும் கருத்துக்கு மட்டுமே விவாதம் என்று விவாதத்தின் அடிநுனி வரை சென்று பெரும்பாலும் வெற்றிவாகை சூடுவதோடு சிலசமயம் மூக்கை உடைத்துக்கொண்டும் வருவது வழக்கம்.சரி!முட்டுச்சந்தில் வைத்து குத்துகிறார்களே இனி அந்தப்பக்கம் போவதில்லையென்ற சபதமெல்லாம் வவ்வாலுக்கு கிடையாது.அடுத்த பதிவுக்கும் போய் பின்னூட்ட முய் வைக்கும் விருப்பு வெறுப்பு இல்லாத பறவை வவ்வால்.முகமூடிகள்,அனானிகள், என்னைப்போன்ற இரண்டும் கெட்டான் என பதிவுலகம் அதளகளப்படுவதை அவரது எழுத்துக்களை விரும்புவோர்,விரும்பாதோர் அனைவரும் அறிவர்.. அவரது பதிவுகளை தொடர்பவர்கள் வரிசையை அவரது பின்னூட்டங்கள் சாட்சி சொல்லும்.

தமிழ்மணத்திலாவது பதிவு கண்ணில் பட்டது அதனால் கருத்துக்கும்,சண்டைக்கும் வருகிறேன் என்று சொல்ல காரணம் உண்டு.ஆனால் வவ்வால்-தலைகீழ் விகிதங்கள்   தளத்தை தேடிச்செல்பவர்கள் மட்டுமே அவரது எழுத்து மற்றும் சண்டைப்பிரியர்கள். அவரது பதிவுகளின் எண்ணிக்கையை விட பின்னூட்டங்களின் எண்ணிக்கையே அதிகம்.

முந்தைய விவாதக்களம் தமிழ்மணத்தில் குறைந்த மாதிரி தெரிகிறது.பலரும் தமிழ்மணத்திலிருந்து விலகி முகநூல் பக்கம் சென்று விட்டார்களா என தெரியவில்லை.தமிழ்மணம் ஒரு மந்த நிலையில் இயங்குற மாதிரி தெரியுது. இதில் வவ்வாலின் பதிவுகள்,பின்னூட்டங்கள் இல்லாதது இன்னும் சுரத்தை குறைக்கிறது.

வவ்வால் நீங்கள் சொல்வதற்கு,சொற்போர் புரிய இன்னும் நிறைய இருக்கின்றன. திரும்ப வரவும்.

Thursday, August 30, 2012

அச்சு பதிவுகள் சாத்தியமா?

மச்சி!மறுபடியும் ஓப்பன் த பாட்டில்!நான் என்னைச் சொன்னேன்:)

முதற்கண் பதிவர் குழுமம் விவாதங்களையும் தாண்டி வெற்றிகரமாக அமைந்ததற்கு மகிழ்ச்சியோடு அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நேரலை,பதிவுகள்,புகைப்படங்கள் காணும் போது பதிவர் குழுமத்தாரின் உழைப்பு,நிர்வாகத் திறன் போன்றவற்றை உணர முடிகிறது.சந்திப்பை தொடர்ந்து பட்ஜெட் தணிக்கை அறிக்கை வெளியிட்ட வெளிப்படத்தன்மை போன்றவையும் வரவேற்க கூடியவை.

முந்தைய கால கட்டமான பதிவர் குழுமம் வேண்டும் என்று பலரும்,இப்படியே போகட்டுமென்று சிலரும் நினைத்த இரட்டை குணத்தை தாண்டி பதிவர் குழுமம் அவசியம் என்பதை ஒன்று கூடல் உறுதிப்படுத்துகிறது.பலரின் எண்ணங்களுக்கு வடிகாலாக திரட்டிங்கள் உதவுகின்றன என்ற போதிலும் பதிவுகளின் சாரம் கணினி உபயோகிப்பாளர்களுக்கு மட்டுமே சென்றடைகிறது. தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை,கணினி உபயோகிப்பாளரகளின் எண்ணிக்கை போன்றவற்றை நோக்கும் போது இன்னும் பத்திரிகை, புத்தகங்கள் சார்ந்தே மக்களின் வாசிப்பு நிலை இருக்கிறது.

கூகிள் இடத்தைப் பட்டா போடச் சொல்லி பதிவுகள் எழுத இலவசமாக தளம் அமைத்துக்கொடுத்தாலும் கூட கூகிளுக்கு பொருளாதார ரீதியான நலன்களும் உள்ளடங்கியிருக்கிறது.பலர் தங்கள் கால நேரத்தை செலவழித்து சொல்லும் கருத்துக்கான அன்பளிப்பு பின்னூட்ட உற்சாகம்  மட்டுமே.

