Followers

Thursday, December 31, 2009

புத்தாண்டு நலம் வாழ்த்துக்கள்

2010 வருடம் அவதாரின் ஐமேக்ஸ் அதிசயங்களுடன் துவங்குகிறது.அதற்கு முன் திரும்பிப் பார்க்கும் போது வருடத்தின் 2009ன் துவக்கம் ஈழம் குறித்த குரல்கள்,போராட்டங்களுடனும் கூடவே கருணாக்கள் வரலாற்றை மாற்றி எழுத துணை போனதின் சோகத்துடன் இலங்கை அரசின் ரத்த வெற்றிகள் உறுதி செய்யப்பட்டு விட்டது.

பின்னோக்கி நினைத்துப் பார்த்தால் தமிழகத்தைப் பொறுத்த வரை இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பிறகு தமிழ் மொழி என்ற கோட்டைத் தாண்டி தமிழ் இனம் என்ற வட்டத்துக்குள் தேசங்களின் பலத்தால்,ஐ.நா என்ற ஒப்புக்குச் சப்பாணியால் தமிழன் என்ற மனித இனம்,அதன் பூர்வீக மண் ரத்தபூமியாகி விட்டது.உரிமைக்காக எழும்பிய குரல்கள் இப்பொழுது ஈனஸ்வரத்தில் முகாரி மட்டுமே பாடுகிறது.

மிதமிஞ்சி பருகிய அரசியல் சோமபானம் குழு குழுவாய் பிதற்றல்காரர்களாக தெளிவில்லா மயக்க போதையில் தள்ளி விட்டது.பல பரிமாண போராட்டத்தில் அவரவர் மங்கிய கண்ணுக்கும் வாய்ப் பிதற்றலுக்கும் தோன்றியதை பரிமாறிக் கொண்டோம்.சோகங்கள் குறைந்தபாடில்லை.ஆனாலும் எழுதப்படா தீர்ப்புக்களின் பாதையில் இனி நடந்தே ஆகவேண்டிய நிர்பந்தத்தில்,எதிர்காலத்தில் ஏதாவது வாழ்வாதாரத்தைப் பற்றிக் கொண்டே பயணித்தே ஆகவேண்டிய வாழ்வியலில்,மாறுதல்களை மாற்ற இயலாத வலிமையின்மையில்,இருப்புக்களை வைத்தே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய சூழலில் ஆஹா!அவனில்லாத வாழ்வில் இதோ பார் கிழக்கே உதயம்!வடக்கே வசந்தம் என்ற குரல்களும் எழத்தான் போகிறது.

எதை இழந்தோம் என்ற சோகங்களை ஜீரணித்துக் கொள்ள இன்னும் காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை.இதோ!இப்பொழுதே நானும் குரல் கொடுத்தேன் என்று பதிவு செய்து விட்டு அவரவர் அன்றாடங்களை நோக்கி நகர்ந்து விட்டோம்.தேச வல்லூறுகளின் பிடியில் யாவரும் திணறிக் கொண்டிருக்கிறோம்.உலகளாவிய மனிதர்களாய் பரந்து இருந்தும்,கொடிகளை தூக்கி குரல் கொடுத்தும்,உயிர் கொடுத்தும் சாத்வீகப் போராட்டங்கள் தோற்றுப் போனதன் காரணம் என்ன?

இலண்டனில் நிகழ்ந்த மனித போராட்டங்கள் வெற்றியைத் தராது என்ற தீர்ப்பை முன்பே ஜார்ஜ் புஷ் பெரும்பான்மை குரல்களையும் மீறி ஈராக் மீது படையெடுத்ததன் மூலம் எழுதியது 2003ல்.இப்பொழுது யோசிக்கும் போது மனதுக்குப் படுவது அரசு என்ற அமைப்பில் மனிதப் போராட்டங்களை அடக்க நினைத்தால் அவை வன்முறைகளை விதைக்கின்றன.அடக்காதே!குரல் கொடுத்து சோரட்டும் என்று அரசமைப்பு நினைப்பது இன்னொரு நுட்பம்.குரல் கொடுப்பவனை இரு பகுதியாக்கி மோத விடு என்பது இப்போதைய புதுநுட்பம்.அதுவும் அரசியல் கற்றுத் தேர்ந்த சாணக்கியர்களுக்கு இதுபற்றியெல்லாம் சொல்லித் தரவேண்டுமா என்ன?

