வளைகுடா சீதோஷ்ண நிலையில் உணவா , சுவாசிக்கும் உஷ்ண,குளிர்சாதனக் காற்றா எதுவோ மனுசங்களை குண்டு பண்ணியே தீருவேன்னு கங்கணம் கட்டிகிட்டு திரியறது.இங்கிருந்து மீனு மாதிரி கொஞ்சம் தள தளன்னு இந்தியாவுக்குப் போனா ஒரு மாசத்துல திரும்ப வரும்போது காஞ்ச கருவாடு மாதிரி எல்லோரும் திரும்ப வர்றாங்க.அது இந்தியாவில் சுற்றும் அலைச்சலா,உணவா,நீரா,காற்றா எனத் தெரியவில்லை.எப்படியோ பெரும்பாலான இந்தியர்கள் உடல் ஆரோக்கியத்துக்கான உடற்பயிற்சிகளை அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக வைத்துக் கொள்வதில்லை பணம் என்ற பொருளாதார தேவை ஓரளவுக்குப் பூர்த்தியானாலும் கூட.
இந்தியாவில் இதய நோய்கள் அதிகரிக்கின்றன என்ற சமீபத்து செய்தி ஒன்று பார்க்க நேர்ந்தது.அதெப்படி அத்தனை வெயிலில் வேர்த்து விறு விறுத்து பஸ் ஏனைய பயணங்கள் செய்து உழைத்து அலுத்தும் நோய்கள் அதிகரிக்கின்றன.காரணம் இதயம் போன்ற உடல் உறுப்புகளுக்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக கிடைக்காமல் போவதாலா?பல் துலக்குவது,குளிப்பது மாதிரியான அன்றாட அலுவல்களில் ஒன்றாக கட்டாயம் காலையில் செய்ய வேண்டிய பணி உடற்பயிற்சி.முந்தைய நாளின் சோர்வான மனநிலையையும் உற்சாக கட்டுக்குள் கொண்டு வரும் உடற்பயிற்சி.அதிக நாள் உடற்பயிற்சி செய்யாமல் துவக்கமாக முதல் நாள் ஆரம்பித்தால் அடுத்த நாள் உடல் வலிக்கும்.உடல் வலியையும் பாராது இரண்டாம் நாள் தொடர்ந்தால் மூணாவது நாள் வலி தெரியாது.மூணாவது நாளிலிருந்து இரண்டு வாரம் தொடர்ந்து விட்டால் பயிற்சி பழக்கம் விடாது தொடரும்.
எனக்கு சரக்கு கிடைக்காத ஊர் காரணத்தாலும் அதன் காரணம் கொண்டே மது மீது ஈடுபாடு இல்லாத காரணத்தாலும் மது அருந்துவதில்லை.இருந்தாலும் துறவறம் பூண்டு இல்லறம் பற்றியெல்லாம் சிலப்பதிகாரம் எழுதின இளங்கோ மாதிரி நானும் சில சரக்கு குறிப்புகளை சொல்கிறேன்.பின்னூட்டத்தில் இதுபற்றியெல்லாம் நோண்டக்கூடாது என்ற அன்பு எச்சரிக்கையுடன் சில குறிப்புகள்.
அடப்போய்யா!நானெல்லாம் மட்டை போடற பார்ட்டி.இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுன்னு யாராவது நினைக்கிறவங்களுக்கு அதிகமான உடலுக்கு தேவையில்லாத ஆல்ஹகாலை உடற்பயிற்சி உள் இழுக்கும் காற்று வெளியேற்றும்.சரக்கடிச்சாலும் தவறில்லை உடற்பயிற்சி செய்யுங்கள்.