பதிவுகள் பொருளாதார ரீதியாகவும், கருத்துக்கள் பலரையும் சென்றடையும் சாத்தியமாக பதிவுகளை அச்சுப்படுத்தும் சாத்தியம் உள்ளதா?அப்படி ஒரு சாத்தியமேற்படும் நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளை பெரும்பாலோனோருக்கு கொண்டு செல்வது இயலும்.

பத்திரிகைகள் வாசிப்போரின் கட்டணத்தொகையை விட விளம்பரங்களின் மூலம் வரும் வருமானத்தை நம்பியே பத்திரிகை நடத்துகின்றன.பதிவுகளும் பத்திரிகை,புத்தக வடிவாகும் போது கட்டணத்தொகையோடு விளம்பரஙகளை  பெறவும் முடியும்.

மருத்துவம்,சட்டம்,கவிதை,திரைப்படம்,உரையாடல்கள்,உலக அரசியல்,ஈழம், மொழி,அறிவியல்,தொழில் நுட்பம்,சமையல் என ஒரு பத்திரிகை தருவதற்கும் அதிக பங்களிப்பை பதிவுலகம் மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியும்.அச்சுத்துறை சார்ந்தும் கூட நம்மிடம் பதிவர்கள் இருக்கிறார்கள்.இதே குழும சிந்தனையோடு பதிவுகள் அச்சாவதில் உள்ள சாதக பாதகங்களை பதிவுகளாக, பின்னூட்டங்களாக வருவதை வரவேற்கிறேன்.

Tuesday, April 28, 2009

எழுத்துக்கள் பல விதம்

சில எழுத்துக்கள் மனதில் கருத்தரித்து கணினியில் அடைகாத்தாலும் எல்லா எழுத்துக்களுமே உடனே பார்வைக்கு வந்து விடுவதில்லை.சில அப்போதைக்கே முட்டையிட்டு அடுத்த கண உஷ்ணத்தில் பிரசவிப்பதும் உண்டு.இன்னும் சில மன இறுக்கத்தின் நெருக்கத்தில் அப்படியே பிரசவமாகி விடுவதும் உண்டு.சரியான சுகப்பிரசவங்கள் நின்று வளரும்.

கொதி வந்து 10 நிமிசத்துல வடிக்கிற சோறு சீரியல் பார்க்குற அவசரத்துல கைப்பதம் சரியின்னு அப்படியே கொட்டி விடும் நேரங்களுமுண்டு.பக்கத்து வீட்ல பஜ்ஜி வாசம் வர்றமாதிரியிருக்கே நாம சாம்பாருக்கு ஊறவச்ச பருப்பை வடை சுட்டுப் பார்ப்போமேன்னு போட்டியாக தலைப்புக்கள் சில மாறி விடுவதும் உண்டு.

மீன் கவிச்சி தாங்கலயின்னாலும் கொளம்பு கொதிச்சு தட்டுக்கு வரும்போது ருசியாவும் சில இருப்பதுண்டு.தாளிக்காம சோறு எறங்காதுன்னு தமிழ்நாட்டு ருசிக்குத்தான் மவுசு அதிகம்.இதையெல்லாம் தாண்டி ரெண்டு வரி கவிதை ரத்தினச் சுருக்கம்,சிரிப்பே சிரிப்பு முத்திரைகளும் உண்டு.சில மெல்லிய தென்றல்.இன்னும் சில காட்டாறு.

பொன்னியின் செல்வன் எழுதுவதற்கு கல்கிக்கு எத்தனை நாளாச்சோ நானறியேன்.ஆனா ஒரு ஆங்கில எழுத்தாளனுக்கு 1500 பக்கத்துக்கு ஒரு நாவல் எழுத 4 வருசத்துக்கும் மேல் ஆச்சாம்.கேள்வி கேட்டவனே பதிலும் சொன்னானாம்.அப்ப ஒரு நாளைக்கு ரெண்டு வரிதான் எழுதியிருப்பாய் என்று.

எழுத்துக்கள் மென்மையாய் இருந்த காலங்கள் உண்டு.வாழ்க்கை நீரோட்டத்தின் பிரதிபலிப்பே எழுத்து என்பதால் கோப மூச்சுக்களே தமிழ் எழுத்தாய் பிரசவிக்கிறது இன்று.