முந்தைய கால கட்டங்களுடன் ஒப்பிடும் போது ஓரளவுக்கு பட்டினியில்லா வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுவிட்டோம்.தொடர்ந்த தொட்ட தொண்ணூறு போராட்டங்களிலும் சோர்வடைந்த காரணத்தாலும் இப்பொழுது நுகர்வு கலாச்சாரம் இனிப்பதாலும் சராசரி வாழ்க்கையில் எந்தப் போராட்டமும் வெற்றி பெறுவதில்லை.ஒரு நாள் போராட்டம்,மூன்று நாள் உண்ணாவிரதம்(கூடவே மூன்று மணி நேர உண்ணாவிரதம்)பின் சமரசப் பேச்சு கொடுக்கல் வாங்கல் எனவும் போராட்டங்கள் ஓய்ந்து போய் விடுகின்றன.

ஆனால் சகாப்தங்களை தொட்ட போராட்டமாக விளைவுகள் எப்படியாகிப் போயிருந்த போதிலும் இதோ நமது வாழ்நாளின் கண்முன்னே.அதன் வளைவு நெளிவுகள்,ஏற்ற இறக்கங்கள்,நன்மை தீமை,மகிழ்ச்சி அழுகை,பன்னாட்டுப் பார்வையின் கோப நட்புக் கரங்கள்,ஐ.நாவின் இயலாமை அயோக்கியத்தனம் எனவும்,தேசங்களின் நலன்கள் என்ற பேராசைகளும்,உயிர் மண்ணுக்கு என்ற மந்திரமும் கூடவே ரத்தவெறி விமர்சனமும்,இரு இனங்களின் தம் இருப்பை நிலைநாட்டிக் கொள்ளும் கட்டாயமாய்ப் போய் விட்ட போர்,தியாகங்கள்,மனித இழப்புக்கள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் என புதிய வால்மீகியோ,கம்பனோ,பாரதியோ,கண்ணதாசனோ எழுதி வைப்பதற்கு காவியம்,வரலாறு எழுதி வைப்பதற்கான அத்தனை கூறுகளும் கொண்ட நிதர்சனமாய் மண்ணும் அதன் மைந்தர்களும் இந்த காலகட்டத்தில்.கால ஓட்டத்தில் பெரும்பான்மை மறைந்து விடும்.ஆனால் ஈழம் தமது வரலாற்றை இலங்கையில் ஏதாவது ஒரு விதத்தில் சொல்லிக்கொண்டே இருக்கும்.குடுகுடுப்பை ஜக்கம்மா ஒரு முறை சொன்ன மாதிரி நிறைய பெத்துக்கங்க!இழப்புக்களை சரிசெய்ய இதுவே மருந்து.

எப்பொழுதோ போட்ட விதையாக இப்பொழுது விருட்சம் கொண்டு திரிகிறது பொருளாதாரச் சரிவு.அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டம் கண்டால் அத்தனை நாடுகளும் ஆட்டம் காண வைக்கும் சீட்டுக்கட்டு வித்தையை கொண்டிருக்கிறது உலகமயமாக்கல்.வளைகுடாக்களில் பல கட்ட(ட)மைப்புக்களில் அகல கால் வைத்த துபாய் மட்டுமே கடன் கேட்டு கையை நீட்டுகிறது.குவைத்தில் ஒரே ஒரு வங்கி இரண்டு நாள் கதவைச் சாத்திக் கொண்டது.அரசு பெயில் எடுத்து விடுவித்தது தவிர ஏனையவர்கள் அவரவர் நிலையை ஓரளவுக்கு தக்கவைத்துக் கொண்டே உள்ளனர்.சராசரி மனிதர்களின் சராசரி வாழ்க்கை வித்தியாசமின்றி விலைவாசிகள் அதிகரிப்பையும் தாங்கிக் கொண்டே நகர்கிறது.

