Followers

Monday, May 20, 2013

வீண் போன சீமான்!

முள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொல்வதற்கு தலைக்குள் நிறைய சுற்றிக்கொண்டிருந்தாலும் கூட பதிவுகள் எதையும் கிடப்பில் போட்டு ஊறவச்சு சொல்லும் வழக்கமில்லாததால் அவ்வப்பொது ஏற்படும் உணர்வுகளை அப்படியே கொட்டுவதுதான் வழக்கம்.இதுவும் அப்படியே!

இன்றைக்கு சீமான் பொதுக்கூட்டம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டதும் கூடவே ஜார்ஜ் புஷ் ஈராக் பயணத்தை யாரிடமும் சொல்லாமல் சென்றது மாதிரி காஷ்மீர் தனிநாடு கோரிக்கையாளர் யாசின் மாலிக்கை யாருக்கும் தெரியாமல் தமிழகம் கூட்டி வந்து பேச வைத்த வரலாற்று தவறை அறிந்து திடுக்கிட்டேன்.சீமான் உச்சக்குரலில் தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் என்ற சீமானின் பிம்பத்தைக் கடந்து பிரச்சினைகளின் மையப்புள்ளிகளை அலசும் திறனற்ற மனிதராக இருக்கிறாரே என்றே மனம் பதைபதைக்கிறது. 

இந்த பதிவை எழுதும் முன் இதற்கும் முன் அருந்ததிராயின் இலங்கை காஷ்மீர் பிரச்சினை குறித்த கருத்தை தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.காஷ்மீர் பிரச்சினை இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் அமெரிக்காவின் பாகிஸ்தான் ஆதரவு நிலையில் இந்திரா காந்தியின் பாகிஸ்தான் இரண்டாக உடைந்த பங்களாதேஷ் உருவாக்கத்திற்கு பின் பாகிஸ்தான் வன்மத்தாலும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கப்பட்டு காஷ்மீர் பண்டிட்கள் துரத்தியடிக்கப்பட்டு தலிபான் உருவாக்கத்தில் அல்ஹைதாவின் உச்சம் தொட்டு ஆப்கானிஸ்தான் அரசியலோடு அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பின் உலக அரசியல் மாற்றத்திற்குப் பின் ஜார்ஜ் புஷ்சும்,ஒபாமாவும் அமெரிக்கா நாட்டாமை செய்யாது இந்தியாவும்,பாகிஸ்தானும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஒதுங்கிக் கொண்ட தற்போதைய நிலையின் முக்கிய நிகழ்வுகளில் இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள்,காஷ்மீரிகளின் உயிர் இழப்பு துயரங்கள் இணைந்த வரலாற்றில் இந்திய பகுதியின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்துடன் தனது முதலமைச்சரை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் வல்லமையோடு தனி மாநிலமாக திகழ்கிறது.

இலங்கை இனம்,மொழி அடிப்படையில் ஆராய வேண்டிய ஒன்று.காஷ்மீர் இந்தியா,பாகிஸ்தான் பிரிவினையின் அரசியல் அடிப்படையில் உருவான ஒன்று.இரண்டையும் ஒன்றாக ஒப்பிட முடியுமா?இலங்கையில் வாழ்வோர்,புலம் பெயர்ந்தவர்கள்,தமிழக தொப்புள்க் கொடி உறவைத் தாண்டியும்,மனித உரிமைக் குழு அமைப்புகள்,மேற்கத்திய நாடுகளின் ஆதரவு,ஐ.நா வரையிலும் போய் உட்கார்ந்து கொண்ட தமிழர்களின் உரிமைகளை யாசின் மாலிக் ஆதரவு பெற்று தந்து விடுமா? மாறாக யாசின் மாலிக்கின் ஆதரவு எப்படிப்பட்ட பின்னடைவை ஈழத்தமிழர்களுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறதென்ற புரிதலாவது இருக்கிறதா சீமான்?

தடாலடி அரசியலுக்கு வேண்டுமென்றால் யாசின் மாலிக் உதவக்கூடும்.நாளை பாகிஸ்தானில் ஒருவர் யாசின் மாலிக் கருத்தை ஆதரிக்கிறேன் பேர்வழியென உள்குத்து அரசியலோடு தமிழகத்திற்குள் மூக்கை நுழைக்க அனுமதிப்பீர்களா சீமான்? தமிழகத்தைப் பொறுத்த வரையில் மரணத்தின் இறுதி மூச்சை சுவாசித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் என்ற நம்பிக்கையை தகர்த்து ஆக்சிஜன் கொடுத்து முதல் உதவி செய்திருக்கிறீர்களே சீமான்!உங்களுக்கு வேண்டுமென்றால் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் மேடைப் பேச்சும்,அப்ப இனித்தது இப்ப கசக்குதா போன்ற வசனங்கள் இனிக்கலாம் கசக்கலாம்.ஜெயலலிதா ப.ம.கவுக்கு வைத்த ஆப்பை போல் உங்களுக்கும் ஆப்பு வைத்தாலும் தப்பேயில்லை.

திரைக்களம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.அதில் மட்டும் உங்கள் நிபுணத்துவம் காட்டுங்கள். துயர ஈழத் தமிழர்களை இனியும் துயரத்தில் ஆழ்த்தாதீர்கள்.