எனது மதிப்பீட்டில் சரக்கடிப்பது ஒரு கலை.ஆனால் அதனைக் கற்றுத் தேர்ந்தவர்களாய் பெரும்பாலோர் இல்லை.தண்ணி போடற மச்சிக சாராயம்,கள்ள சாராயம்ன்னுதான் கேட்டிருப்பீங்க.இது ரெண்டையும் விட சொந்த சாராயம்ன்னு ஒண்ணு இருக்கறது யாருக்காவது தெரியுமா?தெரியாட்டி தெரியாமலே இருப்பது நல்லது:)
எது சரியான தண்ணி போடற முறைன்னு தெரியல.பிலிப்பைன்ஸ்காரங்க நல்லா சாப்பிட்டு விட்டு சின்ன சின்னதா கல்ப் அடிக்கிறாங்க. நாம் தண்ணி போட்டு முடிஞ்சு அப்புறமா சாப்பிடறோம்.எப்படியோ சரக்கடிச்ச பிறகு வீட்டுக்கு ஒரு கொய்யா மரம் வளர்ப்போம்ன்னு சொல்றதுக்குப் பதிலா ரிலாக்ஸா ஒரு கருப்பு காபி குடிப்பது தலைவலி வராம தடுக்கும்.(உனக்கெப்படி தெரியும்?F&Bல படிச்சது)ஒரு டுனீசியாக்காரன் பழம் சாப்பிட்டு விட்டு உணவருந்துவது விஞ்ஞான பூர்வமா உடலுக்கு நல்லதென்றான்.நாம் சாப்பிட்டு விட்டு பழங்கள் அருந்துகிறோம்.எது சரியான முறை?தெரிந்தவர்கள் கருத்துக்கள் அறிய விரும்புகிறேன்.
கல்லூரிப் பெண்கள் KFC, பிஸாக்களை தவிர்ப்பது நல்லது.அம்மாக்கள் தரும் இட்லி,தோசை,உப்புமா நல்லது.கூட மாட அம்மாக்களுடன் அடுப்பறையில் உதவுவது உடல்,மனரீதியாக உதவும்.
முன்பெல்லாம் பெண்கள் வீட்டு வேலைகளை மட்டும் பார்த்துகிட்டு இருந்தாங்க.இப்ப அந்தப் பளுவோடு அலுவல் வேலைக்குமான பளுவும் வந்து சேர்ந்து பெண்களை யந்திரங்களாகவே மாற்றிய பெருமை ஆண்குலத்துக்கு சேரும்.30 வயதுக்கு மேல் சதை போடுதல்,அப்புறம் சர்க்கரை,அழுத்தம் போன்ற நோய்களை பெண்களும் தவிர்க்க உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.குழந்தைப் பேறு காலம் கூட நடை,சின்ன சின்ன வேலைகள் செய்வது அவசியம்.
புள்ளத்தாச்சிங்கிற கரிசனத்துலயும் மருத்துவர்கள் உதவியாலும் சுகப்பிரசவம் வரை எல்லோரும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்.ஆனால் அதற்குப் பிறகான பெண்களுக்கான தாய்மை வாழ்க்கை மாறுபாடும் உடற்பயிற்சிக்கு நிரந்தர ஓய்வைக் கொடுத்துவிடும்.பிரசவத்திற்கு பின்னான அடிவயிற்று சதை தொப்பையை உருவாக்கும் பிரச்சினைகளை பெண்கள் தவறவிட்டு விடுகிறார்கள்.ஒரு மாதம் வயிற்றுப் பகுதிகளுக்கான மஜாஜ்,மற்றும் சுடு நீர் குளியல் அவசியம்.இங்கே ஒரு கேரளத்துப் பெண் புள்ளத்தாச்சிக்கு தண்ணி ஊத்துறேன்ன்னு சொல்லியே ஒரு மாத அட்வான்ஸ் புக்கிங்க் செய்யுது.இந்த தண்ணி ஊத்துற விசயத்தில் பெண்கள் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.
அதென்னமோ தெரியல அத்தை,சித்தின்னு அம்மா ஒரு கிலோ,ரெண்டு கிலோ கருப்பட்டியும் அதுல கால்பாதி குருமிளகும் சேர்த்து அரிசு குத்துற கல்லுல உலக்கையால உஸ்,உஸ்ன்னு சத்தம் போட்டுகிட்டே கருப்பட்டியையும்,குருமிளகையும் மாவு பண்ணி உருண்டை செஞ்சு அத்தை,சித்தி,அக்காமார்களுக்கு பிரசவ சமயம் கொடுப்பாங்க.உர்ருன்னு பக்கத்துல நின்னு பார்த்துகிட்டு இருக்கும் எனக்கும் ஒரு விழுது கருப்பட்டி சொரக்குன்னு ருசியா கிடைக்கும்.பிரசவம் சமயத்தில இதைத் தின்னுட்டு அத்தை,சித்திகள்,அக்கம் பக்கத்து அக்கா மார்கள் பத்து நாளோ இல்லை பதினைந்து நாளோ காலத்துக்குள் தண்ணிக் குடத்த எடுத்து இடுப்புல வச்சிக்கிட்டு தண்ணி சுமக்கிற தைரியம் வந்துரும்.இப்ப அரசல்,புரசலா அம்மணி மூலமா சில தாய்மார்கள் குறைகள் கேட்க நேர்ந்தது.தற்காலப் பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும் கூட திராணியில்லாமல் போய்விடுகிறார்கள்(This is irrelevent of nationality).இந்தப் பெண்கள் எல்லாம் இந்தியா,இலங்கை,பிலிப்பைன்ஸ் ஆசிய நாட்டு வட்டத்துக்குள் வருபவர்கள்.