அமெரிக்கப் பொருளாதாரம் அடிவாங்கினாலும் ஒபாமா அதிர்வுகளை ஓரளவுக்கு உலக நிகழ்வுகளை சமாளித்து செல்வது வரவேற்கத் தக்கதே.அப்படியிருந்தும் மனித இன வெறுப்பாளர்களாய் விமானம் கடத்துவது,ஜட்டிக்குள்ளும் குண்டுப் பொடி தூவி கொல்வதே எமது குறிக்கோள் என்ற மறை கழன்ற மனிதர்களும் சுற்றித் திரிகிறார்கள்.நேற்றைய பத்திரிகையில் ஒரு ஜட்டியும், ஜட்டிக்குள் தூவிய குண்டுவெடிப்பு பவுடரும் படமும்,செய்தியும் போட்டிருந்தார்கள்.படச்செய்தி பார்த்த அந்தக் கணத்தில் தோன்றியது அடப்பாவிகளா!இனி அங்கேயும் ஸ்கேன் தானா போ.இன்றைக்கு செய்தியில் டச்சுக்காரர்கள் இனி முழு உடலும் ஸ்கேன்தாண்டி ன்னு விளம்பரப் படுத்திட்டாங்க.(எனக்கெல்லாம் கோவா பீச்சுல குளியல்(குளியல்ன்னே போட்டுக்கறேன்,பின்ன அதுக்கு வேற யாராவது சீ!நிர்வாணமான்னு விவகாரம் கிளப்பிட்டா),ஹாஸ்டலில் ராகிங்க்ல ரயில் விட்ட பழக்கமெல்லாம் இருக்குது.கவலைப்பட வேண்டியவர்கள் ஜட்டியோட நிற்பது பத்தி கவலைப் படும் கோவி.கண்ணன் போன்ற அந்நிய நாட்டுக்காரர்களே:)கோவி!சும்மா!லூலாயி!இன்றைக்கு உங்க பதிவு பார்த்த ஞாபகத்துல).

இந்த சுதந்திரமிழப்பிற்கெல்லாம் அடிப்படை தேடினால் மதம் என்ற மதம் என்ற அகண்ட உலகளாவிய காரணம் மதம் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளும் காலகட்டத்திற்கு மனித இனம் வந்து விட்டது என்பது தெளிவாகிறது.தமிழ் இணைய நண்பர்களுக்கு நற்குடியும்,கவிதைகளும் விவாத களமாய் வருட இறுதியாகிவிட்டது.மாதக் காளான்களாய் எத்தனை விவாதங்கள் சூடாகிப் பின் தணிந்து போனது.இதுவும் குளிரும்.இந்தச் சுற்றில் மாட்டிக் கொண்டவர்கள் பெண்களாய் இருக்கும் காரணம் கொண்டும்,மௌனமாய் கவனித்த காலங்களில் மனதாலே துரத்தப்பட்டவர்களும் நிறைய பேர். வீடு,அதன் சூழல்,அலுவலாக உழைக்க வேண்டிய கட்டாயம் அனைத்தையும் கடந்து பெண்கள் சமூக அக்கறை கொள்வதென்பதே பெரிய விசயம்.அப்படியும் கருத்துப் பரிமாறல்களுக்கு சிலர் துணிந்து வரும்போது துரத்தியடிக்காமல் வரவேற்கட்டும் ஆணாதிக்கம்.ஒரு இடுகையின் பொருள் அதன் பின்னூட்ட பரிமாணங்கள் என்று எவ்வளவு ஆழப்படுகின்றன? விவாதத்துக்கு வித்தாகும் இடுகையில் சொல்ல வந்த கருத்தை விட தூண்டி விடும் பின்னூட்டங்களே ஒரு இடுகையின் பலமும் பலவீனமும்.இங்கே தீ வைத்து பலவீனம் கொள்ளச் செய்தது ஒரு பின்னூட்டமே எனபது அதுசரியின் இடுகை நோக்கும் போது புரிகிறது.

அனுபவமாய் இந்த வருடம் எனக்கு வாய்த்தது மிக நெருக்கமாய்த் தெரிந்த மூன்று பேர் எந்த வட்டத்துக்குள் சிக்காமல் கூட கிறுஸ்தவனாய் மனம் திரிந்து போனது.சுயபுத்தியாலும்,பைபிளைப் படித்தேன்....இனித்தது அதனால் நான் மதம் மாறிவிட்டேன் என்று சொல்லியிருந்தால் கூட மகிழ்ந்திருப்பேன்.ஆனால் மதமாற்றம் ஒன்றே தொழிலாய் மனதர்களின் பலவீனங்களை அறிந்து கொண்டு அதற்காய் வலைவீசித் திரிகிறார்கள் சில இந்தியர்கள்.அதில் மாட்டிக்கொண்ட மின்மினிப் பூச்சிகளாய் இவர்கள் மாறிப்போனது கவலையை மட்டுமே தருகிறது.நேற்று வரை எந்த வித அடையாளங்களுமில்லாமல் மனிதர்களாய் அன்றாட வாழ்க்கையின் பிரச்சினைகளை மட்டுமே நோக்கி நடைபோட்ட இவர்களுக்கு திடிரென்று அங்க அடையாளங்கள் தோன்றி விட்டன.இவர்களுக்கான சட்ட சிக்கல்களைத் தீர்க்க இந்திய அரசாங்கமோ அதன் தூணான தூதரகமோ எந்த உதவியும் செய்யவில்லை.தூதரக உதவியில் பலனில்லாமல் மனம் சோர்ந்த நிலையில் கடவுளைத் தேடினவர்கள் இவர்கள்.குடும்பத்துடன் இங்கேயே வாழ்ந்து பழக்கப்பட்டுப் போன காரணம் கொண்டும் விசாவின் காலம் முடிந்து போனது தவிர இவர்கள் மீது குற்றமேதுமில்லை.பிரார்த்தனை என்ற கூட்டு மந்திரத்தில் இவர்கள் தம்மை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.எனது கவலையெல்லாம் இவர்களின் குழந்தைகள் மதம் என்ற மாயையில் நிலை தடுமாறிப் போகும் எதிர்காலம்தான்.இப்படி ஏதாவது ஒரு கோட்டில் ஒரு கால கட்டத்தில் இடம் மாறுதல், பழக்க வழக்கங்கள்,படையெடுப்புக்களின் ஆதிக்கம் என எல்லோரும் மதம் என்ற வலைக்குள் சிக்கியே விடுகிறோம்.ஜேம்ஸ் கேமரானின் அவதார் ஐமேக்ஸ் 3D ஜாலங்களுடன் ஃபெண்டசி,தொழில் நுட்ப பரிசோதனைகளை செய்து கொண்டாலும் கதையின் கருவாக போர் என்ற அழிவில் இனம் எப்படி மாற்றப்படும் ஒரு மெல்லிய இழை ஓடிக்கொண்டிருக்கிறது.

இணையம் வரமா?சாபமா என்ற குழப்பமாக வலை தவிர கற்றுக்கொடுக்கும் சிறந்த ஆசான் இல்லை என்ற மகிழ்வும்,எத்தனை எத்தனை மூளைகளின் பின்னல் எனும்போது பிரமிப்பு ஒரு பக்கமும்,பிரமிப்பை காலை வாரிவிடவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்வுகள் நிகழவே செய்கிறது.ஒன்றுமே அறியாமல் கண்ணை மூடிக்கொண்டால் பூனைச் சந்தோசமாய் உலகம் இருண்டு அறியாமையே சந்தோசம் என்ற ஆங்கில வார்த்தைகளின் அர்த்தமும் உண்மையாகிப் போய் விடுகிறது.ஆனால் தேடல் என்ற தாகம் மட்டும் இணையம் சுற்றியும் சுற்றாமலும் வருவதை தவிர்க்க இயலவில்லை.


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Monday, December 28, 2009

அவதார்க்குப் போட்டி

எல்லோரும் அவதார் பற்றி பேசிகிட்டு இருக்கையில் முக்கியமா ஹாலிவுட் பாலா அசத்தும் எழுத்து நடையில் படத்துல என்னமோ இருக்கும் போலதான் தோணுது.நான் இன்னும் படம் பார்க்கவில்லை.அதற்கு பதிலா ரோட்டோரமா வித்துகிட்டிருந்த To catch a Thief ன்னு Alfred Hitchcock டி.வி.டி மாட்டுச்சு.ஆல்ஃபிரட் ஹிட்சாக் பெயர்க் காரணம் ஒன்று போதுமே படம் பார்க்க.படம் பழைய அரத புராண 1955 வருடத்தையது.போலிஸ் திருடன் ஓடிப் பிடித்து விளையாடற கதையுடன் ஆங்கில டயலாக் விரும்பினால் மட்டுமே பார்க்கக் கூடிய படம்.எனவே சொல்ல வந்தது கதை பற்றியல்ல.

தொழில் நுட்ப ரீதியாக மாற்றங்கள் வருவது வரவேற்கப் படவேண்டிய ஒன்று என்றாலும் சில தொழில் நுட்பங்கள் முன்பே சிறப்பாகத்தானே இருந்துள்ளது.கால ஓட்டத்தில் அவையும் ஏன் அடித்துக் கொண்டு போய் விடுகிறது என்று தெரியவில்லை.டெக்னிக் கலரில் முன்பே படம் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தை Vistavision என்ற தொழில் நுட்பத்துடன் பார்க்கும் போது ஆல்ஃபிரட் ஹிட்சாக்கின் கதை சொல்லும் நேர்த்தி,ஐம்பதுகளில் இருந்த கார்களின் அழகு,இப்போதைக்கும் அசத்தும் உடையலங்காரம்,மெல்லிய இசை,கருப்புக்குள் வண்ணங்களைத் தேய்த்தால் ஒளிரும் அழகு,சில நிமிடங்களே தோன்றி மறையும் வானவேடிக்கையின் வித்தியாசமான வண்ண வேடிக்கை என படம் டெக்னிக் கலரில் விஸ்டாவிசனில் அழகு கொஞ்சுகிறது.