பரட்டை தலை ஸ்டைல் எல்லாம் முடி உதிர்தலில் கொண்டு வந்து விட்டு விடும்.நல்ல பிள்ளையா தேங்காய் எண்ணெய் தேய்த்து பக்க,நடு வகிடு எடுத்து பள்ளிக்கு,பின்னாடி டை கட்டுற வயசு வரைக்கும் செய்தால் தலை முடி கொட்டுதல்,நரை போன்றவைகளை தள்ளிப் போட முடியும்.கேரளத்துப் பெண்களின் நீண்ட முடிக்கு தேங்காய் எண்ணெய் காரணமென நினைக்கிறேன்.ஷாம்பு குளியல் மாதம் ஒரு முறை வைத்துக் கொள்ளலாம்.நல்லெண்ணெய் குளியல் வாரம் ஒரு முறையும் அதுவே உச்சந்தலைக்கு தினமும் தேய்த்துக் குளிப்பது சூடு குறைக்கும்.கண்ணுக்கு இரண்டு சொட்டு விளக்கெண்ணை தினமும் விட்டுக் கொண்டு பள்ளி,அலுவல் செல்லலாம்.
நிறையப் பேர் மினரல் வாட்டர் அருந்துவது உடலுக்கு நல்லதென்று நினைக்கிறார்கள்.ஆனால் தொடர்ந்து குடிக்கும் மினரல் வாட்டர் கிட்னியில் கல்லைச் சேர்க்கும்.பதிலாக நீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லது.
இதெல்லாம் செய்தும் சில சமயம் இருமல்,சளி போன்ற வைரஸ் வைராக்கியர்கள் வந்து விடுவார்கள்.ஒரு முறை இப்படி தொடர் இருமலில் 3 நாட்கள் அவதிப்பட்டு அலோபதி அண்ணன்கள் எதையெல்லாமோ எழுதிக் கொடுத்தும் பலனில்லாமல் நம்ம கிட்னி உபயோகிச்சதுல நல்ல பலன் கிடைத்தது.
தேவையான பொருட்கள்:
பசும்பால் - 250 மில்லி
தேன் - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - 25 மில்லி
குங்குமப் பூ- சிட்டிகை தூவற மாதிரி
இஞ்சி - பெரும் விரல் அளவு
குருமிளகு-இடிச்சா பெரும்விரல்,ஆள் காட்டி விரலில் சிக்குமளவு
மஞ்சள்- கொஞ்சமோ கொஞ்சம்
முதலில் தண்ணீரில் வெட்டிய இஞ்சி,மஞ்சளை இட்டு கொதி வந்ததும் பாலை ஊத்தி குருமிளகை தூவவும்.சில நிமிடங்களில் பால் கொதித்து வரும்போது இறக்கி வைத்து ஒரு கப்பில் ஒரு தேக்கரண்டி தேன்,குங்குமம் சிறிது தூவி சூடான பாலை ஊற்றி கலக்கவும்.இருமல்,சளி மருந்து தயார்.
( இதில் இஞ்சி,குருமிளகு,மஞ்சளைத் தவிர்த்தால் இது வயாகராவின் அல்லக்கை)
இறுதியாக ஜன்னல் பக்கத்தில் நின்னுகிட்டு சைட் அடிக்கப் பிடிக்குமா இல்லை ஒரே கடி கடித்த ஆப்பிள் பிடிக்குமான்னு என்னைக் கேட்டால் ஜன்னல் என்றே சொல்வேன்.ஆமா!நம்ம பில்கேட்ஸ் என்ன செஞ்சுகிட்டு இருக்காரு?யாராவது பார்த்தீங்கன்னா ஒரு ஹலோ எனது சார்பா சொல்லுங்க!