பழைய படங்களின் அழகு எப்படி அதிகரிக்கிறது என்ற வித்தையையும் இப்பத்தான் கண்டு பிடிச்சேன்.முன்பெல்லாம் மொட்டை மாடில வட்டமான சாட்டிலைட் சட்டியை வச்சிட்டு யாரையாவது கூப்பிட்டு ட்யூன் பண்ணச் சொல்லி வயரை வீட்டுக்குள்ள கொண்டு வந்து எஸ்.டி.பில சொருகிட்டு 21 இன்ஞ் தொலைக்காட்சிப் பொட்டிய பார்த்தா முடிஞ்சது பிரச்சினை.கிடைக்கிற அத்தனை தொலைக்காட்சியையும் ரிமோட்ல உருட்டிகிட்டே இருக்க வேண்டியது.இல்லைன்னா திருட்டு வி.சி.டில எதையாவது தமிழ்ப் படத்தைப் போட்டு காலம் போய்கிட்டிருந்தது.

ஒரு நாள் தெரியாம ஹாலிவுட் பாலா ஊட்டுக்குள்ள கண் சுழட்டுனதுல வந்தது மாற்றங்கள் எல்லாம்.இதுக்குப் பேரு பிளாஸ்மா,இதுக்குப் பேரு எல்.சி.டி!இதெல்லாம் இன்னும் இரண்டு வருசத்துக்குத்தான்,அப்புறமா இன்னும் இரண்டு மூணூ டெக்னாலஜி புதுசா வரப்போகுதுன்னு சொல்ல கடைகளை ஏறி இறங்குனா பிளாஸ்மா டெக்னாலஜிக்கு வயசாயிடுச்சு.அதனால குறைஞ்ச விலை.எல்.சி.டி 32 இன்ஞ்சா அதுக்கு பழைய CRT பரவாயில்லை போல தெரியுது.40 ல துவங்கி 52 வரைக்கும்தான் ரெசல்யூசனோட அதிர்வுகள் கண்ணுக்கு தெரியுது.பாலா சொல்ற புதுசு கண்ணா புதுசு டெக்னாலஜியெல்லாம் இப்போதைக்கு விபரம் தெரிஞ்சுகிட்டு எதிர்காலத்துக்கு தயாராக மட்டுமே.

சரின்னு சொல்லி ஒரு சோனிப் பய பெட்டிய வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்துட்டுப் போக முடிஞ்சது தலைவலின்னு நினைச்சு ரிமோட்ட உருட்டுனா CRT பழைய ஜப்பான் பொட்டியோட சவுண்டும்,படத்தோட ரெசல்யூசன் மாதிரி இல்லையேன்னு மனசு ஓரத்துல சந்தேகம்.அதுலேயும் திருட்டு வி.சி.டில படத்தைப் பார்த்தா ஏதோ பாதி புரிஞ்சும் பாதி புரியாமலும் வசனங்கள்.(ஆனா நம்ம ஊர் ஏய்!ஏய்ங்கிற கதாநாயகன்,வில்லன் சத்தம் மட்டும் தெளிவா கேட்குது).ஹாலிவுட் பாலாவோ புதுசு புதுசா படமா ரிலிஸ் பண்ணிகிட்டுருக்கார்.பின்னூட்டமின்னா இரண்டு வரி எழுதிப் போடலாம்.எல்.சி.டி சரியில்லைங்கற விபரத்தை சொல்லவும் தயக்கம்.சரின்னு யார் சவுண்டு விடறப் பார்ட்டி,சவுண்ட சரி செய்யற பார்ட்டின்னு இணையத்துல தேடுனா வந்து சேர்ந்த தளம் hifivision.com.(பெரும்பாலோர் பெங்களூர்,சென்னைன்னு சரியான சவுண்டு பொட்டிப் பிரியர்கள் போல இருக்குது.ஊர் ஊருக்கு பதிவர் கூட்டம் போடற மாதிரி இவர்களும் இந்த மாதம் சென்னையில் சவுண்டுப் பொட்டி கூட்டம் போட்டிருக்காங்க போல தெரியுது.)

எங்காவது கடைல, வீட்டுக்குள்ள சினிமா (Home theatre)ன்னு பார்த்தா ஒரு அஞ்சு ஸ்பீக்கர் பெட்டி சின்னதாவும் அதுக்குப் பக்கத்துல ஒரு பெரிய பெட்டி (5.1)கண்ண முழிச்சுகிட்டு உட்கார்ந்திருக்கும்.அத வெச்சிகிட்டே விற்பனையாளர் காட்டும் அலம்பல் சொல்ல இயலாது.ஆனா இந்த ஹைபை விசன் ஆட்கள் சொல்றதெல்லாம் "யோவ்!யானை பிளிறதுக்கும் தூக்கணாங்குருவி கூவறதுக்கும் வித்தியாசமில்லையான்னு யானைக்கால் மாதிரி பொட்டிகளைப் பற்றி ஆணி பிடுங்கிட்டுருக்காங்க.இதையும் இன்னும் பல சவுண்டு பார்ட்டிகளை கேள்விப் பட்டு முதல்ல தெரிஞ்ச பேர்ன்னு யமாஹா கடைக்குப் போனா கபாயன் பிலிப்பைன்ஸ்காரன் சின்னதா அஞ்சு போஸ் ஸ்பீக்கர்ஸ்,கூடவே அக்கஸ்டிமஸ்ங்கிற ஒரு பெரிய பெட்டிய இதுதான் சஃப் வூபர்ங்கிறான்.இது மட்டும் பத்தாது இதுக கத்தறதுக்கு ஒரு வாத்தியார் சொல்லிக் கொடுக்கனுமின்னு ِA/V ங்கிற Audio/Video Receiver கூட தேவைங்கிறான்.இதென்ன அங்குசம் வாங்கப் போய யானையே வாங்க வேண்டியிருக்கும் போலன்னு நினச்சு சரி வாங்கலாமா வேண்டாமான்னு குழப்பத்துல நாளைக்கு வாரேன்ன்னு வந்து இணையம் மேஞ்சா,ஏன் நாங்கல்லாம் இருக்குறது உனக்கு கண்ணுக்குத் தெரியலையான்னு Denon,Onkyo,Kef,Infinity,Paradigm,Flaunce,Boston,Pioneer இன்னும் பல கண்ணை சிமிட்டுது.எனக்கோ தலை சுத்துது.

சுயதேடலில் சுற்றி வந்து நின்ற இடம் Sony LCD TV,Onkyo A/V, PolkAudio Speakers.இப்ப மேலே சொன்ன டெக்னிக் கலர்,விஸ்டா விசன் பழைய தொழில் நுட்பம் நல்லாவே படம் காட்டுது.

டிஸ்கி: சென்னை மட்டும் தமிழக நகர வாசிகளுக்கு சினிமா தியேட்டரே நல்லது.எப்பவாவது தியேட்டருக்குப் போனோமா பாப் கார்ன் கொரிச்சோமான்னு இருந்துக்கலாம்.இல்லைன்னா கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் தீட்டிரும்.(Unless you are a hardcore music lover then there are good models available both new and old systems to enjoy your favourite music)

வளைகுடா,அமெரிக்க,ஐரோப்பாங்காரங்களுக்கு ஆங்கிலப் படமாகட்டும்,அய்ங்கரனாகட்டும் HT சினிமாவே சிறந்த வழி.

(நான் தினமும் தமிழ்மணத்துல சுத்திகிட்டுத்தான் இருக்கேன்.ஈழம் சென்ற விதம்,செல்லும் விதம் மனதை நிறையவே பாதித்தது.பாதிக்கிறது.நிகழ்வுகள் யாவும் எழுத்துக்கு கூட தடையே.எனவே பெரிதாக எழுதும் எண்ணமெல்லாம் இல்லை.எழுத்தில் கூடவே பயணித்த ஏனைய நண்பர்கள் பலரும் அக புற காரணங்களுக்காக அதிகம் கண்ணில் தென்படுவதில்லை.இப்போதைக்கு தொடர்ந்து வலம் வரும் இரு வீடுகள் வானம்பாடிகள் பாலா மற்றும் ஹாலிவுட் பாலா மட்டுமே.அவ்வப்போது வருவேன்.ஆனால் எப்பொழுது வருவேன் என்பது எனக்கே தெரியாது.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சில தினங்களுக்கு முன்னதாகவே.